சோ – ஒரு தன்னிகரற்ற நிகழ்வு

modi_vijayganth_cho-jaya

நாம் நம்மை அறியாமலேயே மெல்ல மெல்ல கால வெளியில் அமிழ்ந்து கொண்டிருக்கிறோம். பிருமாண்டமான விருட்சங்கள் எல்லாம் நம் காலத்தில் தன் கடமைகளை முடித்துக் கொண்டு சரிந்து கொண்டிருக்கின்றன. ஒரு மாபெரும் கால வெளி நாம் காலடியில் சறுக்கிச் சென்று கொண்டேயிருக்கிறது. நம் தலைமுறையில் தமிழ் நாட்டில் நாம் கண்ட ஒரு முக்கியமான தன்னிகரற்ற ஒப்புமையில்லாத அரசியல் நிகழ்வு என்று சொல்ல முடியுமானால் அது சோ.ராமசாமியின் பங்களிப்புகளாகத்தான் இருக்க முடியும். இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் கூட சோ ஒரு சமூக தார்மீக அறிவார்ந்த ஆன்மீகமான நேர்மையான நிகழ்வு, தமிழ் நாட்டின் மனசாட்சி என்பேன்.
எழுபதில் துவங்கி இன்று வரை என்னுடன் அணுக்கமாகத் தொடர்ந்து வரும் என் மனசாட்சியின் குரலாக என்னுடன் கூட வரும் ஒரு மாபெரும் ஆளுமை சோ ராமசாமி. தமிழ் நாட்டின் வேறு எந்தவொரு அரசியல் கலை இலக்கிய ஆளுமைகளையும் விட நான் மிகவும் நெருக்கமாக உணர்ந்ததும், படித்ததும், கேட்டதும், சந்தித்ததும் என் வாழ்வின் ஒரு பகுதியாக ஆனவருமாக நான் அவரை உணர்கிறேன்.
சோவுக்கு முன்னோடியாக நாம் சொல்ல வேண்டும் என்றால் பாரதியை மட்டுமே முழுமையாகச் சொல்ல முடியும். தான் நினைத்த தார்மீகத்தின் மீது தான் நினைக்கும் உண்மையை எதைக் கண்டும் அஞ்சாமல் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத பாரதியின் பாரம்பரியத்தைத் தொடர்ந்தவர் சோ. பாரதிக்குப் பிறகு கல்கி, ஜெயகாந்தன், திரு வி க போன்றோர் பன்முகத் திறமையுடன் சமூக, அறிவு, கலை,இலக்கிய, அரசியல் என்று பன்முக வெளிகளில் செயல் பட்டாலும் கூட அவர்களில் சோ பல்வேறு காரணங்களினால் மிகவும் காத்திரமான ஒரு தனித்துவமான நிகழ்வாக தமிழக, இந்திய வரலாற்றில் மிக உயரமான இடத்தில் நிற்கிறார்.
