கீழக்கோபுர வாசல் வழியாக அம்மன் சன்னதிக்குள் நுழைந்தாள்.வலது பக்கம் வாசனையும் , வண்ணமுமாய் பூக்கடைகள். இடது பக்கம் பொன்னை வெட்டி குவித்தாற்போல் வளையல்,மணிமாலை,தெய்வ சிலை, மஞ்சள்,குங்குமம்,,குழந்தைகள் விளையாட்டு சாமான் கடைகள். ”வாங்கம்மா! வாங்கம்மா!”என்ற நாலாபுற, வற்புறுத்தலான அழைப்புகளையும் மீறிக் கொண்டு அடுத்த மண்டபத்தில் நுழைந்தாள்.
கோவிலின் மற்ற பகுதிகளின் பரபரப்பு,வெளிச்சம்,சத்தம்,கூட்டம்,ஆரவாரம் இவை எதுவுமே இல்லாமல் அந்த இடைவழி மண்டபம் மட்டும் எப்போதும் மெல்லிய இருட்டோடு,நிசப்தமாய்,கூட்டமில்லாமல் இருக்கும் அதிசயத்தை, என்றைக்கும் போல, இன்றைக்கும் வியந்து கொண்டே அதை அனுபவிப்பது போல நடையை மெதுவாக்கினாள்.
“லக்ஷ்மி! லக்ஷ்மி!என்னம்மா இப்பிடி பண்ணிட்ட?” அந்த மெத்தென்ற இருட்டுக்கு சுருதி சேர்ப்பது போன்ற பட்டுக் குரல், கவலையும், ஆசுவாசமும், அவசரமுமாய் ஒலித்தது. அவளருகில் வேகமாக வந்து நின்ற காலடிகளை உணர்ந்து திரும்பினாள்.
‘யாரிவன்?’
“என்னம்மா லக்ஷ்மி! நான் எவ்வளவு கவலைப் பட்டேன் தெரியுமா?நீ பாட்டுக்கு….” என்றவனை தடுத்து நிறுத்தி,
“யார் சார் நீங்க?” என்றாள்.
“சரிதான்! உன் கோபம் புரியறதும்மா! ஆனா லக்ஷ்மி,இந்த பத்து நாளா நான் பட்ட கஷ்டம்…”
“சார், சார்,ஒரு நிமிஷம்! நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசறீங்க! நீங்க நினைக்கிற ஆளு நான் இல்ல” பொற்றாமரை குளக்கரையோரமாக நடந்து கொண்டே சொன்னாள்.
கூட்டமும், இரைச்சலுமாக அந்த இடம் கலகலத்துக் கொண்டு இருந்தது.
“நீ என்னை செருப்பால அடிச்சாலும் தகும். அந்த சம்பவம் நடந்ததுக்கு நான் வெக்கப் படறேன்! உங்கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுக்கறேன்!லக்ஷ்மி ப்ளீஸ்!” அவள் கையை லேசாகப் பற்றினான்.
அவள் சட்டென்று விலகி “இது என்ன நியூசென்ஸ்!” கோபத்தில் குரலை உயர்த்தி “சார்! நான் பேசறது புரியலையா? நான் லக்ஷ்மி இல்ல!”
“சரி! நீ லக்ஷ்மி இல்ல! அப்பிடின்னா நீ யாரு? அதைச் சொல்லு!உன் பேர் என்ன?”கண்களில் குறும்பு பளிச்சிட்டது.
சுறீலென்று கோபம் தலைக்கு ஏறியது.
“அதைப் பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல”
முதன் முறையாக அவன் முகத்தில் சிரிப்பு.”இந்த கோபம் ஒண்ணு போதுமே, நீதான் லக்ஷ்மின்னு நிரூபிக்க!”
‘இதேதடா கஷ்டம்! விட மாட்டான் போலிருக்கே’ சுற்றும் , முற்றும் , பச்சையும், சிவப்பும், மஞ்சளும், மிட்டாய் ரோஸுமாய்,மல்லிகையும், கதம்பமும்,பவுடரும் ,செண்டும்,வியர்வையுமாய் போய்க் கொண்டிருந்த கூட்டத்தில் யாரும் இவர்களைக் கவனிக்கவில்லை.
