பத்திரிகையாளருக்கு அழகு என்பது நேரடியாகக் களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து உரையாடி, இரு பக்கமும் சென்று, தன் சொந்தக் கண்ணால் கண்டதை தத்ரூபமாக விவரிப்பது. ஆனால், வருங்காலத்தில் அதற்கு தேவை இராது. உங்கள் கண்ணில் ஒரு கருவியை அணிந்துகொண்டால், எங்கே போக வேண்டுமோ, அங்கே போகலாம். எவருடன் பேச வேண்டுமோ அவருடன் உரையாடலாம். எவருடன் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், அவர்களின் பிரதேசத்தில், அவர்கள் உலா வரும் இடங்களில் விமானப் பயணமின்றி, சோபாவில் அமர்ந்தபடியே சென்று வரலாம்.
இதற்கு செயற்கை நுண்ணறிவு, எந்திர தற்கற்றல், தோற்ற மெய்மை, பொறிப் பியாசம், நரம்பு இயங்கியல், முப்பரிமாண ஒளிப்படவியல், புலப்பாட்டுக் கொள்கை என பல தொழில் நுட்பங்களையும் அறிவியல் துறைகளின் தற்கால கண்டுபிடிப்புகளையும் இதழியலில் நுழைக்கிறார்கள். விளையாட்டு போல் அனுபவிக்கலாம். போரில் துப்பாக்கிச் சூடுபட்டு செத்தாலும், மறுபடி முதலில் இருந்து பார்க்கத் துவங்கலாம். குண்டடிபட்டாலும் உடனடியாக குணமாகி உலகத்தின் சிக்கல்களை அங்கிருப்பவர்கள் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். ஆப்கானிஸ்தான், காங்கோ, தெற்கு சூடான், பர்மா (மியான்மர்), எல் சால்வடோர், காஷ்மிர், கொரியா என சகல இடங்களுக்கும் உங்களை எம்.ஐ.டி பல்கலை துணையுடன் கரீம் பென் கெலிஃபா (Karim Ben Khelifa) அழைக்கிறார்.
மேற்கத்திய உலகிற்கு பிரச்சினை பூமிகளை அறிமுகம் செய்து பணம் பண்ணுவது ஒரு குறிக்கோள் என்றால், அதே நிரலியை பரம்பரை பரம்பரையாக எதிராளியாக விதைக்கப்பட்டவர்களுக்குப் போட்டுக் காட்டி பகையுணர்வை நீக்குவதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இஸ்ரேலியக் குழந்தைக்கு பாலஸ்தீனத்தைக் காட்டுவது; காஷ்மீர் பாலகர்களை அவர்களின் சகோதர நாட்டிற்கு அழைத்துச் செல்வது; வட கொரியர்களின் வேற்றுமையுணர்வை நீக்க, அவர்களை தென் கொரியாவின் சூழலுக்கு இட்டுச் செல்வது போன்றவை மட்டுமே தன்னுடைய மெய்நிகர் உலகம் உருவாக்குவதற்கான லட்சியம் என்கிறார்: