ஒருமை

onness
 
ஒருமைப்பாடு என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். சொல் ஒருமைப்பாடாகவும், செயல் தனிமைப்பாடாகவும் இருக்கிறது. ஒருமை என்றாலே போதும். union, unity எனும் பொருள் வந்துவிடும். வார்த்தைதான் வார்த்தைப் பாடு. கடமைதான் கடப்பாடு, பண்புதான் பண்பாடு, மேன்மைதான் மேம்மாடு. ஒருமைதான் ஒருமைப்பாடு.
தேசீய ஒருமைப்பாட்டைக் கட்டிச் செறிவாக்க என்றே, நடுவண் அரசு சில நவீன கல்விக் கொள்கைகளை, மாநிலத்துக்கு ஒரு கொள்கை என மறு சீரமிப்புச் செய்து, தேசத்தைப் பன்மைப்பாடு செய்யும் சிதைப்பாட்டுக்கு முயன்று வருகிறது. விதி வலியது. பிடர் பிடித்து உந்த நின்றது.
ஒருமை என்றால் ஒன்று என்றும் பொருள். ஒற்றுமை என்றும் பொருள். கம்பனின் இராமகாதையின் யுத்த காண்டத்தின் கடவுள் வாழ்த்துச் செய்யுள், அறுசீர் ஆசிரிய விருத்தத்தில், கடவுளையே ஒன்று என்று அருமையாகப் பேசுகிறது

ஒன்றே என்னின், ஒன்றே ஆம்;
பல என்று உரைக்கின், பலவே ஆம்;
அன்றே என்னின், அன்றே ஆம்;
ஆமே என்னின், ஆமே ஆம்;
இன்றே என்னின், இன்றே ஆம்;
உளது என்று உரைக்கின் , உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

மிக அருமையான பாடல், ஆனால் எளிமையான பாட்ல். ஒன்று என்று கூறினால் ஒன்றே ஆகும். பல என்று உரைத்தால் பலவே ஆகும். இத்தன்மை உடையது அல்ல என்று கூறினால் அவ்வாறே ஆகும். இத்தன்மை உடையது என்று கூறினால், அந்தத் தன்மை உடையதாக இருக்கும். இல்லை என்று சொன்னால் இல்லாதது ஆகும். உளது என்று கூறினால் உள்ளதே ஆகும். இறைவனது நிலை இப்படிப் பெரிதாயுள்ளது. சிற்றரிவினராகிய நாம் இறை நிலையை அறிந்து உயர்வு பெறும் வழி யாது? அம்மா!
இன்மையில் இருந்து எல்லாம் தொடங்கிற்று என்பார்கள்.ஒன்றிலிருந்து யாவும் தொடங்கின என்று சொல்வாரும் உண்டு. ஒன்று என்றால் தொடக்கம் என்பது போல, ஒன்றா எனில் அழிந்து போகிற என்றும் பொருள் உண்டு.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்.

என்பது புகழ் அதிகாரத்துக் குறள். அனைத்தும் அழிந்து போகிற உலகத்தில், புகழ் ஒன்றுதான் அழிந்து போகாமல் நிற்பது என்பது பொருள். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பாடினான், ‘புகழ் எனில் உயிரும் கொடுக்குவர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்று. புகழ் என்றால் உயிர் கொடுத்தும் பெறுவார்கள். பழி என்றால் உலகமே கிடைத்தாலும் கொள்ள மாட்டார்கள். இன்று நம் தலைவர்களோ, புகழ் எனில் மயிரும் கொடுக்கிலர். பணம் எனில் எத்தனை பழி வந்தாலும் மறுக்கிலர்.
ஒன்றுதல் என்றால் ஒன்று சேர்தல், ஒன்றாக ஆதல். ஒன்றல் என்றாலும் அஃதே. ஆனால் ஒன்றலர் என்பதற்குப் பகைவர் என்று பொருள் சொல்கிறது பிங்கல நிகண்டு. அதாவது ஒன்ற மாட்டாதவர் என்பது பொருள். உட்பகை அதிகாரத்துக் குறள் பேசுகிறது:

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.

என்று. ஒன்றியார் கண் ஒன்றாமை படின், எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது என்று கொண்டு கூட்டி வாசிக்கலாம். நெருங்கிய நண்பரிடையே உட்பகை தோன்றினால், எக்காலத்தும் வீழ்ச்சியைக் கூடாதிருத்தல் அரிது என்பதாகும். ஒன்றார் என்றாலும் ஒன்றலர், பகைவர் என்பதே பொருள்.
ஒன்று எனில் ஒன்றுதல், unify. ஒன்றா எனில் ஒன்றாமற் போதல், diversity. unity in Diversity என்பார்கள். ஆனால் இன்று Diversify the unity என்ற அடிப்படையில் அரசியல் காரியங்கள் நடக்கின்றன. unity என்ற கோஷம் இருந்த போதே, இங்கு unity-யின் கூறுகள் அருமைப்பாட்டுடன் இருந்தன; ஒருமைப்பாட்டுக்குப் பதிலாக. நான் சொல்வதை நீ கேட்பதுதான் ஒருமைப்பாடு என்று கருதுகிறார்கள் போலும். அது எப்படி என்று கேட்டால், அது தேசத்துரோகமாகிவிடும்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்று நன்றுள்ளக் கெடும்

என்பது செய்ந்நன்றியறிதல் அதிகாரத்துக் குறள். கொல்வது போன்ற கொடுமை ஒருவர் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை எண்ணக் கொடுமை மறந்து போகும் என்பது பொருள். நன்று என்று எதையுமே செய்யாமல், கொல்வது போன்ற தீமை செய்ய முனைந்தால் என்ன வாகும்? மாற்றாகக் கொடுமையே செய்யத் தோன்றும். அதே திருக்குறள் தான் வேறொன்றும் சொல்கிறது

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகாது ஆகி விடும்

என்று. ஒருவரது பேச்சில், ஒரே ஒரு தீச்சொல் இருந்தால் போதும், அவனது பேச்சின் நயமும் நலனும் பாழாய்ப் போகும் என்று. அதாவது ஒரு குடம் பாலில் ஒரு துளி விடம்.
ஒரு, ஒன்று, ஒருமை என்பனவற்றை நாம் one எனும் பொருளிலேயே இங்கு காண்கிறோம். அதிகப் பிரசங்கி ஒருவர், கவி காளமேகம் புலவரிடம், அடை சொல் இல்லாமல் , ஒன்று முதல் பதினெட்டு வரையில், ஒரு வெண்பாவில் அடக்கிப் பாட முடியுமா என்று கேட்டாராம். அதற்கு, காளமேகத்தின் பதில்:

ஒன்றிரண்டு மூன்று நான் கைந்தாழே ழெட்டொன்
பதுபத்து பதினொன்று பன்னிரண் – டே பதின்
மூன்றுபதி நான்குபதி நைந்துபதி னாறு
பதினேழு பதினெட் டு

எனும் வெண்பா. இலக்கணம் அறிந்தவனுக்கு எல்லாம் எளிது.
ஒன்றை ஏகம் என்கிறது வடமொழி. ஏக் என்பர் இந்தியில். ஏக்நாத் என்பது ஒரு பெயர் எனினும் அது இறைவன் பெயர். மாணிக்க வாசகரின் திருவாசகத்தின் முதற்பகுதி, சிவபுராணம். கலிவெண்பா எனும் பாவினம். அதன் ஐந்தாவது வரி, ‘ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க’ என்பது. முழு முதற் கடவுள் ஒன்றே என்பதால், ஏகன். எண்ணிறந்த அருள் கோலங்கள் கொண்டவன் என்பதால் அநேகன். இப்போது முதலில் நாம் எடுத்தாண்ட கம்பன் பாடலை நினைவு கரலாம்.
ஏகம் என்றால் ஒன்று. அநேகம் என்றால் பல. திருஉந்தியாரில் மாணிக்கவாசகர்,

ஏகனுமாகி அநேகனும் ஆனவன்
நாதனும் ஆனான் என்று உந்தீ பற
நம்மையே ஆண்டான் என்று உந்தீ பற

என்கிறார். ஒளவையார் வேடத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடல் ஒன்றுண்டு.

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்

என்று திருத்தெள்ளேணம் பகுதியில், மாணிக்கவாசகர்,

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

என்கிறார். திருச்சதகத்தில்,

ஒருவனே போற்றி ஒப்பில்
அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள்
கோமளக் கொழுந்து போற்றி
வருகவென்று என்னை நின்பால்
வாங்கிட வேண்டும் போற்றி
தருக நின் பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்த்தே

என்று பாடுகிறார் குழைந்து.
ஒற்றை என்றாலும் ஒன்றுதான். ஒற்றை, இரட்டை, முச்சை என்பார்கள். திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி, திருக்கண்ணபுரம் பாடல்:

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்
ஒருபால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர்
விண்பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானை
செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ணபுரத்து
அடியேன் கண்டு கொண்டேனே.

என்று பேசுகிறது. ஒற்றைக் குழையும் என்றால் ஒரு காதில் குண்டலமும் என்றும் நாஞ்சிலும் என்றால் தோளில் கலப்பை எனும் ஆயுதமும் கொண்ட பரசுராமனைக் குறிக்கிறது. அல்லால் திருமங்கை ஆழ்வார் இக்கட்டுரை ஆசிரியனை முன்பே பாடினார் என்பதல்ல.
சைவக்குரவர்களில் ஒன்று என்றும் முழு முதற் கடவுள் என்றும் பிறப்பும் இறப்பும் இல்லாப் பெற்றியன் என்றும் சிவனைச் சொன்னார்கள். வைணவ அடியார்கள் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி என்றும் முழு முதற் காரணன் என்றும் கருவாரணம் என்றும் கருமுகில் என்றும் கருமாணிக்கம் என்றும் கரியமாலைச் சொன்னார்கள். பாமரர்கள், அரியும் சிவனும் ஒன்று, அதை அறியாதவன் வாயில் மண்ணு என்றார்கள். நாமோ உலகத்துச் சமயங்கள் பேசும் எல்லா இறைவனும் ஒன்றே என்று நம்புகிறோம். அந்தந்த சமயத்தார் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
மாணிக்கவாசகர் சிவனை ஏகன் என்றார். நம்மாழ்வார் அவர் வழியில் அதனை வழிமொழிந்து நாராயணனை ஒன்று என்கிறார்.

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை அறுத்து
நன்றென நலஞ் செய்வ தவனிடை நம்முடை நாளே!

என்கிறார் நம்மாழ்வார். பாடலுக்குப் பொருள் எழுத வேண்டாம். பாடலைச் சீர் பிரித்து எழுதினால் போதுமானது.

ஒன்று என பல என அறிவ (து) அரும் வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் எனும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வ (து) அவனிடை நம்முடை நாளே!

ஒன்றுதம் பற்றி முன்பே பார்த்தோம். பசை எனில் பாசம்
உத்தரவிடுவது போல, நம்மாழ்வார், பெரிய திருவந்தாதியில் ஒரு பாடல் சொல்கிறார்.

ஒன்று உண்டு செங்கண் மால், யானுரைப்பது! உன்னடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ! – நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ? நீ அவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்?

என்கிறார். ‘உனக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு செங்கண் மாலே! உன் அடியார்க்கு என்ன நன்மை செய்ய முடியும் என்றே யோசித்து இருப்பாய் நீ! உன் புகழில் வாழும் சிந்தனை அவர்களுடையது. அதைவிட இனிமையானதோ நீ அவர்க்கு அருளும் வைகுந்தம் எனும் சிறப்பு!’
ஒன்றி இருத்தல் என்பது ஒருமனப்பட்டு இருத்தல். ஒரு மனப்பாடு தானே, ஒருமைப்பாடு? அப்பர் தேவாரம் ஒன்று:

ஒன்றி இருந்து நினைமின்கள்!
உந்தமக்கு ஊனம் இல்லை;
கன்றிய காலனைக் காலால்
கடிந்தான், அடியவற்காச்
சென்று தொழிமின்கள்! தில்லையுள்
சிற்றம்பலத்து நட்டம்
‘என்று வந்தாய்’ என்னும் எம்பரு
மான்தன் திருக்குறிப்பே!

கன்றிய- கடிந்த, காலன் – எமன், கடிந்தான் – அடக்கினான், அடியவன் – மார்க்கண்டேயன், நட்டம் – நடம். பாடலின் சிறப்பு, அப்பருக்குத் தோன்றுகிறது, தில்லைக்கூத்தனது தோற்றம், ‘அப்பா, எப்பொழுது வந்தாய்?’ என்று தன்னைக் கேட்பது போல. கூத்தன் முகபாவமும், கையின் திருக்குறிப்பும் வினவுவது போல!
இனிமேல், ஒரு, ஒன்று, ஒருமை, ஏகம் தொடர்பான சில சொற்களைக் காணலாம்.
ஒரு – ஒன்று, அழிஞ்சில் செடி, ஆடு
ஒருக்க – ஒருமுறை, எப்போதும், ஒவ்வொன்றுக்கும். மலையாளத்திலும் நாஞ்சில் மொழியிலும் இன்றும் வாழும் சொல். ‘ஒருக்க வந்திட்டுப்போ’, ‘ஒருக்கக் கூட கேட்டுப் பாரு’. பரிபாடலில், வையைப் பகுதி பேசுகிறது:
‘காமர் பெருக்கு அன்றோ, வையை வரவு?
ஆம், ஆம், அது ஒக்கும்; காதல் அம் காமம்
ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ?’
காமப் பெருக்கும் வையைப் பெருக்குப் போன்றதே!
சிலரிடம் அன்பு சுருங்குவதும் பெருகுவதும் ஒத்தது.
வையையின் நீர் குறைவது பெருகுவது போன்று காமப்பெருக்கும் அமையும். எப்போதும் ஒரு தன்மையில் நிற்குமா?
ஒருக்கடுத்தல் – சமமாக, இணைத்தல். To make no distinction.
ஒருக்கணித்தல் – ஒரு பக்கமாகச் சாய்தல்.
ஒருக்கணிப்பு – ஒரு பக்கமாகச் சாய்கை.
ஒருக்கம் – மன ஒடுக்கம்.
ஒருக்கல் – ஒரு அபசுரம்
ஒருக்களித்தல் – ஒருக்கணித்தல்
ஒருக்கால் – ஒரு கால், ஒரு வேளை, ஒரு முறை.
‘நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும்
தோன்றும் முருகா என்றோதுவார் முன்’ என்பது பாடம்.
ஒருக்கிடை – கிடந்த கிடை. ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தல், ஒருகின
ஒருக்குதல் – ஒன்று சேர்த்தல்.
ஒரு கட்படுவாய் – பறை வகை,ஒரு கட் பறை
ஒரு கண்ட சீராய் – ஒரே விதமாய்
ஒரு கண்ணுக்கு உறங்குதல் – சிறிது உறங்குதல். To take a short nap.
ஒரு கணக்கு – ஒரே விதம். மூன்று வருட தூரதேச வணிகம்.
ஒரு காலில் நிற்றல் – ஒற்றைக் காலில் நிற்றல். உறுதியாக இருத்தல்.
ஒரு காலும் – எந்தக் காலத்திலும்.
ஒரு காலே – ஒரே முறையில்
ஒரு குலைக்காய் – Fruit of the same bunch.
ஒரு குலத்தில் உதித்தவர்.
ஒரு குழையவன் – ஒரு காதில் மட்டும் குழை அணிந்தவன்
ஒரு குறி – ஒரு முறை. Once.
ஒரு கூட்டு – ஒரு சேர்க்கை.
ஒரு கை – ஒரு கூட்டு. ஒரு பக்கம்
‘அவங்க ரெண்டு பேரும் ஒத்தைக் கையில்லா!’
ஒரு கை பரிமாறுதல் – பந்தியில் ஒரு பக்கமாகப் பரிமாறுதல்.
ஒரு கை பார்த்தல் – வெல்ல முயலுதல். ‘நீயா, நானா? ஒரு கை பாத்திடுவோம்!’
ஒரு கையாயிருத்தல் – ஒற்றைக் கட்டாக நிற்றல்
ஒரு கை விளையாடுதல் – எல்லோர்க்கும் ஒரு சுற்று வரும்படி விளையாடுதல்.
ஒரு கோலுடையார் – ஏக தண்டி சந்நியாசிகள்.
ஒருங்கவிடுதல் – பலவற்றையும் ஒன்றி சேர்த்தல்.
ஒருங்கியலணி – புணர் நிலை அணி. அணி அலங்காரங்களில் ஒன்று.
ஒருங்குதல் – ஒன்று கூடுதல்.
ஒருங்கு – முழுதும், அடக்கம்
ஒருங்கே – முழுதும்
ஒருச்சரித்தல் – ஒரு பக்கமாகச் சாய்ந்தல்.
‘கதவை ஒருச்சரித்து வை’ – வழக்கு
ஒருச்சாய்த்தல் – ஒரு பக்கமாகச் சாய்த்தல்.
ஒருச்சாய்வு – One sided. ஒரு பக்கமாகச் சாய்ந்து
ஒரு சந்தி – ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் உண்ணும் நோன்பு.
ஒருசாய்வு – ஒருமித்து, இடைவிடாமல்.
ஒரு சாயல் –  உருவம் ஒப்பாக இருத்தல்
ஒருசார் – ஒரு கட்சி. பட்ச பாதம். ஒரு சார்பு
ஒரு சாராசிரியர் – ஒரு கொள்கை உடைய ஆசிரியர்கள்.
ஒருசாரார் – ஒரு பக்கத்தவர். சிலர்.
ஒரு சால் உழுதல் – ஒரு முறை உழுதல்.
ஒரு சாலை மாணக்கர் – ஒரு பள்ளியில் படித்த மாணாக்கர்.
school mates
ஒரு சிம்புப் புகையிலை – புகையிலை நறுக்கு
ஒரு சிறிது – அற்பம்
ஒரு சிறை – ஒரு பக்கம். வேறிடம். ஒரு பகுதி.
ஒரு சிறை நிலை – சொல்லப்பட்ட பொருள் ஒரு வழி நிற்க, பாடல் அமைந்துள்ள முறை.
ஒரு சீரானவன் – ஒரே தன்மையாக இருப்பவன்
ஒரு சேர – ஒரு மிக்க
