உலக வரலாறு, ஆறு கோப்பைகள் வழியாக..

வரலாறு என்றால் மன்னர்களின் வரிசையும், போர்களின் தேதிகளும் என்பதே நம் பாடப் புத்தகங்களிலிருந்து நினைவில் நிற்பது. ஆனால் பாடப்புத்தகங்களில் பேசப்படாதவற்றைப் பற்றி பல சுவாரசியமான வரலாற்று நூல்கள் வந்தபடியே உள்ளன. மனித வரலாற்றை மனிதர் உருவாக்கிய பொருட்கள் வழியாக  கண்டறிய முடியுமா? அப்படிக் கண்டறிதலும் ஒரு வரலாற்றுப் பார்வைதான். கார்ல் பாப்பர் இப்படிச் சொல்கிறார்- “There is no history of Mankind, there are only many histories of all aspects of human life“.

வரலாற்று காலம் முதலே, ஏன் வரலாற்று காலத்துக்கும் முன்பிருந்தேகூட, குடி என்பது மனித குலத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக விளங்கி வருகிறது. நீர் மட்டுமே மனிதனுக்குப் போதுமானதாக இருக்கவில்லை, அதன்கூடவே வேறு பல பானங்களும் மனித வாழ்வின் இன்றியமையாத அம்சங்களாக இருந்து வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட பானங்களைக் கொண்டே மனிதகுல வரலாற்றை எழுத முடியுமா?

six_glasses

அதைத்தான் முயல்கிறது,Tom Standage எழுதியுள்ள A History of The World in Six Glasses எனும் புத்தகம். உலக வரலாற்றை, மனித குல வரலாற்றை, 6 பானங்கள், 6 கோப்பைகள் வழியே விவரிக்கிறது இந்த நூல். ஆறு கோப்பை பானங்கள்முறையே பீர், ஒயின், எரிசாராய பானங்கள், காபி, தேநீர், மற்றும் கோகோ கோலா.

முதலில் பீர்

பீர்தான் மனிதன் நீரைத்  தவிர்த்து அருந்திய முதல் பானம்.  வரலாற்று காலத்தின் துவக்கத்தில் நமக்கு கிடைக்கும் மெசபடோமிய களிமண்  பலகைகளில்  (Tablets ) காணப்படும் குனிபோர்ம் (cuneiform) எழுத்துக்கள் எல்லாமே அநேகமாக தொழிலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் பார்லியின் அளவும், பார்லியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பீரின் அளவும்தான். ரொட்டி தயாரிப்பதிலிருந்து பீர் தயாரிக்கும் முறை வந்ததா அல்லது பீர் தயாரிக்கும் போது  அதன் பக்கவிளைவாக ரொட்டி வந்ததா என்று அனுமானிப்பதே கடினம் எனுமளவுக்கு இவ்விரண்டின் தயாரிப்புகளும் சம அளவு முக்கியத்துவம் கொண்டிருந்ததை  குனிபோர்ம் எழுத்துக்கள் கொண்ட  பல களிமண் பலகைகளில் காண முடிகிறது என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர். பல சித்திரங்களில், ஒரு பெரிய பானையிலிருந்து உறிஞ்சுகுழாய் மூலம் இருவர் பீர் அருந்தும் காட்சிகள் காணக்  கிடைப்பதையும் குறிப்பிடுகின்றார். இன்னும் ஒரு படி மேலே சென்று, பீர் தயாரிப்பதெற்கென்றுதான் மனிதன் அலைந்து திரியும் வேட்டைக்கார, நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு ஓரிடத்தில் நிலையாய்த்  தங்கியிருந்து வேளாண்மை மேற்கொள்ளும் வாழ்க்கை முறையையே தேர்ந்தெடுத்தான் என்றே சொல்கிறார். மேலும் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பீர்  இருந்தது. வளம் கொழிக்கும் பிறை (Fertile Crescent) என்றறியப்படும் மத்திய கிழக்குப் பகுதிகளில் (நமக்கு வட மேற்கு தேசங்கள்- பாரசீக வளைகுடா முதல் மேற்கு எகிப்து வரை நீளும் கூனல் பிறை) தண்ணீருக்கு அடுத்தபடியாகவும் கிட்டத்தட்ட இணையாகவும் மனிதர்களால் பருகப்பட்ட பீர், மனிதன் எண்ணிப்பார்க்காத இன்னொரு பயனையும் அவனுக்கு அளித்தது. அதுதான் ஊட்டச்சத்தும் நோய் எதிர்ப்பும், இந்த பலன்களை அந்நாளைய மனிதர்கள் அறிந்திருந்தார்களா என்று இன்று அனுமானிக்க முடியவில்லை என்றாலும், மக்கள் தொகை எண்ணிக்கை பெருகியதில்  பீரும் வேளாண்மையும் பெரும் பங்காற்றியிருக்கின்றன என்பதே இந்நூலாசியரின் கருத்து.

