தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்

This entry is part 19 of 48 in the series நூறு நூல்கள்

thija2-1

அப்போது வயது பதின்மூன்றிருக்கும் என்று நினைக்கிறேன். ஓடைப்பட்டியில் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மட்டுமே இருந்ததால், பக்கத்து ஊர் சென்னம்பட்டியின் நாடார் நடுநிலைப்பள்ளியில் ஆறாவதில் சேர்ந்து, எட்டுக்கு வந்திருந்தேன். ஓடைப்பட்டியில் வீடு மந்தையில்தான் இருந்தது. எதிரில் முத்தியாலம்மன் கோவில். கோவிலுக்கும் வீட்டுக்கும் இடையில் தார் ரோடு. ரோடு, கோவில் முன்வளைவில் திரும்பி வீட்டு வாசலுக்கு நேராக ஊர்க்குளத்தின் ஓரமாக நீண்டு செல்லும். வளைவில்தான் பஸ் நிறுத்தம். முத்தியாலம்மன் கோவில் வலதுபுறம் வரிசையில் சிறிய கால்வாயை அடுத்து பாண்டியின் பலசரக்கு கடை. கடைக்குப் பக்கத்தில் அமுதா அக்காவின் வீடு. தம்பியின் தோழிகள், மெட்ராஸில் படிக்கும், வெண்டர் ராஜ் தாத்தாவின் பேத்திகள் வித்யாவும், டிங்குவும் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது, அவர்களின் விளையாட்டுக் களம் அமுதா அக்கா வீட்டின் மாடிதான்.
அமுதா அக்கா வீட்டிற்குப் பக்கத்தில் ராஜி அக்காவின் வீடு. ராஜி அக்காவின் வீடுமுன் ஒரு அடிகுழாய் இருந்தது. அங்கு தண்ணீர் அடித்து நிரப்பிக்கொண்டு போக எப்போதும் நாலைந்து பெண்கள் வந்து, நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். ராஜி அக்கா அவ்வளவு அழகு! அமுதா அக்கா மாதிரி சிவப்பில்லாவிட்டாலும், தாத்தாவின் ஊரான களரிக்குடிக்கு செல்லும்போது பார்க்கும் ரோஸி அக்காவின் மல்லிகைப் பூ சிரிப்பின் முகமாய் இல்லாவிட்டாலும் (ரோஸி அக்காவிற்கு வயது அதிகமாக அதிகமாக இளமை கூடும்போலும்; நான்கு வருடங்களுக்கு முன்னால் யதேச்சையாய் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் கொக்குளம் பேருந்திற்காக காத்திருக்கும்போது சந்தித்தபோது அதே பூ சிரிப்புடன் இன்னும் இளமையாய்…ஆச்சர்யமாயிருந்தது; காரியாபட்டியில் செட்டிலாகி இப்போது பஞ்சாயத்து போர்டு தலைவராம்), ராஜி அக்கா மாநிறம்; வட்ட முகம்; சற்றுப் பெரிய மைபூசிய கண்கள். ‘கொள்ளை அழகு’ என்று எனக்குத் தோன்றும். ராஜி அக்காவிற்கு இரண்டு அக்காக்கள் இருந்தார்கள். ஆனால் மூன்று பேரிலும் எனக்கு மிகவும் பிடித்தது ராஜி அக்காதான். எத்தனை நேரம் பார்த்தாலும் சலிக்காத முகம். ராஜி அக்கா பத்தாவதோடு படிப்பை நிறுத்தியிருந்தது. காலேஜில் சேராமல் அப்பாவுக்கு விவசாயத்தில் உதவிக்கொண்டும், காட்டு வேலைக்குப் போய்க்கொண்டும் இருந்தது. இரண்டு வருடங்களில் சொந்த மாமாவையே கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக, பாண்டி கடைக்கு முன் வழக்கமாய் ஜமா போடும் “இளைஞர் நற்பணி மன்ற” சுந்தரராஜ் மாமாவின் நண்பர்கள் பேசிக்கொண்டார்கள்.
