பாரிஸ் தாக்குதல்கள் முடிந்து ஓராண்டு ஓடிவிட்டது. அதே சமயம் ஃபிரான்ஸ் அருகிலேயே இருக்கும் நாட்டை பார்ப்போம். ஸ்விட்சர்லாந்தில் இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதல் கிடையாது. அவர்கள் மத்திய கிழக்கு சிக்கலுக்குள் தங்கள் தலையை நுழைப்பதில்லை.
நவீன யுகத்தில் மத்திய கிழக்கு என்றுமே அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய நிலைமை போல் படு மோசமான நிலை எப்போதுமே இல்லை.
ஈராக்கிலும், லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் உள்நாட்டுப் போர், முழுவீச்சில் கொழுந்துவிட்டெரிகிறது. எகிப்திலும், தெற்கு சூடானிலும், துருக்கியிலும் ஆங்காங்கே கலவரங்களும் கிளர்ச்சிகளும் முளைத்து தழைத்தோங்கி வளர்கின்றன. சென்ற பல ஆண்டுகளில் வந்து போன, உள்நாட்டு கலகங்களின் எச்சங்கள் இன்றைய அள்விலும் அல்ஜீரியாவிலும், ஜோர்டானிலும், லெபனானிலும், சவூதி அரேபியாவிலும், டூனிஸியாவிலும் ஸ்திரமின்மையை நிரூபித்து அஸ்திவாரத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. ஈரானிற்கும் சவுதி அரேபியாவிற்கும் நடுவான ஷியா / ஸன்னி பிரிவினை கோபங்களும் உச்சகட்டத்தை நெருங்கி முழு மதப்போராக மாறிக் கொண்டிருக்கின்றன. பழங்கால எல்லைத் தகராறான பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலிற்குமான போராட்டங்களும் மீண்டும் தலை தூக்கி வன்முறை வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
குவைத், மொராக்கோ, ஓமான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை இந்தப் பக்கத்து வீடு பிரச்சினைகளைத் தங்கள் நாட்டிற்குள் வராமல் இதுகாறும் பார்த்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால், சுற்றுப்பட்டு பதினெட்டு நாடுகளும் குண்டு போட்டு ஒருவரையொருவரோ, அல்லது ஒரு நாட்டிற்குள்ளேயோ அடித்துக் கொண்டு சாகும்போது, அந்த சிக்கல்களின் பிம்பம் அவர்களிடையேயும் வெளிக்காட்டும் என்னும் அச்சத்தில் பயந்து போயிருக்கின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் மொங்கோல் படையெடுப்பு தாக்குதலுக்குப் பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய அனர்த்தமான சூழலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
காங்கோவில் நடக்கும் சிவில் சண்டைகள் தன்னுடைய 22ஆம் ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. பெருவில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு 36 வயதாகிறது. ஆப்கானிஸ்தானில் 37 ஆண்டுகளாக உள்ளகப் போர்கள் தொடர்கின்றன.
லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் அரசு முழுமையாக செயலிழந்து உள்ளது. அதன் எச்சமாக பாதுகாப்பின்மையும் தடியெடுத்தவன் தண்டல்காரன் மனோப்பான்மையும் பெருகியிருக்கிறது. இங்கே சொல்லப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மன்னரோ, கொடுங்கோலரோ, தான் மட்டுமே நிற்குமாறு பார்த்துக் கொண்டு, அவருக்கு எதிராகக் குரல் கொடுத்த, அனைத்து மக்களையும் ஒன்றுகோர்க்கக் கூடிய குரல்களை அகற்றிவிட்டார்கள்.
