மதப் போர்கள்

(இரண்டு புத்தகங்களின் மதிப்புரை ஒன்று டைம்ஸ் லிடரரி சப்ளிமெண்ட் பத்திரிகையில் பிரசுரமாகி உள்ளது. அதன் ஒரு சுருக்க மொழிபெயர்ப்பை இந்த இதழில் வெளி இடுகிறோம். அண்டை நாடுகள் இந்தியா மீது நடத்தும் ஆக்கிரமிப்பு முயற்சிகளால் சூழலில் நிலவும் அழுத்தமும், இந்தியா இப்போது ஒரு திருப்பு முனையில் இருக்கையில் அதை மறுபடியும் உடைத்து வறுமையில் ஆழ்த்த நாடெங்கும் இயக்கங்கள் நடக்கின்றன என்பதைக் காண நேர்வதும் காரணங்கள்.)

hadith_islam_muslim_caliphate_jihadis_12_imams_syria_iraq_sunni_shia_prophet_shrine_religion_wars

பெயர் பெற்ற எல்லா அறிவாளர்களாலும் முழுமையானது என்று கருதப்படுவதும், சுன்னி இஸ்லாமியவாதிகளிடையே பரவலாக அறியப்பட்டதுமான ஒரு ஹடித் (நபி முஹம்மது அவர்களின் ஒரு வாக்கு) சொல்வது இது: உம்மாவின் வரலாறு ஐந்து கட்டங்களைக் கடக்கும்: முதலில், நபியே உம்மாவை ஆள்வார், எப்படி நல்வாழ்வு வாழ்வது என்று அதற்கு போதிப்பார்; அடுத்து காலிஃபாவின் ஆட்சி எழும், காலிஃப்கள் நபியின் போதனைகளால் வழிநடத்தப்பட்டு ஆட்சி செய்வர்; பிறகு வன்முறையால் கைப்பற்றப்பட்ட அரசின் மீது நல்ல நோக்குடன் நடத்தப்படும் ஆட்சியும், அதன் பின்பு , நசுக்கி ஆளும் கொடிய ஆட்சியும் தொடரும்; இறுதியாக மறுபடி காலிஃபாவின் அரசு எழும், மறுபடியும் நபியின் போதனைகளின் வழியை மேற்கொண்டு ஒரு காலிஃப் ஆள்வார், இந்த உலகின் இறுதி நாள்வரை அந்த ஆட்சி தொடரும்.
இறுதித் தீர்ப்பு நாள் பற்றிய சிந்தனையின் பார்வையில், 1923 இல் அடாடுர்க் ஆட்டமன் காலிஃப் ஆட்சியை அகற்றியது ஐந்து கட்டங்களில் மூன்றாவது கட்டத்தை எட்டிய நிலை, நல் நோக்கம் கொண்ட அரசாட்சி. அதற்குப் பிறகு, இஸ்லாமிய உலகு கடுமையான சர்வாதிகாரிகளாலோ, ஒழுக்கம் முற்றிலும் இழந்த அரசர்களாலோ யாரானாலும், அந்தக் கொடுங்கோலாட்சியாளர்களின் அநீதியால் துன்புற்றுக் கொண்டிருக்கிறது. ஜிஹாதிக் குழுக்கள் தம்முள் சிறந்த வழி என்பதில் எத்தனை வேறுபட்டிருந்தாலும், அவை எல்லாமே இறுதி இலக்கைப் பொறுத்து ஒரே நோக்கமே கொண்டிருக்கிறார்கள், பொதுவாகச் சொன்னால் அதில் அனைத்து வகை இஸ்லாமிசமும் ஒன்றுபட்டிருக்கின்றன: அது, இறுதித் தீர்ப்பு நாள் வருவதற்கான வழியை வகுக்கச் செய்வதற்காக, காலிஃபா ஆட்சியை மறுபடி நிறுவுவது என்ற நோக்கம்.
2014 ஆம் ஆண்டில் ஜூன் மாதம், அல் கைதாவிலிருந்து உடைந்து போன ஒரு குழு, குறிப்பிடும்படியான வகையில் கொடூரமான குழு எனலாம், இந்தக் குறிக்கோளை அடைந்தது, ஆனால் தன் மூலக்குழுவைப் பகைத்துக் கொள்ளவும் செய்தது. ஈராக்- சிரியாவின் எல்லைப் பகுதியின் இருபக்கங்களிலும் பெரும் நிலப்பரப்பை வென்று கைப்பற்றிய, இஸ்லாமிச அரசு என்ற இந்தக் குழு, தன் தலைவரான அபு பக்ர் அல்- பாக்தாதி இனிமேல் காலிஃப் இப்ரஹிம் என்று அறியப்படுவார் என அறிவித்தது. யூஃப்ரடிஸ் நதியின் கரையோரப் பகுதியில் இருந்த சிரிய நகரான ரக்காவிலிருந்த தன் பாசறையிலிருந்து- இங்குதான் அப்பாஸித் வம்சாவளிக் காலிஃப்களில் மிக்க புகழ் வாய்ந்தவரால ஹருன் அல்- ரஷீத், தன் அரசவையைக் கொண்டிருந்தார்.  சண்டைகளும் பிளவுகளும் நிறைந்த பாக்தாதிலிருந்து பொது ஆண்டு 796 இல் தன் அரசவையை அவர் இங்கு மாற்றினார்-  இந்தப் புது காலிஃபும் அவரது சகாக்களும் இறுதித் தீர்ப்பு வரும் நாளுக்காகத் தயாரிப்புகளில் இறங்கி இருக்கிறார்மள். அது உடனே வரவிருக்கிறது என்று இவர்கள் நம்புகிறார்கள், இந்த நாளில் மார்க்கத்திலிருந்து தவறியவர்களும், சிலை வணக்கம் செய்வாரும் உலகிலிருந்து அழிக்கப்பட்டு உலகு சுத்திகரிக்கப்படும் என்றும் நம்புகிறார்கள்.
இஸ்லாமிச அரசின் உருவாக்கம், இருபதாண்டுகளாக முஸ்லிம்களின் உலகைப் பீடித்துள்ள பல வகை ஜிஹாதி இயக்கங்களின் கதையில் உண்டான புதுக் குழப்பம்தானேயன்றி வேறில்லை. இவை சுமார் இருபது லட்சம் மக்களைப் பலி வாங்கி இருக்கின்றன, அவர்களில் அனேகம் பேர் முஸ்லிம்கள்தான். இந்தக் குழப்பத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்று உலக மக்கள் யோசித்தால் அது நியாயமே. இங்கு மதிப்புரை பெறும் இரு புத்தகங்கள் என்ன நடக்கிறது என்பதை விளக்க முனைந்திருக்கின்றன- ஒன்று விரி ஆடி வழியே காலிஃபா அரசுடைய வரலாற்றை ஏழாம் நூற்றாண்டில் முதலில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து ஆய்வு செய்கிறது, மற்றது நெருங்கி உருப்பெருக்கிப் பார்த்து கடந்த இருபதாண்டுகளில் நடந்த பயங்கரக் கதையை ஒவ்வொரு தருணமாக, பல களங்களாக வருணிக்கிறது.
