மருது பாண்டியரின் கனவு

 
chinnamarudhu1
 
இந்திய விடுதலைப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாற்றைப் பொருத்தவரை, முதல் சுதந்தரப் போர் என்று நம்மாலும், சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷாராலும் அழைக்கப்படும் 1857ம் ஆண்டுக் கிளர்ச்சியே விடுதலைக்காக நடந்த முதல் ஒருங்கிணைந்த முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னால், விடுதலைக்காக இப்படி ஒரு கூட்டு முயற்சியைத் தென்னகத்தில் மேற்கொண்டவர், மருது பாண்டியர்களில் இளையவரான சின்ன மருது. போரின் ஒரு கட்டத்தில் இதற்கான பிரகடனத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். விடுதலைப் போரின் பல கட்டங்களில் நாம் பார்க்கும் துரோகமும், சதிச்செயல்களும் இந்த ஒரு முயற்சியையும் முறியடித்துவிட்டன என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி
‘மூத்தது மோழை இளையது காளை’ என்ற பிரபலமான தமிழ்ப் பழமொழி, மருது சகோதரர்களில் பெரிய மருதுவிற்குப் பொருந்தி வராவிட்டாலும், இளையவரான சின்ன மருதுவிற்கு   பொருந்துகிறது என்பது பல வரலாற்று ஆவணங்களாலும் தெளிவாக விளங்குகிறது. அவர் வீரத்திலும், தீரத்திலும், விவேகத்திலும் சிறந்தவராக இருந்தது மட்டுமின்றி தொலைநோக்குப் பார்வை கொண்டவராகவும் தேவைக்கேற்ப தனது வியூகங்களை மாற்றிக்கொண்டு செயல்படுபவராகவும் இருந்தார். இரு சகோதரர்களில் மூத்தவரான வெள்ளை மருது சிவந்த மேனியுடன் இருந்ததால் அவருக்கு அந்தப் பெயர். இளையவரான சின்ன மருதுவின் பெயர்தான் மருதுபாண்டியர்.
மருது சகோதரர்கள் தலையெடுத்த 17ம் நூற்றாண்டு தமிழ்நாட்டின் மிகச் சிக்கலான காலகட்டம். முகலாய அரசின் ஆளுநராக தக்காணத்தில் அமர்த்தப்பட்டிருந்த நிஜாம் பெயரளவுக்குத்தான் அந்தப் பதவியில் இருந்தார். அவரது பிரதிநிதியாக ஆர்க்காட்டில் ஆட்சி செய்து கொண்டிருந்த நவாப் குடும்பத்தில் வாரிசுரிமைப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. நவாப் அன்வருதீன் கானின் உறவினரும் முன்னாள் நவாப் தோஸ்த் அலிகானின் மருமகனுமான சந்தா சாகிப், நவாப் பதவிக்குப் போட்டியிட்டார். அவருக்கு புதுச்சேரியில் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொண்டிருந்த டூப்ளேயின் தலைமையிலான பிரஞ்சுக்காரர்கள் ஆதரவு கொடுத்தனர். அன்வருதீன் கானுக்கு சென்னையிலிருந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதரவு இருந்தது. அதற்குச் சில வருடங்கள் முன்புதான் மதுரை நாயக்கர் ஆட்சியை துரோகத்தால் வீழ்த்தி அந்த வம்சத்தை சந்தா சாகிப் முடிவுக்குக் கொண்டுவந்திருந்தார். இதனால் நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்த பாளையக்காரர்கள் தங்கள் போக்குக்கு சுதந்தரமாக ஆட்சி செய்ய ஆரம்பித்திருந்தனர். இதற்கு நடுவே மராத்தியர்களும் மைசூர் அரசர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைப் பிடித்துக்கொண்டு அவர்களது அதிகாரத்தைச் செலுத்த முயன்றுகொண்டிருந்தனர்.