ஒரு சொல் – உறுதிச் சொல்.  ‘தோழமை என்றவன் சொன்ன சொல் ஒரு சொல் அன்றோ’ கம்பன். குகன் கூற்றாக.
ஒரு சொல் வாசகன் – சொல் பிறழாதவன்
ஒரு சொல் விழுக்காடு – யாதொரு பொருளும் இன்றி வாக்கியத்துக் கிடையில் வழங்கும் சொல்.
ஒரு சொல் பல் பொருள் – ஒரு பதத்திற்கு உரிய பல பொருள்கள்
ஒரு சொல் நீர்மை – சொற்கள் இணைந்து ஒரு பொருளே ஆகும் தன்மை
ஒரு ஞார் – ஒரு அளவுப் பெயர்
ஒருத்தல் – சில விலங்குகளின் ஆண் பெயர்
புல்வாய்,புலி,உழை,மரை,கவரி,கராம்,யானை,பன்றி,எருமைஎனும்        விலங்குகளின்ஆணினத்தைக்குறிக்கும் சோல்
ஒருத்தலை – ஒருதலை, ஒருபக்கம்
ஒருத்தலை நோவு – ஒருத்தலைவலி
ஒருத்தலையிடி – ஒருத்தலைவலி
ஒருத்தலைவலி – ஒரு பக்கமான தலைவலி, ஒற்றைத் தலைவலி
ஒருத்தன் – ஒருவன், ஒப்பற்றவன்
‘நிருத்தனே,நிமலா,நீற்றனே,நெற்றிக்கண்ணனே,விண்ணுளோர்பிரானே,ஒருத்தனே,உன்னை  ஓலமிட்டுஅலறிஉலகெலாம்தேடியும்காணேன்’- திருவாசகம், அருட்பத்து
ஒருத்தி – ஒரு பெண்
‘ஒருத்திமகனாய்ப்பிறந்து,ஓரிரவில்
ஒருத்திமகனாய்ஒளித்துவளர’   ஆண்டாள் திருப்பாவை
ஒருத்து – மன ஒருமைப்பாடு
ஒரு தந்தன் – ஏக தந்தன், ஒற்றைக் கொம்பன், விநாயகன்
ஒரு தரம் – ஒரு தடவை, ஒரே விதம், once
ஒரு தலை – ஒரு சார்பு, ஒரு தலைக் காமம், நிச்சயம்
‘ஒருதலையான் இன்னாது காமம் காப்போல
இருதலையானும்இனிது’– திருக்குறள்
ஒரு பக்கக் காமம் அல்லது காதல் கொடியது. காவடி இருபக்கமும் சுமை இருப்பது போல இருபக்கமும் நேசம் நிறைந்திருப்பது இனிது. கா – காவடி
ஒரு தலைக் காமம் – கைக்கிளை
ஒரு தலை துணிதல் – 32 உத்திகளில் ஒன்று.
ஒன்றுக்கொன்று மாறுபாடான இருகொள்கைகளில் ஒன்றை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் உத்தி
ஒரு தலை நியாயம் – ஒரு தலை வழக்கு
ஒரு தலைப் படுதல் – ஒரு முடிவு பெறுதல்
ஒரு தலை உன்னுதல் – பத்து காம அவஸ்தைகளில் ஒன்று.
A mood in love. Constant thought of the lover.
ஒரு தலை வழக்கு – பட்ச பாதமான தீர்ப்பு
ஒரு தன்மை – ஒரே விதம், ஒப்பற்ற தன்மை, மாறாத் தன்மை.
ஒரு தனி – ஒப்பில்லாத தனி. தன்னந்தனி
ஒரு தாரை – ஒரு ரீதி, One form, one method
ஒருபக்கக்கூர்மை. ஒருதாரைக்கத்தி. இடையில்லாதநீரோழுக்கு
ஒரு திறம் பற்றுதல் – ஒரு தலைப் பட்சமாக இருத்தல்
ஒருது வலி – பண்டைய அளவுப் பெயர்
ஒரு நாயகம் – ஒரே ஆட்சி. தனி தாயகம்.
ஒரு நாளைக்கொரு நாள் – நாள் செல்லச்செல்ல
ஒரு நெல்லுப் பெரு வெள்ளை – ஒரு வகை நெல்
ஒரு நெறிப் படுதல் – ஒரு வழிப்படுதல்
ஒரு நேரம் – பாதிப் பகல். ‘இன்று பள்ளிக்கூடம் ஒரு நேரம்தான்’ Half a day
ஒருப்படுதல் – ஒரு தன்மையாதல், சம்மதித்தல், ஒரு நினைவாதல், துணிதல், முயலுதல், ஒன்று கூடுதல், தோன்றுதல்,
‘கூவினபூங்குயில்,கூவினகோழி.
குருகுகள் இயம்பின, இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி, ஒளிஉதயத்து
ஒருப்படுகின்றது ‘– திருவாசகம்,திருப்பள்ளிஎழுச்சி
ஒருப்படுத்துதல் – ஒன்று கூட்டுதல், வழி விடுதல், முடிவு செய்தல், சம்மதிக்கச் செய்தல்
ஒருப்பாடு – முயற்சி, சம்மதம், ஒரு தன்மையாதல், ஒன்றி நிற்றல், மனத்திண்மை.
ஒரு படம் – இடு திரை
ஒரு படி – ஒரு வகை, ஒரே விதம், ஒருவாறு
ஒரு படித்த தாய் – ஒரே விதமாய்
ஒரு பது – பத்து, அது போன்றே இருபது, முப்பது, நாற்பது முதலியன
ஒரு பஃது – பத்து
ஒரு பாட்டம் – கன மழையின் அளவைக் குறித்த சொல். Heavy downpour of rain
ஒரு பா ஒரு பஃது – அகவல், வெண்பா, கலித்துறை, என்பவற்றுள் ஏதேனும் ஒரு பாவில் பத்துப் பாடல்களால் அமைக்கப்பட்ட சிற்றிலக்கியம்
ஒரு பான் – ஒரு பது, பத்து, அதுபோன்றே இருபான், முப்பான், நாற்பான் என்பர்.
ஒரு பிடி – கைப்பிடி அளவு. உறுதி, விடாப் பற்று, பிடிவாதம். ‘ஒரு பிடி பிடிச்சான் சாப்பாட்டை’, ‘புடிச்சா ஒரே பிடி’
ஒரு புடை – ஏக தேசம். ஒரு பக்கம். புடை எனில் பக்கம். திருப்புடைமருதூர்