சிரியாவில் தாக்குதலுக்குள்ளாகி அகப்பட்டவர்கள் ஈராக்கில் உள்ள உள்நாட்டு சிக்கல்களை பெரிய அளவில் வளர்த்தார்கள். இந்த இரு நாடுகளிலும் இருந்து வெளியேறியவர்கள் துருக்கியிலும் உள்நாட்டுப் போர் மூளும் சூழலை உருவாக்கினார்கள். அடுத்ததாக அவர்களின் குறி ஜோர்டான்; அதன் பிறகு லெபனான். லிபியாவில் இருந்து கிளம்பிய மிச்சம் மீதி புரட்சியாளர்கள் எகிப்தையும் மாலியையும் டூனிஸியாவையும் குறிவைக்கிறார்கள். இங்கே மூன்று போர்க்களங்கள் இப்போது ரத்தபூமியாக மாறிக் காட்சியளிக்கின்றன. இராக்கிலும் சிரியாவிலும் யேமனிலும் வளைகுடா நாடுகளும் ஈரானும் போர்க்கோலம் தரித்து ரஷியாவுடன் இணைந்து எதிரெதிர் அணியில் கொன்று குவிக்கிறார்கள்.
ஸ்விட்சர்லாந்தைப் போல் அமெரிக்காவும் இந்த இடியாப்பச் சிக்கலுக்குள் தலை நுழைக்காமல் ஒதுங்கியிருக்கலாம். அப்படி தள்ளியிருந்தாலும், ‘அமெரிக்கா மட்டும் தலையிட்டு இருந்தால் நம் பிரச்சினையெல்லாம் நொடிப் பொழுதில் தூசாகப் பறந்து போயிருக்கும்!’ என புதிய பரிணாமம் கற்பித்து, அனர்த்தமாக்கி, அமெரிக்காவின் தோழமை நாடுகளான ஃபிரான்சையும் இங்கிலாந்தையும் கூட குற்றஞ்சாட்டாமல் தவிர்க்க மாட்டார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு கூட யேமன் போன்ற வளைகுடா நாடுகள் சொர்க்கபுரியாக இருந்ததில்லை. உலகில் உள்ள 187 நாடுகளில், 154வது ஏழ்மையான நாடாக, வறுமையான இடமாக யேமன் விளங்கியது. ஐந்தில் ஒரு யேமனியர் பசியால் பட்டினியாகவே இருப்பதாக ஐ.நா. அறிக்கை விட்டது. நல்ல உழைக்கும் வயதில் உள்ள மூன்றில் ஒருவருக்கு வேலை கிடைக்காமல் திண்டாடினார்கள். ஒவ்வொரு வருடமும் நாற்பதினாயிரம் குழந்தைகள், தங்களின் ஐந்தாவது பிறந்த நாளைக் கூட பார்க்க முடியாமல் செத்துக் கொண்டிருந்தார்கள். இதன் நடுவில் கூடிய சீக்கிரமே — யேமனில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் என்று கண்டுபிடித்து அறிவித்தும் இருந்தார்கள்.
இந்த மாதிரி மோசமான நிலையில் இருக்கும் யேமன் நாட்டின் மீதுதான் இரானும் சவுதி அரேபியாவும் தாக்குதல் நடத்தி தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள்.
யேமனில் இருக்கும் சொற்ப தொழிற்சாலைகளையும் தயாரிப்பு மையங்களையும் வைப்பு கிடங்குகளையும் மருத்துவமனைகளையும் எரிசக்தி ஸ்தாபனங்களையும் மின்சார உற்பத்தி இடங்களையும் பாலங்களையும் குண்டு போட்டு ஏன் தகர்க்க வேண்டும்? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட யேமனியர்கள் இந்த சவுதி விமானத் தாக்குதல்களில் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடிழந்து, ஊரை விட்டு நாடோடியாக எங்கெங்கோ சென்று ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். மொத்த யேமனின் மக்கள்தொகை 28 மில்லியன்; அதில் பாதிக்கும் மேற்பட்டோர் — பதினான்கு மில்லியன் யேமனியர்கள் பசியால் வாடுகிறார்கள். அதில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடக்கம் என்கிறது அல் – ஜசீரா.
