ஆடு பாம்பே! – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

இவ்வளவு நாள் தொழில்முறை அரசியல்வாதிகளை நம்பி வாக்களித்து நீங்கள் பெற்றதுதான் என்ன? ஒரு முறை எனக்கு வாக்களித்துதான் பாருங்களேன் – அடிக்கடி இதை கேட்டிருக்கிறோம். இல்லையா?
அட, நமது அன்புமணி முதல் சீமான் வரை தொழில் சார்ந்த அரசியல்வாதிகள் மக்களிடம் அப்பீல் செய்யும் கவர்ச்சி வசனம்தான் இது. அவன் சொல்றதும் நியாயம்தான், ஒரு தடவை சான்ஸ் கொடுத்துதான் பார்ப்போமே என்று பலருக்கும் ஒரு நிமிடம் தோன்ற வைக்கும் வசீகர வசனம் இது. இந்த வசனத்தைதான் கறுப்பின மக்களிடம் ட்ரம்ப் பேசினார்.
இந்த வசனம் மட்டுமல்ல… ஆடு வளர்ப்பதை தேசிய தொழிலாக்குவோம், மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம், வந்தேறிகளை கட்டுக்குள் வைப்போம் என்று சீமானின் கொள்கைகளை சுவீகரித்துவிட்டரோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருந்தன ட்ரம்பின் கொள்கைகள். ஆனால் சீமானின் இடி முழக்கத்தை சும்மா டைம்பாஸுக்கு கேட்டு விட்டு இனத்தையும் தோலின் நிறத்தையும் மட்டுமே அரசியலை நிராகரித்த தமிழக வாக்காளர்கள் போல் இல்லை அமெரிக்க வாக்காளர்கள்.

clinton

~oOo~

அமெரிக்கா அதுவரை கண்டிராத தீவிரவாத நிகழ்வான செப்டம்பர் 11க்கு அப்புறம் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்த சமயம். ஈராக் தீய சக்திகளுக்கான அச்சு என்று போர்ப் பிரகடனம் செய்து, மக்கள் சபைகளில் ‘ஜனநாயக முறைப்படி’ ஒப்புதல் பெற்று, ‘either you are with us or against us’ என்று உலக நாடுகளின் மீதும் பஞ்ச் அடித்து போருக்கு போனார் புஷ் ஜூனியர்.
அந்த தேசபக்தி சூழ்நிலையிலும், போதுமான ஆதாரம் இல்லாமல் ஈராக் மீது போர் நடத்துவது தவறு என்று அமெரிக்காவில் அங்கங்கு பொதுமக்கள் சாலையோரத்தில் பதாகைகள் தாங்கி அமைதியாக தங்கள் கருத்து மீது மக்கள் கவனத்தை திருப்பினார்கள். எல்லையில் ராணுவ வீரன் சாகிறான் நீங்க என்ன நியாயம் பாத்துகிட்டு என்று ஒரு தேசபக்தி கூட்டம் எதிர் சாலையில் பதாகைகள் தாங்கி நிற்பதும் நடந்தது. ஆனால் அது போன்று எதிரெதிர் தரப்பு ஒரு 30 அடி சாலையின் எதிரெதிர் திசையில் ஒரு வன்முறையும் இன்றி தங்கள் கருத்துக்கு ஆதரவு கோரும் காட்சி இந்தியாவில் இருந்து வந்த ஒரு காமன் மேனுக்கு ஆச்சரியம் அளித்த விஷயம்.
அமெரிக்க அதிபர் புஷ் ஜூனியரின் பெண்கள் லீகல் வயதுக்கு குறைவான 19 வயதில் பாரில் தண்ணியடித்துவிட்டார் என்று ஒரு ஏட்டையாவால் போலீஸ் குற்றச்சீட்டு கொடுக்கப்பட்டதும் அவனுக்கு ஆச்சரியமே. அதை விட ஆச்சரியம் ஒரு சராசரி அமெரிக்கன் தனது வாழ்நாளில் லஞ்சம் என்பதை கேள்விப்படாமலேயே தனது முழு வாழ்நாளையும் வாழ முடியும் என்பதும், ஊரின் நடுவில் பொதுமக்கள் கூடியிருக்கும் பொதுஇடம் ஒன்றில் மைக் பிடித்து ஒபாமாவையோ ஜார்ஜ் புஷ்ஷையோ எப்படி வேண்டுமானாலும் விமர்சித்துவிட்டு கல்லடி படாமல் வீடு போக முடியும் என்பதும்.
இந்த அமைப்பு ரீதியான ஒப்பு நோக்குதல் என்பது ஒரு நாட்டில் – குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் – இருந்து வளர்ந்த நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு கடைசி வரை விட முடியாத ஒரு விஷயம். இரு நாடுகளின் அரசியல், தனி மனித சுதந்திரம், பொது மக்களின் வாழ்க்கை தரம், வாழும் நிலை, தலையெழுத்தை மாற்ற கிடைக்கும் வாய்ப்புகள் என்று எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அந்த ஒப்பு நோக்கும் மனநிலை அவனிடம் இருந்து போவதில்லை.
நிறவெறியும், தீண்டாமையும், பெண் அடிமைத்தனமும், மத அடிப்படைவாதமும் அது சார்ந்த கொடூரங்களும் சமீப காலம் வரை வாழ்க்கை முறையில் கலந்திருந்த நாடுதான் அமெரிக்கா. வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட கறுப்பர்கள் கழுவிலேற்றப்பட்ட சரித்திரம் கொண்டது. ஆனால் பிற்போக்குத்தனத்தில் இருந்து மிக வேகமாக மாறி பெண்கள் உரிமை, இன வெறி, நிற வெறி, மத அடிப்படைவாதம் போன்றவற்றில் மிகப்பெரிய முற்போக்கு கண்ட நாடு என்பதுதான் அமெரிக்கா உலக நாடுகளில் ஒரு சிறந்த நாடாக கருதப்பட காரணம். மற்ற நாடுகளில் ஏட்டளவில் மட்டும் இருக்கும் தனி மனித உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மத சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவை இங்கு காமன் மேனுக்கு சாதாரணம். அதற்காக ஆல் இஸ் வெல் என்றோ அடிப்படை வெறி முற்றிலும் ஒழிந்து விட்டது என்றோ இல்லை. ஆனால் சில தலைமுறைகளுக்கு முன்பு இயல்பானது என்று கருதப்பட்ட இனவெறி, நிறவெறி இன்று நாகரீகமற்றதாக பொதுவெளியில் கருதப்படும் அளவு வந்திருப்பதே சிறந்த சமூக முன்னேற்றம்தான்.
அநாகரீகம் என்று ஓரளவு பதிந்தவற்றை எல்லாம் பொதுவெளியில் கிளறி, அது சரிதான் என்று கணிசமான மக்கள் தொகையை நினைக்க வைத்து அசிங்க அரசியலை மேடையேற்றியதே இந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பால் விளைந்த மாற்றம் முன்னேற்றம். ஒரு புள்ளியில் ஆரம்பித்து மெதுவாக செல்லரித்து ஒரு கட்டத்தில் புரையோடிபோய் சில தலைமுறைகளில் அதுவே இயல்பு, அதுவே வாழ்க்கை முறை என்று ஏற்றுக்கொள்ள பழக்கப்பட்ட மாடல் சமூகத்தை நன்கு அறிந்த தமிழனுக்கு அமெரிக்காவின் அடுத்த நான்கு ஆண்டுகள் சுவாரசியமான திருபுக்காட்சி (delusion).