ஒயின்

மத்திய  கிழக்கு நாடுகளின் பெரும் கண்டுபிடிப்பும் சொத்துமாக  பீர்  இருந்தது என்றால் அதற்கடுத்தாற்போல், வரலாற்றில் எழுச்சி பெற்ற கிரேக்க நாகரிகத்தின் அடையாளம் ஒயின். கிரேக்கர்கள் தங்களை ஒயினால்தான் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கொண்டனர். ஒயின் தயாரிப்பதிலும் அதை அருந்துவதிலும், ஏன் அதற்கான குடுவைகளும், கிண்ணங்களும் தயாரிப்பதில்கூட மேலும் மேலும் மெருகேற்றத்தை கொண்டு வந்து ஒயின் இல்லாவிட்டால் கிரேக்கம் இல்லை என்றளவுக்கு கிரேக்க நகர் -அரசுகள் தங்கள் நாகரிகத்தை நிலை நிறுத்திக் கொண்டன. ஒயின் அருந்தாதவர்களையும், அதை முறைப்படி அருந்தாதவர்களையும் கிரேக்கர்கள் காட்டுமிராண்டிகள் (Barbarians) என்றே அழைத்தனர். ஒரு கட்டத்தில்,  பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஒருவரது சமூக அந்தஸ்து, அவர் வைத்திருந்த ஒயின் தயாரிப்புக்கான திராட்சைத் தோட்டங்களின் அளவைப் பொறுத்தே அமைந்தது. கிரேக்கத்தின் குடியரசு மாநிலங்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டுக்  கொண்டபோது, மற்றவரது திராட்சைத் தோட்டங்களை அழிப்பதையே பிரதான நோக்கமாகக் கொள்ளுமளவுக்கு கிரேக்க சமூகத்தில் ஒயின் செல்வாக்கு செலுத்தியது. மேலும், ஒயின் கூடவே அதை அருந்தும் இடங்களும் அங்கு நடைபெறும் விவாதங்களும் கிரேக்க சமூகத்தின் அடையாளங்களாகிப் போயின.  ஆண்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி ஒயின் அருந்தினர். அந்த இடங்களை symposia என்று அழைத்தனர். பலர் கூடி கருத்துகள்  பரிமாற்றம் செய்யும் முறைக்கு symposium என்று பெயர் வந்ததற்கும் இதுவே காரணம். புகழ் பெற்ற கிரேக்கத் தத்துவத்தில் ஒயினின்  பங்கு கொஞ்சநஞ்சமல்ல.

