ஆழம்

அய்யோ.. அம்மா..“ வரலட்சுமியின் வாயிலிருந்து விட்டு விட்டு முனகல்கள் வந்துக் கொண்டிருந்தன. அதுவும் வெகு ஈனமான ஸ்வரத்தில். அண்ணியின் மடியில் தலை சாய்த்து துவண்டுக் கிடந்தாள் வரலட்சுமி. நேற்றிலிருந்து சாப்பிடாத பசி மயக்கமும் அதில் கலந்திருந்தது. வெயிலின் தகிப்பை மரத்தின் நிழல் சற்று போக்கிக் கொண்டிருந்தது.

கணவன் வீட்டு பூர்வீக நிலம் அது. இரண்டு ஏக்கர் பூமி. “நஞ்ச காடு ரெண்டு ஏக்கரு தேறும்.. ஒத்தப் பயதேன்.. பங்கு பாவனக்கு ஆளு கெடையாது.. வெள்ளாமகாரங்களுக்கு பவுனுதான் சொத்து.. முன்னபின்ன பாக்காம செஞ்சுப்புட்டீவன்னா காலத்துக்கும் ஓஞ்சுக் கெடக்கலாம்..“ அவளை பேசி முடிக்கும் அன்று நாச்சிமுத்துவின் தாய்மாமன் இப்படிதான் பேசினார்.

எ லெச்சுமி.. இத்த குடிடீ.. இந்தாடீ.. ஏய்..” மடியில் சரிந்துக் கிடந்த நாத்தியை எழுப்பினாள் அண்ணி. நேரம் மதியம் இரண்டை தொட்டிருந்தாலும் வெயிலின் உக்ரம் இன்னும் குறையவில்லை. “அய்யோ.. எம் மவன்..” அழுது அழுது சரிந்துக் கிடந்தவளை இப்போதுதான் மாமரத்தின் நிழலில் கைத்தாங்கலாக அழைத்து வந்து கிடத்தியிருந்தாள். ஊண்சத்து அத்தனையும் வடிந்தவள் போலக் கிடந்தாள் வரலட்சுமி. கலைந்துக் கிடந்த சேலை கரிய வயிற்றை அப்பட்டமாகக் காட்டியது. ஒட்டி உலர்ந்த மார்பு வெறும் துணிக் குவியலாக தெரிந்தது. முழங்காலுக்கு ஏறிக் கிடந்த பாவாடையில் பிசிறலாக நுால் பிரிந்துத் தொங்கியது. கரிய உடலில் மண் படிந்து கிடக்க துறுத்திக் கிடந்த சிறு கற்கள் உடலில் உறுத்துவது சிந்தையில் படியாமல் கிடந்தாள் வரலட்சுமி. ஏழிலும் ஐந்திலுமாக இருந்த மகள்கள் அவளின் கால் மாட்டில் ஒண்டிக் கிடந்தனர்.

அவள் நிலையைக் கண்டு யாருக்கோ இரக்கம் வந்ததில் கைக்கு வந்த குளிர்பானத்தை நாத்திக்கு செலுத்தி விட முயன்றுக் கொண்டிருந்தாள் அண்ணி.  கரிய நிற திரவம் அடங்கிய அந்த ஒரு லிட்டர் பாட்டில் கண் முன் போக்குக் காட்டியதை ஏக்கத்தோடுப் பார்த்தனர் மகள்கள் இருவரும். காலையில் வேலைக்கு கிளம்பும் முன் தண்ணீர் எடுத்து விட்டு வந்து விடலாம் என்று பெரியவளை சுள்ளென்று அடித்து எழுப்பி விட்டிருந்தாள் மகாலெட்சுமி. சிவந்து கிடந்த தோல் வெயிலின் சூட்டில் எரிந்தது அவளுக்கு.

பொட்டச்சி பொணங்கணக்கா துாங்கற..?” எச்சில் வழிய குப்புறக் கிடந்தவளின் முதுகில் ஓங்கியடித்தாள் வரலெட்சுமி. நிறைய முறை வாய் வார்த்தையால் அழைத்திருந்தது அந்த அடியில் புரிபட அலங்க மலங்க எழுந்தாள் பெரியவள். இந்த சத்தத்தில் விழிப்பு வந்த மகன் கருப்பையன் “எம்மா.. சோறு..“ என்றான் புரண்டு படுத்தப்படி. நேற்று இரவு சீக்கிரமே துாங்கி விட்டதால் உணவு உண்டிருக்கவில்லை.

பூர்வீக வீடு. ஓடு வேய்ந்திருந்து பராமரிப்பின்றி போனதில் ஒழுக தொடங்கியிருந்தது. உயரமான கருங்கல் திண்ணை. கனத்த மரக்கதவு திண்ணையை இரண்டாக்கியிருந்தது. அகலம் குறைந்து நீண்டிருக்கும் முன் கூடம். அதன் வலது புறம் சமையற்கட்டு. இவள் திருமணம் முடித்து வரும் போது இடது புற அறையில் நெல் குதிருக்கும் தானிய மூட்டைகளுக்கும் மத்தியில்தான் குடும்பம் நடத்த வேண்டியிருந்தது. சிறிய வெங்காயம் தரையில் பரத்தி கிடக்கும்.  கூடத்தின் முடிவில் ஒரு கையடி பம்ப் என்றோ தண்ணீர் வந்தததன் அடையாளத்தையும் தொலைத்து துருவேறிக் கிடந்தது. பெண் பிள்ளைகள் இரண்டானதில் அவர்களுக்கும் இவளுக்குமாக சோப்பு.. கலர் பொட்டு.. முகம் பார்க்கும் கண்ணாடி இத்யாதிகள் விளக்கு மாடத்தில் நுழைத்து வைக்கப்பட்டிருந்தன. கூடத்தில் கட்டியிருந்த கொடிக்கயிறு துணிகள் சுமந்து தளர்ந்திருந்தது. இவள் திருமணமாகி வரும் போது மாமனார்.. மாமியார்.. திண்ணைக்கிழவி என கூட்டத்திற்கு குறைவில்லை. பலகாரத்திற்கும் குறைவிருப்பதில்லை. தட்டைப்பயிறு வடை.. காராமணி சுண்டல்.. வறுத்தக் கடலை.. என எதாவது ஒன்று வீட்டில் இருக்கும். எண்ணெய் செக்கு ஆட்டி வரும் நாட்களில் முறுக்கோ.. சேவோ மலையாய் நெரித்து வைத்து விடுவாள் மாமியார். மழை சடசடத்துப் பெய்யும் போது வறுத்த அரிசியின் சுவை மேலும் கூடியிருக்கும். இப்போதெல்லாம் மழைக்கும் தட்டுப்பாடு.. அரிசிக்கும் தட்டுப்பாடு. ரேஷன் அரிசி வறுத்து சாப்பிடும் தரத்தில் இருப்பதில்லை.

எந்திரிடீ.. என்னமோ புர்ன்னு கெடக்கமணியாச்சு பாரு..“ கைக்கு இரண்டாக ரப்பர் குடங்களை வைத்திருந்தாள் வரலட்சுமி. கைகளிலும் ரப்பர் வளையல்கள்தான். பெண் வாரிசு இவள் ஒருத்தியே என்பதில் கூடுதல் சலுகையாக கைக்கு பொன் வளையல் கிடைத்தது. முதலில் அடகுக்குப் போனது இவைகள்தான். பிறகு இரட்டை வடச்செயின்.. என வரிசையாக மூழ்கி விட இனி மீட்க முடியாது என்ற தளத்தில் தாலிக் கொடியை விற்று வெள்ளாமை செய்தான் நாச்சிமுத்து. பெரியவள் வயிற்றிலிருந்த தருணமது. பிள்ளை இல்லை என்ற நாலைந்து வருட புழுத்தப் பாட்டுக்கு பிறகு தரித்த கரு அது. வாழ்வா சாவா போராட்டத்தில் தாலிக் கொடியும் தொய்ந்து விட தங்கம் என்பதற்கு அடையாளமாக தோடுகள் மட்டுமே நின்றுப் போனது. மழை அவ்வப்போது பெய்தாலும் கிணறு ஏனோ ஊறாமல் வற்றிக் கிடந்தது. வண்டல் எடுக்க உரிமை மறுப்பு. படர்ந்துக் கிடக்கும் கருவேலம்.. என முன்னெழுந்த இளவட்ட பயல்களின் குரல்கள் அருகாமை ஆற்றின் மணல் வியாபாரத்தில் நெருக்கப்பட, குடங்களுடன் தண்ணீர்ப் பயணம் தொடங்கினர் பெண்கள்.

