மக்ஆர்தர் ஜீனியஸ் கிராண்ட்டின் மதிப்பு 6,25,000 டாலர்கள் (இன்றைய நிலவரப்படி ரூ.4,17,28,125.00. காலாண்டுக்கு ஒரு தொகை என்று தொடர்ந்து ஐந்து ஆண்டுகள், இருபது தவணைகளில் இந்தக் காசைப் பிய்த்துப் பிய்த்துக் கொடுக்கிறார்கள்- அப்படி பார்த்தால்கூட மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரூ.20,86,406.25 கிடைக்கிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் இன்னது செய்ய வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் கிடையாது. இந்த ஆண்டு 23 பேருக்கு இப்பெரும் தொகையை நிதியுதவியாக அளித்திருக்கிறார்கள். இவர்களில் டாரில் பால்ட்வின் (Daryl Baldwin) ஒருவர்:
இவர் மயாமி (மியாமியா) இன மக்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அறிவாற்றலையும் மீண்டும் கண்டுபிடிக்கவும் ஆவணப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார். இவரை போன்ற கலாச்சார பாதுகாவலர் ஒருவரைத்தான் தன் கதாநாயகியாக டெட் சியாங் (Ted Chiang) வைத்துக் கொள்கிறார். பேச்சாளரே இல்லாத மொழியை எவ்வாறு அணுகுவது? அதற்கு நிறைய உந்துதலும் ஊக்கசக்தியும் முனைப்பும் எதையும் முயற்சி செய்து பார்க்கும் மனவுறுதியும் வேண்டும்.
முன்னவர் நிஜம். அவரின் ஆராய்ச்சி ஏன் முக்கியம் என்பதை எளிமையாக அறிந்துகொள்ள ’Story of Your Life’ கதையும் அந்தக் கதையை திரைப்படமாக்கிய ‘அரைவல்’ (Arrival) சினிமாவும் முக்கியம்.
திரைப்படத்தை எவ்வித கெடுப்பான்களும் இன்றி, அதன் அதிர்ச்சி கலந்த சுவாரசியங்களுடன் பார்க்க நீங்கள் நினைத்தால், இப்போதே இந்த விமர்சனத்தை வாசிப்பதை நிறுத்தவும்.
படம் பார்த்தபிறகே ‘உன் வாழ்க்கையின் கதை’யை வாசித்தேன். முதல் பக்கத்தில் முழுக்கதையையும், கடகடவென பெரிய நாவலின் கதைச்ச்ருக்கத்தை, தேர்ந்த விமர்சகர் சொல்வது போல் சொல்லிவிடுகிறார். அதன் பிறகு கதையைத் துவக்குகிறார். திரைப்படமும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு அணுகுமுறையைக் கையாள்கிறது. எடுத்த எடுப்பில் குழந்தைப் பிறப்பில் ஆரம்பித்து அந்தக் குழந்தை வளர்வது, பதின்ம வயதில் சண்டை போடுவது, புற்றுநோய்க்கு உள்ளாவது – என எல்லாமும் நடந்து முடிந்து விடுகிறது.
”தன்னுடைய மயிர்க்கால்களில் ஒட்டியிருக்கும் ஈரத்தை உதறும் நனைந்த நாயின் ஓசை போல் அந்த ஒலிப்பதிவு இருந்தது” என்பார் டெட் சியாங்.
அது என்ன ஒலிப்பதிவு? அதுதான் வேற்றுகிரகவாசிகளின் ஒலிப்பரிமாற்றம். அதைப் பற்றி அவ்வாறு நினைக்கும் நாயகி, அதை எப்படி அரசியலதிகாரிக்கு அறிவியல்பூர்வமாக விளக்குகிறார்?
“மனிதனின் செவிப்புலன் கொண்டு ஒலிக்கருவிகளின் எல்லா சாத்தியங்களையும் உள்வாங்க இயலாது. மனிதக்குரலில் பேசுவதைக் கேட்க மட்டுமே நம் காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாளடைவில் வேண்டுமானால் அந்நிய ஜந்துக்களின் (க… ம… ட… அ… போல்) முதலொலிகளைக் கேட்கப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். நமக்கு நிறமாலைப்பதிகருவி ஒன்று தேவைப்படும்.”
