'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்' சிறுகதைத் தொகுப்பு மதிப்புரை

buddhist_japan_buddha_taichung-confucius-temple

கணேஷ் வெங்கட்ராமன் எழுதிய டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையை முன்னர் படித்திருந்தேன். அலுவலக வேலையாக டைசுங் நகருக்கு வரும் கதைசொல்லி வாடிக்கையாளருடனான சந்திப்பு தள்ளிப் போனதால் டைசுங் நகரில் இருந்த பழைய புத்தர் கோயிலுக்குப் போகிறான். அங்கு அவன் பார்க்கும் புத்தர் பதம்பனி சிலைகளின் அழகிலும் கோயிலின் அமைதியிலும் மனதை இழக்கிறான். பெரிய சிலை முன் உட்காரும் அவனது பார்வை அத்தோட்டத்து வேலையாள் ஒருவன் மீது விழுகிறது. அவன் குனிந்து வேலை செய்யும்போது கழுத்திலிருந்து வழியும் வியர்வை அவனது மேல்முதுகில் வரைந்திருந்த புத்தர் படத்தை பளபளப்பாக்கியது. ஒரு நொடியில் அவன் கண்ட புத்த தரிசனம் கோயிலின் புற அழகுக்குக் குறைவில்லாததாக இருந்தது. கனிந்த மனதுடன் கோயிலிலிருந்து கிளம்புகிறான். கதையில் மிகத் திறமையாகக் கையாளப்பட்ட புனைவமைதி எனும் அழகியல் உத்தி படித்ததும் மனதில் பதிந்தது. இப்படித்தான் கணேஷ் வெங்கட்ராமனின் புனைவின் தொடக்கம் அமைந்தது.

கணேஷ் வெங்கட்ராமன் பல வருடங்களாக இணையத்திலும் சிறுபத்திரிக்கைகளிலும் எழுதி வரும் படைப்பாளி. தில்லியில் வசித்து வருபவர் 2011 முதல் 2014 வரை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக ‘டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்’ வெளியாகியுள்ளது.

தொகுப்பின் முதல் கதையான ‘சரவணரவி’ ஞாபகத்தின் விளையாட்டைப் பற்றி எழுதப்பட்ட கதை. மூன்று நண்பர்கள் எனும் புகைப்படமும் சரவணரவி எனும் பெயரும் எங்கோ ஞாபக அடுக்கில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒருவரின் கதை அழகாகக் காட்டப்பட்டுள்ளது. நம் நினைவுகளும் மனிதர்கள் மீது நாம் வைத்திருக்கும் அபிப்பிராயங்களும் எத்தனை குழப்படியான நரம்பு மண்டலத்தோடு இணைந்திருக்கிறது என அலசத் தொடங்கும்போது நம் உணர்வுகளுக்கான உண்மையான மதிப்பென்ன என ஆராயத் தோன்றுகிறது. பெயரைக் கொண்டு நாம் ஞாபகத்தில் தொடர்புபடுத்தி வைத்திருக்கும் முகமும் ஜாலங்கள் செய்யத் தோன்றினால் நாம் எத்தனை விளிம்பில் நம் நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் வைத்துக் கொண்டிருக்கிறோம் எனப் புலனாகிறது. அதன் விளையாட்டை நிகழ்த்திக் காட்டிய நல்லதொரு கதை இது.

இந்தத் தொகுப்பிலேயே மிகச் சிறப்பான கதையாக “நாய்களும் பூனைகளும்” அமைந்திருக்கிறது. சிறுகதைக்கான சரியான தொடக்கம் இல்லை என்றாலும் மிகக் கச்சிதமான இடத்தில் கதையை முடித்திருக்கிறார். கதைசொல்லியான சுப்பு பத்து வருடங்களுக்குப் பிறகு ஷார்ஜா மீண்டும் செல்ல வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார். அலுவலகத்தில் சாமர்த்தியமாக இல்லாததால் வேலையை இழந்த கசப்பான அனுபவத்தோடு இந்தியாவுக்கு திரும்பியவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதே நிறுவனத்தில் முன்னர் வேலை பார்த்த அஷு மிகத் திறமையாக தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்கிறார். ஷார்ஜாவுக்கு ஏன் வந்தோமென நொந்துகொள்ளும் சுப்பு இந்தியா திரும்பியபின் ஏற்றுக்கொண்ட கீழான வேலையை வெறுப்போடு செய்கிறான். அவ்வப்போது ஷார்ஜாவில், கார், பணம் என வசதியாக வாழ்ந்ததை அவன் மனைவியோடு சேர்ந்து ஏக்கத்தோடு நினைக்கிறான். மீண்டும் ஷார்ஜா வரும்போது சந்திக்கும் அஷு மிகப் பெரிய ஏமாற்றத்தை சந்தித்து வாழ்வைத் தொலைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கிறான்.

