காளி பிரசாத் எழுதிய பழனி சிறுகதை குறித்து

ouroboros_snake_eating_tail_omnia_vnvs_acircles_alchemy_ancient

இந்தக் கதையின் மையம் பழனியின் லும்பன் குணமா, இல்லை அந்தக் கதை சொல்லியின் இறுதி மன நிலையா?
ஜெயகாந்தன் காலத்துலேருந்து அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதினவங்க எல்லாம் அப்படியே எதார்த்தத்தைக் கொடுக்க முயற்சி செய்தாலும், அந்தக் கதைகள் எல்லாமே அவர்களிடம் இருந்த மனிதனாகும் முயற்சியைச் சுட்டி, அவர்களுக்கு எதிராக எத்தனை சக்திகள் இயங்குகின்றன என்று காட்டும் முயற்சிகளாக இருந்தன. லும்பன் வாழ்க்கையைத் தானே கூட வாழ முயன்று வாழ்விலும், தன் முயற்சிகளிலும் தோற்றுப் போன ஜி.நாகராஜன் கூட தன் கதா பாத்திரங்களான சுசீலா/ கூட்டிக் கொடுக்கும் கந்தன் ஆகியோரிடையே இருக்கும் ஆழ்ந்த அன்பையே தொடர்ந்து குறைவான சொற்களில் கொடுத்துக் கொண்டிருந்தார். அது ஏதோ அவர்களை உய்வுக்கு இட்டுச் சென்று விடும் என்பது போலத்தான் அவருடைய அணுகல் இருந்தது. கதையின் மாற்றுத் தளமான சூழல் எதார்த்தம் அந்த நம்பிக்கையைப் பொய் என்றும் காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அழிவுக்கு நடுவே அன்பு தொடரும் என்பது பாறைப் பிளவில் துளிர்க்கும் பூஞ்செடி போல அல்லது சிறு மரம் போல என்று எடுத்துக் கொள்ளலாம்.
சா.கந்தசாமிதான் 60களின் இறுதியில் கதாசிரியர், மானுட இழிவைச் சித்திரிக்கும்போது ஒரு அற நிலைப்பாடும் எடுக்காமல் அதைக் கொடுக்கலாம் என்ற நிலையில் இருந்து கதைகளை அளித்துப் பார்த்தார். ஆனால் அவராலும் அப்படி ஒரு நிலையைத் தொடர்ந்து கொடுக்கவும் முடியவில்லை, அப்படி விலகி நின்று மனிதரை லாப் எலிகளாகப் பார்க்கவும் முடியவில்லை. தக்கையின் மீது நான்கு கண்கள் தொகுப்பில் கூட அவரின் முயற்சியையும் மீறி தர்மத்துக்கான விழைவு வெளி வந்து கதை சொல்லியின் நோக்கத்தை அழித்து நிற்கிறது.
இலக்கியம் அறப்பிரச்சாரம் செய்யக் கூடாது என்றில்லை. பிரச்சாரம்தான் செய்யக் கூடாது.
இது ஏற்கப்படக் கூடிய கருத்து என்றால், அந்தப் பிரச்சாரம் அறப் பிழற்வையும்தான் முன்வைப்பதாக இருக்கக் கூடாது.
இங்கு பிரச்சாரம் என்பது கதை சொல்லி ஊடுருவி பிரசங்கித்து கதைக்குள் வாசகன் செல்வதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்ற, நேர்த்தியைப் பிரதானமாகக் கருதும் அழகுணர்வை முன்னிலைப்படுத்துகிறது என்றாலும், நீட்ஷா போன்றார் அறிவு விகசிப்பு யுகத்தின் மையக் கருத்தை எதிர்த்த நிலைப்பாடு உங்களுக்குத் தெரிந்திருந்தால், அது ஏற்புடையதாகவும் இருந்தால், இந்நேரம் நான் சொல்ல வருவது உங்களுக்குப் புலப்பட்டிருக்க வேண்டும்.
அறம் என்பது வெறும் வடிவ நேர்த்தியிலும் வெளிப்பட்டு விடும். அதைத்தான் நீட்ஷா சொல்ல முயன்றார்.
அப்படிப்பட்ட நீட்ஷாவையுமே அவரது சகோதரி உலகுக்குக் கொடுத்த வடிவில் நிறைய திரித்து, அவரை ஃபாசிஸ/ நாஜியிச மனித விரோத அரசியலின் ஆதரவாளராக, யூத வெறுப்பாளராகக் காட்ட முயன்ற முயற்சிகள் இருந்ததால் நீட்ஷா பற்றி நாம் இன்று அறிவதில் நிறையக் குறைபாடுகள் உண்டு.