இப்படியெல்லாம் மிரட்டினால் அசரக்கூடிய ஆபீசரா அவர்? வளைந்து கொடுக்க மாட்டேன் என்கிறார். அடுத்த அஸ்திரம் பிரயோகம் ஆகிறது:
“தெரியாத பாஷையைக் கற்றுக் கொள்வதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அதைத் தாய் மொழியாகக் கொண்டவருடன் பழக வேண்டும். கேள்விகள் கேட்கவேண்டும். உரையாடலைத் துவங்க வேண்டும். அது நானாக இருக்கட்டும்; அல்லது எந்தவொரு மொழியியல் வல்லுநராக இருக்கட்டும். வெறும் ஒலிப்பதிவை வைத்துக் கொண்டு அவர்கள் சொல்ல வருவதை உள்வாங்க முடியாது.”
”அப்படியென்றால் நம் ஒலிபரப்பைக் கேட்டு மட்டும் நம் மனித மொழிகளை வேற்றுகிரகவாசிகள் கற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறீர்களா?”
“மனித மொழியை மனிதரல்லாதோருக்கு சொல்லித் தருவதற்கு அவர்களுக்கு ஒரு ஆளாவது தேவை. அல்லது எப்படி மனிதனின் பேச்சை அணுகுவது என்று கற்றுத்தரும் சாதனங்களாவது அவர்களிடம் இருக்க வேண்டும். அப்படி ஏதாவதொன்று இருந்தால் டிவியில் இருந்து நிறையப் புரிந்து கொண்டிருப்பார்கள். அப்படி எதுவும் கிடைக்காவிட்டால், எங்கே ஆரம்பிப்பது என்று தெரியாது.”
இது அந்த இராணுவ அதிகாரிக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நாம் சொல்லித்தர எத்தனிக்காவிட்டால், நம் மொழி, அன்னியருக்கு புரியப் போவதில்லை. இதனால் வேற்றுலகவாசிகள் முன் நாம் பேசிக் கொண்டாலும், அவர்களுக்கு தலையும் புரியாது; காலும் விளங்காது.
அச்சிடுவதற்குப் பயன்படும் வகையில் ஒரே பகுதியாக வார்க்கப்பட்ட சொல் (logograph), பட எழுத்து (logogram), சிந்தனை எழுத்து (ideogram), குறியெழுத்து (semagram), கீற்றம் (grapheme), ஒலியன் (phoneme), நிறமாலை வரைவி (spectrograph), கட்டுப் பொருள் (ligature), குரல் ஏற்ற இறக்கம், என மொழியியல் துறையின் அருஞ்சொற்பொருள்களும்; பெயர்ச்சொல், வினைச்சொல், செயப்படுபொருள் குன்றா வினை, என கதை நெடுக இலக்கணமும் கோலோச்சுகிறது. ஆங்கிலம், ஸ்பானிஷ் போன்ற சில மொழிகளில் இடமிருந்து வலம் எழுதுகிறோம். அதுவே அராபிக், யூதர்களின் எபிரேயம் போன்ற மத்திய கிழக்கு வளைகுடாப் பகுதி மொழிகளில் வலமிருந்து இடம் வாசிக்கிறோம். சீனர்களும், கொரியர்களும், ஜப்பானியர்களும் மேலிருந்து கீழ் வாசிக்கக் கூடியவர்கள். இந்தக் கதையில் வரும் பிராணிகளோ, எப்படி புரட்டிப் போட்டாலும் கண்ணாடியில் காண்பித்தால் கூட புரிந்து கொள்ளும் வரிவடிவக்காரர்கள்.
எனினும், சந்தேகமே வேண்டாம். இது அறிபுனை. இது பிற கிரகத்தில் இருந்து வருபவர்கள் பற்றிய புனைவு. ஆனால், அதோடு நிற்கவில்லை. அதை பின்னணி இசையாக வைத்துக் கொண்டு ஜுகல்பந்தி செய்கிறது. இது வெறுமனே மொழியும் ஒலியும் சார்ந்த கதை அல்ல; கற்பனை பிராணிகளை வேற்றுக்கிரக வாசிகளை மட்டும் விவரிக்கும் கதை அல்ல; தனியாகக் குழந்தையை வளர்க்கும் தாயின் பரிதவிப்பான முடிவெடுக்கும் தருணங்களைச் சொல்லும் சமூகக் கதையும் கூட; தத்துவார்த்தமாக மனதில் தங்கி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் எப்படி செலுத்தப்படுகிறோம் என்று நிரந்தரமாக நினைவில் நின்று நம்பிக்கைகளை உரசிப்பார்க்கும் கதை.