தம்பிய துாக்கி தலவாணில போட்டுட்டு வாடீ..” செருப்புக்குள் கால்களை நுழைத்துக் கொண்டேப் பேசினாள் வரலட்சுமி.

துாக்கம் கலையாத கண்களுடன் கையடி பைப்பிற்கருகே பாவாடையைத் துாக்கிக் கொண்டு அமர்ந்தாள் மூத்தவள். அவிழ்ந்துக் கிடந்த இரட்டைப் பின்னலின் ரிப்பன் முடிச்சு சிறுநீரில் பட்டுவிடாமல் அனிச்சையாக துாக்கிக் கட்டிக் கொண்டாள். இதற்கு மேல் படுத்துக் கிடந்தால் அம்மா அடித்து விடுவாள் என்ற பயத்தில் எழுந்துக் கொண்ட இரண்டாமானவள் தனது ஐந்து வயதிற்கும் குறைவான உயரத்திலேயே இருந்தாள். ஏறுக்கு மாறாக பின்பக்கம் திருப்பிக் கிடந்த பாவாடையை முன்பக்கமாக திருப்பிக் கொண்டாள். அடுக்களையை எட்டிப் பார்த்தாள். நேற்று ஆக்கியிருந்த சோறு நீருற்றி அலுமினியச் சட்டியில் மூங்கில் தட்டால் மூடிக் கிடந்தது. மோர் சிறு சொம்பில் உறியில் தொங்கிக் கொண்டிருந்தது.

கருவாடு வறுத்துத் தாரன்.. வந்து திங்கலாம்..” என்றாள் வரலட்சுமி, மகளின் எண்ணத்தைப் புரிந்தவளாக. யாரோ புண்ணியவான் வீட்டு கிணறு ஊறுவதில் கொஞ்சமாவது தண்ணீர் கிடைக்கிறது. நேரம் கழித்துப் போனால் அதற்கும் பாடாகி போகும். ஆளுக்கு இரண்டு குடங்களோடு ஓசையின்றி வெளியேறி கதவை வெளிப்புறமாகச் சாத்தி தாழிடும் போது உள்ளிருந்து மகன் கருப்பையனின் அழுகைக் குரல் கேட்டது. மூன்று வயதாகிறது அவனுக்கு. இந்த ஆண் வாரிசுக்காக ஏக்கமாய் ஏங்கிய பெரிசுகள் இருவரும் பெரியவள் பிறந்து ஒரு வருடத்திற்குள் போய் சேர்ந்து விட திண்ணைக் கிழவிதான் பகல் முழுவதும் மகள்களுக்கு துணை. எங்கிருந்தோ.. எப்படியோ வந்து சேர்ந்தக் கிழவி திண்ணையையே இருப்பிடமாக்கிக் கொண்டிருந்தாள். நாச்சிமுத்துவும் வரலட்சுமியும் வயல்காட்டுக்கு கிளம்பி விட ஊருக்குள் திருவிழா நேரங்களில் பாரதம் படிக்க வருபவர்களிடம் படித்த பாடலை கதையாக்கி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டிருந்த திண்ணைக் கிழவியும் இந்த வறட்சியில் உருண்டோடி விட்டாள்.

எம்மா..“ எழுந்து உட்கார்ந்திருப்பான் போல. குரல் சற்றுக் கூடியிருந்தது. அரசாங்க மருத்துவமனையில் பிரசவம். “கடசில சிங்கக்குட்டிய பெத்துட்ட போலருக்கு..“ தகவலை கிரகிக்கவியலாத போதையில் விழுந்துக் கிடந்தான் நாச்சிமுத்து. இப்போது கூட அவன் வீட்டுக்கு வரும் தடயம் தெரிந்தால் டிவி.. வெண்கலக்குண்டு.. என ஒழித்து வைக்க பிள்ளைகளும் பழகிக் கொண்டார்கள். அப்படியும் கூட ஒருநாள் ஒழுங்கைக்கு எடுத்துச் செல்லும் காசி செம்பு இவன் வரவிற்கு பிறகு காணாமல் போனது. இரவு நேரம் கழித்து வருபவன் குண்டு பல்பை எரிய விட்டு பேசி பேசியே கொன்று விடுவான் என்பதால் பல்பை கழற்றி ஒளித்து வைத்து விடுவாள் வரலட்சுமி. எத்தனை ஒதுங்கிப் போனாலும் எப்படியோ அவன் வீட்டுக்கு வரும் இரவுகள் அடிதடியில்தான் முடியும்.

நன்றாக இருந்தவன்தான் நாச்சிமுத்துவும். விவசாயம் செழித்த நாட்களில் திருவிழாக் காலங்களில் மட்டுமே தொட்டுக் கொண்ட மது இப்போது நித்திய தேவையாகிப் போனது அவனுக்கு. வீடு முழுக்க நிரம்பிக் கிடக்கும் தானியங்களைப் போல விருந்து விசேஷங்களுக்கு பஞ்சமிருப்பதில்லை அப்போது. கிணற்று பாசனம் குறைவில்லாமல்தான் இருந்தது. கிணறு வற்றிப் போனதும் மழை குறைந்து போனதும் சொல்லி வைத்ததுப் போல் நடந்ததில் நன்செய் காடுகளெல்லாம் புன்செய்யாக மாறிப் போயின. அருகாமையில் வந்திருக்கும் குளிர்பான தொழிற்சாலைதான் இதற்கு காரணம் என்று கொடி பிடித்தவர்களோடு இவனும் போயிருக்கிறான். மணல் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் கூட ஒரு நாள் பங்கேற்றிருக்கிறான். வருடம் முழுக்க பாடுப்பட்ட வெள்ளாமை வீடு வந்து சேராமல் போன துக்கம் குடியாக மாறிப் போனதில்தான் அவனும் மாறிப் போனான்.

லெச்சுமி.. இந்தாடீ.. எந்திரிச்சு செத்தக் குடிடீ.. இம்புட்டு அழுத்தக்காரியா படுத்துக் கெடந்தா நீ பெத்ததுங்கள யாரு பாக்கறது..?” குளிர்பானத்தை அவளுக்கு கொடுத்து விடும் முத்தாய்ப்பில் கிட்டித்துக் கிடந்த அவளின் வாயை திறக்க முயன்றாள் அண்ணி. அண்ணிக்கு இரண்டு ஆண் மக்கள். விவசாயம் வீணாகிப் போனதும் அரசாங்க அலுவலகத்தில் ப்யூனாக வேலைப் பார்க்கும் தன் தகப்பன் வீட்டுக்கே குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள். மகன்கள் இருவரும் ஆறாவதும் ஏழாவதுமாக படிக்க அண்ணன் மாமனாரின் அலுவலகத்தில் தினக்கூலியாக சேர்ந்து விட்டான். விஷயம் கேள்விப்பட்டதில் புறப்பட்டு வந்திருந்தாள்.