இரட்டை வண்டி மாடுகளை கயிறுபிடித்துக்கொண்டு தூரத்தில் ராஜி அக்கா வருவதைப் பார்த்தால், வீட்டுக்குள்ளிருந்து குடுகுடுவென்று ஓடிவந்து வாசலில் நின்றுகொள்வேன். வெள்ளிக்கிழமை மாலைகளில், ஊரெல்லையிலிருக்கும் நொண்டிக்கருப்பண்ணசாமி கோவிலுக்குப் போகும்போது வாசலில் அப்பா உட்கார்ந்திருந்தால், நின்று இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டுப்போகும். ஒருநாள் மாலை வாசல் படியில் உட்கார்ந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தேன். ஐந்து ஐந்தரை மணி இருக்கும். வகுப்புத்தோழி ஹேமலதா கணக்கு நோட்டு வாங்க வருவதாய் சொல்லியிருந்தது. ஒரு கணக்கை முடித்து, அடியில் நீளக்கோடு போட்டுவிட்டு நிமிர்ந்தபோது யதேச்சையாய் பார்வை பாண்டி கடைக்குப் போனது. பாண்டி கடைக்கு முன்னால் வேப்பமரத்தடியில் சாக்கு விரித்து மாம்பழங்கள் கொட்டி வைத்திருந்தார்கள். பக்கத்தில் வெங்காயக் குவியல்.
பார்வை ராஜி அக்கா வீட்டுமுன்னால் நகர…அப்போதுதான் என்றென்றைக்குமாய் மனதில் பதிந்துபோன அந்தச் சித்திரம் கண்கள் உள்வாங்கியது. அடிகுழாய் அருகே ராஜி அக்கா நின்றுகொண்டு, இடதுபக்கம் தலையை லேசாய் சாய்த்து, முழங்கால் வரை ஈரமுடியை தொங்கவிட்டு மைகோதியினால் கோதிக்கொண்டிருந்தது. ஊதா கலர் தாவணி. தண்ணீர் பிடிக்கவந்திருந்த மேலத்தெரு கௌசல்யா சித்தியுடன், தலைமுடியை கோதிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தது. அவ்வப்போது சின்னதாய் சிரிப்பு. ராஜி அக்கா வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி, மார்கழி மாதத்தில் பஜனை நடக்கும் கிருஷ்ணன் கோவில் கோபுரத்தின் பின்னால் சூரியன் பாதி இறங்கியிருந்தது. ராஜி அக்காவின் பின்னால் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய முகம் இன்னும் தெளிவாய் தெரிந்தது. எனக்குள் என்ன நடக்கிறதென்றே புரியாமல் மௌனமாய் உட்கார்ந்திருந்தேன். அம்மா நல்ல தன்ணீர் கிணற்றுக்கு குடத்தை எடுத்துக்கொண்டு போயிருந்தார்கள். “என்னாச்சு உனக்கு? நான் வந்தது கூட தெரியாம என்ன யோசிச்சிட்டிருக்க?” ஹேமலதாவின் குரல் கேட்டபின்தான் சுயநினைவு வந்தது.

