பழனி

lump1

இத எவன் செஞ்சானோ அவங்கம்மாவ நான் செய்வேன்ஸ்டோர்ஸ் இன்சார்ஜ்  தொண்டையடைக்க கூவியபோதுகைகள் அதிர்ந்து, கழுத்து நரம்புகள் தெரிய அவன்முகம் வலிப்புவந்தவன் போலிருந்தது. உள்ளே நுழைந்த டீக்காரப்பையன் கைநடுங்கி கிளாஸ் உரசும் சத்தம் கேட்டு அனைவரும் சற்று அமைதியானார்கள்.

போய்ச் செய்யி  இழுத்துச் சொன்னான் பழனி.

சிற்றம்பலம்  அவனை முறைத்ததை அவன் கண்டுகொள்ளவில்லை.

டீயைக் கொடுத்துவிட்டு பையன் சென்று கதவு மூடியதும் அவன் மீண்டும் ஆரம்பித்தான்,

சிற்றம்பலம் கையைத்தூக்கி, ‘கொஞ்சம் டீயக்குடிய்யாசப்ப மேட்டருக்கு போயி…’ என்றார்.

எது சப்ப மேட்டரு? வண்டிய லொங்கு லொங்குனு தள்ட்டு போனேன். மெக்கானிக்கு கரெக்டா சொல்றான், சார்உங்க பைக்க எவனோ நோண்ட்றான்.. சும்மால்லாம் இது போவாது.. நீட்டு ஸ்குரூ வச்சி மறைய கழட்டிருக்கணும்.’

அதனால…’ பழனி இடைமறித்தான்.

சிற்றம்பலம்சும்மா இர்ராஎன்றார்.

ஆங்.. உங்க டீம் கையிலதானே ஸ்குரூட்ரைவர் இருக்கு?’

எங்க எட்டு பேர் கையிலையும் எப்பப்ப என்னென்ன இருக்குன்னு பாக்கிறதுதான் உன் வேலயா?’

பழனி, நான் உங்கிட்ட பேசலசார்,  ஸ்டோர் ரூம் உள்ள இருந்த சர்க்கரைய ஏண்டா  எடுத்தீங்கன்னு கேட்டேன்.. எனக்கு நூத்தம்பது ரூவா செலவு வச்சிட்டாங்க.. உங்களுக்காக பாக்கிறேன்.. இல்லாட்டி அவ்ளோதான்.’

பிரச்சனை முடிந்துவிட்டது.

அவ்ளோதான் போங்கப்பாஎன்றான் பழனி

அதற்கு மேல் ஸ்டோர்ஸ்  இன்சார்ஜ்க்கு கெப்பாசிட்டி இல்லை என்பது தெரியும். . ஸ்டோர் ரூமுக்கு வரும் அனைவரிடமும் குறிப்பாக இவன் பைக்கை தள்ளிக்கொண்டு போனதைப் பார்த்த அனைவரிடமும்  கதையாக சொல்வதற்கு ஏதுவாக, ‘உங்களுக்காகதான் சார் பாக்கிறேன்…’ என வெளியில் போய் சத்தமாக ஒருமுறை சொல்லுவான்.

எனக்கு சிரிப்பு வந்தது. அனைத்தும் முடிந்து கலைந்து போனதும் சிற்றம்பலம் என்னிடம் வந்து மெதுவாகஅந்த மஞ்சாப்புடி டபாரியா ஸ்குரூ டிரைவரை நல்லா அலம்பித்தொடச்சி ரூமுக்கு எடுத்துட்டு வாடாஎன்றார்.