மிகச் சுலபமாக நீதி போதனைக்கதையாக மாறியிருக்க வேண்டிய கதையை கணேஷ் வெங்கட்ராமன் மனித மனதை அலசும் வழியைக் கொண்டு இலக்கிய ஆக்கமாக மாற்றியிருக்கிறார். மனதின் விநோதங்களைப் பேசும்போது அவர் இயல்பாக அதில் அதிகாரத்தின் தேவையையும், அதிகாரத்தைக் கைகொள்ள செய்ய வேண்டிய வித்தைகளையும், அதிகாரத்துக்கு முன் எந்தளவு குறுக்கிக்கொள்ள வேண்டும் என்பதை முடிவெடுக்கும் மனதின் ஊசலாட்டத்தையும் அவர் கையாள்கிறார். மிக இயல்பாக அதிகார வேடங்கள் நாய்களாகவும் பூனைகளாகவும் சுப்பு, அஷுவோடு அமைந்திருப்பதே இக்கதையின் வெற்றி.

புலம்பெயர்வு – காதல் தோல்வியின் கதையாகத் தொடங்கி விரக்தியான வாழ்வை வாழும் பெண்ணின் உள்ளத்தில் அவளறியாமல் ஏற்படுத்தும் தீய எண்ணத்தைப் பற்றி விவரிக்கும் கதை. மிக மேலோட்டமான தொடக்கம். காதல் தோல்வி பற்றிய மற்றுமொரு கதையாக வெளிப்பூச்சுக்குத் தெரிந்தாலும் கதைசொல்லியின் புலப்பெயர்வு எவ்விதமான மனமாற்றத்தை அவளுள் செலுத்தியிருக்கிறது என்பதைக் காட்டும் ஆழமான கதையாகியுள்ளது. ஆதரவற்றவளாக இல்லாவிட்டாலும் அவளுக்குள் உருவான வெற்றிடத்தை எதைக் கொண்டும் நிரப்பமுடியாமல் தவிப்பவள். ஊருக்குக் கூப்பிடும் அப்பாவும், கர்வா செளத்துக்கு அழைக்கும் அண்ணியின் அக்காவும் அவளுக்கு யாரோ. அவள் எதற்காகவோ காத்திருக்கிறாள். சொல்லப்போனால் அவளை காதலித்துவிட்டுப் போனவன் எதற்குப் போனான் எனத் தெரியாததில் அவளுக்கு ஒரு க்ளோஷர் தேவை. ஒருவிதத்தில் கதை முடிவில் அவளுக்கு அது கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு உள்ளே இருக்கும் சக்தி பொறுமைமிக்கது;மிகவும் வலிமையானது. “இரு குரல்கள்” கதையில் வரும் அனகாவின் மற்றொரு உருவமாக இவள் தெரிகிறாள்.

“தவிப்பு” – வாய்விட்டுச் சிரிக்கும்படி எழுதியிருப்பது கதை சொல்லியின் திறமைக்கு ஒரு சான்று. அபத்தங்களால் ஆனது உலகு. தவிப்பு கதைசொல்லி விமானநிலையத்தில் சார்ஜ் செய்ய இயலா கைப்பேசியுடன் வீட்டுக்கு வரும்வரை இருக்கும் நிகழ்வை, வரிசையாக ஏற்படும் தோல்விகளை, ஏமாற்றங்களை ரசிக்கும்படி எழுதியிருக்கிறார். சம்பவங்களை வரிசையாகச் சொல்லும் முயற்சியில் எவ்விதமான தடையும் இவருக்கு ஏற்படுவதில்லை. கதைசொல்லி ஒரு ஏமாளியல்ல ஆனாலும் எங்களூரில் சொல்வது போல “போதாது”. அவ்வளவுதான். முடிவு எதிர்பார்த்தபடி இருந்தாலும் ஒரு நிகழ்வை அழகாக கதையாக மாற்றமுடிந்திருப்பதில் இது வெற்றிபெற்றுவிட்டது. எவ்விடத்திலும் தடங்கல் இல்லாத நடை மட்டுமல்லாது ஒரு கதாபாத்திரத்தை எளிமையாகக் காட்டும் கலையும் கூடி வந்திருக்கும் நல்ல கதை.

