கடல்‌ மத்துகள்

whale_shamu_environment_sea_ocean_large_mammals_whiote_great_fish

உங்கள் வீட்டில் பூனை இருக்கிறதா? அப்படியெனில் உங்கள் தோட்டத்தில் நிறைய பூப்பூக்கும். கண்ணாடியைத் திருப்பினா எப்படி ஜீவ ஆட்டோஓடும் என்று நீங்கள் கேட்கலாம். இது ஒன்றும் சகுனமோ, ஜாதகக் கணிப்போ இல்லை. அறிவியல் உண்மை. இன்னமும் நம்பிக்கை இல்லையெனில் இதைச் சொன்னவர் யாரென்று சொல்கிறேன் அப்புறமாவது நம்புகிறீர்களா என்று பார்ப்போம்.

பரிணாமவியலின் தந்தை எனப் போற்றப்படுகிற சார்லஸ் டார்வின். அவரின் கவனிப்பு என்னவெனில் உங்கள் வீட்டுப் பூனை, எலிகளைக் கட்டுக்குள்வைத்திருக்கும். எலிகள் போன்ற கொரித்துண்ணிகள் (rodents) மகரந்தச் சேர்க்கை செய்கிற பூச்சி மற்றும் வண்டுகளின் கூட்டை கலைப்பவை. அப்படி எலிகளின் எண்ணிக்கைகட்டுக்குள் இருக்கிறதெனில் நிறைய மகரந்தச் சேர்க்கை நடக்கும். நிறைய மகரந்தச் சேர்க்கைநிறைய செடிகளை, நிறைய பூக்களை உருவாக்கும். இங்கிலாந்து ஒரு படிமேலே போய், வீட்டில் பூனை வளர்த்தால்நாட்டின் வளமான ராணுவத்திற்கு அவசியம் என நம்பினார்கள். இது நிச்சயம் மறை கழண்ட கேஸ்தான் என்று நினைத்தால் கொஞ்சம் மேலே படித்து விடுங்கள். அவர்கள் தரப்பு வாதம், இப்படி நிறைய தேனீக்களால்நிறைய செடிகளும், புல்லும் முளைக்கும் அதைத்தின்று கால்நடைகள் கொழுத்து வளரும். அப்போது அவைகளின் இறைச்சியை ராணுவத்திற்குக் கொடுத்தால் அவர்கள் தெம்பாக இருப்பார்கள் என்பதுதான்.

இது உணவுச் சங்கிலிதான். ஆனால் இந்தச் சங்கிலியில் சில உயிரிகள்தான் கடையாணி. அவைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் வருகையில் அந்த ஒட்டுமொத்த சூழ்மண்டலமும் ecosystem குடைசாயும். இந்த மாதிரி உயிரிகள் எல்லா சூழ்மண்டலத்திற்கும்உண்டு. பெரும்பான்மையாக அந்த உணவுச் சங்கிலியின் முடிவாகஇருக்கும்மாமிச பட்சிணிதான் apex predator இருக்கும். இப்படிப்பட்டஅச்சாணிஉயிரிகளை ஆங்கிலத்தில்‌ keystone species என்கிறார்கள். இப்படி உணவுச் சங்கிலியின் ஒரு உயிரியின் எண்ணிக்கை மாற்றம் அந்தச் சூழ்மண்டலத்தின் அடிமடியிலேயே கைவைப்பதை trophic cascading என்கிறார்கள். Troph என்னும்சொல் உணவைக் குறிக்கும்.

ஆனால் இந்த மனிதன் ஒரு மோசமான விலங்கினம். தன்போக்கில் அழகாய் தும்பிபோலபறந்துகொண்டிருக்கும்சூழ்மண்டலத்தை, வாலில் கயிறுகட்டி இழுத்து இம்சை செய்வான். எங்கெல்லாம் சூழ்மண்டலம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் மனிதனின் தலையீடு நிச்சயமாக இருக்கிறது. வெறுமனே ஒரு உயிரியாக நம்மை இந்தப் பிரபஞ்சத்தில் வெறுமே ஒரு உயிரியாய் பொருத்திப்பார்த்தால் நாம் புகுந்த சூழ்மண்டலம் அமீனா புகுந்த வீடாய்த்தான் இருந்திருக்கிறது.

அப்படி ஒரு முக்கியமான சிக்கல் இந்த புவி வெப்பமயமாதல். கார்பன் உபயோகத்தைக் carbon footprint குறையுங்கள். புவியைப் பாதுகாக்க வேண்டும். ஆர்ட்டிக் பனி உருகுகிறதுஎன்றெல்லாம் அபாய சங்குகள் எல்லா திசையில்இருந்தும் ஊதப்படுகின்றன. வளர்ந்த நாடுகள் பிற நாடுகளை அடக்கிவைக்க கிளப்பிவிடும் வெற்றுக்கூச்சல் எனவும்சில குரல்கள் கேட்கின்றன. ஆனால் இது நடந்துகொண்டிருப்பது நிதர்சனம். இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் பரப்பளவுள்ள ஒரு பெரும் பனிப்பாறை கரைந்து காணாமல் போயிருக்கிறது. வாகன, தொழிற்சாலை‌‌ மாசு இதெல்லாம் காரணமாய் சொன்னாலும்‌, சூழ்மண்டலம் விஞ்ஞானிகள் இன்னொரு காரணத்தை முன்வைக்கிறார்கள். அது திமிங்கிலவேட்டை.

