சீடன்

smoke_incense_ghost_black_white

ணிகண்டனுக்கு யாரோ செய்வினை வைத்திருக்கிறார்கள் என்பதை அவனது சித்தப்பா முருகேசன் சொன்னபோது அந்த வீட்டில் பெரிய அமைதி நிலவியது. மணிகண்டனின் அம்மா மெல்ல விசும்பினாள். முருகேசன் தன் நீண்ட வெண்ணிற மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே சொன்னார், “அதெல்லாம் பயப்பட ஒண்ணுமில்லை, செய்வினையை எடுத்துடலாம், எல்லாத்துக்கும் ஆள் இருக்கு” என்றார். வெண்ணிற முகத்தில் வெண்ணிற மீசை கொண்ட முகத்தில் இருந்த தீர்க்கமான குங்குமம் அவர் நெற்றியைச் சுருக்கி நீட்டிப் பேசும்போதெல்லாம் கீழே உதிர்ந்துகொண்டே இருந்தது. “மணிகண்டன் எங்க?” என்றார் முருகேசன்.
மணிகண்டனை அறைக்குள் வைத்துப் பூட்டி வைத்திருந்தார்கள். வீடு விடாகச் சென்று தண்ணீர் கேன் போடும் வேலையைச் செய்துகொண்டிருந்தான். ஆளைப் பார்த்தால் இவனா தினமும் 100 நீர் கேனைத் தூக்குவான் என்பது போல ஒல்லியாக இருப்பான். “12 தோசை தின்னுட்டும் எந்திரிக்கமாட்டாங்க” என்று முருகேசனின் மனைவி ஒரு தடவை சொன்னபோது, “எங்க குடும்ப வழக்கம் அது” என்று முருகேசன் சொல்லிவிட்டார். எத்தனை உண்டாலும் வயிறு என்னவோ உள்ளடங்கியே இருந்தது. முப்பது வயதுக்குரிய அடர்த்தியான மீசையும் கருமையான தாடியும், எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்றிருக்கும் கண்களும், சீரற்ற பற்களும் அவனை வினோதமாகக் காட்டின. பற்களில் எப்போதும் கொஞ்சம் மஞ்சள் நிறமிருக்கும். பக்கத்தில் போனாலே கடும் வியர்வை நாற்றம் எழும். மணிகண்டன் எப்போதும் எதோ ஒரு யோசனையிலும் கோவத்திலுமே இருப்பான். அவனே ஒருமுறை, “கல்யாணம் பண்ணா சரியாயிடும்” என்றும் சொல்லிப் பார்த்தான். டிவி பார்க்கும்போதெல்லாம் கைகளை இடுப்புக்குக் கீழே தொடைக்குள் அழுத்தி வைத்துக்கொண்டு படுத்திருப்பான். “ரூமுக்குள்ள போய் கதவை மூட்டிக்கிட்டு என்னடா வேலை” என்று தினம் அவன் அம்மா அவனைக் கேட்டுக்கொண்டே இருப்பாள். இப்போதும் அவன் கதவை மூடிக்கொண்டிருக்கிறான். ஆனால் அவன் அம்மாவுக்கு அவனை அழைக்கவே பயமாக இருந்தது.
நரைத்த முடிகள் காற்றில் பறக்க, வெறும் கழுத்துடன் கண்கள் கலங்க நின்றிருந்த அவள் அம்மா முருகேசனிடம், “நீதாம்ப்பா பார்க்கணும் முருகேசா” என்று சொல்லி கண்களைத் துடைத்துக்கொண்டாள். முருகேசன் “மணி… மணி… சித்தப்பா” என்றவாறே மெல்ல கதவைத் தட்டினார். திருச்சியின் கம்பரசன்பேட்டை கிராமத்தில் அவர்கள் இருந்த அந்தத் தெருவுக்கு ஒரு விஷயம் தெரிந்தால் அது உலகத்துக்கே தெரிந்த மாதிரிதான். மணிகண்டனின் அம்மா தெருக்கதவை இழுத்துப் பூட்டி இருந்தாள். சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்று டிவியையும் சத்தமாக வைத்திருந்தாள். ஆனால் ஊர்க்காதுகளும் கண்களும் எப்படியும் இதைக் கண்டுபிடித்துவிடும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.
