தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே இருந்த தீண்டாமை

தோல் 2012ல் சாஹித்ய அகடமி விருதுபெற்ற நாவல். திண்டுக்கல்லில் தோல்ஷாப்பு எனப்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வும், அதன் நெருக்கடிகளால் தொழிற்சங்கம் எப்படி உருவாகிவந்தது என்பதும்தான் கதை. நாவல் தொடங்குமுன் கதா மாந்தர்கள் என்ற தலைப்பில் 117 பாத்திரங்கள், அவர்களது பெயர்கள்-தொழில்கள் என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆசிரியர் டி.செல்வராஜ் அவரது முன்னுரையில்,’ இந்த நாவலில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் தமிழகத்தின் சரித்திர கதியில் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மாந்தர்களின் பிரதிபிம்பங்களே’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவில் வரலாற்றை நெருக்கமாகப் பிரதிபலிக்கும் நாவல் என்று கொள்ளலாம். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திலிருந்து கதை தொடங்குகிறது. வாசகர் ஆழமான மனவெழுச்சிக்கு உள்ளாகக்கூடிய இடங்கள் நாவலில் பல உண்டு.

%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-thol_skin

‘இதுநாள் வரையில் ஒரு பறையனுடைய கரம் எந்த ஒரு தோல்ஷாப்பு முதலாளியின்மீதும் பட்டது கிடையாது’ என்று இரண்டாவது பத்தியிலேயே வரும் வரி முக்கியமானது. அந்த ஓசேப்பு ஒரு தோல்ஷாப்புத் தொழிலாளியாக இருந்தபோதும், அடக்குமுறைக்கு எதிராக அவனது எதிர்ப்பை, தொழிலாளியின் கரம் என்றில்லாது பறையனின் கரம் என்று ஆசிரியர் வர்ணிப்பதால் அக்காலத்தில் தொழிலாளர் பிரச்சினை அடிப்படையில் சாதிப் பிரச்சினையாக இருந்ததாகக்கொள்ளலாம். ஆனால் அடிவாங்கிய முதலாளியின் சாதி அந்த வரியில் இல்லை. ஓசேப்பிடம் அடிபட்ட முதலாளி ஒரு காமாந்தகன். பெயர் முஸ்தபா மீரான். அவர் ‘ஒரு தோல்ஷாப்பு முதலாளி’யாகத்தான் வர்ணிக்கப்படுகிறார். அதனால் இது ஒரு வர்க்கப்போராட்டமும்கூட.
தாழ்த்தப்பட்டவர்களுக்குள் நிலவும் தீண்டாமையையும் நாவல் நேர்மையாகப் பதிவுசெய்திருக்கிறது. வர்க்க அடிப்படையில்தான் அவர்கள் ஒன்றுபடமுடிகிறதே ஒழிய சாதி அடிப்படையில் அல்ல. தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரேபேரில் வகைப்படுத்தி சக்கிலியர்களைத் தமக்குச் சமமாக ஆக்கிவிடுவார்களோ என்று பறையர்கள் ஆதங்கப்படுவது பதிவுசெய்யப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு அவர்களில் கிறிஸ்தவத்துக்கு மாறிவிட்டவர்கள் மாறாதவர்களை அஞ்ஞானிகளாகப் பார்ப்பதால் மதப்பிரச்சனையும் சேர்ந்து பிளவை இன்னும் பெரிதாக்குகிறது. ‘நீ வேதக்காரன், நான் சேரிப்பறைச்சி. ஊரு ஒப்புமா?’ என்று கலங்கும் அருக்காணியிடம், ஓசேப்பு, ‘நாம அல்லாரும் ஒருச்சாண் வவுத்துக்கு வேண்டி கைய ஊண்டிக் கரணம்போட்டு காலத்த ஓட்டுறவுக’ என்று பொருளாதார அடிப்படையில் வர்க்கத்தைக் கொண்டுவந்து சமப்படுத்தவேண்டிவருகிறது.
ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவுகிறார் சந்தரேச அய்யர். ஆனால் முதலில் கடவுள்களான ராமன், கிருஷ்ணன் ஆகியோரின் மோசமான குணநலன்களை ஆராய்ச்சி செய்பவராக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் அவரது நல்லதனங்கள் பேசப்படுகின்றன. அவருடைய மகன் சங்கரன் படாதபாடுபட்டுத் தொழிற்சங்கத்தை உருவாக்கி, தொழிலாளர்கள் நலனே தன் வாழ்க்கை என்று அமைத்துக்கொள்பவன். ஆனால் இவனையும் பூணூலை அறுத்து எறிந்துவிட்டவன் என்று முதலிலேயே ஆசிரியருக்கு அறிமுகம்செய்ய வேண்டியதிருக்கிறது.