ஓரியண்டல் மற்றும் ஆஃப்ரிக ஆய்வுகளுக்கான ஒரு பல்கலை அமைப்பில் பேராசிரியராகப் பணியாற்றும் ஹ்யூ கென்னடியின் ‘த காலிஃபேட்’ புத்தகம், நன்கு பழக்கமான வரலாற்றையே திரும்பப் பார்க்கிறது. மூல நூல்களைத் தேடிப் பிடித்துப் படிப்பதில் அவர் ஒரு வல்லுநர், ஏற்கனவே இஸ்லாத்தின் துவக்க கால ராணுவ மற்றும் அரசியல் வரலாற்றைப் பற்றிய பல நூல்களை எழுதி இருக்கிறார். பெலிகன் பிரசுரத்தின் அறிமுக நூலாக அமையும் இந்தப் புத்தகத்தில், இந்த சமீபத்திய பருந்துப் பார்வை, முந்தைய நூல்களளவு விரிவானதாக இருக்க வழியில்லை என்றாலும், இந்த முறை கென்னடியின் பெருந்தூரிகை ஒரு பன்முகத்தன்மையும், மிக்க ஆர்வத்தைத் தூண்டுவதுமான வரலாற்றைச் சித்திரிக்கிறது.
நல்வழியில் நடாத்தப்பட்ட காலிஃபாக்கள் என்றறியப்படும் முதல் நான்கு காலிஃப்களின் மிகுந்த சர்ச்சைகளுக்குள்ளான ஆட்சிக்காலங்களில் துவங்கும் இந்தப் புத்தகத்தில், கென்னடி உமய்யாதுகளின் காலத்திலிருந்து, (குறிப்பாக) அப்பாஸித்துகளின் காலத்தைத் தாண்டி, இஸ்மாயிலி ஃபாதிமித்கள் மற்றும் உமய்யாதுகள், அல்- ஆண்டாலஸின் அல்மோஹாதுகள் வரையான காலிஃப் அரசுகளை விவரிக்கிறார். ஒவ்வொரு காலிஃபா அரசும் ஒரு அத்தியாயம் பெறுகிறது. ஆனால் அப்பாஸித்துகளுக்கு மட்டும் கென்னடி நான்கு முழு அத்தியாயங்களைத் தாராளமாக அளிக்கிறார், ஒரு வேளை அவர்களின் நீண்ட கால ஆட்சியை உத்தேசித்தும், மேலும் முக்கியமாக- இஸ்லாமிய வரலாற்றியலில் அவர்கள் எத்தனை தூரம் பிரதானமாக இருக்கிறார்கள் என்பதைக் கருதியும் இப்படிச் செய்திருக்கலாம். மாம்லுக்குகளையும், ஆட்டொமான்களையும் பற்றிய ஓர் அத்தியாயத்துடனும், காலிஃபாக்களின் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இஸ்லாமிசத்தைப் பரப்ப முனைந்த குழுக்கள் காலிஃபா ஆட்சி என்ற கருத்தாக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டது பற்றியும், இஸ்லாமிய அரசு என்ற கருத்தையும் தனியாகக் கவனிக்கும் ஒரு அத்தியாயத்தையும் சேர்த்து முடித்திருக்கிறார்.  அவர் பயன்படுத்தும் பல இஸ்லாமிய வரலாற்றாளர்களைப் போலவே கென்னடியும் வரலாற்றைத் தன் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப வனைகிறார். ஆனால் அவர்களைப் போல அல்லாது, இவர் அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார்.
“இந்தப் புத்தகம் அமைதியாக அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது” என்று துவக்கத்திலேயே எழுதுகிறார், பிற்பாடு தன் இறுதி நோக்கமானது, “காலிஃபா அமைப்பு என்பது விரிவான வகைப்பட்ட பற்பல அர்த்தங்களையும், விளக்க முறைகளையும் உள்ளடக்கிய ஒரு கருத்துரு” என்பதை நிறுவுவதே என்றும் சொல்கிறார். இப்படி ஒரு பன்முக வெளிப்பாட்டை அணுகுமுறையாகக் கொள்வது, இஸ்லாமிச அரசு என்னும் அணுகலில் ஒற்றைத் தன்மை கொண்ட வரையறுப்புகளை மிகத் தெளிவாகவே எதிர்ப்பதாகும். இஸ்லாமிச அரசு என்ற அணுகலைக் கைக்கோண்டவர்கள் பண்டைக்கால காலிஃபா அரசமைப்பை முன்வைத்து அந்த வகை அரசுரிமைகளைத் தம்முடையதாகக் கோருவது மூலம் மனச்சாட்சியே இல்லாத கொடுமைகளுக்கு வழி வகுத்திருக்கிறார்கள். ஒரு கல்வியாளர் என்ற முறையிலும், அதுவும் சாதாரண இடமில்லை, லண்டன் மாநகரத்தில் உள்ள கல்வியாளராக இருக்கும் கென்னடி, முஸ்லிம்களையும், முஸ்லிமல்லாதவர்களையும் இஸ்லாமிச அரசு என்ற இயக்கத்தின் சாதிப்புகளை எல்லாம் நம்பி விடாமல் தடுப்பது தன் கடமை என்று நினைக்கிறார் போலத் தெரிகிறது.
ஆனால் (எகிப்து, மொராக்கோ, பாகிஸ்தான் மற்றும் இந்தோநேசியா ஆகிய நாடுகளில் மேரிலாண்ட் பல்கலை 2007 ஆம் ஆண்டு நடத்திய ஒரு பொதுக் கருத்துக் கணிப்பின்படி) 65 சதவீதம் முஸ்லிம்கள் அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் ஒரு காலிஃபா ஆட்சியின் கீழ் இணைப்பதை ஆதரிக்கிறார்கள் என்றிருக்கையில் ஒரு முக்கியமான கேள்வியை நாம் கேட்பது அவசியம். காலிஃபா அரசு காலத்தின் உச்ச கட்டமான அப்பாஸித்துகள் மீது இத்தனை கவனத்தைச் செலுத்துவதன் மூலமும்- நவீன காலத்தவர்களுக்கும், தாராளவாதிகளின் கற்பனைக்கும் சிறிதும் சங்கடம் தராதவையான அவர்களுடைய கவிதை, அரசவையின் அற்புதங்கள், நாட்டியக்காரப் பெண்கள், மேலும் தத்துவ ஆய்வுகளின் சிறப்புகள் போன்றனவற்றைச் சிறப்பாகக் கவனிப்பதன் மூலம்- காலிஃபா ஆட்சி பற்றி ஒவ்வொருவரும் சிந்தித்தனவற்றை எல்லாம் முழு விவரங்களுடனும், தீரவும் வருணிப்பதன் மூலமும் கென்னடி இஸ்லாமிச அரசு என்னும் இயக்கமும், காலிஃபா ஆட்சிபற்றிய அதன் எதிர்காலத் திட்டங்களும் இத்தனை பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்களுக்கு ஏன் கவர்ச்சிகரமாகத் தெரிகின்றன என்பதை விளக்க உதவுகிறாரா என்பதே அந்தக் கேள்வி.