மணிகண்டன் சில நிமிடம் கழித்துக் கதவைத் திறந்தான். காவி வேட்டி கட்டி ஒரு காவித் துண்டை போட்டு நெற்றியில் குங்குமத்தை நீளமாக இழுத்துவிட்டிருந்தான். கழுத்தில் இரண்டு சுற்றுகளுக்கு துளசி மாலை போட்டிருந்தான். அறைக்குள்ளிருந்து ஊதிபத்தி வாசனை வந்தது. “என்ன?” என்றான். அவன் பேசுவது பற்களைக் கடித்துக்கொண்டே பேசுவது போல இருக்கும். பற்களை உடைத்துக்கொண்டே சொற்கள் வெளியே வரும். முருகேசன், “ஒண்ணுமில்ல” என்றார். அவன், “பூஜை செஞ்சா ஒரு குத்தமா. ஊரையே கூட்டுங்க” என்றான். அவரை விலக்கிக்கொண்டே அறையைவிட்டு வெளிவந்தவன், சட்டையை போட்டுக்கொண்டு, போனையும் பைக் சாவியையும் எடுத்துக்கொண்டு, டிவியை அணைத்துவிட்டு வெளியே போனான்.
முருகேசன் அவன் அறைக்குள் சென்று பார்த்தார். பகலில் விளக்கிலாமலேயே அந்த அறை வெளிச்சமாக இருந்தது. இந்த கிராமத்தில்தான் இப்படியெல்லாம் என நினைத்துக்கொண்டார். அறைக்கு நடுவில் ஒரு வெற்றிலையின்மேல் எலுமிச்சம்பழம் வெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி குங்குமம் தெளிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து மணிகண்டனின் அம்மா, “நம்ம குடும்பத்துல என்னய்யா இதெல்லாம்… என்னன்னே தெரியலை. ஒரு மாசமா இப்படி அலைறான். எதாவது செய்றான். கேட்டா பூஜைன்னு சொல்லி எனக்கு தீர்த்தம் கொடுக்கறான்” என்றாள். அறையைச் சுற்றிலும் பார்த்துவிட்டு வெளியே வந்த முருகேசன், “வித்தியாசமா நடந்துக்கறானா?” என்றார். “என்னன்னு சொல்ல. நடு ராத்திரில குளிக்கறான். மொட்டை மாடிலயே இருக்கறான். என்னமோ பார்வை. என்னமோ யோசனை. தினமும் கறி வைய்யின்றான். எனக்கும் ஒண்ணும் பிடிபடலை முருகேசா. பூசாரி சேர்க்கை வேண்டாம்னா கேக்கறானில்லை” என்றாள். “ஒண்ணை வரச் சொன்னதுக்கு காரணம், நேத்து நைட் அவன் ரூம்ல இருந்து ஒரே சத்தம். நான் பயந்து போயிட்டேன். கதவை மூடி வேற வெச்சிருக்கான். தட்டினாலும் திறக்கலை. கொஞ்சம் நேரம் கழிச்சு வந்து கதவை தட்டினியான்னு கேட்டான். ஒண்ணுமே நடக்காத மாதிரி தூங்க போயிட்டான்.”
“அண்ணி, பூசாரி பிரச்சினையில்லை இது. செய்வினையாத்தான் இருக்கணும். அண்ணனுக்கும் செய்வினை வெச்சாங்க. உங்களுக்கே தெரியும். சாப்பாட்டுல முடி இருக்கு சீ தூன்னு துப்பிக்கிட்டே இருந்த அண்ணன் பண்ண ஆர்ப்பாட்டமெல்லாம் மறக்குமா?” என்றான். முருகேசனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள், “இவன் சின்ன புள்ளய்யா… கல்யாணம் குழந்த ஒண்ணும் ஆவல. இவனுக்கு யார்யா வெச்சிருப்பா?” என்றாள். “அண்ணி, உங்களுக்கே தெரியணுமே” என்றவன், “சொத்து கேஸ்ன்னு வந்தா சரி நீங்க சொல்றத கேட்டுக்கறேன்னு போனா அவ சக்களத்தியே இல்ல” என்று பொதுவாக சுவரைப் பார்த்துச் சொன்னார். மணிகண்டனின் அம்மா சமையலறைக்குள் சென்று நீரைக் குடித்துவிட்டு வெளியே வந்தாள்.