‘பிரான்ஸில் ஒரு கிறிஸ்துமஸ்’ – தொகுப்பில் சற்று மாறுபட்ட களத்தைக் கொண்டிருக்கும் ஒரு கதை. வெற்றிக்கு ஆயிரம் ஆசான்கள் என்பதுபோல பிரபலமான விஷயங்களுக்கானத் தோற்றுவாய்க் கதைகள் ஒவ்வொரு தேசத்திலும் அநேகம் உண்டு. ஒரே பொருளுக்கு உரிமை கொண்டாடுவது பல பண்பாடுகளின் பழக்கமாகவும் இருந்திருக்கிறது. போலி பெருமையும், அந்நியரும் ஒப்பிட்டு தாங்கள் மேலானவர்கள் போன்ற எண்ணங்களை நிலைநாட்டுவதற்காக உரிமை கொண்டாடுவது ஒரு வழக்கம். அதேசமயம் கலாசார அடையாளங்களின் மீதான அதீதப்பிடிப்பைக் காட்டுவதற்கான வழியாகவும் இது அமையலாம். பிரெஞ்சு சமையல் உலகப்பிரசித்தம் எனச் சொன்னதும் நாஞ்சில் நாட்டு உணவின் சுவை அதுக்கு வருமா, வங்க இனிப்பு இணை உண்டா, ராஜஸ்தானின் ரொட்டி போல மிருதுத்தன்மையும் நார்ச்சத்தும் சமமாக அமைந்திருக்கும் திட உணவு உண்டா, பிரிட்டனின் மீன் போல சுவையானது? இத்தாலியின் தக்காளி? என ஒவ்வொருவரும் தங்கள் உணவே சுவை மிகுந்தது எனப் போட்டிக்கு வரக்கூடும். மனித இயல்புதான். விருந்து உணவு மீதான பிடித்தம் என்பது அதன் சுவையைவிட அதில் பங்கு பெறும் மனிதர்களின் மனநிலையைப் பொருத்து அமைந்திருக்கும் மையத்தில் குவிகிறது இந்தக் கதை. எந்த ஊரில் மனிதர்கள் சக மனிதர்களுடன் சிரித்துப்பேச தயங்குகிறார்களோ அங்கு உணவின் ருசி மட்டுப்படும் என முடியும் இடத்தில் கதை விரிவான தளத்தில் வாசகர் மனதில்  பதியத் தொடங்குகிறது. பிரெஞ்சு உணவு பற்றி பிரதானமாக வரும் பக்கங்கள் மக்கள் எப்படி உணவை ரசிக்கிறார்கள் எனும் கோணத்தில் நம்மால் மீண்டும் படிக்கப்படும். இதுவே இக்கதையை நல்ல கதையாக மாற்றுகிறது. கடைசி வரியோ, ஒரு சொல்லோ கதையின் மையத்தை வாசகருக்கு நெருக்கமாகவும், விரிவான தளத்தில் வைக்கும்விதமாகவும் மாற்றும் கலை முதிர்ந்த ஒரு எழுத்தாளருக்கு மட்டுமே சாத்தியம். கணேஷ் வெங்கட்ராமனுக்கு இது வாய்த்திருக்கிறது. ஒரு போலியான திருப்பமாகவோ, சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காகவோ, சட்டென ஒரு மர்மத்தை விளக்கும்விதமாகவோ கடைசி வரி அமையாதிருப்பது ஒரு எழுத்தாளராக அவர் மீது அதீத நம்பிக்கையை அளிக்கிறது.