ஒருவழியாக ஆர்க்காட்டுப் போர் முடிந்து, போரில் ‘பிரிட்டிஷ் நவாபான’ முகமது அலி வென்ற பிறகு போரில் தமக்கு உதவியதற்கு ஈடாக, தம் சார்பாக வரிவசூலிக்கும் உரிமையை பிரிட்டிஷாருக்கு விட்டுக்கொடுத்தார் முகம்மது அலி. இதனை அடுத்து நவாபிடமிருந்து வரிவசூல் செய்யும் உரிமையைப் பெற்ற பிரிட்டிஷாருக்கும் பாளையக்காரர்களுக்கும் போர் மூண்டது. புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் உட்பட பல பாளையக்காரர்கள் பிரிட்டிஷார் பக்கம் சாய்ந்தனர். பிரிட்டிஷ்- ஆர்க்காட்டுப் படைக்கு மருதநாயகம் என்ற பெயரில் பிறந்து மதம் மாறிய ‘கும்மாந்தான்’ (கமாண்டெண்டின் தமிழ்) யூசுப் கான் தலைமை தாங்கினார். அவருடைய கடுமையான போர் புரியும் திறனால் பிரிட்டிஷ் படை ஒவ்வொரு பாளையமாக வெற்றி கொண்டு வந்தது. இந்த நிலையில் தான் சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்து கொண்டிருந்த முத்து வடுகநாதரிடம் மருது சகோதரர்கள் பணியில் சேர்ந்தனர். முத்து வடுக நாதரும் ஆர்க்காட்டு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்தவரில் ஒருவர். எனவே பிரிட்டிஷார் சிவகங்கை மேல் படையெடுத்தனர். பிரிட்டிஷ் படையை எதிர்த்து சிவகங்கைப் படை தீரத்துடன் போரிட்ட போதிலும் முத்து வடுகநாதாரை பிரிட்டிஷ் படை வென்றது. போரில் வடுகநாதர் கொல்லப்பட்டார். மருது சகோதரர்கள் அரசியான வேலு நாச்சியாரைக் காப்பாற்றி, திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றனர்.
திண்டுக்கல்லில் அப்போது முகாமிட்டிருந்த ஹைதர் அலியிடம் அவர்கள் உதவி கோரினர். அங்கேயே சில மாதங்கள் அவர்கள் தங்க நேரிட்டது. இந்தக் காலகட்டத்தில்தான், பலமிக்க பிரிட்டிஷ் – ஆர்க்காட்டுக் கூட்டுப்படையை வெல்ல ஒரு வலுவான கூட்டணி அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார் சின்ன மருது. அதற்காக பிரஞ்சுக்காரர்களிடம் உதவி கேட்கவும் அவர் விரும்பவில்லை. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு இந்த மண்ணை வெல்லுவதுதான் குறிக்கோள் என்பதையும் அதற்காக அவர்கள் சுதேசி அரசுகளை பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதையும் நன்கு புரிந்து வைத்திருந்தார் அவர். தமிழகத்தில் உள்ள சிறு அரசுகள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி சண்டையிட்டுக் கொள்ளும் சூழ்நிலை, ஐரோப்பிய அரசுகளுக்குத் தான் சாதகமாக இருக்கிறது என்பதால், அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தார் அவர். இதற்கெல்லாம் சிறிது காலம் பிடிக்கும் என்பதால், அது வரை பிரிட்டிஷாரோடு சமாதானமாகப் போவதே சரியான வழி என்ற முடிவுக்கும் வந்தார். எனவே ஹைதர் அலியின் படைகளின் உதவியோடு சிவகங்கையை மீட்டவுடன், ஆர்க்காட்டு நவாபிற்குச் செலுத்த வேண்டிய ஐந்து லட்சம் ரூபாயைக் கொடுத்து அவரோடு சமாதானம் செய்து கொண்டனர் மருது சகோதரர்கள். நாட்டின் பல பகுதிகளில் தலைதூக்கிவந்த கிளர்ச்சிகளை அடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிரிட்டிஷாரும் சிவகங்கை அரசின் இந்தச் சமாதான முயற்சிக்கு ஒத்துக்கொண்டனர். அதன்பின் சிவகங்கைச் சீமையை சீர்படுத்தும் முயற்சியில் மருது பாண்டியர்கள் ஈடுபட்டனர். சிறு நகரங்கள் மீண்டும் எழுப்பப்பட்டன. சிவகங்கை அழகுபடுத்தப்பட்டது. கோவில் திருப்பணிகள் நடைபெற்றன. விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட்டன. தஞ்சாவூரிலிருந்து திறமையான விவசாயிகளை தரிசு நிலப்பகுதியாக இருந்த இடங்களில் குடியேற்றி அவற்றை விவசாய நிலங்களாக மாற்றும்படி அவர்கள் ஏற்பாடு செய்தனர். ஓயாத போர்களால் உடைந்து சீர்கெட்டிருந்த நீர் நிலைகள் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டன.
இவையெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்த போது, சின்ன மருது சிவகங்கையின் படைப்பிரிவுகளை ஒழுங்குபடுத்தினார். வீரர்களுக்கு நவீன ஆயுதங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பிரிட்டிஷாருடன் அவர் கொண்டிருந்த நட்பு இதற்கு உதவியாக இருந்தது. குறிப்பாக பிரிட்டிஷ் கர்னலான வெல்ஷுக்கு நெருங்கிய நண்பராக சின்ன மருது இருந்தார். தாம் மதுரையில் இருந்த போது தரமான அரிசி, இந்தியாவில் வேறெங்கும் கிடைக்காத சுவையான பழங்கள் ஆகியவற்றை சின்ன மருது தமக்கு அனுப்பியதாக வெல்ஷ் தமது ராணுவக் குறிப்புகளில் தெரிவித்திருக்கிறார். ராணுவத்தை வலுப்படுத்தியதைத் தவிர காளையார் கோவில் கோட்டையும் பழுதுபார்க்கப்பட்டது. இதைத் தவிர தமக்கென சிறுவயல் என்ற இடத்தில் ஒரு கோட்டையையும் சின்ன மருது கட்டிக்கொண்டார்.  அரண்மனைச் சிறுவயல் என்று தற்போது அழைக்கப்படும் இந்த இடம் எளிதில் நுழைய முடியாத அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டிருந்தது என்று வெல்ஷ் எழுதுகிறார். ஆனாலும் சின்ன மருதுவின் இருப்பிடமான அரண்மனைக்குக் காவல்கள் எதுவும் இல்லை என்றும் யார் எப்போது வேண்டுமானாலும் உள்ளே சென்று மருதுவைச் ச்ந்திப்பது எளிதாக இருந்தது என்றும் வெல்ஷ் குறிப்பிட்டிருக்கிறார். நாட்டில் பல இடங்களில் சுரங்கப் பாதைகளும் மறைவிடங்களும் உருவாக்கப்பட்டன. ஒரு நீண்ட முற்றுகையைச் சமாளிப்பதற்காக, அதற்குத் தேவையான உணவுப் பொருட்களை அளிப்பதற்காக, ஒரு படகுப் படையையும் அவர் உருவாக்கினார். இதன் மூலம் ஆபத்துக் காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து உணவு கொண்டுவரும் வசதியையும் அவர் ஏற்படுத்தினார்.
அடுத்ததாக, பிரிட்டிஷ் ஆட்சியை விரும்பாத பாளையக்காரர்களையும் சிற்றரசர்களையும் கண்டறிந்து அவர்களிடம் ரகசியமாக தூதர்களை அனுப்பினார். ராமநாதபுர சமஸ்தான தளகர்த்தர்களான மயிலப்பன், சிங்கம் செட்டி, முத்துக் கருப்பத் தேவர், தஞ்சாவூரின் தலைவர்களில் ஒருவரான ஞானமுத்து ஆகியோர் இதில் அடங்குவர். மதுரை நாயக்க வம்சத்தின் கடைசி அரசியான ராணி மீனாட்சியின் தத்துப் புத்திரனான விஜயகுமார திருமலையைத் தேடிப்பிடித்து அவரை ஒரு இடத்தில் மறைத்தும் வைத்தார் மருதுபாண்டியர். இதனால் மதுரை மக்களின் ஆதரவும் அவருக்குக் கிட்டியது. இதற்கிடையில் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த கட்டபொம்மனுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே உரசல்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவரையும் கூட்டணியில் இழுத்துக்கொள்ள ரகசியப் பேச்சுவார்த்தைகளில் மருது இறங்கினார். இதைத் தொடர்ந்து கட்டபொம்மனை மருதுவின் தூதர்கள் சந்தித்தனர். 1799ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி கட்டபொம்மன் தன்னுடைய ஆட்கள் 500 பேருடன் மருதுவைச் சந்திக்க சிவகங்கைக்குப் புறப்பட்டார். ராமநாதபுரத்தின் கலெக்டராக அப்போது இருந்த லூஷிங்டன், இதில் ஏதோ சதி இருப்பதாக சந்தேகப்பட்டு, பிரிட்டிஷ் அரசு இந்தச் சந்திப்பை விரும்பவில்லை என்பதைக் கட்டபொம்மனிடம் தெரியப்படுத்தினார். கூட்டணியின் ஆரம்ப நிலையிலேயே பிரிட்டிஷாருடன் ஒரு மோதலை விரும்பாத கட்டபொம்மன் பழமனேரி என்ற இடத்தில் தங்கிவிட்டார். மருதுவின் ஆட்கள் அவரை அங்கு சந்தித்தனர். அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே கட்டபொம்மனுக்கும் பிரிட்டிஷாருக்கும் மோதல் முற்றி கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். அவரது தம்பிகளான செவத்தையாவும் ஊமைத்துரையும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்குச் சில மாதங்களுக்கு முன்னால்தான் மருதுவின் பழைய நண்பரான திப்புவும் போரில் மாண்டிருந்தார். இவை இரண்டும் மருதுவின் முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தின.
