வாசகர் மறுவினை

உலக வரலாறு, ஆறு கோப்பைகள் வழியாக..

நல்ல அறிமுகம். சுவாரசியமான கோணம். புதிய ருசியைத் தேடும் மானுட இச்சைக்கும் வரலாற்றுக்கும் இருக்கும் தொடர்பு ஆச்சரியமானதுதான். எங்கள் குடும்ப வரலாற்றிலேயே இப்படி சில மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். மீன்குழம்பு மீது விருப்பம் கொண்ட ஒரு மூத்த பாட்டி, அதை தனக்கு தினமும் வைத்துக்கொடுத்த ஒரு குடும்பத்துக்கு தன் பெயரில் இருந்த வீட்டையே எழுதிக் கொடுத்த கதையைக் கேட்டிருக்கிறேன். அதுபோலவே வீட்டுப் பத்திரத்தை கள்ளுக்கடைக்காரரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு, உயிருள்ள வரைக்கும் நிறைவாக குடித்து மாண்டுபோன ஒரு பெரிய தாத்தாவும் உண்டு. இது ஒரு குடும்பத்தில் நடக்கும் கதை என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தேன். குடும்பம்குடும்பாக இப்படி ருசிக்கு அடிமையாகும்போது அது அந்தச் சமூகத்தின் வரலாறாகவும் மாறிவிடும் கோணத்தை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஓப்பியம் அருந்திய சீனர்களின் கதையையும் இத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. கி.ரா. வின் ஒரு பழைய கட்டுரையில் ஒரு வெளியூர்க்காரன் தேயிலைத்தண்ணீரை தன் ஊருக்குக் கொண்டுவந்து அறிமுகப்படுத்திய சம்பவத்தை எழுதியிருக்கிறார். அதைப் படித்த ஞாபகம் வருகிறது. இரவு நேரத்தில் அந்தத் தேநீரைக் குடித்துவிட்டு இரவெல்லாம் உறக்கமின்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள் ஊர்க்காரர்கள். முதலில் சிறிது காலம் இலவசமாகவே தேயிலையைக் கொண்டு வந்து கொடுக்கும் ஆள், ஒரு கட்டத்தில் பணம் கேட்கத் தொடங்குகிறான். அதற்குள் அந்த ருசிக்கும் பானத்துக்கும் அடிமையாகிவிடும் மக்களுக்கு அதை பணம் கொடுத்து வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. சுரேஷ் சொல்வதுபோல யவனமதுவை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டு ஒரு வரலாற்றை எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நல்ல கட்டுரை.
அன்புடன்
பாவண்ணன்.

~oOo~

காவிரியிலிருந்து கங்கை வரை – மோட்டார் சைக்கிள் பயணம்

மயிலாடுதுறை பிரபு அவர்களின் ஆற்றொழுக்கு நடையும், இலக்கிய புலமையும் சிறப்பாக உள்ளது. இப்படியொரு பயண கட்டுரைப் படிப்பது மிகவும் பத்துணர்வு தருகிறது
சொ பிரபாகரன்

~oOo~

தடயவியல் விஞ்ஞானம் – பாலிமரேஸ் செயின் ரியாக்ஸன் (PCR)

அருமை. பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன் போன்ற சொல்லுவதில் உள்ள பெரும் சிக்கலை எளிதாக கடந்திருக்கிறார். ஆசிரியருக்கு பாராட்டுக்கள். எளிமை என்பதற்காக , அவர் தாவிச் சென்றுவிடவில்லை. ஒவ்வொரு படிமுறையையும் விளக்க சிரமம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இது போன்ற செயல் முறைகள் புதியன. முதலில் இரட்டித்தல், என்ஸைம்களின் வேலை, டி.என்.ஏவிலுள்ள புரதம்/ அமினோ அமிலங்கள் போன்றவற்றைச் சொல்லி, அதன்பின் நுழையும் வேலையல்ல இது. எனவே, டி.என்.ஏ வடிவம், அமினோ அமிலங்கள் குறித்த சிறு முன்னறிவு இருப்பின் எளிதில் புரியும் கட்டுரை இது.
இத்தோடு தொடர்புடைய உசாத்துணைகள், படிக்க வேண்டிய, பரிந்துரைக்ககூடிய கட்டுரைகளையும் ஒரு பட்டியல் கொடுத்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.
மிக்க நன்றி.
அன்புடன்
சுதாகர் கஸ்தூரி