அம்ரான் நகரத்தில் இருந்து அகற்றபட்டவர்களின் தாற்காலிக இருப்பிடம். இங்கே முப்பது குடும்பங்களுக்கு ஒரேயொரு தண்ணீர் தொட்டி உள்ளது புகைப்படம் – .ரவான் ஷெயிஃப் / குளோபல்போஸ்ட்
இந்த மாதிரி பஞ்சத்திலும் நீர்வளத்திலும் பரிதவிக்கும் நாட்டின் மீது சவுதி அரேபியா ஏன் தாக்குதல் நடத்துகிறது?
எல்லாம் அல் – குவெய்தாவை பலபடுத்தும் நோக்கிலேயே செயல்படுத்தப்படுகிறது. யேமனில் தங்களுக்கென்று தனி நாட்டை அல்க்வெய்தா அமைத்துக் கொண்டிருக்கிறது. அங்கே வருமான வரி முதல் இறக்குமதி தீர்வை வரை சகலமும் வசூலிக்கிறது அல்-க்வெய்தா. இதெல்லாம் போதாதென்றால், வங்கிகளைக் கொள்ளையடிப்பது, பெட்ரோல் ஏற்றுமதியில் ஈடுபடுவது போன்ற விஷயங்களிலும் முழுமூச்சுடன் அல் க்வெய்தா இயங்குகிறது. தங்களுடைய வைப்பு நிதியில் நூறு மில்லியன் அமெரிக்க டாலர் வரை சேமிப்பாக வைத்திருக்கிறது. அந்த 100 மில்லியன் கொள்ளை தவிர, கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் ஒரு நாளைக்கு மட்டும் ஒன்றரை மில்லியன் டாலர்கள் லாபம் ஈடுக்கிறது அல் – குவெய்தா. அதே போல் சரக்கு கப்பல் பொருள்களை நாட்டிற்குள் கொணர ஒரு நாளைக்கு ஐந்து மில்லியன் சுங்கவரி விதிக்கிறார்கள்.
இதெல்லாம் எப்படி உள்ளுர்வாசிகள் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்?
இரண்டாண்டுகள் முன்பு வரை யேமன் அரசாங்கத்தில் இருந்தவர்கள் இந்தக் கோடிக்கணக்கான வருவாய் மூலம் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது அல் குவெய்தா வாழ்கிறது. ’அல் க்வெய்தா’வோ ராபின்ஹூட் போல் தங்களுக்குக் கிடைக்கும் கோடிகளில் இருந்து ஆயிரங்களை அள்ளி ஏழை யேமனியர்களை நோக்கி வீசுகிறார்கள். கனடாவின் நெக்ஸன் எனர்ஜி (Nexen Energy)யும் ஃபிரான்சின் டோடல் (Total) நிறுவனமும் சம்பாதித்ததை அல்குவெய்தா சம்பாதிக்கிறது. அல் க்வெய்தாவிற்கும் ஐஸிஸ் அமைப்பிற்கும் உலகளாவிய ஆக்கிரமிப்பு எண்ணத்தில் இருந்தாலும் உள்ளூரில் அந்தந்த இடங்களுக்கு நெருக்கமான பெயர்களையும் இஸ்லாமிய ஷரியா சட்டங்களையும் சொல்லி தங்களின் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.
பழம்பெருமையை வரைபடத்தில் பார்ப்போம்:
இந்த மாதிரி ஒரு பொற்காலம் மீண்டும் திரும்ப வேண்டாமா?
1990 வரை யேமன் இரு நாடுகளாக பிரிந்து இருந்தது. வடக்கு யேமனை ஹௌத்திகள் வைத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே ஷியா பிரிவு இஸ்லாம் கோலோச்சியது. இவர்கள் இரான் நாட்டின் நட்பாளர்கள். தெற்கே சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆண்டார்கள். தெற்கு சன்னி இஸ்லாமியர்களுக்கு சவூதி தோழமை நாடு.
ஜனவரி 2011 நடுவில் வந்தது. அரபு வசந்தம் உதித்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் சலெ கவிழ்ந்தார். அவர் வீழ்ந்த சமயம் ஹௌத்திகளின் கை ஓங்கியது. அவருக்கு அடுத்தபடியாக வந்த அப்த் ரப்பு மன்சூர் ஹதி என்பவர் ‘நான் எல்லோரையும் அரவணைத்துச் செல்வேன்’ என வாக்குறுதி தந்தார்.
