2016ஆம் ஆண்டு அரபு இலக்கியத்துக்கான நக்விப் மஹ்ஃபூஸ் பதக்கம் எகிப்திய எழுத்தாளர் ஏடல் இஸ்மாட் (Adel Esmat) அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தினரால் வழங்கப்படுவது. ஆங்கில மொழியாக்கம் செய்யப்படாத சமகால அரபு மொழி நாவல்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. ‘யூசுஃப் டாட்ரஸின் கதைகள்’ (Hikayât Yûsuf Tadrus- The Tales of Yusuf Tadrus) என்ற நாவலுக்காக விருது பெற்ற இஸ்மாட்டின் ஏற்புரை:
என் இளமைப் பருவத்தின் துவக்க காலம் முதலே நக்விப் மஹ்ஃபூஸின் (Naguib Mahfouz) படைப்புகள் மற்றும் அவற்றின் சூழல் என் வாழ்க்கைக்கு செழுமை சேர்த்திருக்கிறது. ஆனால், அவரது சிந்தனை மற்றும் வாழ்வு முறை குறித்து அவரது கலையாக்கங்களைக் கொண்டு கற்றதைக் காட்டிலும் அவரது உரையாடல்களைக் கொண்டே கற்றேன். 1990களின் துவக்கத்தில் நான் தீவிரமாக எழுதத் தொடங்கியபோது அவரது வாழ்க்கைச் சரிதைதான் எனக்கு உதவியது. அன்று முதல் எப்போதும் நான் தீர்வு தேடும் பொழுதுகளில், அவர் என் முன் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு அவரிடம் என் கேள்வியைக் கேட்டுக் கொள்வது உண்டு. கலை குறித்த சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, நான் செய்து கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு டண்டாவின் வீதிகளில் நடந்து செல்வேன். அப்போது அவரை நினைவிலிருத்தி, அவரது சிந்தனை முறையை நினைவுக்குக் கொண்டு வந்தபின் அவரிடம் கேட்பேன்: இதை நான் எப்படி எதிர்கொள்வது என்று. அந்த உரையாடலின் முடிவில், “எனக்கு வேலை செய்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாது” என்று சொல்லி உரக்கச் சிரிக்கும் அவரது நகைப்பொலி கேட்கும்.
காலப்போக்கில் அவரை நினைவுகூர்ந்து நீண்ட நேரம் அவருடன் என்னால் உரையாட முடிந்தது. அவர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்து, “விரக்திக்கு ஆளாகாமல் எது என்னை மேலும் மேலும் செலுத்திக் கொண்டிருந்தது தெரியுமா? நான் கலைதான் வாழ்க்கை என்று இருந்தேன், அதை ஒரு பிழைப்பாக வைத்துக் கொள்ளவில்லை; பிழைப்பாய் வைத்துக் கொண்டால், அதன் பலன்களில் மீதுதான் உன் நாட்டம் இருக்கும்…”, என்று கூறியதை நான் நேரில் கண்டிருப்பதாய்ச் சொல்ல விரும்புகிறேன்.
இந்தக் காட்சியை நான் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்திருக்கிறேன், இப்போது இது எனக்கு உண்மையாகவே ஆகி விட்டது, என் நினைவுகளின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. கெய்ரோ மற்றும் பத்திரிக்கைத்துறையில் நிலவிய சூழலுக்குப் பொருத்தமில்லாத இயல்பும் நுண்ணுணர்வும் கொண்ட ஒரு எழுத்தாளனுக்கு இந்த உரையாடலே மிக முக்கியமானதாய் இருக்கும். இந்த அறிவுரையைக் கடைப்பிடிக்க என்னாலான அவ்வளவும் செய்தேன், ஆனால் முடியவில்லை; நமது ஆக்கங்கள் தாக்கம் செலுத்துவதை நாம் காண விரும்புகிறோம், அதன் உருவத்தைக் கண்டுகொள்ள விரும்புகிறோம். உண்மையை இம்மியாவது பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடி இருந்தாக வேண்டும். நம் தேசத்தின் சிக்கல்கள் வாசகர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்ட போதிலும், விமரிசனத்துறையும் நலிவடைந்து விமரிசகனின் மனசாட்சி மற்றும் அவனது ஆர்வங்களால் மட்டும் உந்துதல் பெறுகிறது என்றாலும் எழுத்தாளனின் கண்ணாடி வாசகர்களும் விமரிசகர்களும்தான். இந்நிலையில், வளரும் எழுத்தாளன் ஒருவன் தன் எழுத்தின் உண்மை குறித்து எப்படி அறிந்து கொள்ள முடியும்?
