இதற்குத்தானா ஆசைப்பட்டது அமெரிக்கா?

trump_white_house_donald_president

முதலில், அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ஜான் ட்ரம்ப் க்கு வாழ்த்துக்கள்.
ட்ரம்ப்பின் எதிர்பாராத வெற்றி தந்த ஆச்சர்யம், அதிர்ச்சி, ஆத்திரம், ஆவேசம் இப்படி பலவேறு வகையான உணர்ச்சிகளின் பிடியில் இருந்து பெரும்பாலான அமெரிக்கர்கள் இன்னும் மீளவே இல்லை. அதிலும் ஹிலரியின் தீவிர ஆதரவாளர்கள் நிலைகுலைந்து போயிருப்பதை பல இடங்களில் காணமுடிகிறது. இந்த சோகத்தில் இருந்து அவர்கள் வெளி வர நாட்கள் பலவாகலாம்.
கடந்த தேர்தலைவிட இம்முறை குறைவானவர்களே வாக்களித்திருக்கின்றனர். அதிலும் கூட மக்கள் அளித்த வாக்குகள் அதாவது பாப்புலர் வாக்குகளில் ட்ரம்ப்பை விட ஹிலரிக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இருந்தாலும் கூட  எலக்டோரல் காலேஜ் வாக்குகளை அதிகம் பெற்றதால் ட்ரம்ப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டில் கூட இதே போலவொரு சூழலில்தான் ஜனநாயக கட்சியின் அல்கோர், ஜார்ஜ் புஷ்ஷிடம் தோற்றுப்போனார்.
தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்புவரை கூட அத்தனை ஊடகங்களும் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஹிலரிதான் என அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தன. தேர்தல் முடிவுகள் ஊடகங்கள் மற்றும் தேர்தல் கணிப்பாளர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. மக்களின் உண்மையான உணர்வுகளை மீடியாக்கள் புறந்தள்ளி குறிப்பிட்ட ஒருவரை முன்னிறுத்தி மக்களை திசை திருப்ப முயன்றதாக குரல்கள் ஒலிக்கத் துவங்கி இருக்கின்றன. மீடியாக்காரர்களும் தங்களுடைய அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளிக்க திணறிக் கொண்டிருக்கின்றனர்
இப்படி பல்வேறு தரப்பினரின்  எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி இமாலய வெற்றியை பெரும்பான்மை அமெரிக்கர்கள் கொடுத்திருப்பதன் பின்னணியில் என்னவெல்லாம் காரணங்கள் இருக்கக் கூடும் என்பதை பல்வேறு தளங்களிலும், ஊடகங்களிலும் ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டும், புலம்பிக்கொண்டும் இருப்பதை பார்க்க முடிகிறது.
us_2016_elections_polls_results_whites_asians_blacks_vote_trump_hillary_clinton
அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகைக்குச் செல்லப் போகும்  முதல் பெண் அதிபர் ஹிலரி என்கிற முன் முடிவோடும், எதிர்பார்ப்புகளுடனும்தான்  இந்த தேர்தல் சடங்குகள் துவங்கின. தேர்தல் நெருங்க நெருங்க, அதிலும் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரங்களில் தனது வழக்கமான பாணியில் உளறிக்கொட்ட, ஒரு கட்டத்தில் குடியரசுக் கட்சியினரே வேறு யாரையாவது ஹிலரிக்கு எதிராக  நிறுத்தியிருக்கலாமோ என யோசிக்கும் நிலைமை கூட வந்தது.
தேர்தல் நாளுக்கு முன்பே முப்பத்தைந்து மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்திருந்தனர். இவர்களில் பெரும்பாலோனோர்  மைனாரிட்டி லேட்டினோக்களும், கருப்பர்களும்தான். இந்த வாக்காளர்கள் ஹிலரிக்குத்தான் வாக்களித்திருப்பார்கள் என தேர்தல் வல்லுனர்கள் அடித்துக் கூறினர். மேலும் தேர்தல் நாளன்று பெருவாரியான அளவில் இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் என எல்லாத்தரப்பினரையும் வாக்குச்சாவடிகளில் பார்த்தபோது  கடந்த 2004ல் முதன்முதலாக ஒரு கருப்பினத்தவரை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிட மக்கள் திரண்டதைப் போல, இந்தமுறை ஒரு பெண் அதிபரை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவிட வேண்டும் என்று வந்த கூட்டமோ என்றுதான் நினைக்கத் தோன்றியது.
தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் 270 எலக்டோரல் வாக்குகளை ஹிலரி எளிதில் கடந்துவிடுவார் என்றும், எந்தெந்த பெரிய மாநிலங்களில் இருந்து எத்தனை வாக்குகள் ஹிலரிக்கு கிடைக்கும், கூடுதலாக ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் எந்தப்பக்கமும் மாறலாம் என்கிற நிலையில் உள்ள மாநிலங்கள் வாக்குகளும் ஹிலரிக்கு கூடுதலாகக் கிடைத்தால் அவருடைய வெற்றியின் வித்தியாசம் வரலாறு காணாத அளவிற்கு பிரம்மாண்டமாய் இருக்கும் என்றெல்லாம் கூட கணிப்புகள் இருந்தன. இப்படி நாளுக்கு நாள் ஹிலரிக்கு அசைக்க முடியாத ஆதரவு பெருகியதை எல்லா ஊடகங்களும் மாய்ந்து மாய்ந்து பதிவு செய்தன. இதனால் ஹிலரி மிக எளிதாக வென்றுவிடுவதைப் போலவொரு சூழல்தான் தேர்தல் அன்று கூட இருந்தது.
us_2016_elections_polls_results_older_people_vote_trump_hillary_clinton
சென்ற தேர்தலில் ஒபாமாவுக்கு எதிராக போட்டியிட்ட குடியரசுக்கட்சியின் மிட் ராம்னி  வென்ற அனைத்து  எலெக்டோரல் வாக்குகளோடு, ஸ்விங் ஸ்டேட்ஸ் மாநிலங்களில் எனப்படும் ஃ ப்ளோரிடா, நார்த் கரோலினா, ஒஹையோ மாநிலங்களில் வென்றால் மட்டுமே டிரம்ப் வெற்றிக்கு வாய்ப்புகள் இருக்கிறது. 270 எலெக்டோரல் வாக்குகளைப் பெற அரிசோனா, பென்சில்வேனியா, மிஷிகன், ஐயோவா மாநிலங்களின் வாக்குகளும் கிடைக்கும் பட்சத்தில் டிரம்ப் தான் அடுத்த அமெரிக்க அதிபர் ஆகலாம் என்கிற கணிப்புகளும் ஒரு ஓரத்தில் அத்தனை சத்தமில்லாமல் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தன.
வாக்கு எண்ணிக்கை துவங்கிய போது ஹிலரியின் வெற்றிச்செய்தியை சொல்லப்போகும் ஆர்வத்தை ஊடக விவாதங்களில் காணமுடிந்தது. ஆரம்ப கட்டத்தில் இருவரும் இழுபறியோடு சமநிலையில் செல்லத் துவங்கினாலும், நேரம் செல்லச் செல்ல ட்ரம்ப் கை ஓங்க ஆரம்பித்தது. இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களில் குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சிக்கு வலுவான மாநிலங்கள் உண்டு. அவை தவிர யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யாத மாநிலங்களையே ஸ்விங் ஸ்டேட்ஸ் என்கின்றனர். இந்த மாநிலங்களே அதிபர் தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மாநிலங்களாக இருக்கின்றன.
ஸ்விங் ஸ்டேட்ஸ் வாக்குகள்  ஹிலரிக்கு ஆதரவாக இருக்கலாம் என்றே எதிர்பார்த்திருந்த வேளையில், நார்த் கரோலினா,  ஒஹையோ, ஃ ப்ளோரிடா மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் இருந்ததைத் தொடர்ந்து  ஊடகங்களும் செய்தியாளர்களும் தாங்கள் அதுவரை பரப்பி வந்த செய்தியின் சாயம் வெளுப்பதை கவலையோடும், தடுமாற்றத்தோடும் சமாளிக்க முயன்றனர்.
இந்த கட்டத்தில்தான் ட்ரம்ப் வெற்றி பெறும் வாய்ப்புகளைப் பற்றி முதல்முறையாக ஊடகங்கள் பேச ஆரம்பித்தன. பென்சில்வேனியா, மிஷிகன், ஐயோவா மாநிலங்களில் எதிர்பாராத வெற்றி ட்ரம்ப்பின் அதிபர் கனவை சாத்தியமாக்க, அதிகாலை இரண்டரை மணிக்கும் மேல் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது.
vote_breakdown_gender_2016_elections_polls_us_american_results_president_trump
கடந்த 30 வருடங்களில் நடந்த தேர்தல்களில் முன்பைவிட அதிக அளவில் எலெக்டோரல் வாக்குகளை பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் என்கிற பெருமையோடு, கூடுதலாக  அதிக அளவில் மைனாரிட்டி, கருப்பின மக்களின் வாக்குகளை ட்ரம்ப் அள்ளியிருப்பது வியப்பைத் தந்தாலும் அதற்கு ட்ரம்ப்பின் புத்திசாலித்தனமான அணுகுமுறைகள்தான் காரணம் என்கின்றனர்.
