சந்திப்பு

allfiresநிலைமை இதைக் காட்டிலும் மோசமாக முடியாது என்றாலும் அந்த பாழாய்ப் போன படகில் நாங்கள் இனிமேலும் இல்லாதிருந்ததே ஒரு பாக்கியம்தான்: வாந்தியில், ஆழ்கடலில், புரண்டபடி, சொதசொதவென்றிருக்கும் பிஸ்கோத்துகள் மற்றும் விசைப்பொறித் துப்பாக்கிகளுடன், வெறுக்க வைக்கும் அழுக்கில், சமயோசிதமாய் லூயிஸ் (அவன் பெயர் அதுவல்ல என்றாலும், நாங்கள் நினைத்திருந்த அந்த நாள் வரும் வரையில் இயற்பெயர்களை நினைவுகூர மாட்டோம் என்று சபதம் பூண்டிருந்ததால்), அதில் ஒருகால் தேளே இருந்திருந்தால் எவ்வளவு பயத்துடன் திறந்திருப்போமோ அதைக்காட்டிலும் எச்சரிக்கையுடன் திறக்கும் தகர டப்பாவில் பத்திரப்படுத்தியதாலேயே ஈரமற்று காய்ந்திருந்த கொஞ்சநஞ்ச புகையிலையால் எங்கள் வேதனையைத் தணித்துக் கொண்டு…. வடக்குத் திசையிலிருந்து ஈவிரக்கமின்றித் தாக்கும் காற்றை நோக்கியபடி, வந்துபோய்க் கொண்டிருக்கும் அலைகளில் அலைக்கழிந்து போதையேறிய ஒரு கடலாமையைப் போல் ஐந்து நாட்கள் தள்ளாடிய அந்தப் பாழாய்ப்போன படகில் தக்கவைத்துக் கொள்ள எங்களுக்கு புகையிலையும், ரம் மிடறுகளும் போதுமானதாய் இருக்கவில்லை. வாளிகள் கைச்சதையை உரசிப் பிராண்டின, நானோ மோசமான ஆஸ்துமாவால் தாக்கப்பட்டிருந்தேன். கிட்டத்தட்ட அனைவருமே கடல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நாங்களே இரு துண்டங்களாய் பிளந்து விழுந்து விடுவோம் என்பதுபோல் கீழே குனிந்தபடி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தோம். இரண்டே இரவுகளில் அந்தப்  பச்சைநிற பித்த வாந்தி லூயிஸைக்கூட மனச்சோர்வடையச் செய்துவிட்டது. அதற்கும் காபோ கிரூஸ் கலங்கரை விளக்கை காணமுடியாமற் செய்த வடக்குத்திசைப் பேய்க்காற்றிற்கும் இடையே நாங்கள் எதிர்பார்த்திராத ஒரு பேரிடர் உருக்கொண்டது; நாங்கள் மேற்கொண்டிருந்ததை கடற் படையெடுப்பு என்று அழைப்பதின் அபத்தமே வாந்தியை வரவழைக்கக்கூடியதாக இருந்தது, அதன் பரிபூர்ண சோகத்தால். என்னத்தைச் சொல்ல, அந்தப் படகை விட்டுத் தப்புவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம் போலிருந்தது, ஆம், எதை வேண்டுமானாலும், கரையில் எங்களுக்காக காத்திருந்ததும் அதே பெருந்துயர்தான் என்றாலும்கூடஆனால் கரையில் எங்களுக்காக காத்திருந்ததை நாங்கள் ஏற்கனவே நன்கு அறிந்திருந்ததால் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லைதவறுதலான சமயத்தில் எக்குத்தப்பாக வானிலை தெளிவடைகையில்,  படால் என்று வேவு விமானத்தின் தாக்குதல்சகதியையோ அல்லது அதை போன்ற ஏதோவொன்றையோ மார்பளவு தண்ணீரில் கடந்து புற்கள் அடர்ந்திருக்கும் மேய்ச்சல்வெளி அல்லது பட்டைகள் அடர்ந்திருக்கும் சதுப்பு நிலங்களின் மறைவான பாதுகாப்பிற்கு விரைவதைத் தவிர நாங்கள் என்ன செய்திருக்க முடியும்என்னைத் தக்கவைத்துக் கொள்ள நான் என் அட்ரினலின் ஸ்பிரேயை ஒரு முட்டாளைப் போல் பயன்படுத்திக் கொண்டிருந்தேன், சதுப்பைக் கடக்கும் வரையில் ரோபெர்டோ என் ஸ்ப்ரிங்ஃபீல்ட் துப்பாக்கியைச் சுமந்தபடி எனக்கு உதவினான் (அது சதுப்புதான் என்றால்.. ஏனெனில் நாங்கள் திசைமாறி கரையை நோக்கி செல்வதற்குப் பதிலாக தீவிலிருந்து இருபது மைல் தொலைவில் கடலிலிருந்த ஏதோவொரு மணல் திட்டொன்றிற்குத் தவறுதலாகச் சென்றுவிட்ட
ோமா என்று எங்களில் பலருக்கும் ஒரு சந்தேகமிருந்தது….); அனைத்துமே ஒரே மாதிரிமோசமாகத் திட்டமிடப்பட்டு  அதைவிடவும் மோசமாக நம்பிக்கைக்கு இடமின்றி செயல்படுத்தப்பட்டு, கருத்தமைவுகளும் செயல்களும் ஒரு குளறுபடியான குழப்பத்தில், விமானங்கள் எங்களுக்குத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியும், நாங்கள் எப்போதாவது அடைவோமானால் அங்கு நெடுஞ்சாலையில் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்ததையும், கரையிலிருக்கும் சதுப்பில் அல்லாமல், அரண்மனையிலிருக்கும் பெருங்குரங்கின் பொழுதுபோக்கிற்காக, சகதியும் தோல்வியுமாலான ஒரு சர்கஸ்ஸில் ஏமாற்றப்பட்ட கோமாளிகளைப் போல் சுற்றிச் சுற்றி வருகிறோமா என்ற சந்தேகமும், இவையனைத்தும் கோபமும் விவரிக்க முடியாத குதூகலமுமான ஒரு கலவையை எங்களுள் ஏற்படுத்தின.

அதெல்லாம் எவ்வளவு காலத்திற்கு நீடித்தது என்று இப்போது எவருக்குமே நினைவில் இல்லை. அவர்கள் வானிலிருந்து சட்டென கீழிறங்கி எங்களைச் சுட்டு வீழ்த்தும் நிலத்துண்டங்களையும், புற்கள் அடர்ந்திருக்கும் நிலத்தில் வெட்டி உருவாக்கிய கட்டாந்தரைகளையும் கொண்டுதான் காலத்தை எங்களால் அளவிட முடிந்தது. அவற்றுடன் இடதுபுறம் தொலை தூரத்தில் நான் கேட்ட அலறலும்அது ரோகேயின் அலறல்தான் என்று எனக்குத் தோன்றுகிறது (முறுக்கிப் படரும் லியானா கொடிகளின் மத்தியில் தேரைகளுடன் கிடக்கும் அவனது பாவப்பட்ட எலும்புக்கூட்டை அவனது இயற்பெயரைக் கொண்டே அழைக்கிறேன்). நாங்கள் வகுத்த அனைத்து திட்டங்களுள், சியர்ராவை அடைந்து லூயிஸைச் சந்திக்கும் (அவனும் அங்கு எப்படியாவது வந்துசேர முடியுமானால்) இறுதி குறிக்கோள் மட்டுமே எஞ்சியது; மற்றதனைத்துமே வடதிசையிலிருந்து வீசிய காற்றாலும், தற்காலிக தரைதட்டுதல்களாலும், சதுப்புகளாலும் சுக்குநூறாக கிழித்தெறியப்பட்டன. ஆனால் நியாயமாகப் பார்த்தால் சரியாக நேரத்தில் நடந்த ஒன்றையும் இங்கு குறிப்பிடவேண்டும்: எதிரி விமானங்களின் தாக்குதல். எங்களால் தூண்டப்பட்டு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்; தவறாமல் சரியாகவே நடந்தது. அதனால்தான், ரோகேயின் கதறல் என் முகத்தில் ஏற்படுத்திய வலியையும் மீறி, உலகைப் பற்றிய என் குரோதமான புரிதலால் நான் சிரிக்க முடிந்தது;  எச்சரிக்கையுடன்தான் என்றாலும்… (என் மூச்சடைப்பு இன்னமும் பலவீனமாகியது, மூக்களவு நீர் இருந்ததால் வேறெதையும் விட சகதியை மட்டுமே அதிகம் விழுங்கினேன்; அட்ரினெலின் உறிஞ்சுவதற்கு ஏதாக ரொபெர்டோ ஸ்ப்ரிங்ஃபீல்டைச் சுமந்து கொண்டு வந்தான்)… ஏனெனில் எதிரி விமானங்கள் அங்கிருந்தது நாங்கள் தவறான கடற்கரையை சென்றடையவில்லை என்பதை உறுதி செய்தது. அதிகபட்சம் ஒரு சில மைல்கள் மட்டுமே நாங்கள் வழி தவறியிருக்கக்கூடும். புல்வெளிகளுக்கு அப்பால் நெடுஞ்சாலையும், அதற்கும் அப்பால் வெட்டவெளியும், வடக்கே தோன்றும் முதல் மலைக்குன்றுகளும். எதிரி நாங்கள் கரை சேர்ந்த நேர்த்தியை உறுதிப்படுத்தியது ஒரு விதத்தில் வேடிக்கையாகவும் இருந்தது.