~oOo~

அன்று தி.ஜா.-வை படித்திருக்கவில்லை. மரப்பசுவும், உயிர்த்தேனும் படித்தது கல்லூரியில் சேர்ந்தபின்புதான். உயிர்த்தேன் வாசித்தபோதுதான், மனதின் ஆழத்தில் பதிந்துபோன ராஜி அக்காவின் அழகிய அந்த சித்திரம் மேலெழுந்து வந்தது.
மோகமுள் முதலில் வாசித்தது என் இருபத்தியோராவது வயதில். கோவை வேளாண் கல்லூரியில் இளங்கலை நான்காமாண்டு. நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குப் பெயர் “தமிழகம் விடுதி”. வேளாண் பொறியியல் பிரிவு சத்குருவின் அறை முதல் மாடியின் முன்புறத்திலிருந்தது. தோட்டக்கலை ராஜலிங்கம் சத்குருவின் அறைத் தோழன். புத்தகங்கள் வாங்கவும், வாசித்தது பற்றி பேசிக் கொண்டிருக்கவும் அடிக்கடி சத்குரு அறைக்குப் போவேன். சத்குரு அற்புதமாய் படம் வரைவான்; சத்குரு வரைந்துகொடுத்த ஒரு அணில் படம் இன்னும் வீட்டிலிருக்கிறது.
அப்போது பாலகுமாரனை தீவிரமாய் படித்துக் கொண்டிருந்த காலம். பாலகுமாரனிலிருந்து தி.ஜானகிராமன், ஜிட்டு கிருஷ்ண்மூர்த்தி என்று வாசிப்பு அகன்று
கொண்டிருந்தது; சீனியர் அகிலன் மூலமாய் கோவை ஞானியை ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது; அப்போதே அவருக்கு கண்பார்வை மிகவும் மங்கியிருந்தது; அவர் அறை முழுக்க புத்தகங்கள்; பல எழுத்தாளர்களை நான் கேள்விப்பட்டிருக்கக்கூட இல்லை. ’யார் எழுத்து படிக்கிறீர்கள்?’ என்று ஞானி கேட்டதற்கு ‘பாலகுமாரன்’ என்று பதில் சொன்னேன். சிரித்துக்கொண்டே ‘போதை மாதிரி ஒருத்தர்கிட்டயே தங்கிறக்கூடாது; அவர்தாண்டி இன்னும் படிக்க வேண்டியவங்க நிறைய இருக்காங்க’ என்றார் (அந்தச் சிரிப்பின் அர்த்தம் பின்னால் புரிந்தது); ஜெமோ படிக்க ஆரம்பித்தபிறகு, ஒரு சந்திப்பின்போது தமிழினி பதிப்பகம் வசந்தகுமாரும் இதையேதான் சொன்னார் ‘ஒரு மரத்து நிழல்லேயே தங்கிறக்கூடாது; சு.வேணுகோபால், சு.வெங்கடேசன் இவங்களையும்
படிங்க; தொடர்ந்து படிச்சிட்டேயிருங்க’ என்றார்.
ஒரு விடுமுறை நாளின் மாலை; மூன்று அல்லது நாலு மணி இருக்கும்; சத்குரு அறையில் தனியாய் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்து ‘மோகமுள்’ படித்துக் கொண்டிருந்தேன். மூலையில் மிருதங்கம் துணி சுற்றி வைக்கப்பட்டிருந்தது (சத்குரு வடவள்ளியில் மிருதங்க வகுப்புக்கு போய்க்கொண்டிருந்தான்); சத்குரு வரைந்துகொண்டிருந்த ராஜலிங்கத்தின் தங்கை படம் பாதி முடிந்து டேபிளின் மேலிருந்தது.
மோகமுள்ளின் ஆழத்தில் மூழ்கிப் பயணித்து எங்கோ வேறு உலகத்தில் இருந்தேன்; தங்கம்மாள் செத்துப்போனது மனதை என்னவோ செய்தது; கேள்விப்பட்டு பாபு மயானத்தில் தகரக்கொட்டாய் அருகே நின்றிருந்ததை படித்துக் கொண்டிருந்தபோது “ஐயோ” என்றிருந்தது; கண்களில் நீர் எழுத்துக்களை மறைத்தது; புத்தகத்தை உடனே மூடிவிட்டு ஜன்னல் வழியே காற்றில் ஆடிய மரத்தையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்; மனது மெலிதாய் நடுங்கிக் கொண்டிருந்தது. வெளியே போய் சுற்றிவிட்டு வரலாம் போலிருந்தது.
சைக்கிள் எடுத்துக் கொண்டு கல்லூரியின் பின்வாசல் வழியாக பூசாரிபாளையம் தொட்டு, காந்திபார்க் வந்து, பால் கம்பெனி வழியாக லாலி ரோடு போய் அர்ச்சனாவில் ஒரு காபி குடித்துவிட்டு வந்தபின்தான் மனது சமநிலையானது.
அந்தவருடம், சத்குரு வீட்டிற்கு (மேட்டூர் டேம் ஆர்.எஸ்ஸில்) ராதா கல்யாண உற்சவத்திற்கு போய் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். பாட்டும், ராகங்களும், இசையுமாய் இன்பமான இரண்டு நாட்கள். கர்நாடக சங்கீதத்தின் ரஸனை விதை உள்ளுக்குள் விழுந்த தருணங்கள். “ராக சுதா ரஸா”-வையும், “ஜகதோதாரணா’-வையும் எப்படி பாடுவது என்று அங்குதான் கேட்டுக்கொண்டேன்.