“இன்னொன்னையும் சொல்றேன். போனவாரம் ஆவட்டில இருந்து போன் வந்திச்சு. மந்திரவாதிதான் பேசினான். தகடு வெச்சிருக்காங்க, வந்து எடுக்கச் சொன்னாங்க. ஒரு வாரம் பொறுத்து உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்” என்றார்.
ணிகண்டனும் அவன் அம்மாவும் முருகேசனும் ஆவட்டிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். திருச்சிக்குப் பக்கத்தில் இப்படி ஊர் இருக்கிறதென்றும் இங்கே செய்வினை செய்வார்கள் என்றும் முருகேசன் சொன்னபோது மணிகண்டன், “யாருக்கு செய்வினை வைக்கப் போறோம்?” என்றான். என்னென்னவோ சொல்லி அவனை அழைத்து வந்தார்கள். முருகேசனின் அம்மா யோசனையாக, “செய்வினை வெச்சி அப்பாவ கொன்னவங்களுக்கு நாம செய்வின வெக்க வேண்டாமா” என்றபோது, “இத்தன வருஷம் கழிச்சி இப்ப என்ன” என்றவன், “சரி போகலாம்” என்று சொல்லிவிட்டான்.
பஸ்ஸில் வரும்போது யாருக்கோ மணிகண்டன் போன் செய்துகொண்டே இருப்பதையும் எரிச்சல் அடைவதையும் பார்த்துக்கொண்டே வந்தார் முருகேசன். “யாருக்குய்யா போனு?” என்றபோது அவன், “பூசாரிக்குத்தான். கொடைக்கு தண்ணி கேனு கேட்டிருந்தாரு. போனே எடுக்க மாட்டேங்கிறாரு” என்றான். ஜன்னல் வழியே துப்பிக்கொண்டே வந்தான். முருகேசன் திரும்பி மணிகண்டனின் அம்மாவைப் பார்த்தார். அவளது கண்களில் சொல்லமுடியாத பயம் நிறைந்திருந்தது. அவனது அப்பாவும் கடைசி காலத்தில் இப்படி துப்பிக்கொண்டே இருந்தது அவளுக்கு மனதில் ஓடியது.
வண்டியில் இருந்து கீழே இறங்கி ஆட்டோகாரர்களிடம் தயங்கி தயங்கி விசாரித்தார்கள். மணிகண்டன் அவர்களை விலக்கி முன்னேறி சத்தமாக “செய்வினை வைக்கணும். அவர் வீட்டுக்குப் போகணும்” என்றதும், ஆட்டோக்காரர் 150 ரூபாய் கேட்டார். தார்ச்சாலையிலிருந்து விலகி வறண்ட செம்மண் பாதையில் சென்றது ஆட்டோ. வழியில் ஒன்றிரண்டு வீடுகளே தென்பட்டன. ஒரு அய்யனார் கோவில் கடந்து போனது. கோவிலுக்கு முன் ஒரு சூலம் குத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒரு பூசாரி சிலைக்கு முன் கீழே மண் தரையில் துண்டை விரித்து நீண்ட கூந்தலுடன் படுத்துக் கிடந்தார். கோவிலைத் தாண்டி வலதுபக்கம் திரும்பவும் கண்ணில்பட்ட ஒரு காரைவீட்டில் ஆட்டோக்காரர் இறக்கிவிட்டார்.
வீட்டின் வெளியே நான்கைந்து சேர் போடப்பட்டிருந்தது. வயதான ஒரு பெண்ணும் ஆணும் உட்கார்ந்திருந்தார்கள். கணவன் மனைவியாக இருக்கவேண்டும் என்று தோன்றியது முருகேசனுக்கு. அவங்களுக்கு என்ன கஷ்டமோ என நினைத்துக்கொண்டாள் மணிகண்டனின் அம்மா. கைலி கட்டி இருந்த ஒருவர் வீட்டுக்குள் இருந்து வந்து அந்த இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் உள்ளே போனார்கள். இவர்கள் மூவரும் சேரில் அமர்ந்துகொண்டார்கள். மணிகண்டன் போன்  செய்துகொண்டே இருந்தான்.