கடவுளுக்குத்தான் தெரியும் அது எத்தனை காலம் நீடித்ததென்று. ஆனால் அதற்குப் பிறகு இரவும் வந்தது, நாங்கள் ஆறு பேர் ஏதோ சில மெலிந்த மரங்களுக்குக் கீழே நின்று கொண்டிருந்தோம், முதல் முறையாக ஈரமற்ற வரண்ட நிலத்தில் ஈரமான புகையிலையையும் நவிர்த்துப் போன பிஸ்கோத்துகளையும் சுவைத்தபடிலூயிஸ், பாப்லோ, லூகாஸ் இவர்களிடமிருந்து ஒரு தகவலும் இல்லை; அவர்களும் ஒருகால் சிதறியடிக்கப்பட்டு, ஏன் இறந்தும்கூட போயிருப்பார்கள். எப்படியும் கண்டிப்பாக எங்களைப் போல் நனைந்த, கையறு நிலைக்கு அவர்களும் இட்டுச் செல்லப்பட்டிருப்பார்கள். ஆனால் அந்த நீர்நில அணிவகுப்பின் இறுதியில் என் கருத்துக்கள் ஒழுங்கமையத் தொடங்கியது எனக்குப் பிடித்திருந்தது; எப்போதையும் விட இப்போது அதிக சாத்தியத்துடன் தாக்கக் காத்திருக்கும் மரணம் இனிமேலும் சதுப்பு நிலத்தின் நடுவே விரையும் ஒரு தற்செயல் துப்பாக்கிக் குண்டாக இல்லாது தேவையான கூறுகளை நன்றாக ஒருங்கிணைத்து ஒருவிதமான வரண்ட நகைச்சுவை உணர்வுடன் இயங்கும் முரணியக்கமாக இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. நெடுஞ்சாலையை இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்; சதுப்புகளைச் சூழ்ந்துகொண்டு, சகதியாலும், புழு பூச்சிகளாலும், பசியாலும் சோர்வுற்று இரண்டு மூன்று பேர்களாக நாங்கள் வெளியே வருவதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். இப்போது என்னால் அனைத்தையும் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது; மீண்டும், என் சட்டைப்பையினுள் திசைகாட்டும் கருவியின் ஆதாரச் சுட்டுதல்கள்…. முடிவுரையின் விளிம்பில் இத்தனை விழிப்புடன், இவ்வளவு உயிர்ப்பாக உணரமுடிந்தது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. ரொபெர்டோ வெறுத்த பான்சோவின் பழைய கவிதைகளை அவன் காதில் ஓதி அவனை வெறியேற்றுவதைக் காட்டிலும் எதுவுமே வேடிக்கையாக இருக்க முடியாது என்று தோன்றியதுஇந்தச் சகதியை மட்டும் நம்மால் ஒழிக்க முடியுமானால்…” துணைத் தலைவர் குறைபட்டுக் கொண்டார். “அல்லது நிஜமாகவே புகைபிடிக்க முடியுமானால்…” (இடது பக்கத்தில் யாரோ, இனிமேலும் என்னால் சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை, விடிந்ததும் நாங்கள் இழந்துவிட்ட யாரோ ஒருவன்). மரண அவஸ்தையை நிர்வகித்தல்: முறைக் காவல்கள், முறைத் தூக்கங்கள், புகையிலையைச் சுவைத்துக் கொண்டும் கடற்பஞ்சைப் போல் உப்பிவிட்ட பிஸ்கோத்துகளைச் சப்பிக்கொண்டும்அவர்கள் அவனைக் கொன்றுவிட்டார்களோ என்ற ஐயமே எங்கள் நிஜ எதிரி என்று கருதியதால் எவருமே லூயிஸின் பெயரை உச்சரிக்கவில்லை. ஏனெனில் பின்தொடர்கையோ, ஆயுதங்களின் பற்றாக்குறையோ அல்லது கொப்பளித்துவிட்ட எங்கள் பாதங்களோ இவை எல்லாவற்றையும்விட அவனது மரணத்தைப் பற்றிய உறுதிப்பாடே எங்களை தோற்கடித்திருக்கும். ரொபெர்டோ காவல் இருக்கையில் நான் தூங்கி விட்டேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதற்கு முன் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் என்றால்அவர்கள் லூயிஸைக் கொன்றுவிட்டார்கள் என்ற சாத்தியத்தை திடீரென்று ஏற்றுக்கொண்டு விட்டோமானால் அதுவரையிலும் நாங்கள் பொருட்படுத்தாது துணிந்து செயததெல்லாவற்றிற்கும் அர்த்தமே இல்லாமல் போய்விட்டிருக்கும். ஏதாவது ஒரு விதத்தில் அந்த பொறுப்பற்ற துணிவு இறுதிவரை த
ொடர்ந்தே ஆகவேண்டும். ஒருகால் அதன் முடிவு வெற்றியாகவும் இருக்கலாம். எதிரியிடமே நாங்கள் கரை சேர்ந்தது பற்றி தகவல் தெரிவிக்கும் அதிர்ச்சிகரமான அளவிற்கு வளர்ந்துவிட்ட இந்த அபத்த விளையாட்டில் லூயிஸை இழப்பது பற்றிய பேச்சுக்கு இடமே இல்லை. மேலும் அப்போது எனக்கு மற்றொரு சிந்தனையும் உடனெழுந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் வெற்றி பெற்று லூயிஸைச் சந்திக்க நேர்ந்தால், அந்த கணத்தில் மட்டுமே இந்த ஆட்டம் உண்மையிலேயே தொடக்கம் பெறும் என்றும் அத்தியாவசியமான, கட்டற்ற, அபாயகரமான எங்கள் கற்பனை நவிற்சி தோய்ந்த இலட்சியவாதத்திற்கான பரிகாரமாகவும் அது இருக்கக்கூடும் என்றும் நம்பினேன். உறக்கத்தில் அமிழும் கணத்திற்கு முன் எனக்கு ஒருவிதமான மனக்காட்சி தோன்றியது: லூயிஸ் ஒரு மரத்திற்கு அருகே நின்று கொண்டிருக்கிறான், எங்கள் அனைவராலும் சூழப்பட்டு, கையை முகத்தை நோக்கி உயர்த்துகிறான், பின்னர் முகத்தை முகமூடியை அகற்றுவதைப் போல் கழட்டுகிறான். கையில் தன் முகத்துடன் என்னையும், அவனது சகோதரனான பாப்லோவையும் ரோகேயையும் அணுகி, அதை அணிவித்துக் கொள்ளும்படி சைகை செய்கிறான். அவர்கள் இருவரும் மறுத்த பிறகு நானும் அதை அணிந்துகொள்ள மறுக்கிறேன், கண்களில் நீர் வரும் வரையில் சிரித்துக்கொண்டே. அதன்பின் லூயிஸ் தன் முகத்தை மீண்டும் அணிந்து கொள்கிறான். சட்டைப்பையிலிருந்து சிகரெட்டொன்றை எடுத்துக் கொண்டு தோளை அவன் குலுக்கியபோது அவனிடம் முடிவிலா சோர்வைக் காண்கிறேன். துறைமை மொழியில் இதை தூக்கக் குறைவாலும், காய்ச்சலாலும் ஏற்படும் மனப்பிராந்தி என்று எளிதாக விளக்கிவிட முடியும். ஆனால் கரையேறும்போது அவனை அவர்கள் உண்மையிலேயே கொன்றுவிட்டார்களானால் சியர்ராவிற்கு அவன் முகத்துடன் செல்லப்போவது யார்?.  நாங்கள் அனைவருமே அங்கு செல்ல முயலலாம் ஆனால் ஒருவருமே லூயிஸின் முகத்தோடு போய்ச் சேரமாட்டோம் என்பதே உண்மை. “டியாடோக்கி” (“The Diadochi”) என்று பாதித்தூக்கத்தில் நினைத்துக் கொண்டேன். “ஆனால் டியாடோக்கியுடன்தான் கதை கந்தலாகியது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே?”