கிரேக்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒயின் ரோமாபுரியின் தேசிய பானமாயிற்று. சொல்லப்போனால், ரோம் கிரேக்கத்தை வென்றதா அல்லது கிரேக்கம் ரோமை வென்றதா என்று ஐயுறும் அளவுக்கு ஒயின் ரோமாபுரியில் செல்வாக்கு செலுத்தியது. ரோமாபுரியின் ஒயின் உலகெங்கும் சென்றது. கூடவே அதை அருந்தும் கிண்ணங்களும் அதை பாதுகாத்து வைக்கும் குடுவைகளும். இன்று உலகெங்கும் அகழ்வாய்வுகளின்போது  இவை கிடைக்கின்றன. பல புதைவிடங்களில் ஒயின் அருந்தும் கிண்ணங்களும் குடுவைகளும் மனிதர்களோடு சேர்த்து புதைக்கப்பட்டு வந்ததும் இன்று காணக் கிடைக்கிறது. இதற்கெல்லாம் சிகரம்  வைத்தாற்போல ரோம சாம்ராஜ்யம் கிறித்துவமயமான போதுஒயின் கிறித்துவத்தின் சடங்குகளில் முக்கியமான இடம் பெற்றது (கிறித்தவம் உட்கொண்ட பாகனீய கூறுகள் விரிவான விவாதத்துக்குரியவை).          

எரிசாராய பானங்கள்

அறியப்பட்ட மனித வரலாற்றின் முதல் 5 ஆயிரம் வருடங்களுக்கு பீரும் ஓயினும் மனிதரின் முக்கியமான பானங்களாக இருந்து வந்தன. இந்த நிலை கிட்டத்தட்ட கி.பி.1500 ஆண்டுகள் வரை நீடித்தது. அந்த சமயத்தில்தான் வடிகட்டுதல் (Distillationஎனும் கலையில் புதிய உச்சங்களைத் தொட்ட அராபியர்களிடமிருந்து அதைக் கற்றுத் தேர்ந்த ஐரோப்பியர்கள் ஒயினை வடிகட்டுவதன் மூலம் எரிசாராயத்தை (spirits) கண்டறிந்தனர். அங்கிருந்து தொடங்குகிறது எரிசாராய பானங்களின்  காலம்.

High Spirits High Seasஎன்ற பகுதியில், எரிசாராய பானங்களான ரம், விஸ்கி , பிராண்டி போன்றவைகள் உலகில் செலுத்திய ஆதிக்கத்தையும் உலகின் வரலாற்றுப் போக்கில் அவை ஏற்படுத்திய மாற்றங்களையும் விவரிக்கிறார் ஸ்டாண்டேஜ். முதன்முதலில் அமெரிக்க கண்டத்தில் கால் பதித்த ஐரோப்பியர் வெர்ஜீனியா  மாநிலம் ஐரோப்பாவின் மத்திய தரைப்பகுதியின் பருவ நிலையைக் கொண்டிருக்கும் எனவும் ஒயின் தயாரிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் எனவும் நம்பினார்கள். ஆனால் அங்கு அவர்கள் எதிர்கொண்ட சூழல் அப்படி இல்லை. நீருடன் சேர்த்து அருந்த நல்லதொரு பானத்துக்கு ஏங்கவாரம்பித்தனர், புதிதாக குடியேறிய மக்கள். அப்போது, கரீபியத் தீவுகளில் விளைவிக்கப்பட்ட கரும்பிலிருந்து கிடைத்த molassesலிருந்து தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட பானம்தான் ரம்புலியன் என்று முதலில் அழைக்கப்பட்டு பின் சுருக்கமாக ரம் என்று  அழைக்கப்பட்ட பானம் . இது வட அமெரிக்காவின் மிகப் பிரபலமான பானம் ஆகியது. அமெரிக்கத தேர்தல்களில் நீராக,  இன்று தமிழகத்து தேர்தலில் பணம் போல, செலவாகியது  ரம். மேலும், கடற்பயணங்கள் மேற்கொள்ளும் மாலுமிகளின் முக்கிய பானமாகவும் ரம் மாறியது. குறிப்பாக, ஆங்கிலேய அரசு 17ம் நூற்றாண்டில், தன் மாலுமிகளுக்கு பிரஞ்சு ப்ராந்திக்குப் பதிலாக ரம் வழங்கத் துவங்கியது.