கல்கியும் ஜெயகாந்தனும் பத்திரிகைகள் நடத்தியுள்ளார்கள். சமூக அக்கறையுடன் செயல் பட்டுள்ளார்கள். தங்கள் கருத்துக்களை எதற்காகவும் சமரசம் செய்யாமல் துணிவுடன் வெளிப்படுத்தியுள்ளார்கள். சினிமாவிலும் நாடகத்திலும் தங்களை ஈடுபடித்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகை ஆசிரியர்களாக மிக வெற்றிகரமாக இயங்கியிருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களையெல்லாம் விட பல தளங்களில் பல பங்களிப்புகளின் மூலமாக தனித்துவமாக விளங்கும் ஒரு ஆளுமை சோ.
சோ பற்றிய தனது நீண்ட கட்டுரையொன்றில் வெங்கட் சுவாமிநாதன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
”காந்தி போல திரு வி க போல தன்னில் நிகழ்ந்த ஒரு அக மாற்றத்தின் தார்மீக சக்தியை முற்றிலுமாக ஒரு அரசியல் சக்தியாக சமரசமின்றி செய்தவர் சோ.” ஆம் அந்த வகையிலேயே அவர் தன் முன்னோடிகளை விட பல மடங்கு வேறு படுகிறார்.
அத்தகைய சோ குறித்து 1970 முதல் இன்று வரை நான் படித்து,கண்டு, கேட்டு, உணர்ந்து, சந்தித்து, பேசிய சோ குறித்த எனது பார்வைகளை இந்தக் கட்டுரைத் தொடரில் பகிர்ந்து கொள்கிறேன்
ஒரு வக்கீலாக தன் வாழ்க்கையைத் துவங்கிய சோ அந்தத் துறையிலும் தான் வேலை பார்த்த டி டி கே நிறுவனத்திலும் சரி பின்னாளில் அரசியல் வழக்குகளிலும் சரி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறார். ஆனால் அவர் ஒரு வக்கீல் என்பதற்காக பொது வெளியில் அறிமுகம் ஆகவில்லை பிராபல்யம் அடையவில்லை. ஒரு வக்கீலாக, நாடக ஆசிரியராக, வசனகர்த்தாவாக,நாடக இயக்குனராக நாடக நடிகராக, நகைச்சுவை நடிகராக, சினிமாவில் நகைச்சுவை நடிகராக, சினிமா இயக்குனராக, சினிமா தயாரிப்பாளராக, சினிமா வசனகர்த்தாவாக, கவிஞராக, நாவலாசிரியராக, ஆன்மீக எழுத்தாளராக, அரசியல் விமர்சகராக, பத்திரிகையாசிரியராக, அரசியல்வாதியாக, ஜனநாயகப் பாதுகாவலராக, ஜனநாயகப் போராளியாக, ஆன்மீகவாதியாக, தத்துவ விளக்குனராக, கிரிக்கெட் ஆட்டக்காரராக, கிரிக்கெட் விமர்சகராக, ஆட்சியாளர்களை உருவாக்கும் கிங் மேக்கராக,. அவர்களை வீழ்த்துபவராக, மேடைப் பேச்சாளராக எல்லாவற்றுகும் மேலாக அற்புதமான மனிதராக வாழ்ந்து தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை விட்டுச் சென்றுள்ளார் சோ. மேற்கண்ட அனைத்து பரிமாணங்களிலும் அவரது பங்களிப்புகளை இந்தத் தொடரில் சற்று காணலாம்.