‘ஒருபுடைபாம்புகொளினும்ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் – திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்’
என்பதுநாலடியார். பதுமனார்உரைபேசுகிறது :
ஒருமருங்கு பாம்பு கொண்ட தாயினும் மற்றொரு மருங்கினால், அங்கண்மா ஞாலத்தை விளக்குறுத்து மதியம்போலச் செல்லாமையாக்கிய வறுமை செவ்வனே நின்றதாயினும், குடிப்பிறந்தார் ஒப்புரவிற்குத் தளரார் என்றவாறு.
ஒரு புடை உவமை – முற்றுவமை, முழுவதும் ஒப்பாகாமல், சில தன்மையில் மாத்திரம் ஒத்திருக்கும் உவமை
ஒரு புடை ஒப்புமை – ஒரு புடை உவமை
ஒரு பூ – ஒரு போகம்
ஒரு பொருட் கிளவி – பரியாயச் சொல். Synonym
ஒரு பொருட் பன்மொழி- ஒரே பொருளைத் தரும் பல சொற்கள்
மீமீசைச்சொல். Tautology
ஒரு பொருள் – கடவுள்
ஒரு பொழுது – ஒரு சாந்தி, ஒரு போது
ஒரு போக்கன் – வேறுபட்ட நடையுள்ளவன். Man whose behavior is of a singular
or peculiar nature
ஒரு போக்காய் போதல் – திரும்பி வராது போதல். ‘ஒரே போக்காய் போய்விட்டான்’
ஒரு போக்கு – ஒரு மாதிரி, ஒரே விதம், மாறான நடை.
‘அவனா?அவன்ஒருபோக்குல்லா? ‘
ஒரு போங்கு – ஒரு போக்கு
ஒரு போகி – ஏக விஷயம்.
The ever constant entity, that which remains same without variation, as time divested of all phenomena, like a day, night etc.
ஒரு போகு – ஒரு படித்தான நிலம். Land of the uniform character in level or soil.
ஒத்தாழிசைக் கலிப்பாவகையில் ஒன்று
ஒரு மட்டம் – ஒரு மட்டு, ஒத்த அளவு, ஒருவாறு, ‘காரியம் ஒரு மட்டுலே முடிஞ்சுது !’ ஒரு தரம். ‘ஒரேயொரு மட்டம் சொல்லு !’
ஒரு மடை செய்தல் – ஏகமனதாக்குதல்
ஒரு மனப் படுதல் – ஏகமனமாதல். மனதை ஒன்றிலே செலுத்துதல்.
ஒரு மனப் பாடு – மன இணக்கம். மன அடக்கம். மனத்தை ஒன்றில் செலுத்துதல்.
ஒரு மா – ஒரு பின்னம் – 1/20
ஒரு மாதிரி – ஒரு விதம். ‘அவன் ஒரு மாதிரி ஆள் !’
ஒரு மாரை – ஒரு மா + அரை. 1/20 + 1/40 = 3/40
ஒரு மித்தல் – ஒன்று சேர்தல். ‘காதலர் இருவர் கருத்தொருமித்து’
ஒரு மிக்க – ஒரு சேர
ஒரு மிடறாதல் – ஏக கண்டம் ஆதல். ஏக சிந்தை ஆதல்.
ஒரு மிடறு – ஒரு வாய்க்குள் அடங்கும்படி பருகும் அளவு.
மிடறு, ட்மடக்குஎன்றுமருவி,‘ஒருமடக்குத்தண்ணீர்குடி’ என்பார்கள். ஒருவாய்தண்ணீர்குடிஎன்றபொருளில்
ஒரு மிப்பு                    – ஒற்றுமை, Union, மனத்தை ஒன்றில் செலுத்துதல். நாஞ்சில் நாட்டில் இதே பொருளில் ‘சொருமிப்பு’ என்றொரு சொல் உண்டு.
ஒரு முகம் – நேர்வழி, ஒற்றுமை, ஒரு கட்சி.
ஒரு முகமாய்ப் பேசுதல் – ஏகோபித்துப் பேசுதல்
ஒரு முக எழினி – ஒரு வகைத் திரை. A kind of stage curtain.
ஒரு முற்றிரட்டை – செய்யுளில், ஓரடி முற்று எதுகையால் வருவது. ஒரு + முற்று + இரட்டை
ஒருமை – ஒன்று, ஒற்றுமை, தனிமை, ஒரே தன்மை, ஒப்பற்ற தன்மை.
‘ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டோழுகின் உண்டு’
பெருமை அதிகாரத்துத் திருக்குறள்.
ஏகவசனம். மனம்ஒன்றுதல். இறையுணர்வு.
ஆலோசனைமுடிவு. மோட்சம். மெய்ம்மை.
‘ஒருமையே மொழியும் நீரார்’– கம்பன்
அயோத்தியா காண்டம்,மந்திரப்படலம்.
ஒருபிறப்பு.
‘ஒருமைக்கண்  தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து’
கல்வி அதிகாரத்துத் திருக்குறள்.
ஒருமைப் படுதல் – ஒற்றுமைப் படுதல். மனம் ஒருமுகப் படுதல்.
ஒருமைப் பாடு – ஒற்றுமைப் படுதல்.
ஒருமை பன்மை மயக்கம்- Use of the Singular for the Plural or Vice versa.
ஒருமை மகளிர் – பிற ஆடவர் பால் செல்லாத மனமுடையவள்
ஒரு மொழி – அணை. தொடர் மொழி. பல சொற்களாகப் பிரிக்க முடியாத பதம்
ஒரு லாகை – ஒரு வகை
ஒரு வண்ணம் – ஒரு வாறு
ஒரு வந்தம் – நிச்சயம்
‘வெருவந்த செய்தோழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்!’  – திருக்குறள்
இரக்கமின்றித் தண்டிக்கும் கொடுங்கோல் அரசன், நிச்சயமாக விரைந்து வீழ்ச்சி அடைவான்.