99_00-01y-occupy-wall-street-19-10-11-los-angeles-ca-usa

~oOo~

அதிபர் தேர்வில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரமும், நிர்வாகக் கிளையின் தலைமையை நேரடியாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அமெரிக்க தேர்தல் முறை பொது மக்களுக்கு அளித்திருப்பதும் ஒரு கொடை. அமெரிக்க அதிபர் பதவி என்பது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பதவிகளுள் ஒன்று. அதில் இருப்பவர்கள் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் உலகிங்கெலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் வாய்ப்பு கொண்டது.
ட்ரம்பின் பிரச்சாரம் தொடங்கிய சிறிது காலத்திலேயே பெண்கள், முஸ்லிம்கள், குடியேறிகள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், கறுப்பினத்தவர், ராணுவத்தினர், நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள் என்று சகட்டு மேனிக்கு கீழ்த்தரமாக விமர்சித்தார். அவர் கீழ்த்தரமாக விமர்சிக்காத ஒரே கூட்டம் வெள்ளை இன ஆண்கள் மட்டுமே. அவர்களே அவரை ஆதரித்த மிகப்பெரிய ஓட்டு வங்கியாகவும் ஆனார்கள். இது வரை இப்படி ஒரு ஆள் அதிபர் போன்ற உயர் பதவிக்கு போட்டியிட்டதில்லை எனும் அளவு வெறுப்பூட்டும் நடத்தையை கடை பரப்பி, அதை வெளிப்படைத்தன்மை என்று பிரசங்கம் செய்து, அதை சமூகமும் வெறுப்போடு சகித்துக்கொள்ளச் செய்ததே ட்ரம்பின் ஆகச்சிறந்த வேதனை. அமுங்கிப்போயிருந்த கிறிஸ்துவ அடிப்படைவாதத்தையும் வெள்ளை இனவெறியையும் மீண்டும் கிளறி மேலெழுப்பிய அவரது செயல் வெறும் தொடக்கம்தான்.
ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுத்தது பலருக்கு ஊக்கம் அளித்துள்ளது. பொதுவில் கொக்கரித்து அடக்கியாளக் கூடாது என்னும் நன்னடத்தையைக் காற்றில் பறக்கவிட்டாலும், சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டாலும் கூட காவல்துறை நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்னும் அச்சம் தவிர்த்த ஆக்கிரமிப்புணர்வை காற்றில் உலவவிட்டுள்ளது. இதனால்தான், மிச்சிகன் பள்ளியின் மிடில் ஸ்கூல் மாணவர்கள் இனப்பெருமை வாசகங்களை தைரியமாக எந்தவித நாணமும் பொறுப்புணர்வுமின்றி வெளிப்படுத்திகிறார்கள். டெல்டா விமானத்தில் நிகழ்ந்த தலைவன் வழிபாட்டு கூச்சல் போல மெதுவாக பரவ ஆரம்பித்திருக்கும் அக்கினிக்குஞ்சு மெதுவாக பரவி சமூக முன்னேற்றத்துக்கு ஏற்படுத்தப்போகும் தணல் பல வருடங்கள் கழித்து புலனாகும் போது அதை சமூகம் இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கும்.