உள்ளே அவர்கள் என்னவோ பேசிக்கொள்வது கேட்டது. மணிகண்டனின் அம்மா முருகேசனிடம், “இப்படியும் ஒலகம் இருக்கு பாரேன்” என்றவள், “முன்னாடியே தெரிஞ்சு அவருக்கும் செய்வினைய எடுத்திருந்தா இன்னும் உசிரோட இருந்திருப்பாரு” என்று சொல்லிச் சலித்துக்கொண்டாள். மணிகண்டன், “இதெல்லாம் உண்மைதான். பூசாரி சொன்னாரு. அவருகிட்டயே செய்வினைய எடுக்க சொல்லி இருக்கலாம்” என்றான். முருகேசன், “வெச்சவங்களே எடுத்தா வேலை ஈஸிய்யா” என்றார். மணிகண்டன், “நாமளே இதையெல்லாம் படிச்சிட்டா யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது” என்றான். அதற்குப் பிறகு அவர்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. உள்ளே போன இருவர் வெளியே வந்தார்கள். அந்தப் பெண், “கோழி இங்கயே கிடைக்குமாம், வாங்கிட்டு வந்துடலாம்” என்று தன் கணவனிடம் சொல்லிக்கொண்டு போனாள்.
கைலி கட்டி இருந்தவன் இவர்கள் மூவரையும் உள்ளே அழைத்தான். அறைக்குள் தரையில் இன்னொருவர் கைலி கட்டி அமர்ந்திருந்தார். மந்திரவாதி போலெல்லாம் இல்லை. உள்ளே அழைத்தவர்தான் அவருக்கு உதவியாளர் போல அவர் பக்கத்தில் நின்றுகொண்டார். அந்த ஆள் சாதாரணமாகத்தான் இருந்தார். குங்குமத்தை நாமம் போல பூசி இருந்தார். முகத்தில் மூக்கு மட்டுமே பிரதானமாகத் தெரியும் என்பதாலேயே மிக நீளமான கிருதாவை அவர் வைத்திருந்தார். அறையில் எதோ ஒரு அம்மனின் படம் இருந்தது. அதற்கு முன்பு குங்குமம் கொட்டி வைக்கப்பட்டு அதில் சில எலுமிச்சைகள் வைக்கப்பட்டிருந்தன. ஏகப்பட்ட யந்திரத் தகடுகள் அதில் கொட்டிக் கிடந்தன. இவர்கள் அவர் முன்னே அமர்ந்தார்கள். உதவியாளர் கட்டையான குரலில், “இவர்தான் ஆவட்டி சிவராமதாஸ சாமி. என்ன செய்யணுமோ செஞ்சிப்புடலாம். பில்லியா சூனியமா ஏவலா பொம்மையா தகடா குறளைப் பிசாசா. எதுன்னாலும் சாமிகிட்ட நின்னு கேக்கும்” என்றார். முருகேசன் பாதி புரிந்தும் புரியாமலும் திகைப்போடு “செய்வினை” என்றார். அதற்கு, “செய்வினை வெச்சா வைக்கப்பட்டவன் குடும்பத்த அது பன்னெண்டு வருஷம் ஆட்டும். என்னவேணா செய்ய வைக்கலாம். ஆளையே தூக்கணும்னாலும் தூக்குப்பிடலாம். ஆனா அதை வெச்சவனுக்கு 100 வருஷ தரித்தரம். எதிரி குடும்பம் வெளங்காம போறது ஒரு பக்கம். வெச்சவன் குடும்பமும் நாசமா போயிடும். அதுவும் 100 வருஷம். யோசிச்சுக்குங்க. அப்பறம் சாமிய கொற சொல்லக்கூடாது” என்றார். இதில் எதிலும் கவனம் இல்லாமல் மணிகண்டன் போன் செய்வதிலேயே குறியாக இருந்தான்.
முருகேசன், “செய்வினை எடுக்க வந்திருக்கோம்” என்றார். “திருச்சி கம்பரசன் பேட்டைல இருந்து வர்றோம். நேத்து சாமி போன் பண்ணி இருந்தாங்க” என்றார்.
