அமுதசுரபியும் சத்துணவுத் திட்டமும் மலிவு விலை உணவகங்களும்

ammaunavagamஊரில்  உள்ள நகைக் கடைகள் அட்சய திரிதியை அன்று தங்கம்  வாங்கினால் வளம் பெருகும்  என்று கூறுவது ஒரு வியாபார தந்திரம். எந்தச் சத்திரத்திலும் அப்படிக் கூறவில்லை. அட்சயத் திரியை  என்று  கூகுளில் தேடினால் கணக்கில்லா பக்கங்களில் அளவுக்கு அதிகமான  தகவல்கள் குவிகின்றன. அத்தனையும் வெறும்  புராணக் கதைகள். ஒரு கதை சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளிக் களைந்ததால் ஏற்பட்ட அந்தணக்கொலைக் களங்கத்தினால்  (பிரம்மஹத்தி தோஷம் )  பிச்சைபாத்திரம்  ஒன்று கையில் ஒட்டிக் கொண்டு விடுகிறது.  அந்த ஓட்டினைக் களைவதற்காகப் பரமசிவன் ஊர் ஊராகப் பிச்சை எடுக்கச் சென்றதாகவும், காசியில் அன்னபூரணி என்ற சக்தியின் அம்சமான தேவதை அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாளான திரிதியை அன்று சிவனுக்குப் பிச்சையிட்டு அந்தப் பிச்சைப் பாத்திரத்தை அகற்றினார் என்பதால் அன்று வறுமை அகலும் என்று ஒரு கதை. வேறொரு புராணம் அட்சய திரிதியை அன்று தானம் செய்து குபேரனாகப் பிறந்த ஒரு வைசியனின் கதையைக் கூறுகிறது. காளிதாசரின் காலாமிருதம் என்ற நூல் மட்டும் திரியை திதி அனைத்து திதிகளையும் விடச் சிறந்தது என்கிறது.
இந்தப்புராணக் கதைகளையெல்லாம் கேள்விபட்டால் ஒரு செய்தி உள்ளங்கை நெல்லிக் கனியாகப் புலப்படுகிறது. பசியும் வறுமையும் ஆதிகாலம் தொட்டு மனிதனை வாட்டி வந்திருக்கிறது. வயிற்றுடன் மனிதனுக்கு உண்டான போராட்டமே அவனை இயக்கி வந்திருப்பது திண்ணம்.

‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி ‘

என்கிறார் திருவள்ளுவர்.
அந்தணர்களுக்கு உணவளிப்பதன் முக்கியத்தைப் புராணங்களும்  மனு நீதியும் அதிகமாக எடுத்துரைக்கின்றன. இதன் பின்னணியை நாம் ஆராயப் புக வேண்டாம். வேதம் என்பது வைதீக அந்தணர்களிடம் மட்டுமே அந்தக் காலத்தில் இருந்து வந்தது. அந்தணனின் கடமை  வேதத்தைக் காப்பதும் அதனைச் சிறப்பாக ஓம்புவதுமாகும். அவன் கவனம் உணவின்மேல் சென்றால் பொருள் ஈட்டுதலில் கவனம் சிதறி, வேத ரக்ஷணம் என்பது பின்னுக்குச் சென்றுவிடும் என்ற நோக்கில் அந்தணனுக்கு உணவு தானம் செய்ய வேண்டும் என்று வகுக்கப்பட்டது. இங்கே அந்தணன் என்பது ஜாதியில்லை. வேதத்தைக் காப்பவன் என்பது மட்டும்தான்.
சரி நமது தமிழ்க் காப்பியங்கள் பசிப்பிணி பற்றி என்ன கூறியிருக்கிறது என்று பார்த்தால் முதலில் நமக்குக் கிடைக்கும் பாடலின் காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமோதங்கிழார் என்ற புலவர் நாட்டில் நிலவிய பசிப்பிணியை இரண்டு பாணர்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார். புறநானூற்றில் இடம் பெறும் பாடல் இது.

‘ கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி
பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅ,
“ கானலென்கொல்?’ என வினாவினை வருஉம்
பாண! கேண்மதி, யாணரது நிலையே :
புரவுத் தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து
எவ்வம் கொள்குவை ஆயினும், இரண்டும்
கையுள் போலும், ……….