trump-white-supremacy_swastik_nazi_hail_salute_djt_donald_us_germany

~oOo~

உலகம் முழுவதுமே தொழில்முறை அரசியல்வாதிகளின் மேல் ஒரு வெறுப்பு இருக்கிறது. இயல்பாகவே மக்கள் மாற்றம் விரும்புகிறார்கள். மாற்றம் விரும்பிய மக்களுக்கு புதிய முகம் ஒரு வரம்தான். ஆனால் புதிய முகம் என்பது மட்டும் போதுமா? தனக்கு அரசியல் அனுபவம் இல்லையே தவிர தான் ஒரு சிறந்த தொழிலதிபர், தொழிலில் செய்த உத்தியை அப்படியே நாட்டை முன்னேற்றுவதற்கு அப்ளை செய்தால் ஆயிற்று என்பதுதான் அடிப்படை மார்கெடிங். ட்ரம்ப் எவ்வளவு பெரிய தொழிலதிபர்?
‘1995ல் ட்ரம்ப் தனது நிறுவனத்தை பங்குதாரர் முதலீட்டு நிறுவனமாக மாற்றியபோது அவரது கம்பெனியில் முதலீடு செய்ததற்கு பதிலாக ஒரு ஸ்டாக் மார்க்கெட் தினசரியை குரங்கிடம் காட்டி அது காண்பித்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் ட்ரம்ப் சம்பாதித்ததை விட 150% அதிக லாபம் கிடைத்திருக்கும்’ – இது பங்கு வர்த்தகத்துறையின் ஜாம்பவான் வாரன் பஃபே (Warren Buffett), ட்ரம்பின் பிஸினஸ் அறிவு பற்றி கூறியது. ட்ரம்ப் தலைமையின் கீழ் அவரது கம்பெனிகள் நான்கு முறை திவாலாகியிருக்கின்றன. கடந்த 30 வருடங்களில் ட்ரம்ப் கம்பெனி அளவு வேறு எந்த கம்பெனிகளும் திவாலானதில்லை. ஒவ்வொரு முறை திவாலானபோதும் கடன் கொடுத்தவர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள்.
இருந்தாலும் கலக்கி விட்டால் சாம்பார், கலக்காமல் விட்டால் ரசம் ரீதியில் பிஸினஸ் நடத்துவதும் நாட்டை ஆள்வதும் ஒன்றா என்ன? பிஸினஸில் லாபம் ஒன்றே புனிதம். நஷ்டத்தில் இயங்கும் யூனிட்டை இழுத்து மூடிவிடலாம். ஆயிரக்கணக்கானவர்களை மொத்தமாக வேலை நீக்கம் செய்துவிடலாம். பொதுமக்களை என்ன செய்வது என்பதை தொழிலதிபரின் நான்கு வருட ஆட்சியின் முடிவில் பார்க்கலாம்.

graph-chart_trump-casino-stock-versus-dow-djt_prices_donald_shares_value_resorts_exchange