சங்கரன் தொழிலாளர்களுக்கு சங்கம் மூலமாகச்செய்யும் உதவிகள் அதிகாரத்தாலும் குறுக்குவழிகளாலும் பல்வேறு விதங்களில் முடக்கப்பட முயற்சிகள் செய்யப்படுவதும் அவை முறியடிக்கப்படுவதும் நாவலின் கணிசமான பகுதிகள். பிறகு பிரிட்டிஷ் அரசால் தொழிற்சங்கத் தலைவர்கள் ராஜத்துரோகிகளாக வர்ணிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அதில் சங்கரனும் கைதாகிறார். ஆனால் கொஞ்சகாலத்திலேயே இந்தியாவின் சுதந்திரம் அவர்களையும் விடுதலை செய்கிறது. சங்கரனும் விடுதலையாகி தொழிற்சங்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.
இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான வரலாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது. சுதந்திரம் கிடைத்ததும் கூட்டப்பட்ட காங்கிரஸ் கொண்டாட்ட மேடைகளில் வலுவான காந்திபக்தராகவும், தேசபக்தராகவும் இருக்கும் கணேசய்யர் என்பவர் கலந்துகொள்ள மறுக்கிறார். ‘நேற்றுவரையிலே கனத்த பிரிட்டீஸ் விசுவாசியும், தேசவிடுதலைக்கு எதிராக சதிசெய்தவனும் எல்லாம் ஒரு கதர்ச்சட்டையை மாட்டீண்டு வந்தே மாதரம் சொல்லவும், அவா எல்லாம் காங்கிரஸ் கட்சியில முக்கியப்பிரமுகர்’ என்று தார்மீகக்கோபத்துடன் சலித்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுகிறார். இவர் அப்படி அன்று ஒதுங்கிய பலரின் அடையாளமாக இருக்கலாம். ஜஸ்டிஸ் கட்சியினர் அப்படிப் புதுவேடம் பூண்டதை மேலும் சில இடங்களிலும் ஆசிரியர் சொல்லியுள்ளார்.
விடுதலைக்குப்பிறகு தேசம் எதிர்கொண்ட உணவுப்பஞ்சமும் ஓர் அத்தியாயத்தில் வருகிறது. அப்பஞ்சத்தின்போது பதுக்கல் செய்யாமல் நியாயமான முறையில் நடந்துகொள்ளும், ஐந்துவேளை தொழும் கடவுள் நம்பிக்கையுள்ள செல்ல மரைக்காயர். இன்னொருபக்கம் வாய்ப்பைப்பயன்படுத்திக் கள்ளமார்க்கெட்டில் காசு பார்க்கும், ஏழுமலையானை மாதம்தோறும் தரிசித்துவரும் நாராயணபிள்ளை என்று வேறுபடுத்திக்காட்டுவது யதார்த்தமாக நிகழ்ந்துவிட்ட ஒன்றாகக் கருதமுடியாதபடி ‘திருப்பதி வெங்கடாசலபதியும் அவரது தொழிலில் ஒரு பார்ட்னர்’ என்று ஆசிரியர் வர்ணித்திருப்பது அமைந்துவிட்டது.
சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், சாதிரீதியான எண்ணிக்கை மெஜாரிட்டி ஜனநாயக அடிப்படையோடு பொருந்திப்போவதை உணர்ந்து சாதி அரசியல் தலைதூக்குவது பதிவுசெய்யப்பட்டுள்ளது. பிள்ளைமார்கள் வியாபாரிகளாகவும் மெஜாரிட்டி வாக்காளர்களாகவும் இருந்ததால் தேர்தல் ஜாதி அடிப்படையிலான வியாபாரமாகவே அணுகப்பட்டது என்று ஒரு கருத்தை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். வியாபாரம் என்றால் பணத்தை முதலீடு செய்து பிறகு அதிலிருந்து லாபம் சம்பாதிப்பது. பிள்ளைமார்களுக்கு அடுத்தபடியாக நாயுடுக்கள் என்று நேரடிப்பதிவாகவே இருக்கிறது இவரது எழுத்து.
பிணமெரிக்கும் காக்கையன் கதை சொல்வதாக வரும் பகுதியொன்று புராணக்கதையொன்றைத் தாழ்த்தப்பட்டவர்கள் பார்வையில் சொல்கிறது. பாற்கடலைக் கடையும்போது வந்த சீதேவி, ‘நான் எங்க போகட்டும்’ என்று ஈசுவரனைக் கேட்டதாகவும், அவர் ‘ஆண்டைகள் வூட்டுலபோயி ஒக்காந்துக்க’ என்று உத்தரவு போட்டதாகவும், பிறகு சரசுவதியை அய்யமாரு தெருவுக்கும், கடைசியாக வந்த மூதேவியை பள்ளுபறைக இருக்கற சேரிக்கும் ஓட்டிவிட்டான் என்றும் அக்கதைபோகிறது. புராணங்கள் சுலபாமாக விடைகாணமுடியாத பலகேள்விகளுக்கு அவரவர்களுக்குத் தேவையான விளக்கங்களைத் தந்தபடியே என்றும் இருக்கின்றன.
தலித் இலக்கியங்கள் அவர்களது இன்னல்கள், கவலைகள், கேவலங்கள் ஆகியவற்றைத்தான் சித்தரிக்கின்றன. அவர்கள் போராட்டங்களை இலக்கியத்தில் கொண்டுவர மறுக்கின்றன என்று முன்னுரையில் எழுதும் ஆசிரியர், ஆச்சரியமேதுமில்லாமல், ஒசேப்பு நகரசபைத் தலைவராக ஆவதாக நாவலை முடிக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களோடு தோளுரசி நிற்கும் தன் மகன் சங்கரனின் நடவடிக்கைகளால் மனம் நொந்துநிற்கும் அவரது தாய் அம்புஜத்தம்மாளும் இறுதியில் தேவதாசிப்பெண்ணைத் தன் மருமகளாக ஏற்கிறார்.

