1) உங்களது இளமைக்காலம் மற்றும் இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்ட பின்னணி போன்றவற்றைக் கூறுங்கள்
என் குடும்பத்தில் வாசிக்கும் பழக்கமே கிடையாது. ஏனென்றால் வீட்டிலே புத்தகமே இல்லை. சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒருவர் கேட்டார். ’நான் சொந்தமாக்கிய முதல் புத்தகம் என்ன?’ அதிர்ச்சியான கேள்வி. வீட்டிலே பாடப்புத்தகங்கள் இருந்தன. அதைத்தவிர பஞ்சாங்கம் இருந்தது. எனக்குச் சொந்தமாக ஒரு புத்தகமும் கிடையாது.
படித்தது எல்லாம் இரவல் புத்தகம்தான். அதுவும் வீட்டிலே நாவல் படித்தால் ஐயாவுக்கு பிடிக்காது. பல்கலைக்கழகத்திலும் நண்பர்களிடம் இரவல்தான். நூலகத்திலும் புத்தகங்கள் எடுத்து வாசிப்பேன். நான் சொந்தமாக்கிய முதல் புத்தகம் நான் எழுதிய ’அக்கா’ சிறுகதைப் புத்தகம்தான். கைலாசபதி ஒருநாள் புதுமைப்பித்தனை அறிமுகப் படுத்தினார். அந்த இரவு மறக்கமுடியாதது. அதன் பின்னர் ஜேம்ஸ் ஜோய்ஸ். என் வாழ்க்கை மாறியது. தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். நல்ல இலக்கியம் எது என்று கண்டுபிடித்த அந்த தருணம் பொன்னானது. பின்னர் நான் திரும்பிப் பார்க்கவில்லை.
2) கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தாங்கள் மாணவனாக இருந்தபோது தினகரன் சிறுகதைப்போட்டியில் ‘பக்குவம்” என்ற சிறுகதைக்கு முதற்பரிசு பெற்றீர்கள். தினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் க. கைலாசபதி மார்க்ஸியக் கருத்தியல் கொண்டவர். உங்களது கதை மார்க்ஸியக் கருத்தியல் சாராதது. அக்கதையை முதற் பரிசுக்குத் தேர்ந்த முரண்நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்பினால் முதல் பரிசு கிடைக்கும் என்றெல்லாம் யோசித்தது கிடையாது. கதை எழுதி முடித்தவுடன் படித்துப் பார்த்தேன். எனக்குப் பிடித்துக்கொண்டது. அதுதானே முக்கியம். எனக்குப் பிடித்தால் வாசகருக்கும் பிடிக்கும். அனுப்பினேன். என் வாழ்க்கையே மாறப்போகிறது என்பது எனக்குத் தெரியாது.
3) தாங்கள் எழுதிய அனுலா என்ற சிறுகதை அக்காலத்தில் கல்கி நடத்திய பரிசுப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. இதுவும் மார்க்ஸியக் கருத்தியல் சார்ந்த கதை அல்ல. கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரால் எழுத்து முயற்சிகளுக்கு ஊக்கம் பெற்ற நீங்கள் அக்காலத்தில் இலங்கையில் மேலோங்கியிருந்த மார்க்சிய சித்தாந்தத்தை மையப்படுத்திய அவர்களது கருத்தியலுக்குள் அகப்படாது இருந்தமை வியப்பாக இருக்கிறதே!
இந்தக் கேள்வி என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. ஆரம்பத்தில் எந்தச் சிறுகதை, எந்தப் பத்திரிகைக்கு எழுதினாலும் அதை கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவருக்கும் காட்டிவிட்டுத்தான் அனுப்புவேன். ஆனால் கல்கி சிறுகதை விசயத்தை மாத்திரம் ரகஸ்யமாக வைத்திருந்தேன். கதை வெளிவந்தபோது இருவருக்குமே பிடிக்கவில்லை என்று என்னால் உணரமுடிந்தது. அதைப்பற்றி அவர்கள் என்னிடம் பேசவே இல்லை.
ஆரம்பத்திலிருந்து அவர்கள் சித்தாந்தத்தை நான் தழுவவேண்டும் என எதிர்பார்த்தார்கள். அதை என்னிடம் அவர்கள் சொன்னதில்லை, ஆனால் நான் ஊகித்தேன். எனக்கு அப்பொழுது 18,19 வயதுதானே. சிறுகதையை உபதேசத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்பதில் திடமாக இருந்தேன். அது காலிலே கல்லைக் கட்டிக்கொண்டு நீந்துவதுபோல. எந்தச் சிறுகதையும் ஒருவித தரிசனத்தை தரவேண்டும். இன்றும் அப்படித்தான் நினைக்கிறேன்.
4) தங்களது அக்கா சிறுகதைத் தொகுதி 1964இல் பேராசிரியர் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியாகியது. அதன்பின்னர் 1995 வரை எதுவுமே தாங்கள் எழுதியதாகத் தெரியவில்லை. இந்த எழுத்துலக அஞ்ஞாதவாசத்துக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?
எழுத்தாளர் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை. அவர் எழுதாவிட்டாலும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார் என்று சொல்வார்கள். ஒரு தலைமுறை காலம் நான் ஒன்றும் எழுதவில்லை. காரணம் நான் முதன்முதலாக நாட்டைவிட்டு ஆப்பிரிக்காவுக்கு புலம்பெயர்கிறேன். என்னுடன் மனைவியும், இரண்டு பிள்ளைகளும். புதிய தேசம், புதிய மொழி, புதிய கலாச்சாரம், புதிய மக்கள், புதிய பணம். வாழ்க்கையை முதலில் இருந்து ஆரம்பிப்பதுபோல இருந்தது.
ஒரு தொலைபேசி அழைப்புக்கு ஒருநாள் முழுக்க காத்திருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து ஆங்கிலத்திலும், தமிழிலும் படித்தேன். அவை பற்றி விவாதம் செய்யத்தான் ஒருவரும் இல்லை. மிகத் தனிமையாக உணர்ந்த சமயம். ஒரு தமிழரைக் கண்டால் அன்று முழுக்க கொண்டாட்டம்தான். ஒரு தமிழ் விருந்தாளி என்னைத் தேடி வந்ததை 30 வருடங்களுக்கு பின்னர் ’விருந்தாளி’ என்று சிறுகதையாக எழுதினேன். மிகுந்த பாராட்டை பெற்ற கதை. சமீபத்தில்கூட ஆப்பிரிக்காவில் 40 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து ‘சின்ன ஏ, பெரிய ஏ’ என்ற கதையை எழுதினேன். அச்சிலே வராவிட்டால்கூட நான் மனதுக்குள் பல சிறுகதைகளை பாதுகாப்பாக வைத்திருந்தேன். அந்த வகையில் நான் எழுதிக்கொண்டுதான் இருந்தேன்.