வேற்றுகிரகவாசிகளின் கருவிகளை ‘பார்க்கும் கண்ணாடிகள்’ என அழைக்கிறார்கள். நம்மை முகம் பார்க்கும் கண்ணாடி, நம்மை பிரதிபலிக்கும். முகத்திற்கு ஒப்பனை இட்டால் அதுவும் முகப்பூச்சு போட்டுக் கொள்ளும். நம் அகத்தை அது காண்பிக்கப் போவதில்லை. வாயில் போலி சிரிப்பு உதிர்ந்தால், ’பார்க்கும் கண்ணாடி’யும் போலியாக நம்மைப் பார்த்து சிரிக்கும்.
ஒவ்வொரு கலாச்சாரமும் வித்தியாசப்படும். அமெரிக்கர்கள் இன்றும் இந்தியர்களை இல்லை என்று சொல்வதற்கு ஆமாம் என்பது போல் தலையாட்டுபவர்கள் என கிண்டலடிப்பார்கள். அதை கவனமாக மாற்றிக் கொள்ள முயற்சித்தாலும், இப்பொழுதெல்லாம், அமெரிக்கர்களுக்கு நான் தலையை மட்டும் மையமாக ஆட்டிவைத்தால், ‘ஆமாவா? இல்லையா??’ என மொழிவழியாக வினாக் கேட்பார்கள். ஆனால், உடல்பாஷையில் அந்நியர்களுடன் எப்படி உரையாடுவது? அந்த சிக்கலை பொறுமையாக படமும் கதையும் விளக்குகிறது.
இந்த மாதிரி முக்கியமான விஷயங்களை அறிவியல்பூர்வமாகவும் தகவல்பூர்வமாகவும் விளக்கமாக கணினிமொழி போல் சொல்லும்போது சிலபல சிக்கல்கள் உருவாகும். கதை படிக்கும் வாசகருக்கு அலுத்துவிடும். அதை ஆங்காங்கே காதல், நகைச்சுவை என்று தூவி சுவாரசியமாக்குகிறார் டெட் சியாங். திரையில் பார்த்தால் ஏதோ அடர்த்தியான ஆவணப்படம் போல் அலுத்துவிடும். அதை முழுக்க முழுக்க காட்சிபூர்வமாக்கி, அடுத்து என்ன நடக்கும் என்னும் படபடப்போடு திரைக்கதையை நகர்த்துகிறார் இயக்குனர் டென்னிஸ் (Dennis Villeneuve).
பூனை மாதிரி ‘மியாவ்’ என்று கத்தியிருப்பீர்கள். நாயிடம் ‘வள்.. வள்’ என்று குரைத்துப் பார்த்திருப்பீர்கள். அதை விட ‘ஏய்!’ என்பதற்கும், ‘ஸ்டே’ என்பதற்கும் அந்தப் பிராணிகள் நன்றாகவேக் கட்டுப்படும். அதற்கு ஓரளவு ஆங்கிலம் புரிகிறது. நமக்கு மிருகபாஷை புரிய மாட்டேன் என்கிறது (தொடர்பான உரையாடல்: குழப்பவாதக் குரங்குகள் கட்டுரை – சொல்வனம்). அதே போல், வேற்றுலகவாசிகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தருகிறார் நாயகி.
படத்தில் நிறைய குட்டிக் கதைகள் உண்டு.
1770ல் கேப்டன் குக் ஆஸ்திரேலியாவில் வந்து இறங்குகிறார். குவீன்ஸ்லாந்து உள்ளே சென்று என்ன இருக்கிறது எனத் தேடும்போது, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அங்கே இருக்கும் பழங்குடியினர் தென்படுகிறார்கள். அவர்களிடம் அங்கு ஓடியாடிக் கொண்டிருக்கும் விலங்கை சுட்டிக் காண்பித்து, ”அந்தப் பிராணியின் பெயர் என்ன?” என்று கேட்கிறார். அவர்கள் “கங்காரு” என்கிறார்கள். அவர்களின் மொழியில் கங்காரு என்றால் “என்ன சொன்னீங்க?” என்பது அர்த்தம்.
இந்தக் கதை நிஜமா, பொய்யா எனத் தெரியாது. ஆனால், நம்பக்கூடிய, நினைவில் வைத்திருக்க வேண்டிய கதை. சினிமாவிலும் நறுக்கென்று சரியான தருணத்தில் உணர்த்தப்படும் கதை.