எத்தே.. எனக்கு..” பொறுக்க மாட்டாதவளாக சின்னவள் அந்த பாட்டிலை பிடுங்க பெரியவளுக்கு கோபம் வந்தது.

த்தே.. சொம்மாரு..” என்றாள் தங்கையிடம் அதட்டலாக. காலையிலிருந்து சாப்பிடாத வயிறு அவளுக்கும் கபகபத்துக் கொண்டுதானிருந்தது. ‘இந்த பய அளுவுலீன்னா அம்மா அவன வூட்லயே வுட்டுட்டு வந்துருக்கும்.. இந்நேரம் சோறாக்கிப் சாப்புடுருக்கலாம்என்று எண்ணிக் கொண்டாள். பசியையும் தாண்டி இன்று அவளுக்கு எல்லாமே புது  அனுபவம்தான். யாராரோ பேண்ட் சட்டை போட்டவர்களெல்லாம் அவளிடம் பேசுகிறார்கள். பேக் மாட்டிய அக்காவெல்லாம் அவளின் பெயரையும் தம்பி பெயரையும் கேட்கிறார்கள். இவளை விட தங்கை நன்றாகவே பதில் சொன்னாள். மேல்சட்டையை இறக்கி விட்டுக் கொள்வாள்.

தம்பி பேரு கருப்பையன்விறைப்பாக நின்றுக் கொண்டு சொல்வாள். புகைப்படம் எடுக்கும்போது சிரித்ததில் அப்போதுதான் விழுந்திருந்த முன்பல் இருந்த இடம் ஒட்டையாக தெரிந்தது. வந்தவர்கள், இரண்டு பேரின் தலையையும் வாஞ்சையோடு நீவி விடுகிறார்கள். உச்சுக் கொட்டுகிறார்கள். பிஸ்கட் பாக்கெட் கூட வாங்கிக் கொடுத்தார்கள். இவள் வேண்டாமென்று மறுக்க தங்கை வாங்கிக் கொண்டாள். இவள் முறைக்கவும் தம்பிக்கு.. என்று பாவடைக்குள் ஒளித்துக் கொண்டாள். அம்மா வேலை செய்யும் வீட்டில் கூட மிஞ்சிப் போனதோ.. பழையதோ எதுவும் வாங்கி வராது. ரேஷன் அரிசி.. பருப்பில் சமைத்தாலும் வீட்டு சாப்பாடுதான் எப்போதும். சாயங்காலம் டீக்கடைக்கு கிளாஸ் கழுவப் போகும். சில சமயங்களில் புரோட்டா கட்டி எடுத்து வரும்.

இந்நேரம் பார்த்து ஏதோ ஒரு அம்மன் கோவிலுக்கு கால் நடையாக பயணம் புறப்பட்டிருந்தார்கள் வரலட்சுமியின் தாயும் தகப்பனும். “கெளாசு இருந்தா எடுத்தாங்கய்யா.. வாய தொறக்க மாட்டீங்கிறா..“ என்றாள் அண்ணி. பாட்டிலையே திறக்கவில்லை என்பது அப்போதுதான் அவளுக்கு உரைத்தது. அவளின் வார்த்தையைப் பின்பற்ற ஏதுவான மனப்போக்கு நிலவியதால்  கான்ஸ்டபிள் ஒருவர் டீ டிரேயில் சொருகப்பட்டிருந்த காலி டீ கிளாசில் ஒன்றை பாட்டில் நீரில் கழுவி வரலட்சுமியிடம் எடுத்துக் கொண்டு ஓடினார். கேமராவும் அவரை பின் தொடர்ந்தது. வியர்வையில் காக்கிச் சீருடை நனைந்திருந்தது. ச்சேகுளிச்சிட்டு டிரஸ் மாத்தீட்டு வர்லாமின்னா அங்கிட்டும் இங்கிட்டும் நவுர வுட மாட்டேங்கிறானுங்க..“ அலுத்துக் கொண்டாலும் பெயர் காமிராவில் தெரிவதுப் போல விறைப்பாக நின்றார்.

வரலட்சுமிக்கு தண்ணீர் எடுக்கப் போகுமிடத்திற்கு மகனை அழைத்துச் செல்ல விருப்பமில்லை. வரும் போது கால் வலிக்கிறது என்பான். குடத்தை துாக்குவதா.. மகனைத் துாக்குவதா என்பதால் பெரும்பாலும் அவன் விழிப்பதற்குள் தண்ணீர் எடுத்து வந்து விடுவார்கள். இன்று ஏனோ விழித்துக் கொண்டு அழுதான். அப்போதுதான் பொழுது விடிய எத்தனப்பட்டுக் கொண்டிருந்தது.

இருங்கடீ.. வாரேன்..” மகனின் அழுகைக் குரல் கேட்டு உள்ளேச் சென்றாள். டிரவுசர் மூத்திரத்தில் நனைந்திருந்தது. படுத்தவாக்கிலேயே கால்களை துாக்கி டிரவுசரை உருவியவள் உறியில் கிடந்த வருக்கி பாக்கெட்டிலிருந்து வருக்கி ஒன்றை எடுத்து மகனிடம் நீட்டினாள்.

இந்தாடா.. தின்னுட்டு படுத்திரு.. அம்மா தண்ணியெடுத்துட்டு வாரன்..” என்றாள்.

நானு வர்றன்..“ வறுக்கியையும் வாங்கிக் கொண்டு உடுப்பு ஏதுமின்றி தன் பின்னால் ஓடி வந்த மகனை தடுக்கவியலாது கதவை வெளிப்புறமாக தாழிட்டு விட்டுமூணு பேரும் சுருக்கா நடக்கணும்.“. என்றபடி ரப்பர் குடங்களோடு விரைசலாக நடந்தாள்.

ஊர் எல்லையிலிருந்தது அவர்களின் நிலம். இதைக் கடந்துதான் தண்ணீர் எடுக்க செல்ல வேண்டும். நகராட்சி பள்ளி தலைமையாசிரியை வீட்டில் வேலைக்கு சேர்ந்து வருடம் ஒன்று ஓடி விட்டது. காலையிலேயே போய் விட வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும் வேலை அத்தனை கடினமாக இருப்பதில்லை. அந்த டீச்சரம்மாவும் கணக்குப் பார்த்து காசுக் கொடுப்பதில்லை. மூன்று பிள்ளைகளுடன் அல்லாடுகிறாள் என்று வரலட்சுமியின் மீது இரக்கப்படுவார்.

ஆளு ஒண்ணும் சுதாரிப்பா இல்லயே வரலஷ்மி.. நேத்து வந்தாரா ஒங்க ஆளு..?” என்று கண்டுபிடித்து விடுவார்.

ஆமா டீச்சர்..” தலையை நிமிர்த்தாமல் பேசுவாள் வரலட்சுமி. கட்டட வேலைக்கு போகும் நாச்சிமுத்துவுக்கு ஒருநாள் சம்பாதிக்கும் கூலி அடுத்த இரண்டு நாட்களுக்கு குடிப்பதற்காகும். என்றாவது ஒருநாள் முன்னுாறு ரூபாயை எடுத்துக் கொண்டு ஐந்நுாறை மனைவியிடம் கொடுப்பான். எல்லாம் விடியும் வரைதான். காலையிலேயே அந்த நரகல் வாசனை இருந்தால்தான் அவனுக்கு பொழுது விடிந்தது போலிருக்கும். நூர்ருவா குடேன்.. நூர்ருவா குடேன்.. என்றே அவள் வேலைக்குக் கிளம்பும் நேரத்திற்குள் ஐநுாறு ரூபாயும் வாங்கி விடுவான்.