பரிசு, சிமிஞ்சை  போன்ற கதைகள் அதிகாரம் எனப்படும் வலையை உருவாக்கும் அமைப்புகளும் அதன் மையத்தில் உழலும் மனிதர்களின் மனவிசித்திரங்களையும் பாவனைகளையும் காட்டுகின்றன. இயல்பாகவே மனிதன் கீழ்படிதலை அகங்காரமில்லாமல் செய்வதில்லை. அதிகாரத்துக்குக் கீழ்படிதல் என்பதே ஒருவிதத்தில் கையாலாகாத்தனம் என்பதை அமைப்புகள் சொல்லாமல் நிறுவும்போது அது அவனை போலியாக மாறிவிடுகிறது. அது அவன் அல்ல. அவனில் ஒரு அங்கம் எனும் தெரிவை இயல்பாக ஏற்றுக்கொண்டு அதிகாரத்துக்கு முன் நடிக்கும் நாடகமாக மாறிவிடும் சித்திரம் சிறப்பாக வெளிப்படும் கதைகள் இவை.

‘ஜன்னலில் ஒரு நிலவு’: சுமாரான கதை. கதைக்கரு மிகவும் பழையது. ரயில் ஸ்நேகங்களின் வசீகரம் ஆயுள் இரண்டுமே பட்டாசு வெடி போன்றதுதான். கதையும் வாசகன் எதிர்பார்த்த பாதையிலேயே பயணம் செய்து முடிந்தும் விடுகிறது என்பதாலேயே இத்தொகுப்பில் மிகச் சுமாரான கதைகளோடு சேர்ந்துவிடுகிறது.

‘வாரயிறுதி’, வீடு திரும்புதல்’, ‘தவிப்பு’ ரெண்டு கதையும் சாமர்த்தியமற்ற கதாபாத்திரத்தின் சாயலோடு எழுதப்பட்டவை. வாழ்வின் இயல்பில் நடக்கும் குழப்பங்களால் தன்னிலையற்று நடந்துகொள்ளும் கதைசொல்லி ‘ஏமாந்தவனாக’ இருப்பதை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதைகள். நம்மில் பலரும் சமயங்களில் இப்படித்தான் நடந்துகொள்கிறோம் என்றாலும் வாழ்க்கை நம் விரலிடுக்கில் நழுவி முன்னேறும்போது நாம் கேலிக்கைச் சித்திரங்களாக எஞ்சிவிடுவோம். ஆனால் நகுலன்/அசோகமித்திரனின் கதைசொல்லிகளைப் போல ஆழமான ஏமாளி சித்திரமாக இவை ஏன் உருவாகவில்லை என்பதை கணேஷ் வெங்கட்ராமன் கருத்தில் கொள்ளலாம். வாசகனாக எனக்குத் தோன்றியவை: மனசாட்சியற்ற நிகழ் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அதன் இடைவெளிகள் வழியே வாழக்கூடியவர்களாக அமைந்திருக்கும் அசோகமித்திரனின் அக உலகம் கதாபாத்திரங்களின் வாழ்க்கைப்பார்வையை முழுமையாகக் காட்டும் சித்திரங்கள் கொண்டது. புலிக்கலைஞன் போடும் கூழைக்கும்பிடு அவனது அக உலகத்தில் இல்லை. அவனுக்கென்று இருக்கும் உலகில் அவன் புலி. வாழ்வின் குரூரமான இடங்களில் அவன் கேலிச் சித்திரம் மட்டுமே. சின்ன நிகழ்வுகள் மூலம் தனது ஏமாளித்தனத்தை அறிவிக்கும் கணேஷ் வெங்கட்ராமின் கதாபாத்திரங்கள் அவர்களது வாழ்வையே ஒரு செய்தியாக்கும்படியான அக உலகத்தில் வாழ்வதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான புற உலக இயல்புகளைப் பற்றி மட்டுமே கருத்து தெரிவிக்கிறார்கள். உள்ளூர அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனும் சித்திரத்தை என்னால் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. கதையின் மையம் மிக இலகுவாக இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