நிலைபேறு,உறுதி.
‘ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடையார்’– திருக்குறள்
ஊக்கம் எனும் பண்பை நிலைபெறாகக் கொண்டவர்கள், எந்நாளும் தனதுஆக்கம் இழந்தோமே என்று புலம்பமாட்டார்கள்.
சம்பந்தம். தனியிடம்.
ஒரு வயிற்றோர் – சக உதரர். சகோதரர். ஒரு வயிற்றில் பிறந்தோர்.
ஒருவர் – ஒருவன் அல்லது ஒருத்தி. சிறப்புப் பன்மை.
ஒருவர்க்கொருவர் – பரஸ்பரம்
ஒரு வழித் தணத்தல்  – அலர் அடங்குற் பொருட்டு, தலைவன் சில நாள் வேறிடத்துச் சென்று உறையும் அகத்துறை. இந்த அகத்துறையின் பாடல் காண வேண்டுவோர், மாணிக்க வாசகரின் திருக்கோவையாரின் 15ஆம் பகுதி பார்க்கலாம்.
ஒரு வழிப் படுதல் – ஐக்கியப் படுதல், ஒரு முகப் படுதல்
ஒரு வழி உறுப்பு – ஏகதேசம். A portion of the whole.
ஒருவன் – ஒருத்தன்
ஒரு வாக்காக – ஒரேயடியாக, ஒரு சேர
ஒரு வாக்கு – உறுதி மொழி, ஏகோபித்துச் சொல்லுதல். United voice.
ஒருவாமை – பிறழாமை, நீங்காமை
ஒரு வாய்க் கோதை – ஒரு கண் பறை. Drum with one face.
ஒரு வாரப் படுதல் – ஏக கண்டமாகப் பேசப்படுதல்
ஒரு வாற்றான் – ஒரு வாறு
ஒரு வாறு – ஒரு விதமாக
ஒரு விதமாதல் – நூதன வகையாதல், வேறுபடுதல்.
ஒருவுதல் – விடுதல்.
‘மருவுகமாசற்றார்கேண்மைஒன்றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு’ – திருக்குறள்.
மாசற்றார் நட்பைத் தழுவிக் கொள்க. மனம் பொருந்தாதார் என்ன விலை கொடுத்தும் விலக்கிக் கொள்க.
கடத்தல்,ஒத்தல்,தப்புதல்.
ஒருவு – நீங்குதல்
ஒருவு – ஆடு
ஒருவேளை – ஒரு முறை, ஒரு கால்
ஒரு – ஒருவு
ஒரு உதல் – ஒருவு
ஒருஉ வண்ணம் – ஆற்றோழுக்காகப் பொருள் கொண்டு செல்லும் சந்தம்.
ஒரே – ஒன்றேயான
ஒரோ வழி – Sometimes, in some places
ஒரோ வொருவர்  – தனித்தனி ஒவ்வொருவர்
ஒரோ வொன்று – ஒவ்வொன்று
ஒன்ற – ஒன்றுதல், உவமைச் சொல்
ஒன்றாடி மன்றடி – குழப்பம்.
ஒன்றரைக் கண்ணன் – ஒரு பக்கம் சாய்ந்த பார்வை உள்ளவன். Squint Eyed.
ஒன்றலர் – பகைவர்.
ஒன்றரி சொல் – ஒன்றன் பால் சொல்
ஒன்றன் கூட்டம் – ஒரு பொருளின் கூட்டம்.
ஒன்றன் பால் – அஃறிணை ஒருமைப் பால்
ஒன்றனையொன்று பற்றுதல் – Fallacy of the Mutual Dependence
ஒன்றாதல் – முதலதாதல், ஐக்கியப் படுதல், ஒன்றனுள் ஒன்று லயமாதல், இணை இன்றாதல்
ஒன்றாக – நிச்சயமாக
ஒன்றாத வஞ்சித் தளை – நிரை ஈற்று உரிச்சீரின்முன் நேரசை வரும் தளை
ஒன்றாமை – பகைமை
ஒன்றார் – பகைவர்
ஒன்றாலொன்றும் – யாதொன்றினாலும்
ஒன்றித்தல் – பொருத்துதல், Assemble
ஒன்றி – தனிமை, ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்பது ஒன்றுக்கு ஒன்று என்பதன் திரிபாக இருக்கலாம்
ஒன்றிப்பு – ஒருமிப்பு
ஒன்றியம் – union
ஒன்றிய வஞ்சித்தளை – நிரை ஈற்று உரிச்சீரின் முன் நிரையசை வரும் தளை
ஒன்றியார் – தன்னைச் சேர்ந்தவர்
ஒன்றியான் – ஒற்றையான், Single person
ஒன்றிலொன்றின்மை – Mutual Negation of Identity of two things – ஒன்றினொன்ற பாவம், அந்நியோந்நிய பாவம்.
ஒன்றுதல் – சம்மதித்தல், மனம் கலத்தல், ஒருமுகப்படுதல், உவமையாதல்
ஒன்று – The number one. ‘க’ என்னும் எண். மதிப்பிற்குரிய பொருள்.
‘ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.’
திருக்குறள். தீங்கு செய்தவரைத் தண்டித்தவரை ஒரு பொருட்டாகச் சான்றோர் மதியார். ஆனால் பொறுத்தாரைப் பொன்போல் மதிப்பார். வீடுபேறு, ஒற்றுமை, வாய்மை, சிறுநீர், அஃறிணை ஒருமைப் பால், ஒப்பற்றது.
இகற்ப பொருளைக் காட்டும் இடைச்சொல். எடுத்துக்காட்டு : ‘ஒன்று தீவினையை விடு, ஒன்று அதன் பயனை நுகர் !
ஒன்றுக்கிருத்தல் – ஒன்றுக்குப் போதல். சிறுநீர் விடுதல்.
ஒன்றுக்கு மற்றவன் – உபயோகமற்றவன். ஏக்கன் போக்கன். ஏக்கி போக்கி.
ஒன்றுக்கொன்று – Mutuality. ‘ஒன்றில் ஒன்று. ஏட்டிக்குப் போட்டி.
‘ஒண்ணுக்கு ஒண்ணு சொல்லுவான்’ – வழக்கு.
ஒன்று குடி – ஒட்டுக் குடி
ஒன்று கூட்டுதல் – ஒன்றாய்ச் சேர்த்தல்