daniel_selvaraj_sahitya_akademi_writers_authors_tamils

ஆசிரியரின் மொழி இயல்பாகவும் எளிமையாகவும் இருக்கிறது. பிராமண, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகங்களின் வழக்குச்சொற்களும் வாக்கிய அமைப்பும் செயற்கைத்தன்மை இல்லாமல் கதாபாத்திரங்களுடன் ஒன்றியிருக்கின்றன. ஆத்தக் கண்டமா அழகரப்பாத்தமா, சாமை வெளஞ்சாத் தெரியும் சக்கிலிச்சி சமஞ்சாத் தெரியும், ஒளிய எடம் கெடைக்காம தலையாரி வீட்டுல ஒளிஞ்சமாதிரி, நண்டைச்சுட்டு நரியக்காவலுக்கு வச்சமாரி போன்ற அதிகம் கேள்விப்படாத சொலவடைகள் ஆங்காங்கே பொருத்தமாகப் பயின்றுவருகின்றன.
தொழிற்சங்கம் போராடும் அனைத்திலும் கிடைத்துவிடும் தொடர்வெற்றிகளும், தொழில்முறை அடியாட்களைக் கூட சாதாரணமாக வீழ்த்திவிடும் சங்கத்தலைவரும், நொடியில் கூட்டத்திலிருந்து மறைந்துவிடும் புரட்சித்தோழர்களும் இந்நாவலில் வரலாறு எத்தனை சதவீதம் என்ற கேள்வியை விதைக்காமலில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.