ganeshகணேஷ் வெங்கட்ராமன் கதைகள் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாதவை. பல சமயங்களில் அவை சிறுகதை எனும் இலக்கணத்தைப் பூர்த்தி செய்யாமலும் அமைந்துவிடுகின்றன. ஆனால் அவரது கதையில் வரும் நிகழ்வுகள் நிதானமான கதியில் பதியப்படுகின்றன. எத்தனை நாடகத்தனமான நிகழ்வாக இருந்தாலும் கணேஷ் வெங்கட்ராமனின் கதைகளில் அவை கூச்சல் இடுவதில்லை. இது கச்சிதமாக அமையாத கதைகளுக்கு பெரும் குறையாக ஆகிவிடும். இவரது கதைகளின் குறைகளை முன்னரே ஆங்காங்கே பார்த்திருந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தொகுப்பாகப் பார்க்கும்போது சில விடுபடல்கள் தென்படுகின்றன. முதலில், நிகழ்வுகளின் அன்றாடத்தன்மை மீண்டும் மீண்டும் பல கதைகளில் வரும்போது தனித்துவமான காட்சியாக மனதில் பதிவதில்லை. பல பாணிக் கதைகள், வடிவ முயற்சிகள், கூறுமுறை முயற்சிகள் எனத் தொடர்ந்து பயிலும்போது வித்தியாசமான பல கதைகள் வந்துசேரும் எனத் தோன்றுகிறது. அடுத்ததாக, புனைவு மொழி கூர்மை அடையவேண்டியது அவசியம். குறிப்பாக, பயணம் பற்றி வரும் பல கதைகளில் ஓரிரு வரிகளில் அந்த பயணத்தின் மொத்த உணர்வும் வரும்படியாக அமைத்திருந்தால் கதாபாத்திரத்தின் மன இயல்பு சொல்லாமல் குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கும். உதாரணம், ‘டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்’ தொடக்க வரிகள்

நேரமே கிடைக்காது என்று எண்ணித்தான் தைவானின் மேற்குப் பிராந்தியத்தில் இருக்கும் டை – சுங் நகருக்குப் பயணமானோம். சியாஹி நகரில் இரண்டு மணி நேரச் சந்திப்பை முடித்துக்கொண்டு அதிவேக ரயில் ஏறினோம். என்னுடன் வந்திருந்த எங்கள் லண்டன் தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக ஊழியர் ரயில்வே அட்டவணையைச் சரியாகப் பார்க்காமல் டை-சுங் நகரை அடைய இரண்டு மணி நேரம் பிடிக்கும் என்று தகவல் அளித்திருந்தார். ஆனால் டை -சுங் நகரை வந்தடைய அரை மணி நேரமே பிடித்தது

பொதுவாக புனைவுமொழியின் இலக்கணப்படி ஒவ்வொரு வரியும் ஒன்று கதாபாத்திரத்தைப் பற்றி அறியத்தரவேண்டும் அல்லது கதையை ஏதேனும் முக்கிய புள்ளிக்கு இட்டுச்செல்லவேண்டும். இது ரெண்டையும் செய்யாத வரியை கதாசிரியன் மாற்றாத பட்சத்தில் எடிட்டர் சுட்டிக்காட்டவேண்டும். பல கதைகளின் தொடக்கம் இதைத் தவறவிட்டிருக்கிறது. அதனால் கதையின் முடிவுக்கு அருகே அல்லது மையத்தை சுட்டும் தொடக்கங்கள் சில கதைகளில் மட்டுமே அமைந்துள்ளன.

கணேஷ் வெங்கட்ராமனின் கதைகள் பொதுவாக பயணங்களால் நிரப்பப்பட்ட கருக்களைக் கொண்டது. புனைவில் அதிகம் பயணம் பற்றிய எழுதிய எழுத்தாளர்கள் பலரும் நான்கு சுவருக்குள் அமைந்த வாழ்வை நடத்துபவர்கள். ஏனென்றால் பயணம் எந்தளவுக்கு புது திறப்புகளைக் கொடுக்கின்றதோ அந்தளவுக்கு அலுப்பையும் கொடுத்துவிடும். சதா பயணம் செய்து கொண்டிருப்பவர்கள் தங்களது சமநிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே புறக்காட்சிகளில் மனதை குவிக்காது இருப்பர். பயணம் செய்யும் வண்டியில் ஏறியதும் கண்களை இறுக கட்டிக் கொள்பவர்களில் பெரும்பான்மையினர் பாதி வாழ்வை பயணத்தில் கழிப்பவர்களே. இதனாலேயே தங்கள் பயணத்துக்குத் தேவையான அளவு மட்டுமே புறக்காட்சி மீது கவனம் செலுத்துவர். கணேஷ் வெங்கட்ராமனின் கதைகள் அப்படிப்பட்ட கதைசொல்லிகளால் நிரம்பியிருக்கிறது. அவர்கள் தங்கள்  சிக்கல்களையும் மனக்கிலேசங்களையும் அசைபோட்டபடி பயணம் செய்கிறார்கள். ஆனால் அவர்களது அக உலகம் முழுவதுமாகக் கதையில் வெளிப்படாததால் பயணம் என்பது எவ்விதமான ஆழத்தையும் கூட்டவில்லை. அதிகாலை நேரத்தில் நெடுஞ்சாலை சாப்பாட்டுக் கடையில் நிறுத்தும் வண்டிகளிலிருந்து திசையறியாது விழித்துக் கொள்ளும் பயணிகளின் உணர்வுநிலைகள் போல சில கதைகள் மசமசவெனத் தெளிவு கொள்வதற்கு முன்னரே கதை முடிவுக்கு வந்துவிடும் அவசரத்தை கணேஷ் வெங்கட்ராமன் எதிர்காலத்தில் களைய வேண்டியது அவசியம்.