m-r-cho-ramasamy

சோ என்னும் நாடகக்காரர்

தமிழ் நாட்டின் தனிப் பெரும் அரசியல் நிகழ்வாக அவர் உருவாவதற்கான அடித்தளம் அவரது நாடக முயற்சிகளில் போடப்பட்டிருந்தது.
ஒரு நாடகத்தில் சோ என்ற பெயரில் அழைக்கப் பட அதையே தனது முத்திரைப் பெயராக துவக்கத்திலேயே வைத்துக் கொண்டு நாடக உலகில் நுழைகிறார். தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நாடகங்களைத் தானே எழுதி, இயக்கி, நடித்து அரங்கேற்றுகிறார். அது சென்னையில் படித்த மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுகிறது. அவரது நாடகங்கள் பெரும்பாலும் அரசியல் அங்கத பாணி துணுக்கு வசனங்களால் நிறைந்த நாடகங்களாகவே இருந்தன. அவருக்கு முன்பாக அரசியல் நாடகங்கள் பெரும்பாலும் ஆக்ரோஷமானவையாகவே இருந்து வந்தன. எம் ஆர் ராதா தனது நையாண்டி வசனங்களினால் அவற்றில் கலகலப்பை ஏற்படுத்தினார். சோ நையாண்டி வசனங்களினாலும் கேலி கிண்டல்களினாலுமே தன் நாடகங்களை முன் வைத்தார். அவை கூரிய விமர்சனங்களுடன் கூடிய அரசியல் சமூக நாடகங்களாகவே இருந்தன. அவற்றில் தெருக்கூத்து நாடகங்களின் விதூஷகனை ஹீரோவாக்கி அவனது கேலிகளை வசனமாக்கி நாடகங்களாக்கினார். மக்கள் ரசித்தார்கள், சிரித்தார்கள். அரசியல் விமர்சனங்களை நையாண்டி முறையில் சொல்வது அவர்களுக்கு புதுமையாகவும் சிரிப்பாகவும் இருந்தது
”நான் ஜோக் அடிப்பதில்லை. நான் உண்மையைச் சொல்லுகிறேன். ஆனால் அந்த உண்மைகள் உங்களுக்கு வேடிக்கையாகத் தெரிகின்றன. ஆகவே நான் உண்மையைச் சொல்லும் பொழுதெல்லாம் நீங்கள் சிரிக்கிறீர்கள். உண்மைகளை நீங்கள் வேடிக்கைகளாக எடுத்துக் கொள்கிறீர்கள்” என்று பெர்னார்ட் ஷா சொன்னதை நிகழ்த்திக் காட்டியவர் சோ. சோவின் நாடகங்கள் உண்மைகளைச் சொல்லின. அவைகள் நிர்த்தாட்ச்சண்யமின்றி சமூகத்தையும் அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்தன. அந்த அசிங்கங்களின் உண்மை முகங்களைத் தோலுரித்தன. ஆனால் மக்கள் அதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டனர். அந்த அடித்தளத்திலேயே சோ தனது ஆரம்ப கால முதல் அனேகமாக பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் தன் நாடக முயற்சிகளைத் தொடர்ந்து வந்தார்.
அவரது கோமாளித்தனங்களுக்கும் கிண்டல்களுக்கும் பின்னால் ஆழமான வருத்தங்களும் உண்மையான சமூக அக்கறைகளும் கடும் விரக்திகளும் இயலாமையும் இருந்தன. அவற்றின் மீது தன் கோமாளித்தனங்களை நிறுத்தி மக்களை அணுகினார் அதன் மூலமாகவே தமிழ் நாட்டு மக்களிடம் பரவலாக சென்றும் சேர்ந்தார்.

தமிழ் நாடு ஒரு மாபெரும் பயித்தியக்கார கூடம். அதில் புத்தி ஸ்வாதீனமுள்ள ஒரே மனிதர் சோ. ஆகவே தமிழ் நாட்டின் மன நோயாளிகள் எல்லாம் சோ வைக் கோமாளி என்று கருதியதில் ஆச்சரியம் ஏதுமில்லை

