ஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ

cubs-jumping-over-water’கவலைப்பட வேண்டாம், இப்பகுதியில் பல சிங்கக் குடும்பங்கள் உள்ளன. எனவே, விரைவில் இன்னொரு சிங்கக் குடும்பத்தைக் காணலாம்’ என, ஜெர்ரி சொல்லி வாய்மூடும் முன்பு, வழியில் ஒரு சஃபாரி வண்டி நின்று கொண்டிருந்தது.. அதன் மேல் ஒரு நண்பர் நின்று கொண்டு, தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்தார்..  நாங்களும் அத்திசை நோக்கினோம்.. ‘அப்பா.. வேட்டை’ என்றான் அருண்.. தொலைவில், ஒரு மாடுமுக மான் தனியாக மேய்ந்து கொண்டிருக்க, கொஞ்ச தூரத்தில் மிஸஸ் சிங்கம் மெல்ல மெல்ல பதுங்கி வந்தது. அதை மொபைலில் வீடியோவாக எடுத்த கணம், புகைப்படமாக எடுக்க மறந்து விட்டேன்.
சிங்கம் மெல்ல மெல்ல பதுங்கி ஒவ்வொரு சிறு புதராக ஒளிந்து மாடுமுக மானின் அருகில் சென்றது. இது என்ன, ஒரு லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன் போல இருக்கிறதே என்றேன். அப்படி எல்லாம் இல்லை.. இரவிலும், அதிகாலையிலும் வேட்டை மிகச் சாதாரணம் என்றார் ஜெர்ரி.. சிங்கம் அருகே செல்லச் செல்ல, டி.20 மேட்சின் இறுதி ஓவர் மாதிரி டென்ஷனாக இருந்தது..  சிங்கம், திடீரென முடிவெடுத்துப் பாய்ந்தது – அதை உனர்ந்த கணத்தில் மாடுமுக மான் எடுத்தது ஓட்டம்.  சிங்கம் கொஞ்சம் தூரம் ஓட, மான்முக மாடு, பிய்த்துக் கொண்டு ஓடிவிட்டது. சிங்கம் நின்று திரும்பிவிட்டது.
‘அவ்வளதானா?’ என்றேன் ஏமாற்றத்துடன். ‘ஓடி எந்த விலங்கையும் சிங்கத்தினால் பிடிக்க முடியாது.. அதிக பட்சம், சிங்கம் 20-30 மீட்டர்தான் துரத்தும்.. அதற்குள் இரை சிக்க வில்லையெனில் விட்டுவிடும் என்றார்..  ‘ஐந்து முயற்சிகளில் ஒருமுறைதான் சிங்கம் ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.
‘கொஞ்சம் தொலைவில் இன்னொரு வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.. அங்கே போகலாம்’ என வண்டியைக் கிளப்பினார் ஜெர்ரி..  வழக்கம் போல சில சஃபாரி வாகனங்கள்.. அதில் தொலைநோக்கிகளுடன் சுற்றுலாப் பயணிகள்.. இங்கே மூன்று காட்டெருமைகள்.. அவற்றைச் சுற்றி நான்கு சிங்கங்கள்..  ஆடு புலி ஆட்டம் போல.. வேட்டையாடும் அந்த manoeuvres பார்ப்பது ஒரு தனி அனுபவம்.  நான்கு சிங்கங்களும், நான்கு திசைகளில் இருந்து எருமைகளை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றன.  காட்டெருமைகளோடு நேரில் மோதுவது சிங்கங்களுக்கும் அபாயம்.. கொம்புகளால் குடலை உருவி விடும்.  அவற்றின் அந்த manoeuvres ஒரு எருமையைத் தனியாக வரவழைக்கும் நோக்கம் கொண்டவை. தனியாக, ரொம்ப தூரம் அழைத்து வரவேண்டும். அப்போதுதான், அந்த எருமைக்கு மற்ற எருமைகள் உதவ முன்வர முடியாது.. வேட்டையும் வெற்றிகரமாக முடியும்.
‘முடிந்த வரை, சிங்கங்கள் மான்களைத் தான் வேட்டையாடும். அதுதான் மிகச் சுலபமானது. மான்கள் வடிவில் சிறியவை. சிங்கம் பிடித்ததும், பெரும்பாலும் அடங்கிவிடும். ஆனால், காட்டெருமை, சிங்கத்தை விட மிக எடை கூடியது. வலிமையானது. மேலும், ஒரு எருமையை வேட்டையாட குறைந்தது மூன்று சிங்கங்கள் தேவைப்படும்.
