அசிங்க அரசியலின் வெற்றி

“As Citizens we will suffer”
இந்த வாரம் நடந்து முடிந்த வட அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு வெளியான பின் இந்த வார்த்தைகள்தான் மக்கள் வாயிலிருந்து வருகின்றன. ஹிலாரி கிளிண்டனின் வெற்றி உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படட நிலையில் அமெரிக்க மக்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள், முடிவு தெரிந்த மறுநாள் ஊடகங்கள் எப்படித் தன கணக்குத் தவறியது என்று தலையைப் பிய்த்துக்கொண்டன.
ஆரம்பித்ததிலிருந்து ட்ரம்ப் ஒரு கோமாளியாகத்தான் பார்க்கப்பட்டார். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், எதிராளியைத் தாக்கும் முறைகளும், அரசியல் பண்பாடு அறவே அற்ற, முன்யோசனை இல்லாத கருத்துக்களும் இந்தியாவுக்குப் புதிது அல்ல. நம் அரசியல்வாதிகள் நம்மை அதற்குப் பழக்கியிருக்கிறார்கள். ஆனால் மேற்குலகில் அரசியல் சாக்கடை இருந்தாலும் பொதுவில் நாகரிகம் இருக்கும். ஆனால் ட்ரம்ப் அதைப் பறக்கவிட்டு தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பாணியில் பிரச்சாரம் செய்தார். அவர் கடசியினரே அவரை ஓரம் கட்டினர். ஆனால் மர்மமான முறையில் எல்லா முக்கியமான கட்சி உள்தேர்தல்களில் ட்ரம்ப் முதலிடம் வந்தார். வேறு வழியே இல்லாமல் குடியரசுக் கட்சி அவரை அதிபர் வேட்பாளராக்கியது.
எப்படி இந்த வெற்றி சாத்தியமானது?