இப்டி பசியும் பட்டினியுமா மயங்கிக் கெடந்தீன்னா எந்திரிச்சு வார ஓம் பய எங்கம்மாள கூட்டியான்னா நா எங்கப் போவ..?“ அண்ணியின் குரலில் காயப்பட்டவள்போல் எழுந்தாள் வரலட்சுமி.

அய்யோ.. வரமா வரமிருந்து தவமா தவங்கெடந்து பெத்தப்புள்ளய உசுரோடு மண்ணுக்குள்ள குடுத்துட்டு ஒக்காந்திருக்கனே.. எய்யா.. கருப்பய்யா.. ஒம் பேர தானே எம் புள்ளிக்கு வச்சேன்.. நன்னி மறந்துடாதய்யா.. எம்பயல உசுரோட கூட்டியாந்திருய்யா.. நெறக்க ஒரு பாட்டிலு சாராயம் வாங்கி வக்கிறேய்யா.. எம்புள்ளய கூட்டியாந்திருய்யா..“ வயிற்றலடித்துக் கொண்டு கதறிய தாயைப் பார்த்து மகள்கள் இருவரும் தேம்பி அழத் தொடங்கினார்கள்.

இங்கப்பாரும்மா.. அழுவுற சத்தம் கேட்டு எந்திரிச்சா வரப் போறான் ஒம்புள்ள.. அதான் இத்தன பேரு வந்துருக்கோமில்ல.. புள்ளய வெளிய கொண்டாராம போயிடுவோமா..? நீ ஜுஸ குடிச்சுட்டு அப்படியே மரத்தடியில ஒக்காரு.. நாங்க பாத்துக்குறோம்..” இரக்கப்பட்ட வருவாய் துறை அலுவலர் ஒருவர் நெருங்கி வந்து ஆறுதலாகப் பேசினார்.

பாட்டிலை திறந்ததும் குபுக்கென்று நுரையுடன் வழிந்தது அந்த கருந்திரவம்.

அதான் அய்யாவே சொல்லிப் போட்டாருல்ல.. இத்தக் குடி..” நீட்டிய கிளாசை வாங்க மறுத்து கதறினாள். “எந்திரிக்கும்போதே புள்ள பசிக்குதுன்னான்.. பாளாப்போன வேலதான் பெரிசுன்னு ஓடுனன்..“ என்றவள் ஏதோ நினைத்துக் கொண்டவளாகஒந்தம்பி வறுக்கி சாப்டானாடீ..“ என்றாள் பெரியவளைப் பார்த்து. “இல்ல..“ மகள் இடவலமாக தலையை ஆட்டியதில் கதறலின் ஒலிக் கூடிப் போனது. மண் ஒட்டிய உடலை இறுக்கமான ஜாக்கெட் கவ்விப் பிடிக்க விலகிய முந்தானையைப் பற்றிய அக்கறையேதுமற்ற நிலையில் இருந்தாள்.

எத்தே நாங்குடிக்கறன்..” அத்தையின் கையிலிருந்த டம்ளரை வலிந்து வாங்கி  குடித்தாள் சின்னவள். எதையோ செரித்துத் தள்ளுவதுப் போல பெரியதாக நாலைந்து ஏப்பம் வந்தது அவளுக்கு. “எத்தே.. இன்னும்..“ சின்னவள் நீட்டிய கிளாசில் சிறிது நிரப்பி விட்டு பாட்டிலோடு வாயில் ஊற்றிக் கொண்டாள் அண்ணி. “என்னா தித்திப்பு..“ தன்னையறியாமலேயே இன்னொரு வாய் ஊற்றிக் கொண்டாள். இரண்டு மிடறு விழுங்கியதில் நாக்கு சற்று கறுத்திருந்தது. அடுத்தடுத்து அளவில் சிறிய குளிர்பான பாட்டில்கள் வர சின்னவள் ஆரஞ்சு நிற சாறு அடங்கிய பாட்டில்கள் இரண்டினை கைக்கு ஒன்றாக வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள். பாவம்..தம்பிக்கு இந்நேரம் பசிக்கும் என்று நினைத்துக் கொண்டாள்

இந்த சூசு தயார் பண்ற கம்பெனிதா இங்ஙன வந்துருக்கு..“ என்றாள் ஒருத்தி அந்த தொழிற்சாலை இருக்கும் திசையில் கையை நீட்டி தன் உறவுப் பெண்ணிடம்.

நேரம் நகர்ந்துக் கொண்டேயிருந்தது. ஓய்ந்து போனதில், சலனமற்று சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள் வரலட்சுமி. தலை முடி அவிழ்ந்து முன்புறமாக வழிந்துக் கிடந்தது மகள்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்திருந்தனர். “அண்ணனுக்கு தகவலு சொல்லிப் போட்டீல்ல.. இன்னுங்காணாம்..” என்றாள் அண்ணி. ”அப்பா போனே எடுக்க மாட்டீங்குதுத்தே..“ என்றாள் பெரியவள். யாரோ ஒருவர் உங்கப்பா நம்பர் சொல்லும்மா என்று பெரியவளிடம் கேட்டார்கள்.

பொக்லைன் வண்டிகள் விறுவிறுவென பள்ளம் பறித்துக் கொண்டேப் போனது. தீயணைப்புத் துறை வாகனத்தின் சிகப்பு நிறமே அச்சம் தருவதாக இருந்தது அவளுக்கு. பத்திரிக்கை.. தொலைக்காட்சி என ஆட்கள் குவியத் தொடங்கியிருந்தனர்.

திடீரென்று ஏதோ வாகன அணிவகுப்பு போல நாலைந்து கார்கள் வந்து நின்றன. ”எம்மா.. எந்திரிம்மா.. ஒன் அதிர்ஷ்டம் கலெக்டர் சார் டீஆர்ஓவ ஸ்பெஷலா இங்கேயே இருந்து கவனிக்கச் சொல்லி அனுப்பியிருக்காரு.. எந்திரி.. எந்திரி..“ யாரெல்லாமோ பரபரத்து அவளிடம் ஓடிவந்தார்கள்.

இந்தம்மாவோட புருசன் எங்கே.. இந்த புள்ளைங்கள்ளாம் யாரு..?” மிடுக்காக இருந்த ஒருவர் மிரட்டுவது போல கேட்டார். துவண்டக்கால்களில் எழுந்து நின்றாள் வரலட்சுமி. கூடவே மகள்களும்.

அந்தாளு ரெண்டு நாளா வீட்டுக்கு வர்ல சார்..” என்றாள் அண்ணி.

பெத்தப்புள்ள இப்படிக் கெடக்கான்.. தகவல் சொல்லி வுட மாட்டீங்களாம்மா..” சிடுசிடுத்தார்.

சார்.. ஒரு நிமிஷம் சார்.. ஒரு ஃபோட்டோ மட்டும் சார்.. ப்ளீஸ்..” யாரோ அந்த மிடுக்கு மனிதரைக் கேட்டார்கள்.

அதற்குள் மாவட்ட வருவாய் அலுவலர்  இவளிருக்கும் இடத்திற்கு வந்தார். ”அம்மா.. கவலப்படாதீங்க.. பையனுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் குடுத்துருக்கோம். பையனோட மூவ்மெண்ட்ஸெல்லாம் கவனிச்சுக்கிட்டுதான் இருக்காங்க..  மதுரையிலேர்ந்து ஸ்பெஷல் டீமை வரச் சொல்லி கலெக்டர் ஏற்பாடு பண்ணியிருக்காரு.. தைரியமா இருங்க..” என்றார் பொறுமையாக.   

borewell

மிஷின் ராட்சசத்தனமாக நிலத்தை பறித்து பெரிய அளவிலான பள்ளமாக்கிக் கொண்டேப் போனது. தண்ணீர் இருந்த காலக்கட்டங்களில் அத்தனை பதவிசாக நிலத்தை பராமரித்து வைத்திருப்பான் நாச்சிமுத்து. பசேலென்ற பயிரும் செவ்வரியோடிய வரப்புமாக இருக்கும் வயலை பார்த்துக் கொண்டேயிருப்பது அத்தனை ஆனந்தமாக இருக்கும் இருவருக்குமே. இந்த மரத்தடியில்தான் இருவரும் மதிய உணவு உண்பார்கள்.