“மிஸ்டர்! இன்னொரு தரம் நிதானமாய் சொல்லறேன்! நீங்க யாரையோ தேடறீங்க! ஆனா அது நான் இல்லை! நீங்க அடையாளம் புரியாம பேசறீங்க!”
“உன்னை எனக்கு அடையாளம் புரியலைன்னா, என்னை எனக்கே அடையாளம் தெரியலைன்னு அர்த்தம்!”
பளாரென்று அவனை அறைந்தால் என்ன என்று தோன்றியது. நடையை எட்டிப் போட்டாள்.அவளோடு அவனும் ஓட்டமும் , நடையுமாக வந்தான்.
“இந்த பத்து நாளா நான் பட்ட கஷ்டம், தவிச்ச தவிப்பு, அந்த மீனாக்ஷிக்குத்தான் தெரியும். உன் ஃப்ரெண்ட் கலா கிட்ட கூட… “
அவள் அவனை முறைத்துப் பார்த்து விட்டு பல அடி தூரம் முன்னால் நகர்ந்தாள்.
“சரி! சரி! அம்பாளை தரிசனம் பண்ணிட்டு அப்புறம் வீட்டுக்குப் போய் பேசலாம்!” மூச்சிறைக்கப் பின்னால் பேசிக் கொண்டே வந்தான்.
கொடி மரம் அருகிலிருந்தே சன்னிதிக்குள் நுழைகிற கூட்டம் ஆரம்பித்து விட்டது.அவள் கைப்பையை திறந்து ஏதோ தேடினாள்.
“ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கணுமா? இரு! நான் வாங்கறேன்” என்று அங்கே ஏற்கனவே நின்று கொண்டிருந்த நாலைந்து பேரோடு வரிசையில் சேர்ந்து கொண்டான்.அவள் அங்கு நின்று இன்னும் ஏதோ பையில் தேடிக் கொண்டே இருந்தாள்.வரிசை பெரிதாகியது. கைப்பையிலிருந்து சில காகிதங்களும்.ரூபாய் நோட்டுகளும், மஞ்சள் பையும் கீழே விழுந்தன.
“அடடா, என்னம்மா இது?” என்றபடியே குனிந்து பொறுக்கலானான். அந்த கால இடைவெளியில் அவள் சிட்டுக் குருவிக்குரிய விரைவோடு சன்னிதிக்குள்ளே நுழைகிற ஒரு பெரிய வடக்கத்திக் கும்பலொடு சேர்ந்து கொண்டாள்.சில வினாடிகள் கழித்து அவன் “லக்ஷ்மி! லக்ஷ்மி!” என்று கத்திக் கொண்டு பின்னாடி வருவதை உணர்ந்தாள். அவனுக்கும் ,அவளுக்குமான இடைவெளி அதிகரித்தது.
உள்ளே நுழைந்ததும், பல விதமான ரேட்டுக்கான தரிசன வரிசைகள், வெவ்வேறு பக்கங்களிலிருந்து முளைத்து நீண்டிருந்தன.தவிர வரிசையில் இல்லாத பெருங்கூட்டம் ஒன்று எங்கு சேருவது என்று தெரியாமல் அலை மோதியது.சட்டென்று வலது பக்கம் திரும்பி பெரிய மரக் கதவுக்கு பின்னால் தூணும் மறைத்த ஒரு இருட்டு இடைவெளியில் மறைந்து நின்றாள்.அவளுக்கு முன்னால் அவளை மறைத்தாற் போல் ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் டிக்கெட் வாங்கச் சென்ற யாருக்காகவோ, கத்தலும்,இரைச்சலுமாக காத்திருந்தது.அவர்கள், தலைகள், தோள்கள் இவற்றுக்கு நடுவே அவன் வருவதைப் பார்த்தாள். அவன் இரு புறமும் பார்த்து விட்டு இடது புறம் திரும்பி அவளைத் தேடிக் கொண்டு நடப்பதைப் பார்த்தாள்.அவன் தலை பிரகார திருப்பத்தில் மறையும் வரை காத்திருந்து விட்டு, மற்றொரு கூட்டத்தோடு இணைந்து வெளியே வந்தாள். திரும்பி கீழக்கோபுர வாசல் வழியாகப் போனால் கண்டு பிடித்துவிடுவானோ என்ற பயத்தில் தெற்கு கோபுர வாசலை நோக்கி கிட்டத் தட்ட ஓடினாள்.