கிட்டத்தட்ட ஒரு முக்கால் மணிநேரம் இந்த வேட்டை manoeuvres நடந்து கொண்டே இருந்தது.. எருமைகள் தம் ஒற்றுமையை விடுவதாக இல்லை.. ஒருமுறை,ஒரு எருமை மட்டும் கொஞ்சம் தனியே வந்தது.. ‘அதுதான் இன்றைக்கு மாட்டும்’ என்றார் ஜெர்ரி.. ஆனால், அவர் கணக்கும் தவறானது. முக்கால் மணி நேர முடிவில், பக்கத்தில் இருந்து இன்னொரு எருமை வந்து சேர்ந்து கொள்ள, மேட்ச் ட்ராவில் முடிவடைந்தது.. சிங்கங்கள் பின் வாங்கின.
சிங்கம் என்னும் பெயருக்குப் பின்னால், கம்பீரமும், பயமும், வேட்டையும் மரணமும் இணைந்திருக்கிறது. ஆனால், உண்மையில் சிங்கம் என்னும் பெரும்பூனையின் வாழ்வு மிகச் சிக்கலானது.  அவை தமக்கு எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன. அதற்குள்ளாகவே, ஆண் சிங்கங்களுக்கு தந்தைமை உரிமைகள் பற்றிய தகராறுகளில், குட்டிகள் கொல்லப்படுகின்றன. பாதி சிங்கக் குட்டிகள் இரண்டாண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை.  இதையெல்லாம்  தாண்டி, தனது எல்லைக்குள் விலங்குகள் சிக்காமல், பசியில் மரிக்கும் சிங்கங்களுமுண்டு.
அப்படியானால், சிங்கம் என்னும் விலங்குக்கு ஏன் மனிதருள் இவ்வளவு மதிப்பு? 10000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனுக்கு அடுத்தபடியாக  அதிகமாக பூமியில் வாழ்ந்த பாலூட்டி சிங்கம் தான் என்கிறார் விக்கியாழ்வார்.  மனிதனுக்கும் சிங்கத்துக்கும் ஆன வாழ்க்கைப் போரில், சிங்கத் தொகை மிகக் குறைந்து போனது. இன்று உலகின் அழிகின்ற விலங்குகளின் பட்டியலில் சிங்கமும் ஒன்று.  ஸெரெங்கெட்டியில் கிட்டத் தட்ட 3000 சிங்கங்கள் இருக்கின்றன என ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.
ஒருவேள சோத்துக்கு இப்படி சிங்கம் படாத பாடு படவேண்டியிருக்கே என யோசிக்கையில், சிங்கம் ஒரு பாவப்பட்ட ஜென்மமாகத் தோன்றியது.. என்ன.. ஆண்டவன், யேசுதாஸூக்குக் கொடுத்தது போல அற்புதமான குரலைக் கொடுத்திருக்கிறான்.  அவ்வளவுதான் எனப் பெருமுச்சு விட்டுக் கொண்டே கிளம்பினோம்
அடுத்து அருகில் உள்ள ஒரு குளக்கரையில் அமைந்திருந்த கழிவறையில் நிறுத்தினார்.. வழக்கம் போல சுத்தமான கழிவறை.. குளத்தில், நீர்யானைகள் சில ஜலக்ரீடை செய்துக் கொண்டிருந்தன.
அல்பசங்கையை முடித்து விட்டு, கிளம்பினோம். இப்போது கிட்டத்தட்ட ங்கொரொங்கோரொவின் முக்கால் வட்டம் சுற்றிவிட்டோம்.  சில கழுதைப் புலிகள் இறந்து போன ஒரு குட்டிமானைத் தூக்கிக் கொண்டு சாலையைக் கடந்தன.
சற்று தொலைவில், ஒரு ஆனைக்கொம்பன் தனியே மேய்ந்து கொண்டிருந்தது.. பிண்ணனியில், மாடுமுக மான்கள்..
வழி மீண்டும், நாங்கள் முதலில் பார்த்த சிங்கக் குடும்பத்தின் வீடு வழியே சென்றது.. தலைவரும் தலைவியும் இன்னும் வெயில் காய்ந்து கொண்டிருந்தார்கள்.. ‘இவை இரவில் வேட்டையாடியிருக்கக் கூடும்’ என்றார் ஜெர்ரி.. தலைவர் போன முறை தெற்கே தலை வைத்துப் படுத்திருந்தார்.. இப்போது வடக்கே..
விடை பெற்றுக் கொண்டு, தளத்தில் இருந்து மேடேறினோம்.