அதை அவர் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். காலிஃபா அரசைப் பற்றிய கென்னடியின் விவரணையைப் படிக்கையில், அதில் மதம் சார்ந்த ஏதும் இருப்பதை நீங்கள் மறந்து விட்டால் அது உங்கள் பிழையாக இராது. இந்த ஆசிரியரின் பிரச்சினை பகுதி வரலாற்றியலையும், பகுதி மதவியலையும் சார்ந்தது. கென்னடி ஒரு எச்சரிக்கை மிக்க வரலாற்றாளர். அவர் செயல்படும் துறையில் அரபிய மூலத் தரவுகளை நம்பத்தக்கவை அல்ல என்று முற்றிலும் கழித்துக் கட்டுவது அடிக்கடியுமே நடப்பதுதான்; அதனாலேயே இவருடைய முத்திரையான பழைய பாணி விவரணை முறை வரலாறு என்பது வரவேற்கத்தக்க சீர்ப்படுத்தலாகவே தெரிகிறது. ஆனால், மறைந்த ஆய்வாளர் பட்ரீஷியா க்ரோன் (அந்தத் துறையே இப்படிப் பலரைக் கொண்டதுதான் என்றாலும், இவர் குறிப்பாக எரிகொள்ளியாக இயங்கிய துடிப்பான ஓர் ஆய்வாளர்) முன்பொரு தடவை சொன்னதுபோல, இப்படி “ஏற்கப்பட்டு ஸ்தானம் பெற்ற பழைய கருத்துகளையே மறுபடி கலைத்து அடுக்கும் முறை” பலநேரமும் “எதார்த்தமற்ற அதீத நிலைகளால் சாயம் பூசப்பட்டது” போலத் தெரியலாம். கென்னடியின் விவரணை விரிகையில் என் காதுகளில் இந்த எச்சரிக்கைதான் ஒலித்தது.
நபியாக முஹம்மதுவின் வாழ்வு துவங்கிய ஏழாவது நூற்றாண்டிலிருந்து அப்பாஸித்துகளின் எழுச்சி துவங்கும் எட்டாவது நூற்றாண்டின் நடு வரை விவரிக்கும் மிகவுமே சுருக்கமான அத்தியாயங்களில் இந்த எச்சரிக்கைதான் எனக்குத் தோன்றியது. வரலாற்றாளர்களுக்கு இதுதான் மிகவும் தொல்லை கொடுக்கும் காலகட்டமாக இருந்திருக்கிறது, ஏனெனில் சமகால ஆதாரங்கள் களத்தில் மிகவுமே குறைவாகத்தான் கிட்டி இருக்கின்றன. கிட்டி இருப்பன அனேகமாக முஸ்லிம் அல்லாத ஆதாரங்களாகத்தான் உள்ளன, இவற்றை கென்னடி பெரும்பாலும் கவனிப்பதில்லை என்றாலும், முஸ்லிம் ஆதாரங்களை தகுதி கருதி எடுத்துக் கொள்கிறார், அவற்றை நிறைய கொடுக்கிறார், அலசி நோக்கவும் செய்கிறார். இது நமக்குக் கிளர்ச்சியூட்டுகிறது, பிறகு சொல்லப்படுவன, நபியின் துவக்க காலச் சகாக்கள் நடுவே யார் நபி முஹம்மதுக்கு அடுத்து உருவாகத் துவங்கி இருக்கும் உம்மாவுக்குத்[1] தலைமை ஏற்க வேண்டும் என்பது குறித்து நடந்த விவாதங்கள் பற்றிய நன்கு பழக்கமான கதைகள் பற்றி (இந்த வாதங்கள்தாம் கடைசியில் சுன்னிகளுக்கும் ஷியாக்களுக்குமிடையேயான பிளவுக்குக் காரணமாகின்றன); வெவ்வேறு கட்சிகளும், மதக்குழுக்களும் காலிஃபா பதவிக்குப் போட்டியிடும் வெவ்வேறு நபர்களின் பின்னே சேர்வதால் நடந்த அரசியல் படுகொலைகளும், உள்நாட்டுப் போர்கள் பற்றி; உமர் ஒப்பந்தம் என்று சொல்லப்படுவதும், முஸ்லிமல்லாதவர்களிடம் காட்டப்பட்ட சகிப்புத்தன்மையும், அதற்காக முதல் காலிஃபாக்கள் தப்பாமல் பாராட்டப்படுவதும் பற்றி; மிகவுமே பழிக்கப்படும் உமய்யாது பரம்பரையினருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த கருத்து மோதல்கள் எப்படி அந்த மரபினரின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் ஒட்டி அமைந்தன என்பது பற்றி;இத்தனையும் பேசப்படும்போது, எங்கோ பின்னணியில் நாம் முஸ்லிம் பேரரசு விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை அரசல் புரசலாகத் தெரிந்து கொள்கிறோம்.
ஆனால், க்ரோனால் கவனிக்கப்பட்டிருக்கக் கூடியது ஒன்று இங்கு இருக்கிறது, அது இந்த நாடகத்தின் மிக முக்கியமான முதல் பகுதி மீது சிறிதும் எதார்த்தமே இல்லாத ஒரு களிம்புச் சுவடு படிந்திருப்பதை நாம் கவனிக்கத் தவற மாட்டோம் என்பதுதான். கென்னடி இந்தக் காட்சியை சரியாக அமைத்து வைக்கத் தவறுகிறார், பண்டைக் காலத்தின் கடைசிப் பகுதியில் இருந்த உலக நிலையில் நம்மை அமிழ்த்தத் தவறுகிறார். அந்த கால இடைவெளியில்தான்-  கோமான் கான்ஸ்டன்டைன் காலத்துக்கும், அரபு வெற்றிகளுக்கும் இடைப்பட்ட பகுதி அது-  அதனூடேயும், அதிலிருந்தும்தான் முஹம்மதின் இயக்கம் காலநிலைகளை மாற்றி அமைக்கும் விதமாக வெடித்தெழுந்தது. பல தலைமுறைகளுக்குப் பிறகு பாக்தாதில் அந்த வரலாறை எழுதிய அரபு-பாரசீக வரலாற்றாளர்களை ஒரேயடியாக நம்பி வரலாற்றை எழுதினால் இப்படி ஒரு விளைவு நேரும். அவர்களுக்கு பண்டைக் காலம் அப்படி ஏதும் எழுதப்படாத வெற்றுப் பலகையாக இல்லை என்றாலும், அந்தக் கால கட்டத்தை அது இருந்த விதத்தில் பற்றி அதை விவரிக்கவோ, அதன் இறையியல் வளங்களிலோ, கடையப்பட்டிருந்த ஆழங்களிலோ அவர்களுக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை. க்ரோன் சொல்வதை இன்னொரு முறை பார்ப்போம், “மத்திய தரைக் கடல் பகுதியின் பண்டைக் காலத்திலிருந்து அரபுப் படையெடுப்பாளர்களின் காலத்துக்கு வரும் எவரும் அங்கு காணப்படும் தொடர்பறுந்த தன்மையைக் கவனிக்கத் தவற மாட்டார்கள்: ஹெராக்ளியஸ் தன் நெகிழ்வூட்டும் விடைபெறுதலுக்கு உரியதாக ஆக்கியிருந்த சிரியா முற்றிலும் காணாமல் போய் விட்டிருப்பதாகத் தெரியும், பிஸாண்டைன் ஆட்சிக் காலத்திலிருந்து (பண்டைக் கீழை ரோமப் பேரரசுக் காலம்) மட்டும் போய்விட்டதாக இல்லை, பூமியின் பரப்பிலிருந்தே அகற்றப்பட்டு விட்டதாகத் தோன்றும்.”