இது வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் பாரதூரமானது. கடற்பயணிகளின் துர்சொப்பனமாக விளங்கியது scurvy எனும் நோய். இந்நோய்க்கு எல்லா நாட்டு மாலுமிகளும் விதிவிலக்கின்றி பலியாயினர்.  ஆனால், ஆங்கிலேய மாலுமிகள் ரம்மை எலுமிச்சைச் சாற்றோடு சேர்ந்து அதிகளவில் உட்கொள்ளத் தொடங்கியவுடன், எதிர்பாராவிதமாக ஆங்கிலேயே கப்பற்  படைகளில் scurvy நோயின் தாக்குதல் பெருமளவு குறையத்  துவங்கிற்று. காரணம், ரம்மிலும், முக்கியமாக எலுமிச்சை சாற்றிலும், இருந்த விட்டமின் சி.  மற்ற ஐரோப்பிய நாட்டுப் படைகள், இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கையில், இங்கிலாந்தின் கப்பற்படை scurvyயிலிருந்து விடுபட்டு  வலுப்பெற்றுக் கொண்டே சென்றது. அதுவே 18, 19ம் நூற்றாண்டுகளில் காலனியத்தின் தலைமகனாக, சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தை கொண்டதாக,  இங்கிலாந்தை ஆக்கியது.

குடிநீருக்கு அடுத்தபடியாக, ஏன், பல சமயங்களில் அதற்கு இணையாகவும்மேலாகவுமாகவே  அருந்தப்பட்ட இப்பானங்களின்  மிகப்பெரிய குறை, அவற்றின்  போதையூட்டும் தன்மை. இது மனித நேரத்தை விரயமாக்கியது. மேலும், கிரேக்க நாகரிகத்தின், ரோமின் வீழ்ச்சிக்குப்  பிறகான  ஐரோப்பா 15ம், 16ம் நூற்றாண்டுகளில் விழித்தெழுந்தது. புத்தெழுச்சி மிக்க அறிவொளிக்காலத்தில் அடி  எடுத்துவைத்த ஐரோப்பா போதை அளிக்காத புத்துணர்வூட்டும் ஒரு பானத்தின் வருகையை எதிர்நோக்கி இருந்தது எனலாமா? அப்படி வந்து அந்த அறிவொளிக் காலகட்டத்தின்  சின்னமாகவும் உந்துசக்தியுமாகவே மாறிய ஒரு பானம் காபி.

காபி

காபி முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அபிஸீனியாவா யேமனா  என்று இன்றளவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இரண்டுக்கும் இரண்டு கதைகள் உள்ளன . எவ்வாறு இருப்பினும், காபி முதலில் இஸ்லாமிய நாடுகளில்தான் அருந்தப்பட்டு வந்தது. இஸ்லாமிய மதத்தின் ஒரு பிரிவானசூஃபி மறைஞானிகளின் பானமாகவும்  திகழ்ந்தது காபி. ஆனால்  போதை தரும் பானங்கள் தடைசெய்யப்பட்ட இஸ்லாமில் முதலில் அதற்கு அதன்  குருமார்களிடையே எதிர்ப்பே காணப்பட்டது. நீண்ட விவாதங்களுக்குப் பிறகே அதில் போதைத் தன்மை இல்லையென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. வெகு சீக்கிரத்திலேயே இஸ்லாத்தின் ஒயின் என்று சொல்லப்படுமளவுக்கு, காபி இஸ்லாமிய உலகில் பரவலானது. குறிப்பாக கெய்ரோவின் காபி விடுதிகள்  மிகவும் புகழ் பெற்றன. அங்கிருந்து இத்தாலி சென்று ஐரோப்பாவை வென்ற காபி, அக்காலகட்டத்தின் மிக  முக்கிய தேசமாகிய இங்கிலாந்தில் நிலைபெற்றது. லண்டனின்  மூலை  முடுக்குகளில்  எல்லாம் காபி விடுதிகள் முளைத்தன. முழுக்க முழுக்க ஆண்களே பயன்படுத்திய இந்த காபி விடுதிகள் அதற்கு முந்தைய போதை தரும் பானங்களின் விடுதிகளுக்கு நேர்மாறாக, அழகானவையாகவும், பல நூல்கள் கொண்ட இடங்களாகவும் அறிவார்ந்த விவாதங்கள் இடம்பெறும் கூடுகைகளாகவும் இருந்தன. இங்கிலாந்தின் ஒவ்வொரு தெருவிலூமிருந்த காபி விடுதியும், ஒவ்வொரு துறைக்குப் பெயர்  பெற்று விளங்கிற்று. ஒரு சமயத்தில், காபி விடுதிகளை மூடச் சொல்லியும் அவற்றிலிருந்து தம் கணவர்களை   மீட்கச் சொல்லியும் இங்கிலாந்தின் பெண்கள் போராடினர் என்ற ஒரு சுவாரசியமான குறிப்பையும் தருகிறார் இந்த நூலாசிரியர்.