வெளியில் வந்து இரண்டு , மூன்று வீதிகளைக் கடந்து ஆட்டோவில் உட்கார்ந்ததும்தான் மூச்சு சீராக வந்தது.
“எங்கம்மா போகணும்?”
“முதல்ல ஆட்டோவை எடுங்க ,அப்புறம் சொல்றேன் “
ஆட்டோ நகர்ந்து காற்று முகத்தில் வீசிய சுகத்தில் சிரித்துக் கொண்டே யோசித்தாள் “போய்க் கூட பாத்திருக்கலாமோ என்னவோ”
~oOo~
ஸ்டேடன் ஐலண்டில் படகுத் துறையை நோக்கி (இப்பிடி யோசிக்கும் பொழுது ஏதோ பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு காலத்துக்குள் போனது போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே, இனி மேல் ஃபெர்ரி டெர்மினல் என்றே சொல்லலாம் என்று நினைத்தாள்) போய்க் கொண்டிருந்தவள், 9/11 நினைவிடத்திலிருந்து ஹட்ஸன் நதியின் அந்தக் கரையைப் (மன் ஹாட்டனை) பார்த்துக்கொண்டு சற்று நேரம் நின்றாள்.நதியின் நடுவிலிருந்த சுதந்திர தேவியின் சிலை,அந்தக் கரையிலிருந்த ,எல்லா கதைகளிலும் சிலாகிக்கப் படுகிற மன்ஹாட்டன் கட்டிட வானப் பின்னணி இவற்றைப் பார்க்கும் பொழுது இவை இன்றைய நாகரீகத்தின் சின்னங்களாக, ஏதோ ஒரு எதிர் காலத்தில் சரித்திர பாடப் புத்தகத்தில் படிக்கப் படுமாக இருக்கும் எனத் தோன்றியது.(முதல்ல புத்தகம்னு ஒண்ணு அப்ப இருக்குமா?என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.) இடது புறம் தெரிந்த, ஒரு சமயம் ராக்ஷஸ நாற்காலிகள் போலவும், இன்னொரு சமயம் பிரும்மாண்டமான ஒட்டகச் சிவிங்கிகள் போலவும் காட்சி தருகிற, சாமான்களை ஃபெர்ரிகளில் அடுக்கவும், எடுக்கவும் உதவுகிற பெரிய, பெரிய கிரேன்களை எப்போது பார்த்தாலும் அலுப்பதில்லை என்று தோன்றியது.ஃபெர்ரி வர இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே டெர்மினலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
படிகளுக்கு மேல் அந்த பிரம்மாண்டமான திறந்த வெளி முற்றம் கூட்ட நெரிசலாக இருந்தது.இன்னும் நேரம் இருக்கிறது என்பதால் சாவகாசமாக நடந்து டெர்மினல் கட்டிடத்திற்குள் நுழைந்தாள். ‘சப் வே’ கடையை கடக்கும் பொழுது “லில்லி மை டியர்! என்ன ஓர் ஆச்சரியம்!” அமெரிக்க உச்சரிப்பு ஆங்கிலத்தில் ஒரு மென்மையான குரல் காதருகில்.