பொஸிஷன் எப்டியிருக்கு..”. அதிகாரிகள், பொது மக்கள், மீடியா ஆட்கள் என எல்லாருக்குமான பொதுக் கேள்வியுடன் பகல் முற்றத் தொடங்கியது. மக்கள் கூட்டம் திருவிழாவை நினைவுறுத்தியது. உடனடி விளக்குகள் போடப்பட்டு பகலை தக்க வைத்துக் கொள்ள ஏற்பாடுகள் நடந்தன. ஐந்து ஜேசிபி இயந்திரங்களும் இரண்டு பொக்லைன்களும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருந்தன.

பாத்து.. பாத்து.. மெதுவா எறக்குங்க.. சாய்ச்சு வைங்க.. இன்னும்.. இன்னும்..“ குரல்கள் உரத்து எழும்பியதில் பழைய நினைவுகள் மறைந்துப் போய் நிகழ்ந்துக் கொண்டிருந்த சோகம் பாரமாக அழுத்தியது அவளை. அந்த பெரிய பள்ளத்தில் அலுமினிய ஏணிகள் இறங்குவதற்கு தோதாக நிறுத்தி வைக்கப்பட்டன. தலையில் டார்ச் போன்ற விளக்கைக் கட்டிக் கொண்டு பரபரப்பாக திரிந்தனர் நாலைந்து பேர். ஆம்புலன்ஸ் வண்டி.. ஆக்சிஜன் சிலிண்டர் என அடையாளமே மாறிப் போய் கிடந்த தனது நிலத்தை வெறித்துப் பார்த்தாள் வரலட்சுமி. பிறகு அந்த அதிகாரியிடம் சொன்னாள்.

எங்கிட்ட சொல்ற தகிரியத்த எம்மவனுக்கும் சொல்லுங்கய்யா.. அம்மா இங்ஙனதான் குந்தியிருக்கன்.. பயப்புடாதேன்னு சொல்லுங்கய்யா.. வெளிய வரவுட்டு புரோட்டா வாங்கித்தாரேன்னு அம்மா சொல்லுச்சுன்னு சொல்லுங்கய்யா..” என்றாள்.

பெரிய வசதிகளோடு வாழ்ந்ததில்லையென்றாலும் இந்த ஈனப்பிறப்பு இப்போதுதான் வாய்த்திருக்கிறது அவளுக்கு. “மாப்ளை சொத்துக்காரந்நா.. போயி பதனமா பொளச்சு ஆற நுாறாக்கிடு தாயீ..“ என்றுதான் அப்பா அனுப்பி வைத்தார். மழையும்.. ஊறிக் கொண்டிருக்கும் கிணறும்.. நெல்லும், தானியமுமாக வீட்டை நிறைத்திருந்த மகிழ்ச்சியான நாட்கள் அவள் வாழ்க்கையிலும் கடந்துதான் போயிருக்கின்றன.

நம்பூருக்கு பக்கத்துல சூசு கம்பெனி வரப்போவுதாம்.. வெடலப்பசங்கள வேலக்கு எடுத்துக்கறதா சொல்றாவோ..“ உற்சாகமாகத்தான் வரவேற்றனர் கிராமத்து மக்கள். அக்கம்பக்க கிராமங்களில் அடிமாட்டு விலைக்குக் கூட போகாத நிலங்களை அதிக விலைக் கொடுத்து அவர்கள் எடுத்துக் கொண்டபோதுகாசுக்கு காசுமாச்சு.. வேலக்கு வேலயுமாச்சு..” பொறுமலாக் கூட வந்தது இவர்களுக்கு. புற ஆட்களின் நடமாட்டம் அதிகரித்துப் போனது. கப்பலா.. காரா.. என்று தெரியாத அளவிற்கு பெரிய பெரிய கார்கள் அடிக்கடி வரத் தொடங்கின. கன்டென்யர்.. டாரஸ்.. என வாகனப் போக்குவரத்துக்காக தனியாக சாலையமைத்துக் கொண்டபோது அது இவர்களுக்கும் பயன்பட்டது. நடக்கும் பணிகளை திருவிழாவைப் பார்ப்பதுபோல ஆணும் பெண்ணுமாக கூடி பார்த்தனர். எல்லாம் ஒரு அளவோடு நிற்க ஜெயில் சுவர்கள் போன்ற சுற்றுச்சுவர்கள் முதன்முதலாக மர்மத்தை கொண்டு வந்தன. எடுத்து வரப்பட்ட பெரும்குழாய்களின் சத்தம் அந்த சுவரையும் மீறி கேட்கத் தொடங்கியது. “தண்ணி உறிஞ்சுற மிசினு..“ அரசல்புரசலாக கேள்விப்பட்டபோது வரலட்சுமிக்கு வியப்பாக இருந்தது, அவளும் ஆழ்துளை கிணறுகளைப் பார்த்திருக்கிறாள். அதற்கெல்லாம் இத்தனைப் பெரிய குழாய்கள் தேவைப்பட்டதில்லை. எந்நேரமும் ராட்சச சத்தமும் கேட்பதில்லை.

இந்த சத்தத்தில் ஊர் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறிக் கொண்டிருந்த நேரம். வரலட்சுமியின் அம்மா ஒருநாள் பேச்சை ஆரம்பித்தாள்.

ஒம்மவளுங்களுக்கு காது குத்தீட்டீன்னா தேவலாம் புள்ள.. ஒங்கப்பாருக்கும் அடிக்கடி மேலுக்கு முடியாமப் போவுது.. நாங்க நடஒடையா இருக்கப்பவே சீர்செனத்திய முடிச்சுப்புடலாம்னு பாத்தேன்.. ஒம் பொறந்தவங்கள்ள நம்ப முடியாதுத்தா..“ என்றாள் மகளிடம் பயமுறுத்தலாய்.

வெள்ளாம காடெல்லாம் நெறஞ்சுக் கெடந்தாதானே தேவ வைக்க வாய்க்கும்.. வெறுன கூட்டீட்டு நாக்க வளிக்க சொல்றீயா.. சீருக்க ஆசப்பட்டப் பயன்னு ஊருசனம் பேசிப்புட்டு போவவா..?” என்று சொல்லி விட்டான் நாச்சிமுத்து. “சவுரியத்துக்கு சாமி கும்புட்டா சாமி இப்டிதான் சோதிச்சுப் பாக்கும்.. பேசாம இந்த வருசம் திருளா கொண்டாடிடுவோம்..” வெள்ளாமைக் கெட்டுப் போனதில் அவசரமாக ஊர் கூடி முடிவெடுத்தது. திருவிழா முடிந்தும் சாமிக்கு கோபம் தீரவில்லை. ஊர் கிணறுகள் வற்றிக் கொண்டே வந்தன. சுத்துபத்து கிராமங்களும் மாயமாய் மறைந்தப் போன தண்ணீரை தேடும் வேட்டையில் மும்முரமாகிப் போயின.

கெணத்த நம்பிக் கெட்டுப் போவ வேணாம்.. பேசாம போர்வெல்லு போட்டுட வேண்டியதுதான்..“ பெரு விவசாயிகள் சிலர் இருநுாறு அடிக்கு மேல் தண்ணீரை துழாவ முயன்று தோற்றதில் மாற்று ஏற்பாடுகள் செய்துக் கொண்டு மூட்டை முடிச்சுகளோடு கிளம்பி விட்டனர். பிடிவாதமாகவோ.. வழியின்றியோ தங்கிப் போன குடும்பங்களில் வரலட்சுமியின் குடும்பமும் ஒன்று.