5) தங்களது படைப்புக் கோட்பாடு பற்றி விளக்குங்கள்
கோட்பாடு அப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு நான் எழுதுவதில்லை. ஒரு படைப்பு வாசகரைச் சென்று அடையவேண்டும். அதுதான் முக்கியமானது. அது தேவையில்லை என்றால் எழுத்தாளர் கதையை எழுதி பெட்டியிலே பூட்டி வைப்பதற்கு சமம். ஒரு கதைக்கு ஆரம்பம், நடு, முடிவு என்று இருக்க வேண்டும். ஆரம்பம் வாசகரை உள்ளே இழுக்கவேண்டும். முடிவு வாசகரை வெளியே போகாமல் தடுக்கவேண்டும். அதாவது கதை முடிந்த பின்னரும் அவர் சிந்தனை கதையின் பாதையில் தொடர்ந்து ஓடவேண்டும். கதை முடியும் சமயம் நீங்கள் புதுப்பிக்கப்பட்டதாக உணரவேண்டும். ஹெமிங்வே என்ற ஆங்கில எழுத்தாளர் ஓர் ஆரம்ப வசனத்துக்காக பல நாட்கள் காத்துக் கொண்டிருப்பார் என்று படித்திருக்கிறேன்.
இன்னொரு முக்கியமான விடயம் எட்டாம் வகுப்பு மாணவனின் சொற்களில் எழுதவேண்டும் ஆனால் எட்டாம் வகுப்பு மாணவனின் வசன அமைப்பில் அல்ல. மாணவன் ’மாமரத்தின் உச்சிக்கு ஏறினான்’ என்று எழுதுவான். ஆனால் எழுத்தாளர் வித்தியாசமாக எழுதவேண்டும். ’அவன் ஏறினான், ஏறினான். மரம் முடியுமட்டும் ஏறினான்.’ இதுதான் வித்தியாசம்.
சார்ல்ஸ் டிக்கன்ஸ் என்ற ஆங்கில எழுத்தாளர் ஒரு முக்கியமான வசனத்தை எழுதிவிட்டு தன் வீட்டு வேலைக்காரிக்கு அதை படித்துக் காட்டுவார். அவருக்குப் புரியாவிட்டால் அவர் அந்த வசனத்தை வெட்டிவிட்டு வேறு புதிய வசனம் உருவாக்குவாராம்.
இவை எல்லாம் இருந்தும்கூட சில கதைகள் தோல்வியடையலாம். அவை மனதை தொடவேண்டும். அப்பொழுதுதான் அவை உயிர் பெறுகின்றன.
6) தாங்கள் ஒரு படைப்பைத் தொடங்குவதற்கு முன்னரே அதற்கான வடிவத்தைத் தீர்மானித்து விடுவீர்களா? அல்லது கதையோட்டம் வடிவத்தைத் தீர்மானிக்கிறதா?
ஆங்கிலேயர்களில் ஒரு வழக்கம் உண்டு. வைன் குடிப்பதற்கு ஒருவித கிளாஸ். சாம்பெய்னுக்கு வேறு ஒரு கிளாஸ். பியர் என்றால் கைப்பிடி வைத்த பெரிய கிளாஸ். விஸ்கிக்கோ, பிராந்திக்கோ வேறொன்று. எந்தப் பாத்திரத்தில் குடித்தாலும் சுவை ஒன்றுதானே. ஆனாலும் எப்படி பருகுவது என்பதற்கு ஒரு முறை உண்டு.
கதை மனதில் உருவாகியவுடன் ஒரு சிக்கல் வரும். யார் கோணத்தில் சொல்வது? ஒருமையிலா, பன்மையிலா? தன்மையிலா படர்க்கையிலா. இவற்றை தீர்மானித்தபின்தான் வடிவத்தைப் பற்றி சிந்திக்க முடியும், ஒரு சிறுகதை மனதில் தோன்றிய பின் அதை எப்படியும் சொல்லலாம். ஆனால் சரியான வடிவத்தில் அது வெளிப்படும்போது உயர்வு பெறுகிறது. படைக்கும் பொருளே வடிவத்தையும் தீர்மானிக்கிறது.
7) உங்களது எழுத்துக்களில் அதிசயமான பார்வைக் கூர்மையும் நுட்பமான காட்சிச் சித்தரிப்பும் அங்கதச் சுவையும் இழையோடியவண்ணம் இருக்கின்றன. இவை தங்களது படைப்புகளுக்கு எத்தகைய பலம்சேர்க்கின்றன? இத்தகைய எழுத்து நடை தங்களுக்கு எவ்வாறு கைவரப்பெற்றது?
சுந்தர ராமசாமி சொல்வார் நல்ல எழுத்து எழுதுவது சுலபம் என்று. தேய்வழக்கை நீக்கிவிட்டாலே நல்ல எழுத்து வந்துவிடும். ஆரம்பத்தில் இருந்து எளிமையாக எழுதுவதற்கே முயன்றுகொண்டிருக்கிறேன். கடினமான ஒரு பொருளை இலகுவாக எப்படி கடத்துவது என்றே ஒரு நல்ல எழுத்தாளர் ஓயாமல் சிந்திக்கிறார். Frank McCourt என்ற பிரபலமான அமெரிக்க எழுத்தாளரிடம் நான் கேட்டிருக்கிறேன். ‘நீங்கள் எப்படி எளிமையாக, அதே சமயம் நுட்பமாக புதிய பார்வையில் எழுதுகிறீர்கள்?’ என்று. அவர் சொன்னார் ‘நான் ஒரு கதை சொல்லி. எப்படி கதை சொன்னால் அது வாசகர்களுக்கு போய்ச் சேரும் என்ற நுட்பத்தை தெரிந்து வைத்திருக்கிறேன்.’
இலக்கியம் என்பது உண்மையை நோக்கிய பயணம். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சிக்கலை விவாதித்து முன்னேறுவது தீவிர இலக்கியத்தின் குணம். அதைச் செம்மையாகச் செய்வதற்கு ஒரு மொழியை தேர்வு செய்யவேண்டும். அப்பொழுதுதான் கடினமான ஒரு செய்தியும் இலகுவாக வாசகரை சென்றடையும். இதற்கு சில தந்திரங்களும் உத்திகளும் உள்ளன.