ஆனால் நீட்ஷாவை ஆழமாகப் படிக்கும் வல்லுநர்கள், திரிக்கச் செய்த அந்த முயற்சிகள் இறுதியில் தோற்று, மையச் செய்தி வெளி வந்து விடுகிறது என்று சுட்டுகிறார்கள்.
அந்த மையச் செய்தி, அறமும் அழகும் ஒன்றுடனொன்று உறவற்று இருப்பதில்லை. ஒன்றின் மூலம் இன்னொன்றுக்கு நாம் தவிர்க்கவியலாமல் வந்து சேரவே செய்வோம் என்பது.
இரண்டு துருவ முனைகளிலிருந்தும் மனிதர் எப்படியோ மையத்துக்கு வந்து சேர்கிறார்கள், அந்த மையம் மனித நாகரீகம் தொடர்ந்து இருக்க உதவும் மையம் என்ற செய்தி. டெகார்த்திய புத்தியும், உடலும் இரட்டைக் கூறு என்ற கருத்தை நீட்ஷா உடைக்கிறார். உணர்வும் அறிவும் பிரிக்கக் கூடியவை என்பதையும் எதிர்க்கிறார். ஒன்று திரிந்து போனால் மற்றதும் திரிந்துதான் போகும் என்பது நீட்ஷாவின் மையப் பாடம். இது ஃபார்மலிஸம் எதிர் ரியலிஸம் என்கிற பயனற்ற எதிரிடைகளை உடைக்கிற கருத்து.
என் அனுபவத்திலும், இவை இரண்டும் பின்னிப் பிணைந்த நாகங்களாகவே இருக்கின்றன என்றே நான் காண்கிறேன்.
ஒற்றைப் பரிமாணத்தின் அதிர்வுகளே பல பரிமாண எதார்த்தத்தை அண்ட பேரண்டங்களைப் படைக்கிறது என்று சொல்கிறதாம் ஸ்ட்ரிங் தியரி எனப்படும் இயற்பியல் கோட்பாடு. அதன் சாரத்தில் உள்ளது அத்தனையின் இணைப்பும், அழிக்க முடியாத உறவுச் சிக்கல்களும். துவக்கமும் முடிவும் ஒன்றையொன்று விழுங்க முயலும் பாம்புகள் என்ற உருவமும் அதன் தூலம் கடந்த அணுகலில் கொடுப்பது இதே கருத்தைத்தான். காலப் பயணத்தில் ஒரு புள்ளியில் நிற்பவருக்குத்தான் துவக்கமும் முடிவும் பொருட்படுத்தப்படக் கூடியவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதே போன்ற, மாற்றமில்லாத ஒற்றை நிலைப்பாட்டில் நிற்கும் சமுதாயமே இப்படி அறம் எதிர் அறப்பிறழ்வு என்பனவற்றைக் குறித்து தோற்றப் பிழைகளில் சிக்கி மாள்கிறது. நீட்ஷா தொடர் பயணி. டெக்கார்த் பல காரணங்களால் தொடர் பயணத்தை உடைத்துக் கூறுகளாக்கி, கூறுகளின் பரிமாணங்களைக் கணக்கிட்டு அளந்து பார்க்க முயன்றவர். இந்த முயற்சிதான் பிற்காலத்தில் டிஃபரன்ஷியல் அண்ட் இண்டக்ரல் கால்குலஸ் ஆக வளர்ந்து பொறியியல் சமுதாயத்தின் அச்சாணியாக ஆகி இருக்கிறது. ஆனால் டெக்கார்த்திய நிலப்பாட்டு அணுகலும் ஒன்றிணைப்பான இண்டக்ரல் இல்லாது எதார்த்தத்தைத் தரிசிக்க இயலாத அணுகல். அதன் விளைபொருளான பொறியியல் சமுதாயமும் ஒரு இடத்தில் நின்றால் அழிந்து போவோம் என்று தெரிந்து தொடர்ந்து ஓட்டத்தாலேயே நிலைத்திருக்க முயல்கிற சமுதாயம். அதுவே துவக்கமும் முடிவும் இல்லாத இரட்டை நாக வளையம் என்று நாம் தரிசிக்க முடியும்.
