பெரும் மௌனம்

parrot_colorful

மனிதர்கள் அரெஸிபோவின் துணைகொண்டு வேற்றுகிரக நூண்ணறிவை தேடுகிறார்கள். தொடர்பை உருவாக்கிக் கொள்ளும் அவர்களுடைய விழைவின் உந்துதல் எவ்வளவு வீரியமானதென்றால் அதற்காக பிரபஞ்சத்தின் குறுக்கே அதை கேட்பதற்கான வல்லமையுடைய செவியை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

ஆனால் நானும் என் சக கிளிகளும் இங்கேயே உள்ளோம். எங்களுடைய குரல்களை கேட்பதில் அவர்களுக்கு ஏன் ஆர்வம் இல்லை?

மனிதன் அல்லாத இனமான எங்களால் அவர்களுடன் தொடர்பு கொள்ள இயலும். மிகச் சரியாக, எங்களைத் தானே அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?

*

நுண்ணறிவு நிச்சயமாக பலமுறை தோன்றியிருக்க கூடிய அளவிற்கு இந்த பிரபஞ்சம் விசாலமானது. மேலும், தொழில்நுட்பத்தை அடைந்த ஒரு இனம் பரவி நட்சத்திர மண்டலத்தை முழுவதும் வியாபிக்கும் அளவிற்கு இந்த பிரபஞ்சம் பழமையானதும் கூட. இருப்பினும், பூமியைத் தவிர வேறெங்கும் உயிர் இருப்பதற்கான தடயம் இல்லை. மனிதர்கள் இதை ஃபெர்மி முரண் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஃபெர்மி முரணுரைக்கு கொடுக்கப்படும் ஒரு தீர்வு என்னவென்றால் தீய படையெடுப்புகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள நுண்ணறிவுள்ள உயிரினம் தங்களுடைய இருப்பை வேண்டுமென்றே மறைத்துக் கொள்கிறார்கள் என்பது தான்.

மனிதர்களால் அழிவின் எல்லைக்கே துரத்தப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக அதை மிக சமயோசிதமான திட்டம் என்றே சொல்வேன்.

அடுத்தவரின் கவனத்தை கவராமல் அமைதியாக இருப்பது சரியெனப் படுகிறது.

*

ஃபெர்மி முரணை சில சமயம் பெரும் மௌனம் என குறிப்பிடுகிறார்கள். பிரபஞ்சம் குரல்களின் பெரும் இரைச்சலாக இருந்திருக்க வேண்டும் ஆனால் அது துணுக்குற வைக்கும் நிசப்தத்துடன் உள்ளது.

நுண்ணறிவுள்ள உயிரினங்கள் விண்வெளியில் பரவுவதற்கு முன் அழிந்துவிடுவார்கள் என சில மனிதர்கள் கற்பனை செய்து கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது உண்மையென்னும் பட்சத்தில், இரவு வானின் அமைதி என்பது மயானத்தின் அமைதி.

நூற்றாண்டுகள் முன்பு, ரியோ அபாஹோ காடு முழுவதும் எங்களுடைய குரல் எதிரொலிக்கும் விதமாக என் இனம் நிறைந்து இருந்தது. இப்போது நாங்கள் அனேகமாக அழிந்துவிட்டோம். விரைவில், இந்த மழைக்காடும் கூட பிரபஞ்சத்தின் மற்ற எல்லா இடங்களைப் போல அமைதியாகி விடக்கூடும்.

*

அலெக்ஸ் என்ற ஒரு ஆப்பிரிக்க பழுப்பு கிளி இருந்தது. அறிவுத்திறனின் பொருட்டு பெரும் புகழ் பெற்றிருந்தான். அதாவது, மனிதர்களுக்கு மத்தியில் புகழுடன் இருந்தான்.

ஐரீன் பெப்பெர்பெர்க் என்ற ஆராய்ச்சியாளர் முப்பது வருடங்கள் செலவிட்டு அவனை அவதானித்து வந்தார். அலெக்ஸ் வடிவங்கள் மற்றும் நிறங்களை குறிக்கும் வார்த்தைகளை மட்டும் அறிந்திருக்கவில்லை, வடிவம் மற்றும் நிறம் என்ற கோட்பாடுகளையும் புரிந்து கொள்கிறான் என அந்த அம்மணி கண்டுகொண்டார்.