இது முக்கியமானது. ஏனெனில் இஸ்லாம் பண்டைக் காலத்தின் கடைசிப்பகுதியைச் சார்ந்தது. பல விதங்களில் அது இறுதிப் பண்டைக் காலத்தின் முக்கியமான சாதனை. இதில்தான் கோமான் அலெக்ஸாந்தர் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சாதிக்க முயன்ற உலகப் பேரரசு என்ற கருத்து, இறுதியாக வெறும் அரசியல் குறிக்கோளாக இருப்பதிலிருந்து உருமாறி ஒரு மாற்றுக் கருத்துக்கும் இடம் கொடுக்காத இறுகிய மதக் கொள்கையாக ஆனது. அதுவும் இஸ்லாத்தில் ஆனதைப் போல வேறெதிலும் இப்படி ஆகவும் இல்லை. கான்ஸ்டாண்டிநோபிலில்  இருந்த வாகை சூடிய கிருஸ்தவத் தளபதி (இம்பராடோ) தானே பூமியில் கிருஸ்துவின் உதவியாளர் என்று சொல்லிக் கொள்ள முயற்சித்தால், அதை சர்ச் ஏற்கலாம், ஏற்காமல் இருக்கலாம்: இறுதி இரட்சிப்பு என்பது சர்ச்சில்தான் கிட்டும், அதன் பாதிரிகளிடம்தான் பிதாவின் ராஜ்ஜியத்தின் சாவிகள் இருந்தன. அதே போல பேரரசர் ஒருவர் தன் படைவீரர்களிடம் போரில் இறந்தால் சுவர்க்கத்தில் வாழ்வு உண்டு என்று உறுதி அளிக்கக் கூடும்- பெர்ஷிய ஷாக்களிடம் இழந்த முக்கியமான தன் நிலப்பகுதிகளை மீட்கத் துணிகரமாக முயன்ற போது ஹெராக்ளியஸ் தன் படைகளிடம் கொடுத்த உறுதி மொழி இது போன்றதுதான் – ஆனால் அந்த வித உறுதி மொழிகள், இறுதிக் கணக்கில், கிருஸ்தவ உபதேசங்களில் தம் இறைநம்பிக்கைக்காக உயிரைத் தத்தம் செய்வோரைப் பற்றிக் கொடுக்கப்படும் குறிப்புகளோடு முரண்படவே செய்யும்.
இதற்கு மாறாக, காலிஃபா தன் போராளித் துறவிகளிடம் போரில் உயிர்ப் பலியாவதற்கு அஞ்சாதவர்களாக ஆகும்படி தூண்டுகையில், வாழ்வுக்கு அப்பால் அவர்கள் சுவனத்தில் வசிப்பவர்களாக ஆவார்கள் என்று உறுதி அளிக்க முடிந்தது, அதற்கான உரிமை அவரிடம் இருந்தது, ஏனெனில் அவர் எதார்த்தமாகவே ’காலிஃபா அல்லாஹ் ஃபி அர்திஹி’, “பூமியில் அல்லாஹ்வுடைய பிரதிநிதி ” ஆக இருந்தார். இது குறைந்த பட்சம் துவக்கத்தில் நிலவிய நம்பிக்கை, என்று கென்னடி விளக்குகிறார். ஆனால் இஸ்லாத்தில் இருக்கும் நம்பிக்கை சார்ந்த உலகப்பார்வையைக் கணக்கிலெடுக்காது தம் விவரணைகளை மேற்கொள்கையில் கென்னடி, காலிஃபாவின் பதவிக்குப் பின்னே இருக்கும் கடவுளின் கொடை என்ற கருத்தை நம் பார்வையிலிருந்து போக்கடித்து விடுகிறார், ஆனால் அதுதான் இன்றளவும் காலிஃபா என்ற கருத்தின் பின்னே உள்ள சக்தி. பேரரசு எனும் அமைப்போடு காலிஃபியத்தை ஒப்பிடுகையில் கென்னடி எழுதுகிறார்: “பிஸண்டிய அல்லது பெர்ஷிய அரசுப் பதவி என்பது பண்டை அரசாட்சியின் எல்லா மரபுகளையும் ஏற்ற ஒன்றாக இருந்திருக்கும், அதன் ஆடம்பரங்கள், அதிகார அடுக்கு முறைகளையும் ஏற்றிருக்கும், ஆனால் முஸ்லிம்கள் அவற்றை மறுதலித்தனர், அவற்றுக்கு மாற்றுகளைக் கொணர முயற்சித்தனர். மேற்கின் மரபில் அரசர்களின் தலையில் முடியை அமர்த்துவோராக இருந்த போப்கள், ஆர்ச்பிஷப்களைப் போல மதகுருமார்கள் யாரும் இஸ்லாத்தில் இல்லவே இல்லை.” ஆனால் துவக்க கால காலிஃபாக்களுக்கு கிரீடத்தை எடுத்துக் கொடுக்க ஒரு போப் தேவைப்படவேயில்லை, அப்படி ஒரு மதகுரு தேவையில்லை என்பதால் அல்ல, ஆனால் காலிஃபாவே ஒரு மதத்தலைவர் என்பதுதான் காரணம். அவரே உம்மாவிற்கு இருப்பு நியாயத்தையும், மத அடையாளத்தையும் கொடுக்க வல்ல மூலாதாரம். காலிஃபியத்தின் ஆடம்பரமும், அடுக்குமுறை அமைப்பும் துவக்க கால இஸ்லாத்தின் ஒழுக்க வன்மையோடும், சமத்துவ நோக்குள்ள மேலாட்சியாளர்களின் கருத்துகளோடும் முரண்பட்டிருந்த போதும், அத்தகைய ஆடம்பரம் அவரைப் பேரரசராகவோ, ஷா ஆகவோ ஆக்கவில்லை. மாறாக, அது நேர்ந்தது எதிர் திசையில்: பேரரசராக ஒருவர் இருந்தார் என்பதாலேயே ஆடம்பரமும், அடுக்கு முறை ஆட்சியமைப்பும் அவரைச் சுற்றி தன்னியல்பாக எழுந்தது, நபியின் இறப்புக்குப் பிறகான இருபது அல்லது முப்பது வருடங்களில் அப்படி எழத்தான் செய்திருக்கும்- இஸ்லாமிய நம்பிக்கையை முறைப்படுத்திய முஸ்லிம் நீதியாளர்களுக்கும், ரப்பைகளைப் போல எதையும் வாக்குவாதத்துக்கும், மறுபார்வைக்கும் உட்படுத்திய சட்ட வல்லுநர்களையும் இவை என்னதான் உறுத்தினாலும் அது எழுவது நடந்துதானிருக்கும். ரோமப் பேரரசர்களைப் போல, அரபு காலிஃப்களும் ‘அமீர்கள்’, தளபதிகள், பின்னவர்களைப் பொறுத்தவரை, நம்பிக்கையாளர்களின் தளபதிகள், ஆனாலும் அவர் ஒரு ‘இம்பெராடோ’, அது ஒரு லத்தின் மொழிச் சொல், தானைத் தலைவர் என்ற பொருள் கொண்டது, இரு மூல மொழிகளிலும் ராணுவப் பொருள் பொதிந்த சொல் அது.
