ஆக்டேவியா பட்லரின் காலடியில்

பேட்டியாளர்: ரோச்சல் டி தாமஸ் (Rochell D. Thomas)
பேட்டி காணப்படுபவர்: அயனா. ஏ.ஹெச்.ஜாமிசன் (Dr. Ayana A. H. Jamieson)

octavia-butler

‘அதிகம் விற்பனையாகக் கூடிய புத்தகங்களை எழுதக்கூடிய எழுத்தாளராக விளங்குவேன்’ என்று 1988ல் வெளியிடப்பட்டிருந்த நோட்டுப்புத்தக பத்திரிகை ஒன்றின் உள் அட்டையில் ஆக்டேவியா ஈ. பட்லர் குறிப்பிட்டிருந்தார். எழுத்துத்துறையில் தத்தளித்துக் கொண்டிருந்த தம்மை ஊக்கப்படுத்துவதற்காக அவர் வெளியிட்ட பல சூளுரைகளில் இதுவும் ஒன்று. “ஏழை கருப்பினச் சிறுவர்களை கல்லூரிக்கு அனுப்ப உதவுவேன்” , “நானும் என் தாயும் சிறந்த ஆரோக்கியம் பேணும் சேவைகளை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்”, “தேவை ஏற்படும் போதெல்லாம் ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக் கொள்வேன்” […], “லட்சக்கணக்கான பேர் என்னுடைய புத்தகங்களை வாசிப்பார்கள்” இவையெல்லாம் பட்லர் விடுத்த மற்ற அறிக்கைகள்.
தன்னையே முன்னிறுத்தியதால், ரசிக்கத்தக்கதாக இல்லாத வகையில் இருந்த அந்த அறிக்கைகள், நாளடைவில் ஆருடங்களைப் போல அமைந்துவிட்டன. பஸடெனாவைச் சேர்ந்த அவர் இவற்றை எழுதிய 10 வருடங்களுக்குப் பிறகு, சிறந்த சிறுகதைக்கான ஹுயூகோ விருதைப் பெற்று, நான்கு புதினங்களையும் எழுதி, நெபுலா விருதையும் மெக்ஆர்தர் அறக்கட்டளையின் ஃபெலோஷிப் அளித்த ‘ஜீனியஸ் க்ராண்ட்’ விருதையும் பெற்றுவிட்டார்.
இன்று பட்லரின் 13 புத்தகங்கள் லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது. அவருடைய கட்டுரைகளும், தனிப்பட்ட முறையில் அவர் எழுதிய பிறவும் உலகெங்கும் வாசிக்கப்படுகிறது, அவர் தமது படைப்புகளை உயிலெழுதி ஒப்படைத்த  ஹண்டிங்டன் நூலகத்தில் சான்றோரால் தேடிப் படிக்கப்படுகிறது. அவர் 2006ல் அகால மரணமடைந்த பிறகு, 300 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அவரது படைப்புகளும், வரைவுகளும், எழுதி முடித்த புதினங்களும், புகைப்படங்களும், இதழ்களும், தனிப்பட்ட கடிதப் போக்குவரத்துகளும், நிதி ஆவணங்களும், நினைவுப் பரிசுகளும் அங்கே காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அனுமதியளிக்கப்பட்ட முனைவராகப் பயிலும் மாணவர்களும், மும்முறை அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களும் மட்டுமே இவற்றைப் பார்க்க இயலும்.
லாஸ் ஏஞ்சல்ஸின் தேர்ந்த கலை சேகரிப்பவருக்கே உரிய வகையில், கடந்த ஒரு வருடமாக க்ளாக்‌ஷாப் இந்தத் தனிப்பட்ட படைப்புகளை பொதுமக்களுக்குத் திறந்துவிடும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. புதினங்களின் மூலங்கள், இசை, ஓவியங்கள், கல்வி சார்ந்த விரிவுரைத் தொடர் போன்றவற்றை அது திறந்து விட்டிருக்கிறது. பட்லரின் படைப்புகளை விரும்பக் கூடிய அல்லது உள்ளூர் கலைஞராக இருந்து உலகாளாவிய அளவில் பிரபலமான அவரைப் பற்றிக் கற்பதற்கு விருப்பமுள்ள எவருக்கும் கிட்டக்கூடிய வகையில் இது அமைந்திருக்கிறது.