தற்போதைய ஹவுஸ் ஸ்பீக்கர்  பால் ரையன் போன்ற  அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாத ஒன்றை ட்ரம்ப் புரிந்து கொண்டதால் தான் இத்தேர்தலில் அவர் வரலாறு காணாத வெற்றி கண்டுள்ளார். ஆம்,சாதாரண மக்களின் தேவைகளை, பிரச்னைகளை அவர்களுடன் நேரடியாக உரையாடிதன் மூலமாக, இவர் நமக்கான தலைவர், தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துவைப்பார் என நம்ப வைத்ததும் ஒரு முக்கியமான காரணம். இந்த அணுகுமுறையின் காரணமாக ஜனநாயக கட்சியினர் கோலோச்சிய சில மாநிலங்கள் குடியரசுக்கட்சியினருக்கு சாதகமாக திரும்பியது  ஹிலரிக்கு பாதிப்பாக முடிந்தது.

  • ஒபாமாகேரினால் மக்கள் படும் அவதி,
  • வெளிநாடுகளுக்குச் சென்ற வேலைகளால் தத்தளிக்கும் குடும்பங்கள்,
  • முறையான குடியேற்ற உரிமை இல்லாதவர்களால் ஏற்படும் போதை மருந்து கலாச்சாரங்கள்,
  • உள்நாட்டில் நடக்கும் இனக்கலவரங்கள்,
  • அகதிகளால் அரசுக்கு ஏற்படும் செலவினங்கள்,
  • உள்ளூர் தீவிரவாதப் பிரச்னைகள்,
  • போர் வீரர்களுக்கு ஆதரவு

என   மக்கள் வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாக வைத்துப் பேசியதும், நாட்டை கார்ப்பரேட் அரசியல்வாதிகளிடமிருந்து மீட்டு அதை பழைய உன்னத நிலைக்கு கொண்டு வருவதன் மூலமாக எல்லோருக்கும் எல்லா வளஙக்ளையும் அளிக்கமுடியும் என்று தொடர்ந்து பேசியது போன்றவைகள் நடுத்தர மக்களிடம் நல்லபடியாக போய் சேர்ந்தது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எதிரொலித்திருக்கிறது. அவருடைய துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் அதிபருக்குரிய தகுதிகளை பெற்றவராக மக்கள் கண்டு கொண்டதும் இந்த கூட்டணியின் வெற்றியை உறுதி செய்தது.

race_sex_ethnicity_voters_2016_minority_elections_2016_polls_trump_president_politics

வெள்ளை இன அமெரிக்க ஆண்களின் பெருவாரியான வாக்குகள், நாற்பத்தி ஐந்து சதவிகத பெண்களின் வாக்குகள் கிடைத்திருப்பதுடன், கடைசிவரை யாருக்கென முடிவு செய்யாத undecided voters டிரம்ப்புக்கு ஆதரவாக  மாறியதும், டிரம்ப்புக்கு வாக்களிக்கப் போவதை வெளியில் சொல்லாத வாக்காளர்களும் அவருடைய வெற்றிக்கு காரணமாகி இருக்கிறார்கள். இது தவிர இன்னொரு சுவாரசியமான புள்ளிவிவரத்தின் படி  கடந்த அதிபர் தேர்தலில் வாக்களித்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கியதும் ஹிலரிக்கு பாதகமாய் போனது.
தொழிற்சாலைகள் மூடப்பட்ட நகரங்களில், வெளிநாடுகளுக்கு தங்கள் வேலைகளை பறிகொடுத்தவர்கள், அகதிகளின் வருகையை எதிர்ப்பவர்கள் எனஅதிருப்தியில் இருந்த பலரும் எளிதாக ட்ரம்ப்பின் பிரச்சாரத்தில் ஈர்க்கப்பட்டனர். இதன் எதிரொலியை அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸில் குடியரசுக் கட்சியினர் மெஜாரிட்டியாவதற்கும் உதவியிருக்கிறது. இந்த வெற்றிகள் ட்ரம்ப்பின் வெற்றிக்கு கூடுதல் நியாயம் செய்வதாக இருந்தது.