நான் இந்தப் பிரச்சினையை இவ்வாறு எதிர்கொண்டேன்: ஒரு நூலகனாய் பணிபுரிந்து வீடு கட்டி குழந்தை பெற்றுக் கொண்டு ஒரு சிறிய நகரில் வாழ்ந்து கொண்டே உன்னால் நாவல்கள் எழுத முடிந்தால் போதும் என்றால் நீ எழுத்தை மூச்சு விடுவது போன்ற ஒரு இயல்பான செயலாக ஆக்கிக்கொள்ள கடும் முயற்சிகள் செய்தாக வேண்டும்- அப்போது, கலை உனக்கு அழைப்பு விடுக்கும்போதெல்லாம் நேரடியாய் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவி உன் வசம் இருக்கும். சிந்தனைக்கும் புரிதலுக்கும் தகுந்த ஒரு கருவியாய் எழுத்தைப் பயன்படுத்த நான் நீண்ட பயிற்சியொன்றைத் துவங்கினேன். என் மனதில் தோன்றியதெல்லாம் எழுதினேன்: ஒவ்வொரு காட்சியும் கதையும், என் கனவுகளையும் என் நண்பர்களின் கனவுகளையும் எழுதினேன். செய்தித்தாள்களில் என் கவனத்தைக் கவர்ந்த நிகழ்வுகளுக்கான திரைக்கதைகள் எழுதினேன். என் வாழ்வில் எழுத்தை வேரூன்றச் செய்யவே இதையெல்லாம் செய்தேன், கலைப் படைப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் அல்ல. துவக்கத்திலிருந்தே கலையென்பது மிகக் கடுமையானது என்பதை அறிந்திருந்தேன். கடல் பற்றி தினம் இரண்டு பக்கங்கள் என்ற அளவில் பத்து நாட்கள் எழுதும் பழக்கத்தை ஒருவன் உருவாக்கிக் கொண்டான் என்றால், பதினொன்றாம் நாள், நிச்சயம் அவன் கடலை வேறொன்றாய் காண்பான் என்று என் நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு.
பெரும்பாலும் முயற்சிகள் வீண் போவதில்லை. இறுதியில் அவை புரிதலை அளிக்கின்றன, ஒருவன் தன் திறமைகள், சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்ளச் செய்கின்றன. நம் நோக்கங்களிலிருந்து நம்மை விலக்கி, தம்மளவிலேயே முக்கியத்துவம் கொண்ட முயற்சிகள் ஆகின்றன. நான் எந்த ஒரு பிரச்சினையை எதிர்கொண்டபோதும், அதை ஒரு வரைபடமாய்ச் சித்தரிப்பேன், அதன் வேர்கள் மற்றும் விளைவுகளின் கோடுகளை வரைவேன்; என் சுமைகளை எளிதாக்கிக் கொள்ளும் விளையாட்டு. எந்த ஒரு உணர்வும் தோற்றம் கொள்ளும்போது, நான் என்னையே கேட்டுக் கொள்வேன்: இதைச் சொற்களில் கொண்டு வர முடியுமா? எந்த ஒரு நினைவும் தோற்றம் கொள்ளும்போது, ஒரு காகிதத்தை எடுத்து, அதன் எல்லைக் கோடுகளை வரைவேன்- அது நிஜமாய் நிகழ்ந்த கணம் முதல் இப்போது ஒரு நினைவாய்த் தோன்றும் வரை.
ஆண்டுகள் உருண்டோடின, காகிதங்கள் குவிந்தன, நான் அவற்றில் என்னை இழந்தேன். அவற்றை ஒழுங்குக்குக் கொண்டு வரவோ, பயன்படுத்திக் கொள்ளவோ, வழி தெரியாதிருந்தேன். சிலபோது நான் மேற்கொண்ட முயற்சிகள் வியர்த்தமாயின.
குளிர்கால நாளொன்றில் நான் சமையலறையில், தண்ணீர் கொதி வரக் காத்திருந்தேன். காப்பி போட வேண்டும். அப்போது, என்னை நோக்கியிருந்த பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த சால்வையொன்று காற்றின் அசைவுக்கேற்ற ஒரு குறிப்பிட்ட லயத்துடன் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். தனக்கேயுரிய வாழ்க்கை முறையுடன் அது, தனக்கென்று ஒரு தனி இருப்பு கொண்டிருப்பதாய் கற்பனை செய்து பார்த்தேன். காப்பியை விட்டுவிட்டு, காற்றில் படபடக்கும் சால்வை பற்றி உரைநடைக் கவிதை போலொன்றை ஒரு பக்க அளவில் எழுதினேன். இந்தக் காகிதம் வரைவு வடிவில் எத்தனை ஆண்டுகள் இருந்தது என்பது எனக்கு நினைவில்லை. யூசுஃப் டாட்ரஸ் (Yusuf Tadrus) வந்து, கலை குறித்த தனது சிந்தனைகளுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளும்வரை அது காத்திருக்க வேண்டியிருந்தது.
அன்று எழுதத் துவங்கி கால் நூற்றாண்டு சென்றபின், எழுத்து என்பது அடிப்படை பயிற்சியானது. ஓரிடத்தில் அமர்ந்து எழுதுவதற்கான கடும் முயற்சிக்குப் பின்னரும் மொழியும் கற்பனையும் வசப்படவில்லை. சில மணி நேரமாவது என்னுடன் இருக்கச் செய்ய என்னால் முடிந்த பல வழிகளில் என் எழுத்துத் தேவதையை வசீகரிக்க முயற்சி செய்து கடைசியில் நானே அவள் வசமாகினேன். இப்போது அவள் என் வாழ்வைப் பகிர்ந்து கொண்டாள், எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னை அவளுக்கே அர்ப்பணித்துக் கொள்ளச் சொன்னாள். வாழ்வினிடத்தில் அவள் இருக்க விரும்புகிறாள். மீண்டும் பிரச்சினை ஒரு உச்ச நிலையை அடைந்தது. நான் வெகு தூரம் திசை மாறிவிட்டதை உணர்ந்தேன். நாம் வாழ உதவும் பல பயிற்சிகளில் ஒன்றுதான் எழுத்து, அது அன்புக்கோ நடைப்பயிற்சிக்கோ கடல் முன் அமர்ந்திருப்பதற்கோ குடும்பத்தினரைப் போய்ப் பார்ப்பதற்கோ கபே ஒன்றில் வெள்ளிக்கிழமை காலைப் பொழுதைக் கழிப்பதற்கோ மாற்றாக முடியாது என்பதையும் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினைக்கு விடை கண்ட பின், எங்கள் உறவு தடுமாற்றமில்லாத ஒன்றாய் மாறியது. அதன் உக்கிரம் குறைந்தது, அமைதி கூடியது. நாங்கள் நீண்ட நாள் நண்பர்கள் போலானோம், சில சமயம் பிரிந்திருந்தாலும், எங்களுக்குள் பிரிவு கிடையாது என்ற உறுதி ஏற்பட்டது.
