தூரம்

women

பிணவறை வாசலில், இரண்டு பக்கமும் கறுப்படித்த குழல் விளக்கொன்று மங்கலாய் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. முன்னிரவில் பெய்த மழையால் ஈசல்கள் விளக்கைச் சுற்றி பறந்து கீழே விழுந்து ஊர்ந்துகொண்டிருந்தன. முன் தாழ்வாரத்தில் பலகையில் அமர்ந்திருந்த சீனு நேரம் பார்த்தான்; பதிணொன்றரை ஆகியிருந்தது. இன்னும் ஜீப் வரவில்லை. அத்திப்பள்ளியில் போக்குவரத்து நெரிசலில் மாட்டியிருப்பதாக கொஞ்ச நேரம் முன்பு அலெக்ஸாண்டர் போன் செய்திருந்தார். முன்னாலிருந்த மற்றொரு நீள துருப் பிடித்த தகர பெஞ்சில் வெங்கடலட்சுமி கன்னங்களில் காய்ந்துபோன கண்ணீர்த் தடங்களோடு அனத்திக்கொண்டே ஒருக்களித்து படுத்துக் கிடந்தது. பக்கத்தில் ராமப்பா, வெங்கடலட்சுமியின் தோளைத் தொட்டபடி இலக்கில்லாத வெறித்த பார்வையோடு உட்கார்ந்திருந்தார். சிவலிங்கமும், கிருஷ்ணப்பாவும் வெளியில் நின்றிருந்தார்கள்.