ஒன்று கூட்டு – ஒன்றாய்க் கூட்டு. ஒன்றாய்ச் சேர்த்தல். ஒரு சேர்க்கை.
ஒன்று கூடுதல் – ஒன்றாய்ச் சேர்தல். ஐக்கியப் படுதல். Assemble
ஒன்றுகை – இசைகை
ஒன்று கொத்தையாதல் – அரை குறையாதல்
ஒன்று நன் – மித்திரன்
ஒன்று படுதல் – ஒரு தன்மையாதல். இணக்கமாதல்.
ஒன்று பாதி – ஒரு பாதி. ஏறக்குறைய பாதி. நள்ளிரவு.
ஒன்று மற்றவன் – தரித்திரன்.
ஒன்று மொழிதல் – வஞ்சினம் கூறுதல். பதிற்றுப் பத்தின் ஏழாம் பத்து, கபிலர் பாடல், செல்வக் கடுங்கோன் வழியாதன் என்றும் சேர மன்னன் மீது பாடியது. அதன் அறுபத்தாறாவது பாடல், ‘இடியிசை முரசமொரு ஒன்று மொழிந்து ஒன்னலர்’ என்கிறது. இடி முழக்கத்தைப் போன்ற ஓசை எழுப்பும் முரசுடன் தப்பாத வஞ்சினம் கூறி, பகைவர் மேல் சென்று என்று பொருள்.
ஒன்றோ – எண் இடைச்சொல். திருக்குறள், பேதமை அதிகாரம். ‘பொய்படும் ஒன்றோ ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினை மேற் கொளின்’ என்கிறது. செயல் திறனற்ற பேதை, ஒன்றைச் செய்ய முனையும் போது, பொய்யில் சிக்குவான் அல்லது கை விலங்கில் அகப்படுவான்.
ஏகம் எனினும் ஒன்று என்று அறிவோம். தொல்காப்பியரின் வழி நடத்துதலின் படி தமிழாக்கப்பட்ட சொல் அது. ஏக்நாத், ஏகாம்பரம் எனும் பெயர்களும் உண்டு நம்மிடையே. ஏகம் எனும் சொல்லின் பிறப்பென சில சொற்கள் உண்டு பேரகராதியில். அவற்றையும் தெரிந்து கொள்வதில் நமக்கு மறுப்பொன்றும் இல்லை. வெறுப்பவர் விட்டுவிட்டுப் போய்விடலாம்.
ஏக கண்டமாய் – ஒரே குரலாய்.
ஏக குடும்பம் – ஒரே குடும்பம்.
ஏக குண்டலன் – ஒற்றைக் குழை அணிந்த பலராமன்.
ஏக சக்கரவர்த்தி – தனி ஆணை செலுத்துவோன்
ஏக சக்கராதிபத்தியம் – தனியாட்சி
ஏக சக்கராதிபதி – ஏக சக்கரவர்த்தி
ஏக சகடு – மொத்தம், சராசரி
ஏக சமன் – ஒரு நிகர், சரி நிகர்
ஏக சமானம் – ஏக சமன்
ஏக சிந்தை – ஒத்த மனம். ஒரே நினைவு. நாலாயிர திவ்யப் பிரபந்தம், நம்மாழ்வார் பாடல், நாள் தொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்’ என்று பேசுகிறது.
ஏக சுபாவம் – ஒத்த தன்மை
ஏகத்துவம் – ஒன்றாக இருக்கும் தன்மை
ஏகத்தொகை – முழுத்தொகை
ஏக தண்டி – ஒற்றைக் கோல் தரிக்கும் சந்நியாசி
ஏக தந்தன் – ஒற்றைத் தந்தம் கொண்ட விநாயகன்
ஏக தார் – ஒற்றைத் தந்தி வாத்தியம்
ஏக தாலி விரதன் – ஏக பத்தினி விரதன், ஒருத்தியையே மனைவியாகக் கொண்ட உறுதியுள்ளவன்
ஏக தாளம் – சத்த தாளத்தில் ஒன்று
ஏக தேசப் படுதல் – வேறு படுதல்
ஏக தேசம் – ஒரு புடை, one side. சிறு பான்மை, small degree. அருமை, rareness. வித்தியாசம், Anomoly. மாறுபாடு, Blunder. சமமின்மை, unevenness. நிந்தை, abuse. குறைந்தது, low in rank.
ஏக தேச அறிவு  – சிற்றுணர்வு
ஏக தேச உருவகம்  – ஒரு பொருளின் ஏகதேசத்தை உருவகப்படுத்தும் உருவக அணி
ஏக தேசி – ஓரிடத்து இருப்புடையது
ஏக தேவன் – கடவுள், புத்தன்
ஏக நாதன் – தனித்தலைவன், ஏக நாயகன்
ஏகப் பசலி – ஒரு போக நிலம்
ஏகப் பிரளயம் – பெருவெள்ளம்
ஏகப் பிழை – முழுவதும் தவறு
ஏகப் பத்திரிகை – வெண் துளசி
ஏக பாதம் – ஒரு செய்யுள் வகை, ஒற்றைக்கால் விலங்கு,
இருக்கைவகை ஒன்பதனுள் ஒன்று
ஏக பாதர் – ஒற்றைக் தாளில் நிற்கும் சிவ மூர்த்தம்
ஏக பாவம் – ஒத்த எண்ணம்
ஏக பாவனை – ஒருமையாகப் பாவித்தல். Conception of oneness, as of the universe
ஏக பிங்கலன் – மஞ்சளித்த ஒற்றைக் கண்ணை உடைய குபேரன்
ஏக பிராணன் – ஓருயிர் போன்ற நட்பு
ஏக புத்திரன் – ஒரே மகன், ஒரு மகன் உடையவன்
ஏக போகம் – தனக்கே உரிய அனுபவம். ஒரு போகம்
ஏகம் – ஒன்று, ஒப்பற்றது, தனிமை, வீடு, மொத்தம், அபேதம்,
எட்டு அக்குரோணி கொண்ட சேனை, மிகுதி.
ஏகம் – திப்பிலி
ஏகம்பட்சாரம் – உலோக வகை
ஏகம்பம் – காஞ்சியின் சிவத்தலம்.
ஏகம்பன் – காஞ்சிபுரத்தில் கோவில் கொண்ட சிவன். ‘கச்சி
ஏகம்பனே!’ என்பார் பட்டினத்தார். ‘ஒத்த நின்ற ஏகம்பன் தன்னை’ என்கிறது தேவாரம்.