us_economy_job_growth_employment_america

வட அமெரிக்க நிலப்பரப்பில் 72% கிராமப்புறத்தை சேர்ந்தது. 15% மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். ஆனால் சமீபமாகப் பலர் நகரத்தை நோக்கிவருகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் கிராம வாழ்க்கையும், அது சார்ந்த விவசாயமும் லாபம் தருவதில்லை. கவனிக்கவேண்டிய அரசாங்கமோ மற்ற கவலைகளில் மூழ்கியிருக்கிறது. மருத்துவச் செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன. அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டதில் மருத்துவக் காப்பீடுகள் விலை ஏறிவிட்டன. இந்த ஏற்றம் ஒபாமா ஆரம்பித்து வைத்த அரசு மருத்துவக் காப்பீடினால் என்று குடியரசுக் கட்சி கடந்த ஆறு வருடங்களாகக் குற்றம் சாட்டிவருகிறது.
முக்கியமாக வேலைவாய்ப்புகள்: அமெரிக்கக் கல்வி முறையில் கல்லூரி படிப்பு மிக அதிகச் செலவைத் தரக்கூடியது. உதாரணமாக 2013-ல் 66% மாணவர்களே கல்லூரிக்குச் சென்றார்கள். அவர்களில் 46% சதவீதத்தினர் மட்டுமே பட்டப்படிப்பை முடித்து வெளியேறியிருக்கின்றனர். இது ஏழை நாடான ஸ்லோவேகியாவை விடக் குறைவு. படிக்க ஆசையிருந்தாலும் பணம் இல்லாததே காரணம்.
இவர்களுக்கு வேலை கிடைப்பதும் கடினம். ஏன்?
அமெரிக்கா குடியேறிகளின் நாடு. குடியேறிகள் இயற்கையாகவே தன் இருப்பை நிலைநாட்டக் கடினமாக உழைப்பாரகள். இதனால் பல உள்நாட்டு வேலைகளை அவர்கள் எடுத்துக்கொண்டனர், முக்கியமாக தொழில்நுட்பம். அவர்கள் உழைப்புதான் நாட்டை இந்தளவிற்கு வளமாக்கியிருக்கிறது என்பதெல்லாம் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தெரியாதது படிப்பை சரியாக முடிக்காதவர் படும் துன்பங்கள். பல கனரகத் தொழில்கள் சைனாவிற்கும், ஜப்பானுக்கும், பங்களாதேஷிற்கும், இந்தியாவுக்கும் மாற்றப்பட்டுவிட்டன. அமெரிக்கா உற்பத்தி நாடாக இருந்த காலம் போய் நுகர்வோர் நாடாக மாறிவிட்டது. சரியான வேலைக் கிடைக்காதவர்கள் அரசாங்க உதவிகளை நம்பியாக வேண்டிய நிலை. ஆனால் இன்றைய பொருளாதாரச் சூழலில் அரசாங்கம் அமெரிக்காவில் பொருள் உற்பத்தி செய்ய முடியாது. செய்தால் இந்தளவிற்குக் குறைந்த விலையில் விற்கமுடியாது. வாங்க ஆள் இல்லையென்றால் பொருளாதாரம் படுத்துவிடும். மொத்தத்தில் அரசாங்க நிலை ஆப்பு அசைத்த குரங்கு.
கடந்த 12 வருடங்களாக இவர்கள் அரசாங்கத்தை வெறுக்கிறார்கள். இதனோடு அரைகுறைப் படிப்பும், அவர்களின் பாரம்பரியமான மத நம்பிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் நிறப்பிரச்சினையும் சேரும்போது எப்போது வெடிக்கும் என்று தீர்மானிக்கமுடியாது. அரசாங்கத்தை ஆள்பவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உண்டானது. இவர்களின் குரல்களை வாஷிங்டனில் எதிரொளிப்போம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள் அங்குச் சென்றதும் நிறம் மாறினார்கள்.
2008-ல் ஒபாமா வென்றது அவரின் புதுமையான வாக்குறுதிகளாலும், ஜார்ஜ் புஷ் மீது இருந்த வெறுப்பினாலும், ஜான் மெக்கெய்ன் தேர்ந்தெடுத்த மிதவாத நிலையாலும்தான். இதனால் பழமைவாதிகள் அதிருப்தியில் தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை. ஒபாமாவுக்கு இளையதலைமுறையின் கண்மூடித்தனமான ஆதரவு இருந்தது. 2012-ல் 60% இளையதலைமுறை ஒபாமாவுக்கு வாக்களித்தது. 93% ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஒபாமாவுக்கு வாக்களித்தார்கள். முக்கியமாக 55% பெண்கள் அவருக்கு வாக்களித்தார்கள். இது முக்கியம். ஆனால் 100,000 டாலர்களுக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்கள் 54% குடியரசுக்கட்சியை ஆதரித்தனர். என்ன தெரிகிறதென்றால் வசதியுள்ளவர்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதில்லை.
ஆனால் முக்கியமாக ஒபாமாவிற்கு 64% ஆதரவு உயர்நிலைப்பள்ளி படித்தவர்களிடம் வந்தது. இதுவும் முக்கியம். இதுதான் ட்ரம்பிற்கு உதவியிருக்கிறது.

vote_share_percentage_regions_county

ட்ரம்ப் ஆரம்பத்திலிருந்தே அரசியல் நாகரீகம் என்று இதுவரை அமெரிக்கா அறிந்திருந்ததைக் காற்றில் பறக்கவிட்டார் என்று பார்த்தோம். படித்தவர்கள் இதை வழக்கமான பார்வையில் அவரின் தோல்வியாக எடுத்துக்கொண்டனர். ஆனால் அவர்கள் அறியாதது அவரின் இந்த முறை மேற்சொன்ன பொதுமனிதனின் குரலாக ஒலித்தது என்பதை.
ஆரம்பத்திலிருந்தே ட்ரம்ப் வாஷிங்டனை சேர்ந்தவர்களைச் சாடினார். ட்ரம்ப் இந்தத் தேர்தல் வரை தீவிர அரசியல்வாதி அல்ல. அவ்வப்போது கூச்சல் போடுவதோடு சரி. இருகட்சியினருக்கும் தன் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக நிதி கொடுத்தவர்., இருகட்சியிலும் நெருக்கமான நண்பர்கள் உண்டு…இன்று தோற்கடித்த ஹிலாரி உட்பட அதனால் அவரை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் மெதுவாக ட்ரம்ப் பொதுமனிதனின் காதுகளைத் தன உணர்ச்சிப்பேச்சுகளால் நிரப்ப ஆரம்பித்துத் தன் பக்கம் திருப்ப ஆரம்பித்தவுடன் அனைவரும் விழித்துக்கொண்டார்கள். போட்டியில் ட்ரம்ப் முன்னணி வகிக்க ஆரம்பித்தார்.
அவரின் அரசியல்

