பாட்டிக்கு, அன்புடன்
இனி,
அவள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்.
ஆமாம் இல்லை செய்தேன் கேட்டேன்
சரி தவறு பகவான் போக்கு..
ஒரு எதிர்வினையும் தேவையில்லை.
எல்லா பதில்களுக்கு பின்னாலும்
எப்போதும் நிர்மலமாய்
விரிந்த சிரிப்போடு
படுத்துவிட்டாள்..
மத்திய வெயிலில் இதமான
மின்விசிறியின்கீழ் இளைப்பாறும்
ஒரு சில மணிகளாக.
பரபரத்து எழுந்து
டீ, காபி போட வேண்டாம்..
கடைகளுக்குப் போய்
மருந்து காய்கறி
வாங்க வேண்டாம்..
தலைவலி கால்வலி என்று
நினைத்துப் பார்க்க வேண்டாம்..
நாளையின் விசித்திரங்களுக்காக
ஜாதகம் பார்க்க வேண்டாம்..
சதுர்த்தி, பிரதோஷம் என்று
கோயில் சென்று சுற்ற வேண்டாம்..
ஒவ்வொரு கணமும்
மனதில் ஓடிக்கொண்டிருந்த
மந்திரங்களாய்
நிறைந்துவிட்டாள்..
செவிட்டு உலகில் பேசிக்கொண்டிருக்கிறோம்
சிரிப்பு அழுகை கிண்டல் கோபம்
ஆற்றாமை,
ஒன்றும் மற்றொருவரை
தீண்டுவதில்லை..
யாரும் யாருக்கும் பதில் சொல்வதில்லை..
இனி, அவளும்
யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்..
தனதேயான முடிவிலா
இன்பத்தை அறிந்துவிட்டாள்..
கடைசியாக ஒரு கேள்வி,
“அப்படியும் ஒரு உலகம் இருக்கிறதா ?”
ஆம்,
அதற்கான தொலைவு
அவள் வாழ்நாள் தூரம்..
****0*****
வீட்டில் ஒரு சுண்டெலி
மேஜை மடிக்கணினி
பின்னிருந்து,
ஒரு கறுப்புத் தாவல்.
உள்ளிருந்து தப்பித்ததுபோன்ற
பிரமையா?
வீட்டில் சுண்டெலி ஒன்று
வருகிறதென்றாளே , அம்மா?
ஆமாம், அவள் குரங்கு உள்ளேவந்து
பழம் தின்கிறது என்றும்தான் சொல்கிறாள்.
டி.வி பின்னிருந்து இன்னொரு தாவல்.
வேகமாய் எழுந்துபோய் பார்த்தாக வேண்டும்.
உலகின் அத்தனை மின்கம்பிகளும்
அங்குதான் சிக்கியிருக்கின்றன.
எல்லா அறைகளையும் பூட்டிக்கொண்டு
அமர்ந்திருந்தோம்.
மறுநாள் காலை,
காபி கொதிக்கும் அடுப்பிற்கு பின்னிருந்து
தாவியது.
வீட்டைச் சுற்றி வந்து
சுவர்களை அங்குலம் அங்குலமாக தழுவி,
ஓட்டைகளைத் தேடி, அடைத்து, மூடி
ஓடி ஓய்ந்தபோது,
தொலைந்த அதே இடத்தில்
சிக்கியிருந்தது சுண்டெலி,
தாவுவது போலவே.
****0****
கடலில் ஒரு விடுமுறை
ஆமாம், எனக்கு நீந்த தெரியாது.
வருட வருடங்களாக
நிலத்தில் மட்டுமே இருந்திருக்கிறேன்
தூர தூரங்களுக்கும் பயணித்திருக்கிறேன்
நிலம் மீது நிலம் மீது நிலம்.
விமானம் பறக்கும்போதே
விழவும் தயாராகிவிடுகிறது.
நிலத்தில் குளம்போல
கடல்மீது தீவுகள்.
மீன்போல ஒரு வேகப்படகு
அதன் வயற்றில் அமர்ந்து,
மீன்-ஆக தியானிக்கலாம்.
கடல் மீது கடல் மீது கடல்.
ஆயிரம் மழைகள்
சலசலக்கும் கம்பளம்.
நடப்பவர்களே இல்லாத
உலகம்.
இடி இடிக்கும் கருவானத்தில்
ஆழம்.
உயிர், அங்கி அணிந்து
மிதக்கலாம்.
மூச்சைப் பிடித்துக்கொண்டு
உள்ளிருக்கும்,
ஒருசில நிமிடங்கள்தான்
எத்தனை வண்ணங்கள்!