சேக்ஸ்பியர் எழுதிய ஹாம்லெட்டில் ஓர் இடம் வரும். அவன் காதலி ஒஃபீலியாவிடம் பேசுவான். ‘God has given you one face and you make yourself another face.’ இன்றுவரை இந்த வரியை மேற்கோள் காட்டியபடியே இருக்கிறார்கள். இதுதான் வசன அமைப்பின் சிறப்பு. சேக்ஸ்பியர் பயன்படுத்திய வார்த்தைகள் சாதாரணமானவைதான். ஆனால் சொல்முறை அசாதாரணமானது. ’புதியதைச் சொல். புதிதாகச் சொல்’ என்பார்கள். ‘என்னுடைய அம்மா ஓடிப்போன நாலாவது நாள் அவன் வந்தான்.’ இது ஒரு சிறுகதையின் ஆரம்ப வரிகள். வாசகரை உள்ளே இழுப்பதற்கான தந்திரம்.
8) எஸ்.பொ. போன்ற ஈழத்து மூத்த படைப்பாளிகள் ‘சொல்விற்பன்னம்’ காட்டி வாசகர்களை வசீகரித்தார்கள். அக்காலத்தில் அவரது எழுத்து நடையை பலரும் சிலாகித்தனர். ஈழத்து எழுத்தாளர்களில் மற்றுமொரு சாரார் பிரதேச மண்வளச் சொற்களுக்கு அழுத்தம் கொடுத்து எழுதினார்கள். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளில் வரும் மண்வளச் சொற்களுக்கு அடிக்குறிப்பு இடவேண்டும் எனத் தமிழக எழுத்தாளர்கள் சிலர் கூறியதும் ஞாபகத்துக்கு வருகிறது. தங்களது தமிழ்நடை மேற்குறிப்பிட்ட நடைகளிலிருந்து வேறுபட்டு எளிமையும் தெளிவும் துலக்கமும் கொண்டு மிக இலகுவானதாக இருக்கிறது. படைப்பிலக்கியத்தில் எழுத்து நடைபற்றிய தங்களது கருத்தினை விளக்குவீர்களா?
ஒரு சொல் இருந்தால் அதை எழுத்தாளர் பயன்படுத்தவேண்டும். அது அவரின் கடமை. அல்லாவிடில் அந்தச் சொல் வழகொழிந்துவிடும். நான் ’நுளம்பு’ என்று எழுதுவேன். பலருக்கு புரியாது. ’இலையான்’ என்று எழுதினாலும் புரியாது. ’கதிரை’ என்றால் என்ன என்று என்னிடமே கேட்டிருக்கிறார்கள். நான் தொடர்ந்து அந்தச் சொற்களையே எழுதினேன். அவை அகராதியில் உள்ள சொற்கள். அகராதியில் இல்லாத சொற்கள் வரும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது.
பிரபல எழுத்தாளர் வார்த்தை ஒன்றை பயன்படுத்தினார். அது அகராதியில் இல்லை. நான் எப்படி அதன் பொருளை புரிந்து கொள்வது? அந்த எழுத்தாளருடன் தொலைபேசியில் சண்டை பிடித்திருக்கிறேன். சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் முழுக்க முழுக்க அவருடைய கிராமத்து பேச்சு வழக்கில் ஒரு கதை எழுதி அனுப்பி என்னிடம் கருத்து கேட்டிருந்தார். ’எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ என்று பதில் எழுதினேன். அவர் எழுதிய கதை அவர் கிராமத்தில் உள்ள 20 – 30 பேருக்கு மட்டுமே புரிந்திருக்கும். ஏன் அப்படி எழுதினார்? அதன் பின்னர் அந்தக் கதைக்கு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. ’கொறணமேந்து’ என்று ஒரு வார்த்தை எங்கள் கிராமத்தில் இருக்கிறது. கிராமத்தில் உள்ள எல்லோருக்குமே அது புரியும். அதை நான் என்னுடைய கதையில் பயன்படுத்தினால் எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும். கொறணமேந்து என்றால் வேறு ஒன்றும் இல்லை, government தான்.
சில வருடங்களுக்கு முன்னர் வட்டார மொழியில் ஒரு நாவல் வந்து அதை வாங்கிப் படித்தேன். முதல் 20 பக்கங்களுக்கு மேலே என்னால் போகமுடியவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். சில வருடங்கள் கழித்து அதே நாவல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்தது. வாங்கிப் படித்தேன். முழுவதுமே புரிந்தது. இங்கிலாந்தில் இருந்த மொழிபெயர்ப்பாளரைத் தொடர்புகொண்டு எப்படி மொழிபெயர்த்தார் என்று கேட்டேன். அவர் தான் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆசிரியரைத் தொலைபேசியில் அழைத்து பொருள் கேட்டதாகச் சொன்னார். நாவல் ஆங்கிலத்தில் சிறப்பாக வந்திருந்தது. ஒரு தமிழ் நாவலை ஆங்கில மொழியில் படித்து அனுபவிப்பது எத்தனை கேவலம். எல்லோருமே தங்கள் தங்கள் வட்டார மொழியில் எழுதினால் 100 வருடத்தில் தமிழின் நிலை என்னவாகும்? நினைக்கவே மனம் நடுங்குகிறது.
9) தங்களது எழுத்துக்கள் நாம் அறியாத உலகுக்கு புதிய வழிகளில் நம்மை அழைத்துச் செல்கின்றன. அதுவே தங்களது எழுத்துக்களின் மிகப் பெரிய பலம் என நான் கருதுகிறேன். இது ஏனைய படைப்பாளிகளிடமிருந்து தங்களை வேறு படுத்திக்காட்டும் அம்சமாகவும் இருக்கிறது. தங்களுக்கு இது எப்படிச் சாத்தியமாகிறது?
நான் இலங்கையில் தொடர்ந்து எழுதியிருந்தால் என் எழுத்து வேறு மாதிரி விரிந்திருக்கும். அதை எப்படி வாசகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதை ஊகிக்கவே முடியாது. நல்ல இலக்கியம் என்றால் வாழ்க்கையை அறிவதுதானே. வாழ்க்கையின் விசாரணை. ஒருவன் ஒரு வாழ்க்கைதான் வாழமுடியும். கோடிக்கணக்கான மனிதர்கள் இருப்பதால் கோடிக்கணக்கான வாழ்க்கை முறையும் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் ஒருவர் வாழ்நாளில் அறியவே முடியாது. அதற்காகத்தான் பலவிதமான நூல்களை வாசகர் படிக்கிறார். மனித வாழ்க்கையின் ஒரு சிறு கூறை அறிந்துகொள்கிறார்.