ஆனால் தன் முயற்சியில் மனம் தளராமல் திண்டுக்கல்லை அடுத்த விரூபாட்சியைச் சேர்ந்த கோபால நாயக்குடனும் மேற்கு கனராவின் கிருஷ்ணப்ப நாயக்குடனும், வட கர்நாடகத்தின் துந்தாஜி வாக்குடனும் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் சின்ன மருது. முதலில் பிரிட்டிஷாரை எதிர்த்துக் கலகம் செய்து பின் அவர்களுடன் சமாதானமாகப் போய்விட்ட கேரள வர்மா மீண்டும் மனம் மாறி இவர்களுடன் இணைந்தார். சிவகங்கை, திண்டுக்கல், மைசூர் ஆகிய இடங்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான இந்தப் போரட்டத்தின் மையங்களாக உருவாகின. மருதுவும் கோபால நாயக்கும் தொலைவில் இருந்த துந்தாஜி வாகிடம் தூது செல்ல கோயம்புத்தூரைச் சேர்ந்த தூதுக்குழுக்களை உருவாக்கினர். மூன்று தூதுக்குழுக்கள் இவ்வாறு துந்தாஜியிடன் அனுப்பப்பட்டன. காவிரியின் தென்பகுதிப் போராட்டத்திற்கு மருது பாண்டியரும் வட பகுதிப் போராட்டத்திற்கு துந்தாஜியும் தலைமை தாங்குவதென்று இந்தப் பேச்சுவார்த்தைகளில் முடிவு செய்யப்பட்டது. இரு குழுக்களையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பில் திப்புவின் படையில் பணிபுரிந்த கானிஜா கான் நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் சிவகங்கையின் வட பகுதியிலிருந்து திண்டுக்கல்-விரூபாட்சி வரை அடர்ந்த காடு இருந்தது. கான் – நாடு, கானாடு என்ற பெயரில் இந்தப் பகுதி அழைக்கப்பட்டது. இந்தக் காட்டை கூட்டணி வீரர்கள் தங்கள் சந்திப்பிற்கும் படைப்பயிற்சிக்கும் பயன்படுத்திக்கொண்டனர். தொடர்ந்து பிரிட்டிஷ் ஒற்றர்களின் கண்காணிப்பும் பணத்தாசை பிடித்த துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்படும் அபாயமும் இருந்ததால், தகவல் தொடர்பு பெரும்பாலும் வாய்மொழியாகவே நடைபெற்றது. நடவடிக்கைகள் இவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருந்த போதிலும், மருதுவின் நடவடிக்கைகளில் பிரிட்டிஷாருக்குச் சந்தேகம் எழ ஆரம்பித்தது. 1800ம் ஆண்டு ஜூன் மாதம் கலெக்டர் ஹர்டிஸ் மருது சகோதரர்களின் நடமாட்டத்தை உளவு பார்க்க அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்களை அனுப்பி வைத்தார். இவர்கள் துந்தாஜி வாக்கின் படையில் பல தமிழ் வீரர்கள் காணப்படுகிறார்கள் என்ற தகவலை பிரிட்டிஷாருக்குத் தெரியப்படுத்தினர். தவிர, பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர்களுக்கு மருது அனுப்பியிருந்த தூதுக்குழு ஒன்றும் இவர்களின் ஒற்றுவேலையால் பிரிட்டிஷாரிடம் பிடிபட்டது. அந்தக் குழுவில் இருந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆயினும் இவையெல்லாம் தனிப்பட்ட சில பகுதிகளில் எழும் சிறு கலகங்கள் என்றே பிரிட்டிஷார் கருதினர். ஒருங்கிணைந்த முயற்சி ஒன்று பின்புலத்தில் நடைபெறுவது பற்றி அவர்கள் அறியவில்லை. 