“பக்கத்துல வார்டுக்கு போறேன் சார்; வண்டி வந்தா கூப்பிடுங்க” சொல்லிவிட்டு மருத்துவமனை சிப்பந்தி கிளம்பிப் போனார். டீ குடித்தால் தேவலாம் போலிருந்தது சீனுவுக்கு.
“டீ குடிக்கிறீங்களா ராமப்பா? காலைலருந்து ரெண்டு பேரும் ஒண்ணுமே சாப்பிடலயே” கேட்டபோது வேண்டாமென்று தலையசைத்தார். முகம் கழுவலாம் என்று சற்றுத் தள்ளி மூலையிலிருந்த வாஷ் பேசின் போய் குழாய் திருகியபோது தண்ணீர் வரவில்லை. பேசின் கிண்ணத்தில் மெல்லிய பச்சை படர்ந்திருந்தது. வெளியில் வந்து சிவலிங்கத்திடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, கிருஷ்ணப்பாவை கூட்டிக்கொண்டு மருத்துவமனை முதல் மெயின் கேட் தாண்டி வெளியில் வந்தான். எதிரில் “தனம்மாள்” பேக்கரி கால் பகுதி ஷட்டர் கீழிறக்கி உள்ளே வெளிச்சமாயிருந்தது. ஈரமாயிருந்த தார் ரோடு தாண்டி, தலை குனிந்து பேக்கரிக்குள் நுழைந்து இரண்டு டீ சொல்லிவிட்டு குவளையில் கொஞ்சம் தண்ணீர் வாங்கி மறுபடி தலை குனிந்து வெளியில் வந்தான். மழைத் தண்ணீர் சின்னச் சின்ன மண் குழிகளில் தேங்கி கால் வைத்ததும் வழுக்கியது. தண்ணீரை முகத்தில் அறைந்து கழுவியபோது, கொஞ்சம் களைப்பு நீங்கியது. ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருந்த தியேட்டரில் இரண்டாமாட்டம் படம் பார்த்துவிட்டு ஆட்கள் நடந்தும், வண்டிகளிலும் வந்து கொண்டிருந்தார்கள். பேக்கரி திறந்திருப்பதை பார்த்து கல்லூரி பையன்கள் சிலர் பேக்கரிக்குள் நுழைந்தனர். எதிரில் “அரசு மருத்துவமனை, ஓசூர்” பெயர்ப் பலகை வளைவின் மேல் சோடியம் விளக்கின் மஞ்சள் வெளிச்சம்.
ஸ்ட்ராங்கான டீயின் முதல் மிடறு உள்ளிறங்கியபோது, வெறும் வயிறும், களைத்திருந்த மனதும் ஆசையுடன் வாங்கிக் கொண்டன. டிரைவர் அலெக்ஸாண்டர் ஃபோன் செய்து டிரக்கை கம்பெனியில் விட்டுவிட்டு, ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருப்பதாகவும், பத்து நிமிடத்தில் வந்து விடுவதாகவும் சொன்னார். “ராமப்பா ஊர் காடுகொண்டனஹள்ளி போக எவ்வளவு நேரமாகும் கிருஷ்ணப்பா?” சீனு கேட்க, “ஒரு மணிநேரத்துல போயிடலாம் சார். சூளகிரி வரைக்கும் ரோடு நல்லாருக்கும்; அதுக்கப்புறம் கொஞ்சம் மோசமான ரோடு” என்றார்.
டீ குடித்து வெளியில் வருவதற்கும், அலெக்ஸாண்டர் ஜீப்போடு மருத்துவமனை வாயிலில் நுழைவதற்கும் சரியாய் இருந்தது. பிணவறை வாசல் படிக்கருகில், ரிவர்ஸில் வந்து ஜீப்பை நிறுத்தினார் அலெக்ஸாண்டர். கிருஷ்ணப்பா போய் மருத்துவமனை சிப்பந்தியை கூட்டி வந்தார். உள்ளே போய் கதவு திறந்து, தலை முதல் கால் வரை முகம் தெரியாமல் வெள்ளைத்துணி சுற்றப்பட்ட மோகனாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டுவந்தார்கள். “லட்சுமீஈஈஈ…என் கண்ணூ…” வெங்கடலட்சுமி வீறிட்டு நெஞ்சிலடித்து கதறியது அந்த நள்ளிரவின் இருட்டை கிழித்தது. சீனுவுக்கு அடிவயிறு கலங்கியது. “ரொம்ப சத்தம் வேணாண்ணு சொல்லுங்க சார்” என்றார் சிப்பந்தி. வெங்கடலட்சுமியை ராமப்பா பிடித்துக்கொண்டார். சுற்றப்பட்ட வெள்ளைத்துணிக்கு வெளியே தெரிந்த பாதங்களின் மெல்லிய கறுப்பு விரல்களை சீனு லேசாய் பிடித்துக்கொண்டான். மோகனாவின் களங்கமற்ற பளீரென்ற வெள்ளைச் சிரிப்போடு கூடிய கறுத்த முகம் மனதுக்குள் வந்தது. தொண்டை அடைத்து கண்கள் நிறைந்தது. விரல்களை வருடினான்.
“கிளம்பலாம் சார். ரொம்ப லேட்டாயிடும்” என்றார் சிவலிங்கம். மோகனாவை பின்னால் நீள சீட்டில் வைத்து, எதிர் சீட்டில் சிவலிங்கம் உட்கார்ந்து கொண்டார். சிப்பந்திக்கு நூறு ரூபாய் கையில் கொடுத்து விட்டு, சீனுவும், கிருஷ்ணப்பாவும் முன்னால் ஏறிக்கொண்டார்கள். நடு சீட்டில் ராமப்பா உட்கார்ந்து வெங்கடலட்சுமியை படுக்கவைத்துக் கொண்டார். ”டாக்டர் கொடுத்த செர்ட்டிஃபிகேட் கையில வச்சுங்கங்க சார்” என்றார் சிப்பந்தி. மறுபடி மழை தூறல் போட ஆரம்பித்திருந்தது. ஜீப் மருத்துவமனை விட்டு வெளியில் வந்தது. “ஒன்னல்வாடி வழியா போயிரலாம் அலெக்ஸாண்டர். சூளகிரி தாண்டனும்” சீனு சொல்லிவிட்டு சீட்டில் தளர்ந்து உட்கார்ந்து கண்மூடினான். உள்ளுக்குள் மோகனாவின் கருத்த வட்ட முகம் புன்னகைத்தது.