 • பொது மனிதன் என்ன கேட்க விரும்புகிறானோ அதை வாக்குறுதியாகக் கொடுத்தது.
 • அவன் வேலையை எடுத்துக்கொண்ட சீனாவுடன் ஆன பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு மீட்டுக் கொண்டு வருவேன் என்று சொன்னதைக் கேள்வி கேட்காமல் நம்ப வைத்தது.
 • தன் வேலையைக் குறைந்த ஊதியத்தில் செய்யும் மெக்சிகர்கள் பாலியல் வன்முறையாளர்கள் என்று குற்றம் சாட்டினால் அதை ஆதரிக்கச் செய்தது.
 • அமெரிக்க எல்லையில் ஆயிரக் கணக்கான மைல்களுக்குச் சுவர் எழுப்புவேன் என்றால் கைத்தட்டவைத்தது,
 • ஒபாமா கொண்டுவந்த மருத்தவக் காப்பீட்டை தூக்கி எறிவேன் என்பதையும்,
 • முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற வாதத்தை மதத்தோடு பிணைத்ததையும் ஆமோதித்தது.
 • உங்கள் உழைப்பை சுரண்டி வாஷிங்டனில் அரசியல்வாதிகள் உங்களுக்கு எதிராக உங்கள் வேலைகளை வெளியில் அனுப்புகிறார்கள்…என்னைத் தேர்ந்தெடுங்கள்…நான் அதை மாற்றிக்காட்டுகிறேன்

என்றவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடியது.
பொதுவாக அமெரிக்கக் கிராமப்புறம் இருப்பவர்களுக்கு உலக நடப்பில் அவ்வளவு ஆர்வமில்லை. இது ட்ரம்பிற்கு உதவியிருக்கிறது.
ஹிலாரி செய்த தவறுகள் பல. முதலில் அவரின் அரசியல் கண்ணோட்டம் ஒபாமா அரசாங்கத்தை ஒத்திருந்தது. அரசியல் வல்லுநர்கள் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஓபாமா மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்படுவதற்குச் சமம் என்றார்கள். ஹிலாரி பொதுமனிதனின் பிரச்னைகளில் கவனம் செலுத்தினார். முக்கியமாகப் பெண்கள் நலனில். ஆனால் இன்றைய சராசரி மனிதனின் தேவை அவனின் வீட்டில் அடுப்பு எரியவேண்டும். அதுவும் அவன் சம்பாதிக்கும் நிலையில். அவன் நுகர்வுக்குத் தயாராக இல்லை. இதை ஜனநாயக கடசியினர் அறியவில்லை. நகரத்தில் இருப்பவர்கள் ஆதரவில் வென்றுவிடலாம் என்று கனக்குப் போட்டார்கள்.
இரண்டாவதாக அவரின் பிரசார உத்தி ட்ரம்ப் இழைத்த பாலியல் சில்மிஷங்களை மட்டுமே அடிக்கோடிட ஆரம்பித்தது. இது அவருக்கு ஓட்டு பெற்றுத்தந்துவிடும் என்று நம்பினார், முக்கியமாக வெள்ளை மற்றும் மற்ற இனப் பெண்களின் ஓட்டுகள். ஆனால் நடந்தது வேறு. மத்திய வட அமெரிக்க மாகாணங்களில் உள்ள பெண்களில் பழமைவாதிகள் அதிகம். இவர்களுக்கு ட்ரம்ப் செய்த சில்மிஷங்கள் பெரிதாகத் தோன்றவில்லை (நம் ஊர் ‘ஆம்பிளைனா அப்படித்தான் இருப்பான்’). மற்றும் அவர்கள் தங்கள் வீட்டு ஆண்கள் தங்களை இரண்டாம் குடிமக்களாக நடத்துவதை இயற்கையாக ஏற்றுக்கொண்டவர்கள். தவிர அவர்களின் அன்றாடப் பிரச்சினைகள் வேறு. பிள்ளைகள் குறைந்த செலவில் படிக்கவேண்டும், வேலைக்குச் செல்லவேண்டும். அரசாங்க வரிகள் குறையவேண்டும். அதை நிறைவேற்றுபவருக்கு ஒட்டு, அவ்வளவுதான். இவர்களின் மொழியைத்தான் ட்ரம்ப் பேசினார்.
இதைத்தவிர ஹிலாரியின் மீதான பெண்களின் வெறுப்பு அவரின் 30 வருட காலப் பிரகாசமான வாழ்க்கை. அவர் இன்னொரு வாஷிங்டன் பணக்கார அரசியல்வாதியாக இந்தப் பெண்களால் பார்க்கப்பட்டிருக்கிறார். இது அவருக்குப் பாதகமாக அமைந்தது. அது தவிரப் பெண் என்பதால் அவரால் தேசத்தை உறுதியாக ஆளமுடியாது என்ற எண்ணமும் பலருக்கு இருந்தது. 53% சதவீத வெள்ளை இனத்துப் பெண்மணிகள் ட்ரம்பிற்கு வாக்களித்தனர்.
ஓபாமவைப் போல் ஹிலாரியால் இளையத்தலைமுறையினரைக் கவர முடியவில்லை. நகரத்தில் உள்ளவர்களுக்கும், கிராமத்து மக்களுக்கும் உள்ள இந்த இடைவெளிதான் ட்ரம்ப் முக்கியமான, ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களைக் கைப்பற்ற உதவியிருக்கிறது.