1800ம் ஆண்டு மைசூரின் பிரிட்டிஷ் கர்னலாக இருந்த ஆர்தர் வெல்லெஸ்லி தன்னுடைய கடிதமொன்றில் ‘துந்தாஜி வாக் நமக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடப்போவதைப் பற்றிய தகவல்கள் எனக்குக் கிடைத்தன. இந்த அறிக்கைகளைப் பற்றி விசாரித்ததில் அவற்றிற்கு அடிப்படை ஏதும் இல்லை என்று தெரிகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். 1801ம் ஆண்டு இறுதியில்தான் பிரிட்டிஷாருக்கு இந்தக் கிளர்ச்சியின் உண்மை முகம் தெரியவந்தது. அந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி எழுதிய கடிதத்தில் சென்னை ஆளுநர் எட்வார்ட் க்ளைவ் நாட்டின் தென்பகுதியிலிருந்து மேற்குப் பிராந்தியம் வரை பிரிட்டிஷாரை எதிர்த்து ஒரு கூட்டுக் கிளர்ச்சி நடைபெறப்போகிறது என்று எச்சரித்திருக்கிறார். இருந்தபோதிலும் என்ன மாதிரியான அமைப்பை இந்தக் கூட்டணி கொண்டிருக்கிறது? கூட்டணியின் தலைவர்கள் யார் என்ற விவரங்களை அவர்களால் தெரிந்துகொள்ள இயலவில்லை.
பல்வேறு பகுதிகளிலிருந்தும் இப்படி பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரண்டவர்களின் பொது நோக்கம் என்னவாக இருந்தது? எதனை அடிப்படையாக வைத்து அவர்கள் இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் ? இதற்கான தகவல்கள் அதிகம் கிடைக்கப்பெறவில்லையென்றாலும், மருது பாண்டியர், செவத்தையா ஆகியோர் பரிமாறிக்கொண்ட கடிதங்களிலிருந்து நமக்குக் கிடைப்பது இதுதான். “பிரிட்டிஷார் சுதேசிகளின் நம்பிக்கையைத் தகர்த்து அவர்களின் மரபுகளைச் சீர்குலைக்க ஆரம்பித்துவிட்டனர். மக்களை அடிமைப்படுத்தி தங்களது அதிகாரத்தைச் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். இது மக்கள் நலனைச் சிறிதும் கருதாத (அப்போதைய) சமஸ்தான அரசர்களின் துரோகத்தால் ஏற்பட்ட நிலையாகும். இதனால் மக்கள் தங்கள் சுதந்தரத்தை இழந்து, ஏழ்மையில் வாடும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கான ஒரே மருந்து பிரிட்டிஷாரின் அதிகாரத்தை உடைத்து அவர்களை ஒரு வியாபாரிகள் போல நடத்துவதே ஆகும். ஆயுதமேந்திய போராட்டம் மூலமே இந்த லட்சியத்தை அடைய இயலும். ஆனால் வலுவான பிரிட்டிஷாரையும் அவர்களுக்குத் துணைபுரியும் துரோகிகளான அரசர்களையும் வெற்றி கொள்வது எளிதல்ல. ஆனால், இந்த முயற்சியில் கிடைக்கும் வெற்றி மக்களை சுதந்தர மனிதர்களாக்கி, இந்தியாவின் மற்ற பகுதி மக்களுக்கும் ஊக்கம் கொடுத்து, அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தைச் செம்மைப் படுத்தி வளமாக வாழ வழிவகுக்கும். இந்த நிலத்தின் மரபையொட்டி தங்கள் வாழ்க்கையை வழியமைத்துக்கொள்ள பிரிட்டிஷாரின் மேலான வெற்றி உதவிசெய்யும்.”