அதிர்ஷ்டவசமாக என் வாழ்க்கையில் நிறைய பயணத்தை சந்திக்க நேர்ந்தது. அது கொடுத்த அனுபவம் அரிது. அதுதான் என் பலம்கூட. ஆகவே அதைவைத்து என் புனைவுகளை செய்தேன். அவை புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்தன. மைக்கேல் ஒண்டாச்சி என்பவர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு 60 வருடங்களுக்கு முன்னர் குடிபெயர்ந்தவர். சமீபத்தில் அவர் எழுதிய நாவல் The Cat’s Table. இலங்கை பின்னணியில் கதை ஆரம்பித்து மேல் நகர்கிறது. அவர் இலங்கையைவிட்டு புறப்பட்டு 60 வருடம் ஆனாலும் இலங்கை அவரை விட்டுப் போகவில்லை. என்ன சொல்கிறேன் என்றால் புலம் பெயர்ந்தவர்கள் தாம் விட்டு வந்த சொந்தங்களையும், புலம்பெயர்ந்த நாட்டில் கண்ட சொந்தங்களையும் மட்டும் எழுதினால் போதாது. புலம் பெயர்ந்த நாட்டு மக்களைப் பற்றியும் எழுதவேண்டும். அப்பொழுதுதான் அந்த எழுத்து உலகத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறது.
ஒரு துளி சம்பவத்தை எடுத்துப் பெருக்கி அதை உலக அனுபவமாக மாற்றுவதுதானே இலக்கியம். உலக பயணத்தில் கிடைக்கும் அனுபவம் எத்தனை அற்புதமானது. அதை இலக்கியமாக்கும்போது தமிழ் இலக்கியம் செழிப்படைகிறது. தமிழிலே ’உவன்’ என்ற வார்த்தை உண்டு. வேறு ஒரு மொழியிலும் அது கிடையாது. ஆகவே தமிழ் சிறந்த மொழியா? அல்கொங்குவின் மொழியில் ’நான், நாங்கள்’ போன்ற வாஎர்த்தைகள் இல்லை. ’நீ’ மட்டும்தான் உண்டு. ஆகவே அது தாழ்ந்த மொழியா? ஒவ்வொடு நாட்டிலும் உள்ள தனித்தன்மை, மனிதப் பண்பு, மொழி, கலாச்சாரம் அவற்றின் உயர்வு கண்ணுக்குப் படுகிறது. எழுதும்போது அது ஒரு பொதுத்தன்மையை பெறுகிறது. அதுதான் இலக்கியத்தை மேன்மையடைய வைக்கிறது என நான் நினைக்கிறேன்.
10) இலக்கியங்கள் தேசிய, புவியியல் பண்பாடு மற்றும் வாழ்வியல் அமைவுகளுக்கு ஏற்ப பெயர் கொண்டு சுட்டும் மரபே வழக்காக இருந்து வருகிறது. உதாரணமாக தமிழக இலக்கியம், ஈழத்தமிழ் இலக்கியம், மலேசியத் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தங்களது கதைகள், பல்வேறு புவியியல்சார் நாடுகளான இலங்கை, இந்தியா, சுவிடன், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஸியாராலியோன், பாகிஸ்தான் என விரியும் உலகம் தழுவிய கதைப்புலங்களின் மாறுபடும் மொழி, இனம், நிறம் உணவுப்பழக்கங்கள் சடங்குகள், சமய வழிபாடுகள், போன்ற வேறுபாடுகளின் முரண்நிலையைப் பதிவு செய்துள்ளன. இந்நிலையில் தங்கள் எழுத்துக்களை எவ்வாறு புவியியல் சார்ந்து பெயர்சுட்டலாம்?
எதற்காக புவியியல் சார்ந்து ஒரு பெயர் சூட்டவேண்டும்? நான் உலகப் பொதுவான படைப்பை நோக்கியல்லவா நகர்ந்துகொண்டிருக்கிறேன். யாராவது இவர் ’ஈழத்து எழுத்தாளர்’ என்று என்னை அறிமுகம் செய்துவைத்தால் எனக்கு அது பிடிக்காது. ’ஈழத்தில் பிறந்த தமிழ் எழுத்தாளர்’ என்பதுதான் சரி.
ஆங்கிலத்தில் எழுதும் அகில் சர்மாவை நான் நேர்காணல் செய்திருக்கிறேன். அவர் ஆங்கிலத்தில் எழுதிய இரண்டு நாவல்களும் புகழ்பெற்றவை. பல விருதுகள் வென்றிருக்கிறார். அமெரிக்க எழுத்தாளர் என்பது அவருக்கு பிடிக்காது. இந்திய எழுத்தாளர் என்பதும் பிடிக்காது. இந்திய அமெரிக்க எழுத்தாளர் என்றே அறியப்படவேண்டும் என விரும்புகிறார். புலம்பெயர் எழுத்தாளர் என்பதையும் அவர் விரும்புவதில்லை. நான் ’ஈழத்து கனடிய தமிழ் எழுத்தாளர்’ என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன்.
11) தங்களது கதைகளில் நாயன்மார்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், சிலப்பதிகார, இராமாயண, மகாபாரத காவியங்கள், மற்றும் ஒளவையாரும் அவரது வாழ்க்கையும் போன்றவற்றிலிருந்து தொன்மங்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். இப்படி தொன்மக் குறியீடுகளை அதிகமாகப் பயன்படுத்திய எழுத்தாளர் தாங்கள்தான். ஒரு எழுத்தாளனுக்கு பழந்தமிழ் அறிவு முக்கியமானது என்று நீங்கள் கருதுகின்றீர்களா?
ஒரிசா மாநிலத்திலுள்ள அத்திக்கும்பா கல்வேட்டு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கி.மு 2ம் நூற்றாண்டில் கலிங்கப் பேரரசன் பண்டைய பிராமி எழுத்துக்களில் பொறித்து வைத்தது. கல்வெட்டு அவரைப்பற்றி இப்படிச் சொல்கிறது.’1300 ஆண்டுகளாக தொடர்ந்து படை எடுத்து வரும் தமிழ்நாட்டு சேர சோழ பாண்டிய மன்னர்களின் கூட்டணியை முறியடித்தார்.’ அப்படியென்றால் என்ன பொருள். 3500 ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். எங்கள் சங்க இலக்கியம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதிலே இருந்துதான் எல்லாமே பிறந்தது. சங்க இலக்கியத்தில் இல்லாத ஒன்றை அதற்குப் பின்னர் வந்த இலக்கியங்களில் காணவே முடியாது.
புறநானூறு 305 இப்படிச் சொல்கிறது.
களைத்து, மெலிந்து
இரவில் வந்த
இளம் பார்ப்பனன்
அரண்மனைக்குள் புகுந்து
சில சொற்கள் சொன்னான்.
போர் நின்றது.
இதைவிட சிறந்த சிறுகதை உண்டா? பார்ப்பனன் எதற்கு வந்தான்? எங்கிருந்து வந்தான்? யார் அனுப்பிய செய்தி? என்ன சொன்னான்? யார் அரசன்? ஏன் போர் நின்றது?