~oOo~

யாராவது கவனிக்கிறார்களா எனும்போது மட்டுமில்லை, யாரும் கவனிக்காதபோதும் நீ எப்படி நடந்து கொள்கிறாயோ அதுவே உண்மையான நீ என்று பழமொழி உண்டு.
‘அழகான பெண்களை கண்டால் தன்னிச்சையாக ஈர்க்கப்பட்டுவிடுகிறேன். உடனடியாக முத்தமிட ஆரம்பித்து விடுகிறேன். ஒரு காந்தம் போல.. நேரடியாக முத்தம்தான். நாம் ஒரு பிரபலமாக இருக்கும்போது அவர்களும் அதை அனுமதிக்கிறார்கள். நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் பிறப்புறுப்பில் கை வைக்கலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ – ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேமரா ஆன் செய்யப்படவில்லை என்ற நம்பிக்கையில் ட்ரம்ப் பேசியதன் மொழிபெயர்ப்பு இது. அமெரிக்க அழகிப்போட்டியை நடத்திய காலகட்டத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் உடை இல்லாமல் இருக்கும் சமயங்களில் திடீரென ட்ரம்ப் வந்து நிற்பார் என்று அதில் கலந்து கொண்ட பெண்கள் குற்றம் சாற்றியிருக்கிறார்கள். தான் நிகழ்ச்சியின் ஓனர் என்ற முறையில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கவே அங்கு செல்வது வழக்கம் என்பது ட்ரம்பின் பதில். விவாகரத்தான ட்ரம்பின் முதல் மனைவி இவானா, ட்ரம்ப் தன் விருப்பமில்லாமல் தன்னை வன்முறையாக பலாத்காரம் செய்தார் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஒரு டஜன் பெண்கள் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சொல்லியிருக்கிறார்கள். 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
என் வழி தனி வழி என்று விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக தன்னை நம்பும், விமர்சிப்பவர்களின் மீது வழக்கு போடும் அரசியல்வாதி என்றால் எல்லோருக்கும் வேறு யாரோ ஞாபகம் வரலாம். ஆனால் நாம் பேசிக்கொண்டிருப்பது ட்ரம்ப் பற்றி. தன்னை விமர்சித்த ஒரே காரணத்துக்காக ஒரு காலமான ராணுவ வீரரின் பெற்றோர்கள் மீதும், தன்னை கேவலமாக நடத்தினார் என்று புகார் கூறிய முன்னாள் அமெரிக்க அழகிப்போட்டியாளர் மீதும் தேர்தல் பிரச்சாரத்தின் நடுவிலும் நாள்கணக்கில் ட்விட்டர் போர் புரிந்த நபர் ட்ரம்ப்.
தனது எஸ்டேட்டின் அருகில் விமானம் பறக்கிறது, அதனால் தனது வீட்டின் அமைதி கெடுகிறது எனவே விமான போக்குவரத்து பாதையை மாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மீது 100 மில்லியன் டாலருக்கு வழக்கு பதிவு செய்தவர் அவர். அப்படி செய்வதாக இருந்தால் ஒரு சர்வதேச விமான நிலையத்தையே இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மறுத்தது. வழக்கில் ஜெயிக்க தன்னிடம் அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை என்றாலும் கூட எதிராளியை பயமுறுத்தவென்றே ட்ரம்பால் போடப்பட்ட வழக்குகள் ஏராளம்.
இதுவரை 4095 வழக்குகள் ட்ரம்ப் சம்பந்தப்பட்டது இருக்கிறது என்று யு.எஸ்.ஏ. டுடே விரிவான ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறது. ட்ரம்ப் அதிபர் பதவி ஏற்ற பின்பும் அவர் மீது இப்போது நடந்து வரும் 75 வழக்குகளை அவர் பைசல் செய்ய நேரம் செலவழித்து ஆகவேண்டும். தன்னை விமர்சித்தவர்கள், தனது பிஸினஸ் டீலிங்கில் ஒத்து வராதவர்கள், தன் வெற்றிக்கு குறுக்கே நிற்பவர்கள் என்று எல்லார் மீதும் சகட்டு மேனிக்கு வழக்குகள் போடும் வாடிக்கை கொண்டவர்தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர்.
இதுவரை சுதந்திரமாக தான் விரும்பியதை, உண்மையான இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸத்தை உலகுக்கு காட்டி வரும் நான்காவது தூண் இனி எதிர்கொள்ளப்போகும் வழக்குகள் அதனால் ஏற்கனவே பணக்கஷ்டத்தின் நடுவில் நலிந்து வரும் மீடியா தொழிலில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து நான்கு வருடங்கள் கழித்து பார்க்கலாம்.

