ஹம்பி: நிலவைக் காட்டும் விரல்

hampi_vijayanagar_empire_sravanabelagola

நிலவைக் காட்டும் விரல்
நிலவு
ஆவதில்லை

என்பது ஜென் வாசகம். மானுடம் கண்ட மகத்தான கனவு விஜயநகரம். இன்று நாம் காணும் ஹம்பி என்பது நூற்றாண்டுகளுக்கு முன்னால் அங்கு எவ்விதமான வாழ்வு நடந்திருக்கும் என கற்பனை செய்து பார்ப்பதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே. விஜயநகரம் இன்று கற்பனையால் மட்டுமே கண்டடையக் கூடிய ஒரு பிரதேசம். மாமனிதர்கள் மானுடம் குறித்த மகத்தான கனவுகள் மூலமாகவும் கலைஞர்கள் தங்களின் கலையின் வழியாகவும் மதியாளர்கள் தங்கள் திட்டமிடல் மூலமாகவும் வணிகர்கள் வாய்ப்புகளின் சாத்தியங்களின் வழியாகவும் பொறியாளர்கள் பணி மேலாண்மை மூலமாகவும் வீரர்கள் போர் நுணுக்கங்கள் மூலமாகவும்  சாமானியர்கள் பெருவியப்பினூடாகவும் மட்டுமே அந்நகரை கற்பனை மூலம் அடைய முடியும். அப்பிராந்தியம் கற்காலம் தொட்டு அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டிருக்கிறது. இராமாயணம் குறிப்பிடும் கிஷ்கிந்தை விஜயநகரமாக இருந்திருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  நதி ஒருபுறத்தில் இயற்கை அரணாகவும் குன்றுகளும் மலையும் மறுபுறத்திலும் கற்பாறையை அடுக்கி உருவாக்கப்பட்ட இணைப்புகளாலான கோட்டை மதிலும் அதன் உள்புறத்தில் அமைந்துள்ள நகர வீதிகளும் சிற்றாலயங்களும் பேராலயங்களும் இணைந்த அந்நகரம் மானுடம் குறித்த மகத்தான நம்பிக்கையை உருவாக்கக் கூடிய இடம். ஒரு துறவியின் விருப்பப்படி அவரது சீடர்களான போர்வீரர்களால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் தலைநகரான அந்நகரம் இந்திய வரலாற்றின் பொன்னொளிர் பக்கங்களில் பதிக்கப்பட்டிருப்பது.
பல்லாண்டு உழைப்பின் வழியாகவும் அர்ப்பணிப்பின் வழியாகவும் இந்திய தொல்லியல் துறை கற்குவியலாய் இருந்த ஹம்பியில் பலவிதமான பணிகளினூடாக இப்போது உள்ள நிலைக்கு கொண்டுவந்துள்ளது.உள்ளூர்வாசிகளுக்கு விஜயநகரம் என்ற பெயரே நினைவில் இல்லை.அவர்களுக்கு அது கமலாபுர் என்ற சிற்றூர்.பயணிகள் வந்து செல்லும் இடம்.ஹம்பி இரண்டு கிலோமீட்டரில் அமைந்த ஓர் அண்டை ஊர்.வாடகை குறைவான ஒரு லாட்ஜில் தங்கினேன்.அங்கே பையை வைத்து விட்டு குளித்து வண்டியை எடுத்துக் கொண்டு தொல்லியல் துறையின் அருங்காட்சியகத்துக்குச் சென்றேன்.நல்ல முறையிலான பராமரிப்பில் இருந்தது.பல்வேறு குறிப்புகளின் வழியாக விஜயநகரம் குறித்தும் அவர்களின் நகரமைப்பு,கலை குறித்தும் விளக்கியிருந்தனர்.ஹம்பியின் மாதிரி வடிவம் ஒன்றை மினியேச்சராக செய்து வைத்திருந்தனர்.பிரம்மாண்டமான ஒரு வரைபடத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களை இலக்கமிட்டு சுட்டியிருந்தனர்.எல்லா இடங்களையும் பார்க்க குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது ஆகும்.நான் எவ்வளவு இடங்களைப் பார்க்க முடியுமோ அவ்வளவையும் பார்த்தேன்.ஹம்பியில் ஒரு வீரபத்திரர் ஆலயம் உள்ளது.ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உயரமான வீரபத்திரர் சிலை.இப்போதும் பூசனைகள் நடைபெறுகிறது.ஒரு குறுகலான திருப்பத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.அர்ச்சகர் என்னைப் பற்றி விசாரித்தார்.சுவாமிக்கு சூட்டிய மலரை அளித்தார்.உண்பதற்கு பழங்களும் பருக நீரும் தந்தார்.நான் அங்கே பார்த்த ஆலயங்களும் மண்டபங்களும் மகால்களும் தோரணவாயில்களும் பேருவகையையும் பெருந்துக்கத்தையும் ஒரு சேர கொண்டு வந்தது.இருட்டியதும் அறைக்குத் திரும்பினேன்.அங்கே ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் நண்பரானார்.எளிய சுவையான உணவை வழங்கினார்.மறுநாள் எங்கு செல்ல உத்தேசம் என வினவினார்.மந்த்ராலயம் என்றேன்.அதற்கான மார்க்கத்தைக் கூறினார்.இரவு அறையில் உறங்கி விட்டு மறுநாள் காலை நண்பரின் ஹோட்டலுக்கு வந்து தேனீர் அருந்தி விட்டு மந்த்ராலயம் நோக்கி கிளம்பினேன்.
vijayanagara_architecture
பருத்தி வயல்களும் நெல் வயல்களும் இரு பக்கமும் நிறைந்திருந்த சாலையில் பயணித்து மந்த்ராலயம் சென்றேன்.துங்கபத்திராவின் நீரால் செழிப்பாக இருக்கும் இப்பகுதி கருநாடக ஆந்திர மாநிலங்களில் அமைந்திருக்கிறது.துங்கா நதிதான் எல்லை.ஆற்றுக்கு மேற்கே கருநாடகா.கிழக்கே ஆந்திரம்.