ஒரு பாணன் பசி மிக்குற அலையும்போது ஒரு கள்ளிச் செடியின் கீழ் உள்ள நிழலில் அமர்ந்த கடவுளின் சிலையைப் பார்த்து “ பசிக்குதே  தெரியலியா? “ என்று கேட்கிறான்.எதிர்ப்படும் மற்றொரு பாணன் “ உன்கிட்டதான் அரசர் கொடுத்த நிலம் இருக்கிறதே அதில் உழுது சாப்பிடுவதானாலும் சாப்பிடு; இல்லை பிச்சையெடுத்துதான் சாப்பிடுவாய் என்றால் அதற்கும் வழியிருக்கிறது உனக்குப் பொருள் கொடுக்க ஒரு மன்னன் இருக்கிறான்…..” என்று அந்த மன்னனின் புகழ் பாடப்படுகிறது. இங்கே பாணன் என்று மட்டும் குறிப்பிடும் சங்கப்பாடல் பாணனின் சாதியைக் கூறவில்லை. எனவே உழைத்துச் சாப்பிடுவதும் உழைக்காமல் தானங்களை  நம்பி சாப்பிடுவதும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருந்தது என்பது தெரிகிறது. இதுவரையில் இடதுசாரி இலக்கியவாதிகள் கூறிவந்தது போல அந்தணர்கள் மட்டும் உடல் உழைப்பில்லாமல் சாப்பிட்டு வந்தனர் என்பது முற்றிலும் தவறு.
இது ஓர் உதாரணம்தான். பெரும்பாலும் நமது சங்கப்பாடல்களில் மன்னர்களின் வள்ளல் தன்மையை மையப்படுத்திதான் செய்யுள்கள் புனையப்பட்டுள்ளன. காரணம் எளிது . போற்றிப் பாடாவிட்டால் பரிசில் கிடைக்காது.( இப்போதுள்ள அரசியல்கட்சி தலைவர்கள்  முன்னால் கூழைக்கும்பிடு  போடுபவர்களைப் போல )
பசிப்பிணியைப் பற்றி மணிமேகலை கூறுவது போல வேறொரு நூல் கூறியிருக்க வாய்ப்பில்லை.

‘குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையு மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி யென்னும் பாவி’