ஆமாம், காலிஃப்கள் தம்மை ‘முலுக்’ (அரசர்) என்று அழைத்துக் கொள்ள மறுத்தனர்தான், ஆனால் முன்னரோ ரோமப் பேரரசர்களும்தான் தம்மை அரசராக அழைத்துக் கொள்ள மறுத்தனர் (குறைந்த பட்சம், வருங்காலத்தை அறிந்தது போல, ஹெராக்ளியஸ் காலம் வரையாவது அப்படி நடந்து கொண்டனர்).  ஆனால் காலிஃப்கள் அரசர்கள் மட்டுமே அல்ல: அவர்கள் நிஜத்தில் புனிதமானவர்களாவும் கருதப்பட்டனர், உலகத்திற்கே தனி ஆட்சியாளர்களாகவும் கருதப்பட்டனர்- அலெக்ஸாண்டரைப் போலவே (அவருடைய வாழ்நாள் முயற்சிகளை குரான் ஏற்கிறது) அவர்களும் ஒரு உலகளாவிய செயல்திட்டத்திற்கென இயங்கினர். ஆரம்ப கட்டத்திலிருந்தே, ஜிஹாதை நடத்துவது ஒரு காலிஃபின் உரிமை, உலகை இஸ்லாத்துக்குப் பணிய வைக்க வேண்டுமென்ற இறையாணையை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டி இருந்தவர்கள். குறிப்பாக உமய்யாதுகள், எல்லை விரிவுபடுத்தும் ஜிஹாதைத் தங்கள் கருத்தியலின் வரைதிட்டமாக ஆக்கியிருந்தனர். கென்னடி இந்த ஆக்கிரமிப்புகளைக் கவனிக்காமல் விடவில்லை, சரியாகவே வருணிக்கிறார், குறிப்பாக இந்த இடத்தில் எழுதும்போது, “அவர்களின் கூட்டமான பரவல் நாகரீகப்படாத பழங்குடியினர் வளமான, நாகரீகப்பட்ட மத்திய கிழக்குப் பகுதிகளுக்குக் குடியேற்ற முயற்சி அல்ல. அது மெதினாவுக்கு வந்த பல தன்னார்வலர்கள், ராணுவத்துக்கு ஈர்க்கப்பட்டு, வெவ்வேறு தளபதிகளின் கீழ் பொருத்தப்பட்டு, பல திசைகளில் அனுப்பப்பட்டவர்கள்.”  இப்படி எழுதினாலும், அவர் இந்தப் படையெடுப்புகளின் மதச் சார்பைப்  (புனிதம் எனக் கருதப்பட்டதிலிருந்து) பற்றி எழுதும்போது, நம் கவனத்தைத் திசை திருப்பி விட்டிருக்கிறார். எப்படி என்றால், அந்தச் சொல்லைப் பயன்படுத்தினாலும், அதை ‘புனிதப் போர்’ என்று மொழி பெயர்ப்பதைக் கூட, அனேக இடங்களில் பயன்படுத்துகையில், ஜிஹாத் ஒரு தற்காப்புப் போராக ஆனபிறகுதான்,  பயன்படுத்துகிறார், காலிஃபா அரசு நலிவுற்று, அதற்கு எதிரிகள் வலுவடைந்த பிறகுதான் பயன்படுத்துகிறார் என்பதால், இந்தக் கவனத்தைத் திசை திருப்பல் நடக்கிறது. இந்த நலிவு வருவதற்குப் பல நூற்றாண்டுகள் ஆகி இருந்தன. உமய்யாதுகளின் ஆட்சிக் காலத்தின் முடிவில், ‘காலிஃபாக்களின் செயல்பாடு என்பது மரபாக’ இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக இருந்தது என்று அவர் எழுதுகையில் அது வினோதமாக இருக்கிறது. விஸிகாத் காலத்து ஸ்பெயின், பிஸண்டைன் கால அனடோலியா, ஸாஸ்ஸனியன் காலத்து ட்ரான்ஸொக்ஸானியா ஆகியன இந்தக் காலிஃபாக்களின் செயல்களை வேறு விதமாக்த்தான் வருணித்திருப்பார்கள்.[2]
இஸ்லாம் போரைப் ‘புனித’ நடவடிக்கை என்று ஆக்குகிற  முறையைக் கவனிக்காமல் ஒதுக்குவதோ, அல்லது குறைத்துக் காட்டுவதோ நிறைய விஷயங்களைப் புரியாததாக ஆக்கும் செயல்.  இஸ்லாம் துவக்கத்திலேயே ஒரு அரசியல் மதவியல் என்பதை நாம் இப்படிச் சொல்லலாம்: உலகில் உள்ள அனைத்து மக்கள் குழுவினரிலிருந்தும், பண்டைச் சமூகங்களிலிருந்தும், அரேபியாவிலிருந்த குரைஷி என்ற ஒரு பழங்குழுவினரையே, மனிதருக்கான தன் இறுதித் திட்டத்தை நிறைவேற்றத் தக்கவர்களாக இறைவன் தேர்ந்தெடுத்தான். அவர்களின் எண்ணிக்கையிலிருந்து, ஒரு நபியைத் தேர்ந்தெடுத்து, தன் சித்தத்தை அவருக்கு ‘தெளிவான அரபி மொழியில்’ விளக்கினான், பின்பு அவருக்கு மெதினாவில் இறைவனால் நியமிக்கப்பட்ட மிகச் சிறந்த அரசமைப்பை நிறுவுமாறு கட்டளையிட்டான். குரைஷி அல்லாதோர் அவர்களின் கூட்டத்தில் நிரம்பினாலும், குரைஷ்கள் இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவியாகவே இருந்தனர்.   உம்மாவினரிடையே, காலிஃபாவாக யார் இருக்க வேண்டும் என்பது குறித்து இறைவனின் சித்தம் என்னவென்று முடிவு கட்டுவதில் உம்மாவினரிடையே வேற்றுமைகள் இருந்த போதும்- பழங்குடியினர் நடுவே கலந்தாலோசிப்புகள், தந்தை வழிப் பாரம்பரியம், களத்தில் மோதிக் கொண்டு அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுதல், அல்லது இந்த மூன்றின் ஏதோ ஒரு கலவை- அவர் ஒரு குரைஷியாக இருக்க வேண்டுமென்பதே இறைவனின் சித்தம் என்பதும் (சில பிளவுக் குழுவினர் இருந்த போதும்), அந்த மனிதருடைய ஆகர்ஷணம் நிறைந்த தலைமையில் குரைஷிகள் இறைவனின் ஆட்சியை பூமியெங்கும் பரப்புவார்கள், உலகிலுள்ள எல்லா அதிகாரங்களும் இறைவனின் ஆணைக்குக் கீழ்ப்படியும் வரை இதை அவர்கள் செய்வார்கள், என்பதும் நம்பிக்கையாகவே இருந்தன.