ஆனால், பதவிக்கு வந்தபின்பு இரானின் எதிரி சவுதி அரேபியாவிற்கு மட்டும் விசுவாசமாக நடந்துகொண்டார். ஆட்சியில் ஹௌத்திகளுக்கு எந்தவிதமான அதிகாரத்தையும் மன்னர் ஹதி (Abd Rabbu Mansour Hadi) நல்கவில்லை. செப் 2014ல் வடக்கு ஷியாவிற்கும் தெற்கு சன்னிக்கும் போர் மூண்டது.
சவுதி அரேபியாவிற்கு இது துளிக்கூட ரசிக்கவில்லை. ஏற்கனவே தங்கள் நாட்டிலும் இதே போன்ற உரிமைக்குரல்கள் ஒலிப்பதை சவுதி நசுக்கிக் கொண்டிருந்தது. இப்பொழுதோ அண்டை நாடான யேமனிலும் ஷியா தலைதூக்கிவிட்டால், அடுத்து சவுதியிலும் அடக்கியாளப்படும் ஷியா பிரிவினர் தங்களின் சுதந்திர வேட்கையைத் துவக்கி விடுவார்கள். விளையும் பயிரை யேமனிலேயே கிள்ளுவது சவுதிக்கு நல்லது.
யேமனை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் கேட்கத்தானே ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறது! பான் கி மூன் என்ன செய்கிறார்? சவுதி அரேபியாவை கண்டித்து அறிக்கையாவது விடலாமே? அப்பாவி சிறுவர்களையும் ஆயிரக்கணக்கான யேமனியர்களையும் கொல்லும் அவர்களின் அராஜகத்தைத் தடுத்து நிறுத்தலாமே…
அப்படியெல்லாம் ஏதாவது வாய் திறந்தால் ஐ.நா. திட்டங்களுக்கு தாங்கள் தரும் நல்கை எல்லாம் ரத்தாகிவிடும் என மிரட்டி, உடனடியாக ஐநா-வின் வாயைக் கட்டிவிட்டார்கள். அந்த மாதிரி ஒரு அறிக்கையை தயார் செய்த 72 மணி நேரத்திற்குள், அந்த கண்டனத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது ஐ.நா.
உலகில் உபயோகிக்கப்படும் மொத்த எண்ணெய் கொள்ளளவில் பத்து சதவீதம் சவுதி அரேபியாவில் இருந்து உற்பத்தியாகிறது. சவுதியில்தான் எக்கச்சக்க உபரி கையிருப்பும் இருக்கிறது. எனவே சவுதியில் இருந்து வரும் எண்ணெய் இறக்குமதியின் மீது எப்போதுமே அமெரிக்காவிற்கு எப்போதுமே ஒரு கண் இருக்கும். ஒரு வேளை எதிரி ஈரான் சவூதி நாட்டின் மீது நேரடித் தாக்குதல் நடத்த நினைத்தால் அந்த விமானங்களையும் போர்க்கப்பல்களையும் நொடிப்பொழுதில் வீழ்த்த அமெரிக்கா எப்போதுமே தயார் நிலையில் இருக்கிறது.
ஆனால், சவூதியின் பிரச்சினையெல்லாம் உள்நாட்டில் இருந்து வருபவை. ஷியா பிரிவினருக்கும் ஆளும் சன்னி இனத்திற்கும் அணையாப் பகை இருக்கிறது. அரபு வசந்தம் மலர்ந்தபோது எல்லோருக்கும் பணத்தை வாரியிறைத்து, அந்த எழுச்சியை தவிடு பொடியாக்கினார் முன்னாள் மன்னர் அப்துல்லா. இப்போதைய அரசர் சல்மானும் அவருக்கு சற்றும் குறையாமல் மாதந்தோறும் பதினான்கு பில்லியன் டாலர்களை செலவழித்து காசை எரிக்கிறார். இதே மாதிரி அள்ளிவிட்டாலும் இன்னும் நான்காண்டுகள் வரை எந்தவிதக் கவலையும் இல்லாமல் சுகபோகமாக வாழ வைப்பு நிதி இருக்கிறது.
