1. குழந்தையின்
கோழிக்கிறுக்கல்களிலிருந்து
அதன் புன்னகைகள் சிந்துகின்றன.
அவைகளின் இடையே
தாள்களில் ஊர்கிறது புதிய மொழி.
2. அலகுகளை
முன்நீட்டிக்கொண்டு
பறந்து சென்றன சில பறவைகள்.
எங்கிருந்து எங்கு செல்கின்றன
என அறியாத சிறுமி
என்னிடம் அவற்றின்
பறத்தலைப்பற்றி வினவினாள்.
வியாக்கினத்துடன் சொன்னேன்…
திசைகளையும் வானத்தையும்
கடந்துசெல்லும் கால்கள்
அவற்றுடையவை என்று.
அண்ணார்ந்து பார்த்தவாறு
தன் கைகளை விரித்தபடி
பறக்க ஆரம்பித்தாள் சிறுமி
அவள் கால்களின் கீழொரு
வானம் பிறந்து
சுழலத் தொடங்கியது.