நக்கீரர் எழுதிய ’நெடுநல்வாடை’ பத்துப்பாட்டுகளில் ஒன்று. 188 வரிகள் மட்டுமே கொண்ட இந்தப் பாடலை எத்தனை தரம் படித்தாலும் அலுக்காது. நீண்ட நல்ல குளிர்காலம் என்பது பொருள். குளிர்காலம் எப்படி நல்ல காலமாக இருக்க முடியும்? இதைவிடச் சிறந்த பின்நவீனத்துவ கதை படிக்கக் கிடைக்குமா? 2381 சங்கப்பாடல்களில் ஏழு பாடல்களை ஈழத்து பூதந்தேவனார் எழுதியுள்ளார். இன்னும் எத்தனை பாடல்கள் அவர் எழுதி அவை எமக்கு கிடைக்காமல் போயினவோ?
கணிதமேதை ராமானுஜன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குப் போனபோது தான் இளவயது முதலே கண்டுபிடித்து நோட்டுப் புத்தகத்தில் எழுதி பாதுகாத்த கணித தேற்றங்களை எடுத்துச் சென்றார். அதைப் படித்துப் பார்த்த பேராசிரியர் ஹார்டி திகைத்துப்போனார். ஏற்கனவே மேற்கிலே கண்டுபிடிக்கப்பட்ட பல தேற்றங்களை இவர் மீண்டும் கண்டுபிடித்திருக்கிறார். முறையான படிப்பு இல்லாததால் வேறு யாரோ கண்டுபிடித்ததை அவர் மீண்டும் கண்டுபிடித்தார்.
அதே மாதிரி பழைய இலக்கியங்களில் பரிச்சயம் இருந்தால்தான் அதை தாண்டி எழுத முயல முடியும். அதனால்தான் எமது இலக்கியச் செல்வத்தை ஓர் அளவுக்காவது நாம் அறிந்து வைக்கவேண்டும். ஏனெனில் அனைத்துமே அங்கேயிருந்துதான் வந்திருக்கிறது. அதுதான் ஆரம்பம். என்னைப் பார்க்க வரும் இளம் எழுத்தாளர்களுக்கு நான் என் நூல்களை பரிசாக அளிப்பதில்லை. சங்க நூல்களில் ஒன்றை இலவசமாகக் கொடுத்து அனுப்புவேன். அத்துடன் ஏ.கே ராமானுஜன் எழுதிய Poems of Love and War நூலை பல வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு தபாலில் அனுப்பியிருக்கிறேன். பழந்தமிழ் அறிவு சிறப்பாக எழுதுவதற்கு நிச்சயம் உதவும்.
12) தாங்கள் எழுதிய ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்” நாவலா? புனைவுசார்ந்த சுயசரிதைக்குறிப்பா? தங்களது நிஜவாழ்வின் தரிசனக் குறிப்பா? சிறுகதைகளின் தொகுப்பா? வாசகனின் அனுபவத்தைப்பொறுத்து மாறுபடும் இந்தப்படைப்பை தாங்கள் எந்த வகைக்குள் அடக்குகிறீர்கள்?
வகைப்பாட்டுக்குள் அடக்கவேண்டியது வாசகரின் கடமை. இந்த வகைப்பாட்டுக்குள் அடங்கவேண்டும் என்றெல்லாம் எழுத்தாளர் யோசித்து எழுதுவதில்லை. Norman Mailer என்ற அமெரிக்க எழுத்தாளர் Executioner’s Song என்ற நூலை எழுதினார். இது ஒரு கொலைகாரனின் உண்மைச் சரிதம். ஆனால் அவர் உண்மை கெடாதபடி சுவாரஸ்யத்துக்காக புனைவும் சேர்த்திருந்தார். அமெரிக்காவின் புலிட்சர் பரிசுக்குழு அவருடைய நூலுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்தது. ஆனால் என்ன வகைப்பாடு என்று அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை. இறுதியில் உண்மைக் கதைக்கு புனைவு விருது வழங்கப்பட்டது. ஒரு புதிய வகைப்பாடும் உருவானது. Creative non-fiction.
’உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ அப்படி ஒன்றும் புதுமையானது அல்ல. அசோகமித்ரன் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகம் நடத்திய பட்டறைக்குச் சென்றபோது அங்கு நேர்ந்த அவருடைய அனுபவங்களை வைத்து ஒரு நூல் எழுதினார். அதுதான் ’ஒற்றன்’ நாவல். அவருடைய அனுபவத்தில் கொஞ்சம் புனைவு கலந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை. எல்லாம் ஒன்றாகப் படிக்கும்போது அது நாவலாகிறது.
The Help என்ற ஆங்கில நாவலும் இப்படித்தான். கதெரின் ஸ்ரொக்கெட் வீட்டு வேலைக்காரிகளைப் பற்றி எழுதினார். தனித்தனியாகப் படிக்கும்போது சிறுகதையாகவே இருக்கும். ஒன்று சேர்ந்தால் நாவல். தமிழ் வாசகர்கள் புதுவிதமான உத்திகளுக்கும், கதை சொல்லும் முறைக்கும் தங்களை தயாராக்கிக் கொள்ளவேண்டும்.
13) தங்களது கதைகள் வாழ்வின் ஆதாரசுருதியான விடயங்களைப் பேசாமல் விநோதமான விடயங்களை, கண்ட காட்சிகளை அபூர்வமான விடயங்களைப் பேசுவதாக உள்ளன. இதனால் தங்களது எழுத்துக்களின் தீவிரத்தன்மை குறைந்துவிடாதா?
வாழ்க்கைதானே மனிதர்களின் ஆதாரசுருதி. அதைப்பற்றித்தானே விசாரணை எல்லாம். 150க்கு மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அவை அனைத்துமே மனித இயல்பு பற்றித்தான். பல்வேறு சூழ்நிலைகள், நிகழ்வுகளைச் சித்திரித்து உள்மன ஆழங்களுக்கு அவை இட்டுச் செல்லும். வாசிப்பதற்கு இலகுவாகவும் எளிமையாகவும் இருந்தால் அவை தீவிர இலக்கியம் இல்லாமல் ஆகிவிடுமா? எனக்குத் தெரிந்த ஆசிரியரொருவர் எழுதிய கதையை படித்துவிட்டு நண்பன் புரியவில்லையே என்று சொன்னான். எழுதியவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒருவருக்கு புரியவில்லை என்றால்தான் அது தீவிர இலக்கியம் என்று அவர் நம்பினார்.