அதுவரை அமைதியாக இருந்த சாமி, “நீங்களா? மொதல்லயே சொல்லவேண்டாமா” என்று பதற்றத்துடன் மெல்ல அவர் பக்கம் லேசாக சாய்ந்து, “ஆளு எங்க” என்றார். முருகேசன் யோசனையாக “யாரைக் கேக்கறீங்க” என்று சொல்லவும், “செய்வினைய்யா. பயங்கரமான செய்வினை. வெச்ச சாமி நானே சொல்றேனே, பலமான ஆத்மா ஏவியிருக்கு. துப்பி துப்பியே சாவான். ஆளு எங்க?” என்றார். மணிகண்டனின் அம்மா சேலைத் தலைப்பால் வாயை மூடிக்கொண்டாள். முருகேசன் சாடையாக மணிகண்டனைக் காட்டினார். அவனை அப்போதுதான் பார்ப்பது போலப் பார்த்தார் சாமி. பார்த்ததும் அவர் கண்கள் சிவக்கத் தொடங்கின. தன் முன்னே கிடந்த குங்குமத்தில் கொஞ்சம் எடுத்து மணிகண்டனைப் பார்த்து, “அப்படியே இரு. திரும்பாத. திரும்பிடாத. திரும்பிடாத” என்று கத்தினார். மணிகண்டன் சுதாரிப்பதற்குள் பக்கத்தில் நின்றிருந்த அந்த உதவியாளர் ஓடி வந்து அவனைத் திரும்பவிடாமல் பிடித்துக்கொண்டார். முருகேசனையும் மணிகண்டனின் அம்மாவையும் பார்த்து, “நீங்களும் திரும்பிடாதீங்க” என்றார். குங்குமத்தை சட்டென்று மணிகண்டனின் முகத்தில் பூசிவிட்டார். பின்னர் பெருமூச்சு விட்டுக்கொண்டு மீதி இருந்த குங்குமத்தை தன் நெற்றியில் பூசிக்கொண்டே சொன்னார், “நல்ல வேளை… நம்ம வீடு வரைக்கும் வர ஆரம்பிச்சிட்டதா” என்றார். “இனிமே பிரச்சினையில்லை. சொல்லுங்க” என்றார்.
முருகேசன் ஒன்றும் புரியாமல் விழித்து விழித்துப் பார்த்தார். “நீங்க பயந்துக்காதீங்க. நான் பாத்துக்கறேன். வீட்டுக்குள்ளயே வருதுன்னா தில்லான ஆத்மாதான்” என்றார். முருகேசனின் அம்மா நிலைகுத்திப் போன கண்களுடன் அங்கே நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார். சாமி, “ஆளு யாருன்னு சொல்லமாட்டோம். இது எங்க நியதி. வாக்கு. பொம்ம உருவம் செஞ்சி ஆள வெளிய சொல்ல மாட்டோம்னு சொல்லி சத்தியம் செஞ்சிட்டு இந்த பாவப்பட்ட தொழிலுக்கு வரச்சொல்லி என் குருநாதர் ஆணை” என்றவர், “ஓம் ஸ்ரீ குருநாதா” என்று மேலே நோக்கி கும்பிட்டுக்கொண்டார். “ஆனா விஷயத்த சொல்லிடுவோம். வெச்சவனே எடுத்தா விஷேசம். ஒரு குடும்பம் அழியறதுல எங்களுக்கென்ன… எனக்கும் பொண்ணு இருக்கு. பேரன் பேத்தி எடுக்கணும்” என்றார். “பயங்கரமான செய்வினை. என் சர்வீஸ்ல இத்தன வன்மத்த பார்த்ததில்லன்னு வெய்ங்க. துப்பி துப்பியே சாவணும்னு செய்வினை. இப்ப பின்னாடி நிக்கது யாருன்னு நினைச்சீங்க? ஒரு பிசாசாக்கும். இன்னமும் இருக்கு. பாத்துக்கிட்டே இருக்கு. ஆனா அடங்கி இருக்கு. அடக்கியிருக்கேன்.”
மணிகண்டன் சாய்ந்து வாகாக உட்கார்ந்துகொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். சாமி சொன்னார், “அந்த ஆத்மா வெறியோட இருக்கு. இவன பிடிக்க முடியல. என்னவோ இவன தடுக்குது” என்றவர் மணிகண்டன் பக்கம் திரும்பி, “தம்பி, அம்மன்கொண்டாடியோ?” என்றார். மணிகண்டன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். பதில் சொல்லவில்லை. மணிகண்டனின் அம்மா அவனைத் தட்டினாள். அவன் அசையக்கூட இல்லை. “தம்பி பயந்துபோய் இருக்கு” என்றார் உதவியாளர். “சின்னப் பையன்தானே.”