என்கிறார் வெ சா.
சோவின் ஆரம்ப கால நாடகங்கள் பக்தவச்சலம் ஆட்சியின் போதாமைகளை செயலின்மைகளைக் கேலி செய்வதாக அமைந்திருந்தன. அவரது நாடகங்களை அந்நாட்களில் தமிழ் நாட்டின் முதலமைச்சர்கள் துவக்கி வைத்து பேசியிருக்கிறார்கள். அப்படி பேச வந்த காமராஜருக்கும் சோவுக்கும் அதனால் பலத்த வேறுபாடு மூண்டது. எதற்கும் அஞ்சாத துணிவான துடிதுடிப்பான இளைஞரான சோவின் வேகம் அனைவரிடமும் எரிச்சலை ஏற்படுத்தியது. அதிகப் பிரசங்கி என்று காமராஜரால் வர்ணிக்கப் பட்டார் ஆனால் பின்னால் அப்படி விலகிய அனைவராலும் மிகவும் நேசிக்கப் பட்டு மதிக்கப் பட்டவர் சோ. காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரசை விமர்சனம் செய்த சோவின் நாடகங்களை திமுகவினர் மறைமுகமாகவும் நேரடியாகவும் பாராட்டி மகிழ்ந்தனர். அண்ணாத்துரையும் கருணாநிதியும் நாடக மேடைகளில் கலந்து கொண்டனர். ஆனால் அதே தி மு க சோ வை தனது முதல் பகைவனாக வரித்துக் கொண்டது. ஆட்சிகள் மாறின ஆள்வோர் மாறினர் ஆனால் சோ தான் கொண்ட கருத்துக்களில் மாற்றம் கொள்ளவில்லை. அவர் விமர்சனங்களை எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் துணிந்து வைத்துக் கொண்டிருந்தார்.
சோ கிட்டத்தட்ட 18 மேடை நாடகங்களும் பல தொலைக்காட்சி தொடர் நாடகங்களும் எழுதி, இயக்கி, நடித்து அளித்துள்ளார். அவரது துவக்கக் கால நாடகங்கள் பலவும் ஆங்கில தலைப்புகளில் இருந்தன. இறைவன் இறந்து விட்டானா?, க்வோவாடிஸ், சம்பவாமி யுகே யுகே, மனம் ஒரு குரங்கு, யாருக்கும் வெட்க்கமில்லை, உண்மையே உன் விலை என்ன, சாத்திரம் சொன்னதில்லை, ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட், சரஸ்வதி சபதம், முகமது பின் துக்ளக் ஆகியவை பல நூறு தடவைகள் மேடையேறிய பிரபலமான நாடகங்களாக இருந்தன. கடுமையான எமர்ஜென்சி காலத்திலும் கூட எமர்ஜென்சியையும் இந்திராவையும் விமர்சித்தன அவரது சம்பவாமி யுகே யுகே போன்ற நாடகங்கள்.
அவற்றுள் பல நாடகங்களை அவர் பின்னர் சினிமாக்களாகவும் எடுத்தார். அவற்றில் முகமது பின் துக்ளக் நாடகம் ஆளும் திமுகவினாலும் அதன் சர்வ வல்லமை படைத்த எம் ஜி ஆராலும் கடுமையாக எதிர்க்கப் பட்ட ஒரு சினிமா. நாடகத்தை அப்படியே சினிமாவாக எடுத்து விடுவார் சோ. இருந்தாலும் அந்தப் படம் வெளியாக கடுமையான பிரச்சினைகளை எம் ஜி ஆரும் திமுகவினரும் எடுத்தனர். அவற்றை மீறி அந்த சினிமா வெளி வந்த பொழுது பெரும் வரவேற்பை பெறாவிட்டாலும் இன்றும் காலத்தைக் கடந்து எந்தக் காலத்துக்கும் பொருந்தும் அரசியல் அங்கத நாடகமாகத் தொடர்கிறது. உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை போன்ற நாடகங்கள் சமூக அவலங்களை விமர்சித்த சற்று சீரியசான நாடகங்களாக இருந்தன.
சோவின் நாடகங்கள் கலாபூர்வமான நாடகக் கலை கிடையாது. பிற்காலத்தில் சோவின் நாடகங்களில் இருந்த கூர்மையான வசனங்கள், சமூகப் பார்வைகள், அரசியல் விமர்சனங்கள் இல்லாத துணுக்குத் தோரணங்களால் மட்டும் நிரம்பிய நாடகங்கள் வருவதற்கு காரணமாக அமைந்து விட்டன. தன் நாடகங்கள் நாடகக் கலைக்கு உண்மையாக இருப்பவை அல்ல அவை மேடைக் கூத்தின் விதூஷகனின் நீட்சி மட்டுமே என்ற உண்மையை சோ வெளிப்படையாக தன் நாடகங்களின் மீதான சுய விமர்சனமாகவே கொண்டிருந்தார். தன் அபத்த நாடகங்களை மீறி உண்மையான நாடகக் கலைகளை எல்லாம் அவர் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தத் தவறியதில்லை. உடையப்பா தேவரின் தெருக்கூத்து பாணி நாடகங்களை பலரிடமும் கொண்டு சேர்த்தவர் சோ. கோமலின் தண்ணீர் தண்ணீர் நாடகத்தை வெகுவாகப் பாராட்டியவர் சோ. தான் என்ன செய்கிறோம் அதன் எல்லை என்ன என்பதை அறிந்து அதை ஒத்துக் கொண்ட நாடகாசிரியர் சோ.