புதுமைப்பித்தனின் ’கோபாலய்யங்காரின் மனைவி’ என்ற சிறுகதை படிக்கச் சிரிப்பாக வரும். அவள் ’ஏ பார்ப்பான்’ என்றும் அவர் ’எடச்சிறுக்கி’ என்றும் கொஞ்சுகிறார்கள். ஆனால் கதை மாந்தர்களின் தனித்தனி மனப்பின்னல்கள் வாசகரின் இதய ஆழத்தை தொட்டுவிடும். டொஸ்ரோவ்ஸ்கியின் ’கரமசோவ் சகோதரர்களின்’ ஆரம்ப வரிகளே சிரிப்பைத் தரும். நிலக்கிழார் பாவ்லொவிச் கரமசோவ் பற்றி ஆசிரியர் வர்ணிக்கிறார். ’இவர் பெரிய நிலப்பிரபு ஒன்றும் இல்லை. ஒரு வாய்ப்பு கிடைத்தால் யார் வீட்டிலும் புகுந்து உணவு மேசையில் உட்கார்ந்து கொள்ளக்கூடியவர். கடற்பஞ்சுபோல மக்களை உறிஞ்சிவிடுவார்.’ என்ன நகைச்சுவையான வர்ணனை? ஆனால் கரமசோவ் சகோதரர்கள் மிகத் தீவிரமான இலக்கியம்.
என்னுடைய எல்லாச் சிறுகதைகளுமே தீவிரத்தன்மை கொண்டவை. எளிமையும் சுவாரஸ்யமும் இருப்பதால் அவை தீவிரத்தன்மை இல்லாதவை என ஆகிவிடா. அப்படியான கதைகளை நான் எழுதியது கிடையாது.
14) இலக்கியத்தில் விமர்சனத்தின் பங்கு யாது. தமிழில் இன்றைய விமர்சனப்போக்கு சரியான பாதையில் செல்கிறதா?
தமிழ் நாட்டுக்கு இத்தாலியில் இருந்து வந்து தமிழ் கற்று பாண்டித்தியம் அடைந்தவர் வீரமாமுனிவர் (Joesph Beschi). இவர் ’தேம்பாவணி’ என்ற நூலை எழுதி மதுரை தமிச் சங்கத்தில் அரங்கேற்றினார். அவருக்கு பலத்த எதிர்ப்பு. ஒரு புலவர் எழும்பி கேள்வி கேட்டார். ‘எல்லாம் தெரிந்த பெஸ்கி அவர்களே வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?’ அதற்கு பெஸ்கி சொன்ன பதில் பிரசித்தமானது.
ஆதியிலிருந்து ஒருவரின் படைப்பில் பிழை கண்டுபிடித்து மகிழும் கூட்டம் ஒன்றிருக்கிறது. மதிப்புரை என்றால் பிழை கண்டுபிடிப்பது என்று அவர்கள் அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பத்திரிகாசிரியர் நூலை விமர்சனத்துக்கு கொடுக்கும்போது சொல்கிறார். ’விமர்சனத்தில் இவரை ஒரு பிடி பிடியுங்கள்.’ என்ன பொருள்? பத்திரிகாசிரியருக்கு எழுதியவரை பிடிக்கவில்லை.
ஒருவருடைய மதிப்புரை வலுவானதாக, நியாயங்களோடு நடுநிலையில் நின்று எழுதப்படுமானால் எல்லா எழுத்தாளர்களும் அதை வரவேற்பார்கள். எழுத்தாளர்களுக்கு தங்கள் எழுத்தை மேம்படுத்த வேண்டும் என்ற ஆசையுண்டு. நல்ல தரமான விமர்சனம் எழுத்தாளர் முன்னேறுவதற்கு உதவியாக அமையும். ஆனால் பல விமர்சனங்கள் காழ்ப்புணர்வுடன் வெளிவருவது தெரியும். ஓர் ஆசிரியரைப் பிடிக்காவிட்டால் அவருடைய புத்தகமும் பிடிக்காது.
ஓர் ஆங்கில எழுத்தாளர் சொன்னார் ’நீ நன்றாக எழுதுவது சில பேருக்கு பிடிக்காது. உன்னைக் கவிழ்க்கவே பார்ப்பார்கள். என்ன செய்வது? முன்னுக்கு ஓடும் நாயைத்தான் பின்னுக்கு வரும் நாய்கள் கடிக்கும்’ என்று. இது தவிர்க்க முடியாதது. ஓர் ஆறுதல் உண்டு. எழுத்தாளருக்கு நாட்டிலே சிலை வைப்பார்கள். எந்த விமர்சகருக்கும் எந்த நாட்டிலும் சிலை கிடையாது.
15) தற்காலத்தில் தமிழில் இணையத் தளங்களில் பல எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். முகநூல்களில் கவிதைகள் சிறுகதைகள் பிரசுரமாகின்றன. அவற்றிற்கு நண்பர்கள் ‘லைக்” போட்டு உற்சாகப்படுத்துகிறார்கள். ‘எடிற்றர்” என்று ஒருவர் இல்லாதது வாய்ப்பாகவும் இருக்கிறது. இப்படியே போனால் இலக்கியதரம் என்னவாகும்?
இணையத் தளங்களில் எழுதுவது வரவேற்கத் தக்கதே. முன்பெல்லாம் எழுத்தாளர்கள் ஒரு தனிக் குழுவாக இயங்கினர். இப்பொழுது எழுதுவது மிகச் சுலபமாகிவிட்டது. நான் எழுத ஆரம்பித்த காலங்களில் எழுதுவதென்பது நிறைய உடல் உழைப்பை கோரும் விசயம். நீண்ட பேப்பரில் கையினால் எழுதி அனுப்பும்போது நகலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். சிலவேளை பத்திரிகை ஏற்கும்; பலதடவை நிராகரிக்கும். மீண்டும் எழுதவேண்டும். பத்திரிகையில் பிரசுரித்தால் அடுத்த மாதம் பத்திரிகையில் வாசகர் விமர்சனம் வரும். சிலர் திட்டியிருப்பார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் எழுதவேண்டும்.
இப்பொழுது அப்படியில்லை. கணினியில் எழுதி அப்படியே பத்திரிகைக்கு அனுப்பலாம். அது உடனேயே இணையத்தில் பிரசுரமாகிறது. வாசகர்கள் உடனுக்குடன் எதிர் வினையாற்றுகிறார்கள். சிலர் உற்சாகமூட்டுகிறார்கள். இவர்களுக்கு எடிட்டர் தேவையில்லை. இணையத்தில் ஆயிரக்கணக்கான எடிட்டர்கள் இவரை வழி நடத்துகிறார்கள். ஓரு ஆரம்ப எழுத்தாளருக்கு இதை விடச் சிறந்த வரவேற்பு எங்கே கிடைக்கும்? இணையத்தில் எழுதத் தொடங்கி பிரபலமாகி இன்று எழுதும் பல எழுத்தாளர்களை நான் அறிவேன். இணையம் இல்லாவிட்டால் இவர்கள் எழுத்தாளர்களாக மலர்ந்திருப்பார்களோ என்பது சந்தேகம்தான்.
16) இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் நேர்காணல் செய்துள்ளீர்கள். நமது தமிழ் எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கும் இடையிலான படைப்புலகம் சார்ந்த எத்தகைய வேறுபாட்டை நீங்கள் காண்கிறீர்கள்?
ஆங்கில எழுத்தாளர்களை நேர்காணல் செய்தபோது பல விசயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் எல்லோருமே எழுத்தை முழுத் தொழிலாகக் கொண்டவர்கள். எழுத்தின் மூலமே அவர்கள் சம்பாதித்தார்கள். தமிழில் கைவிட்டு எண்ணக்கூடிய ஒரு சில எழுத்தாளர்களே இப்படி முழுநேர எழுத்துத் தொழிலில் இருக்கிறார்கள். மீதி எல்லோருமே பகுதிநேர எழுத்தாளர்கள். இதிலே சில அனுகூலங்களும் உண்டு. ஆங்கில எழுத்தாளர்கள் பதிப்பாளரிடம் முன்பணம் பெற்று எழுதுவதால் நேர நெருக்கடிக்கு உள்ளாகி அவசரமாக ஏதோ எழுதித் தப்பியிருக்கிறார்கள். தமிழில் அப்படி இல்லை. எழுத்தாளரால் தொந்திரவு இல்லாமல் நிதானமாக எழுத முடிகிறது.
இன்னொரு முக்கியமான விசயம் நான் நேர்காணல்செய்த எழுத்தாளர்கள் எல்லோருமே புனைவு இலக்கியம் முறையாகக் கற்றவர்கள். Master of Fine Arts பட்டதாரிகள். வருமானம் குறைந்த எழுத்தாளர்களையும் சந்தித்திருக்கிறேன். வெற்றி கிட்டுமட்டும் தொடர்ந்து மனம் தளராமல் எழுதுகிறார்கள். ஓர் எழுத்தாளரின் முதல் புத்தகத்தை 50 பதிப்பகங்கள் நிராகரித்தன. 51வது பதிப்பகம் வெளியிட்டது. 50 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.
அவர்கள் எழுத்தை மிகத் தீவிரமான ஒரு தொழிலாகவே பார்க்கிறார்கள். திருப்தி வரும்வரை திருத்தி திருத்தி எழுதுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அலிஸ் மன்றோ 70 பக்கம் எழுதிவிட்டு அதை தூக்கிப் போட்டிருக்கிறார். ‘எழுதியதை எறிந்துவிட்டீர்களா’ என்று கேட்டேன். சிரித்தார். எழுதியவற்றை சிறு சிறு பத்திகளாக வேறு வேறு கதைகளில் சேர்த்துவிட்டதாகச் சொன்னார்.
இன்னொன்றும் ஆச்சரியப்பட வைத்தது. ஒரு சிறுகதையோ நாவலோ எழுதி அனுப்பினால் பத்திரிகை அதை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. எல்லா பத்திரிகை அலுவலகங்களிலும் fact checker (உண்மை சரிபார்ப்பவர்) இருக்கிறார். அவர் சரிபார்த்த பின்னரே பிரசுரத்துக்கு போகும். டேவிட் செடாரிஸ் என்ற பிரபல எழுத்தாளர் நியூ யோர்க்கர் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் பாரிஸ் நகரத்தில் தான் பயணம் செய்த பஸ்ஸின் நிறத்தை எழுதிவிட்டார். அவர்கள் பாரிஸ் நகர பஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டு அவர் எழுதியது சரியென்று கண்டுபிடித்த பின்னர்தான் கட்டுரையை வெளியிட்டார்களாம். இதை அவரே சொன்னார்.
சமீபத்தில் எனக்கும் ஓர் அனுபவம் ஏற்பட்டது. National Geographic பத்திரிகையில் இருந்து எனக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. இலங்கை பற்றி ஒருவர் எழுதிய கட்டுரையில் ஒரு வரியை சரிபார்க்கச் சொல்லி கேட்டிருந்தனர். மிகச் சின்ன விசயம்தான் என்றாலும் ஒவ்வொன்றையும் சரிபார்த்துத்தான் வெளியிடுகிறார்கள். எழுத்தாளர்கள் தீர விசாரிக்காமல் சும்மா எழுத முடியாது.
17) பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கும் நீங்கள் அங்கிருந்து பார்க்கும்போது சமகால ஈழத்துப் படைப்புகள் எத்தகைய கணிப்பைத் தருகின்றன?
ஈழத்தின் சூழல் இலக்கியத்துக்கு ஏற்றதாகத்தான் இருக்கிறது. சமீபகாலத்தில் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால் புத்தகங்கள் கிடைப்பது. ஒரு காலத்தில் புத்தகத்துக்கு ஆறுமாதம் காத்திருப்போம். இப்போவெல்லாம் 6 நாட்களில் புத்தகங்களை இணையம் மூலம் தருவிக்க முடிகிறது. இதுதவிர கிண்டிலிலும், இணையத்திலும் நிறையவே வாசிக்கக் கிடைக்கிறது. புத்தகங்கள் வெளிவந்ததும் விமர்சனங்களும், விவாதங்களும் இணையத் தளங்களிலும், முகநூல்களிலும் சூடு பிடிக்கின்றன..
போர் முடிந்த பின்னர் ஈழத்துச் சூழல் மாறிவிட்டது. பல எழுத்தாளர்கள் உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் எழுதுகிறார்கள். போர் அனுபவங்கள், சிறை அனுபவங்கள், புலம் பெயர்ந்த அனுபவங்கள் என தமிழ் இலக்கியத்துக்கு மிகப் பெரிய வரவு கிடைத்திருக்கிறது. ஈழத்து இலக்கியம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துகிறது. ஈழத்து படைப்பாளிகள் தங்கள் எழுத்தை பதிப்பிக்க முடியாத சூழல் முன்பு இருந்தது. இப்பொழுது அது மாறி அநேக நூல்கள் வெளிவருகின்றன.
18) தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அறக்கட்டளைக் குழுமத்தின் ஆரம்ப உறுப்பினராக இருக்கிறீர்கள். வருடா வருடம் இயல்விருது வழங்கி இலக்கியப் பணியாளர்களைக் கௌரவிக்கிறீர்கள். இந்த அமைப்பு எப்படி ஆரம்பித்தது. எதிர்காலத்திட்டம் இருக்கிறதா?