பல விஞ்ஞானிகள் ஒரு பறவையால் அரூபமான கோட்பாடுகளை புரிந்து கொள்ள முடியும் என்பதை நம்ப தயாராக இல்லை. மனிதர்கள் தாங்கள் மட்டுமே தனித்துவம் கொண்டவர் என நினைக்க விரும்புகிறார்கள். ஆனால் இறுதியில், அலெக்ஸ் வார்த்தைகளை வெறுமே திருப்பி கூறுவில்லை, அவன் தான் சொல்வதை புரிந்து கொள்கிறான் என்று பெப்பெர்பெர்க் அவர்களுக்கு மெய்ப்பித்து காட்டினாள்.

என் சகோதரர்களில் அலெக்ஸ் மட்டுமே தொடர்பு கொள்வதற்கான கூட்டாளியாக மனிதர்களால் பார்க்கப்பட்டான்.

ஒப்புநோக்க இளம் வயதிலேயே அலெக்ஸ் திடீரென இறந்து விட்டான். இறப்பதற்க்கு முந்தைய மாலை, அலெக்ஸ் பெப்பெர்பெர்கிடம் சொன்னது, “நீ நல்லவளாக இரு. நான் உன்னை நேசிக்கிறேன்.”

மனிதர் அல்லாத நுண்ணறிவை – ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள மனிதர்கள் தேடுகிறார்கள் என்றால் இதை விட வேறென்ன அவர்களுக்கு வேண்டும்?

*

ஒவ்வொரு கிளியும் தனித்துவமான விளி கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது; இதை உயிரியல் வல்லுனர்கள் கிளியின் “தொடர்பு விளி” என குறிப்பிடுகிறார்கள்.

1974இல், அரெஸிபோ கொண்டு வானுலார் மனித நுண்ணறிவை வான்வெளியில் ஒரு செய்தியாக பரப்பறிவிப்பு செய்தார்கள். அதுவே மனிதர்களின் தொடர்பு விளி.

காட்டில், கிளிகள் மற்றவரை பெயரிட்டு அழைக்கின்றன. ஒரு கிளி மற்றொன்றின் தொடர்பு விளியை சாயல் செய்து அவற்றின் கவனத்தை பெறுகிறது.

என்றாவது பூமிக்கு திருப்பி அனுப்பப்படும் அரெஸிபோவின் செய்தியை மனிதர்கள் கண்டுகொள்வார்கள் என்றால், மற்றவர்கள் மனிதர்களின் கவனத்தை பெற முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

*

கிளிகள் குரல்வழி கற்பவர்கள்: எங்களால் ஒரு ஒலியை கேட்ட பின்பு புது ஒலிகளை உருவாக்க கற்றுக் கொள்ள முடியும். வெகு சில உயிரினங்கள் மட்டுமே இந்த திறனை பெற்றுள்ளன. ஒரு நாயால் பல கட்டளைகளை புரிந்து கொள்ள இயலும், ஆனால் குரைப்பதைத் தவிர்த்து அதனால் எதுவும் செய்ய இயலாது.

மனிதர்களும் குரல்வழி கற்பவர்கள் தான். அது நம் இருவருக்கும் பொதுவானது. அதனால் மனிதரும், கிளிகளும் ஒலியுடன் பிரத்யேகமான உறவு கொண்டவர்கள். நாம் வெறுமனே கத்துவதில்லை. நாம் உச்சரிக்கிறோம். நாம் எடுத்துரைக்கிறோம்.

அதனால் தான் என்னவோ மனிதர்கள் அரெஸிபோவை அப்படி உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு அலைவாங்கி அலைபரப்பியாக இருக்க வேண்டுமென்றில்லை ஆனால் அரெஸிபோ இரண்டுமாக ஒரே நேரத்தில் இருக்கிறது. அது கேட்பதற்கான செவியாகவும் பேசுவதற்கான வாயாகவும் உள்ளது.

*

மனிதர்கள் கிளிகளுடன் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள். ஆனால் மிக சமீபத்தில் தான் நாங்கள் நுண்ணறிவுடைவர்களாக இருப்பதற்கான சாத்தியமுடையவர்கள் என்று அவர்கள் சிந்திக்கிறார்கள்.