“இந்தத் திட்டம் ஆக்டேவியா பட்லரின் மரபை லாஸ் ஏஞ்சல்ஸில் வளர்க்கவும் நிலைநிறுத்தவும் உதவும் என்று நம்புகிறேன்” என்கிறார் க்ளாக்‌ஷாப்பின் நிறுவனரான ஜூலியா மெல்ட்ஸர். ‘ரேடியோ இமாஜினேஷன்’ என்ற ஒருவருட கலைத் தொடரையும் உருவாக்கியவர் இவரே. “அவரது படைப்புகளைப் பற்றி மேலும் பலர் அறிந்துகொள்ளவும் அவர் தன்னை எப்படி உருவாக்கிக் கொண்டார், எழுதி நிலைநிறுத்திக் கொண்டார் என்பதைப் பற்றியும் அறிய இது உதவும்” என்றும் அவர் கூறுகிறார்.
கலை கண்காட்சிகள், மூல இசைப் பிரதிகள்,  பட்லரின் இறப்பிற்குப் பிறகு கட்டுரையாளரும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் எழுத்தாளருமான லினெல் ஜார்ஜ் எழுதிய ‘நேர்காணல்’ ஆகியவற்றை உள்ளடக்கியது இந்தத் தொகுப்பு. “ஒரு மாத காலமாக பழைய பிரதிகளையும் படைப்புகள் நிரம்பிய பெட்டிகளையும் ஆராய்ந்த பிறகு, “சரி, எனக்கு அவருடைய குரல் வேண்டும், அது அவருடைய சிறுகதைகளைப் பற்றியோ புதினங்களைப் பற்றியோ இல்லாமல் இயல்பான, மக்களோடு உரையாடக்கூடிய வகையில் வேண்டும்” என்று முடிவு செய்தார் ஜார்ஜ். அதன் பின் 20 பக்கங்களாலான ஒரு கட்டுரையைப் பிரசுரித்தார். “கடிதங்கள், இதழ்கள், ஆரம்பகால நாட்குறிப்புகள், ஆகியவற்றைப் படித்தேன். அவருடைய எழுத்து வாழ்க்கை, லாஸ் ஏஞ்சல்ஸில் அவருடைய வாழ்க்கை, அவருடைய கனவுகள், அச்சங்கள், அவருக்கு ஏற்பட்ட ‘எழுத்தாளரின் தடை’ ஆகியவற்றைப் பற்றிய சித்திரத்தைத் தீட்டினேன், எழுத்தாளர் என்பதற்கான அவருடைய விளக்கம் என்ன?  என்பதைப்பற்றி விவரித்தேன் என்றார் அவர்.
இந்த ஞாயிறு, ரேடியோ இமாஜினேஷன் ஆக்டேவியா ஈ. பட்லர் நினைவுச் சுற்றுலா என்ற நிகழ்வை நடத்தியது. மரு. அயனா ஏ.ஹெச்.ஜேமிசன் தலைமையில் டிசம்பர் 4ம் தேதியில் நடந்த இந்த சுற்றுலா பஸடெனாவில் உள்ள ஆர்மொரி மையத்திலிருந்து துவங்கி அங்கேயே நிறைவடைந்தது. அந்த எழுத்தாளரின் வாழ்க்கையையும் எழுத்தையும் செதுக்கிய பல இடங்களை உள்ளடக்கியதாக இது இருந்தது. அவருடைய புதினங்களிலும் சிறுகதைகளிலும் இடம்பெற்ற உள்ளூர்வாசிகள் அதில் இருந்தனர். ஓயிபி(OEB) அறிஞராக இருந்து சுற்றுலா வழிகாட்டியாக மாறிய அயனாவுடன், ஆக்டேவியா ஈ. பட்லரின் படைப்புகளில் அவர் நடத்திய ஆராய்ச்சிகள், நாஸாவைக் கலைக்கும் கருத்துடன் எழுதப்பட்ட ‘பாரபிள் ஆஃப் தி சொவர்’ என்ற அதிகம் விற்றுத் தீர்ந்த புத்தகத்தை எழுதிய அந்தப் பெண்மணியின் நினைவாக அவர் நடத்திய சுற்றுலா , அமெரிக்க உற்பத்தித் துறையின் வேலைகளை ஏற்றுமதி செய்தல், அமெரிக்க சாம்ராஜ்யத்தை நிறுவனங்கள் விற்றுவிடுதல், கேள்விக்குறிய ஒருவரை அதிபராகத் தேர்ந்தெடுத்தது ஆகியவற்றைப் பற்றி நான் பேசினேன்.