ட்ரம்ப் எப்படி வெற்றி பெற்றார் என்பதை விட ஹிலரி ஏன் தோற்றார், எதனால் தோற்றார் என்பதுதான் தற்போது பலரையும் யோசிக்கவைக்கும் கேள்வி. நீண்ட நெடிய அரசியல் அனுபவம், தன் கணவர் க்ளிண்டன், அதிபர் ஒபாமா போன்றவர்களோடு  அரசியல் மற்றும் அதிகாரத்தில் தோளோடு தோள் நின்று பணியாற்றிய அனுபவம். உள்ளூர் மற்றும் உலக அரசியல் களங்களில் அவருடைய பங்களிப்புகள் என அவருக்கு சாதகமான அம்சங்கள் பல இருந்தாலும் கூட அவருடைய இந்த அதிர்ச்சித் தோல்விக்கான நிஜமான காரணங்கள் என பட்டியலிட நிறையவே இருக்கிறது.
ஒபாமாவின் முதல் பதவிக்காலத்தில் வெளியுறவுத்துறையின் பெரும் பொறுப்பில் இருந்த போது, அவருடைய கவனக்குறைவினால் எகிப்தில் நடந்த கலவரங்களும், சிரியாவில் உள்நாட்டுப் போரினால் நிகழ்ந்த சீரழிவுகள் , கட்டுப்படுத்த முடியாத ISIS தீவிரவாத செயல்கள், உயிர்பலிகள் என நிறைய அதிருப்திகளை ஹிலரி சம்பாதித்து வைத்திருந்தார்
ஒபாமா அரசின் விமர்சனங்களுக்குள்ளான பலகொள்கைகளை அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் ஹிலரி தொடர நினைத்ததும் அவருடைய பின்னடைவுக்கு இன்னொரு காரணமாக சொல்கிறார்கள். கிளின்டன் பவுண்டேஷன் முறைகேடுகளும், வால் ஸ்ட்ரீட், வங்கிகள், பணக்காரர்களின் பிரதிநிதியாக ஹிலரி முன் நிறுத்தப்பட்டது  போன்றவை அமெரிக்க ஏழை மற்றும் நடுத்தர உழைக்கும் வர்க்கத்தினரிடம் இருந்து  ஹிலரியை அந்நியப்படுத்தியது.
தேர்தலுக்கு சில வாரங்கள் இருக்கையில், ஹிலரி அழித்ததாகச் சொன்ன மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாக விக்கிலீக்ஸ் வெளியிட ஹிலரியின் உள்வட்டமும் அவருடைய குழுமமும் செய்த விடலைத்தனமான உரையாடல்களும் வெளியுலகிற்கு தெரிய வர, அது தொடர்பில் FBI டைரக்டர் ஜேம்ஸ் கோமேயின் பரபரப்பான ரிப்போர்ட்களும் ஹிலரியின் வெற்றியை கேள்விக்குறியாக்கின
மைனாரிட்டி இன மக்கள், பெண்கள், இளம்வாக்காளர்கள், கறுப்பர்களை குறிவைத்து அவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஹிலரி பேசி வந்ததை வெள்ளை இன மக்கள் குறிப்பாக ஆண் வாக்காளர்கள் ரசிக்கவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஈமெயில் சர்வர் விவகாரங்கள், அவருடைய உதவியாளர் கணினியில் கண்டெடுத்த நாட்டைப் பற்றின ரகசிய தகவல்கள், அவை எதிரிகள் கைகளில் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகங்கள், துணை அதிபர் வேட்பாளர் டிம் கெய்ன் மக்களிடத்தில் நம்பிக்கை பெற முடியாதது போன்ற காரணங்களும் சேர்ந்து கொள்ள ஹிலரியின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது.