இஸ்லாத்தில் அதன் துவக்ககால மதச் சிந்தனையை விளக்கிச் சொல்ல ஒரு  ‘புனிதர் பால்’ இல்லை என்றாலும், நாம் குரானில் தேடப் புகுந்தால், இந்தக் கதை பெறப்படக் கூடியதுதான். இருந்தும், கென்னடி குரானுக்கு ஒரு கண நேரக் கவனம்தான் செலுத்துகிறார். அதில் காலிஃப் என்ற பதவி குறித்து ஒரு கருத்து இருக்கிறது என்பதை அவர் மறுக்கவில்லை. ஆனால் காலிஃபாக்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களின் செயல்பங்கு என்ன என்பன குறித்து அவர் சொல்வது இது, “அந்தப் புனித நூல் இது குறித்து முற்றிலும் மௌனம் காக்கிறது.” இது அடிப்படையிலேயே உண்மை அல்லாதது- கென்னடியே இதை 350 பக்கங்கள் கழித்து, ஜூன் 2014 இல் காலிஃபா பதவியை ஏற்கையில் அபு பாக்கர் அல்- பாக்தாதி ஆற்றிய உரையிலிருந்து விரிவாக மேற்கோள் காட்டுகையில், ஒத்துக் கொள்கிறார். இந்த உரை, சுரா 2 இல் உள்ள ’இமாமா’ அல்லது இமாமிய ஆட்சி குறித்த உரையாடலை மேற்கோள் காட்டுகிறது. இதைத்தான் இஸ்லாமிய மரபு எப்போதும் கிலாஃபா அதாவது காலிஃபா ஆட்சி என்ற சொல்லுக்குச் சமமானதாகப் பாவித்திருக்கிறது. இந்த சுராவில், இறைவன் சமூகத்தந்தை அப்ரஹாமை ஒரு காலகட்டம் பூராவும் யாத்திரை மற்றும் தொழுகைகளில் தூய்மை குறித்த சோதனைகளுக்கு ஆட்படுத்தியபின், ஒரு ‘இமாமாக’ ஆக்குகிறான். கென்னடி  சுட்டிக் காட்டுவது போல இந்தப் பகுதி சுரா, காலிஃபா ஆட்சி என்பதை ஓர் அரசியல் அமைப்பாக்கும் செயல்திட்டமாக பாக்தாதியால் எடுத்துக் கொள்ளப்படுகிறது: சோதனைகளின், போராட்டங்களின் வழியே, நம்பிக்கையாளர்களின் சமூகத்தை, ஒரு இமாம்- காலிஃபாவின் தலைமையின் கீழ், வாழ்க்கையின் மத மற்றும் அரசியல் வட்டங்களை ஒரு கச்சிதமான மத ஆட்சியின் கலவையாக ஆக்குவது என்பதுதான் அது. சுரா 38 இல், கென்னடி மறுபடி தன்னையே மறுதலிப்பது போல சுட்டிக் காட்டுகிறார், இறைவன் ’அரசர் டேவிடை ஒரு காலிஃபாவாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல்’ (இறைவன் தான் எப்போதும் அப்படி ஆக்குகிறான், மனிதரல்ல) அவரை ஒரு காலிஃபாவாக, எல்லா மக்களிடையேயும் நியாயமாகவே நீதி வழங்கும்படி கட்டளையிடுகிறான், அதில் வழுவும் பட்சத்தில் அவரும், மக்களும் இறுதித் தீர்ப்பு நாளன்று நரகத்தில் தள்ளப்படுவார்கள்- இங்கு இறுதி நாள் குறித்த அனைத்துக் கருத்துகளுக்கும் பொறுப்பாளராக  ஆவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார் என்பது தெளிவாகிறது.
இதை விட முக்கியமானது என்னவெனில், சுரா 2 இல் இன்னும் நீளமான பத்தியில்,  இதை கென்னடி அதிகம் பொருட்படுத்தவில்லை, ஒரு காலிஃப் என்பவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதைக் குரான் சுட்டுகிறது. இறைவன் தன் இறை ஊழியர்களிடம் (ஏஞ்சல்) பூவுலகில் தன் பிரதிநிதியாக ஒரு காலிஃப்ஃபை உருவாக்க உத்தேசித்திருப்பதாகத் தெரிவிக்கிறான். அந்த ஊழியர்கள் முதல் மறுவினையாக, அந்த காலிஃப் பிளவை விதைத்து, ரத்தத்தைச் சிந்துபவர் ஆவார் என்று இறைவனுக்கு நினைவூட்டுகிறார்கள், ஆனால் அதெல்லாம் தன் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்று இறைவன் அவர்களுக்குத் தேறுதலளிக்கிறான். இறைவன் இந்த காலிஃப்புக்கு -அவர் முதல் மனிதனாகிய ஆதாம் என்பது தெரியப்படுத்தப்படுகிறது- ‘பல பொருட்களின் பெயர்களை’க் கற்பிக்கிறார், அதற்குப் பின் ஆடமுக்கும், இறை ஊழியர்களுக்கும் நடக்கும் ஒரு போட்டியில், ஆதாம் அறிந்தவை இறை ஊழியர்கள் அறிந்தவற்றை விடச் சிறப்பாக இருப்பதோடு, அது தான் அறிந்திருக்கும் அளவுக்கு அருகாமையில் கூட இருக்கிறதென்று இறைவன் தெரிவிக்கிறான். அதிர்ச்சி தரும் வகையில், இறைவன் தன் ஊழியர்கள் தனக்கு முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவது போலவே, ஆதாமின் முன்னும் வீழ்ந்து வணங்க வேண்டுமெனக் கட்டளையிடுகிறான். (இது எங்கும் பேரரசவைகளின் சடங்குகளைப் போன்றதே, காலிஃபாக்களின் அவைகளும் சேர்த்தி இதில்.); கெடுமதி கொண்ட ஜின் ஆன இப்லிஸ் அல்லது சாத்தான் மட்டும் மறுக்கிறான். இறுதியாக, தூண்டுதலால் ஆதாம் மருட்சிக்கு ஆட்பட்டதும், ஈடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதும், இறைவன் மனிதர்களை இறுதிப் பெரும் நெருப்பிலிருந்து காப்பாற்ற, ஆதாமுக்குத் தன் வழிகாட்டலை அனுப்புவதாக உறுதி அளிக்கிறான்.
காலிஃபா என்ற கருத்தாக்கத்திற்கான நீண்ட விளக்கவுரையைச் சாரமாகக்  கொண்ட பகுதியில், ஜெனஸிஸ் நூலின் அச்சாணி போன்ற இரண்டாம் அத்தியாயத்தின் ஒரு வடிவத்தைப் பயன்படுத்தும் குரான், விவிலியத்தின் ஒரு கோட்பாடான ‘இமாகோ டெய்’ என்பதை வெளிப்படுத்துவதற்கு மிக அருகில் வந்து சேர்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.  மூலாதாரத் தேடல்களுக்கும், இறுதி நாட்களுக்கும் அந்த விவரிப்பில் நிறைய உட்பொருட்கள் உண்டு, இருப்பினும் கென்னடி அந்த மத விளக்கங்களை அலட்சியம் செய்கிறார். இது நழுவ விடப்பட்ட ஒரு வாய்ப்பு, ஏனெனில் இந்தப் பகுதியைக் கவனமாக அர்த்தப்படுத்திப் படித்தால், அது நம்மைப் பண்டைக் காலத்தின் இறுதிப் பகுதியில் நிலவிய சிந்தனை உலகுக்குள் பயணமேற்கொள்ள வைக்கிறது. அங்குதான் இறைத்தன்மையின் குணாம்சங்கள் கொண்ட ஒரு ஆட்சியாளர் பற்றிய கருத்துக்கு ஏதோ ஒரு பொருத்தம் கிட்டும். இது அந்தப் பக்கங்களில் காணப்படும் வரலாற்றையும் அறிந்து கொள்ள மேலான வழி வகுக்கும். துவக்ககால முஸ்லிம்கள் நடுவே எழுந்த குழுப் பிளவுகளையும், அவர்களிடையே யார் இறைவனின் உண்மையான காலிஃப் என்பதைத் தீர்மானிக்க நடந்த கடும் போராட்டங்களையும் அறிவதற்கும் இது உதவும். துவக்க கட்ட முஸ்லிம் மேற்கோள் ஒன்றை கென்னடி தருகிறார், இது மிகச் சரியான மேற்கோள். அதில், காலிஃபா என்பவர் ‘நம் நம்பிக்கையின் கூடாரத்தை நிறுத்த உதவும் தரையாணி’ என்பது கிட்டுகிறது. ஆனால் இங்கும், மதம் சார் சிந்தனைக்கு இந்தக் கருத்து என்ன பொருளைத் தரும் என்பதை அவர் ஆராய்ந்து நோக்கவில்லை. துவக்க கால கிருஸ்தவர்கள் தாம் உண்மையான பிஷப் ஒருவருக்கு அடிபணிகிறோமா, அவர் வழி பிறழ்ந்தவராக இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் மிக்க கவலை கொண்டிருந்தனர், அதே போல துவக்க கால முஸ்லிம்கள் தாம் ஓர் உண்மையான காலிஃபாவுக்கு அடிபணிகிறோமா  (அவர்களின் புனிதச் சட்டம் தெளிவாகவே சொல்வதன்படி எந்தக் காலகட்டத்திலும் ஒரு காலிஃபாதான் இருக்க முடியும்), ஒரு போலிக்கோ அல்லது சாதாரண அரசருக்கோ அடிபணியாது இருக்கிறோமா என்பதைப் பற்றி மிக்க கவலை கொண்டிருந்தார்கள். உண்மையான அடிபணிதல் என்பதன் பொருள் என்னவென்றால் அவர்கள் ஓர் உண்மையான அரசின் கீழ் இருப்பதாக ஆகும், அதனுள் நடக்கும் தொழுகை முழுதும் ஏற்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும், சட்டத்தின் மீட்பு சக்தி முழுதுமாகச் செயல்படும். எங்கே உண்மையான காலிஃபா ஆள்கிறாரோ, அங்கே சுவர்க்கம் என்பது உறுதியாக நிலவும்.