இந்தக் கதை முடிந்து பல காலம் ஆகிவிட்டதென்றாலும், சில பகுதிகளும் கணங்களும் என் நினைவில் செதுக்கியது போல் பதிந்திருப்பதால் அவற்றை நிகழ்காலத்தில் மட்டுமே கூறமுடியும் என்று நினைக்கிறேன்: உதாரணமாக, திறந்த வானிலிருந்து எங்களைக் காக்கும் அந்த மரத்தினருகே, பின்புறம் முழுவதும் புல்லின்மீது அழுந்தியபடி நாங்கள் படுத்திருக்கிறோம். மூன்றாம் நாள் இரவு, ஆனால் அந்த நாள் விடிந்தபோது நாங்கள் ஜீப்புகளையும் விசைப்பொறித் துப்பாக்கிகளையும் மீறி தெடுஞ்சாலையைக் கடந்து விட்டோம். இப்போது இன்னொரு விடியலுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும், எங்கள் வழிகாட்டியை அவர்கள் கொன்றுவிட்டதால், நாங்கள் வழிதெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதால்குடியானவன் எவனையாவது பிடிக்கவேண்டும், உணவுப்பொருள் வாங்கும் இடத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல. “வாங்குவதற்குஎன்று கூறும்போது எனக்கு சிரிப்பு வருகிறது. அதனுடன் மூச்சடைப்பும்கூட. ஆனால் மற்ற விசயத்தைப் போலவே அந்த விசயத்திலும் லூயிஸின் ஆணையை மீறுவதைப் பற்றி எங்களால் சிந்திக்கக்கூட முடியவில்லை. அதன்படி நாங்கள் உணவைப் பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த மக்களிடம் நாங்கள் யார், என்ன செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்பதை எல்லாம் விளக்கவும் வேண்டும். மலையிலிருந்த, துறக்கப்பட்ட குடிசையொன்றில் சாப்பிட்டதற்கு பதிலாக தட்டிற்கு அடியே ஐந்து பெசோக்களை ரொபெர்டோ வைக்கையில் அவன் முகத்தில் தோன்றியபாவம்நினைவிற்கு வருகிறது. கிட்டியது கொஞ்சமே ஆனாலும், ரிட்ஸ் ஹோட்டல் உணவைப் போல் (உண்மையிலேயே அங்கு ருசித்துத்தான் உண்பார்கள் என்றால்),  எங்களுக்கு அது சொர்க்கத்தில் கிடைக்கும் அமுதைப் போலிருந்தது, எனக்கு காய்ச்சல் அதிகமாக ஆக ஆஸ்த்துமா அறிகுறிகள் மறையத் தொடங்கின, மேகங்களுக்கு அடியேயும் ஒரு வெள்ளி வரிப்பூச்சு இருக்கிறது அல்லவா?. ஆனால், நான் ரொபெர்டோவின் முகபாவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன், யாருமற்ற அந்த காலியான குடிசையில் ஐந்து பெசோக்களை விட்டுவிட்டு வரும்போதுஎனக்கு அதை நினைக்கையில் வயிறு வெடிக்கும் அளவிற்கு சிரிப்பு வருகிறது. மீண்டும் மூச்சடைப்பிற்கு உட்பட்டு என்னையே சபித்துக் கொள்கிறேன். நாங்கள் இப்போது தூங்க வேண்டும், டிண்டி காவலிருக்கிறான், பயல்கள் ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து கொண்டு ஓய்வெடுக்கிறார்கள். நான் சற்று தூரம் தள்ளி இருக்கிறேன். என் இருமலும், மூச்சிரைச்சலும் அவர்களைத் தொந்தரவு செய்கிறது என்று எண்ணுவதால். மேலும் நான் செய்யவே கூடாத ஒன்றைச் செய்து கொண்டிருப்பதால், இரவில் இரண்டு அல்லது மூன்று முறைகளாவது இலைகளாலான ஒரு திரையை உருவாக்கிக் கொண்டு அதனடியே என் முகத்தை இருத்தி ஒரு சுருட்டைப் பற்ற வைக்கிறேன், என்னை வாழ்வுடன் சற்றே சமரசப்படுத்திக் கொள்வதற்காக

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்  லூயிஸைப் பற்றிய தகவல் வராததுதான் இன்று நடந்த ஒரே நல்ல காரியம், மற்றதனைத்துமே பேரழிவை ஒத்த விசயங்கள்தான், எண்பது பேர்களில் ஐம்பது அல்லது அறுபது பேர்களை அவர்கள் கொன்றுவிட்டார்கள்; ஹாவியேர்தான் முதலில் விழுந்தான், பெருவிலிருந்து வந்த அவனுக்கு ஒரு கண் போய்விட்டது, மூன்று மணி நேரமாக இறந்து கொண்டிருந்தான். அவனுக்காக எதையுமே என்னால் செய்ய முடியவில்லை, எவரும் பார்த்திராதபோது அவனைக் கொல்வதைக்கூட. நாள் முழுவதும், லூயிஸின் மரணத்தைப் பற்றிய தகவலுடன் தகவலேந்தி ஒருவன் வந்துவிடுவானோ என்ற பயம் (ஏற்கனவே பெரும் அபாயத்தில் எதிரியின் மூக்கிற்கு கீழேயே மூன்று தகவலேந்திகள் பலத்த காவலையும் மீறி இங்கு ஓடிவந்திருக்கிறார்கள்). இறுதியில் ஒன்றும் தெரியாமல் இருப்பதே நல்லதும்கூட, அவன் உயிருடன் இருப்பதை கற்பனை செய்துகொண்டு அவனுக்காக காத்திருக்க முடிவதும் ஒருவிதத்தில் நல்லதே, உணர்ச்சிகள் ஒடுங்கிய உறைதலில் அனைத்துச் சாத்தியங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவன் இறந்துவிட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எங்கள் எல்லோருக்கும்தான் அவனைப் பற்றி தெரியுமே, எக்கேடு கெட்டுப் போனாலென்ன என்று வெட்டவெளியில் பிஸ்டோலும் கையுமாக அந்த வடிகட்டிய முட்டாள் போகத் துணிவானென்றுஇல்லை, லோபேஸ் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பான், கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் போல் அவனை வழிநடத்தி, க்ஷணப்பித்தில் அவன் எதைச் செய்ய விரும்புகிறானோ அதற்கு நேர் மாறானதையே செய்ய வேண்டும் என்று அவனை நம்ப வைத்துஆனால், ஒரு வேளை லோபேஸ்கவலைப்பட்டே இறப்பதில் பயனொன்றுமில்லை, வெட்டி அனுமானங்களுக்கு அடிப்படை ஏதுமில்லை, மேலும் இப்படியே கிடைநிலையாகப் படுத்திருக்கும் சுலபமான வாழ்க்கையின் இந்த அமைதி விசித்திரமாக இருக்கிறது, ஏதோ எல்லாம் சரியாகவே நடந்து கொண்டிருப்பதைப் போல், திட்டமிட்டது போல் எங்கள் குறிக்கோள் நிறைவேறிவிட்டதைப் போல் (“அதற்கும் எங்களுக்குமான மணவுறவுமுழுநிறைவு பெற்றுவிட்டது போல்என்றே நினைத்து விட்டேன், ஆனால் அது ஒரு முட்டாள்தனமான சிந்தனையாகவே இருந்திருக்கும்). காய்ச்சலோ சோர்வோதான் இம்மாதிரி சிந்தனைகளைத் தூண்டியிருக்கும், அல்லது தேரைகளைப் போல் எங்களெல்லோரையும் சூரியன் உதிப்பதற்கு முன் பூண்டோடு அழிக்கப்போகிறார்கள் என்ற உண்மையும் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த அபத்தமான ஓய்வுகணத்தை பயன்படுத்திக் கொள்வது நன்மை பயப்பதாக இருக்கும்; வரைபடமாய் நின்ற மரக்கிளைகளை அவற்றைவிட தெளிவான, அங்குமிங்குமாக சில நட்சத்திரங்களைக் கொண்ட, வானத்தின் பின்புலத்தில் பார்க்க என்னை அனுமதித்துக் கொண்டு, பாதி மூடப்பட்ட கண்களுடன் கிளைகளும் இலைகளுமான அந்த தற்செயல் வடிவமைப்பையும், சட்டெனக் கூடி, ஒன்றன் மேலொன்று மீதூர்ந்து, பின் பிரிந்து, சில சமயங்களில் மர உச்சிகளின் மீது சதுப்புகளிலிருந்து எழும் உஷ்ணக்காற்று இலேசாக வீசுகையில் மென்மையாக மாற்றம் பெறும் அந்த லயங்களையும் பின்தொடர்ந்தபடி…. என் மகனை நினைத்துக் கொள்கிறேன் ஆனால் அவனோ வெகு தொலைவில் இருக்கிறான், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால்,
அவனிருக்கும் நாட்டில் இன்னமும் படுக்கையில்தான் உறங்குகிறார்கள், அவன் உருவம் இப்போது மெய்ம்மை வழுவியதாக தோன்றுகிறது, நுனி நோக்கிச் சிறுத்துச் சென்று மரத்தின் இலைகளினூடே மறைகிறது. அதற்கு பதிலாக என்னுடன் எப்போதுமே உடனிருக்கும் மோட்சார்டின் கருப்பொருளொன்றை நினைவுகூர்வது எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. வேட்டை குவார்டட்டின் (Hunt Quartet) முதல் மூவ்மெண்டில் உருவகிக்கப்படும் ஹலாலி (hallali) எனப்படும் வேட்டுவனின் எக்காள ஒலி, மரணத்தின் தழைப்பு, வயலின்களின் மென்மையான ஓசையில், காட்டுமிராண்டிச் சடங்கு ஒரு உள்ளார்ந்த களிப்பாக சுருதிமாற்றம் பெற்றுநான் அதை நினைக்கிறேன். ஒப்பிக்கிறேன். நினைவுகளில் தாழ்ந்த குரலில் அதை முரலுகிறேன். அதே சமயத்தில் பண்ணிசையின் மூல மெட்டும் வானத்துக்கு எதிராகத் தீட்டப்பட்டிருக்கும் மரவுச்சியின் படமும் நெருங்கி, நணபர்களாகி, ஒருசில முறையேனும் ஒன்றையொன்று இனம்காண முயல்வதையும் உணர்கிறேன். மேலும் இவை அனைத்திற்கும் ஊடே திடீரென்று வரைபடம் இசையின் கண்கூடான இருப்பிற்கேற்ப தன்னையே ஒருங்கிணைத்துக் கொள்கையில், கீழ்க்கிளையிலிருந்து கிட்டத்தட்ட என் தலைக்கெதிரே ஒரு லயம் பிரிந்து ஒரு குறிப்பிட்ட உயரம்வரை எழுகிறது. அதன்பின் அது தண்டுகளாலான விசிறியைப் போல் விரிகையில் இரண்டாம் வயலின் அதோ அந்த மெல்லிய கிளையாக, மற்றொரு கிளைக்கு அடுத்ததாக தன்னைப் பொருத்திக்கொண்டு மெலொடியின் ஒர் இசைச் சொற்றொடர் முடியும் தருணத்தை நெருங்குகையில் தன் இலைகளை திரித்தறிய முடியாதபடி வலதுபுறமாக ஒரு  புள்ளியில் இணைத்து அது முற்றுப்பெற வழிவகுக்கிறது. அதன்பிறகு கண் அடிமரத்தின் வழியே கீழிறங்கி, விருப்பப்பட்டால் அந்த மெலொடியை மேலும் தொடரலாம். இவை அனைத்துமே எங்கள் போராட்டமும்கூட, நாங்களும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம், மரமும் மோட்சார்ட்டும் அதை அறிந்திருக்க முடியாது என்றாலும்கூட, நாங்களும், எங்களுக்குத் தெரிந்த வழியில், ஏடாகூடமான ஒரு போரை ஒருவிதமான ஒழுங்கிற்கு சுருதிமாற்றம் செய்து, அதற்கொரு அர்த்தத்தை அளித்து, நியாயப்படுத்தி இறுதியில் அதை வெற்றிக்கு இட்டுச் செல்ல விரும்புகிறோம். அந்த வெற்றியும், வருடக்கணக்கான நாராச வேட்டைஎக்காளங்களுக்குப் பிறகு மீட்கப்படும் ஒரு மெட்டாக, ஒளியுடன் நிகழும் ஒரு சந்திப்பைப் போல், அடாஜியோவைத் (Adagio) தொடரும் அந்த இறுதி அலெக்ரோவாக (Allegro) ஒலிக்கும். இந்த பொறுப்பற்ற குழப்பத்திற்குச் சிறிது சிறிதாய் ஒழுங்களித்து, விவேகமான லௌகீக காரணங்களை தன் ஆதாரத்தாலும், மிகையாலும் நிராகரிக்கும் ஒரு மூலகாரணத்திற்கு உயர்த்தும் லூயிஸை நான் இந்தக் கணத்தில் மோட்சார்ட்டுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை அவன் அறிய நேரிட்டால் என்னவொரு உவகையால் கிளர்ச்சியடைவான். ஆனால் மனிதர்ளைக் கொண்டு இசையமைப்பவர்களுக்குத்தான் என்னவொரு கசப்பான வெறித்த பணி, சகதியையும், துப்பாக்கிக் குண்டுகளையும், நம்பிக்கை இழப்பையும் பொருட்படுத்தாது, நாங்கள் இசைக்கவே முடியாது என்று நம்பியிருந்த, மரவுச்சிகளையும், அதன் புதல்வர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படும் ந
லத்தையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் அந்தப் பாட்டை திட்டமிடும் அந்தப் பணிஆமாம், இது காய்ச்சலேதான்!. லூயிஸ் எப்படிச் சிரித்திருப்பான். ஆனால் எனக்குத் தெரியும்அவனுக்கும் கண்டிப்பாக மோட்சார்ட் பிடித்திருக்குமென்று.