மணிமேகலையின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்பதை வரலாற்று  ஆய்வாளர் திரு. மயிலை.சீனி.வேங்கடசாமி  சான்றுகளுடன் நிறுவுகிறார். ஆனால் ஆபுத்திரனின் கதையை வைத்துப் பார்க்கும்போது மணிமேகலை பௌத்தம்  தமிழ்நாட்டிலிருந்து தனது சிறப்பையிழந்து கீழை நாடுகளுக்குச் சென்றபின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இதற்குச் சான்றாக நான் எடுத்துக் கொள்வது ஆபுத்திரனின் கதையும் அவனிடமிருந்த அமுதசுரபியுமாகும்.
ஆபுத்திரனின் அமுதசுரபியை ஒரு படிமமாகவே நான் பார்க்கிறேன். எதன் படிமம் என்பதுதான் இங்கு ஆராய்ச்சிக்குரியது.
மறுபிறவி தத்துவத்தில் புத்த மதத்திற்கு நம்பிக்கை உண்டு. இதன் அடிப்படையாகத்தான் ஆபுத்திரனின் கதை பார்க்கப்படுகிறது. இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திலும் கண்ணகி கோவலன் இருவரின் முற்பிறப்புக் கதை கூறப்படுவது இங்கு கவனிக்கத் தக்கது. ஆபுத்திரனுக்கு  மணிமேகலையில் ஏகப்பட்ட முற்பிறப்புக் கதைகள். ஒரு பிறவியில் அவன் காசியில் வசிக்கும் கற்புநெறி பிறழ்ந்த அந்தணனின் மனைவிக்குப் பிறந்தவன் என்று கூறப்படுகிறான் . தகப்பன் யார் என்ற தகவலில்லை. தான் கணவனுக்குச் செய்த பாவத்தைத் தொலைக்க அந்தப் பிராமண மாது  காசியிலிருந்து வழிப்போக்கர் துணையுடன் குமரிமுனைக்கு வருகிறாள். இப்போது வடநாட்டினர்  இராமேஸ்வரம் வருவதுபோல் அந்தக் காலத்தில் பாவம் போக்கும் தென்முனை குமரியாக இருந்திருக்க வேண்டும். குமரியில் அல்லது குமரி செல்லும் வழியில் மதுரைக்கும் குமரிக்கும் நடுவில் ஓர் இடத்தில் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையை ஈன்று, இரக்கமில்லாமல் அந்தப் பார்பன மாது பிறந்த குழந்தையைத் தனியே விட்டுச் செல்கிறாள். ராமநாராயணன் திரைப்படங்களில் வருவது போல ஒரு பசு பாலூட்டி எட்டு தினங்கள் வளர்த்து ஆபுத்திரன் என்ற காரணப்பெயரையும் தந்துவிட்டுச் செல்கிறது. பசு எதன் படிமம் என்று தெரியவில்லை. ஒருவேளை சாகபட்சிணி என்பதால் இருக்குமோ ? குழந்தைப்பேறு இல்லாத வேறொரு அந்தணன் ஆபுத்திரனை எடுத்து வளர்க்கிறான். கதை இப்போது கொஞ்சம் அறிஞர் அண்ணாதுரை கதைவசனம் எழுதிய நாடகம் போல மாறுகிறது. அந்த ஊரில் அந்தணர்கள் சேர்ந்து செய்யும் வேள்வியில் ( இந்த இடத்தில் சீத்தலை சாத்தனார் புலைசூழ் வேள்வி என்று சொல்லி படிப்பவர்களைச் சுற்றில் விட்டு விடுகிறார்.) பலியிடுவதற்காகப் பசு ஒன்றைக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஜீவகாருண்யம் புத்த கொள்கைகளில் அடிப்படையானது என்பதால் ஆபுத்திரன் இரவோடு இரவாக மாட்டின் கட்டை அவிழ்த்து அதனைக் காப்பாற்றித் தான் மாட்டிக் கொள்கிறான். வைதீக பிராமணர்கள் கோத்திரம் கேட்டு அவமானப்படுத்துகின்றனர். வெகுண்டெழும் ஆபுத்திரன் ரிஷிமூலம் என்னவென்று தனக்கும்  தெரியும் என்று வாதாடுகிறான். வழக்கம் போல வைதீக பிராமணர்கள் வெற்றி பெற ஆபுத்திரன் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டுத் தென்மதுரைக்குச் செல்கிறான். அங்கே சிந்தாதேவி ( சிந்த்தா-சிந்தனை ; சிந்த்தாதேவி-சரஸ்வதி.) கோவிலுக்குச் செல்கிறான். கிட்டத்தட்ட திரு.கருணாநிதி வசனத்தில் வெளிவந்த  பராசக்தி காட்சியமைப்பு போல இருக்கும். அவனிடம் பிச்சை கேட்டு வரும் வறியவர்களுக்கு எதுவும் அளிக்கமுடியாமல் வருந்தும் ஆபுத்திரன் கலைச்செல்வியிடம் மன்றாடுகிறான். மகாகவி காளிதாஸ் படத்தில் வருவது மாதிரி சரஸ்வதி நேரில் தோன்றி அவனுக்கு ஒரு அட்சயபாத்திரம் அளிக்கிறாள்.  அதைக் கொண்டு அங்கிருப்போர் பசிப்பிணி போக்குகிறான்.
மக்களும் மாவும் மரம்சேர் பறவையும்
தொக்குடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ ‘, என்கிறார் சீத்தலை சாத்தனார். ரேஷன் கடையில் கியூ நிற்பதுபோலக் கூட்டம் சேர்ந்துவிட்டதாம். ஊரே பட்டினியால் வாடியிருக்க வேண்டும் அவர் காட்சியமைத்துச் சொல்வதைப் பார்த்தால்.
கதை இனிமேல்தான் விறுவிறுப்பான கட்டத்தை அடைகிறது. பசிப்பிணி போய்விட்டால் மக்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தேவர்களின் தலைவனான இந்திரன் தொடர்ந்து பனிரெண்டு வருடங்களுக்கு ஆபுத்திரனைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் பருவம் தவறாமல் மழையைப் பொழியச் செய்கிறான். இந்த இடத்தில்தான் அமுதசுரபி ஒரு படிமம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. ஒரு நாடு வளமை பெற்றவுடன் மக்கள் பசியற்ற நிலையை அடைகின்றனர். அமுதசுரபி தனது செயல்திறன் இழக்கிறது. இது ஆபுத்திரனுக்குப் பெரிய இழுக்காகப் போய்விடுகிறது. மிக நுட்பமான இடம் இது. சாத்தனாரும் உள்ளது உள்ளபடி கூறல் என்ற அக்கால ஊடக மரபுக்கு இடம் கொடுப்பவர் போலும். அதுகாறும் மக்களின் பசிப்பிணி ஆற்றுதலை நிறைவேற்ற அமுதசுரபியை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் ஆபுத்திரன் இப்போது பகைவன் ஒருவன் தோன்றி அதன் செயல்திறனை  முடக்கியதும் –எப்படியானால் என்ன மக்களின் பசிப்பிணி தீர்ந்ததால் அதுபோதும் என்று அவனால் இருக்க முடியவில்லை- அந்த அமுதசுரபி அவனுக்கு ஒரு மானப் பிரச்சினையாக மாறி விடுகிறது. கருவி இப்போது உணர்வுபூர்வமான வஸ்துவாகிறது.