“இது விடைபெறும் வயதா மோகனா?”

மோகனா என்ற மோகனலட்சுமிக்கு பதினைந்து வயது. ராமப்பா, வெங்கடலட்சுமியின் மூத்த பெண். மோகனாவிற்கு ஆறு வயதில் ஒரு தம்பி உண்டு. ராமப்பாவும், வெங்கடலட்சுமியும் தொரப்பள்ளி பூ கம்பெனியில் எட்டு வருடங்களாய் வேலை செய்கிறார்கள். சீனு அங்கு உற்பத்தி அலுவலராய் வேலைக்குச் சேர்ந்து ஆறு வருடங்களாகிறது. ஓசூர் ஒரு கலவையான ஊர். ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மூன்றுக்கும் எல்லையாய் வரும். தமிழ்நாட்டிற்குள் இருந்தாலும் வேலையாட்களில் பெரும்பாலும் கன்னடம், தெலுங்கு பேசுபவர்கள் அதிகம். வேலைக்குச் சேர்ந்த புதிதில் சீனுவுக்கு ஆச்சர்யமாயிருந்தது. தமிழ் தெரிந்திருந்தாலும், பெரும்பாலும் வேலை செய்யும்போது, வீட்டில் கன்னடமும் தெலுங்கும்தான். சீனுவுக்கு, தெலுங்கு எழுத, படிக்க தெரியாதென்றாலும் பேச வரும் என்பதால், வேலைக்குச் சேர்ந்த ஆறேழு மாதங்களுக்குள்ளாகவே தனக்கு கீழே வேலை செய்யும் எல்லோருடனும் நெருக்கமாகியிருந்தான். அவர்களின் வீட்டு விஷேஷங்களில் பங்குகொள்வதிலிருந்து, அவர்களின் பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதுவரை சீனு மிக இயல்பாய் அவர்களுடன் ஒன்றியிருந்தான்.
கம்பெனியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒன்னல்வாடியில் ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார் ராமப்பா. ஒரு நீள அறையை இரண்டு இடுப்புயர மண் தடுப்புகள் அமைத்து மூன்றாக்கியிருந்தார்கள். ஒன்றில் சமையல், நடுவில் சாப்பாடு, மற்றதில் படுக்கை. இயற்கை உபாதைகளுக்கு வெளியில்தான் செல்லவேண்டும். போன யுகாதிக்கு ராமப்பா வீட்டிற்கு சென்றிருந்தபோது, இரண்டு ஒப்பட்டை தட்டில் வைத்து மோகனா கொடுத்தது. “நல்லா படிக்கிறியா?” என்று கேட்டபோது பளீரென்ற வெட்கப் புன்னகையுடன் தலையாட்டியது. “நல்ல பொறுப்பு சார். நாங்க வேலை முடிஞ்சு வர்றதுக்குள்ள, துணியெல்லாம் மடிச்சி வச்சு, வீடெல்லாம் சுத்தம் பண்ணி, தெரு முனைல குழாய்ல தண்ணி புடிச்சி கொண்டுவந்து வச்சிட்டு, படிக்க உட்கார்ந்திரும். படு சாந்தம். வெங்கடலட்சுமிக்கு நல்ல உதவி.” ராமப்பா பெருமையாய் சொன்னார்.
நேற்று ராமப்பாவும், வெங்கடலட்சுமியும் கம்பெனியில் வேலையில் இருந்தார்கள். மோகனா ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் கூட்டி எடுத்து, வாசலில் தண்ணி தெளித்துவிட்டு, தம்பிக்கும் சேர்த்து டீ போடலாம் என்று சமையல் தடுப்பிற்கு போய் மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்திருக்கிறது. ஃப்ளேம் கொஞ்சமாய், பாதியாய் எரிய, இன்னும் கொஞ்சம் பம்ப் செய்துவிட்டு, அடைப்பை சரிசெய்யலாம் என்று, மெல்லிய கம்பி எடுத்து ஸ்டவ்வுக்கு மேல் நேராய் முகத்தை வைத்துக்கொண்டு, ஸ்டவ் வாயின் துளைகளை குத்தியிருக்கிறது. அடைப்பு நீங்கியதும், அழுத்தத்தில் இருந்த மண்ணெண்ணெய் வேகமாய், தீயோடு சேர்ந்து முகத்திலும், மார்பிலும் பீய்ச்சி அடித்து…