கண்ணியம் மிக்க ஒரு அமெரிக்கர் அவள் அருகில் சிரித்தபடி. முப்பத்தைந்திலிருந்து ,அறுபத்தைந்து வரை எந்த வயது வேண்டுமானலும் இருக்கலாம் என்னும் படியான தோற்றம். அவளுக்கு வேற்று தேசத்தவரின் வயதை ஊகிப்பது என்பது எப்போதுமே ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். ஒரு வேளை அவர்களுக்கும் அதே கஷ்டம் இருக்கக் கூடும் என்றும் தோன்றியது.
“எப்படி இருக்கிறாய்? கடவுளே! எத்தனை ஆண்டுகள்? எத்தனை ஆண்டுகள்? லில்லி ! லில்லி மை டியர்!”
“மன்னியுங்கள்! எனக்கு நீங்கள் யார் என்று புரியவில்லை!”
“நான் ஜோ! நான் ஜோ!”
இவள் தலையை மெல்ல அசைத்து ,உதட்டைப் பிதுக்கினாள்.
கண்ணில் சோகம் எட்டிப் பார்க்க, அடுத்த நிமிடம் அதை புறந்தள்ளி விட்டு
“நான் அத்தனை மாறி விட்டேனா என்ன?” என்றார், சிரித்தபடி.
“நான் லில்லி இல்லை. மன்னியுங்கள்!”
“ஓ….”
இருவரும் பயணிகள் காத்திருக்கும் கூடத்திற்குள் சென்றனர். அதன் மிகப் பெரிய கண்ணாடி சுவற்றில் தன்னை ஒரு தரம் பார்த்துக் கொண்டாள்.
“ஆனால் இரண்டு நிமிடம் உங்களுடன் பேச அனுமதிக்க முடியுமா?”
அவள் தலை அசைத்தாள், சட்டென்று அவர்கள் உடல் மொழிக்கும் , நம்முடைய உடல் மொழிக்குமான வேறு பாட்டை உணர்ந்து “சரி! சொல்லுங்கள்!” என்றாள்.
“நீ மாயமாக எங்கள் வாழ்க்கையிலிருந்து மறைந்த அந்த மாலைப் பொழுதை நான் மறக்கவே மாட்டேன்! நானும் ,உன் பெற்றோர்களும் பேசிப் பேசி அதை எங்கள் மனதின் ஒரு மூலையில் பத்திரப் படுத்திய வேளையில் இத்தனை வருடங்களுக்குப் பிறகு நீ….”
“தயவு செய்து தப்பாக நினைக்காதீர்கள்! நீங்கள் நினைக்கும் அந்தப் பெண் நான் இல்லை! நான் இந்த தேசத்தைச் சேர்ந்தவளே இல்லை!”
“அப்படிப் பார்த்தால் யார்தான் இந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள்? அல்லது யார்தான் இந்த தேசத்தைச் சேராதவர்கள்? நாங்கள் ஐந்து தலைமுறைக்கு முன்னால் வந்தவர்கள் என்றால் , நீங்கள் மூன்று தலை முறைக்கு முன் வந்தவர்கள்! அவ்வளவே!””
“இல்லை! நீங்கள் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்! நான் லில்லி இல்லை! இந்த நாட்டிற்கு இப்பொழுது வந்திருக்கும் ஒரு விருந்தாளி!”
சட்டென்று ஒரு சோகம் கலந்த மௌனம்.
“ ஓ கே! புரிகிறது! நீ ரொம்ப நேர்மையான, புத்திசாலியான பெண்மணி! நீ இதை மறுக்கிறாய் என்றால் அதற்கு வலுவான காரணம் இருக்கும் என்றே நம்புகிறேன். ஏதோ ஒரு காரணத்துக்காக உன் அடையாளத்தை மறக்கவும்,துறக்கவும் தயாராக இருக்கிறாய்! உன்னுடைய நல்ல நண்பன் என்ற முறையில் அதை மதிக்கிறேன்!”