‘ஆபுத் திரன்தான் அம்பலம் நீங்கி
ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்
யாரிவன் என்றே யாவரும் இகழ்ந்தாங்’

என்கிறார் சாத்தனார். ஊர் ஊராகச் சென்று யாராவது பசியோடு இருக்கிறீர்களா என்று கேட்டு, ‘யாருடா இவனோட தொல்லையா போச்சு?’ என்று மக்கள் வெறுப்பிற்கு ஆளாகிறான். அவன் நிலையை உளவியல் ரீதியாக அலசுகிறார்.
‘திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள
ஒருதனி வரூஉம் பெருமகன் போல’ என்கிறார். ஒரு மன்னன் தனது செல்வம் முழுவதையும் கடல் கொண்டு போகக் கையில் குன்றுமணித் தங்கம் கூட இல்லாமல் தனியொருவன் நடந்து வருவதுபோல ஆபுத்திரன் வந்தான் என்கிறார் சாத்தனார்.
இந்தநேரத்தில் சாவகத்தீவை நோக்கிச் செல்லும் கப்பலில் வந்தவர்கள் சாவகத் தீவில் கடும் பஞ்சம் நிலவுவதாகக் கூறியதும் அமுதசுரபிக்கு மீண்டும் உயிர் வந்தது என்பதை அறிந்து, ஆபுத்திரன் கடலாடிகளுடன் கப்பலில் பயணிக்கிறான். காற்றுக் கடுமையாக வீசவே கப்பலின் பாயை இறக்கி மணிபல்லவத் தீவில் ஒருநாள் தங்கிச் செல்கின்றனர் கடலாடிகள். தீவைச் சுற்றிபார்க்கச் செல்லும் ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறுவதற்கு முன் கப்பல் கிளம்பிவிடுகிறது. அறுபதுகளில் அண்ணன்தம்பி இரயில் வண்டியில் பிரிந்துபோகும் திரைப்படக் காட்சியை இது நினைவுபடுத்துகிறது. அங்கு ஓடும் கோமுகி ஆற்றில் ‘அருளறம் பூண்டு ஆங்கு ஆருயிர் ஓம்புனர் உளர் எனில் அவர் கை புகுவாய்’ என்று விட்டுவிட்டு உண்ணா நோன்பிருந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்.
இந்த இடத்தில் எனக்குத் தோன்றும் விஷயம் இதுதான். இந்திரன், புத்தர் எதிர்த்த வைதீக அந்தணர்களின் படிமம். ஆபுத்திரன் புத்தரின் படிமம். புத்தரின் தரும உரைகள் அமுதசுரபியின் படிமம். புத்தருக்குப் பின் பாரதத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் போகும் புத்தமதம் சாவகத் தீவை நோக்கி பயணிக்கிறது. எனவேதான் இந்தக் கதையைப் படிமங்கள் மூலம் சொல்ல முற்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. எனவே மனிமேகலையின் காலம் கிபி.இரண்டாம் நூற்றாண்டாக இல்லாமல் அதற்கும் பின்னால் இருக்க வாய்ப்பிருக்கிறது.
என்னடா கட்டுரையை இவ்வளவு நீட்டி விட்டுத் தமிழ்க் கட்டுரை மரபின்படி தலைப்புடன் இணைக்கவில்லையே என்று கேட்கலாம். இவ்வளவு நீஈஈளமாக ஆபுத்திரன் கதையைச்  சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. புத்தர், வைதீக அந்தணமதம் என்பதற்குள் போகவேண்டாம். சிம்பிள் லாஜிக். ஆபுத்திரன் இறைவனிடம் வேண்டி அல்லது இறைவன் இவன் மேல் இரக்கப்பட்டு அமுதசுரபியைக் கொடுக்கிறது. அவன் ஊரில் உள்ள மக்களின் பசிப்பிணியைப் போக்கக் கிளம்புகிறான். இதுவரை தலைவன் என்று நம்பிக்கொண்டிருந்த தனது பதவிக்கு ஆபத்துவரப் போகிறது என்று தெரிந்ததும் இந்திரன் மாற்றி யோசிக்கிறான். தனது சக்தியால் பனிரெண்டு வருஷம் மழையை அளிக்கிறான். நாடு வளம் பெறவே பசிப்பிணி மறைந்து  போகிறது.