இறுதியில் ஒருவழியாக எப்படியும் உறங்கிவிடுவேன் என்றாலும் அதற்கு முன்னே, வேடனின் ஹலாலிச் சத்தங்கள் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கும் மூவ்மெண்டிலிருந்து அடாஜியோவின் வெற்றிகொள்ளப்பட்ட முழுமைக்கும், அங்கிருந்து நான் ஒரு குரல்சரடாக முரலித்துக் கொண்டிருக்கும் இறுதி அலெக்ரோவிற்குச் செல்லும் வழியை நாங்கள் அறியும் நாளையும், எங்கள் முன் உயிருடன் எஞ்சி நிற்கும் அனைத்துடனும் சமரசம் செய்து கொள்ளும் தருணத்தையும் நாங்கள் எப்போதாவது சென்றடைவோமா என்று கற்பனை செய்து கொண்டிருப்பேன். நாங்கள் லூயிஸைப் போல் இருக்க வேண்டும். அவனை இனிமேலும் பின்தொடராமல் அவனைப் போலவே, வெறுப்பையும் வஞ்சத்தையும் மீண்டும் மீட்கவே முடியாதபடி பின்னே விட்டுவிட்டு, எதிரியை அவன் பார்ப்பதைப் போலவே தளரா பெருந்தன்மையுடன் பார்க்கப் பழகிக்கொண்டு, அந்தப் பெருந்தன்மையோ என் நினைவில் பலமுறை ஒரு பாண்டோகிரேட்டரின் (Pantocrator) படிமமாக உயிர்ப்பிக்கப்பட்டு (ஆனால் இதை என்னால் எவரிடமாவது கூறமுடியாமா என்ன?), ஒரே சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவனாகவும், சாட்சியாளனாகவும் தன்னை பாவித்துக்கொள்ளும் நீதிபதியாகத் துவங்கி, எவரையும் தீர்ப்புக்கு உட்படுத்தாமல், இதைக்காட்டிலும் பரிசுத்தமான ஒரு காலத்தின் கரைகளில், என்றாவது ஒரு நாள்,  நடுங்கித் தத்தளிக்கும் ஒரு விடியலில், மனிதர்களுக்கான ஒரு தேசம் பிறப்பதற்காக நிலத்தையும் நீரையும் பிரித்துக்கொண்டு…..   

ஆனால், என்ன ஒரு அடாஜியோ! விடிந்த உடனேயே அவர்கள் எங்களை நாலாபக்கத்திலிருந்தும் தாக்கத் தொடங்கினார்கள். நன்கு அறியப்படாத ஒரு இடத்திற்கு வடகிழக்காக செல்லும் திட்டத்தை அடியோடு கைவிட்டுவிட்டு இரவுவரை தாக்குப் பிடிப்பதற்கு ஏதாக உயரத்திலிருக்கும் மற்றொரு பாதுகாப்பான இடத்திற்கு  எங்கள் கடைசி தோட்டாக்களை வீணாக்கிக்கொண்டு நாங்கள் செல்ல வேண்டியிருந்தது; துணைத் தலைவர் மற்றொரு தோழரின் உதவியுடன் மலைக்குன்றைத் தக்கவைத்துக்கொண்டு அவர்களின் முன்னேற்றத்தைச் சிறிது நேரத்திற்கு தடை செய்ய முடிந்ததாலேயே, தொடையில் காயப்பட்டிருந்த டிண்டியை அந்த இடத்திற்கு தூக்கிச் செல்ல எனக்கு நேரம் கிடைத்தது. கிளரொளி வெடிகுண்டுகள் மற்றும் மின்கருவிகள் இருப்பினும் அவர்கள் எப்போதுமே எங்களை இரவில் தாக்கத் தயங்கினார்கள். இருட்டில் எண்ணிக்கைகளின் பாதுகாப்பை உணர முடியாததாலும், ஆயுதங்களின் வீணடிப்பைப் பற்றிய கவலையும் அவர்களிடம் ஒரு வகையான பீதியை ஏற்படுத்தியது; ஆனால் இரவை அடைவதற்கு முன்னால் ஒரு முழு நாளைக் கடந்தாக வேண்டுமே; நாங்கள் ஐவர் மட்டுமே எஞ்சியிருந்தோம்; எங்களுக்கு எதிராக, அந்த பெருங்குரங்கின் நல்லாசிகளில் இருப்பதற்காக எங்களை அலைகழிக்கும் வீர்ஞ்செறிந்த அந்தப் பயல்களும், விட்டு விட்டு காட்டிற்கு மத்தியில் அங்குமிங்குமாய்க் கிடக்கும் வெற்றிடங்களில் பாய்ந்திறங்கி குண்டு வீசி கணிசமான அளவில் பனை மரங்களை அழிக்கும் விமானங்களும்….