லேசாக தொண்டையை செருமியபடி
“ரொம்ப சுவாரசியமான ஒரு புத்தகத்தின், ஒரு திருப்பு முனையான தருணத்தில், பாக்கி இருக்கும் பக்கங்களிருந்து எழுத்துக்கள் எல்லாம் மந்திரத்தால், மறைந்தது போலாயிற்று நீ மறைந்த அந்த நாள்! போகட்டும்! என்னுடைய வாழ்த்துக்கள் உன்னுடைய அருமையான வாழ்க்கைக்கு! வருகிறேன்!” தலையை சாய்த்து விடை பெற்றார்.
ஃபெர்ரியில் ஏறும் கூட்டத்தில் ஒருத்தியாய் கரைந்து மறையும் பொழுது, அவள் உணர்ந்தது என்ன என்று அவளுக்கே புரியவில்லை.
~oOo~
லண்டனில் மைடாவேல் பகுதியில் உள்ள டெஸ்கொ வாசலில் நின்று கொண்டு யோசித்தாள்.கோடை ஆரம்பித்துவிட்டபடியால், சூரிய அஸ்தமனத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது, இப்படியே காலாற ‘லிட்டில் வெனிஸ்’ வரை போய் வரலாம் எனத் தீர்மானித்தாள்.
எதையெல்லாமோ நினைத்துக் கொண்டே வந்ததில், சீக்கிரம் கால்வாய்க்கரையோரம் படகு வீடுகளுக்கு அருகில் வந்து விட்டாற் போல் தோன்றியது.யார், யாருடைய வீடுகளையெல்லாமோ, இப்படி உற்று உற்றுப் பார்த்துக் கொண்டே போகிறோமே, இது கொஞ்சம் அநாகரீகமோ என்று தோன்றினாலும், இந்த படகு வீடுகளைப் பார்ப்பதில் உள்ள புதுமை எனக்குப் பிடித்திருக்கிறதே என்ன செய்ய என்று சொல்லிக் கொண்டாள். தவிர, அவர்கள் யாரும் இதைக் கவனிப்பதுமில்லையே என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். ஒரு படகு வீட்டின் ஜன்னல் வழியாக சாப்பாட்டு அறை தெரிந்தது. குட்டி சாப்பாட்டு மேஜை மேல் அழகிய வண்ணப் பூங்கொத்து. பக்கத்தில் ஒரு சிறுவன் உட்கார்ந்து ஏதொ மும்முரமாக படித்துக் கொண்டிருந்தான்.
இன்னொரு படகு வீட்டின் படுக்கை அறையில் ஒரு அப்பா தன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மற்றொன்றில் லக்ஷ்மி திரைச் சீலை போட்டிருந்ததை சற்று ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.அனேகமாக எல்லா படகு வீடுகளிலும், நிறைய வண்ண மலர்களோடு உள்ள பூந்தொட்டிகள், ஜன்னலோரத்திலும், வெளியேயும் அழகாக வைக்கப் பட்டிருந்தன.அந்த வீடுகளின் அமைப்பிலும்,அலங்காரத்திலும் ஏதோ ஒரு சுவாரசியம் இருந்தது.
படகிலேயே வாழ்நாள் முழுவதும் வாழ்வது எப்படி இருக்குமோ என நினைத்துக் கொண்டாள். ‘இங்கு இருப்பவர்களும் , லண்டன் மாநகரத்துக்குட் பட்ட வரி, வகையறாக்கள் எல்லாம் கட்டுவார்களாய் இருக்கும், ஆனால் சுற்றி இருக்கும் கால்வாய் தண்ணீர் ஏன் இப்படி கலங்கலாகவும், அழுக்காகவும் இருக்கிறது. குடி நீர், வடிகாலுக்கு என்ன ஏற்பாடு இருக்கும்? யாரிடமாவது கேட்க வேண்டும்’.
கால்வாய்களுக்கு மேலே இருந்த பாலத்திலிருந்து சுற்றுப்புற காட்சிகளை வேடிக்கை பார்த்து விட்டு, மெதுவாக பூங்கா மாதிரி இருக்கிற இடத்துக்கு வந்து சேர்ந்தாள்.மரங்களில் சாயங்காலப் பறவைகளின் சத்தம் இனிமையாக கேட்டுக் கொண்டிருந்தது.அவ்வளவாக கூட்டமே இல்லை. ரொம்ப தூரத்துக்கு ரொம்ப தூரம் தனியாகவும், இரண்டு ,மூன்று பேராகவும் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.