மந்த்ராலயத்தில் யாத்ரி நிவாஸின் பெரிய கூடத்தில் யாத்ரீகர்களுடன் தங்கிக் கொண்டேன்.ஒரு ஷெல்ஃபை பூட்டிக் கொள்ளும் வசதியுடன் தந்து விடுகின்றனர்.அங்கே எனது ஹெல்மட்டையும் பயணப்பையையும் வைத்து விட்டு ஸ்ரீராகவேந்திரரின் அதிஷ்டானத்துக்குச் சென்றேன்.சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி ஸ்ரீராகவேந்திரர் பிறந்த ஊர்.அவர் பிறந்த வீடு அங்கே இருந்தது.இப்போது அவ்விடத்தை கான்கிரீட் கட்டிடமாக மாற்றிக் கட்டியுள்ளனர்.அவர் படித்தது கும்பகோணத்தில்.அவரது குரு விஜயீந்திர தீர்த்தர் கும்பகோணத்தில் வசித்தார்.அந்த அதிஷ்டானம் பழைய ஓட்டுக் கட்டிடமாக இருந்தது.அவ்விடத்தின் புராதானத் தன்மைக்காகவே பலமுறை சென்றிருக்கிறேன்.நகரின் சந்தடிகளிலிருந்து தூரத்தில் காவேரிக்கரையில் அவ்வதிஷ்டானம் அமைந்துள்ளது.பல நாட்கள் அங்கே சென்று அமர்ந்திருப்பேன்.இப்போது கான்கிரீட் கட்டிடமாக மாற்றியுள்ளனர்.நவக்கிரக ஆலயங்களுக்கு வரும் ஆந்திரவாசிகள் இப்போது அதிகமாக இங்கே வருகின்றனர்.திருக்கோவிலூரில் துவைத குருக்களின் அதிஷ்டானங்கள் மணம்பூண்டியில் அமைந்துள்ளன.
நூற்றுக்கணக்கான மக்கள் அதிஷ்டானத்தில் வணங்கிச் சென்று கொண்டிருந்தனர்.பெண்கள் பலர் அங்கப்பிரதட்சனம் செய்து கொண்டிருந்தனர்.குடும்ப நலனுக்காக-குழந்தைகளின் உடல் நலனுக்காக-கணவனுக்காக என பல்வேறு வகையான பிரார்த்தனைகள்.உள்ளம் உருகும் வேண்டுதல்கள்.வேண்டி முடித்ததும் கொள்ளும் மன அமைதி என வேறொரு உலகில் அவர்கள் இருந்தனர்.அடிமேல்அடி வைத்து நடக்கும் இளம்பெண்கள்.நான்கடிக்கு ஒரு முறை நமஸ்காரம் செய்து நடக்கும் பெண்கள் என அதிஷ்டானமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் வேண்டுதல்களால் நிரம்பியிருந்தது.மதியம் அங்கே வழங்கப்படும் உணவை உண்டு விட்டு அதிஷ்டானத்திற்கு வந்து அமர்ந்து கொண்டேன்.மாலை நான்கு மணிக்கு மேல் ஸ்ரீராகவேந்திரர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் தவமிருந்த பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆலயத்திற்கு சென்றேன்.ஹயக்ரீவர்,கருடன்,வராகர்,நரசிம்மர் மற்றும் ஆஞ்சனேயர் என ஐந்து முகம் கொண்ட ஆஞ்சனேயரை வணங்கினேன்.அந்த அந்திப் பொழுதில் ஓர் இசைப்பாடகர் ஒற்றை நரம்பு கொண்ட ஏக்தாராவில் சுருதி மீட்டி ரகுவம்ச நாயகன் ஸ்ரீராமனின் கதையை இசைப்பாடலாக பாடிக் கொண்டிருந்தார்.அத்தெலுங்கு பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன்.காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு நாடு முழுதும் வணங்கப்படும் மனிதனின் கதை.பெற்றோருக்குப் பிரியமான மகன்,வாஞ்சை மிக்க சகோதரன்,நல்ல கணவன்,எல்லோருக்கும் இனிமையான நண்பன்,நம்பிக்கை அளிப்பவன்,வாக்கைக் காப்பவன்,அறம் பிறழாதவன்.மானுடம் உள்ளவரை ராமகதை இருக்கும்.
இரவில் வாழைப்பழங்களை உண்டு விட்டு யாத்ரி நிவாஸிற்கு வந்தேன்.அங்கே குடியாத்தத்திலிருந்து வந்திருந்த சில தமிழர்கள் இருந்தனர்.அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நன்றாக உறங்கினேன்.அடுத்து நான் செல்ல வேண்டிய இடம் நாகபுரி.
மறுநாள் காலை அதிஷ்டானத்திற்குச் சென்று வணங்கி விட்டு ஹைதராபாத் புறப்பட்டேன்.மந்த்ராலயத்தில் முழு டேங்க் பெட்ரோல் நிரப்பிக் கொண்டேன்.ரெய்ச்சூர் வழியாக பயணித்தேன்.மீண்டும் பெங்களூர்-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையை அடைந்தேன்.பயணம் கிளம்பி பல நாட்கள் ஆனது போல் இருந்தது.ஆனால் இன்னும் ஆந்திராவையே தாண்டவில்லை என்பது மலைப்பாக இருந்தது.வண்டியை வேகமாக இயக்கி ஹைதராபாத் சென்று சேர்ந்தேன்.காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து வண்டியை இயக்கியதால் சோர்வாக இருந்தது.நேரு புறவழிச்சாலை என பல கிலோமீட்டர் நீள சுற்றுச்சாலை அங்கே உள்ளது.அதில் செல்ல இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை.சுற்றுச்சாலையை ஒட்டி ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளது.அதில் சில இடங்களில் பாதை தவறி மீண்டும் வந்து சேர்ந்து ஒரு விடுதி அருகில் வண்டியை நிறுத்தினேன்.சில வாழைப்பழங்களை இரவு உணவாக உண்டு விட்டு அறைக்கு வந்து ஓய்வெடுத்தேன்.பிரும்மாண்டமான குடியிருப்புகளும் மாபெரும் வணிக வளாகங்களும் பெரிய சாலைகளும் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.நகரம் துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தது.மாநிலப் பிரிவினைக்குப் பின்னும் அங்கே முதலீடு செய்ய்ப்படுவது அம்மாநிலத்தின் சாதக அம்சம்.காலை எழுந்து தயாராகி நகரம் இயங்குவதற்குள் நான் வெளியேறினேன்.நான் இருந்த இடத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தள்ளி ஒரு ஊரைச் சொன்னார்கள்.அங்கே சென்று தேசிய நெடுஞ்சாலையுடன் இணைந்து கொண்டேன்.