மேற்குறிப்பிட்ட நோக்கத்தோடு தங்கள் போரட்டத்தை முன்னெடுத்துச் சென்ற இந்தக் கூட்டணி, வலுவான பிரிட்டிஷாரையும் அவர்களுக்குத் துணை புரிந்த ‘துரோகிகளான’ உள்நாட்டு அரசர்களையும் வெற்றி கொள்ள தங்களிடையே உள்ள ஆயுதங்கள் ஒற்றுமையும் மறைந்திருந்து தாக்கும் திறனும் தான் என்பதை பல கடிதங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர்.   அதிகம் பயிற்சியில்லாத தங்கள் படைகளைக் கொண்டு, காட்டை அரணாகக் கொண்டு எதிரிமேல் தாக்குதல் தொடுப்பதே சிறந்த வழி என்று மருது பாண்டியர் கருதினார். அதன்படியே ஆயுதங்கள் காடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மறைத்து வைக்கப்பட்டன. காளையார் கோவில் கோட்டையும் வலுப்படுத்தப்பட்டது. விரைவில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும் என்பதைத் தங்கள் நாட்டுக் குடித்தலைவர்களுக்கு மருது பாண்டியர் அறிவித்தனர். தாக்குதலைத் துவங்கும் நாளைக் குறிக்க, கூட்டணித்தலைவர்கள் திண்டுக்கல்லில் சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 1800ம் ஆண்டு ஏப்ரலில் கூடிய இந்தக் கூட்டத்திற்கு கோபால நாயக் தலைமை தாங்கினார். போராட்டத்தின் முதல் படியாக கோயம்புத்தூரைத் தாக்குவதென்றும் அதை கோபால நாயக்கின் படை தலைமைதாங்கி நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது. கானிஜா கான் தனது 4000 பேர் கொண்ட குதிரைப் படையுடன் அவர்களுக்கு உதவியாக வருவதாக வாக்களித்தார். துந்தாஜி வாக்கும் தன் படைப்பிரிவு ஒன்றை அனுப்புவதாகக் கூறினார். அவருடைய குதிரைப்படை தமிழகத்தை அடைந்தவுடன், போராட்டத்தை தமிழகத்தின் தென்பகுதியில் துவக்குவதாக மருது பாண்டியர் உறுதியளித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் துவங்கவிருக்கும் போராட்டத்திற்கு இந்த கோவைத்தாக்குதல் முன்னோடியாக இருக்கும் என்ற முடிவுடன், அதனை 1800 ஜூன் 3ம் தேதி தொடங்குவது என்று தீர்மானித்து கூட்டணித்தலைவர்கள் பிரிந்து சென்றனர்.
ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. மைசூரின் அருகே போராட்டக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் துருப்புகளுக்கும் இடையே எதிர்பாராதவிதமாகக் கலகம் வெடித்தது. இதையடுத்து பிரிட்டிஷாருக்கு எதிராக நேரடிப் போரில் துந்தாஜி வாக் இறங்கினார். எனவே குறித்த நாளுக்கு முன்பாகவே பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் இறங்கவேண்டிய அவசியம் கூட்டணித்தலைவர்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் படைகள் தாராபுரம், சத்திய மங்கலம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களைத் தாக்கின. சிவகங்கைப் படைகள் ராமநாதபுரத்தில் போராட்டத்தைத் துவக்கிய மயிலப்பனின் ஆதரவுக்குச் சென்றன. தவிர பாளையங்கோட்டையில் சிறைப்பட்டிருந்தவர்களை விடுவிக்க மீண்டும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக முடிந்தது. ஊமைத்துரையும் செவத்தையாவும் சிறையிலிருந்து தப்பி, பாஞ்சாலங்குறிச்சியில் மீண்டும் ஒரு போரைத் துவக்கினர். தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களை