~oOo~

அத்திப் பழமும் கூட்டுவாழ்வும்

எத்தனை அதிசயமான ஒரு உண்மை! படைத்தவனைப் புகழுவதா? அல்லது அது இப்படி இப்படி நிகழ்கிறது என்று கண்டுபிடித்த மனிதனைப் புகழுவதா?
இந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டாம் என்று எங்கள் மருத்துவர் கூறினார் – பூச்சி இருக்கும் என்பது தான் காரணம். ஆனால் பூச்சி புரதமாகிவிடும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே! கடைகளில் நாம் வாங்கும் பழங்கள் உருவாக மகரந்தச் சேர்க்கை தேவையில்லை என்றும் சொல்லியிருக்கிறீர்கள். இந்த பழத்தை சாப்பிடும் வழக்கம் இல்லை. அதனால் ரொம்பவும் யோசிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
மிகத் தெளிவாக எளிமையான தமிழில் எழுதியிருக்கிறீர்கள். ஒரு நல்ல கட்டுரையைப் படித்து நிறைய விஷயங்களை அறிந்துகொண்ட திருப்தி ஏற்படுகிறது.
பாராட்டுக்கள்!
ரஞ்சனி நாராயணன்

~oOo~

ஸ்விட்சர்லாந்து : ஸ்வர்க்கத்தில் சில வருடங்கள்

வெறும் பணி சம்பந்தமான அனுபவம் பற்றி மட்டுமோ அல்லது சுற்றுலாவில் பார்த்த விஷயங்களைப்பற்றி மட்டுமோ எழுதாமல், பலமுனைகளில் இருந்து ஸிவிட்ஜெர்லாந்தை பார்த்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் என் பயணங்களின்போது அங்கே நான் கவனித்ததில் இருந்து இம்மி பிசகாமல் இருந்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது.
ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா தனது பல படங்களை இன்டர்லாக்கன் ஊரைச்சுற்றி எடுத்து அந்தப் பகுதியை பிரபலப்படுத்தி இருப்பதால், இப்போதெல்லாம் அங்கே இந்திய சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஆனால் ஜெனீவாவில் உள்ள செர்னில் Large Hadron Collider பற்றி மிக அழகாக அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம், பெர்ன் நகரில் இருக்கும் ஐன்ஸ்டைனின் வீடு (இப்போது அதுவும் ஒரு அருங்காட்சியகம்) முதலிய இடங்களுக்கு சென்றபோது மருந்துக்கு கூட இந்திய முகங்களை காண முடியவில்லை. சொல்வனம் கட்டுரையாசிரியர்கள் ரவி நடராஜன், பாஸ்கர் லக்ஷ்மணன் முதலியவர்கள் என்ன நினைப்பார்களோ, எனக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. இயக்குனர் ஷங்கரை பார்த்தால் LHC, சார்பியல் தத்துவம் பற்றி ஒன்றிரண்டு திரைபடங்களை கதாநாயகியும்/நாயகனும் செர்ன், பெர்ன் நகரங்களில் பாட்டுப்பாடி டான்ஸ் ஆடும்படி காட்சிகள் வைத்து எடுக்கச்சொல்ல வேண்டும்!! யாஷ் சோப்ராவுக்கு கொடுத்தது போல் ஷங்கருக்கும் “சுவிட்ஸர்லாந்தின் கௌரவ தூதுவர்” பட்டத்தை அவர்கள் கொடுக்கிறார்களோ இல்லையோ, சுற்றுலாவும் அறிவியலும் நிச்சயம் சேர்ந்து வளரும். 🙂
சுந்தர் வேதாந்தம்

~oOo~

வருகைக்கு நன்றி. உண்மைதான் – நமது சினிமாக்காரர்கள் இண்டர்லாக்கன் பகுதியில் அடிக்கடி கொட்டகைபோட்டு, இந்திய டூரிஸ்ட்டுகளிடையே அதனைப் பாப்புலர் ஆக்கிவிட்டார்கள்! யஷ் ச்சோப்ராவுக்குக் கிடைத்ததுபோல் ஷங்கருக்கும் `ஹானரரி கான்ஸல் ஜெனரல்`பட்டத்தை ஸ்விஸ்க்காரர்கள் கொடுக்கக்கூடும் என நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஸ்வாரஸ்யம்.
பெர்ன் பற்றி, செர்ன் பற்றி கொஞ்சம் எழுதியிருக்கலாம். கட்டுரை வெகுவாக நீண்டுவிட்டதால், படிப்பவர்கள் மலைத்துவிடக்கூடாதே எனக் கருதி நீளத்தை இரண்டு, மூன்று பக்க அளவில் குறைக்க நேர்ந்தது. சில விஷயங்களை விட்டுவிடும்படி ஆயிற்று. என்ன செய்வது?
ஏகாந்தன்