அவரின் அறையில் மரப்பலகையில் விபூதி, மஞ்சள் குங்குமக் கிண்ணங்களும் பலகை மேல் பிள்ளையாரும் முப்பெருந்தேவியரும் இருக்கும் நீள்செவ்வக வடிவ படமும் உண்டு. ஸ்குரூ ட்ரைவரை வாங்கி அந்தப் பலகை மீது வைத்தார். கையைக்கூப்பி உரக்க கும்பிட்டார்அம்மா, த்த்தாயே, லோகமாத்தா…’  நான் வெளியே வந்தேன். பழனி வாசலில் நின்றிருந்தான். ‘பூஜை ஆரம்பிச்சாச்சாஒருநாள் ஒம்மாச்சி வந்து ஸ்குரூ டிரைவராலயே அவர் கண்ண குத்தப் போகுது.. அப்பத்தான் நிறுத்தப்போறாரு.’

பைக்கை நோண்டியது பழனிதான் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாரும் சொல்லமாட்டார்கள். பயமெல்லாம் ஒண்ணுமில்லை. நம்பிக்கையாக அடித்துச் சொல்ல முடியாது. விண்டவர் கண்டிலர் மாதிரிதான். எப்படி போறான் எப்படி வரான் ஒண்ணும் தெரியாது.

அன்று, இன்ஸ்பெக்டர் என் பிடரியில் ஓங்கி அடித்தபோது தலை கிறுகிறுத்து கண்ணீரும் வந்துவிட்டது. எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மானபங்கமாகவும் இருந்தது. ஹோட்டலில் புகார் கொடுத்த அந்த வெள்ளைக்காரிதான் தடுத்தாள்.

அவள் ரூம் நம்பர் டென்லெவனில் தங்கியிருந்தாள்.  அவளது செயின் காணாமல் போயிருந்தது. மதியம் நான்தான் அந்த ரூமிற்கு ஏசி சர்வீசுக்கு போனவன்.  ஜியெம்மின்  கஸ்டமர் மீதான விசுவாசமும் இன்ஸ்பெக்டரின்  ஜியெம் மீதான விசுவாசமும் என் பிடரியில்தான் விழுந்தன.

ஐ வாஸ் வாட்சிங் ஹிம்  ஐ யம் ஷ்யூர்.. ஹீ நெவர் ஸ்டோல் தட்ஹீ இஸ் ஏன் இன்னொசன்ட் கிட்அவள் குறுக்கிட்டு பரபரப்புடன் கூறினாள். அவள் கண்ணில் கரிசனம்தான் இருந்தது.

இருந்தாலும் பலத்த சோதனைக்குப்பின்னும், அவளும் போலீசில் புகார் ஏதும் கொடுக்காததாலும் என்னை விட்டுவைத்தனர். அவள் போகும்போது ஹோட்டல் வாசலில் வைத்து அனைவர் முன்னும் என்னிடம்  மன்னிப்புக் கேட்டது எனக்கு ஆறுதலாக இருந்தது. செயின் காணாமல் போன அன்று, கீழ் மாடியில் ட்ரிப்பர் மாற்ற இன்னொரு ஆள் வேணும் என காத்திருந்த பழனியிடம்,  ஹவுஸ் கீப்பர் நான் ஏசி சர்வீஸ் செய்ய வந்ததைச சொன்னதும்,  பழனி என்னைத் தேடி ரூமுக்கு வந்ததும் சில நாட்கள் கழித்துத்தான் சிற்றம்பலம் வாயிலாக தெரியவந்தன.  என்னையும் அவனையும் தவிர வேறு யாரும் வெளியாள் அன்றைக்கு அந்த ரூமுக்கு வரவில்லை.

உன்னையெல்லாம் திருடன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா? உன் மூஞ்சிய பாத்தே  விட்ருவாங்கடா.. சும்மா சம்பிரதாயத்துக்கு ஒரு தட்டு.. அவ்ளோதான். ஆனா, நான்லாம் இப்டி  மாட்னேன்னு வையேன்.. புடிச்சு உள்ளையே போட்ருவாங்க. அப்புறம்தான் விசாரிப்பாங்கசெயின் காணாமல் போன அன்று  எனக்கு அவன் பீர் ஊற்றி கொடுக்கும்போது சொல்லிக்கொண்டிருந்தான்.