trump_djt_donald_lawsuits_court_sue_libel_cases_order

~oOo~

ட்ரம்பிடம் மெச்சத்தகுந்த விஷயஙகளே இல்லையா?
சிரியா உள்நாட்டு போரில் தேவையேயில்லாமல் சிரிய அதிபருக்கு எதிராக கத்தி தூக்கி, போராளிகளுக்கு ஆதரவாக ஆயுத சப்ளை செய்து போரை வளர்க்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றி போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று ட்ரம்ப் சொல்வதை மனதார பாராட்டலாம்.
போலவே சட்டவிரோதமான குடிப்புகல் (இல்லீகல் இமிக்ரேஷன்) எனப்படும் மிகப்பெரிய தலைவலியை தன்னால் தடுக்க முடியும் என்பதையும் – சுவர் எழுப்புவேன், 1.1 கோடி பேரை கூண்டோடு நாடு கடத்துவேன் போன்ற துக்ளக் பொய் வாக்குறுதிகள் தவிர்த்து – பாராட்டலாம்.
ஆனால்,
வர்த்தக ஒப்பந்தங்களால் பாதிக்கப்பட்ட தொழில்துறை மக்களுக்கு அவர்கள் தொழிலை மீட்டுக்கொண்டு வருவேன் என்று ஆறுதலாக பேசியதை – அது நடைமுறையில் சாத்தியமில்லை என்று நம்பும் அளவு அறிவில்லாவிட்டால் – பாராட்டலாம்.
ஒபாமாகேரை மொத்தமாக சட்டநீக்கம் செய்வது – அரசியல் காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானவர்களை பாதிக்கும் என்பது தெரியாமல் நாமும் அறியாமையில் இருந்தால் – பாராட்டலாம்.
ஆனால்,
தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்ற பின்னணியில் முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறுப்பு தூண்டப்படுவது, கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறுப்பு தூண்டப்படுவது, வெள்ளை இனவாத பெருமை மீளுருவாக்கம் செய்யப்படுவது ஆகிய ஆபத்தான விஷயங்கள் மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன.
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் டொனால்டு ட்ரம்ப்பும், தன் வாக்குறுதிகளில் இருந்து மெள்ள விலகி சிற்சில சமரசங்களை அறிவித்துள்ளார்.
அமெரிக்கா போன்ற பன்முக கலாசாரம் கொண்ட சமூகத்தில் வேகமாக மாறி வரும் சமூக அமைப்பை ஏற்கவும் முடியாமல் அதே சமயத்தில் அதை மறுக்கவும் முடியாமல் ஒரு ஜனத்திரள் இருக்கிறது. இனம் சார்ந்த தமது பாரம்பரிய பெருமையும் காலகாலமாக தான் பின்பற்றிய மதம் சார்ந்த நம்பிக்கைகளும் கண்ணெதிரே நீர்த்துப்போவதை காணச்சகியாமல் ஆத்திரத்தை அடியாழத்தில் புதைத்து வைத்திருந்த கூட்டம் அது. அவர்கள் கட்சி பேதமில்லாமல் பரவலாக இருந்தார்கள். அவர்களுக்கு ட்ரம்ப் நம்பிக்கையளித்தார்.
அவர்களின் பயத்தை தனது வெற்றிக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்கள் கேட்க விரும்பிய மொழியை பேசுகிறார். வெளியே இருந்து வரும் அந்நிய சக்திகளால் கலாச்சாரத்துக்கு மட்டுமல்ல உடைமைக்கும் உயிருக்கும் கூட ஆபத்து என்று அவர்களின் பாதுகாப்பற்ற உணர்வுகளுக்கு ஒரு முகம் கொடுக்கிறார். அவரின் வாக்குறுதிகள் ஒரு சர்வாதிகாரியின் நடவடிக்கைகளோடு பொருந்தி வந்தாலும் அந்த கூட்டம் விரும்புவதும் அதைத்தான்.
போர் குற்றம் என்றாலும் கூட தீவிரவாதிகளின் குடும்பத்தை, பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரையும் பூண்டோடு அழிப்பேன் என்ற பிரகடனம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. மத சுதந்திரத்தை அரசியல் சாசனத்திலேயே அஸ்திவாரமாக்கி கட்டப்பட்ட நாட்டில் முஸ்லிம் மதத்தினர் நுழைய தடை விதிப்பேன், தேசிய அளவில் முஸ்லிம்களை கண்காணிப்பதற்கான ஒரு தகவல் தளம் அமைப்பேன் என்ற சவடாலை ஆரவாரத்தோடு வரவேற்கின்றனர். முஸ்லிம் வெறுப்பும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் ஏற்கனவே அதிகரித்துவிட்டது.