அதைப் போலவே, மது விடுதிகளிலிருந்தும் காபி விடுதிகளுக்கு, எதிர்ப்பு வந்தது. இவற்றையெல்லாம் மீறி, காபி இங்கிலாந்து அறிவு ஜீவிகளின் பானமாயிற்று. அதன் விடுதிகளின் புகழும் அங்கு நடைபெறும் விவாதங்களின் தரமும் விரிந்து கொண்டே  சென்றன. கிரேக்கத்தின் symposiaக்களின் இடத்தை இங்கிலாந்தின்  காபி விடுதிகள் அடைந்தன. ராபர்ட் ஹூக், ஐசக் நியூட்டன்  ஆகியோரெல்லாம்கூட காபி விடுதிகளிலேயே தம் கொள்கைகளை, புதிய கண்டுபிடிப்புகளை  பகிர்ந்து கொண்டனர். ஒரு காபி விடுதியில் விவாதித்துக்  கொண்டிருக்கும்போது ராபர்ட் ஹூக்  விடுத்த சவாலை அடுத்தே நியுட்டன் தன் Principia Mathematica நூலை எழுதுவதில் தீவிரமாக முனைந்தார் என்பது ஒரு சுவாரசியமான செயதி.

பின்னர் காபி பிரான்சுக்குப் பரவி அங்கும் இம்மாதிரியான விடுதிகளில் நடந்த சூடான விவாதங்களும்  பிரெஞ்சு புரட்சிக்கு ஒரு காரணமாக அமைந்தன என்ற தகவலும் இதில் உள்ளது. குறிப்பாக, 1789ம் ஆண்டு அரசுடன் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தபின் ஜூலை 12ம் தேதி, Cafe of Foy  என்ற காபி விடுதியிலிருந்த இளம் வழக்கறிஞரான காமில் டெஸ்மோலின்ஸ் (Camille  Desmallins) கையில் ஒரு துப்பாக்கியுடன் வேகமாக வெளிவந்து, ‘To Arms, Citizens, To Armsஎன்று அறைகூவில் விடுத்ததைத் தொடர்ந்து அங்கேயே அரசு படைகளுக்கும் குழுமியிருந்த மக்கள் கூட்டத்துக்கும் இடையே பூசல் மூண்டு, இரண்டு நாட்களுக்குப் பின் பாஸ்டில் சிறைச்சாலையை உடைக்குமளவுக்கு வேகம் பெற்றது என்பதை விவரிக்கிறது இந்நூல்.

இன்றும் ஏதாவது ஒரு முக்கிய விஷயம் முடிவு செய்யப்பட வேண்டுமென்றால் ஒரு காபி மேசையின் முன் அமர்ந்து பேசலாம் என்று அழைப்பதே பொது வழக்காக உள்ளது.