பழனிக்கு அசாத்திய தைரியம். நான் அவனை முதலில் பார்த்ததே,  நைட்ஷிஃப்டில் மேலிருந்து வேப்பமர முனிபோல குதித்த போதுதான்.

நீதான் புதுசா வந்தவனா?’

அவன் எங்கிருந்து குதித்தான் என சுகுமார் வழியாக தெரிந்துகொண்டேன். பழனி,  ஆண் பெண் ஜோடியாக தங்கும் ரூம்களில் செக் இன்னுக்கு முன்பே போய் ஜன்னல் லாக்கை அரைகுறையாக வைத்து வந்து இரவு நேரங்களில் வேடிக்கை பார்ப்பான். எதற்கும் பயப்படுவதில்லை. அவன் மூளை அவனுக்கென்று ஒரு தனி ட்ராக்கில் வேகமாக வேலை செய்யும். ஜெனரேட்டர் ஸ்பேர் ஃபில்டர்,  காயில், காப்பர் ஒயர் எல்லாவற்றையும் எப்படியோ நேக்காக விற்றுவிடுவான். அனைத்து காண்டிராக்டர்களிடமும் சிற்றம்பலம் அறியாமல் தனி டீலில் தனி கமிஷன் உண்டு. ஆனால் எதுவானாலும், விண்டவர் கண்டிலர் கதைதான்.

பழனியின்  சுறுசுறுப்பும், வேலைத்திறனும் அவனை யாரும் ஒன்றும் சொல்லிவிட முடியாமல் இருந்தன. சிற்றம்பலத்தை அடுத்து எந்த சர்க்யூட் எங்கே போகிறது என அவனுக்குத்த்தான் தெரியும். ஒருமுறை இரண்டு ஃபேஸ் பவர்கட்டாகி பெரிய ஜென்செட்டிலும் ஆயில் லீக்காகி நின்றபோது, சிற்றம்பலம் நடுங்கி விட்டார். எப்படியும் தன் வேலை அன்றோடு காலி என அவர் நம்பினார். அன்று பழனிதான்  ஒவ்வொருமாடி ஏசியாக அணைத்து பிறகு போட்டு என மாற்றி மாற்றி கஸ்டமர் புகார் இல்லாமல் சின்ன ஜென்செட்டிலேயே ஓட்டி சமாளித்தான்.  அன்று முதல் ஜியெம்முக்கும் பிடித்தவன் ஆகியிருந்தான். அதன்பின் சேஃப்டி  அலார்ம் பொருத்தியபோது, அவனைக் கூப்பிட்டும் கருத்து கேட்டார். அவன் பெரிதாக கருத்து ஏதும் சொல்லவில்லை.  ஸ்டாஃப் ரூம்ல ஒண்ணு கண்டிப்பா போட்ருணும் சார்.  செக்யூரிட்டி ஆபீசர் யூனிபாஃர்ம் மாத்தறப்போ ஆன் பண்ணிரனும்…’

எம்.டி.யும் சேர்ந்து சிரித்தார்.

அவன் சுபாவமும் அப்படித்தான். மெளனமாக இருந்து பார்த்ததில்லை.  ஆனால், நாங்கள் யோசிக்க முடியாததை எல்லாம் அவன் செய்தான். ஆனால் லேசாக கண்அயர்ந்ததற்கே  நானும் சுகுமாரும் எச்சரிக்கைக் கடிதம் கிடைக்கப் பெற்றது போல் அவனுக்கு ஒண்ணும் கிடைத்ததில்லை.  அவன் ஸ்டோரிலிருந்து எதையாவது எடுத்து வந்தாலும் சங்கரியோ, மற்ற இரு பெண்களோ ஏதும் புகார் சொல்வதில்லை. ஹவுஸ் கீப்பிங் சீஃப் ஆக இருந்த ஆங்கிலோ இந்தியன் மேடமும் அவன் வேகண்ட்ரூம் பாத்டப்பில் குளிப்பதற்கும் போன் செய்வதற்கும் ஒன்றும் சொல்வதில்லை. இரவு நேரங்களில் அவன் தூங்கினாலும் செக்யூரிட்டி யாரும் லாக் ரிப்போர்ட் எழுதி வைப்பதில்லை. கிச்சனில் தந்தூரியை சாப்பிட்டாலும் பாய் புகார் சொல்வதில்லை.  ஒருமுறை புகார் சொன்ன பீகார்க்காரன் சர்வீஸ்லிஃப்டில்  ஒருமணி நேரம் மாட்டிக்கொண்ட பிறகு யாருக்கும் புகார் என ஏதும் இருந்ததில்லை.