அந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு சத்தத்துடன் யாரோ உள்ளே வந்தார்கள். சாமி வேகமாக குங்குமத்தைக் கையில் எடுத்து, “யாரு யாரு” என்று கத்தினார். கொஞ்சம் நேரத்துக்கு முன்னால் வெளியே சென்ற கணவனும் மனைவியும் உள்ளே வந்தார்கள். சாமி, “நீங்களா” என்று அமைதியானார். அந்தப் பெண் இவர்களைப் பார்த்துவிட்டு தயங்கி, “சாமி, கோழி வாங்கிக் கொண்டு போய் நீங்கசொன்னாமாரி அய்யனார் கோவில் பூசாரிகிட்ட கொடுத்தோம். கோழிய எங்க கண்ணு முன்னாடிதான் அறுத்தார். ஒரு சொட்டு ரத்தம் கூட வரலை சாமி. எதோ சாமி குத்தம்ன்றாரு பூசாரி” என்றாள், சாமி, “கோழி எங்க வாங்கினீங்க” என்றார். “நீங்க சொன்ன இடத்துலதான் சாமி” என்றாள் அந்தப் பெண். சாமி எதோ யோசித்தவர், “சரி, இன்னொரு கோழி வாங்கி விடுங்க. இந்த தடவை ரத்தம் வரும். அதை பொங்கல்ல போட்டு பெசஞ்சி கொடுப்பார். நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தின்னுட்டு மீதிய நான் சொன்ன மாதிரி செஞ்சிடுங்க” என்றார். சரி சாமி என்று சொல்லிவிட்டு வெளியே போனார்கள்.
இவர்கள் மூவரையும் பார்த்து, “ஏவல் வைக்க வந்திருக்காங்க. தன் குடும்பம் நூறு வருஷம் சீரழிஞ்சாலும் பரவாயில்லைன்றா அந்தப் பொம்பளை. அத்தனை வெறி” என்றார். மணிகண்டனின் அம்மா பயத்துடன், “இதெல்லாம் நெசமாவே நடக்குமா சாமி” என்றாள். சாமி சிரித்தார். “மத்தவங்க கேக்கலாம். நீ கேக்கலாமாம்மா. ஒன் புருஷனே இப்படித்தானம்மா சித்தம் கலங்கி செத்தாரு” என்றார். மணிகண்டன் அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது சாமிக்குத் தெரிந்தது. சாமி அவன் பக்கம் திரும்பவே இல்லை.
முருகேசன், “நீங்களே எல்லாத்தையும் செஞ்சிடுங்க. பணம் செலவு ஒரு பிரச்சினையில்லை” என்றார். சாமி, “தகடை எடுக்கணும். பெரிய செலவில்லை” என்றார். மணிகண்டனின் அம்மா, “ஒரே புள்ளய்யா. அவரும் போயிட்டாரு” என்றார். சாமியின் உதவியாள் அவர்களிடம் கோழி வாங்கிக்கொண்டு அய்யனார் கோவிலுக்கு வரச் சொன்னார். “போற வழியெல்லாம் வெட்ட வெளிய்யா. காத்து கருப்புன்னு இருக்கும், ஒண்ணும் செய்யாது. இந்த எலுமிச்சம்பழத்தை வெச்சிக்கோங்க. என்ன சத்தம் கேட்டாலும் திரும்பி மட்டும் பார்க்காதீங்க” என்றார். மணிகண்டன், “நான் வரல. நான் இங்க இருக்கேன். நீங்க போயிட்டு வாங்க” என்றான். சாமி எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், “நானும் தம்பிகிட்ட கொஞ்சம் பேசணும். தம்பிய சுத்திக்கிட்டு இருக்கிற ஆத்மாவையும் கொஞ்சம் தனியா கவனிக்கணும். அஞ்சாம நீங்க போயிட்டு வாங்க. “நான் இருக்கேன். கவலையில்ல” என்றார்.