~oOo~

உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா

சோமாலியா என்றால் குச்சி குச்சியாக கையும் காலுமாக கண்களில் உயிரை வைத்துக்கொண்டு பசித்த வயிற்றுடன் இருக்கும் குழந்தைகள் தான் நினைவிற்கு வருகிறார்கள். எங்கள் வீட்டில் இருக்கும் ஒல்லியான குழந்தைகளை சோமாலியா குழந்தைகள் என்று கேலி செய்வோம்.
சோமாலியாவைப் பற்றிய வேறுவிதமான எண்ணங்களை/தகவல்களை உங்கள் எழுத்துக்களின் மூலம் தெரிய வைத்துள்ளீர்கள். பாவம் அந்தப் பெண்கள். உலகத்தின் எல்லா மூலைகளிலும் பெண்கள் படும்பாடு மனதை தொடுகிறது.
ஆப்பரிக்க நாடுகள் என்றால் காடுகள், சிங்கம், புலி இவைகளும் நினைவிற்கு வருகின்றன. இங்குள்ள காடுகளில் நீங்கள் சஃபாரி போகவில்லையா?
நாளைப்பாடு நாராயணன் என்றுதான் அவர்களுமிருக்கிறார்கள்!
சுவாரஸ்யமான கட்டுரை. பாராட்டுக்கள்!
ரஞ்சனி நாராயணன்

~oOo~

வருகைக்கு நன்றி.
சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் என உலகெங்கும் அலையும் நிறுவனங்கள் பணபலம் பொருந்தியவை. ஆப்பிரிக்கா போன்ற ஏழ்மையும் பிரச்சினைகளும் நிறைந்த பிரதேசங்களில், சேவை என்கிற பெயரில் அவர்கள் ஏதேதொ செய்துவருகிறார்கள். அவர்களுக்கு ஏழைகளை ஏழைகளாகக் காண்பித்தால் போதாது. அவர்களை விழிபிதுங்கியவர்களாக, வயிறு ஒட்டியவர்களாக, வியாதிக்காரார்களாக, கையில் எப்போதும் திருவோடு தாங்கியவர்களாகவே காட்டவேண்டும். அதில் தான் அவர்களுக்கு பரமதிருப்தி. அப்போதுதான் பெருநாடுகளிலிருந்து அவர்களுக்கு, அவர்கள் செய்யும் அரியசேவைக்கெனப் பணம் கொட்டும். இப்படி எல்லாவற்றிலும் பூடகமாக அரசியல் இருக்கிறது. அத்தகைய அரசியல் சில அதீத பிம்பங்களைத் தோற்றுவித்தல் அவசியமும் ஆகிறது.
நான் பார்த்த சோமாலியாவும் ஏழை நாடுதான். ஆனால் ஐ.நா. காண்பிக்கிற மாதிரியான அரதக்கந்தல் இல்லை. அந்த நாட்டு மனிதரோடு சேர்ந்து சில காலம் வாழநேர்ந்ததால், அவர்களது எளிமையான குணங்களை, கஷ்டங்களுக்குள்ளும் ஒளிரும் நேர்மையை, நட்பினை அனுபவித்திருக்கிறேன். கடுமையான சூழலிலும், பெண்களின் தளரா உழைப்பைக் கண்டு நெகிழ்ந்துள்ளேன். நான் கண்ட எளிய வாழ்க்கைச்சித்திரத்தின் சிறு, சிறு பகுதிகளையே பகிர்ந்துள்ளேன்.
கென்யா, டான்ஸனியா, தென்னாப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதைப்போன்ற சுற்றுலா அமைச்சகமோ, தனியார் சுற்றுலா நிறுவனங்களோ, டேக்ஸி/பஸ் சர்வீஸ்களோ அங்கில்லை. There were no organized safaris in Somalia. காடுகளுக்குள் செல்ல சாலைகளுமில்லை! பர்ரேயின் ராணுவ அரசாங்கம் வெளிநாட்டினர்மீது ஒரு சந்தேகக்கண்ணை எப்போதும் வைத்திருந்தது! (வண்டி கையில இருக்குன்னு எங்கேடா சுத்திட்டு வர்றீங்க!)
ஏகாந்தன்