octavia_butler_journal_entry_handwriting_all-good-things-must-begin

ரோச்சல் டி.தாமஸ் : தி ஹண்டிங்டனில் உள்ள ஆக்டேவியா பட்லர் படைப்புகளை எப்படி ஆராய ஆரம்பித்தீர்கள்
மரு.அயனா. .ஹெச்.ஜாமிசன் : நவம்பர் 2013ல் அவை வெளிப்பட ஆரம்பித்தன என்று நினைக்கிறேன். அப்போது நான் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். உளவியல் படிப்பில் ஆக்டேவியா பட்லரின் புனைவுகளைப் பற்றி முனைவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். அவரால் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட அனைத்தையும் படித்துவிட்டேன். பதிப்பிக்கப்படாத வரைவுகளையும், கல்வியகக் காப்பகங்களில் இருந்து பொதுவில் கிடைக்கப் பெற்ற நேர்காணல்கள், அனைத்து சிறுகதைகள், ஆழமான வரலாற்று ஆராய்ச்சிகள், கணக்கீட்டு ஆவணங்கள் என்று எது என் கைக்குக் கிடைக்கிறதோ அவை அனைத்தையும் வாசித்தேன். அவரைப் பற்றி மேலும் மேலும் அறிந்துகொள்வதே என் அவாவாக இருந்தது. அவருடைய நெருங்கிய நண்பர் மூலம், இவை அனைத்தும் ஹண்டிங்டனுக்குச் செல்லப் போவதாக அறிந்து, என்னுடைய ஆராய்ச்சியை அங்கிருந்து துவங்கினேன். என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதிய பல்வேறு விஷயங்களுக்காக இதை மேற்கொண்டேன்.
எனில், ரேடியோ இமாஜினேஷன் திட்டம் துவங்குவதற்கு முன்னால் அந்தப் படைப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தீர்கள்?
ஆம்.  பட்லரின் படைப்புகளில் இடம் பெற்ற புராணக் கதைகளைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தேன். க்ளாக்‌ஷாப் தற்போது நடத்திக் கொண்டிருக்கும் ரேடியோ இமாஜினேஷன் பிரசாரத்திற்கு முன்பு அதை செய்து கொண்டிருந்தேன். எனவே, நான் தகுதியுள்ள ஒரு ஆராய்ச்சியாளராக, முனைவர் பட்டத்தைப் பெற்று நூலகத்தில் உள்ள படைப்புகளை ஆராய்வதற்கு அனுமதி பெற்றவர் என்ற முறையில் அங்கு சென்று கொண்டிருந்தேன்.
இப்படி ஒரு சுற்றுலா நடத்துவதற்கான எண்ணம் எப்படி உருவானது?
என்னுடைய முனைவர் ஆராய்ச்சியின் போது, பட்லரின் கல்லறை அவர் வாழ்ந்த இடத்திற்கு அருகிலேயே இருந்தது என்று கண்டறிந்தேன். இந்த இடத்தில் வளர்ந்த ஒருவர் என்ற முறையில், அவர் எழுதியது இந்தப் பகுதியோடு நெருங்கிய தொடர்புடையது என்பதை உணர்ந்தேன். சான் காபிரியேல் மலைத் தொடர்கள் அல்லது பஸடெனா போன்ற அருகிலுள்ள இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம், அவருடைய எழுத்தோடு தொடர்புடையவைகளைப் பார்த்தேன். அதை அடுத்து தனிப்பட்ட சுற்றுலாக்களில் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அல்லது ஆக்டேவியா பட்லர் லெகஸி நெட்வர்க் போன்ற குழுக்களில் எனக்கு அறிமுகமானவர்களை அழைத்துச்செல்லத் துவங்கினேன். இப்படி இந்தச் சுற்றுலா சிறிது சிறிதாக, அவருடைய வாழ்வைப் பற்றிய போதனையாகவும், அவர் இங்கு வாழ்ந்தபோது எப்படி இருந்தது என்பதைப் பற்றியும் விரிவடைந்தது.