தேங்கிப் போன சமுதாயமான திராவிடிய அரசியல் சமுதாயம்தான் அறத்துக்கும் அறப்பிறழ்வுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ளாமல் இரண்டையும் ஒன்றாகக் கண்டு மதி மயங்கி நிற்க முடியும். அதன் ஆணி வேர் எவாஞ்சலிய கிருஸ்தவம். அதுவோ என்றென்றைக்குமான ஏடனுக்கு மனிதனைத் திருப்பும் முயற்சி. நிலைப்பாடு என்பதே அதன் ஒரே குறிக்கோள். அந்த நிலைப்பாட்டைத் துரத்தாத சமுதாயம் இந்து சமுதாயம். நிலைப்பாடும், பேரழிவும் இருப்பின் இரு துருவங்கள், தோற்றப் பிழைகள் என்று போதிக்கிற பண்பாடு நம்முடையது. இதில் இருந்து கொண்டு நாம் மதிமயக்கத்தை முன்வைக்கும் செயலைச் செய்வது அறப்பிறழ்வாகத்தான் இருக்கும். அறப்பிறழ்வை வீராப்பாக போதிக்கும், பிரச்சாரம் செய்யும் செயலாகவும் இருக்கும்.
அழகை மையமாகக் கொண்ட இராமாயணத்தின் மையத்தில் அறம் குறித்த விசாரமே மொத்தத்தையும் செலுத்துகிறது. அறத்தையும் அறப் பிறழ்வையும் மையமாகக் கொண்ட பாரதமோ மாறாகத் தொடர்ந்து பாத்திரங்களின் குண விசாலங்களுக்கு இடம் கொடுத்து பிரிகைகளை விரித்துக் காட்டி, பற்பல பார்வைகளுக்கு உள்ளாகித் தொடர்ந்து அழகியல் சோதனைகளுக்குக் களமாகவும் ஆகி இருக்கிற காப்பியம்.
இத்தகைய பல பரிமாண விசாரங்கள் கிரேக்கக் காவியங்களுக்கும் கிட்டுகின்றன. ஆனால் விவிலிய நூலுக்கு இத்தனை விரிப்பு கிட்டுவதில்லை. அதனால்தான் கதை சொல்வதை உளவியல் அறிவுப் பாதை என்று புரட்டலை விற்க முயன்ற ஃப்ராய்டு, தன் திரிப்புக்கு ஏற்ற களமாக கிரேக்கப் புராணங்களையே அதிகம் நம்புகிறார். அவர் யூதர் என்பதாலும், யூத எதிர்ப்பே மையமாகக் கொண்ட யூரோப்பியர் நடுவே பிழைத்திருக்க வேண்டியவராக ஆனதால், விவிலியத்தில் கை வைக்க முயலவில்லை என்பதும் வேறு விஷயங்கள். தொடர்புள்ளவைதான், ஆனால் மையக் கதை அது அல்ல.
எங்கெங்கோ போனது போல மேலே உள்ளது தோற்றம் கொடுக்கும். ஆனால் ஒரு சரடு தொடர்ந்து ஓடுகிறது. அந்தச் சரடு, நாம் அறப்பிறழ்வை வாசகர்களுக்கு மறந்தும் விற்க முயலக் கூடாது. அதை வசீகரப்படுத்திக் கொடுக்கும் வணிகச் செயலைச் செய்யக் கூடாது என்ற கருத்துதான் இது. இந்தக் கதையில் கதாசிரியருக்கே ஒரு குழப்பம் இருக்கிறது.
காளி ப்ரசாத்தின் கதையின் உள்ளீட்டில் உள்ள குழப்பம் நல்ல வேளையாக ஒரு தெளிவின்மையைக் கொண்டிருக்கிறது. அந்தத் தெளிவின்மையில் resolution of the conflict என்பார்களே அது நேர்த்தியாக அமையவில்லை என்றாலும், தன்னிச்சையாகக் கதை போய் ஒரு இடத்தில் முட்டிக் கொண்டு முடிகிறது. அந்த முட்டுச் சந்தில் அறப்பிறழ்வு மட்டுமே நியாயப்படுத்தப் படவில்லை, மாறாக கதை சொல்லியின் பிறழ்வு பிறரை அழிப்பதாக ஆகவில்லை என்று உணர்ந்து அவன் ஆசுவாசம் பெறுகிறான் என்ற ஒரு மறு வாசிப்பு அங்கு கிட்டுகிறது. இருப்பினும் ஒழுங்காக முழுதையும் பார்த்தால் அந்தப் பெண்ணின் வாழ்வு அழிக்கப்பட்டிருக்கிறது, அவளுக்குச் சற்றும் பிடித்தமில்லாத ஒருவனால் அவளுடைய எதிர்காலம் வெற்றாக்கப்பட்டு விட்டது என்ற அறப்பிறழ்வுக்கு அங்கு நியாயமே கற்பிக்கப்படுவது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. அதைக் குறித்து கதை சொல்லி சிறிதும் கவலைப்பட்டதாகக் கதையில் இல்லை. அந்த அளவில் இந்தக் கதை ஒரு குறைபாடுள்ள கதை.