அதன் பிறகு?
அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது சவுதி சித்தாந்தம். நான்காண்டுக்குள் சிரியாவைக் கைப்பற்றி விடலாம். இராக்கில் சகோதர ராஜ்ஜியத்தை அமைக்கலாம். யேமனில் இருந்து ஈரானை விரட்டி விடலாம். அல்லது அமெரிக்காவை முழுமையாக சவுதியில் உட்காரவைக்கும் திட்டமாகக் கூட இது இருக்கலாம். இல்லாவிட்டால் அல் குவெய்தா நடத்தும் அராஜக ஆட்சி வருமானங்களை வைத்து புது வியூகங்கள் வகுக்கலாம்.
அடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.
முன்னாள் அதிபர் ஒபாமா இரான் ஆதரவு நிலைப்பாடு இல்லாவிட்டாலும் சவுதி அரேபியாவை ஆதரித்தார். அப்படியானால், முழுமனதுடன் இரான் எதிர்ப்புக் கொள்கை மற்றும் சவூதி ஆதரவு நிலைப்பாட்டுடன் வரப்போகும் ஹிலாரி க்ளிண்டன் இன்னும் உறுதியாக சவுதியின் செயல்களுக்கு நேசக்கரம் நீட்டுவார் என்பதே பலரின் கணிப்பாக இருந்தது.
ஆனால், கருத்துக்கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி, டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆகி இருக்கிறார். ட்ரம்ப்பைப் பொருத்தமட்டில் மனித உரிமையும் மக்களின் சுதந்திரமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை விட, ஸ்திரமான அரசும் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்குத தாவாமல் தங்கள் நாட்டிற்குள்ளேயே தங்களின் குடிமக்களை வைத்துக் கொள்ளும் ராஜாக்களுமே முக்கியமாகத் தோன்றுகிறது. பயங்கரவாதத்தை எந்த உபாயத்தை மேற்கொண்டாவது நசுக்கி அழிக்கும் கொடுங்கோலர்களுக்கும் உதவலாம் என்பது வருங்கால ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் உத்தி.
ஐந்து இலட்சம் சிரியர்களைக் கொன்று பதவியைத் தக்கவைத்துக் கொண்டவருடன் நல்லுறவு பேணுவது; அந்த மாதிரி கொன்று குவிப்பவருக்கு பண உதவியும் படைபலமும் நல்கிய ருஷியாவின் விளாடிமிர் புடின் உடன் கைகுலுக்குவது; செர்பியாவுடன் இருக்கும் எல்லைக்கோட்டில் சுவர் எழுப்பி பஞ்சம் தேடி புறப்படுவர்களைத் தடுக்கும் ஹங்கேரி நாட்டின் வழி செல்வது; அரச பரம்பரையின் சுகபோகங்களுக்கு நிதியுதவி நல்குவது போன்றவற்றை எதிர்பார்க்கலாம். இன்னொரு பக்கம் ‘நான் என்ன முடிவெடுப்பேன் என்பது எனக்கேத் தெரியாது; ஆனால், நான் எடுக்கும் தீர்மானங்கள் என்னை முக்கியப்படுத்த வேண்டும்!’ என்பதும் டிரம்ப்பின் சித்தாந்தம். எனவே, எதிர்பாராததை எதிர்பார்ப்போம்.
உசாத்துணை:
1. Yemen is now the world’s worst humanitarian crisis | Public Radio International
2. Contextualizing the ISIS Attacks in Europe | Across the Pond
3. Uncomfortable assumptions about security: the UK vote on support for Saudi Arabia | openDemocracy
முந்தைய பதிவு: சவுதி அரேபியாவின் ஏற்றுமதி