ஏகமாயிருத்தல் – ஒன்றாயிருத்தல், To be united.
மிகுதியாக இருத்தல், To be abundant
ஏகராசி – அமாவாசை
ஏகலபுச்சன் – பைத்தியக்காரன்
ஏகவசனம் – ஒருமையில் அவமரியாதையாகப் பேசுதல்,
சத்தியவசனம்.
ஏகவட்டம் – ஏக வடம், ஒற்றைச்சங்கிலி கழுத்தணி, ஏகா வலி.
ஏக வாசம் – 1. தனிமையாக இருத்தல் 2. கூடியிருக்கை
ஏக வாணை – தனி ஆளுகை
ஏக வாரம் – ஒரு பொழுது உணவு
ஏக வீரன் – தனி வீரன்
ஏகவீரியன் – வீரபத்திரன்
ஏக வெளி – பெரு வெளி
ஏக வேணி – ஒற்றைச் சடையுடைய மூதேவி
ஏகன் – கடவுள்
ஏகாக்கிர சித்தம் – ஒன்றிலே ஊன்றிய மனம்.
ஏகாக்கிரதை – ஒன்றில் மனம் பதித்திருத்தல்
ஏகாகம் – இறந்தவர்க்குப் பதினோராம் நாள் செய்யும் காரியம்
ஏகாகாரம் – மாறாத உருவம், ஒரேயடியாக.
ஏகாகி – தனித்திருப்போன்
ஏகாங்க நமஸ்காரம் – தலைவணங்கிச் செய்யும் வந்தனம்.
ஏகாங்கி – திருமால் அடியாருள் ஒருவகை.
ஏகாங்கி – குடும்பமின்றித் தனித்து வசிப்போர்.
ஏகாசம் – உத்தரீயம், ஏகாயம்.
ஏகாட்சரம் – நூற்றெட்டு உப நிடதங்களுள் ஒன்று
ஏகாட்சரி – ஓரெழுத்தாய மந்திரம். உயிரோடும் தனித்தும் ஒரே மெய்வரும் மிறைக் கவி
ஏகாட்சி – ஒற்றைக் கண்ணி, காகம்
ஏகாண்டம் – முழுக்கூறு, ஏகாண்டமான தூண்.
ஏகாதசம் – பதினோராம் இடம்
ஏகாதசர் – பதினோராம் இடத்தில் உள்ள கோள்
ஏகாதச ருத்திரர் – The Eleven Rudras, a class of gods, மாதேவன், சிவன், ருத்திரன், சங்கரன், நீல லோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சௌமியன் என்று குறிப்பிடும் திவாகர நிகண்டு. சிவனுக்குப் பதில் அரன் என்னும் பிங்கல நிகண்டு.
ஏகாதசி – பதினோராம் திதி.
ஏகாதசி விரதம் – ஏகாதசியில் மேற்கொள்ளப்படும் பட்டினி நோன்பு.
ஏகாதிபத்தியம் – தனியரசாட்சி
ஏகாதிபதி – சக்கரவர்த்தி
ஏகாந்த சேவை – சில உற்சவங்களில் இரவில் ஏகாந்தமாக செய்யப்படும்
சுவாமி பூசை.
ஏகாந்தஞ் சமர்ப்பித்தல் – வாகனங்களில் விக்கிரகங்களை வைத்துக் கட்டுதல்.
ஏகாந்த நித்திரை – அமைதியான உறக்கம். உலகக் கவலை சிறிதும் இல்லாத துறவு.
ஏகாந்தம் – தனிமை ‘இனிது இனிது ஏகாந்தம் இனிது ! ஒருவரும்
இல்லாத இடம். இரகசியம். நிச்சயம். நாடிய ஒரே பொருள். தகுதியானது.
ஏகாந்தவாதி – ஒரு கருத்தை, ஒரே குணத்தில் நோக்குபவர்.
ஏகாந்த வாழ்வு – தனி வாழ்க்கை, துறவியின் வாழ்க்கை.
ஏகாம்பர நாதர் – காஞ்சியில் கோவில் கொண்டுள்ள சிவபிரான்.
ஏகாம்பரர் – ஏகாம்பரநாதர். ஏகாம்பரம். ஏகாம்பரன்.
ஏகாயனர் – மாத்துவர்.
ஏகார்க்களம் – தீய நாள் அறிவதற்குரிய சக்கரம்.
ஏகாரவல்லி – பாகல், பழ பாகல், பலா
ஏகாலத்தி – ஏகாவாத்தியம், சுவாமி முன் காட்டும் ஒற்றைச் சுடர் தீபம்.
ஏகாலி – வண்ணான், சவர்க்காரம்.
ஏகான்ம வாதம் – பிரம்மம் ஒன்றைத்தவிர வேறில்லை என்று வாதிடும் மதம்.
ஏகி – கைம்பெண்
ஏகீபவித்தல் – ஒன்று படுதல்
ஏகீ பாவம் – ஒன்று படுகை
ஏகை – உமை
ஏகோதகம் – நதி சங்கமம்
திரு அருட்பிரகாச வள்ளல், இராமலிங்க அடிகள், தனது திருவருட்பா முதல் திருமுறையில், தெய்வமணிமாலையின் எட்டாவது பாடலில்,
‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’
என்று பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தின் முதல் அடியில் இறைஞ்சுகிறார். பாடலின் அழுத்தம் ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்’ என்பதில். வேறொரு பாடலில் ஒன்று நின் தன்மை அறிந்தில மறைகள்’ என்கிறார்.
மனதை ஒருமுகப் படுத்தலையே ஒருமை என்றார் போலும். ஒருமை என்பது unity மட்டுமல்ல, concentration ம் ஆகும். ஒற்றைக் கால் மடக்கித் தவம் செய்யும் கொக்குக்கு ஒருமை மீன் வயப்படுதலில். எந்தக் காரியம் செய்தாலும் ஒருமை வேண்டும் என்பார்கள்.
One at a time. பல வேலைகளில் ஒரே சமயத்தில் இறங்கி ஒன்றையும் முடிக்காமல் போவது அழகல்ல.
எனவே செய்ய முனையும் எந்தச் செயலிலும் ஒன்றுக !
ஒன்றிப் பொன்றாப் புகழ் எய்துக !