இந்த மத போதனை இஸ்லாமியத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது, எனவேதான் இந்த மதிப்புரையின் துவக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்ட ஹடித் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இந்த மத நம்பிக்கை இப்போது ஈஃப்ரடீஸ் நதிக்கரைகளில் நிலவும் கொடுமைகளை அவசியமாக்கவில்லை. ஆனால் இந்த நம்பிக்கையால் முழுத் தீவிரம் கொண்ட மதமற்ற அரசமைப்பு/ பண்பாட்டோடு ஒத்துப் போக முடியாது என்பதையும் சமீபத்து நிகழ்வுகளைப் பார்க்கையில் நாம் மனதில் கொள்ள வேண்டியது மிக முக்கியமாகிறது.
இந்த விஷயத்தை, பாட்ரிக் காக்போர்ன், அவருடைய சமீபத்துப் புத்தகமான, ‘கேயாஸ் அண்ட் காலிஃபேட்: ஜிஹாதிஸ் அண்ட் த வெஸ்ட் இன் த ஸ்ட்ரகில் ஃபார் த மிடில் ஈஸ்ட்’ என்பதை உருவாக்க, நாட்குறிப்பு வடிவில் தன் சமீபத்திய கட்டுரைகளைத் தொகுக்கையில், தன் மனதில் கொண்டிருந்திருக்கலாமே என்று நான் விரும்புகிறேன்.  இப்புத்தகம், காக்பார்ன் பயனுள்ள வருணனைச் சொல்லாகப் பயன்படுத்தும், ‘மத்திய கிழக்கின் உள்நாட்டுப் போர்கள்’ என்பதை வருணிக்கிறது; மேற்கின் பயங்கரவாதத்தின் மீதான போர் துவங்கிய காலத்திற்குச் சற்று முன்பு துவங்கி, சமீபத்திய  ‘இஸ்லாமிச அரசு’ என்ற ஒரு அமைப்பு எழத் துவங்கிய காலகட்டம் வரை கவனிக்கிறது. ஆனால் அதன் உபதலைப்பு எப்படி இருந்தாலும், இந்தப் புத்தகம் ஜிஹாதிகளைப் பற்றியோ, அவர்களை உந்தும் மதநம்பிக்கைகளைப் பற்றியோ சிறிது கூடப் பயனுள்ள எதையும் நமக்குத் தருவதில்லை.
காக்போர்ன் நாற்பத்தி ஐந்து வருடங்களாக போர்க்களங்களிலிருந்து செய்தி திரட்டிக் கொடுப்பவராகப் பணியாற்றி இருக்கிறார் – அப்படிப் போன பல இடங்களில், வட அயர்லாந்து, லெபனான், ஆஃப்கனிஸ்தான், ஈராக், சிரியா, லிப்யா ஆகியனவும் அடங்கும். மத்திய கிழக்குப் பகுதியைப் பற்றிச் செய்தி திரட்டுவதில் அவருக்கு இருக்கும் அனுபவத்தின் பரிமாணங்கள் வேறு எவருடைய அனுபவத்திற்கும் சிறிதும் சளைத்தவை அல்ல. அவர் ஒரு பிரமாதமான எழுத்தாளர்- தெளிவாகவும், நகைச்சுவை இழையும் சோகரசம் கலந்ததுமான எழுத்தைக் கொடுப்பவர். கேயாஸ் அண்ட் காலிஃபேட் புத்தகமும் படித்தால் பரபரப்பான கதையைச் சொல்லும் கடிதத் தொகுப்பு போல இருக்கிறது. தாலிபானுக்கும், சத்தாம் ஹுசைனுக்கும் எதிராகப் போர் தொடுக்க ஆயத்தங்களில் இறங்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் பற்றி அவர் எழுதியிருக்கும் முதல் அத்தியாயங்கள் குறிப்பாக, மிக விறுவிறுப்பாக இருக்கின்றன. அமெரிக்கா தன் குறிக்கோள்களை எட்டி விடும் என்று காக்பர்ன் துவக்க கட்டத்தில் தான் கொண்டிருந்த நன்னம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும்போது நாம் அவருடன் பின் தொடர்கிறோம். ஆனால் ஒரு தவறுக்குப் பின் மற்றொன்றாக நடந்து அந்த நிலப்பகுதி பூராவும் மேன்மேலும் புத்தகத்தின் தலைப்பில் காணப்படும் விதமான கடுங்குழப்பத்தில் ஆழ்கிறது.
ஈராக் போரும் அதன் பின் விளைவுகளுமே முக்கியமான இடத்தைப் பெறுகின்றன, ஈராக்கியர்கள் தம் சமூகங்கள் குழுப்பிரிவுகளைச் சார்ந்த மோதல்களால் உந்தப்பட்ட போர்களால் கற்பனை கூடச் செய்ய முடியாத மிருகத்தனங்களில்  சிக்கி உணரும் பீதி, ஆறாச்சினம், மேலும் நம்பிக்கை அறவே அற்றுப் போன பாழ்நிலை ஆகியனவற்றை நாமும் உணர்கிறோம். ஆனால் அமெரிக்கப் படையெடுப்புக்கு முந்தைய ஈராக்கின் நிலை விவரிக்கப்படும்போது நமக்குப் பலதும் புதிதாகப் புரியத் துவங்குகிறது. பல ஆண்டுகளாக நிலவிய இரக்கமற்ற பொருளாதாரத் தடைகளும் (பன்னாட்டு வணிகம் ஈராக்குக்கு மறுக்கப்பட்டிருந்ததைச் சொல்கிறார்- பதிப்புக் குழு) பாதிஸ்ட்டுகளின் கொடுங்கோலாட்சியும் ஈராக்கியர்களை வறுமையில் ஆழ்த்தி, நம்பிக்கை முற்றிலும் அற்ற நிலையில் தள்ளி இருந்தன, அமெரிக்கர்கள் படையெடுத்து வரும் காலத்துக்குள் அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஏற்கனவே ஏதோ ஒரு வகை இஸ்லாமிசத்தின் பால், அதன் மூலம் தம் பிரச்சினைகளுக்கு வழி பிறக்கும் என்ற எண்ணத்தில், திரும்பி இருந்தனர். அதாவது, போருக்குப் பிறகு அமெரிக்கா ஒரு அரசை ஆட்சியில் அமர்த்தியபோது, ஏற்கனவே நாடு வெடித்துச் சிதறும் நிலையில் இருந்தது, அந்த அரசு சத்தாம் ஆட்சிக்கு முந்தைய வளமான நிலையை மறுபடி கொணர எந்த முயற்சியையும் மேற்கொள்ள ஆயத்த வேலைகளைக் கூடச் செய்ய இயலவில்லை.
துரதிருஷ்டவசமாக, கேயாஸ் அண்ட் காலிஃபேட் புத்தகம், தரை மட்டத்தில் பயங்கரவாதிகளை உந்தும் காரணங்கள் என்ன என்பதை அறிவதில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. காக்போர்னின் உலகில், வல்லமை மிக்கதாக இருப்பதால், அமெரிக்காவிற்குத்தான் செயல்திறன் இருப்பதாக எண்ணம். அமெரிக்காவின் வசீகரமான கனவுகளைத் தகர்த்த இஸ்லாமிஸ்டுகளோ விடியோ விளையாட்டுகளில் குழிகளிலிருந்து அவ்வப்போது தலைதூக்கி தலையில் அடித்து வீழ்த்தப்படும் குழிமுயல்கள் போன்றவர்கள்தான், தம்முடையதாக இரக்கமே அற்ற ஆனால் கோர்வையான ஒரு கருத்தியலைக் கொண்ட மனிதர்கள் அல்ல. அதிர்ச்சி தரும் விதத்தில், ஈராக்கிலும், சிரியாவிலும் நடந்திருக்கிற இந்தப் பெரும் சோக நிகழ்வுகளில், ஈரானின் பங்கெடுப்பு, முழுதுமாக மறைக்கப்பட்டிருக்கிறது; அதை விடக் கவலை தரும் விதமாக, காக்போர்ன் ஈரானில் 2009 ஆம் ஆண்டில் எழுந்து பெரும் அதிர்வுகளைக் கொணர்ந்த போராட்டங்களைப் பற்றியொ, ஈரானிய அரசு அதை மிருகத்தனமாக ஒடுக்கியதைப் பற்றியோ ஒரு தடவை கூடப் பேசவில்லை. (இவை இரண்டும், இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடந்த அரபு வசந்தம் என அழைக்கப்பட்ட மக்களெழுச்சிக்கு முன்னோடிகள்.) இருந்தாலும், ஈரானின் இஸ்லாமியக் குடியரசுதான் இஸ்லாமிசத்தின் மூல அரசமைப்பு, அதன் தலைவர்கள் இறுதித் தீர்ப்பு குறித்த மதச் சிந்தனைகளால் உந்தப்பட்டு, இன்னமும் மாஹ்தி திரும்ப வருவது எந்நேரமும் நிகழலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டு தம் செயல்பாடுகளை மேற்கொள்கிறார்கள். உள்நாட்டுப் போர்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், இஸ்லாமிச இயக்கவாதிகள்தான் முக்கியச் செயலாற்றுபவர்கள்; உண்மையில் அமெரிக்காவின் பங்கு இதில் என்னவென்றால் களத்தில் எதையும் புரிந்து கொள்ளாது  நின்று கொண்டு பார்த்திருப்பவனின் நிலையாகவும், தனது துப்பில்லாத நிலையிலிருந்து இஸ்லாமிச இயக்கத்தினரின் கொடும் விஷமும், பெரும் அழிப்பும் நிறைந்த கருத்தியலை உலகின் மீது அவிழ்த்து விட்டதும்தான்.
(தமிழாக்கம்: மைத்ரேயன்)

***

பின்குறிப்பு:
Umma என்று இங்கிலிஷில் எழுதப்படுவதை உம்மா, ஊம்மா என்று மாறுபட்ட உச்சரிப்புடன் இங்கிலிஷில் புழங்குகிறார்கள். இதற்கான அரபுச் சொல்லை அமா என்பது போல உச்சரிப்பதைக் கேட்க முடிகிறது. துருக்கிய மொழியில் இதை உம்மா என்று உச்சரிப்பதாகத் தெரிகிறது. தமிழ் நாட்டில் அல் உம்மா என்ற பயங்கரவாத இயக்கம் இருந்ததை நாம் நினைவு கூரலாம். அதை அரபு மொழியில் அல் ஆமா என்பது போலவும் உச்சரிக்கிறார்கள். عُمر என்ற அரபுச் சொல்லை உமர் என்று உருதுவிலும், ஜார்டனில் ஓமார் என்றும், எகிப்தில் ஆமர்ட் என்பது போலவும், ஏமார் என்று அரபுக் கூட்டரசு நாடுகளிலும் உச்சரிக்கிறார்கள் என்பது நமக்குச் சிறிது வியப்புத் தரலாம்.
இந்தச் சொல்லே ஹீப்ரூவிலிருந்து கடன் பெறப்பட்ட சொல் என்று வாதிடுவோரும் உண்டு. பார்க்க: Umma is a Hebrew word, borrowed by Islam :: Reader comments at Daniel Pipes
கவனிக்கப்படக் கூடியது (பட்ரீஷியா க்ரோன் பற்றிய குறிப்பு இருப்பதால்) Very interesting and many thanks to Rasheed :: Reader comments at Daniel Pipes
[2] இவை அனைத்தும் காலிஃபாக்களின் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாத்தின் கீழ் பணிய வைக்கப்பட்ட பகுதிகள் என்பதை இப்படி நாசூக்காக இக்கட்டுரையாளர் சுட்டுகிறார். இந்தப் பகுதிகளுக்கு எதிரான போர்கள் ஆக்கிரமிப்புப் போர்களே அன்றி தற்காப்புப் போர்கள் அல்ல என்பது சுட்டு. [மொழி பெயர்ப்பாளர் குறிப்பு].

One Reply to “மதப் போர்கள்”

  1. Unmaiyil ,seeraana islamiya maarkkam enpathu naanku kaleepaakkal kaalaththil maruvatru potrappattathu.naankaam kaleepa Ali(r)yin maranaththodu mikavum seeraana paathai konjam sarikirathu.
    Athan pin vanthavarkaL kaikalil athikaaram ,anthasthu matrum gajaanaavee kidaikkinra pothu sila vazikalil thavari vidukinranar. (Manitha subaavam)aanaal ellorum alla! Haroon al rasheed ,irandaam umar ennum umar bin abdul asees ponror neraana vaziyil sentravarkalil kurippidappattavarkal.
    Enave islam enrum sariyaanathaiye valiyuruththukinrathu,aanaal athanaip pinpatrupavarkal thaan thavarilaikkinranar.
    Jihad patrik koorin,nam markkaththil aththu meeral ,sarvaathikaaram enpana kidaiyaathu(saudi arabia vil muslimkaL vaaznthaalum and islaam pooranam padavillai.)angu aatchi seyyum thalaivarai makkal niyamippar. BaiAth moolam ovvoru kudimakanaalum thalaivar etrukkollap paduvaar.
    Ulakil aththumeeri attooliyam seypavarkalukkethiraaka por thoduthu angu vaalum makkalai meetteduththu avarkalkku nalvaazvu koduththal matrum tham meethu padai eduththu varum innoru tharappilirunthu thammai kaaththuk kolla thamathu kaleepa (thalappathiyum kooda)thalaimaiyil padai eduththu poridum urimai muslimkalukku undu. Ithu thaan jihan. Inru uruvaaki ulla IS,alkaida ponra iyakkangalai naan jihadistukalaaka etka virumbavillai.
    Islamiya sattappady aniyaayam seythal perum kutram. Penkal,kulanthakal matrum viseda thevai udaiyor kolai seyyappadavo thaakkappadavo koodaathu.aththodu pachchai marangal,neernilaikal,kaalnadaikal nasam seyyappadak koodaathu. Poril akappatta kaithikal kurippaakap penkalukku urimai meeral koodathu. Ganniyam penappadal vendum.
    Ithu thaan islam!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.