மரங்கள் தூங்குமா?

பட்சிஉறங்கிறச்சு

பால்தயிராதூங்கிருச்சி

நொச்சி மரத்து இலைகூட தூங்கிருச்சு

நெஞ்சுக்குள்ளஉம்ம முடிஞ்சிருக்கேன் பாடலில் வரும் வரிகள் இவை. நொச்சி மரம்தூங்குமா? நான் தேடியவரை இல்லை. பொதுவாக மரங்கள் தூங்குமா? தெரியாது. தூக்கம் என்பது என்ன என்னுன் உங்களின் விளக்கத்துக்கு உட்பட்டது. ஆனால் நம்மைப் போல் பப்பரப்பே என்று மல்லாந்தால் நாம் யாரும் வீடுகளில் மரம் வளர்க்கமாட்டோம். வாசலில் இருக்கும் வேப்பமரம்தூக்கத்தில் வேரைத் தூக்கி மேலே போட்டால்என்ன ஆவது? ஆனால் சிலதாவரங்கள் தூக்கம் போன்ற ஒன்றைச் செய்கின்றன. இலைகளைக் குவித்து தொய்ந்து போகின்றன. சிலபூக்கள் இரவானால் குவிந்து கொள்கின்றன. சில பூக்கள் பகலில் குவிந்து கொள்கின்றன. இந்த நிகழ்வின் மிகப் பழமையான குறிப்பு கிமு 300 களில், அலெக்ஸாண்டருடன் இருந்தவர்களுள் ஒருவரான ஆண்ட்ரோஸ்தனிஸ் என்பவரிடம் கிடைக்கிறது. இரவில், புளிய மரத்தின் இலைகள் குவிந்து கொள்வதை அவர் பதிவு செய்கிறார். காலைல ஆயிடுச்சு எழுந்திருடீ என்று ஆண்டாள் பூக்களை வைத்து அழகாகச் சொல்கிறாள்

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்திறந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

தாமரை, சூரியன் வந்தால் கும்மென்று ஆகிவிடுகிறது. தாமரை சூரியனை கவிஞர்கள்நிறையவே எழுதிருக்கிறார்கள். நாம் அந்தப் பக்கம் போகவேண்டாம்.

நமக்கெல்லாம் கண் இருக்கிறது. சூரியன் உதிக்கிறது, மறைகிறது. நாகினி பார்த்துவிட்டு படுத்துவிடுகிறோம். இந்தச் செடிகளுக்கு யார் இதையெல்லாம் தெரிவிப்பது. தசைகளோ எலும்புகளோ இல்லாத அவற்றால் அப்படி இலைகளையும் பூக்களையும் குவிக்கவோ, விரிக்கவோ முடிகிறது? கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

செடிகளின் அசைவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள். Tropic movements மற்றும் nastic movements. ட்ராபிக் நகர்வுகள் திசை சார்ந்தவை. சூரியகாந்தி சூரியன் இருக்கும் திசை பக்கம் திரும்புதல் ஒரு உதாரணம். அது ஹீலியோட்ராபிஸம். இதுபோல புவியீர்ப்பை நோக்கிவேர் வளர்தல், ஒளியைத் தேடி கிளைகளும் தண்டும் வளர்தல் இதெல்லாம்‌. ஆனால் இந்த nastic நகர்வுகள் இந்த திசை என்றில்லை. தொட்டாச்சிணுங்கி எங்கு தொட்டாலும் சுருங்கும். அது ஒரு வகையான nastic நகர்வு. இதிலும் பல வகைகள் இருக்கின்றன. இந்த இரவுக்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ளுவதற்கு nyctinasty என்று பெயர்.(nycti – night).

நமக்கெல்லாம்இரவு வந்துவிட்டது என்று உடலை உறக்கத்துக்குத் தயார்படுத்த melatonin என்னும்பொருள் சுரக்கிறது‌. இது மாலை சூரியனின் சிவப்பு ஒளியால் தூண்டப்பட்டு சுரக்கிறது. செடிகளில் phytochrome என்னும் பொருள் இதைச் செய்கிறது. சூரிய ஒளியால் தன் வடிவத்தை சற்றே மாற்றிக்கொள்ளும் இந்த மூலக்கூற்றைக் கொண்டுதான் செடியின் இலையோ பூவோ மணி பார்க்கிறது.

எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். ஒரு பூவிலோ இலையிலோ, அதன் காம்பு செடியோடு சேரும் இடத்திற்குப் pulvini என்று பெயர்‌. இந்த புல்வினிக்குள் இருக்கும் செல்கள்தான் இந்த குவித்தலை, விரித்தலைச் செய்கின்றன.