~oOo~

அகதிக் கடத்தல்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, நான் கிழக்கு ஆப்ரிக்காவின் அடிஸ் அபாபாவில் வாழ்ந்த போது இந்த இடைத்தரகர்களின் கொடுமையை நேரடியாக பார்த்திருக்கிறேன்.
ஈழத் தமிழர்களை ஆசைக்காட்டி பெரும்பணத்தை பறித்து, கொண்டு வந்து எங்கையாவது விட்டுவிட்டு, திரும்பி போகும் பயணச்சீட்டை வாங்கி கொண்டு போய்விடுவது. இடைத்தரகர்களும் தமிழர்கள்தான்; சிங்கபூர் அல்லது மலேசியாவிலிருந்து இந்த மாபியா வேலை செய்வது.
பத்து குடும்பங்கள் பட்ட அல்லல் வாழ்நாளில் மறக்க முடியாது.
முடிந்த உதவிகள் செய்தோம்.
நாஞ்சில் பீட்டர்

~oOo~

வியாழன் இரவு

பள்ளிக்குழந்தைகள் பேச்சுப்போட்டியில் மனனம் செய்துவந்தததை ஒப்புவிப்பார்கள். அவர்களுக்கு தாங்களாகவே சிந்தித்த கருத்துக்களை வைத்துப்பேசும் எண்ண வலிமை வளர்ச்சியடையாத வயது ஆதலால். மடமடவென மூச்சுவிடாமல் சொற்றொடர்கள் விழும். பேச்சுப்போட்டி என்ற பெயரில் ஒப்புவித்தல் போட்டி. இதுதான் என் நினைவுக்கு வந்தது இக்கதையைப் படித்த போதும், முடித்த போதும். சிறுகதை எழுதுவது தொடக்க‌ காலத்தில் முதலில் இந்நடையே கையாளப்படுத்தப்பட்டது. முதலில் நாம் மாட்டுவண்டியில்தானே போனோம்?. ஆசிரியர் சுலபமான வழியைக் கண்டு சோம்பேறித்தனமான தமிழில் படைத்துவிட்டார். மாட்டுவண்டியை விட மாட்டார் போலும்!
கதை வெளிநாட்டில் வாழும் தென்னிந்திய இளைஞர்களைப் பற்றியது. இந்தியாவிலும் பிறமாநிலங்களில் வாழும் ஒரே மாநிலத்தைச்சேர்ந்த அல்லது அண்டை மாநிலத்தைச்சேர்ந்த இளைஞர்கள் கூட்டாக அறையில் வாழும்போது என்ன செய்வார்கள்? விபச்சாரிகளைப் பற்றியும் அனுபவத்தைப்ப்ற்றியும் கிண்டல் செய்துகொள்வார்கள். இடையிடையே மதுவும் அருந்திக்கொண்டு. விடுமுறை நாட்களில் ஊர் மேய்வார்கள். அவர்களுக்குள் இருந்து தொல்லைதரும் நினைவுகளுக்கு ஒரு ஆன்டிடோட். தெரிந்ததே.
தெரிந்த கதையைத் தெரிய இங்கே ஒரு கதை. கதை இதைத்தாண்டி எங்கும்போகவில்லை. அப்படியும் கதை இருக்கலாம். அதாவது நன்கு தெரிந்த பொருளையும் கதைக்கலாம். ஆனால் அங்கு ஏதாவது ஒரு புதுச்சுவையை உருவாக்க வேண்டும். மேலோட்டமாக; அல்லது கீழோட்டமாக. காணாத ஒன்றைக் கண்ட உணர்வைத்தரவேண்டுமே? இங்கு ஒன்றுமே இல்லை. கடினமாக எப்படியோ படித்து முடித்துவிட்டேன்.
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் – மலையாளச் சொற்கள்.. தொடக்கத்திலிருந்து கடைசி இரு பத்திகளுக்கு முன்புவரை மலையாளத்தின் ஆதிக்கம் எதார்த்தம் என்ற பேரில் பேயாட்டமாடுகிறது. நான் இப்படி பிறமொழி உரையாடல்கள், பேச்சுக்கள் ஊடே செல்லும் சிறுகதைகள்; நாவல்களைப்படிதததுண்டு இதைக்கையாள்வோர் அதில் தொய்வில்லாமலும் எரிச்சலைக் கொடுக்காமலும் நடாத்திச்சென்று சிறப்படைவதுண்டு. இக்கதையாசிரியருக்கு அக்கலை இன்னும் வரவில்லை.
பல. விநாயகம்.

~oOo~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.