அமெரிக்காவில் உள்ள உள்ளூர் பள்ளியில் தமிழ் கற்றுத் தரும்போது, இந்த மாதிரி சில விபரீதமான அர்த்தங்கள் வந்து சேரும். உச்சரிக்கும்போது சரியாகத்தான் சொல்வார்கள். கொசு என்று தெளிவாகப் பேசுவார்கள். எழுதும்போது குசு என்று ஆகிவிடும். எனினும், நாளைய தேதியில் கூகுள் போன்ற நிரலியின் துணைகொண்டு, பேச்சினை சரியாக மொழியாக்கும் கருவியில், சமய/சந்தர்ப்பத்திற்கு தக்க வார்த்தையை இட்டு நிரப்பும் கணினி மென்பொருள் கொண்டு, இந்த சிக்கல் சரியாகிவிடும். ஆனால், ஏரி என்றால் தண்ணிர் நிறைந்த தடாகம்; அதுவே ஏறி என்றால், மரத்தின் மேலே செல்வது என்று சின்ன ர, பெரிய ற குழப்பங்களில் அவர்கள் தவிக்கும்போது, தொல்காப்பியர் தமிழுக்குக் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம் என்றே தோன்றும்.
டெட் சியாங் கதையில் எழுதாத ஒரு கேள்வியை நாயகி எழுப்புவார்:
“சம்ஸ்கிருதத்தில் போர் என்பதற்கு என்ன வார்த்தை என்று என்னை விட நல்ல மொழியியல் வித்தகர் என்று சொல்கிறீர்களே… அவரிடம் கேட்டுப் பாருங்கள்.”
இந்தத் தூண்டிலைக் கொண்டு நானும் தேடிப் பார்த்தேன். சமஸ்கிருதத்தில் இரு வார்த்தைகள் சொல்கிறார்கள்.
1. समर – சமர் – என்றால் ஒன்றுகூடல்; அது பேச்சுவார்த்தைக்காக இருக்கலாம்; சமாதானத்துக்காக இருக்கலாம்; சிக்கல்களை தீர்த்துக் கொள்வதற்காக எல்லோரும் ஓரிடத்தில் கூடுவது; ஒன்று சேர்வது
2. गविष्टि – கவிஸ்தி – மேலும் மேலும் மாடுகளை விரும்புபவர். பசுக்களுக்காக களத்தில் குதித்து போராடுபவர்.
பகவத் கீதையில் கிருஷ்ணர்:
सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी |
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् || 13||
இந்திரியங்களை வசப்படுத்திய புருஷன் மனத்தால் எல்லாக் கருமங்களையும் துறந்து, சுகமாக — ஒன்பது வாயிலுடைய நகரில் (நவத்வரே புரி) – ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருக்கின்றான். (பகவத் கீதை – 5-13)
துவாரம் என்றால் வழி. இரண்டு காதுகள், இரண்டு கண்கள், மூக்கின் இரண்டு துளைகள், வாய், மல ஜலம் கழிக்கும் இரு உறுப்புகள் ஆக ஒன்பது துளைகள். வேற்றுகிரகவாசிகளுக்கும் பல துவாரங்கள் இருக்கின்றன. அவர்கள் வாய்வழியேதான் கழிவுகளும் வெளியேறுகின்றனவோ என அவள் நினைக்கிறாள். நம் வாய் வழியாக நம்முள்ளே இருக்கும் அசுத்தங்கள் வெளிப்படுகின்றனவே! அதனால் அப்படி யோசித்திருப்பாளோ?
அவர்களின் எழுத்துமுறையைப் பார்த்தால் முற்காலத்திய சைகை முறை போல் இருந்தது. அதாவது எந்த இடத்தில் சொல்கிறோம் என்பதைப் பொருத்து, பொருள் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒரு வாக்கியம் என்றால் எழுவாய் வேண்டும்; பயனிலை வேண்டும்; செயப்படுபொருள் இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லாமல் ’ஏறு’ என்று எழுதிவிட்டு அதன் அருகேயும் மேலேயும் கீழேயும் ஆங்காங்கே சில நிறுத்தற்குறிகளைப் போட்டால் ‘மரம் மேல் அவன் ஏறினான்’ என்றோ ‘என் மேலே என் மகள் ஏறி முதுகை மெதுவாக மிதித்தாள்’ என்றோ அர்த்தமாகும் என்றால் எப்படி? அதுதான் அவர்களின் லிபி. Semasiographic முறை. கொஞ்சம் படம்; கொஞ்சம் சைகை; கொஞ்சம் குறிச் சின்னங்கள். அதாவது வாட்ஸாப்பில் ஆப்பிள் என்று சொல்லாமல் ஆப்பிளுக்கான சின்னம் இட்டு செய்தி அனுப்புவோமே… அந்த மாதிரி. பின்னம் (¼) என்றும் வர்க்கமூலம் (√) என்றும் கணிதத்தில் குறிகள் இடுவோமே… (∑, ≡, ∫) அந்த மாதிரி. மொத்த மொழியுமே, ஒலிகளுமே இப்படி சின்னங்கள் கொண்டு புரிய வைத்தால் எப்படி இருக்கும்? அதை எழுத்தில் கொணர்ந்து, இதை நாம் எழுதுமாறு, அச்சடிக்கும் நொடியில், தட்டச்சும் புயல் வேகத்தில் கொணர்வதற்கு பெயர் Glottography.