தேநீர்

காபி அறிவுஜீவிகளின் பானமாக இருந்தது, இருக்கிறது என்றால்,தேநீர் உழைப்பாளிகளின் பானம். காபி ஐரோப்பாவில் ஊடுருவிக் கொண்டிருந்த அதே நேரம்தான் தேநீரும் பரவுகிறது. காபி நேரடியாக அரசியல் விஷயமாகவில்லை. ஆனால், தேநீர் அப்படியல்ல. ஆங்கிலேயே சாம்ராஜ்ய விரிவாக்கத்துக்கும் தேநீருக்கும் நேரடி சம்பந்தம் உண்டு.  அமெரிக்க சுதந்திர போருக்கும் தேநீருக்கும் அப்படியே. தேநீர் சீனத்தில்தான் முதலில் அருந்தப்பட்டது. கிழக்கிந்திய  கம்பெனி சீனத்துடன் புரிந்த வர்த்தகத்தில் தேநீர்தான் முக்கியமான பண்டம். தேநீரை விலை கொடுத்து வாங்கி கட்டுப்படியாகாததாலேயே பிரிட்டிஷ் கிழந்திய கம்பெனி, ஓபிய வர்த்தகத்தை மறைமுகமாக கையாண்டு, சீனத்தை அடிபணிய வைத்தது. பின்னர், இந்தியாவில் அசாமில் தேநீர் விளைவதைக் கண்டு அங்கே பெரும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி இந்தியா முழுவதும் அவற்றைப் பரவலாக்கியது.

இவையெல்லாவற்றுக்கும் அடித்தளமாக அமைந்தது இங்கிலாந்தில் தேநீருக்கு உருவாகிய  வரவேற்பு. அப்போது புதிதாக உருவாகி வந்து கொண்டிருந்த பெரிய தொழிற்சாலைகளில் மூன்று ஷிப்டுகள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கம்பெனிகள் இலவசமாக வழங்கிய தேநீர். ஒருவகையில், தொழிற்புரட்சி எனும் பெரும்  இயந்திரம் சீராக ஓடுவதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் பயன்பட்டது.

இது கிழக்கில் தேநீரின் விளைவு என்றால் மேற்கே அமெரிக்காவின் பாஸ்டன்   தேநீர் விருந்தையும் அதன் பிறகு அங்கே வந்த பெரும் அரசியல் மாற்றங்களையும் அமெரிக்கா  சுதந்திர நாடானதையும் நாம் நன்றாகவே அறிவோம். மொத்தத்தில், ஆங்கிலேய ஏகாதிபத்தியம் வலுப்பெற்றதற்கும், விரிவடைந்ததற்கும்  ஒரு முக்கிய காரணம் தேநீர் எனும்  பானம் என்பதை விரிவாகவே காட்டுகிறது இந்நூல்.

கோகா கோலா

உலகத்தின் தலைமை தேசமாக இங்கிலாந்தின் இடத்திற்கு 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் அமேரிக்கா வந்தது. அப்படி நிலைபெற்ற அமெரிக்காவின் பானமான கோகா கோலாவை அறியாதவர் யார்? நூலின் இந்தப்பகுதியில் கோகா கோலாவின் பிறப்பையும் வளர்ச்சியையும், அது ஒவ்வொரு நாட்டுக்கும் பரவிய விதத்தையும் விரிவாகக் காட்டுகிறார் ஸ்டான்டாஜ்.  இதில் ஒரு மிக சுவாரசியமான தகவல்,  உலகப்போரின் முடிவில் சோவியத்  படைகளின் தளபதியான ஸுக்கோவ் எப்படி கோக் ரசிகர் ஆனார் என்பதும் கோகா கோலா நிறுவனம் எப்படி அவரின் விருப்பத்தின் பேரில் ரஷ்யாவின் வோட்க்காவைப் போன்ற நிறத்தில் அவருக்கும் ரஷ்ய ராணுவத்திற்கும் கோகா கோலாவை வழங்கியது என்பதும். அதே போல அமெரிக்க ராணுவம் சென்றவிடமெல்லாம் கோகா கோலா சென்றதும் அது அவர்களுக்கு தங்கள் தாய் நிலத்தை நினைவூட்டியதும், எல்லாவற்றுக்கும் மேலாக, ராணுவ வீரர்களுக்கு கோகா கோலா ஒரு போத்தல் 5 சென்ட் என்ற விலையில் இரண்டாம் உலகப் போர் முழுவதும் வழங்கியதும், அதன் புகழுக்கு காரணமாகியது. மேலும், அமெரிக்காவின் மத்திய கிழக்கு அரசியலுக்கும் கோகா கோலாவும் அதன் போட்டியாளரான பெப்சி கோலாவும் எப்படி மாறி மாறி வினையாற்றின என்பது குறித்தும் சுவாரசியமான தகவல்களைத் தருகிறது இந்நூல்.