சோளம் மட்டுமே பயிரிடப்பட்டிருந்த வறண்ட நிலங்களினூடாகப் பயணித்து சென்று கொண்டிருந்தேன்.வறண்ட பாலை நிலத்தில் பயணிப்பது நமது மனநிலையை உடைக்கக் கூடிய சக்தி உடையது.அவ்வுடைவுகளின் மறுபக்கமாக தீவிரமான ஆர்வமும் ஆக்ரோஷமான மன எழுச்சியும் உண்டாகும்.பாலை நிலத்தின் மக்கள் தங்கள் குறைவான வாய்ப்புகளுடனும் சாத்தியங்களுடனும் விடாமல் தீவிரமாகப் போராடுகின்றனர்.சோளமும் கம்பும் அவர்களுக்கு ஏற்ற குறைவாக நீர் தேவைப்படும் பயிர்கள்.இந்தியாவின் வறண்ட நிலங்களில் அதிகமாக சோளம் பயிரிடப்படுகிறது.நெடுஞ்சாலையின் ஓரங்களில் சோளக்கதிர்கள் காய வைக்கப்பட்டு இயந்திரங்களின் உள்ளே செலுத்தப்பட்டு சோள மணிகள் மூடையில் நிரப்பப்படுகின்றன்.மணிகள் நீக்கப்பட்ட கதிர் டிரெய்லர்களில் நிரப்பப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.ஓரிடத்தில் நின்று அப்பணிகளை கவனித்தேன்.பெண்கள் எவ்வித கவனச்சிதறலுமின்றி தீவிரமான மனநிலையுடன் பணி புரிந்து கொண்டிருந்தனர்.நான் அருகே இருப்பதை பல நிமிடங்களுக்கு அவர்கள் கவனிக்கவேயில்லை.பின்னர் எனக்கு ஒரு கைப்பிடி சோள மணிகளை அளித்தனர்.மகாபாரதத்தின் கீரி கதை நினைவுக்கு வந்தது.எனக்கு சோளம் அளித்த பெண்ணை வணங்கி அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.
இப்பாதையில் தெலங்கானா அரசின் சார்பில் கோதாவரி புஷ்கரத்துக்கான அறிவிப்புப் பலகைகள் இருந்தன.அதில் பொச்சம்பேட் என்ற இடத்தில் கோதாவரியில் கட்டப்பட்ட ஒரு பேரணை இருக்கிறது.அங்கு சென்றேன்.ஸ்ரீராம் சாகர் என்ற அந்த அணை மிகப் பெரியது கணிசமான அளவில் நீர் இருந்தது.அந்த அணையின் பொறுப்பாளரான உதவிப் பொறியாளர் ஆர்வமும் துடிப்பும் மிக்க ஓர் இளைஞர்.அணை பற்றிய விபரங்களை விரிவாகக் கூறினார்.நான் கட்டுமானப் பொறியாளர் என அறிந்து மிகவும் மகிழ்ந்தார்.சில மாதங்களுக்கு முன்னால் சில லட்சம் கன அடி நீர் ஓரிரு தினங்களில் வந்ததாகவும் அணையின் அனைத்து மதகுகளையும் திறந்து நீரை வெளியேற்றிய பணி பரபரப்பானதாக இருந்தது என்று அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.ஹைதராபாத்துக்கு கிளம்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.அவரை அனுப்பி வைத்து விட்டு நான் அடிலாபாத் பயணமானேன்.
அடிலாபாத் மகாராஷ்டிரத் தன்மை அதிகமாகத் தென்படக்கூடிய ஊர்.மராட்டியத்தின் கார்களில் வீர சிவாஜியின் வெவ்வேறு விதமான ஸ்டிக்கர்கர்கள் ஒட்ட்ப்பட்டிருக்கும்.தலையில் கிரீடமும் நெற்றியில் நீறும் அணிந்த சிவாஜியின் உருவம் கொண்ட ஸ்டிக்கர்கள்,வாள் ஏந்திய வீர சிவாஜி ஸ்டிக்கர்கள் என மாவீரர் சிவாஜி பல ரூபங்களில் வெளிப்படுவார்.பூனா கோலாப்பூர் ஷோலாப்பூர் பகுதிகளில் இது மிக அதிகம்.மற்ற பகுதிகளிலும் பரவலாக இருக்கும்.அடிலாபாத்தில் சிவாஜி ஸ்டிக்கர்களைக் கண்டது மராட்டியத்திற்கு வந்து விட்டதைப் போன்ற உணர்வை உருவாக்கியது.ஒரு குறைவான வாடகை கொண்ட டார்மிட்டரியில் தங்கிக் கொண்டேன்.எனது வண்டியின் ஹாரன் சரியாக வேலை செய்யாமல் இருந்தது.ஒரு பணிமனைக்குக் கொண்டு சென்று ஹாரன் மாற்றினேன்.இரவு உணவாக பானிபூரியும் மசாலாபூரியும் சாப்பிட்டு விட்டு டார்மிட்டரிக்கு வந்து படுத்து உறங்கினேன்.
மறுநாள் காலை நாகபுரிக்குப் பயணமானேன்.மராட்டியத்தின் எல்லையைத் தொட்டதும் எழுபது கிலோமீட்டருக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையே மிக மோசமானதாக இருந்தது.அதன் பின்னர் சீரடைந்தது.நாக்பூர் சென்றடைந்தேன்.சாலைகளில் மரங்கள் அடர்ந்து இருந்தது மனதிற்கு ஆறுதலையும் பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது.நான் பன்னிரண்டு வயதில் பார்த்த பெங்களூரை நினைவுக்கு கொண்டு வந்தது.அப்போது பெங்களூர் மிக அழகான ஊராக இருக்கும்.மரங்கள் பூத்துக் குளுங்கும்.மர நிழல் இல்லாத சாலைகளே இல்லை எனும் விதமாக எல்லா சாலைகளிலும் மரங்கள் இருக்கும்.கருமேகம் திரள்வதும் மிக லேசான ஒரு தூறலும் அடிக்கடி நிகழும்.நகரம் தூய்மையாக இருக்கும்.லால்பாக்,விதான் சௌதா ஆகியவை மனதிற்கு பெருமகிழ்ச்சியை அளிக்கும்.அப்பா என்னை விஸ்வேஸ்வரையா அறிவியல் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார்.மெஜஸ்டிக் சர்க்கிள்,ஜலஹள்ளி ஆகிய பகுதிகள் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாய் இருக்கும்.அப்பாவுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கே ஒரு வீட்டின் கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது.அது என் மனதில் ஒரு கேள்வியை உருவாக்கியது.நம் ஊரில் வீடு கட்ட பூமியை பள்ளமாகத் தோண்டுவார்களே இங்கே பள்ளம் தோண்டாமல் வீடு கட்டுகிறார்களே அது எப்படி என கேட்டு விட்டேன்.அப்பா மிகவும் மகிழ்ந்தார்.நாம் இருப்பது களிமண் பிரதேசம் ஆனால் இங்கே குன்றின் ஒரு புறத்தில் வீடு கட்டுகிறார்கள்.குன்று வலிமையான பாறைகளால் ஆனது.ஆகவே அடிக்கட்டுமானம் தேவையில்லை என்று சொன்னார்கள்.அப்போது உலகமே எனக்கு பெங்களூரைப் பார்த்தவர்கள்,பெங்களூரைப் பார்க்காதவர்கள் என இரண்டாகப் பிரிந்திருந்தது.நண்பர்கள்,உறவினர்களுடனான பேச்சில் எப்படியாவது பெங்களூரைக் கொண்டு வந்து விடுவேன்.பெங்களூரின் பல பகுதிகளைப் பற்றி வர்ணிப்பேன்.சில ஆண்டுகளாக நான் பார்க்கும் பெங்களூர் என்பது வேற்றூர் போல இருக்கிறது.நான் நேசித்த பெங்களூர் என் போன்றோர் நினைவின் அடுக்குகளிலும் கற்பனையிலும் மட்டுமே இருக்கும் போலும்!அதற்கு சமமான மாறுபாடு அடைந்த ஊர் புதுச்சேரி.ஃபிரென்சு பாணி நகரமைப்பும் கட்டிடங்களுமே அவ்வூரின் தனித்தன்மை.இன்று தன் பெரும்பாலான தனித்துவங்களை இழந்து மிகச் சாதாரணமாக காட்சி தருகிறது.
நாகபுரியில் இந்திய சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான டாக்டர் அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய நிகழ்ச்சி நடைபெற்ற தீக்‌ஷா பூமிக்குச் சென்றேன்.அங்கிருந்தவர்கள் தமிழ்நாட்டிலிருந்து பாரத தரிசனத்தின் ஒரு பகுதியாக இங்கு வந்திருக்கிறேன் என அறிந்ததும் ஜெய் பீம் ஜெய் பீம் என ஆரவாரித்து வரவேற்றனர்.நானும் ஜெய் பீம் ஜெய் பீம் என முழங்கினேன்.கலையழகுடன் ஒரு ஸ்தூபி வடிவில் நிர்மாணித்திருந்தனர்.இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருந்தது.அப்பிரகடனத்தை அங்கே வாசித்தது மெய் சிலிர்க்கச் செய்தது.அசோக சக்கரமும் நான்கு திசையிலும் கர்ஜிக்கும் சிம்மமும் சிற்பமாக வடிக்கப் பெற்றிருந்தது.பௌத்தத்தை தழுவிய போது அவர் ஏற்ற உறுதிமொழி ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.அம்பேத்கர் ஒடுக்குமுறைக்கு சமயம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதையே எதிர்த்தார்.டாக்டர் அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் என்ற நூல் ஒரு மகத்தான செவ்வியல் ஆக்கம்.
இந்தியாவின் மையப் பகுதியான நாகபுரிக்கு வந்தது பயணத்தின் பாதியை நிறைவு செய்த அனுபவத்தை அளித்தது.மதிய உணவாக ஒரு தள்ளுவண்டியில் பழங்களை அழகழகாக நறுக்கி கலை நேர்த்தியுடன் அடுக்கி தந்தனர்.அதில் ஒரு தட்டு உண்டு விட்டு புறப்படச் சித்தமானேன்.அங்கிருந்த இரண்டு சீக்கியர்கள் ஓம்காரேஷ்வர் செல்ல வழி கூறினர்.
அன்று நிகழ்த்தியது துரிதமான ஒரு நெடும் பயணம்.மதியத்திற்கு மேல் விரைவான ஒரு பயணத்தை நிகழ்த்தி மத்தியப் பிரதேசத்தினுள் நுழைந்து நீமன்ச் என்ற ஊருக்கு இருபது கிலோமீட்டர் முன்னால் பயணத்தை நிறுத்திக் கொண்டேன்.அங்கே சந்தீப் என்பவரின் தாபாவில் தங்கிக் கொண்டேன்.தாபா முன்னால் ஒரு சிறு மைதானம்.அதற்கு அப்பால் தேசிய நெடுஞ்சாலை.தொலைவில் தெரியும் சுங்கச் சாவடியின் ஒளி விளக்குகள்.வானில் தெரியும் மாலையின் முதல் நட்சத்திரம்.கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு வான் நோக்கிக் கொண்டிருக்கும் நான் என சூழ்நிலை இனிமையாக இருந்தது.பேசுமொழி கடந்த ஒரு பாஷையில் நாங்கள் உரையாடிக் கொண்டோம்.நான் கூறுவதில் அவர்களுக்கு தமிழ்நாடு ரிஷிகேஷ் என்ற இரு வார்த்தைகள் மட்டுமே புரிந்திருக்கும்.அங்கிருந்தவர்கள் மிகவும் பிரியத்துடன் நடத்தினர்.வாழைப்பழங்களை உண்டு விட்டு உறங்கி விட்டேன்.அங்கெல்லாம் மாலைக்குப் பின் வானம் மிக விரவில் இருட்டி விடும்.சூழும் இருளின் அடர்த்தி அதிகமாக இருக்கும்.இரவு பத்து மணி அளவில் சந்தீஃப் என்னை எழுப்பினார்.கயிற்றுக்கட்டிலின் மேலே போட்டுக் கொள்ள ஒரு பெட்ஷீட் தந்தார்.போர்த்திக் கொள்ள ஒரு கம்பளிப் போர்வையைத் தந்தார்.அவரது பிரியம் என்னை நெகிழச் செய்தது.