[முழுமையைத் தேடினால் ராமாயணமே சிதைவுகள், விரிசல்கள் உள்ள காவியம் என்பதை நாம் அறிந்திருப்பதால் அது வெற்றி பெறாது போகும் என்று விட்டு விட வேண்டி வரும். ]

2 Replies to “காளி பிரசாத் எழுதிய பழனி சிறுகதை குறித்து”

 1. ##எங்கெங்கோ போனது போல மேலே உள்ளது தோற்றம் கொடுக்கும். ஆனால் ஒரு சரடு தொடர்ந்து ஓடுகிறது. அந்தச் சரடு, நாம் அறப்பிறழ்வை வாசகர்களுக்கு மறந்தும் விற்க முயலக் கூடாது. அதை வசீகரப்படுத்திக் கொடுக்கும் வணிகச் செயலைச் செய்யக் கூடாது என்ற கருத்துதான்##
  மைத்ரேயன் சார், நன்றி. புரிகிறது.
  -வெங்கி

 2. பழனி சிறுகதையில் வரும் பழனி எந்த விதத்திலும் அறம் பிறழ்ந்தவன் இல்லை , அவன் கவனம் ஈர்க்கும் ஒரு சுட்டிக்குழந்தை போன்றவன் ,காளி லும்பனை எழுதியிருக்கிறார் எனில் அதன் முழுக்குற்றமும் இந்திய மனம் விரும்பும் காதலனும் லும்பனுமாகிய அர்சுனனை படைத்த வியாசரைச்சேரும் .கிருஷணன் மேலும் லும்பன் ,திருடன் , ‘இடை’ச்சிகள் கூடையை இடை மாற்றம் செய்பவன் 🙂 இவர்களை கொண்டாடும் வியாசனுன் இந்திய மனமும் விக்டோரிய ‘மிசினரி’ ஒழுக்கவாதத்திற்கு எதிரானவர்கள்தான் .
  மீறலும் ஊக்கமும் கொண்ட ஒரு ஹீரோ பழனி ,அவன் வாழ்க்கையில் தோற்றுப்போவது இயற்கை அல்லது படைத்த இறை தோற்றுப்போவது போல , அதனால்தான் அவனது வெற்றிக்காக படைப்பாளியின் ,வாசகனின் மனம் ஏங்கி பின் மகிழ்கிறது .
  பழனி லும்பன் எனில் படைத்து அனுப்பப்பட்ட எல்லா ப்டைப்பூக்கம் கொண்ட ,மீறலைக்கொண்ட எல்லோரும் லும்பர்களே .
  (சிறந்த உதாரணம் ஸ்டீவ் ஜாப்ஸ்,விமர்சகர் ஸ்டீவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரை லும்பனை எழுதியதற்காக கிண்டில் விலக்கம் செய்யலாம் 🙂
  (பழனி தன் மனைவியை ஏமாற்றியதாக எங்கே கதையில் வருகிறது ? இந்த இயல்பு கொண்ட ஆணை கனவுகண்டு மணந்து ,அவனின் ஆர்வம் லெளகீகத்தில் படியாததால் அவனை விலகவும் ஏற்கவும் முடியாமல் சண்டையிடும் பெண் , பிறகு அவன் தன் இயல்புக்கேற்ற தொழிலை கண்டடைந்த பின் அவனிடமே திரும்புகிறாள் ,அவள் சராசரி பெண்ணுக்கு கிட்டாத மகிழ்வான வாழ்வையே நிச்சயம் அடைவாள் )
  காளியின் மொழியும் ,பழனியை கண் முன்னே காட்டும் திறனும் மிகச்சிறந்த எழுத்தாளர் ஒருவர் உருவாகி வருவதை காட்டுகிறது .
  ( முழுமை உள்ள சிறுகதை என இதை நான் மேலேற்றவில்லை ,காளி உருவாக்க்கப்போகிறார் என்பதன் முன் அடையாளம் இக்கதை )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.