இந்த ஆறு பானங்களுக்குப் பிறகு எதிர்காலத்தின் பானம் என்றும் எதிர்காலத்தில் உலக வரலாற்றை தீர்மானிக்கப் போகும்  பானம் என்றும் தண்ணீரைத்தான் குறிப்பிடுகிறார் ஸ்டான்டேஜ். மூன்றாவது உலக யுத்தம் தண்ணீருக்காகவே நடைபெறும் என்கிறார். இந்த யுகத்தின் பானமாக, போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரைக் குறிப்பிடும் அவர், பல சமயங்களில் போத்தல்களில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட போத்தல் நீர் என்பதன் தரம், சாதாரண குழாய் நீரை வீட குறைந்தே இருந்தாலும், அதன் மீதான மோகம் குறைவதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். எதிர்காலத்தில் ஏற்படும்  பற்றாக்குறையைப்  பற்றிய கவலையோடே  இந்த நூல் முடிவடைகிறது.

உலகின் முழு வரலாற்றை ஒரு ஆறு கோப்பைகள் வழியாக சொல்லிவிட முடியாதுதான். அதுவும், இந்த நூல் முக்கியமாக மத்திய கிழக்கிலிருந்து மேற்காய் இருக்கும் உலகின்  வரலாற்றையே அதிகமும் விவரிக்கிறது. முழுமையான வரலாறு என்று இதை ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை  மிக சுவாரசியமாய் விவரிக்கிறது. மேலே சொன்ன  கார்ல் பாப்பரின்  கூற்றைப்போல எல்லா வரலாறும் பெரும் வரலாற்றின் ஒரு அம்சத்தைப் பற்றியதுதானே?

இந்நூலின் குறை என்றால் உலகின் கிழக்கைக் குறித்த பார்வையே இல்லையென்பதை சொல்லலாம் (சீனம் தவிர்த்து).  உதாரணமாக, ரோமாபுரியின் ஒயின் குடுவைகள் இந்தியாவில் பல இடங்களில், குறிப்பாகத் தமிழகத்தில் கிடைக்கும் விவரங்கள் எல்லாம் இந்நூலாசிரியருக்கு தெரியவேயில்லை என்று தெரிகிறது. யவனர் அருநறுந்தேறல்  என்று தமிழ்ப் பாடல்களில் புகழ்பெற்ற யவன மதுவை குறிப்பிடும்போது தமிழகம் பற்றிய குறிப்புகள் இல்லை என்பது ஏமாற்றமாகவே உள்ளது.