சுகுமார் சங்கரியிடம் பேச முயற்சித்துக்கொண்டிருந்த ஒரு மாலையில் எங்கள் டீமில் இருந்த ஒருவன் ஜெனரேட்டருக்கு டீசல் வாங்கிவரும் வண்டியை ஸ்டாண்ட் ஆட்டோ மீது இடித்துவிட்டிருந்தான். ஸ்டாண்டுகாரர்களுக்கும் எங்களுக்குமான வாய்ப்பேச்சு, அந்த டிரைவர் தலையில் ரின்ஸ் ஸ்பேனரால் பழனி அடித்தபோது முடிவுக்கு வந்தது. டிரைவர் தன்தரப்பு வாதம் முடிவுக்கு வந்ததை உணர்ந்து கையால் தலையை மூடி அவர் ஆட்டோவை அவரே ஓட்டிப்போய் அவரே அட்மிட்டும் ஆகிக்கொண்டார்.  சிற்றம்பலம்தான் பிறகு  ஸ்டேஷனில் யூனியனிடம் பேசி வைத்தியத்திற்கு பணம் அளித்து வந்தார். வந்தவுடன் என்னிடம்  மெதுவாக, ‘அந்த ரின்ஸ் ஸ்பேனரை நல்லா அலம்பித்தொடச்சி ரூமுக்கு எடுத்துட்டு வாடாஎன்றார்.

அந்த ஸ்பேனரை கொடுத்துவிட்டு  திரும்பும்போது, இடதுபக்க இடுப்பில் பிளாஸ்டிக் கூடையுடன் சென்ற சங்கரியையும் அவள் எதிரில் வந்த பழனியையும் பார்த்தேன்.   தாண்டிப் போகும்போது கூடை வலது பக்கம் மாறியிருந்தது. அவள் சிரிப்புடன் துள்ளிக்கொண்டு ஓடினாள்.  சுகுமாரும் பார்த்துவிட்டிருந்தான். அதன்பின் ஒருவாரம் அவள் கணவன் அவளை  கொண்டுவந்து விட்டு அழைத்துச்சென்றான். சங்கரிக்காக ஷப்ட் முடிவதற்கு அரைமணி முன்னே வந்து நிற்கும் அவள் கணவனை எங்கள் யாருக்குமே பிடித்ததில்லை. அந்த ஒரு வாரமும் அவள் ஒரு நடைபிணம் போல வேலை பார்த்தாள்.  பிறகு வேலையை விட்டு நின்றுவிட்டதாக சொன்னார்கள். அவள் தி.நகரில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்ப்பதாகவும் முதல்நாள் இரவு  வீட்டுக்கு வரும் வழியில் பார்த்தாகவும் சுகுமார் சொன்னான்.

அதே பூ போட்ட வயலட் சேலடா. ஜவுளிக்கடைக்கெல்லாம் யூனிபார்மு…’

பேசினியாடா?’

இல்ல.. கிராஸ் பண்ணி வந்துட்டேன்..’