அரைமணி நேரத்தில் சுடுவதை நிறுத்திவிட்டுத் துணைத்தலைவரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்; நாங்கள் சிறிது தூரமே முன்னேறியிருந்தோம். டிண்டியை கைவிட்டுச் செல்ல எவருமே நினைக்காதலால்போர்க்கைதிகளின் விதியை நாங்கள் அனைவருமே நன்கறிந்திருந்தோம்மலைச்சரிவின் அந்தப் புதர்க்காட்டிலேயே எங்கள் இறுதி தோட்டாக்களைப் பயன்படுத்த முடிவு செய்தோம். ஏதோ வானூர்தியியல் பிழையால் எங்களை வழக்கமாக அலைக்கழிக்கும்ரெகுலர்ஸ்படை (Regulars) அப்பால் கிழக்கே வேறொரு மலைக்குன்றை தாக்கிக் கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. இதனால், மலைச்சரிவில் நரகவேதனையை அளித்த ஒரு கடினமான பாதையில் பயணித்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட சொட்டையாக தோற்றமளித்த வெறுமையான மலைக்குன்றொன்றை அடைந்தோம். அங்கு ஒரு  தோழரின் கூர்மையான பார்வை உயரமான புற்களால் மறைக்கப்பட்டிருந்த குகையொன்றை கண்டுபிடித்தது; நேரே வடக்கு திசையில் இருக்கக்கூடிய ஒரு பாதுகாப்பிடத்தையும், ஒரு பாறையிலிருந்து மற்றொரு பாறை வழியாக, அபாயகரமான ஆனால் கண்டிப்பாக வடக்கு நோக்கி, லூயிஸ் ஒருகால் ஏற்கனவே வந்தடைந்திருக்கக்கூடிய சியெர்ராவிற்கு இட்டுச் செல்லும் வழியையும் கணக்கிட்ட பின்னர் நாங்கள் மூச்சிரைத்தபடி கீழே அமர்ந்துகொண்டோம்;

மயக்கத்திலிருந்த டிண்டியை நான் பராமரித்துக் கொண்டிருந்தபோது தானியங்கித் துப்பாக்கிகளும் பிஸ்டோல்களும் மேற்கில் ஒலித்துக் கொண்டிருந்ததைக் கேட்டதாக துணைத்தலைவர் கூறினார். பாப்லோவும் அவருடனிருந்த பசங்களாக இருக்கலாம் அல்லது லூயிஸேவாகவும் இருக்கலாம். பிழைத்தவர்கள் அனேகமாக மூன்று குழுக்களாக பிரிந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் திடமாகவே நம்பினோம். பாப்லோ ஒருகால் எங்களுக்கு அருகிலேயே இருந்தாலும் இருக்கலாம். இருட்டிய பிறகு தகவலேந்தி ஒருவனை அனுப்புவது உசிதமா என்று துணைத்தலைவர் என்னிடம் கேட்டார்.

நீயே போவதற்குத் தயாராக இருப்பதால்தான் என்னிடம் கேட்கிறாய் என்று நினைக்கிறேன்.” என்று கூறினேன். டிண்டியை குகையின் குளிர்ச்சியான பகுதியில் வரண்ட புற்களாலான படுக்கையொன்றில் கிடத்திவிட்டு நாங்கள் ஓய்வெடுத்தபடி புகைபிடித்துக் கொண்டிருந்தோம். மற்ற தோழர்கள் வெளியே காவலிருந்தார்கள்.

என்ன தம்பி, இதை எல்லாம் நீ கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டாய் அல்லவா ?” துணைத்தலைவர் சிரித்துக் கொண்டே என்னிடம் கேட்டார்.

நாங்கள் இப்படியே சன்னி கண்டுவிட்ட டிண்டியுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம். துணைத்தலைவர் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருக்கையில் நெருப்பில் வாட்டப்பட்ட ஆட்டுக்குட்டி இறைச்சியுடன் ரொபெர்ட்டோ ஒரு மலைவாசியுடன் உள்ளே வந்தான். மலைவாசி லூயிஸ் இறந்துவிட்ட செய்தியைக் கொண்டு வந்திருந்தான்; நாங்கள் அதற்காக சாப்பிடுவதை நிறுத்தவில்லை. இவ்வளவு குறைவான இறைச்சிக்கு அவ்வளவு உப்பு அதிகம் என்று எங்களுக்குப்பட்டது. அவனே நேரில் பார்க்கவில்லை என்றாலும் எங்கள் குழுவில் ஒரு பழைய துப்பாக்கியுடன் உறுப்பினராகச் சேர்ந்து, லூயிஸையும் அவனது ஐந்து தோழர்களையும் கடும் விசைப்பொறித் துப்பாக்கி சுடுதலுக்கு உட்பட்டிருந்த ஒரு ஆற்றை கடப்பதற்கு உதவிய மலைவாசியின் மகன், லூயிஸ் நீரிலிருந்து வெளியே வந்து முதல் புதர்களை அடைவதற்கு முன்னாலேயே கண்டிப்பாக அடிபட்டு விட்டதாகக் கூறினான். மலைவாசிகள் அவர்கள் மட்டுமே நன்கறிந்த காட்டின் வழியே ஏறி வந்தார்கள். லூயிஸின் குழுவிலிருந்து இரண்டு ஆட்கள் அவர்களுடன் காட்டைக் கடந்திருக்கிறார்கள். எங்கள் தேவைக்கு அதிகமான ஆயுதங்களையும், குண்டுகளையும் ஏந்தியபடி அவர்கள் இங்கே இரவில் வந்து சேர்வார்கள்.

gericault-the-raft-of-the-medusa_art_revolution_gericaultraftmedusa72

துணைத்தலைவர் இன்னுமொரு சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு முகாமை ஒழுங்குபடுத்துவதற்காவும், புதிதாய் வந்திருக்கும் ஆட்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காகவும் வெளியே சென்றார், நான்  டிண்டியின் பக்கத்தில் இருந்து விட்டேன். அவன் வலியின்றி மெதுவாக அமிழ்ந்து கொண்டிருந்தான். எங்கள் நிலவரத்தைப் பற்றி சுருக்கமாக கூறவேண்டுமானால் இப்படிக் கூறலாம்: லூயிஸ் இறந்து விட்டான், ஆட்டிறைச்சி சப்புக்கொட்டி சாப்பிடும் அளவிற்கு நன்றாக இருந்தது, ராத்திரியானால் எங்கள் குழுவில் ஒன்பது பத்து பேர் இருப்பார்கள், சண்டையை மேலும் தொடர்வதற்குத் தேவையான ஆயுதங்களும் குண்டுகளும் எங்களிடம் இருக்கும். என்ன ஒரு செய்தி! ஒரு வகையில் அதுவொரு மூர்க்கமான பித்துநிலைதான்: ஒரு புறம் நிகழ்காலத்தை ஆட்களையும் உணவையும் கொண்டு வலுவூட்டிக் கொண்டு, ஆனால் அதே சமயம் மற்றொரு புறம் எதிர்காலத்தை ஒரே அடியில் அழித்து…. இந்தச் செய்தியுடனும், இந்த ஆட்டிறைச்சிச் சுவையுடனும் பொறுப்பற்ற  எங்கள் துணிகரத்திற்கான மூலகாரணமே ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. குகையின் இருட்டில், என் கடைசிச் சுருட்டை நீடிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில், லூயிஸின் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் ஆடம்பரத்தை நான் ஒருபோதும் எனக்கு அளித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தேன்; போராட்டத் திட்டத்தின் ஒரு தரவாக மட்டுமே நான் அதை கையாள வேண்டும், ஏனெனில் பாப்லோவும் இறந்து விட்டிருந்தால், லூயிஸின் விருப்பத்தின் பேரில் நான்தான் தலைமைப் பொறுப்பு ஏற்றாக வேண்டும், துணைத் தலைவரும் அனைத்து தோழர்களும் இதை அறிந்திருந்ததால், பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஒன்றுமே நடக்காததைப் போல் இப்படியே சியெர்ராவை நோக்கி போய்க்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை போலிருந்தது. கண்களை மூடிக்கொண்டேன் என்று நினைக்கிறேன். நனவிலிருந்த காட்சியே என் நினைவிலும் தோன்றியது, ஒரு கணத்திற்கு லூயிஸ் தன் முகத்தை தன்னிடமிருந்து பிரித்து என்னிடம் கொடுப்பது போலிருந்தது. நான் என் இரு கைகளைக் கொண்டு என் முகத்தை மூடிவேண்டாம், வேண்டாம், தயவு செய்து வேண்டாம் லூயிஸ்என்று கூறினேன். கண்களைத் திறந்தபோது மீண்டும் உள்ளே வந்துவிட்ட துணைத்தலைவர் பலமாக மூச்சிரைத்திருந்த டிண்டியைப் பார்த்து கொண்டிருந்தார். காட்டிலிருந்து வந்த இரண்டு பயல்கள் எங்கள் குழுவில் சேர்ந்து விட்டதாகவும், தொடர்ந்து நல்ல செய்திகள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்: குண்டுகள், வறுத்த சீனிக்கிழங்குகள், மருந்துப் பெட்டி, ரெகுலர்கள் கிழக்கு மலைகளில் தொலைந்தலைதல், ஐம்பது அடிகள் தொலைவில் சுரக்கும் அருமையான ஊற்றுநீர்இப்படிப் பல..  ஆனால் அவர் என் கண்களை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்து சுருட்டைச் சுவைத்தபடி நான் எதைப் பற்றியாவது பேசுவதற்காக காத்திருப்பது போல், லூயிஸைப் பற்றி மீண்டும் பேச நான்தான் முதலில் முன்வர வேண்டும் என்பது போல் நின்றிருந்தார்.