காலையில் எழுந்து அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு நிமன்ச் என்ற ஊருக்குச் சென்றேன்.பயணத்தில் இதுவரை இரண்டாயிரம் கிலோமீட்டரை நிறைவு செய்திருந்தேன்.என்ஜின் ஆயில் மாற்ற வேண்டும்.ஆயில் வாங்க பங்கில் நின்று கொண்டிருந்தேன்.அப்போது அங்கே ஓர் இளம்பெண் வந்தாள்.ஹிந்தியில் ஏதோ சொன்னாள்.அவள் சொன்னதில் பெட்ரோல் என்ற வார்த்தை மட்டுமே எனக்குப் புரிந்தது.நான் ஆங்கிலத்தில் என்ஜின் ஆயில் வாங்க காத்திருப்பதாகச் சொன்னேன்.நான் ஆங்கிலத்தில் பேசியதும் ஆச்சர்யத்துடன் என்னை கவனித்தாள்.எனது வாகனத்தின் பதிவு எண்ணைப் பார்த்து விட்டு தமிழ்நாட்டிலிருந்து வருகிறீர்களா என வியப்புடன் கேட்டாள்.ஆம் எனச் சொல்லி பயண நோக்கத்தைத் தெரிவித்தேன்.அவளுக்கு குதூகலம் தாங்கவில்லை.அவளது பெயர் என்ன என்று ஹிந்தியில் கேட்டேன்.திருப்தி எனச் சொன்னாள்.மகாபாரதத்தில் யக்‌ஷ பிரசன்னத்தில் யக்‌ஷன் யுதிர்ஷ்டிரனிடம் எதை மிஞ்சிய செல்வமில்லை என கேட்கும் கேள்விக்கு யுதிர்ஷ்டிரன் திருப்தியை மிஞ்சிய செல்வமில்லை என பதில் சொல்கிறார் என கூறினேன்.அவளுக்கு மகிழ்ச்சியும் பூரிப்பும் தாங்கவில்லை.வெட்கத்தில் முகம் சிவந்து விட்டது.என்ன படிக்கிறாய் என்று கேட்டேன்.பி.எஸ்ஸி என்றாள்.இயற்பியல் படிக்கிறாயா என்று கேட்டேன்.கணிதம் படிக்கிறேன் என்றாள்.பங்க் ஊழியர் வந்து அவளது வாகனத்தில் பெட்ரோல் நிரப்பினார்.கிளம்பும் போது தங்கள் பயணம் மகிழ்ச்சிகரமாக அமையட்டும் என தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு விடைபெற்றாள்.என்ஜின் ஆயில் வாங்கிக் கொண்டு நானும் கிளம்பினேன்.
நிமன்ச்சின் கடைத்தெருவில் காலை உணவாக நான்கு வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தேனீர் அருந்தினேன்.அங்கிருந்த ஒரு மோட்டார் மெக்கானிக்கின் ஷெட்டில் ஆயில் மாற்றச் சொன்னேன்.முன்புறம் ஷெட் பின்புறம் வீடு.அவரது இரு குழந்தைகள் அப்போதுதான் தூங்கி விழித்து பிஸ்கட்டுடன் தேனீர் அருந்திக் கொண்டு இருந்தன.வீதியில் ஒரு துறவி நடந்து சென்று கொண்டிருந்தார்.என்னைப் பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என்றார்.நானும் ஜெய் ஸ்ரீ ராம் என்றேன்.கடந்து சென்றார்.ஆயில் கருத்துப் போயிருந்தது.மெக்கானிக் புதிய ஆயிலை ஊற்றினார்.செயினில் ஆயில் இட்டார்.பிரேக்கை டைட் செய்தார்.அவர் கேட்ட கட்டணத்தை அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.
ஓம்காரேஷ்வருக்குப் பயணமானேன்.அது மலையும் காடுமான ஒரு பாதை.லாரிகளோ அல்லது டூ வீலரோ எதுவும் உடன் வரவும் இல்லை;எதிர்ப்படவும் இல்லை.நேரம் ஆக ஆக எந்த மாற்றமும் இல்லாமல் சென்று கொண்டேயிருக்கிறேன்.செல்லும் பாதை சரியானதுதானா என கேட்கக் கூட யாரும் இல்லை.ஆடு மேய்ப்பவர்களும் இல்லை.ஆடுகளும் இல்லை.திகிலாக இருந்தது.தார்ச்சாலை இருப்பது மட்டுமே ஒரே ஆறுதல்.சென்று கொண்டேயிருந்தேன்.நூறு கி.மீ பயணம் செய்திருப்பேன்.ஒரு கிராமம் தென்பட்டது.அங்கே ஒரு பேருந்து நின்று கொண்டிருந்தது.பேருந்து ஓட்டுநர் அடுத்து செல்ல வேண்டிய பாதையைச் சொன்னார்.வந்த பாதை சரியானதுதான் என எண்ணிக் கொண்டேன்.அவ்வூரில் வாழைப்பழம் இருந்தது.நான்கு பழம் வாங்கி உண்டு தண்ணீர் குடித்தேன். கண்ட்வா என்ற ஊரை அடைந்தேன்.அங்கே பேருந்து நிலையத்துக்கு எதிரே ஒரு எஸ்.டி.டி பூத் இருந்தது.வீட்டுக்கு ஃபோன் செய்து பேசினேன்.பயணத்தில் கையில் நான் செல்ஃபோன் வைத்துக் கொள்ளவில்லை.காயின் ஃபோனிருந்தால் அதிலிருந்து பேசுவேன்.இப்போது ஆசுவாசமாய் பேச முடிந்தது.அங்கிருந்து ஓம்காரேஷ்வர் சென்றேன்.மிகக் குறைந்த வாடகையில் ஒரு நல்ல அறை கிடைத்தது.குளித்து விட்டு ஆலயத்திற்குச் சென்றேன்.
ஓம்காரேஷ்வர் சிவலிங்கத்தின் முன்னால் சென்று நின்று வணங்கினேன்.ஆயிரமாயிரம் ஆண்டுகளாக எத்தனை தலைமுறைகளாக மனிதர்கள் வந்து வணங்கிக் கொண்டே இருக்கின்றனர்.எவ்வளவு மாமனிதர்கள் இங்கே வந்து நின்றிருப்பர்.எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன்.தெய்வம் மௌன சாட்சியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது.வணங்கிக் கொண்டிருந்த சில நிமிடங்களில் உணர்ச்சிவசப்பட்டு அழுதேன்.விழிநீர் நின்றதும் மனம் ஒரு தூய அமைதியை உணர்ந்தது.ஆலயத்தின் வாசலில் வந்து அமர்ந்து கொண்டேன்.குரங்குகள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தன.பல்வேறு மாநிலத்தவர்கள் அங்கே இருந்தனர்.ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அங்கே பேசிக் கொண்டிருந்தனர்.அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தேன்.பயணத்தை நல்ல முறையில் நிறைவு செய்ய வாழ்த்தினார்கள்.அறையில் ஓய்வெடுத்து விட்டு மறுநாள் காலை குளித்து உஜ்ஜயினி சென்றேன்.மகாகாளேஷ்வர் ஆலயம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.மலராலும் இலையாலும் பாலாலும் நீராலும் அர்ப்பணித்து பக்தர்கள் மகாகாளேஷ்வரை வணங்கினர்.நானும் வணங்கினேன்.மதியப் பொழுதில் அங்கிருந்து புறப்பட்டேன்.அடுத்து செல்ல வேண்டிய இடம் சித்தூர்கர்.