இந்தப் படை கைப்பற்றியது. மெக்காலே பிரபுவின் தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் தங்களை வலுப்படுத்திக்கொண்டு பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கின. கடுமையாக நடைபெற்ற போரில் இரு தரப்புக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. கட்டபொம்மனின் மறைவுக்குப் பின் மீண்டும் களிமண்ணைக் கொண்டு வலுவாகக் கட்டப்பட்டிருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்க்க முடியாமல் பிரிட்டிஷார் திணறினர். ” எதிரிகளின் தாக்குதல் முறையும் அவர்கள் அரண்கள் அமைக்கப்பட்டிருந்த விதமும் எந்த ஒரு பொறியாளரையும் திருப்திப்படுத்தக்கூடியது” என்று வெல்ஷ் கூறுகிறார். போரில் தோல்வியடைந்த பிரிட்டிஷார், தமக்கு உதவிகள் அனுப்புமாறு சென்னைக்கு கோரிக்கை விடுத்து, கோட்டை மீதான தங்கள் முற்றுகையைத் தொடர்ந்தனர். அதே போல செவத்தையாவும் தஞ்சை அரசர் சரபோஜிக்கும், புதுக்கோட்டை அரசர் தொண்டைமானுக்கும் நீண்ட கடிதங்கள் எழுதினார். நாட்டைக்காக்கும் பணியில் தங்களோடு சேருமாறு வலியுறுத்தினார். ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. பிரிட்டிஷ் தரப்போ, கர்னல் அக்னியூவின் தலைமையில் புதிய படைப்பிரிவு ஒன்றை மெக்காலேக்கு உதவ அனுப்பியது. மீண்டும் தொடங்கிய கடுமையான தாக்குதலில் பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது. ஊமைத்துரை தப்பியோடி சிவகங்கையில் தஞ்சம் புகுந்தார். இதே போன்று, தமிழகத்தின் மேற்குப் பகுதியில் திண்டுக்கல் படைகள் பல இடங்களில் பிரிட்டிஷ் படையுடன் மோதின. முடிவில் திண்டுக்கல்லும் பிரிட்டிஷாரிடம் வீழ்ந்தது.
பாஞ்சாலங்குறிச்சியிலும், திண்டுக்கல்லிலும் தோற்றவர்கள் கானாட்டில் தஞ்சம் புகுந்தனர். காளையார்கோவில், கீழநெல்லிக்கோட்டை, சிறுவயல், பாகனேரி, சோழபுரம் ஆகிய இடங்களில் இருந்த காட்டுப்பகுதியில் அவர்கள் பதுங்கிக்கொண்டனர். மீண்டுமொரு தாக்குதலைத் துவங்க எண்ணிய அவர்களின் போராட்டத்திற்கு மருதுபாண்டியர் தலைமை தாங்கினார். இதை அறிந்த பிரிட்டிஷார், அக்னியூ தலைமையிலான படையை சிவகங்கையை நோக்கி அனுப்பினர். அவரோடு, திருவிதாங்கூர் மன்னர், புதுக்கோட்டை அரசர், எட்டையபுரம் பாளையக்காரர் ஆகியோர் சேர்ந்துகொண்டு தமது படைகளையும் அனுப்பிவைத்தனர். சிவகங்கைக்கு எதிராக ஒரு தாக்குதலுக்குத் தயாரான அக்னியூ 1801ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி பின்வரும் அறிக்கையை சிவகங்கை மக்களுக்கும் பெரிய மருதுவுக்கும் அனுப்பி வைத்தான்
“சிவகங்கையின் சேர்வையான சின்ன மருது கம்பெனியின் சர்க்காருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தவறியும் அவர்களின் ஆணைகளை மதிக்காமலும் பாஞ்சாலங்குறிச்சியின் போராட்டக்காரர்களுக்கு ஆட்களையும் ஆயுதங்களையும் கொடுத்து வருகிறார். கம்பெனிக்கு எதிராக அவர்களின் கோட்டைகளைத் தாக்கி, பணியாளர்களைக் கொன்று, ஊர்களைச் சூறையாடியவர்களுக்கு   விரூபாட்சியில் தஞ்சமும் அளித்திருக்கிறார். ”