ஆட்சியாளர்களின் கவனத்தில் முக்கியமாக இருக்க வேண்டியது ஒரு நாட்டில் உள்ள சிறுவர்களின் பள்ளிப் படிப்பு. அடிப்படைக் கல்வி என்பது அனைவருக்கும் எளிதாக்கப்பட வேண்டும். மாணவர்களின் சேர்க்கை கணிசமான விகுதியில் குறையும்போது ஆட்சியாளர்கள் இதனைக் கவனத்தில் கொண்டு என்ன தேவையோ அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ‘ வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மானிடர்க்கெல்லாம்’ என்று பாரதியார்  பாடிவைத்து விட்டுப் போயிருக்கிறார். புலவர்களும், கல்வியாளர்களும், அறிஞர்களும் எடுத்துரைக்கத்தான் முடியும் . ஆனால் அதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயலாற்றவேண்டியது ஒவ்வொரு ஆட்சியாளரின் கடமை. கிராமப்புறங்களில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே செல்வது அன்றைய முதல்வர் எம்.ஜி.யாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. எம்.ஜி.யார் காரணம் கேட்க மதிய உணவு இல்லாததால் பெரும்பாலான சிறுவர்கள் பள்ளிக்கு வரமறுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இது நடந்தது 1982-ல். அன்றைய தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் உடனடியாகச் செயல்பட்டுச் சத்துணவுத் திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வருகிறார். நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்று அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்ததையும் மீறிக் கொண்டுவரப்பட்ட திட்டம் இது. இதன் விரிவாக்கம் மெல்ல மெல்ல பரிணமித்து விடுமுறை நாட்களிலும் உணவு அளிக்கப்படும் நிலையை எட்டி, இப்போது மற்ற மாநிலங்களிலும் பின்பற்றும் திட்டமாக மாறிவிட்டது. இதை முதன் முதலில் கொண்டு வந்தது காமராஜரா எம்.ஜி.யாரா என்ற சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை. ஒருவேளை மதியஉணவு வழங்கியதும்  மாணவர்களின் வருகையையும் அவர்களின் ஏட்டுக் கல்வியையும் உறுதிபடுத்தியது.
ஆரம்பத்தில் அண்ணாதுரை ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தைத் தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்தார். பிறகு அது செயல்படுத்தமுடியாமல் போனது வேறு விஷயம். செல்வி.ஜெயலலிதா அவர்கள் இலவச அரிசி திட்டத்தை 2011-ல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் வறுமைகோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு நடைமுறைப் படுத்தினார். பொதுவாக ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சிக்கும் இடதுசாரிகள் கூட இந்தத் திட்டத்தை வரவேற்றனர். திருப்பூர் மாவட்ட இடதுசாரிகள் திருப்பூரில்  இலவச அரிசி சரியான அளவுகளில் வழங்கப்படுவதைத் தங்களது தீக்கதிரில் பதிவு செய்திருப்பதன் மூலம் இதன் வீச்சு புரிகிறது.
இதனுடைய இன்னொரு விரிவாக்கம்தான் அம்மா உணவகங்கள். யாருடைய சிந்தனையில் தோன்றியதோ தெரியாது செல்வி.ஜெயலலிதா அதற்குச் சிறப்பான அங்கீகாரம் அளித்து அழகாக விரிவுபடுத்தினார். வெறும் மூன்று ரூபாய்க்கு இட்லி சாம்பார், பலவித சாதங்கள் என்பது மக்களைப் பிச்சைக்காரர்களாகக் கையேந்த வைக்காமல் உணவு பற்றிய சிந்தனையைக் குறைத்தது. அம்மா உணவகங்களில் அளிக்கப்படும் உணவுப்பண்டங்கள் இதுவரையில் தரமாக இருக்கிறது. ஆபுத்திரன் வழங்கியது போல நீட்டிய கைகளுக்கு உணவு வழங்காமல் அதற்கு மிகக் குறைந்த அளவு காசு வாங்கிக் கொண்டு உணவளிப்பது மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்காமல் செய்கிறது.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.