மாலை வரை பயணித்து ராஜஸ்தான் மாநில எல்லைக்கு நாற்பது கிலோமீட்டருக்கு முன்னால் ஒரு தாபாவில் தங்கினேன்.தாபா உரிமையாளருக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது புரியவில்லை.அப்போது அங்கு இருந்த டிரைவரான கோபால் யாதவ் என்பவர் ரிஷிகேஷ் என்ற வார்த்தையிலிருந்து நான் என்ன சொல்கிறேன் என யூகித்து தாபா உரிமையாளரிடம் ஏதோ சொன்னார்.எனக்கு ஒரு கட்டிலை ஒதுக்கித் தந்து அதற்கு மெத்தை போர்த்திக் கொள்ள போர்வை அனைத்தையும் ஏற்பாடு செய்து தந்தார் கோபால் யாதவ்.உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றார்.காலை எழுந்து பார்த்த போது அவர் இல்லை.இரவில் லாரியை ஓட்டிக் கொண்டு சென்றிருப்பார் என எண்ணினேன்.தாபா உரிமையாளரிடம் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினேன்.
rajasthan_culture_dress_people_faces_saree_traditions_trip_portrait_jaipur
ராஜஸ்தான் மாநில எல்லையை சில நிமிடங்களில் அடைந்தேன்.முதல் நாள் மாலை பயணித்ததில் ஐம்பது அறுபது கிலோமீட்டருக்கு முன்னாலேயே ராஜஸ்தான் பாணியிலான ஆடை அணிமுறையும் உடல் அமைப்பும் முகமும் கொண்டவர்களாகவே அங்கிருப்பவர்கள் இருந்தனர்.மாநில எல்லையைத் தாண்டி சித்தூர்கருக்கு சென்று கொண்டிருந்தேன்.அப்போது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த ஒரு பள்ளியின் மைதானத்தில் இளைஞர்களும் சிறுவர்களும் காக்கி நிக்கர் அணிந்து மரத்தண்டம் கைகளில் ஏந்தி காவிக்கொடி முன் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.மைதானத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கிட்டேன்.நூற்று ஐம்பது பேருக்கு மேல் இருந்தனர்.சிவாஜி மகராஜ் கி ஜெய்,மகாராணா பிரதாப் சிங் கி ஜெய்,பாரத் மாதா கி ஜெய் என கோஷம் எழுப்பினர்.ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என புரிந்து கொண்டேன்.அவர்களின் ஒரு வார பயிற்சி முகாமாக இது இருக்கக் கூடும் என யூகித்தேன்.சிறிது நேரம் வேடிக்கை பார்த்து விட்டு சித்தூர்கர் சென்றடைந்தேன்.
சித்தூர்கர் மிக பிரும்மாண்டமான ஒரு கோட்டை.மலையின் உச்சியில் அமைந்துள்ளது.நெடுக்கில் பல கிலோமீட்டர்களுக்கு நீளக் கூடியது.அரசாட்சி நிலவிய காலங்களில் கோட்டைகளே அரசின் செல்வத்தை சேமித்து வைக்கக் கூடிய இடமாக இருந்திருப்பதால் தலைநகரம் ஒரு கோட்டையினுள் அமைக்கப்பட்டிருக்கிறது.அன்னிய படையெடுப்புகளின் பிரதான நோக்கம் செல்வத்தைக் கொள்ளையடித்தல் என்பதால் கோட்டைகள் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளன.கோட்டையைக் காத்தல் என்பது அரசைக் காத்தலே.பல ஆண்டுகள் முற்றுகையை தாங்கக் கூடிய கோட்டைகளை அரசாட்சிகள் நிர்மாணித்துள்ளன.சித்தூர்கர் இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் ஒரு கோட்டை.அக்பரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வாழ்நாள் முழுதும் போராடிய ராணா பிரதாப் சிங்கின் இளமைக்காலம் சித்தூர்கரில் கழிந்துள்ளது.சித்தூர் ராணி பத்மினி,மீராபாய் ஆகிய வரலாற்று ஆளுமைகளின் வாழிடமாயிருந்தது சித்தூர்கர்.கோட்டையின் உள்ளே இருந்த ஆலயங்களையும் ஸ்தம்பங்களையும் அரண்மனைகளையும் சென்று பார்த்தேன்.மதில்களின் மேலேறி பரந்து விரிந்த நகரின் விரிவையும் கண்டேன்.
கோட்டையிலிருந்து நகருக்கு வந்து ஒரு இன்டர்நெட் செண்டர் உரிமையாளரிடம் பீகாம்பூரி செல்வதற்கான வழியைத் தெரிந்து கொண்டு புறப்பட்டேன்.அன்று நாள் முழுக்க பயணம் செய்து மாலை நேரத்தில் ஒரு தாபாவை அடைந்தேன்.தினேஷ் என்ற இளைஞர் அதனை நடத்தி வந்தார்.என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்க இடம் கிடைக்குமா என்று கேட்டேன்.அவரது ஹோட்டலுக்கு மாடியில் இருந்த அறையைக் காட்டினார்.மிகக் குறைந்த வாடகையைச் சொன்னார்.நான் அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கீழே ஹோட்டலுக்குச் சென்றேன்.அங்கே தினேஷிடம் பேசிக் கொண்டிருந்தேன்.சில மாதங்களுக்கு முன்னால் மும்பையிலிருந்து காஷ்மீர் வரை பயணிக்கும் ஒரு ரைடர் அவரது தாபாவிற்கு வந்ததையும் தான் சிம்லாவுக்கும் காஷ்மீருக்கும் நண்பர்களுடன் பைக்கில் சென்றதையும் பற்றி சொன்னார்.இரவு உணவு அளித்தார்.அதற்கான தொகையை வாங்க மறுத்து விட்டார்.பைக் ரைடர்களிடம் உணவுக்கு பணம் வாங்குவதில்லை என்றார்.தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் என்றார்.எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.சமீபத்தில் வெளியான கபாலி படம் பார்த்தேன்.கபாலி சிறையிலிருந்து விடுதலையாகும் போது கைதிகள் கம்பிக்கதவுகளுக்கு வெளியே கைகளை நீட்டி ஒத்திசைவாய் கரம் தட்டும் காட்சி மிகவும் சிறப்பானது என்றார்.எனக்கு பேராச்சர்யமாயிருந்தது.ஜீ மூவிஸ் சேனல் தமிழ் படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிடும்;அவற்றின் மூலம் தமிழ் திரைப்படங்கள் அறிமுகம் உண்டு என்றார்.ராஜஸ்தான் தமிழ்நாடு ஆகியவற்றின் விவசாயம் தொழில்கள் சாலைகள் உள்கட்டமைப்பு ஆகிய பல விஷயங்களைப் பற்றி பேசினோம்.மறுநாள் விடைபெறும் போது முதல்நாள் கூறிய குறைந்த வாடகையிலும் பாதியை மட்டுமே பெற்றுக் கொண்டார்.அவரிடம் விடைபெற்றுக் கொண்டு பீகாம்பூரி என்ற ஊருக்குப் பயணமானேன்.