நம்ம பூமி தண்ணிக்கு வாக்கப்பட்டதுதானாம்.. எங்க மாமா சொல்லுது..” குடிக்காத நேரங்களில் தனது குடிப்பழக்கத்தை சொல்லி வருந்தும் கணவனிடம் நைச்சியமாகப் பேச்சுக் கொடுத்தாள் வரலட்சுமி.

அதுக்கென்ன இப்ப..?”

அதுக்கொண்ணுமில்ல.. மூணு புள்ளங்கன்னு ஆயிப் போச்சு.. எத்தன நாளு வெள்ளாமக் காட்ட வெருசா போடறது..?”

ஆமா.. ஆசப் பாரு எனக்கு.. தண்ணி வந்தா வெவசாயஞ் செய்யாம என்னா..?”

தண்ணி வரும்.. வரும்னு குந்திக்கிட்டு கெடந்தா வந்துடுமா.. பேசாம நாமளும் போரு போட்டு தண்ணி எடுக்கலாம்னு நெனக்கன்..”

போரு போட காசு..? காசு அம்புட்டாலும் தண்ணீ அம்புடுணுமில்ல..”

தண்ணி ஊறுன பூமிதான.. எங்குட்டுப் போயிடும்.. எங்க மாமன் தண்ணிக் குறி பாக்கறவருதான்.. சொன்னா சொன்ன எடம் தப்பாது.. எங்கப்பா ஜதை மாடு வாங்கித் தாரேங்கிறாங்க.. என் தோடு சிமிக்கி கெடக்கு.. மிச்சம் மீதாறிக்கு காட்ட அடமானம் வச்சு தாரேன்னுச்சு எங்காயி..”

மீண்டும் வெள்ளாமை செய்ய ஆசையாய் இருந்தது அவனுக்கும். கம்பங்கூழும் கரைத்த மோருமாக சின்ன வெங்காயத்துடன் விடியும் காலைகள் அவன் மனதில் ஊஞ்சலாடின. விதைப்பு.. அறுப்பு.. அம்பாரமாக குவியும் தானியங்களின் மீதுதான் வாழ்க்கைக்கான பிடிப்பே உண்டாவது போலிருக்கும் அவனுக்கு. திருவிழா கொண்டாடிக் கூட வருடங்கள் ஓடி விட்டன. பணம் உள்ளவர்கள் நகர்புறம் நகர்ந்து விட மீதப்பட்டவர்களால் இழுத்து நிமிர்த்தி உருட்டாவியலாததில் கவனிப்பற்றுப் போயின தேரின் சக்கரங்கள்.

ஆசை ஒரு பக்கமிருந்தாலும் அவநம்பிக்கை அறிவை சீண்டிக் கொண்டேயிருந்தது இருவருக்குமே. பங்காளி காத்தமுத்துவுக்கு 140 அடி தோண்டும் போது பாறையில் ஈரக்கசிவு ஏற்பட்டதை நினைத்துக் கொண்டார்கள். ஆனால் அவரிடம் இருக்கும் அரை காணி நிலத்திற்கே அந்த தண்ணீர் காணுவதில்லை என்ற உண்மை இரவின் துாக்கத்தை கலைத்துப் போட்டு விடும்.

எலந்தக்குடி மாரீயாயீ.. கருப்பண்ணசாமி.. கண்ணத் தொறந்துப் பாருங்கய்யா.. குந்தியிருக்க வூடு தவுத்து அத்தனயும் மொளுவிப் போட்டு போர் போடுறோம்.. ஆயி.. தண்ணி குடுத்துடு ஆயி.. நானும் எங்குடும்பமும் மொட்ட போட்டு அங்கவலம் வாரோம் தாயீ..” மனதார வேண்டிக் கொண்டார்கள். அன்று பூஜைப் போட்ட தேங்காயினுள் பூ வளர்ந்திருந்தது. நல்ல சகுனம் இது என்று போர் மிஷினை இறக்கியவன் கூட சிலாகித்துச் சொன்னான். அடி அடியாகக் கூடிப் போக போக சுணக்கம் ஏறிக் கொண்டே வந்தது இருவருக்கும். குப்பையும் துாசுமாக வெடித்து சிதறிய பாறையில் தண்ணீருக்கான அறிகுறிகள் தோன்றவே இல்லாத போது 180 அடிக்கு மேல் பொருளாதாரத்தால் தாங்கவே முடியாது என்ற நிலையில் மிஷினை நிறுத்திக் கொண்டனர்.

சின்னவள் உறங்கத் தொடங்கியிருந்தாள். பெரியவளுக்கும் துாக்கம் தாளவில்லை. “எய்யா.. நா பெத்த மவனே.. செத்த நேரம் பொறுத்துக்கய்யா.. வெளிய வந்துப்புடுவ.. லைட் வெளிச்சம் வருதுல்ல.. பயந்துக்காத இருய்யா.. வாய் அரற்றிக் கொண்டேயிருந்தது வரலட்சுமிக்கு.

ஒன் புருசனுக்கு தகவலு சேந்துடுச்சாம்.. பஸ் ஏறிட்டேன். காலைல விடியங்காட்டியும் வந்துடுறேன்னு சேதி சொல்லுச்சு..” காதோடு கிசுகிசுத்தாள் அண்ணி. அழுகை கூடிப் போனது வரலட்சுமிக்கு.

எலந்தக்குடி மாரியாயீ.. ஒனக்கு காதுக் கேக்கலீலியா.. எங்கொலத்த அத்துடாத சாமி.. எம்புள்ள எங்கடீன்னு கேட்டான்னா அந்த மனுசனுக்கு நான் என்னான்னு பதிலு சொல்லுவேன்.. கடவுளே.. சோதன வக்காதய்யா.. நா தாங்க மாட்டேன்.. எம்புள்ளய வுட்டுடுய்யா.. எம்மா.. எம்மான்னு முந்தானிய வுடாத சிசுவுய்யா.. ஒண்ணுக்கடிச்சுட்டு வாரேன்னு போனவன நா கண்ணார கூட காங்கிலியே.. வுளுந்ததும் எம்மா.. எம்மான்னு கத்துனானே.. பாவி பாதகத்தி.. அப்பவே பாத்திருந்தன்னா கைய குடுத்து துாக்கியிருப்பனேவவுறு காஞ்சுப் போச்சுன்னா கீரத்தளையா வாடிப்பூடுவானே.. அய்யா.. சாமி.. தர்மதொரைங்களா.. எம்மவன காப்பாத்துங்கய்யா.. ஒங்க சனமத்தனயும் வாவ்வாங்கு வாளுவாங்கய்யா.. எம்மவன எடுத்துக் குடுத்துடுங்கய்யா.. அய்யோ.. முழுசா வுட்டுப்புட்டனே.. எம்புள்ளய முழுசா வுட்டுப்புட்டனே..“ தலையிலடித்துக் கொண்டு அழும் தாயை துாக்கம் வழிந்தக் கண்களோடு மலங்க மலங்க பார்த்தாள் பெரியவள்.

இந்தாம்மா.. இத்தன பேரு வந்துருக்கோம்.. எல்லாரும் முட்டாப்பசங்களா..? எடுத்துடுலாம்.. எடுத்துடுலாம்..” என்றார் ஒருவர் ஆதரவாக நெருங்கி.

எதையும் உள்வாங்கும் மனநிலையில் இல்லாதவளாக சமைந்திருந்தவளுக்கு காலை சம்பவங்கள் நினைவிலாடியது.