விஷயம் வந்ததும் வெங்கடலட்சுமி மயக்கம் போட்டது. ராமப்பா நடுங்கினார். வண்டி அனுப்பி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோய் சிகிச்சைக்கு உள்ளனுப்பிவிட்டு வெளியில் இருந்தபோது, ராமப்பா துண்டை வாயில் வைத்துக்கொண்டு கதறலை அடக்கினார். டாக்டர் சிகிச்சைகள் முடித்துவிட்டு, காயம் விழுக்காடு அதிகமா இருக்கு, காலைல வரைக்கும் பார்க்கலாம்; இம்ப்ரூவ்மெண்ட் இல்லன்னா பெங்களூர் கொண்டு போயிடுங்க என்றார். சீனு தீக்காய சிகிச்சை வார்டின் உள்ளே போய் படுக்கையில் மோகனாவை மறுபடி பார்க்க பயந்தான். காலையில் டாக்டர் கொஞ்சம் பரவாயில்லை என்றார். மாலையில் பெங்களூருக்கு கொண்டு போயிடறீங்களா? சீனு என்று அரை மனதோடு கேட்டார். நண்பர்களுக்கு ஃபோன் செய்து ஆலோசனைகள் கேட்டு, கம்பெனிக்கு ஃபோன் செய்து வண்டியின் இருப்பு கேட்டு, தேவை சொல்லி ஏற்பாடுகள் செய்து முடிப்பதற்குள்…பயந்திருந்த அது நடந்தது.
ஜீப் ராயக்கோட்டா ஹவுஸிங் போர்டு, ரானே பிரேக் லைன், காரப்பள்ளி தாண்டி கீழிறங்கியது. செந்தில் நகர் தாண்டும்போது, சீனு வலதுபுறம் திரும்பி வீட்டைப் பார்த்தான். வீடு இருளிலிருந்தது. அம்மா வெளி விளைக்கைப் போட மறந்துவிட்டார்கள் போலும். மாத்திரை போட்டு தூங்கியிருப்பார்கள். சாயங்காலமே ஃபோன் செய்து சொல்லியிருந்தான் வர லேட்டாகுமென்று. திருமணமான ஒரே வருடத்தில் மீனாட்சி மனவேறுபாடுகள் காரணமாக அத்தை வீட்டிற்குப் போனதிலிருந்து, அம்மா தளர்ந்திருந்தார்கள். மீனாட்சி அங்கு போய் எட்டு மாதங்கள் ஆயிற்று. இப்போது யோசிக்கும்போது தவறுகள் எல்லாம் அவன் மீதுதான் என்று புரிகிறது. வீம்பு, ஆண் அகங்காரம், பிடிவாதம், தாம்பத்யத்தில் தன் மீதான பயம், குழப்பம்…எல்லாம் சேர்த்து மீனாட்சியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி…சீனு மறுபடி கண்கள் மூடிக் கொண்டான்.
மழைத் தூறல் அதிகமாகியது. ஜீப் ஒன்னல்வாடியில் இடதுபுறம் திரும்பி, வேகமெடுத்து, தொரப்பள்ளி தாண்டி பத்து நிமிடத்தில் பேரண்டப்பள்ளி மெயின் ரோடு தொட்டு வலது பக்கம் திரும்பியது. வெங்கடலட்சுமி அரை மயக்கத்தில் புலம்புவதும், விழித்துக்கொண்டால் சத்தமிட்டு அழுவதுமாயிருந்தது. ராமப்பா பின்னால் திரும்பி “மோகனாவ பாத்துக்க சிவா, மோகனாவுக்கு இருட்டுன்னா பயம்” என்று பிதற்றிக்கொண்டிருந்தார். மழை சடசடவென்று அடித்துப் பெய்தது. மெதுவாய் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருந்த வைப்பர்கள் சட்டென்று நின்றுபோயின. “ஓரமா நிறுத்திக்கிங்க அலெக்ஸாண்டர். டிரைவ் பண்ணவேண்டாம்; ரோடே தெரியல. மழை கம்மியாகட்டும்” என்றான்.