திமிங்கிலங்கள் தங்கள் மாமிசத்திற்காக வேட்டையாடப்படுகின்றன. குறைந்தது மூன்று நான்கு டன் இருக்கும் ஒரு திமிங்கிலத்தைப் பிடித்தால் நல்ல சுவையான தரமான மாமிசம். வெப்ப இரத்தப்பிராணி மற்றும் செவுள்கள் இன்றி நுரையீரலால் சுவாசிக்கும் பிராணியாதலால் மூச்சு இழுத்துக்கொள்ள முக்கால் மணிநேரத்திற்கு ஒருமுறை கடற்பரப்பிற்கு வந்தாக வேண்டும். ஆக எளிதில் வேட்டையாடப்படுகிற நிலை அவற்றிற்கு. சர்வதேசக் கடற் பரப்பில் உணவிற்காக திமிங்கிலங்களை வேட்டையாட தடை இருப்பதால், திமிங்கில வேட்டையில் முதலிடம் வகிக்கும் ஜப்பான் ஆராய்ச்சி என்று பெயரிட்ட கப்பல்களில்தெற்குக் கடல்களில் திமிங்கில வேட்டையாடுகிறது. சிறிய மீன்களைத் தின்றுவிடும் இவற்றைக் கொல்வதால் நமக்கு மீன்கள் நிறையக் கிடைக்கும் என சப்பைக் கட்டு கட்டுகிறது.

ஆனால் நடந்ததென்னவோ மீன்கள் எண்ணிக்கை குறைந்துபோனதுதான். ஜப்பானியர்களின் கூற்று மேலோட்டமாக சரியாகவே பட்டாலும் ஏன் நடைமுறையில் அப்படி இல்லை. வாருங்கள் கொஞ்சம் கடலில் குதிக்கலாம். உன் கட்டுரை படிக்க வந்ததுக்குகடல்லல்லாம் குதிக்கணுமா என்று அங்கலாய்ப்பது கேட்கிறது.

கடல் ஒருமிகப்பெரும் சூழ்மண்டலம். நிலத்தில் தாவரங்களைப் போல் கடற்பரப்பில் சூரிய ஒளியைக் கொண்டு ஒளிச்சேர்க்கை நடத்தும் நீர்வாழிகளிள் phytoplanktons,இவற்றில்பாசிகளும், சில பச்சையம் கொண்ட பாக்டீரியாவும் அடக்கம்.  அவற்றை உண்ணும் நீர்வாழிகள் zooplankton, அவற்றை உண்ணும் சிறுமீன்கள், பின் நடுத்தர அளவுடைய மீன்கள், பின் அந்த சுறா, திமிங்கிலம், டால்ஃபின் போன்றவை. கடலைப் பொறுத்தவரை இந்த திமிங்கிலம்தான் keystone species. ஒரு திமிங்கிலத்தால் சுமார் அரை கிமீ ஆழம் வரை போகமுடியும். அவர் உணவு உண்பதெல்லாம் சுமார் நூறு இருநூறு மீட்டர் ஆழத்தில்தான். பகாசுரன் மாதிரி வாயை பே என்று திறந்து பின்னர் உணவை வடிகட்டிவிட்டு மீதிநீரை வெளியேற்றிவிடும். உண்பதெல்லாம் இப்படி ஆழத்தில் என்றாலும் கழிவுகளை அவை நீர்மட்டத்திற்கு அருகேயே சூரிய ஒளி புகும் இடங்களிலேயே photic zone வெளியேற்றுகின்றன. கடலின் ஆழத்தின் இருக்கும் சத்துக்களை இவை கடற்பரப்பிற்குக் கொண்டுவருகின்றன. இந்தக் கழிவுகள் இரும்பு மற்றும் நைட்ரஜன் நிறைந்தவை. இவை phytoplankton வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை. இதிலிருந்து சத்துகளை உறிஞ்சிக்கொண்டு அந்த நீர்வாழிகள் சூரிய ஒளியின் உதவியோடு ஒளிச்சேர்க்கை நிகழ்த்துகின்றன. திமிங்கிலங்களின் இந்தச் செயல் phytoplanktons பெருகக்காரணமாய் இருக்கிறது. அது அப்படியே சங்கிலித் தொடர்போல் zooplankton, மீன் இனங்கள் என எல்லாவற்றின்‌‌ எண்ணிக்கையும் அதிகமாகிறது. ஆக திமிங்கிலங்கள் மீன்களை உண்பதால் மீன்வளத்தை பல்கிப் பெருகச் செய்கின்றன.

இன்னொரு முக்கியமான நிகழ்வு இதில்என்னவெனில் ஒளிச்சேர்க்கை நடைபெறத் தேவையான கரியமில வாயுவைஇவை காற்றில் இருந்து பிடித்துவைத்துக்கொள்கின்றன. இதனால் பசுமைக் குடில் வாயுக்கள் அளவில் குறைகின்றன. ஒவ்வொரு முக்கால் மணி நேரத்திற்கும் அவை நீர்ப்பரப்பிற்கு வந்துபோவதால் ஒரு மத்துபோல் நீரைக் கலக்கி கீழிருக்கும் பாசிவகைகளை மேலே கொண்டுவந்து விடுகின்றன. பரப்பிற்கு வந்து எம்பி பொத் பொத் என்று என்று நீரில்விழும் திமிங்கிலங்களின் செயலை breaching of whale என்கிறார்கள். இப்படித்தான் திமிங்கிலங்கள் நீர் மட்டுமல்ல, நிலச் சூழ்மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆர்ட்டிக் அண்டார்டிக் என்று உலகின் அத்தனை சமுத்திரங்களிலும் நீக்கமற் நிறைந்திருக்கும் திமிங்கில வகைகள் இந்த புவி வெப்பமடைதலைத் தடுக்க தம்மாலானதைச் செய்துகொண்டிருக்கின்றன. நாம் பட்டப்பகலில் ஆபிஸில் எரியும் விளக்கையாவது அணைத்து வைப்போம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.