கார்ட்டூன் சினிமா என்றால் எலியும் பூனையும் துரத்திக் கொண்டிருக்கும் படங்கள் என்றோ, தூங்கும் ராஜகுமாரியை ஒரு ராஜகுமாரன் எழுப்பி மணம் புரியும் கதை என்றோ நினைத்துக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது. இன்று எந்தத் துறையும் நூறு உள்பிரிவுகளைக் கொண்டு விளங்குகிறது. சில சமயம் ஒரு சிறு உப துறை மையத்தில் வீற்றிருக்கும் துறையை செல்லாக் காசாக ஆக்கி விட்டு, தான் அரியணை ஏறி விடுகிறது. இது இலக்கியம் சினிமா இசை என்று பல துறைகளிலும் காணப்படும் காலத்தை ஒட்டிய மாறுதல்.
முன்பு சினிமாவில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சினிமாவாகக் கருதப்பட்ட வரைபடக் கோர்வையால் ஆன சினிமாக்கள் இன்று உலகப் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் பிரும்மாண்ட பட்ஜெட்களோடு வணிகப் பொருட்களாகவே மாறி விட்டன. பிக்ஸார் நிறுவனமாகட்டும், ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம் ஒர்க்ஸாகட்டும், அவரே இன்று பங்கெடுக்கும் ஆம்ப்லின் பார்ட்னர்ஸ் நிறுவனமாகட்டும், கடந்த பத்தாண்டுகளில், உலகளவில் பெருநிதி திரட்டும் படங்களில் பலவும் ஓவியத் தொகுப்புகள் மூலம் சினிமாவானவைதான். அவற்றை நாம் இன்று கார்ட்டூன் என்று அழைப்பதில்லை, அனிமே என்று அறிகிறோம். அது அனிமேஷன் (உயிரூட்டப்பட்ட வஸ்து என்று பொருள்) என்பதன் சுருக்கம், அல்லது ஜப்பானிய மொழியாக்கச் சுருக்கம் என்று வைத்துக் கொள்ளலாம்.
இந்த அனிமேஷன் படங்களைத் துவக்க வருடங்களில் அதிகம் கொடுத்தவர்கள் அமெரிக்கர்கள், குறிப்பாகச் சுண்டெலியை உலகக் கதாநாயகர்களுக்கு ஒப்பான பாத்திரமாக்கி வெற்றி கண்ட வால்ட் டிஸ்னி என்பவர். சம காலத்திலேயே வார்னர் பிரதர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்துக்காக, லியான் ஷ்லைஸிங்கர் என்பவர் தயாரித்து, மெல் ப்ளாங்க் என்னும் பின்னணிக் குரல் கொடுக்கும் அற்புதக் கலைஞரின் பலகுரல் ஸிம்ஃபனியில் வெளிவந்த ‘பக்ஸ் பன்னி’ எனப்பட்ட அதி புத்திசாலி முயல் பாத்திரத்தை நாம் இன்றும் உலகெங்கும் தொலைக் காட்சி மூலம் பார்க்கிறோம். உலகின் பல நாடுகளிலும் இத்தகைய படங்கள் தயாரிக்கப்பட்டாலும், சந்தையில் பெரும் இடத்தைப் பிடித்தவை அமெரிக்கப் படங்களே.
ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் அனிமே படங்களுக்கான உலகச் சந்தையைப் பெரிதும் மாற்றி அமைத்தவர்கள் ஜப்பானியர்கள். ஜப்பானியர்களில் பலர் அனிமே படங்களை உருவாக்குவதில் பெரும் கலைஞர்களாக, வல்லுநர்களாக அறியப்பட்டாலும் அவர்களில் தலையாயதொரு கலைஞராக, இயக்குநராக, சகல கலா வல்லுநராக அறியப்பட்டவர் ஹயாவ் மியாசகி என்பவர். துவக்கத்தில் சிறுவர்களுக்காக சிறுவர்களை மையப் பாத்திரங்களாக வைத்துப் படங்கள் தயாரித்தவர் படிப்படியாக பலவித சமூகக் கதைகளை இந்த வடிவில் தயாரித்திருக்கிறார். இவர் இயக்கி, படம் வரைந்து, கதை எழுதி இன்னும் வேறென்னவோ வேலைகளை எல்லாம் தானே செய்து உருவாக்கிய படங்கள் என்னவோ 10 அல்லது 11தான் இருக்கும். ஒவ்வொரு படத்துக்கும் பல வருடங்கள் வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். இவருடைய உழைப்பாலும், வணிக வெற்றியாலும் கட்டப்பட்ட ஒரு நிறுவனம் ஸ்டூடியோ ஜிப்ரி எனப்படும் Studio Ghibli. இன்று உலகில் பல கோடிச் சிறுவர்கள், இளைஞர்களுக்கு மிக அணுக்கமான ஒரு திரைப்பட நிறுவனம் இது. இவருடைய தயாரிப்பில் உருவான சில படங்களாக, ‘ஸ்பிரிடட் அவே’, ‘மை நெய்பர் டோடரோ’, ‘கீகிஸ் டெலிவரி சர்வீஸஸ்’, ‘லாபுடா: காஸ்ல் இன் தி ஸ்கை’, ’ப்ரின்ஸஸ் மோனநோகே’, ‘நாஸிகா ஆஃப் த வாலி ஆஃப் த விண்ட்’ ஆகியன பெரும் புகழ் பெற்ற படங்கள்.
இங்கு ஹயாவ் மியாசகி என்னும் அற்புதக் கலைஞரின் கலைத்திறன் பற்றிய ஒரு சிறு காணொளியைத் தருகிறோம். இதன் பெயர் மியாசகிக்குப் பெருமை சேர்க்கும் பெயர்.
மனிதத்தின் சாரம் என்ற பெயர் கொண்ட காணொளிப்படம் இது:
மேலும் சில சுட்டிகள்:
ஸ்டூடியோ ஜிப்ரி பற்றிய பல சுவையான தகவல்களுக்கு இங்கே செல்லவும்: http://en.rocketnews24.com/2013/12/31/how-to-properly-pronounce-ghibli-and-other-fun-trivia-about-the-legendary-animation-studio/
[மேலே உள்ளது டிசம்பர் 3 ஆம் தேதி செய்யப்பட்ட சில திருத்தங்களோடு உள்ள பிரதி.]