சூளகிரியில் ஊருக்குள் நுழைந்து கடந்து “இடது பக்கம் திரும்பணும் சார்” என்றார் கிருஷ்ணப்பா. ரோடு மிக மோசமாயிருந்தது. ஒரு வண்டி போகும் அளவிற்குத்தான் அகலம்; அதிக குழிகளோடு, மழை நீர் தேங்கியதில் பள்ளங்களின் ஆழம் கணிக்க முடியாமல் ஜீப் வளைந்து வளைந்து குலுங்கல்களோடு மெதுவாய் நகர்ந்தது. ஒரு மணி நேரம் சென்றபின், கிருஷ்ணப்பா ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னார். “இங்கதான் சார். இடதுபக்கம் ஒத்தையடிப் பாதையில ஒரு கிலோமீட்டர் உள்ள போனா ஊர்” என்றார். சீனு இறங்கி நின்று சுற்று முற்றும் பார்த்தான். ஜீப்பின் முன் வெளிச்சம் தவிர வேறு வெளிச்சமில்லை. இரவுப் பூச்சிகளின் சத்தம். மழை இன்னும் தூறிக் கொண்டிருந்தது. ரோட்டின் ஓரத்தில் மழைத்தண்ணீர் சத்தம் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. சீனுவுக்கு பாதை எங்கிருக்கிறதென்றே தெரியவில்லை. “ஊர் வரைக்கும் ஜீப் போக வழி இல்லையா கிருஷ்ணப்பா?” “இல்ல சார் இதுவரைக்கும்தான். நாங்க நடந்து போயிடுவோம். உங்களால இந்த சகதியில நடக்க முடியாது. நீங்க திரும்பி போங்க. நாங்க காரியம் எல்லாம் முடிச்சிட்டு, நாளைக்கு வர்றோம்” என்றார். “ஊர்லருந்து யாரையாவது இங்க ரோட்டுக்கு வரச் சொல்லியிருக்கலாமே?” என்றபோது “யாருக்கும் சொல்லமுடியல சார். அங்க ஃபோன் சிக்னல்-லாம் இருக்காது” என்றார். டார்ச் லைட் கூட எடுத்துவர மறந்தாயிற்று.
வெண் துணியில் சுற்றியிருந்த மோகனாவை சிவலிங்கம், இடது தோளில் சாய்த்து தூக்கிக்கொண்டார். சீனுவின் மனதில் சிரிப்புடன் அந்த கறுத்த வட்ட முகம் வந்துகொண்டேயிருந்தது. முன்பொரு முறை ராமப்பா வீட்டிற்குப் போயிருந்தபோது, அலுமினியத் தட்டில் வெல்லப் பாகை ஊற்றி, நடுவில் உருண்டையாய் ராகி முத்தாவை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. சீனு உள்ளே நுழைந்ததும், வெட்கப் பட்டு, தட்டை எடுத்துக்கொண்டு படுக்கைத் தடுப்பிற்கு ஓடியது. “எனக்கு தர மாட்டியா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டபோது “நீங்க இதெல்லாம் சாப்பிடுவீங்களா சார்?” என்றது. அந்தக் குரல் இந்த இருளில் எங்கிருந்தோ எதிரொலித்தது. கிருஷ்ணப்பாவும், ராமப்பாவும் வெங்கடலட்சுமியை இரண்டுபக்கமும் கைத்தாங்கலாய் பிடித்துக்கொள்ள, நால்வரும் தண்ணீர் ஓடி சேறாயிருந்த அந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கினார்கள். சீனுவுக்கு மனது நிலை கொள்ளாமல் அலைந்தது. அவர்கள் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜீப்பில் ஏறிக்கொண்டு “போகலாம்” என்று சொல்லிவிட்டு மணி பார்த்தபோது மூன்றாயிருந்தது. வீடுபோக ஐந்து மணியாவது ஆகிவிடும்; இரண்டு மணி நேரம் தூங்கிவிட்டு மறுபடி கிளம்பி அலுவலகம் வரவேண்டும். வழியில்