எது எப்படி இருந்தாலும், ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர். தேர்தல் செலவுக்காக கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தாத திமிர் போன்ற ஒன்றிரண்டு சாதகங்களைத் தவிர ட்ரம்ப்பின் பொறுப்பற்ற வாய்த்துடுக்கான பேச்சுக்கள், கடந்தகால லாக்கர் ரூம் ஆடியோ வீடியோ ஏற்படுத்திய அறுவெறுப்புகள், பெண்களை பற்றின டிரம்ப்பின் கீழ்த்தரமான வர்ணனைகள், கோமாளித்தனமான அரசியல் நிலைப்பாடுகள் என பலபாதகமான அம்சங்கள் அவர் அதிபர் பதவிக்கு தகுதியானவர்தானா என்கிற கேள்வி இன்னமும் பலரையும் உறுத்திக் கொண்டிருக்கிறது. இதன் எதிரொலியாகவே ஆங்காங்கே ட்ரம்ப்புக்கு எதிரான ஆர்பாட்டங்களும், கலவரங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஹிலாரியின் தோல்வியை அவருடைய ஆதரவாளர்கள் கண்ணீருடனும், அதிர்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். டிரம்ப் வெற்றி பெற்றால் நாட்டில் குழப்பங்கள் ஏற்படுத்தும், இனப்பிரிவினைவாதம் தலை தூக்கும், மைனாரிட்டிகளுக்கு மிகவும் சோதனையான காலம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். டிரம்ப் வெற்றி பெறுவார் என்கிற நிலமை ஏற்பட்டதும் பங்குச்சந்தைகள் மளமளவென சரிந்ததை நாம் பார்க்க முடிந்தது. இனி இங்கே குடியிருக்க முடியாது என நினைக்கும் பலர் கனடாவில் வேலை தேடுகிறார்கள் குடியேற விரும்புகிறார்கள் போன்ற செய்திகளும் வலம் வருகின்றன.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு தன் ஆதரவாளர்களிடம் பேசிய  ட்ரம்ப், ஹிலரியை வாழ்த்தி அவருடைய சேவைகளை பாராட்டி  தன் பேச்சினை துவங்கியதை எல்லாத் தரப்பினரும் ரசித்தனர். தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்த அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இனி தான் ஒரு கட்சி சார்ந்தவன் இல்லை என்றும், அனைத்து மக்களுக்குமான அதிபராகச் செயல்படுவேன் என்றும், தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் வலியுறுத்திய மாற்றங்களை செயல்படுத்துவதன் மூலமாக உலக அரங்கில் அமெரிக்காவை தலைநிமிரச்செய்வேன் என்றும் கூறினார். தன்னுடைய இந்த முயற்சிக்கு  ஆரம்பம் முதல் ஆதரவளித்த  வாக்காளர்களுக்குத் தன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
எதிர்வரும் நாட்களில் ட்ரம்ப்புக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் தலைவிரித்தாடும் தீவிரவாதம், சரிந்து வரும் நிதிநிலைமை, சட்டவிரோத குடியேற்றம், வேலையில்லா திண்டாட்டம், உள்நாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துதல் என நீளும் பிரச்னைக்கான தீர்வுகளை நிதானத்தோடும், தொலைநோக்கோடும் அணுகிடத் தேவையான பொறுமை ட்ரம்ப்புக்கு இருக்கிறதா என்கிற சந்தேகமும், கவலையும் அவருடைய சொந்த கட்சியினருக்கே இருக்கிறது.
அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களை எப்படி கையாளப் போகிறார், பிரிந்து கிடக்கும் நாட்டை எப்படி ஒன்று சேர்த்து வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லப் போகிறார் என பல கேள்விகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.
செனட் மற்றும் காங்கிரஸில் மெஜாரிட்டி பெற்றிருக்கும் ட்ரம்ப் கட்சியினர் நீதித்துறையையும் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து விட்டால் அரசியல் சட்டங்களையும் தங்கள் விருப்பப்படி மாற்ற இயலும். அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தால் அவர்களை தடுக்கும் சக்தி ஜனநாயகக் கட்சிக்கு இல்லை என்பதும் கவலைதரும் செய்தி.
ஆணாதிக்க சமூகம் என்றும் பெண்ணடிமைத்தனத்தை இன்றும் கைக்கொண்டிருக்கும் சமூகம் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்படும் கிழக்காசிய நாடுகள் கூட தங்களை ஆளும் பொறுப்பினை மனமுவந்து பெண்களுக்கு வழங்கிவிட்ட  நிலையில், தம்மை  ஒரு முன்னேறிய சமத்துவ சமூகமாய் பறைசாற்றிக் கொள்ளும் அமெரிக்கர்கள்  நூற்றாண்டு கடந்தும் இதுவரை ஒரு பெண்ணை தலைமை பொறுப்பிற்கு தேர்ந்தடுக்காமல் போனது ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.
மக்களின் நிஜமான உணர்வுகளை, பிரச்சினைகளை பிரதிபலிக்காமல் கடந்த இரு வருடங்களாக ஹிலரிக்கு ஆதரவாக செயல்பட்ட அச்சு ஊடகங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும், தேர்தல் கணிப்புகளுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சாட்டையடியாக இருக்கும். எத்தனை பொய் பிரச்சாரங்கள் செய்தாலும் மக்கள் நினைத்தால் மாற்றங்களை உருவாக்கிட முடியும் என்பது இன்னொரு தடவையாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
அடுத்த நான்கு வருடங்களுக்கு அமெரிக்க அரசியல்களத்தில் சுவாரசியங்களுக்கு பஞ்சமிருக்காது. இனி நடப்பவை யாவும் நல்லதாக இருக்கட்டும் என்கிற பிரார்த்தனையோடு நிறைவு செய்கிறேன்.
வாழ்க ஜனநாயகம்.

trump_hair_uncertainty_waves_crash

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.