அதற்குப் பிறகு என் நினைவில் ஒரு குழப்பமான இடைவெளி, டிண்டோ தன் இரத்தத்தை இழந்தான், நாங்கள் அவனை இழந்தோம், மலைவாசிகள் அவனைப் புதைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள், வாந்தியும் சில்லிட்ட வேர்வை நாற்றமுமாய் இருந்த குகையிலேயே நான் ஓய்வெடுத்தபடி இருந்துவிட்டேன், ஆச்சரியமாக, முன்னே பல காலங்களுக்கு முன் எனக்கு மிகவும் நெருக்கமாய் இருந்த நண்பனை பற்றியும், என்னை என் நாட்டிலிருந்து பிரித்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், லூயிஸை நோக்கியும், அந்தத் தீவில் கரைசேர்தலுக்கும், இந்தக் குகைக்கும் புறந்தள்ளிய அந்த வாழ்க்கைப் பிளவிற்கு முன்னால் நடந்தவற்றைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தேன். எங்களிடையே இருந்த நேர வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு புதன் கிழமையான இன்று, இக்கணம் அவன் அலுவலகத்திற்கு நடந்து செல்வதையும், கொக்கியில் தன் தொப்பியை மாட்டுவதையும், தபாலில் வந்ததை நோட்டம் விடுவதையும் கற்பனை செய்தேன், இல்லை, இது நிச்சயமாக மனப்பிராந்தியல்ல, அந்த வருடங்களைப் பற்றி நினைப்பதே போதுமாக இருந்தது, நகரத்தில் நாங்கள் ஒருவரை ஒருவர் நெருக்கமாய் உணர்ந்த வருடங்கள், அரசியலையும், பெண்களையும், புத்தகங்களையும் பகிர்ந்து கொண்டு, மருத்துவ நிலையத்தில் தினமும் சந்தித்துக் கொண்டு; அவனுடைய ஒவ்வொரு சைகையும் எனக்கு அவ்வளவு பரிச்சயமாக இருந்த காலம், அந்தச் சைகைகள் அவனுடையது மட்டுமல்லாது, என்னுடைய அப்போதைய உலகத்தையும், நான், என் மனைவி, என் அப்பா, ஊதிப்பெருக்கப்பட்ட தலையங்கங்களைக் கொண்ட என் செய்தித்தாள், மதியத்தில் பணிச்சுற்றிலிருந்த டாக்டர்களுடன் நான் அருந்திய காப்பி, என் படிப்பு, என் படங்கள் என் இலட்சியங்கள் இவை அனைத்திலும் அவன் சைகைகள் ஊடுறுவிச் சென்றன. என் நண்பன் என்னைப் பற்றியும், லூயிஸைப் பற்றியும், இவை எல்லாவற்றைப் பற்றியும் என்ன நினைப்பான் என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதற்கான விடை அவன் முகத்திலேயே எழுதப்பட்டிருப்பதைப் போல் நான் உணர்ந்தேன் (இது காய்ச்சலின் கிலேசமேதான், கொஞ்சம் கொய்னா எடுத்துக் கொள்ளவேண்டும்)., சுகமான வாழ்வாலும், செம்பதிப்புகளாலும், அறுவை மருத்துவரின் அங்கீகரிக்கப்பட்ட கத்தியின் செயல்திறனாலும் தன்னிறைவில் திருப்தி அடைந்திருக்கும் ஒரு முகம்என் போராட்டம் கால்தூசி கூட பெறாதுஎன்று என்னிடம் கூற அவனுக்கு வாயைக்கூட திறக்க வேண்டியிருக்காது ஆனால்…. அது கட்டாயத் தேவை இல்லை என்றாலும் அது அப்படித்தான் நடந்திருக்க முடியும், அவர்களின் எளிதான கால அட்டவணைக்கு உட்படுத்தப்பட்ட இரக்கமும், முறைப்படுத்தி அளந்தளிக்கப்பட்ட கருணையும், நிகரானவர்கள் மத்தியில் வெளிப்படும் நற்குணமும், அவர்களின் வரவேற்பறை தாராளவாதமும் (என்ன சொல்ல வருகிறீர்கள், எங்கள் செல்ல மகள் அந்த முலாட்டோவை திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்றா, சீ!) அவர்களின் கத்தோலிக்கமும் அதன் வருடாந்திர பங்காதாயமும், பதாகைகள் நிரம்பிய சதுக்கங்களில் நிகழும் அவர்கள் தற்காலிகமான சில்லரைத்தனங்களும், அவர்களின் மரவள்ளிக்கிழங்க
இலக்கியமும், எண்ணிட்டு அச்சடிக்கப்பட்ட அவர்களின் நாட்டுப்புறவியல் புத்தகங்களும், வெள்ளிக் காலணியில் அருந்தப்படும் அவர்களின் மாடேயும்(Mate), பெரும் மந்திரிகள்கூட மண்டியிட்டு வணங்கும் அவர்களின் சபைக்கூட்டங்களும், அவர்களின் குறு அல்லது நெடுங்கால மரண அவஸ்த்தைகளும் (கொய்னா, கொய்னா, மீண்டும் ஆஸ்துமா) இவை அனைத்திற்கும் பின்னே இருக்கும் நிஜக் காரணங்களை அம்பலப்படுத்தும் மாற்றத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாததால் இது இப்படித்தான் நடந்திருக்க முடியும்அவனையும் அல்லது அதிர்ஷ்டவசமாய் அவன் தப்பித்தால் கண்டிப்பாக அவன் பிள்ளைகளையும் அழிக்கப் போகும் அந்தப் போலி விழுமியங்களுக்காக அவன் முட்டாள்தனமாக வாதாடுவதைக் கற்பனை செய்து பார்க்கையில்டாக்டர் அலுவலகத்தையும் ஒரு நளினமான வீட்டையும் மட்டுமே உரிமை கொண்டாடிய அவன், சொத்திற்கும் அளவிலா செல்வத்திற்குமான நிலப்பிரபுத்துவ உரிமைக்காக வாதாடியதையும், எதற்குமே பயன்படாது ஆசைநாயகிகளின் ஆறுதலில் தஞ்சமடையச் செய்யும் மனைவியின் நடுத்தர வர்க்க கத்தோலியத்திற்கு பலியான அவன், தேவாலயத்தின் கொள்கைகளுக்காக வாதாடியதையும், காவல்துறையினர் பல்கலைக்கழகங்களை மூடி பிரசுரங்களை தணிக்கை செய்து கொண்டிருக்கையில் கற்பிதமான ஒரு தனி மனிதச் சுதந்திரத்திற்காக வாதாடியதையும், பயத்தாலும், மாற்றம் பற்றிய பீதியாலும், ஏழ்மையால் நலிந்து கதிகெட்டுவிட்ட தன் நாட்டின் உயிருள்ள ஒரே கடவுள்களான ஐயத்தாலும் அவநம்பிக்கையாலும் அவன் வாடியதையும் நினைத்துப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது, இப்படி எல்லாம் நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோதுதான் துணைத்தலைவர் சத்தமாக கத்திக் கொண்டு உள்ளே ஓடி வந்தார்; லூயிஸ் உயிருடன், எந்த ஒரு வேசிமகனை விடவும் உயிருடன் இருப்பதாகவும், ஐம்பது விவசாயிகளுடன் அவன் சியெர்ரா மலையுச்சியை அடைந்துவிட்டான் என்றும், ரெகுலர்ஸ் படைப் பிரிவு ஒன்றை மலையிடுக்கில் ஒடுக்கி அவர்களிடமிருந்த ஆயுதங்களை கைப்பற்றிய விதத்தையும் பற்றி அவர் உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் முட்டாள்களைப் போல் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு பிற்காலத்தில், நீண்ட காலம் வரை வெட்கத்தையும், கோபத்தையும் சுகந்தத்தையும் வரவழைக்கக்கூடிய எதையெல்லாமோ கூறிக் கொண்டோம். ஏனெனில் அதுவும், வாட்டப்பட்ட ஆட்டிறைச்சியை சாப்பிடுவதும், போய்க் கொண்டே இருப்பதையும் தவிர வேறெதையுமே எங்களால் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவற்றை மட்டுமே பொருட்படுத்தக்கூடியதாக நாங்கள் உணர்ந்தோம். அந்த உணர்வு எங்களுள் அதிகரிக்கையில் நாங்கள் ஒருவரையொருவர் நேராக பார்த்துக் கொள்வதற்கு பயந்து தீக்கங்குகளில் எங்கள் சுருட்டுக்களைப் பற்ற வைத்துக் கொண்டோம். எல்லோராலும் அறியப்பட்ட அதன் சுரக்கவைக்கும் தன்மையால் புகை எங்களிடமிருந்து வரவழைத்தக் கண்ணீரைத் துடைத்தபடியே நாங்கள் தீக்கங்குகளையே வெறித்திருந்தோம்.