ஆவணிமாதம் பிறந்ததும் பழனிக்கு பெண்பார்க்கப்போவதாக அவன் அம்மா கூறிய அன்றிரவு அவன் வீட்டில்தான் எங்களுக்கு சாப்பாடு. அவன் ஒருமாதமாக நாகாத்தம்மனுக்கு மாலை போட்டிருந்தான். அன்றுதான் பூஜை. வேப்பிலையும் அலகும் காவடியுமாக இருந்தது அவன் தெரு. சுகுமார் நன்றாக விபூதி குங்குமமுமாக வந்திருந்தான். என்னையும் மஞ்சள் வேட்டி அணிந்து வரச்சொல்லியிருந்தான்.

நீயும் மஞ்சாவேட்டி கட்னு  வந்திருக்கலாம்நம்பிக்கை இல்லைன்னு விபூதிகூட வைக்க மாட்டேன்ற

வெள்ளிக்கிழமை ரோட்டை அடைத்திருந்தார்கள். யாரும் நடந்துதான் போகமுடியும். இறுதி வெள்ளியன்று  அவன் காவடியோடு வருகையில் சங்கரி எல்லா சாமிகள் காலிலும் தண்ணீர் ஊற்றி வலம் வந்து போனது போலவே  அவன் காலிலும் தண்ணீர் ஊற்றி அவனை வலம் வந்து வணங்கினாள்.

டேய், அவனப்பார்றா! அவள தெரியாதமாதிரியே இருக்கான்என்றான் சுகுமார். அவன் எங்கள் யாரையுமே கண்டுகொள்ளாமல்தான் இருந்தான். அந்த மாதம் முழுதும் இலையில்தான் சாப்பிட்டான். முட்டையோ கவுச்சியோ எடுப்பதில்லை. சிற்றம்பலமும் பூஜை ஏதும் போடவில்லை. ‘இன்னாடா அப்டியே மாறிட்டான்?’ என சுகுமார் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். நான் அந்த வம்புகளில் ஆர்வமாக இல்லை. அப்போது, செளதி செல்வதற்கான ஏற்பாடுகளை துவங்கியிருந்தேன். அதுவே என் கனவாகயிருந்தது.

அடுத்த மாதம் ஒயின்ஷாப்பில் ட்ரீட் தரும்போதுதான் பெண்பார்த்த விஷயத்தை பழனி சொன்னான்.  திருத்தணியில் இருந்து இருபது கிலோமீட்டர் உள்ளே இருந்தது  பெண்ணின் வீடு. அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது அவன் பேச்சிலும் சிரிப்பிலும் தெரிந்தது.

டேய்.. பழனி நெத்திலிக்கு தக்காளி சாஸ் தொட்டுகிட்டா மாதிரி மூஞ்சிய வச்சுக்காதறா..’

அதற்குப்பிறகு, பெண்ணின் அப்பா இங்கு வந்து விசாரித்துச் சென்றிருந்தார். செக்யூரிட்டியும்,  ரிசப்ஷனிஸ்ட்டும் மேனேஜரும் அவனைப் பற்றி நற்சான்றிதழ் அளித்திருந்தனர்.  அந்தப்பெண் மாதம் இருமுறை சந்தையன்று  டவுனுக்கு வருவாள். இரண்டுமுறை இண்டர்காமிற்கு போன் செய்திருக்கிறாள். ஒருமுறை நான் எடுத்தேன். பழனி வேறு ஷிஃப்டில் இருந்தான். அதற்கு முதல் முறைதான் அவன்  பேசியிருந்தான். ‘பத்து வார்த்த பேசறதுக்குள்ள வச்சிட்டாடா…’ இதற்கிடையில் என் செளதி காண்டிராக்ட் கிடைத்துவிடும் போலிருந்தது. நான்கு நாட்கள் லீவு போட்டுவிட்டு ஏஜெண்ட் ஆபீசில் இருந்து விசா வேலைகளை பார்த்து வந்தேன். அடுத்தவாரம் செளதி போகலாம் என உறுதியானதும், ராஜினாமா கடிதத்தை  எழுதி எடுத்துக்கொண்டு சிற்றம்பலத்திடம் கொடுத்து அவர் காலில் விழுந்து வணங்கி எழுந்தேன். சுகுமார் கட்டிப்பிடித்துக்கொண்டான். பழனி எங்கே என கேட்டேன்.