ஆக்டேவியா பட்லர் லெகஸி நெட்வர்க் என்பது என்ன?
ஒருநாள் பட்லரின் கல்லறைக்குச் சென்று அது சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்பதைப் பார்த்த பின்னர் இந்த நிறுவனத்தை 2011ல் ஏற்படுத்தினேன். அந்தக் கல்லறை மறைவான இடத்தில் இருந்தது. அந்தக் கல்லறைத் தோட்டத்தில் ஏற்பட்ட ஒரு தவறின் காரணமாக கல்லறை வாசகங்களைத் தாங்கிய கல் காணப்படவில்லை. எனவே இந்த நிறுவனத்தைத் துவக்கினேன். அதன்மூலம் அவரின் எழுத்துக்களை வாசித்து ஏதோ ஒருவிதத்தில் அதனால் பயனடைந்த வாசகர்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
அந்தக் கல்லறைக் கல் எப்படி காணமல் போனது? தவறான கல்லறையின் மேல் அது இருந்ததா?
ஆக்டேவியாவின் தாயின் பெயரில் முதல் பாதியும் இரண்டாம் பாதியும் ஒன்றாகவே இருந்தது. அவரின் தாயாரின் பெயர் ஆக்டேவியா மார்க்ரெட், பட்லரின் பெயர் ஆக்டேவியா எஸ்டெல். அவருடைய தாய் 1995ல் இறந்த பிறகு, எழுத்தாளரான ஆக்டேவியா பட்லர் கல்லறைக்கான இடத்தை வாங்கினார். பத்து வருடங்களுக்குப் பிறகு, பட்லர் மறைந்த பிறகு, அவரது இறுதி ஊர்வலத்திற்குப் பின் அந்தக் கல்லறைக் கல் வைக்கப்பட்டது. ஆனால் அதை அவர் வாங்கிய இடத்தில், அதாவது அவருடைய தயாரின் கல்லறையில் வைத்துவிட்டனர். அதன்பின் அவருடைய குடும்பத்தினர் ஒருவர் அங்கு சென்ற போது “இது ஊர்வலத்தின்போது வைக்கப்பட்ட கல் அல்ல” என்று தெரிவித்தார். ஆக, அவர் இறந்து ஏழு எட்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, கல்லறைத் தோட்ட நிர்வாகிகள் “ஆக்டேவியா பட்லரை நேசிப்பவர்கள் எங்கள் அலுவலகத்திற்குச் செல்லுங்கள்” என்ற பலகையை வைத்துவிட்டனர். இது அலைஸ் வாக்கர், ஸோரா நீல் ஹர்ஸ்டன் ஆகியோருக்கு நடந்தது போலவே, அதாவது வாக்கர் ஸோரா நீல் ஹர்ஸ்டனின் கல்லறைக்குச் சென்று அதைக் காணாமல் தான் அவருக்கு மருமகள் போல நடித்ததைப் போல இருந்தது. நான் அடிக்கடி அங்கு சென்று விசாரித்ததால் என்னையும் அங்குள்ளோர் பட்லரின் உறவினர் என்று நினைத்து விட்டனர்.

ayana-headshot-300x200

அயனா. ஏ.ஹெச்.ஜாமிசன்

ஆக்டேவியா பட்லர் அடிக்கடி தான் ஜிம் க்ரோ கலிபோர்னியாவில் வளர்ந்ததாகக் கூறுவார். அதை எப்படி காட்சிப்படுத்தினீர்கள்?