elephant-buffalo

 

விடை பெறல்..

வண்டி ங்கொரொங்கோரோ வாயிலைக் கடந்து, நெடுஞ்சாலையில், கிளிமஞ்சாரோ விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டது.. இதுபோன்ற கொண்டாட்டங்களின் முடிவில் வரும் சிறு மன வருத்தம் துவங்கியது..  மனம் கடந்த 6 நாட்களின் நிகழ்வுகளையும், அதன் அனுபவங்களையும் தொகுத்துக் கொள்ளத் துவங்கியது.. தனிப்பட்ட அக அனுபவமாக, எனது பயணங்கள் துவங்கும் முன்னான நேரமும், பயணம் முடிந்து வீடு வரும் நேரமும், மிக முக்கியமான நேரமாக இருக்கிறது. அந்நேரத்திய பகற் கற்பனைகள் தரும் அனுபவங்கள் தனி. புளிய மரத்தின் கதையில் சுந்தரராமசாமி, ஜவுளிக்கடை ஐயரின் கனவாக ஒரு அற்புதமான அத்தியாயம் எழுதியிருக்கிறார்.
இந்தியாவின் நான்கில் ஒரு பகுதி நிலப்பரப்பைக் கொண்ட தான்ஸானியாவின் மக்கட் தொகை 5 கோடி மட்டுமே. இதில் 6 சதம் தேசியப் பூங்காக்களும், 35 சதம் வனப்பரப்பாகவும் இருக்கிறது. மொத்த மின் உற்பத்தித் திறன் 3000 மெகாவாட் (தமிழகத்தின் தேவை 13000 மெகாவாட்). பற்பல பொருளாதார அளவுகளில், தான்ஸானியா மிகவும் பின் தங்கிய நாடுகளில் ஒன்று. பத்தடியில் நிலத்தடி நீர் கிடைத்தும், நவீன வேளாண்மை இன்னும் மும்முரமாக நடைபெறாத நாடு.  மக்கள் நல கட்டமைப்புகளான மருத்துவ நிலையங்கள் / பொருள் விநியோக நிறுவனங்கள் என எதுவும் இல்லை. 90 சதம் கிராமங்களில் மின் வசதி இல்லை. ஆனால், பட்டினிச் சாவுகள் என ஒன்று இல்லாத இடம்.
தான்ஸானியா தற்போது, மிக வேகமாக மற்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதார மாதிரிகளை மிக வேகமாக நகலெடுத்து வருகிறது.. அகலமான சாலைகள், பெரும் துறைமுகங்கள், ஏற்றுமதிப்  பொருளாதார மண்டலங்கள் என.  இந்தப் பொருளாதார நெடுஞ்சாலையில் பயணிக்கும் பல மில்லியன் உயிரினங்களில் நானும் ஒருவன் தான்.. எனினும், அதுதான் முன்னேற்றமா? என்னும் கேள்வி தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. கண் முன்னே காவிரி, திருப்பூரின் ஈரோட்டின் ஜவுளித் தொழிலின் கழிவு நீர்க் கால்வாயாக மாறிய நிகழ்வு, உலகின் இரண்டு பெரும் ஏரிகளான தாங்கினிக்காவிலும், விக்டோரியாவிலும் நிகழ இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்?
இந்தியாவில் இருந்து தான்ஸானியா வரும் வழியில், துபாயில் விமானம் மாறி டார் எஸ் ஸலாமுக்கு கிளம்புகையில், தென்படும் துபாயின் பெரும் கோபுரமான புர்ஜ் காலிஃபா.. அதன் உயரத்தில் எத்தனை மலையாளிகளின் வியர்வை இருக்கும்.. கொச்சியில் விமான வழியாக இறங்கும் போதுதான் தெரியும், அது உண்மையில் கடவுளின் தேசமென்று.. அதை விட்டு, ஒரு பாலைவனத்துக்கு லட்சக்கணக்கான மக்களைச் செலுத்தியது எது?  தளவாய்ப்பேட்டை கருப்புசாமி கோவில் தோட்டத்தில், சாலையோர வரப்பில் எருமை மேய்த்துக் கோண்டிருந்த காலங்களில், சாலைகளில் விரைந்து செல்லும் வாகனங்கள் பெரும் கனவாய் இருக்கும்.. படித்து பெரிய ஆளாகி அதுபோல கார்களில் செல்வது என் அம்மையால் எனக்களிக்கப்பட்ட கனவு.. இன்று அச்சாலையில் ஓடும் வாகனங்களில் ஒன்றில் அமர்ந்து கொண்டு, வரப்பில் மேயும் எருமைகளைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி என்னும் திரைப்பாடல் நினைவுக்கு வந்தது..
கிளிமஞ்சாரோ விமான நிலையம் வரும் வரை, அதிகம் பேச வில்லை.. அனைவரும் வாகனத்தில் சிறு துயில் கொண்டார்கள்.. விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி, எங்கள் பயணப்பைகளை இறக்க உதவி செய்தார் ஜெர்ரி..பயண வண்டிகளை எடுத்து, அதில் பைகளை அடுக்கினோம். ஜெர்ரியின் சேவைக்கான ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தோம்.. “நன்றி மிஸஸ் அண்ட் மிஸ்டர் பாலா.. கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்.. ஸஃபாரி ஞ்ஜேமா (பயணம் சிறக்கட்டும்)” எனச் சொல்லி விடை பெற்றார்..  முன்னூறு மைல்களுக்கு அப்பால், மான்கள் மேய்ந்து கொண்டிருக்கும்.. சிங்கங்கள் அவற்றைப் பிடிக்கத் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும்.. ஓநாய்களும் சிறுத்தைகளும் சிவிங்கிகளும், யானைகளும் என ஒரு உலகம் அதிகம் தெரியப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கும்.. இனி ஒருமுறை ஜெர்ரியை வாழ்வில் சந்திக்கப் போவதில்லை..
வணக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.