டயர் பஞ்சராகி, மாற்றிக்கொண்டு வீடு வந்துசேர கிழக்கில் வெளிச்சம் ஆரம்பமாகியிருந்தது. அழைப்பு மணியை அழுத்த அம்மா கதவு திறந்தார்கள். குளித்து விபூதியிட்டிருந்தார்கள். “ஏம்ப்பா, இவ்வளவு நேரமாயிருச்சு?” என்று கேட்டுக்கொண்டே “காபி போடட்டுமா?” என்றார்கள்.

“சரிம்மா” என்று சொல்லிவிட்டு நேராய் வாஷ்பேசின் போய் முகம் கழுவியபோது கண் எரிந்தது; லேசாய் தலை சுற்றியது. முகம் துடைத்து சாப்பாட்டு மேஜையின் முன்னால் அமர்ந்தபோது, தலை லேசான வலியுடன், கண் கூசியது.
சீனு நெற்றியின் இருபக்கமும் விரல்களால் அழுத்திக்கொண்டான். வாய் கசந்தது. தலைகுனிய, தரை ஆடியது. நிமிர்ந்து பார்த்தபோது எதுவும் தெளிவாயில்லை. மசமசப்பாய் தெளிவில்லாமல் யாரோ தூரத்தில் வந்துகொண்டிருந்தார்கள்…
யாரது? மீனாட்சியா? மீனாட்சி எப்படி இங்கே?

ஊரிலிருந்து எப்போது வந்தது?…

சீனு கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்த்தான்.

மீனாட்சியின் கண்கள் சிவந்திருந்தன…அழுகிறாளா?… ஆனால்…ஆனால்…

மீனாட்சியின் கைகளில் காபி கோப்பையின் மேலிருந்த விரல்கள்…ஒல்லியாய் நீளமாய் கறுப்பாய்…இது மோகனாவின் விரல்கள் மாதிரி இருக்கிறதே?…சீனு சிரமத்துடன் கண்கள் உயர்த்திப் பார்த்தபோது…அந்த கறுத்த வட்ட முகம்…

சீனு தலையை உதறிக்கொண்டான். “என்னப்பா…என்னாச்சு…என்ன பன்ணுது” அம்மாவின் குரல் கேட்டது. பதில் சொல்ல முடியவில்லை. இமைகள் இறுக்கமாய் மூடிக்கொண்டன. வெகு ஆழத்தில் வேகமாய் சுற்றிக்கொண்டே விழுவது மாதிரி இருந்தது. கீழே விழுந்துகொண்டிருக்கும்போது கலங்கலாய் கறுப்பு சிவப்பு கட்டங்கள் நெளிந்த புடவையில் மறுபடி மீனாட்சி கையில் பெரிய தாம்பாளத்தோடு. ஏதோ ஒரு உடல் துணியில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தது அதில்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.