சுற்றுலாவின் போது ஜிம் க்ரோவைப் பற்றிய சில விஷயங்களை தெற்குக் கலிபோர்னியாவில், குறிப்பாக இந்தப் பகுதியில், குறிப்பிடுவேன். தற்போது ஆர்மொரி இருக்கும் பகுதியை அடுத்து உள்ள ஃபேர் ஓக்ஸ் தோட்டவழியில் ஒரு பகுதி குப்பைக் கூளமாக இருந்து பின்னர் சீர்திருத்தப்பட்டது. இப்போது அங்கு ஒரு ஜே.க்ரோ உண்டு. ஆனால் 20, 25 வருடங்களுக்கு முன்னால் அது இப்போது போன்று தோற்றமளிக்கவில்லை. அவருடைய இளம் வயதில், எழுத்துப் பணியின் ஊடே அவர் சில தின வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். ப்ராட்வே பேரங்காடியில் அவர் பணி புரிந்தார். அது பஸடெனா மாலில் இருந்தது என்று நினைக்கிறேன். இது எல்லாம் அவர் பணி மற்றும் வாழ்க்கையின் பின்புலம். அவர் பல விருதுகளை வென்ற எழுத்தாளர் என்பதை மக்கள் மறந்து விட்டனர் என்று நினைக்கிறேன். மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவே அவர் இருந்தார்.
இந்தச் சுற்றுலாவில் எத்தனை நிறுத்தங்கள் உண்டு?
மூன்று முதல் ஐந்து நிறுத்தங்கள் சுற்றுலாவில் உண்டு. அதில் ஒன்று அவர் கல்லறை அமைந்திருக்கும் அல்டடெனாவில் உள்ள மவுண்டன் வ்யூ செமெட்ரி. ஆனால் போகும் வழியெங்கும் அவரைப் பற்றி ஏதாவது சொல்வதற்கு இருக்கும். யுனிவர்சல் ஸ்டுடியோ சுற்றுலாவைப் போன்றது இது. ஓர் இடம் இப்போது எப்படி இருக்கிறது, அவர் இங்கு எழுத்தாளராக வாழ்ந்தபோது அது எப்படி இருந்தது, அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் விளக்கமளிப்பேன். அவர் படித்த பள்ளி இந்தப் பகுதியில் இருந்தது, கல்லூரி இங்கு இருந்தது. இது போன்ற இடங்களையும் இன்னும் சில முக்கியமான இடங்களையும் நாம் கடந்து செல்வோம். ஒரு முக்கியமான நிறுத்தம் பஸடெனாவில் உள்ள அர்மொரி காட்சியகம். அவரது படைப்புகளைப் பார்வையிட்ட பின்னர் எழுத்தாளர்களும் கலைஞர்களும் அங்கு கலை வடிவங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
பாரபிள் ஆஃப் சொவர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் இந்தச் சுற்றுலாவில் உண்டா ?
அந்தப் புத்தகத்தில் பஸடெனாவின் எல்லாப் பகுதிகளுமே கிட்டத்தட்ட குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரையில் மத்தியில் இருந்து மெக்ஸிகோ வரையில் உள்ள மலைத் தொடர் உட்பட அதில் வருகிறது.
தி ஹண்டிங்டனில் உள்ள அவரது படைப்புகளை ஆராய்ந்த போது உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் எது?
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் அவர் பணமில்லாமல் வாழ்க்கையை நடத்திய விதம்தான். ஒவ்வொரு நாளும் இதழ்களில் ஏதாவது எழுதுவார், அதன்பின் அவருடைய புதினங்களைப் பற்றிய வேலையோ அல்லது கதை எழுதுவதோ அல்லது வேறொரு வேலை ஏதாவதோ அவருக்கு இருக்கும். அவருக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தைப் பற்றிக் கணக்கிட்டுக் கொண்டே இருப்பார்- எத்தனை வார்த்தைகள் எழுதியிருக்கிறார், ஒரு வார்த்தைக்கு எவ்வளவு கிடைக்கும், ஒரு வாரத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும், அதை வைத்து எவ்வளவு உணவுப் பொருட்களை வாங்க இயலும் என்பதையெல்லாம் பற்றி கணக்கிட்டு வைத்திருப்பார். அவர் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலில் எத்தனை காசுகள் வரை செலவழியும் என்பதை எழுதி வைத்திருப்பார். இதிலிருந்து நமக்கு அவரது எழுத்துக்களை பரிசாக அளிக்க பல விஷயங்களைத் தியாகம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. இது நம் இதயத்தை நொறுக்கக்கூடிய விஷயம். எனவே ஆச்சரியம் என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்த விரும்பவில்லை.