alt-right-starterpack_racist_swastik_white_supremacy_racist

~oOo~

உலகமயமாக்கப்பட்ட சூழ்நிலையில் காணாமல் போன உடலுழைப்பு சார்ந்த வேலைகள் இனி திரும்ப சாத்தியமேயில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். இருப்பினும், குடியேற்றம், பொருளாதாரம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, என்று எல்லாவற்றிலும் போலி வாக்குறுதிகளை நம்புவது போலவே ஆறுதலான பொய்களை, தற்காலிகமாகவேனும் அவர்கள் கேட்க விரும்புகிறார்கள்.
அமெரிக்காவின் rust belt எனப்படும் பென்சில்வேனியா + ஒஹாயோ போன்ற மாகாணங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்த பிரச்சினைக்கு ட்ரம்ப் எதை சுட்டிக்காட்டினார்? அங்கு இயங்கிய உற்பத்தி சார்ந்த தொழில்கள் மெக்சிகோ, சீனா முதலிய அந்நிய நாடுகளுக்கு சென்றுவிட்டதால், இங்குள்ள அதிகம் படிக்காத நடுத்தர அமெரிக்கர்களுக்கு வேலை போய்விட்டது. அதற்கு தீர்வாக உள்ளே வரும் பொருட்களுக்கு 35% தீர்வை போடுவதாக அறிவித்திருக்கிறார்.
வேலைவாய்ப்பின்மைக்கு உண்மையான காரணம் வேறு. மாறி வரும் உலக வர்த்தக சூழலில், அதற்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ள வாய்ப்பில்லாத தொழிலாளர்களுக்கு கல்வியறிவும் புதிய நுட்பங்களில் பயிற்சியும் உயர்கல்லூரி படிப்பிற்கு வசதியான சூழலும் அமைத்துத் தருவது அதில் முக்கிய பங்காற்றுகிறது..
உற்பத்தித்துறையின் அடிப்படை வேலைகள் தானியங்கு முறைக்கு மாறிவிட்டன. மற்றும் உலகமயமாதல் காரணமாக எங்கு மிகக்குறைந்த செலவில் தொழிலாளர் உழைப்பு கிடைக்கிறதோ அங்கு உற்பத்தித்துறை அவுட்சோர்ஸ் ஆகிவிட்டது. ட்ரம்ப் சொன்னபடி உள்ளே கொண்டுவரப்படும் பொருட்களுக்கு 35% விற்பனை வரியாக போட்டாலும் கூட அது அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படும் நிகர விலையை விடவும் கம்மி எனும்போது வெளியே போன பெரும்பாலான தொழில்கள் மீண்டும் அமெரிக்கா வர வாய்ப்பே இல்லை. முடிந்த அளவு லாபம் ஈட்டுவதில் ருசி கண்ட கார்ப்பரேட் அமெரிக்கா தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.