இவள் கண்களை மூடிக்கொண்டு அந்த அமைதியை, மேலே வீசிய காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.கண்ணை மூடிக் கொண்டிருக்கும் பொழுது ஒலிகள் எவ்வளவு துல்லியமாக, திட வடிவமாக, தனித் தனியாகக் கேட்கின்றன. பறவைகளின் ஒலிகளிலேயே எத்தனை வேறுபாடு?சலங்கையை குலுக்கினாற்போல ஒரு சத்தம், கூர்மையான சீட்டி ஒலியை துண்டு துண்டாக்கினாற்போல் ஒரு சத்தம், பின்னால் சாலையில் பஸ் போகிற சத்தம்,யாரோ தூரத்தில் சிரிக்கிற சத்தம் , இத்தனையையும் மீறி, புல் தரையில் சீராக இல்லாத, மென்மையான நடைச் சத்தம். இவள் தொடையில் பட்டுப் போல் கை வைத்து மழலையாக ஒரு குரல் “ம்…ம்…” இவளுக்கு கண்களைத் திறக்க பயமாக இருந்தது.
~oOo~
ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் ஆடம்பரத்துடனும், சொகுஸுடனும் அழகுணர்ச்சியுடனும் இருந்த அந்த மருத்துவ மனைக்குள் நுழைந்தாள். பல தளங்களைக் கடந்து, பல கதவுகளைத் திறந்து, பல பெரிய ஹால்களைக் கடந்து, அமைதியான ஒதுக்குப் புறமான இடத்தில் அமைந்த அந்த பெரிய ஹாலுக்கு வந்து சேர்ந்தாள்.ஆளைப் புதைக்கும் ஸோஃபாக்களும்,பெரிய பித்தளை கொப்பரைகளில் வைக்கப் பட்டிருந்த பச்சைப் பசேலென்ற செடிகளும் , தலை கால் புரியாத பெரிய பெரிய நவீன ஓவியங்களும் நிறைந்த அந்த இடத்தில் அவளைத் தவிர ஒரு பிராணியும் இருப்பதாகத் தெரியவில்லை.பயம் வயிற்றில் கல்லாக கனத்தது.
ரொம்ப தூரத்தில் தெரிந்த வரவேற்பு மேஜை அருகில் நின்ற யுவதியைப் பார்த்த்தும் கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டது. விமானப் பணிபெண்கள் மாதிரி அழகான சீருடையும், நாசூக்கன மேக் அப்பும் போட்டிருந்தாள்.இவளைப் பார்த்து அழகான பயிற்றுவிக்கப் பட்டிருந்த சிரிப்பைச் சிந்தி விட்டு முன் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என வினவினாள், கொஞ்சுகிற ஆங்கிலத்தில். இவள் ஆம் என்றதும் கணினியைப் பார்த்து விட்டு “ மிஸ் மாயா?” என புருவம் தூக்கினாள். இவள் தலை அசைத்ததும், ”தயவு செய்து அமருங்கள், அழைக்கிறேன் “ என்றாள்.
’ஆளே இல்லாத டீக் கடையில் டீ ஆற்றுகிற கடமை உணர்ச்சியோடு’,தன் மிகப் பெரிய மேஜையின் ஒரு கோடிக்கும் ,மறு கோடிக்கும் ஓடி ஓடி எதையோதேடினாள், கோப்புகளைப் பிரித்துப் பார்த்தாள், கணினியில் எதையோ உற்று நோக்கினாள், ஃபோனில் யாருடனோ மென்மையாகப் பேசினாள். மாயா ஸோஃபாவில் புதைந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு மனதிற்குள் தான் பேச வேண்டியதை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தாள். பத்து நிமிடத்திற்குப் பிறகு “தயவு செய்து வாருங்கள் “ என்று அழைத்து விட்டு ஒரு கதவைத்திறந்து உள்ளே போகச் சொன்னாள்.