என்னை ஆழமாகப் பாதித்த இன்னோரு விஷயம், பட்லருக்கும் டோனி காட் பம்பராவுக்கும் இடையே தி ஃபெமினிஸ்ட் வயர் என்ற இதழுக்கான கட்டுரை தொடர்பாக நடைபெற்ற கடிதப் போக்குவரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் போது நிகழ்ந்தது. அவர் தாய்க்கு அனுப்பிய வாழ்த்து அட்டையின் நகல் எனக்குக் கிடைத்தது. அந்த அட்டையில் நன்றி தெரிவிக்கும் நாளுக்கும்  கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்துத் தெரிவித்ததோடு, ஒரு காசோலையையும் அனுப்பி இந்தச் செக்கில் எழுத வேண்டாம்  என்று குறித்திருந்தார். ஓர் அடகுக் குறிப்பின் நகலையும் அவர் அனுப்பியிருந்தார். அப்போதைய காலகட்டத்தில் அவர் கையில் தேவையான பணமிருந்தது. ஒரு ஸெனோஜெனிஸிஸ் புத்தகத்திற்கான முன்பணம் ஒன்றை வாங்கியிருந்தார் என்று நினைக்கிறேன். அல்லது மொத்தத் தொடருக்கான பணமாக இருக்கக்கூடும் (டான், அடல்ட்ஹூட் ரைட்ஸ், இமாகோ உட்பட). எவ்வாறிருந்தாலும் அவருக்கு அதிகப் பணம் கிடைத்தது, அதைக்கொண்டு தாயாரின் கடனை அவர் அடைத்தார். அவருடைய அன்பின் ஆழத்தின் அடையாளமாக இதை நான் கண்டேன். அதாவது தன் தாய் வாடகை அளிப்பதையோ கடனுக்கான வட்டி செலுத்துவதையோ அவர் விரும்பவில்லை. இது என்னை மிகவும் பாதித்தது.
இது போன்ற ஒரு செயலைச் செய்வது ஏழை எழுத்தாளரின் கனவாக இருக்கும். நல்லவேளையாக அதற்கான நகலை அவர் வைத்திருந்தார்.
இது அந்த சேகரிப்புகளால் விளைந்த ஒரு நன்மை. கடிதங்களை தட்டச்சு செய்து அனுப்பும் முன் அதற்கு ஒரு நகலை  எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் அவர். இதன்மூலம் அவர் என்ன தகவல் அனுப்பியிருந்தார் என்பதைத் தெரிந்து கொண்டார். எனவே எல்லாவற்றையும் அவரால் ஆவணப்படுத்த முடிந்தது. 1997-1998ல் மின்னஞ்சலைப் பயன்படுத்தத் தொடங்கிய போதும், அவற்றை பிரிண்ட் செய்து கோப்புகளில் சேர்த்து வைத்தார். அவருடைய தொலைபேசிச் செய்திகளை எழுதி அவற்றையும் கோப்புகளில் வைத்திருப்பார். ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது அவர் எடுத்த புகைப்படங்களில் அவருடைய சொந்த விளக்கங்களை எழுதி வைப்பார். இதே போன்று வாழ்த்து அட்டைகள், பிறந்தநாள் வாழ்த்து மடல்கள், மற்ற கடிதங்களிலும் அவருடைய குறிப்புகள் உண்டு. பல தடவை தட்டச்சு செய்து அதில் கையெழுத்தால் திருத்தங்கள் செய்வதுண்டு. அதிக திருத்தங்களைச் செய்து நகல் எடுத்து வைக்கும் பழக்கம் அவருக்கு உண்டு.