 a-spike-in-corporate-inversions

~oOo~

ஒபாமாகேர் சமீப காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகச்சிறந்த சமூக முன்னேற்றத்துக்கான திட்டங்களில் ஒன்று. அதில் குறைகள் உண்டு. ஆனால் மிகச்சிறந்த மருத்துவ சேவைகளைக் கொண்ட, அதே நேரத்தில் மிக மிக அதிகமான மருத்துவ சேவை விலைப்பட்டியலை கொண்ட நாடு அமெரிக்கா. அரசாங்கத்தின் உதவி பெற்று வறுமைக்கோட்டுக்கு கீழே வருபவர்கள், தங்களின் மருத்துவ தேவைகளுக்காக முழுக்கவும் தனியாரை நம்பியிருக்க வேண்டிய நிலை அமெரிக்காவில் இருக்கிறது. உலகத்தின் முன்னேறிய நாடாக அமெரிக்கா இருந்தாலும், அங்கு அரசாங்க மருத்துவமனை கிடையாது.
பொது மருத்துவ காப்பீடுகளுக்கு தகுதி பெறாமல், தனியார் மருத்துவ காப்பீடுகளை வாங்கவும் வசதியில்லாமல் மருத்துவ காப்பீடு இல்லாத காரணத்தால் சுமாரான தரத்தில் கூட மருத்துவ பாதுகாப்பு இல்லாமல் இருந்த கணிசமான மக்கள் தொகையை ஒபாமாகேர் மருத்துவ சேவை வளையத்துக்குள் கொண்டு வந்தது. ஒபாமாகேர் மூலம் இதுவரை 169 லட்சம் பேர் புதிதாக காப்பீடு பெற்றிருக்கிறார்கள். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு நடுவில் வென்ற ஒபாமாகேரின் முக்கியமான மூன்று ஷரத்துக்கள்:
1. 26 வயது வரை தனது பெற்றோரின் காப்பீட்டிலேயே இருக்கலாம்.
2. ஏற்கனவே கண்டறியப்பட்ட (pre-existing conditions) நோய்கள் இருப்பதை காரணம் காட்டி ஒருவருக்கு காப்பீடு மறுக்கப்படக்கூடாது
3. அனைவரும் அடிப்படை அளவாவது கண்டிப்பாக காப்பீடு வைத்திருக்க வேண்டும்.
அரசியல் காரணங்களுக்காக இதை நிராகரிப்போம் என்ற ரிபப்ளிகன் கட்சியின் கோஷத்தையே ட்ரம்பும் சுவீகரித்துக்கொண்டார். ஒபாமா கேர் வந்த பின்னர் தனது மருத்துவ ப்ரீமியம் தொகை அதிகமானதாக கருதிய கணிசமான மக்களும் ஒபாமாகேர் நிராகரிக்கப்பட்டுவிட்டால் ப்ரீமியம் கம்மியாக்கிவிடும் என்ற பகல் கனவில் இருக்கிறார்கள். அதாவது திறந்த சந்தை அடிப்படையில் காப்பீடு கம்பெனிகளின் கையில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டால், காப்பீடு கம்பெனிக்கள் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு மக்களுக்கு சேவை செய்வார்கள் என்பது நம்பிக்கை.
ட்ரம்ப் அதிபராக ஆனதுமே தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்கி முதல் இரண்டு ஷரத்துக்கள் அப்படியே நீடிக்கலாம் என்பது போல எதோ சொல்லியிருக்கிறார். ஆனால் ஒபாமாகேரின் அடிப்படையே இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்ற அடிப்படையில் பின்னப்பட்டதுதான். முக்கியமாக முதல் இரண்டு ஷரத்துக்களால் காப்பீடு கம்பெனிகளுக்கு ஏற்படும் நஷ்டம் மூன்றாவது ஷரத்தால் ஓரளவு சரிக்கட்டப்படும். எனவே இதில் ஒன்றை மட்டும் அப்படியே விட்டு வைத்து மற்றதை நிராகரிப்பது லாப நஷ்ட கணக்கின் அடிப்படையில் இயலாத காரியம். ஏற்கனவே தனது லாபத்தில் நஷ்டம் ஏற்படுவதை விரும்பாத காப்பீடு கம்பெனிகள் ப்ரீமியத்தை எக்கச்சக்கமாக உயர்த்தி விட்டார்கள்.
இரண்டாவது ஷரத்து தளர்த்தப்பட்டால் உடனடியாக pre-existing conditions உள்ளவர்கள் காப்பீடு நிறுவனங்களால் கேன்சல் செய்யப்படுவார்கள். அல்லது கற்பனைக்கே எட்டாத, கட்ட முடியாத அளவு அவர்களது ப்ரீமியம் உயரும். துரதிர்ஷ்டவசமாக நோய்வாய்ப்பட்டு வெளியே காப்பீடு பெற இயலாத மக்கள் வேலை செய்யும் நிறுவனம் காப்பீடு தந்தால் அவர்களிடம் அடிமையாக இருக்கலாம், அல்லது தங்கள் விதியை நொந்து வாழலாம்.
மூன்றாவது ஷரத்து மட்டும் தளர்த்தப்பட்டால் சிறிய வயதினரும், தான் ஆரோக்கியமாக இருப்பதாக நினைப்பவர்களும் ப்ரீமியம் தண்டம் என்று காப்பீடு வாங்குவதில் இருந்து விலகிவிடுவார்கள். இப்படி விலகுபவர்களால் ஏற்படும் மிகப்பெரிய வருமான நஷ்டத்தை லாபநோக்கில் இயங்கும் காப்பீடு நிறுவனங்கள் ப்ரீமியம் குறையும் என்ற பகல் கனவில் இருப்பவர்கள் மீதுதான் ஏற்றும். மாநில எல்லைக்கோடு தாண்டி காப்பீடு வாங்கலாம் என்று சட்டம் இயற்றுவதன் மூலம் போட்டி அதிகரிக்கும், அதனால் விலை குறையும் என்பது ட்ரம்பின் வாதம். ஆனால் மாநில சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட மருத்துவம், காப்பீடு போன்றவை மாநில எல்லை தாண்டி விரிவடைவது அவ்வளவு சுலபமான சீக்கிரம் நடந்தேறும் விஷயமில்லை.
பிற்போக்கான எண்ணங்களை அரசியல் சட்டத்தில் கொண்ட மாநிலங்களான அலபாமா, டெக்சாஸ் போன்றவை எந்தவிதமான கருக்கலைப்பிற்கும் எதிராக இயங்குபவை. பெண்கள் சுயமாக முடிவெடுக்கக் கூடாது என்பதை முன்னிறுத்தும் அந்த மாநிலத்தின் மருத்துவ சட்டத்திற்கும், பெண்களின் முடிவுகளை அவர்களின் கையிலேயே ஒப்படைக்கும் கலிஃபோர்னியா, நியு யார்க் போன்ற மாநிலங்களின் மருத்துவதிட்டங்களுக்கும் ஒத்துவராது.