எழுத்தாளர் தாமஸ் வொல்ஃப் பற்றிய ‘ஜீனியஸ்’ படத்தில் ஒரு வசனம் வரும்.
“எப்பா… எவ்வளவு பெரிய பத்தி… இல்லியா அப்பா?” என்பார் மகள்.
அப்பா அதை வெட்டிக் கத்திரி போடும் பதிப்பாளர் + ஆசிரியர். அவரின் பதில், “இந்தப் பத்தி நாலு பக்கம் முன்னமே தொடங்கிருச்சுமா!” என்பதாக இருக்கும்.
அது போல் ஏழுகால் பிராணிகள் எல்லாவற்றிற்கும் வளையம் வளையமாகச் சுற்றுகிறார்கள். ஒரு வார்த்தையா… அதற்கும் ஒரு வளையம். ஒரு வரியா… அதற்கும் ஒரு வளையம். ஒரு பத்தியா… அதற்கும் ஒரு வளையம். வளையத்தில் ஆங்காங்கே வளைசல்கள், நெடிசல்கள் – அவை கொண்டு மொத்த சிந்தனையும் அடுத்தவருக்குக் கடத்துகிறார்கள்.
இசைக்கலைஞர்களுக்கு அவர்களின் மொழி புரியும். வரிவடிவத்திற்கும் அவர்கள் வாத்தியத்தில் எழுப்பும் ஓசைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆனால், இசை வடிவம் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு எது நிறுத்தற்குறி, எது எந்த வாத்தியத்திற்கான குறி என்பது புரியாது. அதே போல், ஏதோவொரு வினோதமொழி இந்த ஏழுகால் (அல்லது ஏழு கை) பிராணிகளுக்குத் தெரிந்திருக்கிறது. அதில் செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
குழந்தைகளைப் பார்ப்பதில்தான் எத்தனை சந்தோஷம்? அவை சின்னஞ்சிறிய குட்டிப் பாப்பாக்களாக நம்முடன் தத்தித் தவழ்ந்து நடை போடும் பருவம் எத்துணை பாக்கியம் நிறைந்தது! முட்டி மோதி உட்காரும்; பொத்தென்று சரியும்; அதன் பின் நிற்கப் பார்க்கும்; கூடவே வளர்ப்புப் பிராணியைப் பிராண்டும்; மிரண்டு போன நாயை சோகமாக கவனிக்கும். இந்த பச்சிளம் பருவத்தை, மொழி புரியாத, சூட்சுமம் தெரியாத, நம்முடைய சைகைகளை முழுமையாக உணராத பால்யகாலக் குழந்தைகள் போல் அந்த வேற்று கிரக வாசிகளோடு அந்தத் தாய் உறவாடுகிறாள்.
நம்முடைய குழந்தைகளை நாம் எப்போதும் சிறுமிகளாகவே பார்க்கிறோம். நம் அம்மாவிற்கு நாம் எப்போதும் குழந்தைதான். எவ்வளவு வளர்ந்தாலும், முடி கொட்டினாலும், மீசை நரைத்தாலும், இன்னும் சிறுவர்கள்தான். அதே சமயம், நம் குழந்தைகள் நம்மைப் போல் இருப்பதில்லை. நமக்கு பணத்தை விட படிப்பு முக்கியமாகப் படலாம். மகவுகளுக்கோ பணம் அதிக நாட்டத்தைத் தரலாம். நாம் புத்தகத்தைத் தேடித் தேடி வாசிப்பவர்களாக இருக்கலாம். அவர்களுக்கோ செல்பேசி விளையாட்டே பொழுதுபோக்காக இருக்கலாம். நம்மிடம் இருந்துதானே வந்தார்கள்? நம் அணுக்களின் உருவாக்கம்தானே? நம் வளர்ப்புதானே? நம் மொழியில்தானே பேசுகிறார்கள்… பின் எப்படி வித்தியாசப்படுகிறார்கள். விடைகளைத் தேடுகிறார் ஆசிரியர்.