இன்னும் சொல்வதற்கு அதிகமாக ஏதுமில்லை. விடிகையில் மலைவாசிகளில் ஒருவன் துணைத்தலைவரையும் ரொபெர்டோவையும் பாப்லோவும் அவனது மூன்று தோழர்களும் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். பாப்லோவின் கால்கள் சதுப்புகளில் சிதைக்கப்பட்டு விட்டதால் அவனை துணைத்தலைவர் தன் கரங்களில் தூக்கிக் கொண்டார். இப்போது எங்கள் குழுவின் எண்ணிக்கை இருபதாகி விட்டது, பாப்லோ அவனுடைய துரிதமான எளிய வழியில் என்னை அணைத்துக் கொண்டது நினைவிற்கு வருகிறது, சிகரெட்டை வாயிலிருந்து எடுக்காமலே அவன் என்னிடம்லூயிஸ் உயிருடன்தான் இருக்கிறான் என்றால், இப்போதும் கூட நம்மால் வெற்றி பெற முடியும்என்று கூறினான். நான் அவன் கால்களுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தேன், அவை அழகாகவே இருந்தன. அவன் ஏதோ வெள்ளைக் காலணிகளைக் காட்டிப் பெருமைப்பட்டுக்கொள்வது போல் இருந்ததால் பயல்கள் அனைவரும் அவனைக் கேலி செய்து அவன் அண்ணன் அதைப் பார்க்க நேர்ந்தால் ஒவ்வாத ஆடம்பரத்திற்காக அவனைக் கடிந்து கொண்டிருப்பான் என்று கூறினார்கள். “திட்டினால்  திட்டுகிறான்பாப்லோ காணாததைக் கண்டது போல் வெறியுடன் புகைத்தபடி விளையாட்டுத்தனமாகக் கூறினான். “ஒருவனைத் திட்ட வேண்டுமென்றால் அதற்கு முதலில் உயிரோடு இருக்கனும் தம்பி, அவன் உயிரோடுதான் இருக்கிறான் என்பதை நீங்கள் கேட்டறிந்திருப்பீர்கள், இல்லையா?  ஆட்பிடியன் முதலையைக் காட்டிலும் இன்னும் உயிருடன்இப்போது நாம் அங்கு மேலே செல்லப் போகிறோம், தம்பி இப்போது எனக்கு நீ கால்கட்டுக்களைப் போட்டு முடித்துவிட்டாய், ஆஹா என்ன ஆடம்பரம் பாருங்கள்!… “  ஆனால் நிலைமை அப்படியே நீடித்திருக்க வாய்ப்பில்லை. வெளிச்சத்தோடு ஈயமும் மேலிருந்தும் கீழிருந்தும் கூடவே வந்தது. ஒரு சமயத்தில் துப்பாக்கித் தோட்டாவொன்று என் காதை உரசியபடி சென்றது. இரண்டு அங்குலம் குறி சரியாக இருந்திருந்தால், மகனே, இதை எல்லாம் ஒருகால் படித்துக் கொண்டிருக்கக் கூடிய நீ உன் கிழட்டு அப்பா என்ன செய்து கொண்டிருந்தான் என்பதை பற்றி அறியாமலே இருந்திருப்பாய். ரத்தமும், வலியும், பயமும் இணையும் அந்தக் கலவையில் அனைத்துமே திட்பக்காட்சியின் திண்மத்துடன் எனக்குத் தோன்றின, ஒவ்வொரு படிமமும் குவி ஓவியத்தின் துல்லியத்தில் என் உயிராசையின் வண்ணங்களுடன் ஒளிர்ந்தன. மேலும் எனக்கு ஒன்றும் ஆகவில்லை, கைக்குட்டையை இறுக்கிக் கட்டிக்கொண்டு போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான்; ஆனால் இரண்டு மலைவாசிகளும், முகம் .45 தோட்டாவால் துளைக்கப்பட்ட பாப்லோவின் தளபதியும் அங்கேயே பின்தங்கி விட்டார்கள். அப்படிப்பட்ட கணங்களில் அற்பமான விசயங்கள் எல்லாம் மனதில் என்றென்றைக்கும் நிலைக்கும் அளவிற்குப் பதிந்து விடுகின்றன; ஒரு பருமனான ஆசாமி நினைவிற்கு வருகிறான், பாப்லோவின் குழுலிருந்துதான் என்று நினக்கிறேன், போரின் மோசமான, பலவீனமான சமயத்தில் ஒரு கரும்புத் தண்டிற்குப் பின்னே முட்டியிட்டபடி பக்கவாட்டாக ஒளிந்து கொள்ள முயற்சித்தான், மற்றொரு முறை, எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது எவனோ ஒருவன் நாங்கள் சரணடைய வேண்டும் என்று கத்தினான். அதற்குப் பதிலாக தாம்சனின் இ
ண்டு துப்பாக்கிச் சுடுதல்களுக்கு நடுவே, துணைத் தலைவரின் குரல், துப்பாக்கிச் சத்தத்தையும் மீறிய ஒரு கர்ஜனையில்முடியாது, தாயோழி ஓரு பயலும் இங்க சரணடைய மாட்டான்என்று கூறியது. அதன்பிறகு மலைவாசிகளிலேயே குட்டையாயிருந்த, அதுவரையிலும் ஏதும் பேசாத, கூச்ச சுபாவமுள்ள ஒருவன், நூறு அடிகளில் மேலே இடதுபுறமாய் வளைந்து செல்லும் ஒரு பாதை இருப்பதாக என்னிடம் தெரிவித்தான். நான் அதை துணைத்தலைவருக்குக் கேட்கும்படியாகக் கத்திவிட்டு, மலைவாசிகள் பின்தொடர அப்பாதையை நோக்கி முதலில் விரைந்தேன். நரகத்தின் கதவுகள் திறந்து விடப்பட்டது போல் நாங்கள் எல்லாத் திசைகளிலும் சுட்டுக் கொண்டிருந்தோம். தோட்டாக்களிலான அந்த ஞானஸ்நானத்தின்போது அவர்களின் துணிச்சல் அளித்த இன்பத்தைச் ருசித்துக் கொண்டிருந்தேன். இறுதியில் நாங்கள் அனைவரும் பாதை தொடங்கிய அந்த செய்பா மரத்தின் கீழே ஒன்று சேர்ந்தோம். அந்தக் குட்டை மலைவாசி வழிநடத்த நாங்கள் பின்தொடர்ந்தோம், அவர்களுடன் நானும், என்னை நடக்கக்கூட விடாதபடிச் செய்துவிட்ட என் ஆஸ்துமாவுடனும், தலை துண்டிக்கப்பட்டிருக்கும் ஒரு பன்றியை விட அதிகமாக குருதி தோய்ந்த பின்னங்கழுத்துடனும்…. ஆனால், ஏன் என்று தெரியவில்லை, அன்று எப்படியும் கண்டிப்பாக  தப்பி விடுவோம் என்ற குருட்டுத்தனமான ஒரு நம்பிக்கையும் என்னுள் எழுந்தது.  ஒரு தேற்றத்தின் தவிர்க்க முடியாத கட்டாயத்துடன்  அன்றிரவே லூயிஸை சந்திக்கப் போகிறோம் என்று எங்களிடம் அது கூறியது

உங்களைத் துரத்திப் பின்தொடர்பவர்களை நீங்கள் எப்படித் துறந்து செல்வீர்கள் என்பதை நீங்கள் ஒரு போதும் முன்கூட்டியே அறிய வாய்ப்பில்லை. சிறிது சிறிதாக சுடுதல்களின் கம்முதலும், அதன்பிறகு பழக்கப்பட்டுவிட்ட சபித்தல்களும் , “கோழைகள், நின்று சண்டை போடாமல் தெறித்து ஓடுகிறார்கள்” , அதன்பிறகு திடீரென்று நிலவிய மௌனமும், மரங்கள் மீண்டும் உயிர்த்து நட்புரிமையுடன் பழகுவதும், நிலத்தில் தோன்றும் புடைப்புகளும், காயம் பட்டதால் பராமரிக்கப்பட வேண்டியவர்களும், ஒரு வாயிலிருந்து மற்றொரு வாய்க்குத் தாவிக் கொண்டிருக்கும் தண்ணீருடன் சிறிது ரம் ஏந்தியிருக்கும் உணவுக்கலமும், பெருமூச்சுகளும், எவனோ ஒருவனின் புலம்பல்களும், ஓய்விற்கும் சுருட்டிற்குமான அந்தக் கணமும், சென்று கொண்டே இருப்பதும், என் சுவாசப்பைகள் என் காதுகள் வழியே வெளியே வந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது மேலும் மேலும் ஏறியபடியும், பாப்லோ என்னிடம்என்னப்பா நீ  சைஸ் நாற்பத்தி இரண்டுக்கு பண்ணிட்டியே என் சைஸ் நாற்பத்தி மூனுஎன்று கூறியதும், சிரிப்பொலியும், மலை உச்சியும், சுவைச்சாறுடன் கொஞ்சம் யோக்காவும் குளிர்ந்த நீரும் ஒரு குடியானவன் எங்களுக்கு அளித்த குடிசையும் ரொப்பெர்டோ பிகு செய்துகொண்டே பிடிவாதமாக அவற்றிற்காக அளித்த நான்கு பெசோக்களும், குடியானவன் உட்பட அனைவரும் வயிறு வெடிக்கச் சிரித்ததும்  ஏதோ அழகான பெண்ணொருத்தியை நழுவ விட்டுவிட்டு அவள் கால்களைக் கடைசி வரையிலும் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல் நாங்கள் மறுத்த அந்த நடுப்பகல் தூக்கத்திற்கான அழைப்பும் …..