~oOo~

சரி, அமெரிக்காவில் checks and balances என்று இருக்கும்போது ட்ரம்ப் என்ற தனிமனிதரால் என்ன பெரிதாக சாதிக்க முடியும் என்ற அப்பாவிகளின் கேள்வி நியாயமானது. இன்று அமெரிக்க செனட் மற்றும் மக்கள் மன்றம் இரண்டுமே ரிபப்ளிகன்களின் மெஜாரிட்டியால் ஆனது. உலகம் முழுவதுமே அரசியல்வாதிகள் சிந்தனையில் இருக்கும் முதல் மூன்று சிந்தனைகள் – தங்கள் அரசியல் வாழ்வு, தங்கள் அரசியல் எதிர்காலம், தங்கள் அரசியல் எதிர்காலம் என்பது மட்டும்தான். தங்களது அரசியல் பதவிக்கும், எதிர்காலத்துக்கும் என்னவிதமான டீல்களையும் செய்து வாழும் இனம் அது. சுப்ரீம் கோர்ட்டின் காலியிடம் ட்ரம்பால் நிரப்பப்படபோகிறது, அதுவும் கன்சர்வேடிவ் மெஜாரிட்டி ஆகும்.
சரி அதிபர் தன்னிச்சையாகவா எல்லா முடிவையும் எடுப்பார், அவருக்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்தும் வட்டம் இருக்காதா எனவும் கேட்கும் நல்லவர்களும் இருக்கிறார்கள். ட்ரம்பின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களோ ட்ரம்பை விட ஆபத்தானவர்கள்.
மைக் பென்ஸ் (Mike Pence) – துணை அதிபர் ஒரு தீவிர அடிப்படைவாதி. அவர் 2015ல் இண்டியானா கவர்னராக இருந்த காலத்தில் பழமைவாதிகள் மற்றும் மதவாதிகள் சூழ கையெழுத்திட்ட Religious Freedom Restoration Act — மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஓரினச்சேர்க்கையாளர்களை வேறுபடுத்தும் சட்டம் ஆகும். தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என்று வர்த்தகர்கள் தற்பால் LGBT சமூகத்துக்கு எதிராக சேவையை மறுத்து அவர்களை வெறுத்து ஒதுக்கி, துரத்தி மூலையில் அடக்க முடியும். அது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட anti-டிஸ்கிரிமினேஷன் எனும் சமூக மாற்றத்துக்கான பின்னடைவு.
இண்டியானாவில் 25 வார கருவை சுய அபார்ஷன் செய்து கொண்ட பூர்வி படேல் என்ற இந்திய வம்சாவளி பெண் 20 ஆண்டு சிறை தண்டனை தரப்பட்டார். Pro-life என்று வேறு பெயரில் அழைத்தாலும் அதன் வேர் கிறித்துவ அடிப்படைவாதம்தான். பர்தா போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதங்களை கிண்டல் செய்துகொண்டே கருக்கலைப்பு போன்றவற்றை தீவிரமாக நம்பும் பாசாங்குத்தனமும் புதிய நிர்வாகத்தின் செயல்திட்டங்களில் இருக்கிறது.
ஸ்டீஃபன் பானன் (Stephen Bannon) – ட்ரம்பின் பிரச்சாரக்குழுவுக்கான முதன்மை செயல் அலுவலராக செயல்பட்டவர். இப்போது அதிபர் ட்ரம்பின் முதன்மை ஆலோசகராக Chief strategist என்ற உருவாக்கப்பட்ட பதவியில் அமர்ந்திருக்கிறார். ஸ்டீவ் Breitbart News என்ற மத வெறி, இனவெறி, வந்தேறிகளுக்கு எதிரான வெறி என்ற அதிதீவிர வலது அடிப்படைவாத வெப்சைட்டை நிர்வாகித்து வந்தவர், வருபவர். இவர் alt-Right எனும் இயக்கத்தோடு நெருங்கிய தொடர்புடையவர். இது வெள்ளை இனப்பெருமை, இஸ்லாமிய வெறுப்பு, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு போன்ற அடிப்படையில் இயங்கும் – சமீபத்திய கூட்டமொன்றில் ”போன தலைமுறை வரை அமெரிக்கா ஒரு வெள்ளையர் நாடு. வெள்ளை இனமக்களுக்காக நமது செழிப்புக்காக உருவான நாடு, இது நமது நாடு, Hail Trump! Hail Victory!! என்று முழங்கிய தீவிர இனவாதக்குழுவோடு கள்ள உறவல்ல… நேரடியாகவே நட்பு பாராட்டி அவர்களை ஆதரிப்பவர்.

~oOo~

சமூக முன்னேற்றம் என்பது ஏணிகள் அற்ற பாம்புகள் நிறைந்த பரமபத விளையாட்டு. மிக மிக மெதுவாக அடையும் முன்னேற்றம் ஒரே ஒரு பாம்பு கடிப்பதன் மூலம் பல கட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். முதலில் நாம் கடிபட மாட்டோம் என்ற மறுப்பு சிந்தனையிலேயே கொஞ்ச நேரம் ஆட்டம் ஓடும். பின்பு கடிபட கடிபட அதுவே இயல்பு என்று பழகிப்போகும். கடைசி கட்டத்திற்கு வரும்போது கடைசி கட்டம் என்று உணர்வதை விட ஆட்டம் தரும் கேளிக்கையும், ஆடிய களைப்பும் மட்டும் மிச்சமிருக்கும். பாம்பு இருக்கும் கட்டத்துக்கு இப்பொழுதுதான் விளையாட்டு நகர்ந்திருக்கிறது. வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை.

தொடர்புள்ளவை:
1. இதற்குத்தானா ஆசைப்பட்டது அமெரிக்கா?
2. அசிங்க அரசியலின் வெற்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.