என்னதான் செக்யூரிட்டி, ரிசப்ஷன்னு சொல்லி வச்சிருந்தாலும், பொண்ண பெத்தவன் என்ன கேணையனா? உள்ளயே தெரிஞ்சவன் யாரோ இருந்திருக்கான். அவன் மொத்தமா இவன் எட்டிப்பாக்கிறதுலேந்து கமிசன் வரைக்கும் சொல்லிட்டான். கல்யாணம் நின்னுடும் போலிருக்கு.’

பழனி பத்தாவது மாடியில் பதினொன்றாம் ரூமில் செக் இன்னுக்கு முன்னதான வேலைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான். சுரத்தில்லாமல் இருந்தான்.  என்னைப்பார்த்ததும் சுமாராக சிரித்து கட்டிக்கொண்டான். பிறகு அவன் சட்டைப்பையிலிருந்து ஒரு லெட்டரை எடுத்து படிக்கச் சொன்னான்..

அந்த பொண்ணுகிட்டேந்துதான் வந்திருக்கு, படிச்சு சொல்றியா?’

நான் அதைப் படித்து சாராம்சமாக சொன்னேன்

அந்தப் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளையோட கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்களாம். ஆனா அதுக்கு உன்னயத்தான் பிடிச்சிருக்காம். எப்படியாச்சும் அது நடுவில திருத்தணி வறப்ப வந்து கூட்டிணு போக சொல்லுது.’

தேதியையும் நேரத்தையும் சொன்னேன்.

வேற ஏதாவது போட்டிருக்கா…?’

படிச்சதும் இந்த லெட்டர கிழிச்சு போட சொல்லிருக்கு…’

சரி, கிழிச்சுப்போடு

இப்போது ஹோட்டல் பல முதலாளிகள் கைமாறி,  ஆந்திரா ரெட்டி ஒருவர் கைக்கு வந்திருக்கிறது. முன்பிருந்தது போல் இல்லை. நான் செளதி சென்ற இந்தப் பதினைந்து  வருடங்களில் சென்னையே மிகவும் மாறிவிட்டிருக்கிறது.  அந்தச் சாலை மிகவும் அகலமாகியிருந்தது. ஹோட்டல் எதிரில் டிராபிக் சிக்னல் புதிதாக இருக்கிறது. வாகன இரைச்சல் தலைவலியை உண்டாக்கியது. ஒவ்வொருமுறை வரும்போதும் இருக்கும் தலைவலி. இந்த முறை ஐஸ்கேப் வாங்கி அதை தொப்பிக்குள் வைத்து அழுத்திப் போட்டிருந்தேன். அந்த இறுக்கம் தலைவலிக்கு சற்று இதமாக இருந்தது. ஹோட்டல் அருகே இருந்த ஜூஸ் கடை, பொக்கே எல்லாம் மாறிவிட்டிருந்தன. யாருக்கும் சுகுமாரையோ பழனியையோ சிற்றம்பலத்தையோ என்னையோ நினைவில்லை.