~oOo~

இருபத்தியோரு வயதில் படித்ததற்கும், இப்போது நாற்பத்து நாலு வயதில் படித்ததற்கும் நிறைய வித்தியாசாங்கள். எதிர்பால் ஈர்ப்பு தணிந்து, காமம் கனிந்தபின் நாவலில் பிடித்த இடங்கள் கூட மாறிவிட்டன. இப்போது படிக்கும்போது முதல் வாசிப்பின் பரபரப்போ, கிளர்ச்சியோ, இளமைக்கே உரிய இனக்கவர்ச்சியோ அதீதமாய் இல்லாமல் நிதானமாய் படிக்க முடிந்தது. தி.ஜா-வின் வரிகளையும் உரையாடல்களையும் நன்கு கவனித்தேன். இந்த முறை பிடித்த விஷயங்களே வேறாக இருந்தன. முதல்முறை படித்தபோது பரவசமடைந்த இடங்கள் சாதாரணமாய் கடந்துபோயின. யமுனாவின் “இதுக்குத்தானே” கூட சலனம் அதிகம் உண்டாக்கவில்லை. சொல்லப்போனால், யமுனா சென்னை வந்தபின்னான, பாபுவின் நடவடிக்கைகள் சில இடங்களில் மெல்லிய அருவருப்பைக்கூட உண்டாக்கின. வறுமை சூழ்நிலையினால் உந்தப்பட்டதனாலேயே, பாபு செய்த உதவிகளுக்கு நன்றிக்கடனாகவே, யமுனா உட்படுகிறாள்.
தி.ஜா-வையும், பாபுவையும் இன்னும் புரிந்துகொள்ள, இம்முறை மோகமுள்ளை முடித்தவுடன், ஜெ-யின் மயில் கழுத்தை மறுபடி வாசித்தேன். தி.ஜா.-வின் பெண் கதாபாத்திரங்களை, அவர்களை உருவாக்கிய அவரின் பார்வையை/தன்மையை புரிந்துகொள்ள முடிந்தது. சொல்வனத்தின் தி.ஜா. சிறப்பிதழும் மிகுதியாய் உதவியது.
தை மாத குளிரவில் கச்சேரி கேட்டுவிட்டு பின் ஜாமத்தில் வீடு திரும்பும் வைத்தியும், ஏழு வயது பாபுவும் – அந்தக் காட்சியே மிகுந்த பரவசம் தந்தது.
பாபுவின் அக்கா பெண் பட்டு, யமுனாவின் அம்மா பார்வதி, ராமு, பாபு சாப்பிடும் வீட்டின் பாட்டி, யமுனாவின் அண்ணா, ரங்கண்ணாவின் மனைவி எல்லோரும் இம்முறை இன்னும் அதிகமாய் வெளிச்சமானார்கள். தங்கம்மாவை எரித்த அந்த மயானத்தில் பாபு நிற்கும் அந்தக்காட்சி இந்தமுறையும் சலனமுண்டாக்கியது.
சில நிகழ்வுகளின் காட்சிப்படுத்தல்கள் மிகுந்த பரவசத்தையும், அணுக்கத்தையும் உண்டாக்கின. சரியான இடத்தில் சரியாய் உட்கார்ந்த வாக்கியங்களும், வார்த்தைகளும் மனப்பாடமே ஆகிவிடும்போலிருந்தது.
பொதுவாகவே, பெரிய நாவல்கள், படித்து முடிக்கும்போது, ஒருவித ஆழ்ந்த அமைதியை, நெகிழ்வை, துக்கமில்லாமல்- ஆனால் கனத்த மனதை உண்டாக்கிவிடும். ஒன்றாய் பயணித்ததன் விளைவாய் இருக்கலாம்; அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையின் ஊடே கூடி வாழ்ந்துவிட்டு, சட்டென்று அவர்கள் பிரிவதைப்போன்ற உணர்வினால் உந்தப்பட்டதாயிருக்கலாம். இம்முறையும் பாபு, புகைவண்டியில் உட்கார்ந்து, வைத்தியின் கடிதம் படித்துவிட்டு, கண்கலங்கி வெளியில் நகரும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வடக்கு நோக்கிய பயணத்தில்…
நானும் சென்றுகொண்டிருந்தேன்.

Series Navigation<< குவெம்புவின் படைப்புலகம்“இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி >>

2 Replies to “தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.