கையில் வறுக்கியோடு அக்காக்களுக்கு இணையாக நடந்து வந்துக் கொண்டிருந்தான் கருப்பையன். ”எக்கா.. மூத்தா..” அப்போதுதான் அவர்கள் தங்களது வயலை கடந்துக் கொண்டிருந்த நேரம்.

பாறைத் துகள்களாக வறட்சியை வெளித் தள்ளிய பூமியை மன்னிக்கவியலாதவர்கள் போல இருவரும் நிலத்தை கண்ணெடுக்கவும் தயங்கியதில் ஆறு மாதக்காலம் கடந்துப் போனது. அந்த பாதையைக் கடக்க நேரிடும்போது கூட இறுக்கிக் கட்டிய மனதோடு கடந்து விட அந்த காலம் போதுமானதாக இருந்தது இருவருக்கும். செத்தையும் கூளமுமாக ஆழ்துளை மூடிக் கொண்டதுக் கூட நினைவுகளை மறக்கடிக்கும் விதமாக தோன்ற கடமைக்குள் கடனை நுழைத்து போராட தொடங்கியிருந்தாள் வரலட்சுமி.

சீக்ரமா வந்து தொலங்கடீ..” விறுவிறுவென திரும்பிப் பார்க்காமல் நடந்துக் கொண்டிருந்தாள் வரலட்சுமி.

நாளியாச்சுன்னா அம்மா கத்தும்.. சீக்ரம் அடிச்சுட்டு வாடா..” பெரியவள் தம்பிக்காக சற்று நின்றாள். பின்னாலேயே வாலாட்டிக் கொண்டு வந்த நாய் அவன் திரும்பிய நேரம் பார்த்து அவன் கையிலிருந்த வறுக்கிக்காக எவ்வ விருட்டென்று நழுவி ஓடினான் கருப்பையன்.

அய்யோ.. எக்கா..” தம்பியின் குரல் வீறிட்டதில் காலில் குத்திய முள்ளை எடுத்துக் கொண்டிருந்தப் பெரியவள் நிமிர்ந்துப் பார்த்தாள். துாக்கி பிடித்த வறுக்கியோடு உள்ளே அமிழ்ந்துக் கொண்டிருந்த கருப்பையனின் வலது கையை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது.

விளக்குகளைத் தவிர்த்து சுற்றும் முற்றுமாக தெரிந்த இருட்டு வரலட்சுமியை வெருட்டியது. இந்நேரம் விளையாண்ட அலுப்பில் களைத்து துாங்கி விட்டிருப்பான் மகன். டீக்கடையில் வேலை முடிந்து வந்த பிறகு துாங்கும் மகனை எழுப்பி உண்ண வைப்பாள். நேற்று அவளுக்கிருந்த அசதியில் மகனை எழுப்பவியலாது துாங்கிப் போனாள். நினைவுகள் கதறலாக வெளிப்பட்டது.

யெய்யா.. யாராரோ வாரீங்க.. குனிஞ்சு குனிஞ்சு பேசிக்கிறீக.. எம்புள்ள வெளில வர்ற வளிதான் காங்கிலய்யா.. யெய்யா.. எம்மவன் நானில்லாம ஒருநாளு கூட துாங்க மாட்டானுங்கய்யா.. கால கருக்கல்ல வுளுந்தவன் என்னமா இருக்கான்.. ஏதாயிருக்கான்னு தெரிலங்கய்யா.. யெய்யா.. எம்மவன காப்பாத்துங்கய்யா..“

பையன் மூவ்மெண்ட்ஸ் எப்படியிருக்கு..”

காமிராவில 44 அடி ஆழத்துல ஏத்தியும் தாழ்த்தியுமா கை ரெண்டையும் மேல துாக்கினதுமாதிரி தெரியிறான் சார்.. பாடியெல்லாம் மண்ணுக்குள்ள புதைஞ்சமாதிரி இருக்கறதால ஆக்சிஜன் எடுத்துக்கறது சிரமம் சார்..“ இழுத்தது போல் சொன்னார் அந்த அதிகாரி.

எம்மா.. தம்பி குளியில வுளுந்துட்டாம்மா..“ பெரியவளின் கூக்குரல் கேட்டு ஓடி வந்தாள் வரலட்சுமி. அதற்குள் நாயிடமிருந்த தக்க வைத்துக் கொண்ட வறுக்கியோடு சொந்த நிலத்து போர்வெல் குழிக்குள் சறுக்கி இறங்கிக் கொண்டிருந்தான் கருப்பையன்.

இன்ஸிடெண்ட் எப்போ நடந்துச்சு..” யாரோ யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயர்லி மார்னிங் ஃப்வை த்ர்ட்டீ இருக்குமாம்.. ஒடனே தகவல் சொல்லியிருந்தாக் கூட வேல சீக்ரம் முடிஞ்சுருக்குமோ என்னமோ.. அந்த பொம்பள குய்யோ மொறையோன்னு அங்கயே கத்திக்கிட்டு நிக்கறதுக்குள்ள பையன் சரசரன்னு உள்ள எறங்கீட்டான்..”

அதான் ஃபயர் ஆட்கள்ளாம் ஒடனே வந்துட்டதா சொல்றாங்களே..”

ஊர்க்காரர் குறுக்கிட்டார்.

அந்த பொட்டப்புள்ளங்க ஊருக்குள்ள ஓடியாந்து விசயம் இப்டீன்னு சொல்லுச்சுங்க.. ஆளும்பேருமா மம்புட்டிகிம்புட்டியெல்லாம் போட்டு நெம்பி பாத்தோம்.. கயித்த வுட்டு இழுத்துப் பாத்தோம்.. சட்டத்துணியில கம்பிய குடுத்து இழுக்கலாமுன்னா பய அம்மணக்குண்டியால்ல இருக்கான். ஒண்ணும் கதைக்காவல.. அதுக்குள்ள புள்ள இன்னோம் உள்ளுக்கு எறங்கிப் போச்சு.. அப்றந்தான் போலீசுக்காரங்கக்கிட்ட தகவல் சொன்னோம்.. ஏட்டு இல்ல.. ரைட்டர் இல்லன்னு அவங்க நீட்டி நெளிச்சுக்கிட்டு வர்றப்பவே அர அவுரு ஓடிப் போச்சு.. ஆனா அவங்கதான் பயர் ஆபிசுக்கு சேதி சொல்லியிருக்காவ.. அதுங்க வந்த பிற்பாடுதான் வேல ஆரம்பிச்சுது.. பயர்காரங்கதான் 108 ஆம்புலன்ச வரவழச்சு ஆசிசன் கொடுக்க ஆரம்பிச்சாங்க.. பச்ச சிசுவு சார் அவன்.. எம்புட்டு நேரம் தாங்குவான்.. எனக்கொண்ணும் நம்பிக்கயாப் படல..“

அப்டி சொல்லாதீங்க.. அப்போலேர்ந்து பையனுக்கு குழாய் மூலமாக ஆக்சிஜன் போய்ட்டுதானிருக்கு..”

ஒங்க வீட்டுக்காரர் வந்துட்டாராம்மா..?” தாசில்தார் வரலட்சுமியின் அருகில் குனிந்துக் கேட்கும் போது நேரம் இரவு ஒன்பதை தாண்டியிருந்தது.

அந்த ஆளு எப்டியோ வந்து சேந்துடுவாங்கய்யா.. எம் புள்ளய மட்டும் எடுத்துக் குடுத்துடுங்கய்யா.. நா மனு குடுக்க மாட்டன்.. நட்டஈடு கேக்க மாட்டன்.. கஞ்சித்தண்ணியோ.. வெந்நீ தண்ணியோ கெடைக்கறத குடிச்சுட்டு ஒதுங்கி வாந்துக்கிறோமய்யா.. அய்யா ஒம் புள்ளக் குட்டியெல்லாம் எட்டு ஊருக்கு பேரு சொல்லி பெரு வாள்வு வாளுமய்யா.. எம்மவன மீட்டு குடுத்துடுங்கய்யா..” அழுதழுது கிடந்ததில் பேசும்போது மேலுதட்டுக்கும் கீழ் உதட்டுக்கும் இடையே எச்சில் கோடு போட்டிருந்தது வரலட்சுமிக்கு.