us_election_state_importance

தேர்தலுக்குப் பத்து நாட்கள் முன்னால் அமெரிக்க உளவுத்துறை (Federal Bureau Investigation) ஹிலாரி அரசாங்க ரகசியங்கள் அடங்கிய மின்னஞ்சல்களைத் தவறாகக் கையாண்டார் என்று குற்றம் சாட்டியது. மக்களில் 50% பேருக்கு அதன் பாதிப்பு பற்றிக் கவலையில்லை என்றாலும் அவரின் நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாக்கியது. தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னால் உளவுத்துறை பாதிப்பு ஏதுமில்லை என்று அறிவித்தாலும் சேதம் அதிகம்தான்.
ஹிலாரி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் பொது மனிதனின் சிக்கல்கள் தீரப்போவதில்லை. ஆனால் அமெரிக்காவைப் பாதிக்கும் உள்நாட்டுப் பிரிவினைகள் இந்தளவுக்கு மோசமாகியிருக்காது.
ஐரோப்பாவில் சிலகாலமாக வலது சாரிகள் தலையெடுத்து வருவதைப் பார்க்கிறோம். இது முக்கியமாகத் தங்கள் நாடுகளில் வரும் குடியேறிகளை வெறுக்கிறது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது இதை முன்வைத்துதான். இதை ட்ரம்ப் வெகுவாக ஆதரித்தார். அதே போல அமெரிக்காவை முடக்கும் பல பொருளாதார ஒப்பந்தங்களிருந்து விலக்குவதால் உள்நாட்டில் வாழ்க்கை வளம் பெறும் என்று (ஆதாரமின்றி) வாக்காளர்கள் காதுகள் எதைக் கேட்கவேண்டுமோ அதைச் சொல்லி வென்றிருக்கிறார். காலம் அவருக்கு அது எத்தனை முட்டாள்தனம் என்பதை உணர்த்தும். பொது மனிதன் அப்போதும் முகமற்ற மனிதனாகத்தான் இருக்கப்போகிறான்.
உதவியவை:

 1. http://ropercenter.cornell.edu/polls/us-elections/how-groups-voted/how-groups-voted-2012/
 2. http://www.slate.com/blogs/xx_factor/2016/11/09/white_women_sold_out_the_sisterhood_and_the_world_by_voting_for_trump.html
 3. http://www.nybooks.com/daily/2016/11/11/facebook-twitter-trump-how-internet-changed-election/
 4. https://www.washingtonpost.com/opinions/trump-voters-will-not-like-what-happens-next/2016/11/09/e346ffc2-a67f-11e6-8fc0-7be8f848c492_story.html?wpisrc=nl_opinions&wpmm=1
 5. http://solvanam.com/?p=43316