அவர்களை குற்றம் சொல்ல இயலாது என நினைக்கிறேன். கிளிகள் நாங்களும், மனிதர்களை அறிவாற்றல் அற்றவர்கள் என்றே எண்ணி வந்தோம். தன் நடத்தையிலிருந்து மாறுபட்டவர்களை புரிந்து கொள்வது கடினமான ஒன்று.

ஆனால் எந்தவொரு வேற்றுகிரகவாசிகளை விடவும் கிளிகள் மனிதர்களை ஒத்தவர்கள். மேலும் அவர்கள் எங்களை அவதானிக்கலாம்; எங்கள் கண்களை நோக்கலாம். நூறு ஒளி வருடங்கள் தூரத்தில் இருந்து வெறுமனே ஒற்றுக் கேட்டுக் கொண்டு மட்டுமே மனிதர்கள் எப்படி வேற்றுகிரக நுண்ணறிவை கண்டு கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறார்கள்?

*

மூச்சொலியை குறிக்கும் சொல் (Aspiration) நம்பிக்கையையும் குறிக்க பயன்படுவது வெறும் தற்செயல் அல்ல.

நாம் பேசுகையில் நம் நுரையீரலின் முச்சுக்காற்றால் நம் என்ணங்களுக்கு தூல வடிவம் அளிக்கிறோம். நம் நோக்கங்களாகவும், உயிர் விசையாகவும் ஒரே நேரத்தில் இருப்பவை நாம் எழுப்பும் ஒலிகள் தான்.

நான் பேசுகிறேன் அதனால் நான் இருக்கிறேன். ஒரு வேளை குரல்வழி கற்பவர்கள், கிளிகள் மற்றும் மனிதர்களை போல, மட்டுமே இந்த உண்மையை முழுதாக விளங்கிக் கொள்ள முடியும்.

*

உங்களுடைய வாயால் ஒலிகளை வடிவமைக்கையில் இன்பம் அடைகிறீர்கள். அது மூலாதாரமானதும், உடலின் உட்கூறுகளால் உணரக்கூடியதுமானதால் வரலாறு முழுவதும் மனிதர்கள் அச்செயலை தெய்வத்தனைமையை அடையும் பாதையாக வகுத்துள்ளார்கள்.

உயிரெழுத்துக்கள் வான் கோளங்களின் இசையை எடுத்துரைப்பதாக பித்தாகரிய மறைஞானிகள் நம்பினார்கள் மேலும் அதிலிருந்த ஆற்றலை பெறும் பொருட்டு அவற்றை ஓதினர்.

பெந்தகோஸ்தே கிறுஸ்துவர்கள் இயல்பு மீறிய உணர்வுநிலையில் சொல்லும் அறியா மொழி பேச்சுகளை சொர்க்க தேவதைகளின் மொழியென நம்புகிறார்கள்.

ஹிந்து பிராமணர்கள் மந்திர உச்சாடனங்கள் மூலம் மெய்மையின் கட்டுமானத்தை பலப்படுத்துவதாக நம்பிக்கை கொள்கிறார்கள்.

குரல்வழி கற்கும் இனத்தால் மட்டுமே தங்களுடைய புராணங்களில் ஒலிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை ஏற்றிச் சொல்ல முடியும். கிளிகளாகிய நாங்கள் அதற்கு மதிப்பளிக்கிறோம்.

*

ஹிந்து தொன்மங்களின்படி பிரபஞ்சத்தை உருவாக்கியது ஒரு ஒலி: “ஓம்.” அந்த உயிரெழுத்து, இதுவரை உருவான எல்லாவற்றையும், இனிமேல் உருவாகப் போகும் எல்லாவற்றையும் தனக்குள்ளே கொண்டுள்ளது.

அரெஸிபோ தொலைநோக்கியை நட்சத்திரங்க்களுக்கு இடையே உள்ள வெளியை நோக்கி சுட்டினால் அது மந்தமான ரீங்காரத்தை கேட்கும்.

வானியலர் அதை ‘அண்டத்தின் நுண்கதிர் பின்புலம்’ என குறிப்பிடுகிறார்கள். அது பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தை உருவாக்கிய பெருவெடிப்பின் மிச்சமுள்ள கதிர்வீச்சு.