மணிகண்டனின் அம்மாவும் முருகேசனும் அரை மனதுடன் கிளம்பிப் போனார்கள். சாமியின் உதவியாள் மணிகண்டனின் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டார். சாமி, “சொல்லுப்பா” என்றார். மணிகண்டன் அமைதியாக இருந்தான். அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். சாமி தன் முன் இருந்த குங்குமத்தை எடுத்து மீண்டும் அவன் நெற்றியில் இழுத்துவிட்டு கையைக் கூப்பிக்கொண்டு எதோ முணுமுணுத்தார். கண்ணைத் திறக்கும்போது அவர் கண்கள் சிவந்திருந்தன. “வந்துட்டியா…” என்றார். சாமியின் உதவியாள் மணிகண்டனைப் பிடிக்க எத்தனித்தார். மணிகண்டன் அவரை முறைக்கவும் அவர் அப்படியே அமைதியாக இருந்துவிட்டார். சாமி உச்சமான குரலில், “என்ன வேணும்” என்றார். மணிகண்டன் அவரையே இன்னும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவரும் அவனை தீர்க்கமாகப் பார்த்தார். உதவியாள் இருவரையும் பார்த்தான். மணிகண்டன் அலட்சியமாக மெல்லப் புன்னகைத்தான். மெல்ல கேட்டான், “இப்ப வந்திச்சே ஒரு அம்மா, அவங்க வீட்டுக்கு எப்ப போகணும்?” சாமி உதவியாளனைப் பார்த்துவிட்டு “குருநாதா” என்று மனதுக்குள் உச்சரித்துக்கொண்டு அவனைப் பார்த்தார். மெல்ல புன்னகைத்தார்.
ணிகண்டன் வண்டியை எடுத்துக்கொண்டு, மதுரகாளியம்மன் கோவிலுக்குப் பின்புறமுள்ள ஒத்தயடிப் பாதை வழியாகச் சென்றான். மதுரகாளியம்மன்  கோவிலைப் பார்த்து நான்கைந்து முறை வணங்கினான். அந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில் கூரை போட்ட வீடு இருந்தது. வண்டியில் இருந்தபடியே ஹார்ன் அடித்தான். பதினெட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் எட்டிப் பார்த்தாள். பார்த்ததும் தலையை வெடுக்கென்று உள்ளே இழுத்துக்கொண்டாள். அவன் மீண்டும் ஹாரன் அடித்தான். நான்கைந்து முறை அடிக்கவும் அவள் மெல்ல வெளியே வந்தாள். பாவாடை சட்டை போட்டுக்கொண்டு தலை கலைந்து கிடக்க திக்கி திக்கி நின்றவளை தன் கைக்குள் அடக்கிக்கொண்டு விடலாம் என நினைத்துக்கொண்டான் முருகேசன். அவளது கரிய நிறம் அவனை அப்பிக்கொண்டு சில நாள்களாகவே போகவே இல்லை. லேசாகப் புடைத்திருந்த அவளது சின்ன முலை அவனை இரவுகளில் உறங்கவிடாமல் அலைக்கழித்துக்கொண்டிருந்தது. “ஏன் அப்படியே அங்கயே நிக்கற?” என்றான். “பூசாரி பக்கத்து ஊர் கொடைக்குப் போயிருக்கு” என்று சொன்னாள். “ஒங்கப்பா பூசாரின்னும் தெரியும், கொடைக்கு போயிருக்குன்னும் தெரியும், அவர் இல்லாதப்ப நான் இங்க வருவேன்னு அவருக்கும் தெரியும், ஒனக்கும் தெரியும்” என்று சொல்லிவிட்டு, வண்டி கண்ணாடியில் தன்  முகத்தைப் பார்த்து தலைமுடியை நீவி விட்டுக்கொண்டான். “சேலை உடுத்தறது இல்லயா?” என்றான். “எனக்கு சேலை உடுத்த தெரியாது” என்று அவள் சொன்னதும், மெல்ல சிரித்தான். “சீக்கிரம் படிச்சிக்கோ” என்றவன், என்னவோ யோசித்து மீண்டும் சிரித்தான். பின்பு, “சரி, பூசாரி வந்தா சொல்லு, மருமகப்பய இப்படி வந்துட்டுப் போனான்னு” என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனான். அவளது உருவம் பைக் கண்ணாடியில் மறையும்வரை கண்ணாடியையே பார்த்துக்கொண்டிருந்தான்.
 

One Reply to “சீடன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.