print_corrections_octavia_butler_proof_reading_changes_manuscript_books_edit_kindred

இது அவர் எதையும் மறக்காமல் இருப்பதற்காக செய்ததா அல்லது டிஸ்லெக்ஸியா வந்துவிடும் என்ற அச்சத்தால் செய்ததா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இது அவருடைய பழக்கம் என்று தான் நான் நினைக்கிறேன். அவருடைய டிஸ்லெக்ஸியா அப்போது கண்டறியப்படவில்லை. ஆனால் அவர் அதைப் பற்றி சந்தேகம் கொண்டிருந்தார். அவருடைய கையெழுத்துப் பிரதிகளிலும் மற்ற எழுத்துகளிலும் அவருக்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைப் பற்றி சில குறிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக T அல்லது F என்ற எழுத்துகள். அவை இரண்டும் ஒன்று போல், பிரிட்டிஷ் யூரோ குறியீட்டைப்போல இருந்தன. ஆனால் இது எல்லாச் சமயங்களிலும் இல்லை. ஆகவே, (பிரதி எடுக்கும் பழக்கம்) வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. இது அவருக்கு எங்கிருந்தோ வந்த வழக்கம் என்றும் எல்லவற்றையும் நினைவிலிருத்திக் கொள்ள அவர் வழியமைத்தது என்றும் நான் கருதுகிறேன். பாரபிள் ஆஃப் தி டாலெண்ட்ஸ் என்ற புத்தகத்திற்காக கணிணியைப் பயன்படுத்த ஆரம்பித்தபோது, சரியாக சேமிக்கப்படாமல் பல பிரதிகள் அழிந்துபோயின. எனவே அவற்றை அவர் பிரிண்ட் எடுத்து வைக்கும் பழக்கத்தை மேற்கொண்டார்.
நீங்கள் வாசித்த முதல் ஆக்டேவியா பட்லர் புத்தகம் எது?
முதலில் நான் வாசித்தது பாரபிள் ஆஃப் தி ஸோவர். முதலில் நான் வாசித்த பகுதி “தெர்மோடைனமிக்ஸின் இரண்டாவது விதி”. அது ஜ்வெல் கோம்ஸ் நடத்திய ஒரு வட்டமேஜை உரையாடல். அதில் ஆக்டேவியா பட்லெர் இடம் பெற்றிருந்தார். அடுத்ததாக “தி ஈவினிங் அண்ட் தி மார்னிங் அண்ட் தி நைட்” என்ற சிறுகதையை வாசித்தேன். அது அவரது முதல் தொடரில் இருந்தது. புத்தகத்தின் இறுதியில் குறிப்புகளைத் தந்த ஒரே எழுத்தாளர் அவராகத்தான் இருக்க முடியும். அதிலுள்ள பகுதிகளைப் பற்றி, அதை ஏன் எழுதினேன் அதன் அடிப்படைக் கூறுகள் என்னென்ன என்பதையெல்லாம் அவர் விவரித்திருப்பார். இதன் காரணமாகவே ‘இதைத்தான் பட்லர் சொல்ல வருகிறார்’ ‘பட்லர் சொல்வது அதையே’ என்றெல்லாம் பலர் சொல்லத் தொடங்கினர். இது அவரைப் பற்றிய மாறுபட்ட கருத்துகளை உருவாக்க முயலவே, அவர்களை பட்லர் திருத்தத் தொடங்கினார். உதாரணமாக “இல்லை, இதை நான் சொல்ல வில்லை. இந்தக் கதை அடிமைத்தனத்தைப் பற்றியது” என்று கூறியிருக்கிறார்.
உங்களுடைய படைப்புகளை மேம்படுத்த எவ்வாறு அவருடைய படைப்புகள் உதவியது?
(இதைப் பதிவுசெய்யும் பொழுது) நான் மேல்நிலைப் பள்ளியில் பயில ஆரம்பித்து ஆக்டேவியாவின் படைப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்ததிலிருந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகியிருக்கும். அவர் கல்லறையில் பெற்ற அனுபவத்திலிருந்து ஆக்டேவியா பட்லர் லெகஸி நெட்வர்க் அமைப்பை நான் நிறுவினேன். நான் பார்த்திராத மக்களிடம் சமூக ஊடகங்களின் மூலமாகத் தொடர்பு கொள்கிறேன். இதன் மூலம் மெய்நிகர் தளத்தில் ஒரு சமூகத்தை உருவாக்கினேன். நாளடைவில் இதை நடத்தத் தேவையான பண உதவி கிடைத்தது. அதைக் கொண்டு நேரடி சந்திப்புகளுக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உதாரணமாக, முதல் தலைமுறை புனைவு எழுத்தாளர்களான ஜ்வெல் கோம்ஸ், ஆன்ட்ரியா ஹேர்ஸ்டன், நிஸி ஷால் போன்றோர் டானியல் ஜோஸ் ஓல்டர் போன்ற இளைய எழுத்தாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்தேன். அதன்மூலம் சாதாரணமாக அவ்வாறு கூடாத அவர்களுக்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.