சோவின் நாடகங்களை கிரேக்க நாட்டின் பண்டைய நாடக ஆசிரியரான அரிஸ்டோ ஃபனோசுடன் ஒப்பிடுகிறார் எழுத்தாளர், விமர்சகர் ஆர் வி சுப்ரமணியன். சோவின் நாடகங்கள் தமிழ் நாட்டின் நகரப் பகுதிகளில் அரங்கு நிறைந்த காட்சிகளைக் கொணர்ந்தன. பெரும் வரவேற்பைப் பெற்றன
நாடகங்களில் தன் கூர்மையான வசனங்கள் மூலமாகவும் சமயோசிதமான சமகால அரசியல் சமூகத் தொடர்பான கூரிய நையாண்டி வசனங்கள் மூலமாகவும் சமூக தார்மீக கோபங்கள் வெளிப்படும் கதைகள் மூலமாகவும் தமிழ் நாடக வரலாற்றில் தனக்கென்று ஒரு தனித்த முத்திரையை பதித்தவர் சோ. அவருக்கு முன்பும் பின்னாலும் அவரது தனித்துவமான முத்திரைகள் கொண்ட நாடகங்கள் எழவில்லை. அந்த வகையில் ஒரு நாடக நடிகராக ஒரு நாடக ஆசிரியராக ஒரு நாடக இயக்குனராக வசனகர்த்தாவாக ஒரு தனிப் பாரம்பரியத்தை தனக்கென்ற ஒரு இடத்தை உருவாக்கியவர் சோ.
நாடகத்தை தன் எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாகக் கருதினாரே ஒழிய அவற்றை கலையம்சம் உடைய ஒரு கலையாக அவர் கருதியதில்லை. அது ஒரு வேடிக்கையான உத்தி என்ற விதத்தில் மட்டுமே கையாண்டார். நடிப்பு, மேடை உத்திகள், பெரிய செட்டுகள், படாபடோபமான ஒப்பனைகள் உடைகள் மாயா ஜாலங்கள் என்று எதையும் அவர் பொருட்படுத்தியதில்லை. ஒரு நாடகத்தில் ஒரு நடிகர் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அவர் கொண்டு வரும் பணப்பெட்டி மேடையில் தவறுதலாகத் திறந்து உள்ளே ஒன்றும் இல்லாமல் இருந்து விடுவதைக் கண்ட பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள். உடனே சோ “ உன்னை பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வா என்றால் வேறு பெட்டியைக் கொண்டு வந்து விட்டாயே முட்டாள் உள்ளே போய் சரியான பெட்டியைக் கொண்டு வா” என்கிறார். அந்த சமயோதிடம் கொண்டு மேடையை நகற்றி விடுகிறார்.
நாடக மேடை சோவுக்கு அளித்த அடித்தளம் கொண்டு அதன் மூலமாக அடுத்த மீடியமான சினிமாவுக்குள் நுழைகிறார். அது அவருக்கு மிக எளிதாகவும் மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரும் பிரபலத்தையும் அளித்து விடுகிறது.

தொடரும்

2 Replies to “சோ – ஒரு தன்னிகரற்ற நிகழ்வு”

  1. சோ பற்றிய ஒருத் தெளிவானப் பார்வையில் உண்மையாகவும் நேர்மையாகவும் இந்த விமர்சனம் அணுகப்பட்டுள்ளது.சமூகத்தையும் அரசியலையும் சோ அணுகிய அதே அணுகுமுறையில்…நன்று.

  2. மிகச் சரியான கணிப்புக் கட்டுரை. ‘ No Compromise when telling the truth’ என்பதற்கு திரு சோ அவர்கள் சிறந்த உதாரணம் . சில வரிகளைப் படிக்கும் போது அந்த நாடகங்களின் காட்சிகளும் கருத்துக்களும் கண் முன்னே வந்து நிற்பது போன்றே இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.