கதை என்பதும் படம் என்பதும் இந்த முரணில்தான் உயிர் கொடுக்கிறது. பிராணவாயு என்றோ அறிவியல் என்றோ தத்துவம் என்றோ உலக ஒற்றுமை என்றோ ஜல்லியடித்திருந்தால் இன்னொரு இண்டெர்ஸ்டெல்லார் ஆக மசாலா ஆகி ஊசிப் போயிருக்கும். இது உயிருள்ள கதை. ஜீவனுள்ள படம். எப்படி? நம் வாழ்வோடு அறிவியலை ஒன்றிணைக்கிறது. நம்முடைய குழந்தைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட கட்டளையிடுகிறோம். கோட்பாட்டு இயற்பியல் போல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வளர்க்கப் பார்க்கிறோம். ஆனால், அதற்கு உட்பட்டு வளரும் அவர்களே, சில இடங்களில் காட்டுச்செடியாக விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு செயலூக்கம் கொண்டு பறக்கிறார்கள். தண்ணிரில் பட்ட ஒளி போல் சாய்வுறுகிறார்கள். ஒரே இடத்தில் புறப்படும் ஒளியும் ஒலியும் நம்மை வெவ்வேறு தருணங்களில் மின்னல் ஒளியாகவும் இடி ஒலியாகவும் சென்று தாக்கம் தருவது போல் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கிறார்கள்.
நீங்கள் ஃபெர்மாட் கொள்கை குறித்து தெரிந்து வைத்திருப்பது நலம்; அப்படியே நுண்கணிதவியலின் அம்ச வேறுபாடுகளைக் குறித்து புலமை பெற்றிருக்க வேண்டும்; கூடவே கொஞ்சம் வடிவவியல், அப்படியே கொஞ்சம் போல் அட்சரக்கணிதம் எல்லாம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுங்கள். தொகையீட்டுக் கணிப்பியல் (இண்டெகிரல் கால்குலஸ்) என்பதை பன்னிரெண்டாம் வகுப்பில் உருப்போட்டிருப்பீர்கள். அதை மீண்டும் மூளைக்குள் கொண்டு வாருங்கள், நீங்கள் நல்ல மொழியியல் வல்லுநராக இருந்தால் இந்தக் கதையை முழுமையாக அனுபவிக்க முடியும் என்றெல்லாம் பயமுறுத்த ஆசைதான். ஆனால், பன்மொழி வித்தகராக இல்லாவிட்டாலும் நம் சொற்களின், மொழிகளின் போதாமைகளை உணர்பவராக இருந்தால் போதுமானது.
கையெழுத்தை வைத்து நம் குணநலன்களையும் மாண்புகளையும் ஜோசியம் போல் தெரிந்து கொள்ள முயன்றோம். இங்கே வட்டத்தின் பருமையைப் பொருத்தும், அந்த வட்டங்களின் வார்த்தை விழுந்த இடங்களின் பகுவல் (fractal) குறித்தும் அறிந்தால் மொழிப்புலமை கிட்டும். அதை வெறும் ஓவியமாகப் பார்த்துக் கொண்டிருந்தால் கலைப்பொருளாக மட்டுமே அர்த்தப்படும். அவர்களின் வரிவடிவங்களைப் பார்த்தால் நம் வாக்கியங்களை எடுத்து சுத்தியலால் உடைத்து, மின்விசிறியால் பறக்கவிட்டு அதன்பின் அவசரகதியில் எதையெதையோ ஒட்டிக் கொடுத்தது போல் இருந்தது என்கிறார் கதையில். படத்தில் இது ஓவியங்களாக, தீற்றல்களாக, கறுப்பு வெள்ளை வளையங்களாக மின்னுகிறது.