நான் கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், நான் இங்கு சித்தரித்திருப்பதைப் பார்க்கும்போது, கலை ஒரு பிழைப்பாகவும் வாழ்க்கையாகவும் இருப்பதைப் பற்றி நக்விப் மஹ்ஃபூஸ் கூறிய சொற்களுக்குதான் நன்றி கூற வேண்டும் போலிருக்கிறது- அவரது வார்த்தைகள் என் உணர்வுகளை ஊடுருவி உட்புகுந்தது போலிருக்கிறது, என் சூழ்நிலைகளுக்கும் என் நுண்ணுணர்வுகளுக்கும் இணக்கமான வகையில் அவை மாற்றம் கண்டிருப்பது போலிருக்கிறது, என்னை ஏகாந்தத்தை நோக்கிக் கொண்டு சென்றிருப்பதாய் உணர்கிறேன். நான் சந்தித்ததே இல்லை என்றாலும் நான் நக்விப் மஹ்ஃபூஸின் நண்பன் ஆனேன். அவரது சரிதை அவரை எனக்கு நெருக்கமானவர் ஆக்கியது, அவரது கண் கொண்டு நான் காண அது உதவியிருக்கிறது: என்னையும் பிறரையும் போல் அவரும் எகிப்திய அரசு ஊழியராக இருந்திருக்கிறார், நாம் எதிர்கொண்ட சிரமங்களையே அவரும் எதிர்கொண்டிருக்கிறார்- அலெக்ஸாண்டிரியாவில் அவரது அடுக்ககத்தில் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு, தன் நண்பர்களில் எவராவது அதைச் சரி செய்ய உதவுவார்களா என்று நம்மைப் போல் அவரும் தேடியிருக்கிறார். அல்லது கெய்ரோவில் அவரது வீட்டு தண்ணீர்க்குழாய் உடைந்தபோது, அவர் நாள் முழுதும் கடுகடுப்பாய் இருந்திருக்கிறார், அவர் தவறாது மேற்கொண்ட அன்றாட அலுவல்களைத் தொடர முடியாது போகிறது. அவர் நம் இதயத்துக்கும் நெருக்கமானவராய் இருக்கிறார், அவரது வாழ்வு நம் வாழ்வைப் போன்றே உள்ளது, அவரது எதிர்காலம் நம்முடையதைப் போன்றே உள்ளது, ஆனால் நம்மில் பலரிடம் இல்லாத ஒன்று அவரிடம் இருந்தது: கட்டுக்கோப்பு, துல்லியம், பொறுமை.
ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாள் வரும் மாதத்தில் அவரது படைப்புகளில் ஒன்றை நான் வாசிப்பது வழக்கம். அவரது நூற்றாண்டை நான் எனக்கே உரிய வகையில் கொண்டாடினேன். அவரது சரிதையில் இடம் பெறும்காட்சிகளைக் கண் முன் கொணர்ந்தேன்- “நக்விப் மஹ்ஃபூஸைச் சந்தித்தேன்” என்று ஒரு கதை எழுதினேன்- அந்நாளின் பிறப் பொழுதை அவரது கூஷ்டுமுர் (Qushtumur, காப்பிக்கடை) என்ற நாவலுடன் கழித்தேன். இதோ இப்போது, அவருடன் நான் நிகழ்த்திய உரையாடல்கள் நிஜ நிகழ்வின் உருவம் கொள்கின்றன. இதோ, அங்கே இருக்கிறார் அவர், தனது இல்லாமைக்கு அப்பால் எழுந்து நிற்கிறார்- ஒவ்வொரு ஆண்டும் இங்கு அவர் செய்வது போல், எனக்கு வணக்கம் சொல்கிறார், தனது பதக்கத்தை எனக்கு அணிவிக்கிறார்- இந்த உலகில் நான் இருக்கும்வரை இதுவும் என்னோடு இருக்கப் போகிறது. எங்கள் உரையாடல்களின் நினைவுப் பொருளாக- யாருக்குத் தெரியும், பிறவற்றின் துவக்கமாகவும் இது அமையலாம்.
முடிவாக, என் நாவலை இப்பரிசுக்குத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்- எனக்கு ஆனந்தமான ஒரு கணப்பொழுதைப் பரிசளித்திருக்கிறீர்கள்- எனக்கு மிகவும் தேவைப்பட்டபோது.
அனைவருக்கும் நன்றிகள் பல.