நெடுஞ்சாலையிலிருந்து ராஜஸ்தானின் கிராமத்துச் சாலைகளில் பயணித்தேன்.கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டருக்கு மேல் கிராமச் சாலைகளில் பயணம்.அவை சாலைகளே அல்ல.மிகவும் குறுகிய தெருக்கள் என்று சொல்ல வேண்டும்.மண் சாலையாகவும் இல்லாமல் கான்கிரீட் சாலையாகவும் இல்லாமல் தார் சாலையாகவும் இல்லாமல் எந்த வகையில் சேர்ப்பது என்று அறுதியிட முடியாமல் இருக்கும்.சாலையின் நிலையே இப்படி என்னும் போது பராமரிப்பு குறித்த கேள்வி என்பது எழ வாய்ப்பில்லை.மிகக் குறைவான மக்கள் அடர்த்தி.பேருந்துகள் என்பது அநேகமாக இல்லை.எப்போதாவது சில டெம்போக்கள் எதிர்படுகின்றன.அவ்வாறான சாலையில் சென்ற போது ஒரு மரத்து நிழலில் இரு பெண் குழந்தைகள் நின்று கொண்டிருந்தன.வழிப்போக்கர்களுக்கு தண்ணீர் அளிப்பதை தங்கள் அறமாக மேற்கொள்கின்றனர்.மாடு மேய்த்தல் அவர்களின் தொழில்.அவர்களின் பெயரைக் கேட்டேன்.ஒரு குழந்தையின் பெயர் அனிதா.மற்றொரு குழந்தையின் பெயர் மீனா.அவர்கள் அளித்த நீரை அருந்தி அவர்களுக்கு நன்றி கூறி பயணத்தைத் தொடர்ந்தேன்.
பீகாம்பூரியில் திரு.ராஜேந்திர சிங் என்ற மனிதர் தனது முயற்சியின் மூலம் ஆரவல்லி மலைத்தொடரை ஒட்டியுள்ள கிராமங்களில் நீர்நிலைகளின் உருவாக்கத்தையும் பராமரிப்பையும் அங்குள்ள மக்களே நிர்வகிக்கும் அமைப்பை உருவாக்கும் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டுள்ளார்.அவரை ‘’ஏரி மனிதர்’’ என்கிறார்கள்.நீர்நிலைகள் பாதுகாப்பு,மழைநீர் சேமிப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்.அவரது ஆசிரமத்துக்கு சென்று தங்கியிருந்தேன்.திரு.ராஜேந்திர சிங் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள ஜெய்ப்பூர் சென்றிருந்தார்.அங்கிருந்த தன்னார்வலர்கள் அவ்வூரில் அவர்கள் அமைத்த ஏரிகளை அழைத்துக் கொண்டு போய் காட்டினார்கள்.பக்கத்து கிராமங்களுக்கும் சென்று பார்த்தோம்.இரவு ஆசிரமத்தில் தங்கினேன்.மறுநாள் காலை ரிஷிகேஷ் செல்வதற்கான எனது பயணத்தைத் துவக்கினேன்.
ஆள்வார் சென்று அங்கிருந்து குர்காவ்ன் வழியாக தில்லி சென்றேன்.அடுக்கு மாடிக் கட்டிடங்களின் கட்டுமானம் பெருமளவில் குர்காவ்னிலும் தில்லியிலும் நடந்து கொண்டிருக்கிறது.உயரமான ஒரு கம்பத்தில் நமது தேசியக் கொடி மூவண்ணத்தில் ஒளி வீசி பறந்து கொண்டிருந்ததைப் பார்த்த போது மனம் விம்மியது.இந்தியா மனிதர் வாழும் நிலப்பரப்பு மட்டுமல்ல;அது ஓர் உணர்வு.
குர்காவ்னில் ஹீரோ மோட்டார் கம்பெனியின் தலைமை அலுவலகத்தை எனது ஹீரோ ஹோண்டா சி.டி டீலக்ஸ் வாகனம் கடந்து சென்றது.
தில்லியின் போக்குவரத்து மிகுந்த சாலைகளைக் கடந்து டேராடூன் செல்லும் சாலையை அடைந்தேன்.மாலை மீரட் சென்றடைந்தேன்.வாடகை குறைவான ஒரு அறை கிடைத்தது.அதன் பொறுப்பாளருக்கு நான் தென்னிந்தியாவிலிருந்து வந்தது குறித்து பெரும் மகிழ்ச்சி.
பனிமூட்டமான ஒரு காலைப் பொழுதில் ஹரித்வார் செல்லும் பாதையில் பயணித்தேன்.மதியத்தை ஒட்டி ஹரித்வார் சென்றேன்.ஹரி-கி-பௌரி யில் பராமரிப்பு பணிகள் நடந்ததால் கங்கையை பிரதான பாதையில் திருப்பி விட்டிருந்ததால் குறைவான நீரே வந்தது.அதில் நீராடினேன்.உடன் புறப்பட்டு ரிஷிகேஷ் சென்றேன்.