இருட்டுகையில் பாதை இன்னமும் செங்குத்தாகி கடினமாகியது. ஆனாலும் லூயிஸ் எங்களைச் சந்திப்பதற்காக தேர்வு செய்திருந்த இடத்தை நாங்கள் சப்புக் கொட்டி எதிர்பார்த்திருந்தோம். ஒரு ஆண் மானே ஏறிச் செல்லமுடியாத உயரத்தில் அந்த இடம் இருந்தது. “தேவாலயத்தில் இருப்பது போல் இருக்கும், நம்மிடம்தான் ஆர்மோனியம்கூட இருக்கிறதேஅருகிலிருந்த பாப்லோ கூறியபடியே என்னைக் குறும்புத்தனத்துடன் நோக்கினான். என் மூச்சிரைப்பு ஒரு பஸகாலியாவை (Passacaglia) போல் ஒலித்தது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது, அந்த சில மணி நேரங்களைப் பற்றிய என் நினைவு தெளிவற்று குழம்பியிருக்கிறது. நாங்கள் முதல் காவலாளை அடைந்த போதே இருட்டிவிட்டிருந்தது, அதன்பின் அடுத்தடுத்துப் பல காவலர்களை. கடக்க வேண்டியிருந்தது. நாங்கள் யார் என்பதையும் மலைவாசிகள் எங்களுடன் இருப்பதற்கான விளக்கத்தையும் அவர்களுக்கு அளித்துவிட்டு ஒரு வழியாக மரங்களுக்கு இடையே வெட்டி உண்டாக்கப்பட்ட வெளியிடத்தில் காலடி எடுத்து வைத்தோம். லூயிஸ் ஒரு மரத்தின் மீது சாய்ந்து கொண்டு, எப்பருவத்திற்கும் ஏற்ற கண் மறைப்பு கொண்ட தொப்பி அணிந்து கொண்டு, வாயில் ஒரு சுருட்டுடன் அவனுக்கே உரிய பிரத்தியேக தோற்றத்தில் நின்று கொண்டிருந்தான். மற்றவர்களுக்காக வழிவிட்டுப் பின்னே காத்திருப்பது மிகவும் கடினமாகவே இருந்தது: முதலில் பாப்லோ ஓடிச் சென்று தன் அண்ணனை அணைத்துக் கொண்ட பிறகு, துணைத்தலைவரும் மற்றவர்களும் அவனைத் தழுவிக் கொண்டார்கள், அதன்பின் மருந்துப் பெட்டியையும் ஸ்ப்ரிங்பீல்டையும் கீழே வைத்துவிட்டு, கைகளை பாக்கெட்டுகளில் பொருத்திக் கொண்டு அவனிருந்த இடத்திற்கு நடந்து சென்று அவனையே ஒரு கணத்திற்கு பார்த்திருந்தேன். அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை நன்றாகவே அறிந்திருந்தேன், மீண்டும் அதே பழைய நையாண்டி:

இன்னமும் அதே கோமாளிக் கண்ணாடிதானா?” லூயிஸ் கேட்டான்

நீயும் அதே பழைய கண்ணாடிதானா?” நான் பதிலளித்தவுடன் இருவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தோம். அவன் தாடை என் முகத்தில் பட்டபோது அதில் துளைத்திருந்த தோட்டா எனக்கு நரக வேதனையை அளித்தது. ஆனால் எப்போதிற்குமான வலியாக அது இருக்கவேண்டுமென நான் விரும்பினேன்.

ஒரு வழியாக வந்துசேர்ந்துவிட்டாய், சே“, லூயிஸ் கூறினான்.

எதிர்பார்த்தபடியே ‘’சேயை அவன் மோசமாக உச்சரித்தான்.

பின்ன, வராமலா இருப்பேன். நீ என்ன நினைத்தாய்நானும் மோசமான ஒரு பதிலை அளித்தேன். அதன்பின் முட்டாள்களைப் போல் நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். ஏனென்று தெரியாமலேயே  மற்றவர்கள் அனைவருமே சிரித்தார்கள். குடிநீரையும் செய்திகளையும் அவர்கள் கொண்டுவந்தார்கள், எப்போதும் போல் நாங்கள் லூயிஸைச் சுற்றி ஒரு வட்டமமைத்தோம். அவன் எவ்வளவு மெலிந்து விட்டான் என்பதையும் பாழாய்ப்போன அந்த கண்ணாடிகளுக்குப் பின்னே அவன் கண்கள் எப்படி ஒளிர்ந்து கொண்டு இருந்தன என்பதையும் அப்போதுதான் எங்களால் உணர முடிந்தது.

கீழே அவர்கள் இன்னமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும்  முகாமில் தற்காலிகமாகவாவது ஒரு பாதுகாப்பான அமைதி நிலவியது. எங்களால் காயப்பட்டோரை பராமரிக்கவும், ஓடையில் குளிக்கவும், தூங்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, தன் அண்ணனுடன் பேசிக் கொண்டே இருக்க விரும்பிய பாப்லோவாலும் கூட, தூங்க முடிந்தது.  ஆனால் என் ஆசைநாயகியான ஆஸ்துமா எனக்கு இரவை பயன்படுத்தக் கற்றுக் கொடுத்திருந்ததால்,  நான் மரத்தில் சாய்ந்தபடி லூயிஸுடன் அமர்ந்திருந்தேன்,  புகைத்துக் கொண்டும், வானத்திற்கு எதிராக வரையப்பட்டிருக்கும் இலைகளை பார்த்துக் கொண்டும்…. அவ்வப்போது கரையேறிய பிறகு நிகழ்ந்ததைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டோம். ஆனால் அனைத்திற்கும் மேலாக எதிர்காலத்தைப் பற்றியும், துப்பாக்கியிலிருந்து நாங்கள் தொலைபேசிகள் இருக்கும் அலுவலகங்களிற்கும், மலைகளிலிருந்து நகரங்களுக்குச் செல்லும் நாள் வருகையில் என்னவெல்லாம் தொடக்கம் பெறும் என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டோம். வேட்டை எக்காளங்கள் நினைவிற்கு வந்ததால் அவனை சிரிக்க வைப்பதற்காக அதைப் பற்றி நான் சிந்தித்திருந்ததை லூயிஸிடம் கூறலாம் என்று வாயெடுத்தும், இறுதியில் அவனிடம் அதை நான் கூறவில்லை. ஆனால் இப்போது நாங்கள் அந்த குவார்டட்டின் அடாஜியோவிற்குள் நுழைந்து விட்டது போல் இருந்தது, சில மணி நேரம் மட்டுமே ஆகியிருந்தாலும் ஒரு முழுமைக்குள் இருப்பதைப் போலவும், நிலையுறுதியற்றது என்றாலும் நிறைவின் நிச்சயத்துடனும், நாங்கள் எப்போதுமே மறக்க முடியாத சுட்டுக்குறியாக அது மாறியது. இன்னமும் எத்தனை வேட்டை எக்காளங்கள் காத்திருக்கின்றன, ரோகேயையும், டிண்டியையும், அந்தப் பெருவிலிருந்து வந்தவனைப் போலவும் நம்முள் எத்தனை உயிர்கள் எலும்புக் கூடுகளை மட்டுமே விட்டுச் செல்லப் போகின்றன. ஆனால், மனத்திட்பம் தன் குழப்பங்களை மீண்டும் ஓழுங்கமைத்து, அதன் மீது வலுக்கட்டாயமாக அடாஜியோவின் வரைபடத்தைப் பொருத்தி, என்றாவது ஒரு நாள் இறுதி அலெக்ரோவைச் சென்றடைந்து அதன் பேரிலிருக்கும் உன்னதத்திற்குத் தகுதியுற்றிருக்கும் ஒரு மெய்ம்மைக்கு இணங்கும் என்று உணரச் செய்த அந்த மர உச்சியைப் பார்க்கக் கிடைத்ததே போதும்.  நாளிதுவரை உலகத்தில் நடப்பதைப் பற்றியும், தலைநகரத்திலும் பிராவின்சுகளிலும் நடப்பதைப் பற்றியும் லூயிஸ் என்னிடம் கூறிக் கொண்டிருக்கையில் இலைகளும், கிளைகளும் சிறிது சிறிதாக என் விழைவிற்கு ஏற்ப வளைந்து கொடுத்து என் மெட்டாக உருக்கொள்வதை பார்த்தேன். லூயிஸின் மெட்டோ அவன் பேச்சுக்களுடன் என் மெட்டின் புனைவுகளிலிருந்து பல மைல்கள் தொலைவிலிருந்தது. மேலும் அந்த வரைபடத்தின் நடுவே ஒரு நட்சத்திரம் உள்வரையப்பட்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. நட்சத்திரம் சிறியதாகவும் அடர்ந்த நீலத்துடனும் மின்னியது. வானியலைப் பற்றி அதிகம் தெரியாததால் அது நட்சத்திரமா கோளமா என்று என்னால் இனம் கூற முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக புதன் கிரகமோ, செவ்வாய்க் கிரகமோ அல்ல என்பதை என்னால் உணர முடிந்தது. அடாஜியோவிற்கு மத்தியில் அது அளவிற்கு அதிகமாகவே ஜொலித்தது, புதனோ செவ்வாயோ என்று தவறுதலாக ஒ
ரு போதும் அடையாளம் காண முடியாத அளவிற்கு அபரிமிதமாக அது லூயிஸின் வார்த்தைகளுக்கு நடுவே இருந்தது.

——————————————–
Original:  “Meeting” from the short story collection, All Fires the Fire, Pantheon Books, by Julio Cortazar, translated from the Spanish by Suzanne Jill Levine

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.