தாவரச் செல்களை ஒரு துணிப்பைக்குள் இருக்கும்பலூன் போல கற்பனை செய்யலாம். பலூனுக்குள் காற்றை ஊதினால் அது விரிந்து பையின் மேல் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் காற்று வடிந்தால் அதே அளவுக்கு அந்தத் துணிப்பை சுருங்க வேண்டும்என்பது அவசியமில்லையே. தாவரச் செல்லில் அந்த பலூனை செல்லின் உறுப்புகளை மூடிய plasma membrane ஆகவும் இந்தத் துணிப்பையை cell wall  ஆகவும் கருதலாம். Cell wallக்குள் இருக்கும் plasma membrane ஆல் சுருங்கவோ விரியவோ முடியும். அந்த சுருங்கி விரிதல் செல்லுக்குள் எவ்வளவு நீர் இருக்கிறது என்பதைப் பொருத்து மாறும். அந்த அளவை நிர்ணயிப்பது செல்லுக்குள் இருக்கும் பொட்டாசியம் அயனியின் அளவைப் பொருத்தது. பொட்டாசியம் அதிகமானால் நீரை உள்ளிழுத்து plasma membrane வீங்கும். பொட்டாசியம் குறைவாக இருந்தால் தூண்டப்பட்டு வற்றிச் சுருங்கும்.  அடிப்படை சவ்வூடு பரவல் osmosis இது. இவ்வாறு செல்லுக்குள் ஏற்படும் அழுத்தத்தை turgor pressure என்கிறார்கள்.

சிலதாவரங்களில், பூ அல்லது காம்பு செடியோடு சேரும் pulvinis ல் இருக்கும்செல்கள், இந்த பொட்டாசியம் அயனியின் உதவியோடு plasma membrane சுருக்கி விரித்தலைச் செய்கின்றன.

இந்த phytochrome மூலக்கூறுயப்பா காலைல ஆச்சுஎன்று சொன்னதும், செல்லுக்குள் கொஞ்சம் பொட்டாசியத்தின்அளவைக் கூட்டி, நீரை உள்ளிழுத்து செல்களை ஸ்திரமாக்கும். மாலை சூரியன் மறைந்ததும் நீரை வெளியேற்றி அப்படியே காற்றுப் போன பலூன் போல் தொய்ந்து விடும். அல்லி போன்ற இரவில் பூக்கும் செடிகளில் உல்டா. இதனால் என்ன நன்மை என்று கேட்கிறீர்களா?

பூவுக்குள் இருக்கும் மகரந்தம்உலர்வாகஇருந்தால், பூச்சிகள் உடலில் எளிதாக ஒட்டிக்கொண்டு மகரந்தச் சேர்க்கை நடைபெறும்‌. இரவில்மூடிக்கொள்ளுதல் மூலம் அது தன் மகரந்தத்தை பனியில் இருந்தும், குளிரில் இருந்தும் காத்துக்கொள்ள முடியும். தாவரத்தின் இலைகள் மூடிக்கொண்டு இரவு கீழ்நோக்கி தொய்யும்போது, தாவரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் விலங்குகளை, அவற்றை வேட்டையாடும் விலங்குகளைக் காட்டிக்கொடுத்துவிடும். உதாரணமாக எலிகள், பெருச்சாளிகளை ஆந்தை போன்ற விலங்குகளிடம் சிக்க வைத்துவிடும்‌. பகலில் ஒளிச்சேர்க்கைக்காக விரிந்துகொள்ளும்.

நம்மூரில்புளியமரம் தூங்கும். தூங்குமூஞ்சி மரம் பேருக்கேற்பத் தூங்கும். பீன்ஸ் வகைத் தாவரங்களும், புடலங்காய், பீர்க்கங்காய் சுரைக்காய் போன்ற தாவரங்களும், வேர் முண்டுகள் leguminous தாவரங்கள் இப்படி இலைகளைச் சுருக்கிக் கொள்ளும்.

அடுத்த முறை இரவில் புளியமரத்தைப் பார்த்தால் அதன் இலைகளை நின்று வருடிப் பார்த்துவிட்டுப் போங்கள். நம்மைத் தவிர மீதி எல்லா உயிரிகளும் இயற்கையோடு முடிந்தவரை ஒற்றுமையாய் வாழ்கின்றன. நாம்தான்.. ஹூம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.