சிறு நிகழ்வினூடாக சொல்லப்படும் மனதின் செடுக்குகள் (நவீனத்துவ அழகியலின் மையம்) உருக்கொண்டு வளருவதற்குத் தேவையான புறச்சித்தரிப்புகளில் ஆசிரியர் கூடுதல் கவனம் கொடுப்பது அவசியம்.  சித்தரிப்புகள் இல்லாமையைச் சமன் செய்யும்விதமாக குறியீடுகளை உருவாக்கி வளரச் செய்வது சில கதைகளில் மிக இயல்பாக நடந்துள்ளதால் அவை சிறந்த கதைகளாக வந்துள்ளன. உதாரணம் ‘நாய்களும் பூனைகளும்’, ‘பிரான்ஸில் ஒரு கிறிஸ்துமஸ்’. கணேஷ் வெங்கட்ராமன் உருவாக்கும் குறியீடுகள் கச்சிதமாகப் பொருந்தும் கதைகள் அவருடைய புனைவுமொழிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. ரெண்டாவதாக, அவர் உருவாக்கியிருக்கும் ‘காரியத்தெளிவு இல்லாத’ கதாபாத்திரங்கள் மிக இயல்பாக படைக்கப்பட்டிருக்கும். புனைவாசிரியன் உருவாக்கும் கதாபாத்திரங்களின் கூர்மை புனைவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும். ‘தவிப்பு’, ‘வீடு திரும்புதல்’ போன்ற கதைகளில் வரும் கதைசொல்லி காரியத்தில் கெட்டிக்காரத்தனம் இல்லாதவனாகச் சித்தரிப்பதில் கதாசிரியர் வெற்றி பெற்றுள்ளார். தனக்கு ஒன்றுமே தெரியாது, ஏதோ நிகழ்வுகளால் உந்தப்பட்டு காரியத்தை செய்து ஏமாறுபவன் போன்ற எளிமையான தோற்றத்துக்குப் பின்னே சிறப்பாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்திறன் தெரிகிறது. அசோகமித்திரனுக்குப் பிறகு இப்படிப்பட்ட ‘காமன்மேன்’ பாத்திரம் உருவாக்கும் இடம் காலியாக உள்ளது. முன்சொன்ன அசோகமித்திரனின் எளிமைக்குப்பின்னே அமைந்திருக்கும் ஆழமான அக உலகமும், புனைவுக்கச்சிதமும் அமையப்பெற்றால் கணேஷ் வெங்கட்ராமன் மேலோட்டமான நிகழ்வுகளிலிருந்து வாழ்வு சுட்டும் தத்துவத்தை எட்டிப்பிடிக்கும் கதைகள் எழுதமுடியும். அதீத உணர்வுகளோ, உக்கிரமான மனக்கொந்தளிப்போ கொண்ட கதைகள் (இத்தொகுப்பில் இல்லை) காட்டும் உலகின் தரிசனத்தை அன்றாட நிகழ்வின் அர்த்தமின்மை/பிடிபடாத உண்மை வழியாக மேலான அனுபவமாக மாற்றும் வித்தை கணேஷ் வெங்கட்ராமனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் தான் இருக்கிறது எனத் தோன்றுகிறது.

**

டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்
கணேஷ் வெங்கட்ராமன்
காலச்சுவடு பதிப்பகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.