வெளியே ஆட்டோஸ்டாண்டில் இருந்தவரை எனக்கு அடையாளம் தெரிந்த்து. அவருக்கும் என்னை ஞாபகம் இல்லை.  சுகுமாரை கும்மிடிப்பூண்டியில் ஏதோ ட்ரேடிங் ஃபேக்டரியில் பார்த்ததாகக் கூறி வழியும் சொன்னார். காலை எலெக்ட்ரிக் ட்ரெயினில் கிளம்பி மதியம் முதல் கும்மிடிப்பூண்டியில்  எஸ்டேட்டில்  அலைந்து தேடினேன். வெயிலில் தலைவலி மீண்டும் துவங்கிவிட்டிருந்த்து. தொப்பியை எடுத்து இறுக்கமாக போட்டுக்கொண்டேன்.கடைசியில்  ஒருவழியாக சுகுமாரை அவன் பேக்டரியில் பார்த்தேன். ஓடி வந்து கட்டிக்கொண்டான். கொண்டுவந்த  பரிசுப்பொருட்களை அளித்தேன். அவன் அறையில் சாத்திய கதவுக்குள்ளும் இயந்திரங்களின் ஓசை மிகவும் சன்னமாக ஆனால் காதை அரைப்பது போல கிறீச் ஒலியுடன் கேட்டிக்கொண்டிருந்தது. அதனால் தலைவலி தீராமல் இருந்தது.

அப்டி இப்டின்னு செட்டில் ஆயிட்டேன்டா. இங்கதான் மெயிண்டனன்ஸ் சூப்பர்வைசர். ஆறு வருசமாகுது.’

மத்தவங்கல்லாம் எப்படி இருக்காங்க? சிற்றம்பலம்?…பழனி…?’

அவர் ஊருக்கே போயிட்டாரு, அப்ப மொபைல்லாம் இல்ல, இப்ப அவர் காண்டாக்டும் இல்ல. பழனி,ஜென்செட் ஃபேனோட  ஸ்பேர் காயில  பைக்ல வச்சி எடுத்துட்டுப் போகும்போது அட்மின் மேனேஜர்  வாசல்ல வச்சி புடிச்சிட்டாரு. அன்னியோட அவனுக்கு வேல போச்சு.. திருட்டு கம்மனாட்டிபோறாத காலம்தான்

சின்னக் காயில்தானடா.. வித்தா அம்பது ரூபா போவுமா.. அதுக்கு ஏண்டா தூக்ணாங்க?’

அத சிற்றம்பலத்தோட வேலைன்னு அவனுக்கு  அவர்மேல கோபம், சங்கரி விஷயத்தை மாமனார்ட்ட சொன்னது நாந்தான்னு எம்மேல கோபம்ஏற்கனவே பொண்டாட்டியோட சண்டஎல்லாம் சேர்ந்து வேலைக்கு வேட்டு வச்சிருச்சி

நான் கேட்டுக்கொண்டருந்தேன்..

அந்தப் பெண்ணுக்கு அவன  ஆரம்பத்துலயே பிடிக்கல.. . அதச் சொல்லத்தான் போனும் பண்ணிருக்கு.. . கல்யாணம் நின்னுச்சில்ல அப்ப அவன் நேர்ல போய்ப் பேசிருக்கான். வீட்ல இருந்தவங்க தொர்த்தி அட்ச்சிட்டாங்க..இவன் அந்தப் பொண்ணுகிட்டப்போயி ஏதோ சொல்லிருக்கான்.. , அதுக்குத்தான் இவன  ஆகலையே.. , இனிமே வராதன்னு பெர்சா லெட்டர்லாம்  போட்டு கெஞ்சி கேட்டுக்கிட்டு இருந்திருக்குஆனால் இவன் திமிராப்போயி அந்தப்பொண்ணு  திருத்தணி வந்தப்ப தூக்கிட்டு வந்துட்டான்அப்புறம் அந்தப் பொண்ணு வீட்லயும் மானக்கேடாயிருமேன்னு அவனுக்கே கட்டி வச்சிட்டாங்க..