இது போல இந்தியாவின், தமிழகத்தின், மதுவகைகள் வழியே நம் நிலத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள முடியுமா, சோம பானம், சுரா  பானம்,  அவ்வையும் அதியனும் அருந்திய கள் என்று இந்த நிலத்தில் புழங்கிய பல்வேறு பானங்கள் வழியாக ஒரு வரலாற்றை விவரிக்கக்கூடிய ஒரு நூல் இதுவரை எழுதப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. இது போன்ற ஒரு நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வரும்போது, இவ்வகை நூல்கள் மேலும் பல  எழுதப்பட வாய்ப்புகள் உள்ளன. அதற்கு இந்த நூல் முதலில் தமிழில் வரவேண்டியது முக்கியம்

ஸ்டாண்டேஜ் அவர்களின் பிற நூல்களின் வரிசை கீழே உள்ளது. அவற்றின் தலைப்புகளே கூட உடனே  படிக்கத்தூண்டும் வகையில் மிக வசீகரமாக உள்ளன.

1) An edible history of Humanity

2) The Victorian Internet

3) The future of Technology

4) Writing on the Wall – The First 2000 years.

இதைப் படித்து முடித்தவுடன் அந்தப் புத்தகங்களையும் படித்துவிட வேண்டும் என்ற ஆசை இயல்பாக மேலெழுகிறது. அதற்கென்ன, ஒரு வார்த்தை சொன்னால் போதும், வாங்கிக் கொடுக்க எங்கள் தியாகு புக் சென்டர் அதிபர் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறேன்.

4 Replies to “உலக வரலாறு, ஆறு கோப்பைகள் வழியாக..”

  1. நல்ல அறிமுகம். சுவாரசியமான கோணம். புதிய ருசியைத் தேடும் மானுட இச்சைக்கும் வரலாற்றுக்கும் இருக்கும் தொடர்பு ஆச்சரியமானதுதான். எங்கள் குடும்ப வரலாற்றிலேயே இப்படி சில மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். மீன்குழம்பு மீது விருப்பம் கொண்ட ஒரு மூத்த பாட்டி, அதை தனக்கு தினமும் வைத்துக்கொடுத்த ஒரு குடும்பத்துக்கு தன் பெயரில் இருந்த வீட்டையே எழுதிக் கொடுத்த கதையைக் கேட்டிருக்கிறேன். அதுபோலவே வீட்டுப் பத்திரத்தை கள்ளுக்கடைக்காரரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு, உயிருள்ள வரைக்கும் நிறைவாக குடித்து மாண்டுபோன ஒரு பெரிய தாத்தாவும் உண்டு. இது ஒரு குடும்பத்தில் நடக்கும் கதை என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தேன். குடும்பம்குடும்பாக இப்படி ருசிக்கு அடிமையாகும்போது அது அந்தச் சமூகத்தின் வரலாறாகவும் மாறிவிடும் கோணத்தை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஓப்பியம் அருந்திய சீனர்களின் கதையையும் இத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. கி.ரா. வின் ஒரு பழைய கட்டுரையில் ஒரு வெளியூர்க்காரன் தேயிலைத்தண்ணீரை தன் ஊருக்குக் கொண்டுவந்து அறிமுகப்படுத்திய சம்பவத்தை எழுதியிருக்கிறார். அதைப் படித்த ஞாபகம் வருகிறது. இரவு நேரத்தில் அந்தத் தேநீரைக் குடித்துவிட்டு இரவெல்லாம் உறக்கமின்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள் ஊர்க்காரர்கள். முதலில் சிறிது காலம் இலவசமாகவே தேயிலையைக் கொண்டு வந்து கொடுக்கும் ஆள், ஒரு கட்டத்தில் பணம் கேட்கத் தொடங்குகிறான். அதற்குள் அந்த ருசிக்கும் பானத்துக்கும் அடிமையாகிவிடும் மக்களுக்கு அதை பணம் கொடுத்து வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. சுரேஷ் சொல்வதுபோல யவனமதுவை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டு ஒரு வரலாற்றை எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நல்ல கட்டுரை.
    அன்புடன்
    பாவண்ணன்.

  2. இன்றுதான் படித்தேன் சுரேஷ்ஜி. அருமையான கட்டுரை. கோகோ கோலாவை புள்ளியாகக் கொண்டு இங்கு கென்ய வரலாற்றை தொட்டெடுக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
    -வெங்கி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.