ஆனால் அதையே ஆதியிலிருந்த “ஓம்” என்ற ஒலியின் மிக சன்னமான அதிர்வு என்றும் எண்ணிக் கொள்ளலாம். அவ்வுயிரெழுத்தின் பெரும் எதிரொலியினால் அது பிரபஞ்சம் உள்ளவரை இரவு வானில் அதிர்ந்து கொண்டே இருக்கும்.

அரெஸிபோ வேறெதையும் கேட்காத பொழுது, அது படைப்பின் குரலை கேட்டுக் கொண்டே இருக்கும்.

*

பூர்டோ ரிகோவின் கிளிகளாகிய எங்களுக்கு புராணங்கள் உண்டு. மனிதர்களின் தொன்மங்களை விட அவை எளிமையானவை ஆனால் அவற்றை அறிவதினால் மனிதர்களும் சந்தோஷமடையக் கூடும்.

ஐயோ, எங்கள் இனம் அழியும் தோறும் எங்கள் தொன்மங்களும் இழக்கப்படுகின்றன. நாங்கள் அழிவதற்கு முன்னர் மனிதர்கள் எங்களுடைய மொழியை புரிந்து கொள்ளும் வழியை கண்டடைவார்கள் என நான் நம்பவில்லை.

அதனால், என் இனத்தின் அழிவு வெறும் ஒரு பறவை கூட்டத்தின் அழிவு மட்டும் இல்லை. அது எங்கள் மொழியின், எங்கள் சடங்குகளின், எங்கள் மரபுகளின் மறைவு. அது எங்களுடைய குரலை அடக்குவது.

*

மனிதர்களின் செயல்கள் என் சக இனத்தவரை அழிவின் எல்லைக்கு கொண்டுவந்துள்ளது, ஆனால் அவர்களை அதற்காக குற்றம் சொல்ல மாட்டேன். அவர்கள் அதை கேடு செய்யும் எண்ணங்களுடன் செய்யவில்லை. அவர்கள் கவனமில்லாமல் இருந்தார்கள்.

மனிதர்கள் மிக அழகான தொன்மங்களை உருவாக்குன்றனர்; எத்தனை கற்பனை வளம் அவர்களுக்கு உள்ளது. ஒருவேளை அதன்பொருட்டே அவர்களின் ஆசைகளும் மிகப் பெரிதாக உள்ளது. அரெஸிபோவை பாருங்கள். இப்படிப்பட்ட ஒன்றை உருவாக்கும் எந்தவொரு இனமும் தனக்குள்ளே மகத்துவத்தை கொண்டிருக்கும்.

அநேகமாக என் இனம் அதிக காலம் இங்கே இராது; பெரும்பாலும் எங்களுக்கான காலத்திற்கு முன்னரே அழிந்து பெரும் மௌனத்தில் சேர்ந்து விடுவோம். ஆனால் போகும் முன் மானிடருக்கு ஒரு செய்தி அனுப்புகிறோம். அதை கேட்பதற்கு மனிதர்களுக்கு அரெஸிபோவின் தொலைநோக்கி உதவும் என நம்பிக்கை கொள்கிறோம்.

இதுவே அந்த செய்தி:

நீங்கள் நல்லவர்களாக இருங்கள். நான் உங்களை நேசிக்கிறேன்.

***

அலோரா மற்றும் கால்ஸாடியாவின் முப்பரிமாண கலை காணொளி அமைப்பு (பெரும் மௌனம் 2014), உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியின் மற்றும் அழிவின் மிக அருகில் இருக்கும் கிளி, அமேஸானோ விட்டாடா, இனத்தின் உறைவிடமான எஸ்பரான்ஸொ, பூர்டோ ரிகோவில் உள்ளது. இந்த கலைககாட்சிக்காக, அலோரா மற்றும் கால்ஸாடியோவுடன் இணைந்து அறிவியல் புனைவு எழுத்தாளர் டெட் சாங்க் இந்த கதையை உயிருள்ளவை, உயிரற்றவை, மனிதன், விலங்கு, தொழில்நுட்பம் மற்றும் பிரபஞ்ச இருப்புகளின் இடையே உள்ள குறுக்க முடியாத இடைவெளிகளை அசை போடும் கற்பனை கதையாக உருவாக்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.