எனக்கு அந்த ஃபேக்டரி இயந்திரங்கள் ஓசையில் மண்டை இடித்து கனத்தது. அவன் ரூம் ஃபேன் சத்தமே அரவை மில் போல் இம்சித்தது

இவனுக்கு எழுதப்படிக்கக்கூட தெரியாதுன்னு தெரிஞ்சப்புறம் அந்தப்பொண்ணு அவன மதிக்கவே இல்ல. நெதம் சண்டஅடிதடி. இப்படியே வேலையும் போச்சு. ஏற்கனவே தற்குறி, கூட  திருட்டுப் பட்டம் வாங்கினவனோட இருக்கணுமான்னு பேசிட்டு அது போயிருச்சி…’

நாங்கள் கிளம்பத் தயாரானபோது ஒரு பையன் வாசலில் வந்து நின்றான். சுகுமார் உடலை சிலைபோல விறைப்பாக வைத்துக்கொண்டு கொண்டு அவனை மிரட்டும் தொனியில், ‘இன்னொரு வாட்டி இப்டி ஆச்சி.. நீ வேற வேல பாத்துக்கஎன்றான். போ என கண்காட்டினான். அவன் கண்காட்டிய திசையில் சுவற்றில் அடிக்கப்பட்ட பலகையில் ஒரு கட்டிங்பிளேயரும் அதற்குமேல் பிள்ளையார், மெக்கா, ஏசு இருக்கும் நீள் செவ்வக படமும் இருந்தன.

நாங்கள் கிளம்பி வந்து மரத்தடி பஸ் ஸ்டாப்பில் இருந்த  டீக்கடையில் நின்றோம்.

அப்புறம் அவன் என்ன ஆனான்?’

வேல போன அப்புறம் கொஞ்ச காலம் சின்ன சின்ன எலெக்டிரிகல் வேலல்லாம் பாத்தான். ஹோட்டல் கை மாறினப்போ ஜியெம் வெளில வந்து ரியல் எஸ்டேட் ஆரம்பிச்சாரு. அவரு கைல கால்ல விழுந்து சேந்துகிட்டான். கொஞ்ச வருசத்துல அவன் வீட்டையும் இடிச்சு அப்பார்ட்மெண்ட் ஆக்கிட்டான். பொண்டாட்டியவும் சமாதானம் பேசி கூப்டிட்டு வந்துட்டான்.  அவன் ஏரியா நல்லா டெவலப் ஆனதால நல்ல காசு. நிறைய காண்டிராக்ட். எழுதப்படிக்கவும் கத்துகிட்டான்.  காரு வீடுன்னு கொழந்த குட்டிங்களோட செட்டிலாயிட்டான். நம்மளயெல்லாம் கண்டுகிறதே இல்ல.  இப்பல்லாம் திருடனுக்குத்தானே காலம். ம்.. என்னான்ற…?

அவன் வீடு இப்பவும் அதே தரமணி அட்ரஸ்தான். ஐடி கம்பெனி, அப்பார்ட்மெண்ட்னு வந்து ஏரியா மாறிடுச்சு… . போனா போய்ப் பாரு… , காண்டிராக்டர் பழனின்னா தெரியும்..’,   பஸ்டாண்டில் விட்டுவிட்டுக்  கிளம்பினான்.

சுகுமார் சொன்னதையே மீண்டும் மீண்டும் மனதில் ஒலிக்க விட்டு நின்றிருந்தேன். என் முகம் மலர்ந்திருந்ததை உணர முடிந்தது. தூரத்தில் ட்ரெயின் போகும் ஓசை சன்னமாக மெல்லிசையாய் ரிதத்தோடு கேட்டது. பஸ் ஸ்டான்ட் மரத்திடையே பறவைகள் கீச் கீச் என சத்தம் போட்டுக்  கூடடையத்துவங்கியிருந்தன. சற்றுத் தொலைவில் ஒரு கன்றுக்குட்டி பசுவைத் தேடி துள்ளித் துள்ளிச் சென்றது. அதனருகே ஒரு  எல்லையம்மன் கோயில் சிறிய விளக்கோடு இருந்தது. அதுவரை சும்மா நடந்து போய் வரலாம் என தொப்பியை கையில் எடுத்துக்கொண்டு நடக்கத் துவங்கினேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.