பிரமாண்டமான மேஜையின் பின்னால் அமர்ந்திருந்த டாக்டர் இளமையாக இருந்தாள்.
“ஹலோ மாயா! ப்ளீஸ் ஸிட் டௌன்! நான் டாக்டர் மானஸா பிரபாகர்!உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”
மாயா வார்த்தைகளுக்குத் தேடிக் கொண்டிருந்தாள்.
“உங்கள் பிரச்னை என்ன?”
“முகம்தான் டாக்டர்”
“என்ன?”
“என் முகம்தான் டாக்டர் என் பிரச்னை”
“எப்படி என்று விளக்க முடியுமா?”
“அதாவது டாக்டர், என்னுடைய தினசரி வாழ்கையில் , எனக்கு அறிமுகம் ஆனவர்களிடம் , என்னைத் தெரிந்தவர்களிடம் எனக்கு எந்த பிரச்னை, குழப்பங்களும் இல்ல.என்னுடைய அசல் முகத்துடன் இருக்கிறேன். நான் எங்காவது புது ஊர்களுக்குப் போகும் பொழுதோ, முற்றிலும் அன்னியர்களுடன் இருக்கும் பொழுதோ எல்லா சமயங்களிலும் அல்ல, சில சமயங்களில் எனக்கு புது விதமான அனுபவம் ஏற்படுகிறது, அதாவது என் முகம் மாறி, அவர்களுக்குத் தெரிந்த யாரோமாதிரி ஆகி விடுகிறேன்.ஒவ்வொரு முறையும் ஒரு புது முகமாக”
“சில உதாரணங்களைச் சொல்ல முடியுமா?”
மாயா தன்னுடைய மூன்று அனுபவங்களைச் சொன்னாள்.
“அதை ஏன் முகம் மாறுகிறது என்று சொல்லுகிறீர்கள்? அவர்களுக்குத் தெரிந்தவர்கள் யாருடைய முகம் மாதிரியோ உங்கள் முகம் இருந்திருக்கலாம் அல்லவா? ஒருவர் மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம் அல்லவா? தவிர சாதரண சமயங்களில் கூட , நமக்கு மிக நன்றாகத் தெரிந்த யாருடைய முகம் மாதிரியோ இருக்கிறதே என்று எத்தனைப் பேரைப் பார்த்து குழம்பியிருக்கிறோம்?”
“இல்ல டாக்டர்! கேளுங்கள்! அந்த மூன்று சம்பவங்கள் நடந்த பொழுது நான் என் முகத்தைப் பார்த்தேன், முதல் சம்பவத்தில், ஆட்டோவில் இருந்த கண்ணாடியில், இரண்டாம் சம்பவத்தில் , ஃபெர்ரி டெர்மினலில் இருந்த கண்ணடி சுற்றுச் சுவற்றில், மூன்றாம் சம்பவத்தில், கால்வாய் நீரில்.மூன்று முகங்களும் எனக்குச் சற்றும் சம்பந்தமில்லாத வேறு யார்யாரோ அன்னியர்களுடைய முகங்கள்!”
கதவைத் தட்டும் ஒலி கேட்டு
“யெஸ் !கம் இன்” என்றாள் டாக்டர்.
தட்டல் திரும்பவும் தொடர்ந்த்து.
“ஒ! இந்த கதவுல ஏதோ பிரச்னை! சிக்கிக் கொள்கிறது. வெளியில் இருந்து திறக்க முடிவதில்ல, ஒரு நிமிடம் இதோ வருகிறேன்” என்று போனாள்.அவளும் , வரவேற்பறை பெண்ணும் மெதுவாக பேசும் சத்தம் கேட்டது.
பின்னர் டாக்டர் திரும்பி வந்தாள்.
அவள் முகம் வெளிறியது.
“ஒ! காட்! ரேஷ்மா! நீ எங்க இங்க வந்த? என்னுடைய பேஷண்ட் எங்கே?”என்றாள்.
~oOo~