அதுக்குதானம்மா இத்தன பேரு மெனக்கெடறோம்.. துாக்கிடலாம் கவலப்படாத.. ஆனா பையனை வெளியே கொண்டாந்தப் பிறகு உங்க வீட்டுக்காரர் தகப்பன்ங்கிற முறையில கையெழுத்து போட்டுத் தரணும்.. அதுக்குதான் கேக்கிறேன்..” என்றார் பவ்யமாக.

வேலை நடைப்பெற்றுக் கொண்டிருந்த இடத்தை திரும்பிப் பார்த்தாள் வரலட்சுமி. தோண்ட தோண்ட பாறையாக வந்ததில் சற்று தேக்கமடைந்த மீட்புப் பணி மீண்டும் மும்முரம் அடைந்ததில் ஆட்கள் பெரிய பெரிய விளக்குகளின் வெளிச்சத்தில் துரிதமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். மனுநீதி நாளன்றாவது ஏதாவது விடிவு பிறக்காதா என்று ஆதங்கத்துடன் அலைய வைத்த ஆட்சியர் இன்று அவள் மகனைத் தேடி ஆளை அனுப்பியிருக்கிறார். வறண்டு போன விவசாயத்திற்கு நிவாரணம் கிடைக்குமென்று யாரோ சொன்னதை நம்பி ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்த போது தென்பட்ட அதிகாரிகளும் அங்கு இருந்தார்கள். அங்கு விரட்டி விரட்டி பேசிய அதிகாரி ஒருவர் நெருக்கத்தில் நிற்கிறார். அவளை ஏறெடுத்தும் பார்க்காத அல்லது பார்க்க விரும்பாத அதிகாரிகள் சோகம் அப்பிய முகத்தோடு காத்துக் கிடந்தார்கள்.

ஆக்ஷன ஸ்பீடப் பண்ணுங்க சார்..” என்றார் ஒரு அதிகாரி.

டீப்பு வளியா காத்து வுடுறேன்னு பேசிக்கிட்டாவளே.. என்னாச்சு..“ பரபரப்பாகப் பார்த்தாள் வரலட்சுமி. ஆக்சிஜன் சிலிண்டரையும் ட்யூபையும் குழியிலிருந்து நகர்த்தியிருந்தனர்.  புள்ள மூச்சுக்கு என்னா பண்ணுவான்..? பசியும் பயமுமாக துாங்கிக் கொண்டிருந்த மகள்களை தாண்டிக் கொண்டு ஓடினாள்.

எம்மவனுக்கு மூச்சுக்காத்து அனுப்ற மிசின் நவுந்துப் போயி கெடக்குதுங்கய்யா..” மிகுந்த பதட்டத்திலிருந்தாள்.

வேட்டுப்போட போறோம்.. அதான் நவுத்தி வச்சிருக்கு.. உக்காருங்கம்மா கூப்டுறேன்..“ என்றார் தீயணைப்புத் துறை அலுவலர் ஒருவர்.

வேட்டா.. வேட்டு என்னாத்துக்கு..?” பீதியோடுக் கேட்டாள்.

நல்லா கேட்டுக்கங்கம்மா.. ஒங்கப் பையன் சரிஞ்சு சரிஞ்சு 60 அடிக்கிட்டே நழுவிட்டான்.. 30 அடிக்குதான் பள்ளம் தோண்டியிருக்கு.. வெறும் பாறையா கெடக்கறதால வெடி போட்டதான் மேற்கொண்டு தோண்ட முடியும்.. புரியுதுங்களா.. எல்லா ஆளுங்களையும் நகர்ந்துக்கச் சொல்லீட்டோம்.. நீங்களும் போய் ஒக்காருங்க.. கூப்டுறோம்..” என்றார் பொறுமையாக.

வேட்டுச் சத்தத்துக்கு எம்மவன் பயந்துப் போவானேங்கய்யா..”

பையன் முகமெல்லாம் மண் மூடீப் போச்சும்மா.. அசைவெல்லாம் நின்னுப் போச்சு.. பள்ளம் வெட்டுனதுல மண் அதிர்ந்து சரிஞ்சுப் போனதால இன்னும் மூணு அடி உள்ளே எறங்கிட்டான்.. இதுக்கு மேல அவன வெளிய கொண்டாரனும்னா வெடி வச்சு பள்ளம் தோண்டி பாடிய எடுக்க வேண்டியதுதான்..“ சடாரென்று உண்மை வெளிப்பட்டதில் ஓங்கி அலறினாள் வரலட்சுமி.

யெய்யா.. நாங்க என்னா பாவம் பண்ணோம்.. கொலம் வௌங்க குடுத்தவரே வதமளிச்சுப் போட்டீங்களே.. யெய்யா.. எம்புள்ள கடசி கடசியா மொகங் காட்டாம போய் சேந்துட்டானே.. வச்சழுவ கூட நாதியத்து போயீட்டனே.. யெய்யா.. நா பெத்த மவனே.. இந்த பொம்பள சோறு தண்ணிப் போடாது தெரிஞ்சுட்டுதான் குளியில எறங்கீட்டியாயா..? தண்ணி வத்திப் போச்சுன்னு நம்பூரு சனமெல்லாம் டவுனுக்கு கௌம்பனப்பவே கௌம்பியிருக்க மாட்டனா..? போரு போட்டு தண்ணி வந்தா வெள்ளாம பண்ணி வூட்டோட கெடக்கலாமின்னு இருந்தனே.. யெய்யா.. என்ன வுட்டுட்டு போய் சேந்துட்டீயாய்யா.. யெய்யா…“ நின்றமனிக்கே உட்கார்ந்து மண்ணை கைகளால் பிறாண்டி எடுத்துக் கதறினாள் வரலட்சுமி.

யாரோ அவளை கைத்தாங்கலாக தூக்கி விட திமிறி நிமிர்ந்தாள்.

போதுமய்யா.. நீங்க நோண்டி நோண்டி எம்மவன எடுத்த லச்சணம்.. போதுமய்யா.. போனவன் போயீட்டான்.. ஒங்களுக்கு புண்ணியமாப் போவும்.. கௌம்புங்கய்யா..” கைகள் இரண்டையும் சேர்த்துக் கூப்பினாள்.

அந்தம்மாக்கு நிலமையச் சொல்லி புரிய வச்சு அழைச்சிட்டுப் போங்க..“ என்றார் ஒரு அதிகாரி.

என்னா நெலம.. எனக்கு புரியாத நெலம..? உங்களுக்குதான் புரியாம கெடக்கு எங்க நெலம.. வெவசாய நெலம் பளுதாயி போச்சே.. போரு போட்டுன்னாலும் தண்ணிய கொண்டாந்துடலாம்னு  ஆயிரங்கணக்கில கடன இளுத்து வுட்டுட்டு நிக்கற நெலம ஒங்களுக்கு இருக்காய்யா.. கட்டட வேலக்கு போயி கடன அழிக்கிறேன்னு போனவன் குடியில சாவறான்.. இருக்கற எடத்தையும் பள்ளம் தோண்டிப் பாழாக்கி போட்டுட்டு போயிடுவீய.. இன்னும் ரெண்டு பொட்டப்புள்ளங்க இருக்குதய்யா.. அதுங்கள வெசம் வச்சா சாவடிக்க..?” கதறலில் வார்த்தை தெளிவற்று ஒலித்தது.

   ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.