இந்தப் படத்தின் முக்கியமான விஷயம் என்னவென்றால் அசல் கதையின் அடிநாதத்தை எவ்வாறு உணர்ச்சியளவில் பிசகாமல் திரைக்கதையாக காட்சிபூர்வமாக உருவாகியிருக்கிறது என்பதுதான். ஒரு அத்தியாயம் பழைய நினைவுகள்; இன்னொரு அத்தியாயம் தற்காலம்; மற்றொரு அத்தியாயம் வருங்காலம் என்று நாவலில் எழுதிவிடலாம். திரைப்படத்தில் அப்படி காட்டினால் பார்வையாளர் கடுப்பாகி விடுவார்; முடிவு தெரிந்து அசுவாரசியமாகி விடுவார்; எப்படி மசாலா சினிமா ஆளை, இலக்கிய ஆக்கத்திற்குள் கட்டிப் போடுவது!? அதைவிட கதையை இன்னும் மேம்படுத்துவது எப்படி முடியும்? தர்க்கபூர்வமாகவும் அறிவியல்மொழியிலும் பிரமிக்க வைக்கும் புனைவை வெள்ளித்திரையில் மேலும் மினுக்குவது எப்படி? சாதித்து இருக்கிறார்கள்.
ஒரு நாட்டிற்குள் அன்னியர்கள் ஏன் உள்ளே நுழைகிறார்கள் என்பது அந்தந்த நாட்டின் ஆட்சியாளர்களின் கவலை. பாரத தேசத்திற்குள் கிழக்கிந்திய கம்பெனி கால் வைத்தது. அதற்கு முன் மதமாற்றத்திற்காக மொகலாயர்கள் உள்ளே நுழைந்தார்கள். அதற்கும் முன் கொள்ளையடிப்பதற்காக கில்ஜி வந்தான். அதற்கும் முன் மானுடவியலாளராக ஃபாஹியான் என்னும் சீனரும் பௌத்த மார்க்கத்தின் பரப்பை கவனிக்க சுவான் ஸாங் (யுவான் சுவாங்)கும் வந்தார்கள். இந்த அன்னிய கிரகவாசிகள் எதற்காக வந்தேறியிருக்கிறார்கள்? பணத்திற்காகவா? பண்பாட்டிற்காகவா? நிலைத்தை அபகரித்து புதிய இடத்தை தங்களுக்காக உருவாக்கிக் கொள்வதற்காகவா?
நமக்கு நம் வருங்காலம் தெரியுமா? அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அறிவோமா? ஓரளவு அறிந்தே இருக்கிறோம். திருடினால் ஜெயிலில் போடுவார்கள் என்று தெரிந்தும் தவறுகளைச் செய்கிறோம். அடுத்தவரின் மனையை நோக்கி படி தாண்டிய உறவை மேற்கொண்டால், நம் சொந்த வாழ்வு நரகமாகும் என்று தெரிந்தே, பிறன்மனை நாடுகிறோம். அரை வேலை செய்தால் உருப்படாது எனத் தெரிந்தே முழுமையாகப் பணியை முடிக்காமல் அரை வேக்காடில் தந்து, பணிநீக்கம் ஆகிறோம். அப்படியானால் நமக்கு வரப்போவது தெரிந்தே, அதன்படி நடக்கிறோம். சுதந்திரமாகச் செய்கிறோம் என அதற்கு அர்த்தம் கற்பிகிறோமா? படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று அறிந்திருக்கிறோம். பிடித்ததை செய்தால் வாழ்வு இனிக்கும் என்று அறிந்திருக்கிறோம். அறிந்ததைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறோமா? அல்லது அறியாமையில் வாழ்க்கையின் வருங்காலம் தெரியவில்லை என மயங்குகிறோமா?
நம்மை யாரும் நன்றாக படி என்றோ கஷ்டப்பட்டு விளையாடு என்றோ கட்டளையிடுவதில்லை. இது எனக்கு செய்யத் தெரியாது என்பதால் சிலவற்றை செய்து பார்க்கிறேன். அதே சமயம், சிலவற்றை ஏற்கனவே பலமுறை சிறப்பாக செய்திருக்கிறேன் என்பதால் மீண்டும் மீண்டும் விளையாட்டாக சிரத்தையாக செய்து முடிக்கிறேன். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள் என்று எவரும் அறிவுறுத்தாமலேயே அந்த நவீன நுட்பங்களில் ஆர்வம் கொள்கிறேன். தெரியாத மொழி என்று சிலவற்றை ஒதுக்கி புறந்தள்ளி, வாழ்க்கைக்கும் போஜனத்திற்கும் முக்கியத்துவம் என்றால் விளங்கிக் கொள்ளாமல் விலகி நிற்கிறேன். ஏன்? இதுதான் தனிமனித சுதந்திரமா!?