ரிஷிகேஷ் சென்று ஒரு ஆசிரமத்தில் தங்கிக் கொண்டேன்.அவர்கள் அளித்த மதிய உணவை உண்டேன்.மயிலாடுதுறையிலிருந்து மூவாயிரத்து அறுநூறு கிலோமீட்டர் பயணித்திருந்தேன்.காவேரி,பாலாறு,கிருஷ்ணா,பென்னாறு,துங்கபத்திரா,கோதாவரி,நர்மதா,யமுனா மற்றும் பல ஆறுகளைக் கடந்து வந்திருக்கிறேன்.விந்திய மற்றும் ஆரவல்லி மலைத்தொடர்களில் பயணித்திருக்கிறேன்.பதினைந்து நாள் பயணம்.ஆயில் மாற்ற இன்னும் நானூறு கிலோமீட்டர் மீதம் இருந்தது.இருப்பினும் நேரம் இருந்ததால் அங்கேயே மாற்றினேன்.பணிமனையின் உரிமையாளர் ஒரு வயதான சர்தார்ஜி.என்னைப் பற்றி கேட்டறிந்து மிகவும் மகிழ்ந்தார்.ஆயில் மாற்றித் தந்தார்.எண்ணற்ற வண்டிகள் அவர் பணிமனையில் நின்றன.ஒரு பெண் அவரிடம் நீங்கள் பணம் வாங்க மட்டுமே செய்கிறீர்கள் எப்போதாவது கொடுத்ததுண்டா என்று கிண்டல் செய்தாள்.அவளுக்கு அவர் பத்து ரூபாய் உடனடியாகத் தந்தார்.அவள் வண்டியை விட்டுவிட்டு அதன் சர்வீஸ் கட்டணத்தின் ஒரு பகுதியான ஐந்நூறு ரூபாயை தந்து விட்டு சென்றாள்.ஒரு பெரிய குடும்பத்தில் பாட்டனாரிடம் கொள்ளும் பிரியம் போல அவரிடம் வாடிக்கையாளர்கள் பிரியமாயிருந்தனர்.வண்டியை வாட்டர் வாஷ் செய்தேன்.
மாலை அந்தியில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சிக்கு சென்றேன்.அங்கிருந்த படித்துறையில் அனைவரின் எண்ணமும் கங்கையின் மீது.எப்போதும் அன்னையாக இருப்பவள் மீது.ஓர் இசைக் குழு வாத்தியங்களை இசைத்து கங்கையின் கருணையையும் சிறப்புகளையும் பற்றி பாடிக் கொண்டிருந்தது.பின்னர் ராமரின் புகழ் பாடியது.ஆஞ்சனேயர் பற்றிய பாடலைப் பாடினர்.சீதையின் பெருமைகளைப் பாடினர்.மீண்டும் கங்கை குறித்த பாடல்.குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் படித்துறையில் வணங்கியவாறு அமர்ந்து பாடலுக்கு ஏற்ப தலையசைத்து கரங்களால் தாளமிட்டிருந்தனர்.செவ்வாடை அணிந்த பூசகர்கள் பதினைந்து பேர் கங்கை முன் நின்றிருந்தனர்.ஆரத்திக்கான ஏற்பாடுகளை அவர்களின் உதவியாளர்கள் சடுதியில் செய்தனர்.மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மலர்களை நிகழ்ச்சி துவங்கும் முன்பாகவே சிலர் தீபங்களுடன் கங்கையில் விட்டனர்.ஐரோப்பியர்கள் தங்கள் மனைவி குழந்தைகளுடன் முதல் வரிசையில் அமர்ந்து நடப்பவற்றைக் கவனித்தனர்.அவர்கள் பெரும் பரவசத்தில் இருப்பதை அவர்கள் கண்களில் காண முடிந்தது.மாலை இருளான தருணத்தில் பூசகர்கள் தீபத்தால் கங்கைக்கு ஆரத்தி வழிபாடு நடத்தினர்.மணிகள் ஒலித்து எழுந்த ஓசை இனிய இசையானது.காற்றில் அலையும் தீச்சுடர் கங்கை நீர் அலைகளில் பிரதிபலித்து நெளிந்தது.நான்கு திசைகளுக்கும் சுடர் காட்டி வழிபட்டனர்.ஒரு பூசகர் அங்கு அமர்ந்திருப்பவர்கள் நெற்றியில் திலகமிட்டார்.என் நெற்றியிலும் திலகம் பதிந்தது.மனம் இளகியிருந்த நிலையில் கங்கை அன்னையின் முன்னால் கண்ணீர் விட்டு அழுதேன்.கங்கா மகாராணி கி ஜெய்,ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கி ஜெய்,சீதா மாதா கி ஜெய்,பஜ்ரங் பலி கி ஜெய் என ஜெய கோஷம் உரத்து எழுந்தது.
மறுநாள் அதிகாலை ரிஷிகேஷின் ஒரு படித்துறைக்குச் சென்று கங்கையில் மூழ்கினேன்.வான் மேகங்களிலிருந்து செங்கதிர் சூரியன் மெல்ல வெளிப்படத் துவங்கியிருந்தான்.மரங்கள் அடர்ந்த ஓர் மலை அவனுக்குக் கீழே.அதன் கீழே கங்கை வெள்ளமென பாய்ந்து கொண்டிருந்தது.காலைப்பொழுதின் குளிர் நீரில் நின்றிருந்த உடலைத் துளைத்தது.மீண்டும் மீண்டும் மூழ்கி எழுந்தேன்.அம்மா அம்மா என அரற்றினேன்.காலையில் கங்கைக்கு மலரும் பாலும் அர்ப்பணித்து பெண்கள் வணங்கினர்.கரைக்கு வந்து கதிரவனையும் இமயத்தையும் கங்கையையும் வணங்கினேன்.
காவேரிக்கரையில் தொடங்கிய பயணம் கங்கையை அடைந்திருந்தது.அன்று ஊரிலிருந்து புறப்பட்டதிலிருந்து பதினாறாவது நாள்.வீடு திரும்பும் எண்ணம் வந்தது.வீடு திரும்ப இரண்டாயிரத்து ஐந்நூறு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.ரிஷிகேஷ்-புலண்ட்ஷார்-ஜான்சி-நர்சிங்பூர்-சந்திரபூர்-கம்மம்-நெல்லூர்-சென்னை மார்க்கமாக நிலக்காட்சிகளைக் கண்டவாறு ஏழு நாட்கள் பயணித்து மயிலாடுதுறை வந்தடைந்தேன்.தருமபுரம் தருமபுரீஸ்வரர் ஆலயம் சென்று பயணம் நல்ல முறையில் நிகழ்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்து வீடு திரும்பினேன்.

4 Replies to “ஹம்பி: நிலவைக் காட்டும் விரல்”

  1. வணக்கம்.தங்களின் காவிரி முதல் கங்கைவரை பயணம் இனித்தது.நான் 40 வருடங்களுக்கு முன் கண்ட கனவு தங்களின் பயணம்
    மூலம் மனதால் பயணித்தது போன்ற உணர்வு.அப்போதய வீட்டு கட்டுப்பாட்டில் நடைபெற முடியாத நிகழ்வை தற்காலம் நிகழ்த்துகிறது.
    மேலும் பயணம் செய்ய வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.