இங்கிலாந்தில் புக்கர் பரிசு இருப்பதுபோல அமெரிக்காவில் புலிட்சர் பரிசும், கனடாவில் கில்லர் பரிசும் இருக்கின்றன. உலகத்திலே பல நாடுகளில் அந்தந்த மொழிகளில் எழுதுபவர்களுக்குப் பரிசு இருக்கிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பரிசுகள் தரப்படுகின்றன. இன்று தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். நியூசிலாந்தில் இருந்து கனடாவரை தமிழ் மக்களும் அவர்கள் இலக்கியமும் விரிந்து கிடக்கிறது. உலகத் தமிழர்களுக்கு பொதுவான ஓர் அமைப்பு இல்லை. உலகத்தில் எங்கேயிருந்தும் தமிழ் மொழியை வளர்க்கும் மேலான சிந்தனை கொண்ட பெருந்தகைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது (இயல் விருது) வழங்கி கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
திரு செல்வா கனகநாயகம் அப்பொழுது ஆங்கிலப் பேராசிரியராக ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். தென்னாசிய மையத்துடன் இணைந்து செயலாற்ற தமிழ் இலக்கியத் தோட்டம் உருவாக்கப்பட்டது. சர்வதேச நடுவர் குழுவும் அமைந்தது. முதல் இயல் விருது திரு சுந்தர ராமசாமிக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 16 இயல் விருதுகள் இதுவரை கொடுக்கப்பட்டுவிட்டன. இது ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்களிலேயே Toronto Star என்ற கனடாவின் பிரபல பத்திரிகை இலக்கியத் தோட்டத்தின் சேவை பற்றி எழுதியது. இப்பொழுது வழங்கும் இயல் விருது 2500 டொலர் பணப்பரிசும் கேடயமும் கொண்டது. பரிசாளர்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து ரொறொன்ரோ வந்து விருது பெற்றுக்கொள்கிறார்கள். அத்துடன் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்கான ஏற்பாடும் இருக்கிறது..
இயல் விருதுடன் புனைவு, அபுனைவு, கவிதை,, மொழிபெயர்ப்பு, கணிமை, மாணவர் கட்டுரை பரிசுகளும் வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இன்னும் விரிவாக்க வேண்டும். நிதிதான் பிரச்சினை. சமீபத்தில் கனடா பாராளுமன்றத்தில் தமிழ் இலக்கியத் தோட்டத்தை பாராட்டிப் பேசியது அது தன் இலக்கை நோக்கிச் சரியாகச் செல்கிறது என்ற திருப்தியை கொடுத்திருக்கிறது..
19) ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில் நீங்களும் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறீர்கள். இந்த முயற்சி எப்படித் தொடங்கியது?
திரு ஜானகிராமன், திரு திருஞானசம்பந்தம் ஆகிய மருத்துவப் பெருந்தகைகள் அமெரிக்காவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் தமிழில் அளவற்ற பற்றும், அதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற அடங்காத வேட்கையும் கொண்டவர்கள். 380 வருடங்களாக இயங்கிவரும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை கிடையாது. இந்தக் குறையை நீக்கவேண்டும் என்று நினைத்தார்கள். ஹார்வார்ட் அதிபர்களைச் சந்தித்து ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை உதவி தமிழ் இருக்க அமைப்பதற்கான ஒப்புதலை பெற்றுவிட்டனர். தமிழ் இருக்கைக்கு வேண்டிய மொத்த நிதி 6 மில்லியன் டொலர்கள். அதிலே ஒரு மில்லியன் டொலர்கள் போக, மீதி ஐந்து மில்லியன் டொலர்களை உலகத் தமிழர்களிடமிருந்து திரட்டி தமிழ் இருக்கையை உருவாக்கவேண்டும். உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் இதற்கான ஆதரவு பெருகுகிறது. அனைத்து தமிழர்களும் இந்தப் பணிக்கு ஆதரவு நல்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
20) இந்த நேர்காணல் மூலம் வேறு எதையாவது கூறுவிரும்புகிறீர்களா?
ஹார்வார்டில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவரைச் சந்தித்தேன். அவருக்கு 17 மொழிகள் தெரியும். அவர் சொன்னார். ‘இன்று எனக்கு தமிழ் பற்றி தெரிந்தது அன்று 50 வருடங்களுக்கு முன்னர் தெரிந்திருந்தால் நான் தமிழை முதல் பாடமாக எடுத்திருப்பேன்.’ தமிழின் பெருமை பற்றி வேற்று நாட்டவர் சொல்லும்போதுதான் எங்களுக்குப் புரிகிறது. .
2500 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவரும் தமிழ் மொழியின் நீண்ட சரித்திரத்தில் தமிழ் இன்று கடைசிப் படியில் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். சரித்திரத்தில் முன்னர் எப்போதும் தமிழ் இப்படியான நிலையை அடைந்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட தமிழ் இவ்வளவு உதாசீனப்படுத்தப்பட்டதில்லை. சமீபத்தில் தமிழ்நாட்டு பிரபல பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் ஞானி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்.
’முதலில் தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழிலேயே பயிலுவதற்கான உந்துதலே இல்லாத சூழலிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் எல்லாம் தமிழ் வழிக் கல்வி வகுப்புகள், ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் தாய்மொழியையே படிக்காமல், ஒருவர் முனைவர் பட்டம் வரை வாங்கக் கூடிய கல்வி முறை இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இது நடக்காது. இன்று தமிழில் படிப்போர் குறைந்துவரும் நிலையில், தமிழையே முதன்மைப் பாடமாக கொண்டு படிப்பவர் எவர்?’
இன்று கனடாவிலும் அமெரிக்காவிலும் ஆயிரக் கணக்கான மாணவர்கள் முறையாகத் தமிழ் படிக்கிறார்கள். எந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் படிக்கிறார்கள்? நேற்றுக்கூட ரொறொன்ரோவில் YRoots என்ற அமைப்பு வழியாக 20 இளம் மாணவர்கள் கணினிமூலம் தமிழ் கற்பதை கண்டு வந்தேன். தாய்மொழி மீது அவர்கள் கொண்டுள்ள பற்று பெருமிதம் அடைய வைத்தது.
மூன்று லட்சம் மக்கள் பேசும் ஐஸ்லாந்து மொழிக்கு சொந்தமாக ஒரு நாடு உண்டு. 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு ஒரு நாடு இல்லை. ஒரு கொடி இல்லை. ஒரு தேசிய கீதம் இல்லை. உலக அரங்கில் தமிழுக்காகப் போராட ஒருவரும் இல்லை. நாம்தான் போராடவேண்டும். நாம்தான் எங்கள் மொழியை காப்பாற்ற வேண்டும்.
நன்றி : ஞானம்
மிகவும் தேவையான பேட்டி.நன்றி
அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் புது எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக நெறிமுறைகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.