கண்ணன் விஸ்வரூபம் எடுத்து அர்ஜுனனிடம் எல்லாப் பொருள்களையும் உணர்த்தும்போது அர்ஜுனனுக்கு சகலமும் புலப்படுகிறது. அப்பொழுதே போரை கைவிட்டு அபிமன்யுவையும் பால பஞ்ச பாண்டவர்களையும் காப்பாற்றலாமே… ஏன் செய்வதில்லை? நமக்கு வருங்காலம் தெரிந்தாலும் நாம் மாற்றிக் கொள்வதில்லை. சொல்லப்போனால் மகாபாரதம் எப்படி முடியும் என்பது நமக்கெல்லாருக்கும் தெரியும். தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதையின் இராமாயணமோ, கம்பராமாயணமோ எப்படிப்பட்ட காட்சிகள் கொண்டது என்று உங்கள் எல்லோருக்கும் அத்துப்படி. இருந்தாலும், ஏன் அதை மீண்டும் மீண்டும் படிக்கிறோம்? தொலைக்காட்சியில் பார்க்கிறோம்? கல்யாண நாள் அன்று தாலி கட்டுவோம், மாலை மாற்றுவோம், மோதிரம் போட்டு விடுவார்கள் என்பதெல்லாம் தெரிந்த விஷயம்தானே! அப்புறம் ஏன், அதே செய்கைகளை குறிப்பிட்ட முகூர்த்தத்தில் செய்து பார்த்து அரங்கேற்றுகிறோம்? இந்தக் கேள்விகளை எழுப்பவும் அதற்கான விடைகளை உங்கள் மனதில் முட்டிமோத வைக்கும் கதை + படம் இது.
மனிதர்களுக்குள் நட்பு உதித்த போது மொழியும் உதித்ததா? அல்லது நட்பின் வழியாக மொழி உதயமானதா? அடிக்கவும் உதைக்கவும் இல்லாமல் சகாக்களுடன் கேட்கவும் பேசவும் தெரிந்து கொண்டபோது வாழ்வின் உன்னதத்தை அறிந்து கொண்டிருக்கிறோம். வாழ்நாளில் உள்ள மிச்சத்தை அர்த்தப்படுத்த நட்பும், அந்த நட்பின் உரையாடலும் அவசியப்பட்டிருக்கிறது. நம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்த மொழி உருவாகியது. மொழியின் மூலகர்த்தா நட்பு எனலாம். தோழமையிடம் அளவளாவவே மொழி தோன்றியிருக்கும். தோளில் கைபோடுவது தோழமையின் சின்னம். அது முதுகில் குத்த அல்ல என்பதற்கு சைகை பாஷை உருவாகிறது. அது பேச்சாக மாறி, கதைத்தலாக மாறியிருக்கிறது.
இந்தப் படம் அதன் கதை.
மேலும்:
1. மொழியியலின் சமீபத்திய முன்னெடுப்புகள் | எம்.ஐ.டி. செய்திகள்
2. We Need More Sci-Fi Movies That Celebrate Otherness | தி ஹஃபிங்டன் போஸ்ட்
3. மாவோ-வின் சீனா: The Language Game | பெரி லிங்க் | நியு யார்க் ரிவ்யு ஆஃப் புக்ஸ்
4. அத்தியாயம் எட்டு: “Smart Machines” | Edge.org in The Third Culture
5. Thick of Tongue by John McWhorter – குவெர்னிகா: ”கறுப்பு ஒலி” என்றால் என்ன சொல்ல வருகிறார்கள்?
6. Deep Sounds – குவெர்னிகா: ஹால் வொயிட்ஹெட் (Hal Whitehead) என்பவரிடம் ரேச்சல் ஆலன் (Rachel Allen) திமிங்கிலத்துடன் உரையாடல் நிகழ்த்துவது எப்படி என்றும் இயற்கையில் கலச்சாரம் எப்படி பரிமளிக்கிறது என்றும் நேர்காண்கிறார்
7. மொழியின் பரிணாம வளர்ச்சியில் நட்பின் பங்கு குறித்து யுடோரா வெல்ட்டி (Eudora Welty) – பிரெயின் பிக்கிங்ஸ்
8. Donald Trump’s strange speaking style, as explained by linguists – Vox
9. The Linguistic Evolution of ‘Like’ – தி அட்லாண்டிக்
10. The Running Conversation in Your Head – The Atlantic