“கம்பெனி ஆட்சியின் கீழ் சிவகங்கை மக்கள் எந்தவிதமான வசதிகளையும் பாதுகாப்பையும் அனுபவித்து வருகிறார்கள் என்பது அவர்களுக்கும் உலகத்திற்கும் தெரியும். ராணியின் பணியாளராக அவர் செய்த முந்தைய கொடுஞ்செயல்களைப் பொருட்படுத்தாமல் சின்ன மருதுவுக்கு கம்பெனி அளித்த பாதுகாப்பும் உலகம் அறிந்ததே. ….முறையான வாரிசாக இல்லாமல் சிவகங்கையின் மீது தனது முறையற்ற அதிகாரத்தைச் செலுத்தி வருகிறார் அவர். இப்போது சிவகங்கையின் அரியணையை அபகரிக்க ஆயுதங்கள் எடுத்துப் போராடி வருகிறார்”
“இதனால் கோபமடைந்த ஆங்கில அரசு கர்னல் அக்னியூவை ஒரு படையோடு சின்னமருதுவையும் அவரது ஆதரவாளர்களையும் தண்டிக்கவும், முறையான வாரிசை சிவகங்கையில் அமர்த்தவும் அனுப்பியிருக்கிறது. எனவே வாரிசுரிமையைக் கோருபவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான ஆவணங்களோடு அக்னியூவை அணுகவும். அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படும். கிளர்ச்சியாளர்களுக்கு தகுந்த தண்டனை அளித்த பிறகு, வாரிசுரிமையைப் பற்றித் தீர விசாரித்து உரிமையுள்ளவர்களுக்கு பட்டம் அளிக்கப்படும்”
“சின்ன மருதுவின் சகோதரரான வெள்ளை மருது தனது தம்பியின் நடவடிக்கைகளை அங்கீகரிக்கவில்லை என்று கர்னல் அக்னியூவுக்குத் தெரியவருகிறது. குற்றவாளிகளைத் தண்டிக்கும் அதே வேளையில் அக்னியூ அப்பாவி மனிதர்களைப் பாதுகாக்கவும் விரும்புகிறார். தன்னிடம் சரணடைந்தால் வெள்ளை மருதுவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் மதுரை செல்லவும் அங்கே அமைதியாக வாழவும் அவர் வழிசெய்வார்”
மேற்குறிப்பிட்ட படி கர்னல் அக்னியூ அளித்த அறிக்கைக்குப் பதிலாக சின்ன மருது ஜூன் 16ம் தேதி திருச்சியில் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். மருதுபாண்டியரின் கனவை தெள்ளத்தெளிவாக இந்தப் பிரகடனம் விளக்குகிறது. ஜம்புத்வீபத்தின் மக்களுக்கு மருது பாண்டியர் அறிவித்த இந்தப் பிரகடனத்தின் பிரதிகள் திருச்சிக் கோட்டையிலும் ஶ்ரீரங்கம் கோவில் மதில் சுவரிலும் ஒட்டப்பட்டன. நாட்டு மக்களின் சுதந்தர வேட்கையைத் தூண்டுமாறும் அவர்களின் நம்பிக்கையை அதிகரித்து ஒற்றுமையுடன் போராட்டத்தில் ஈடுபடுமாறும் அவர்களை வேண்டும் இந்த அறிக்கையின் சில பகுதிகள் பின்வருமாறு.
“இதைக் கண்டவர்கள் யாராயிருந்தாலும் கவனத்துடன் படிக்கவும்.”
“எல்லா நாடுகளைச் சேர்ந்த சமூகத்தாருக்கு, ஜம்புத்வீபத்திலுள்ள பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும், முஸல்மான்களுக்கும் இந்த அறிக்கை அளிக்கப்படுகிறது”
“மாட்சிமைதாங்கிய நவாப் முகம்மது அலி முட்டாள்தனமாக உங்களுக்குள் ஐரோப்பியர்களுக்கும் ஒரு இடத்தை அளித்து இப்போது விதவையைப் போலாகிவிட்டார். ஐரோப்பியர்களும் விசுவாசமில்லாமல் அரசை மோசடியாகக் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொண்டு குடிமக்களை நாய்கள் போல நடத்தி, தங்களது அதிகாரத்தை அவர்கள் மேல் செலுத்திவருகின்றனர். உங்களிடையே நட்பும் ஒற்றுமையும் இல்லை. மேற்குறிப்பிட்ட சமூகங்கள் ஐரோப்பியரின் இரட்டைவேடத்தை உணராமல், ஒருவருக்கொருவர் அவதூறு கூறிக்கொண்டதுமட்டுமல்லாமல், தங்கள் அரசை அவர்களுக்குத் தாரை வார்த்துக்கொடுத்துவிட்டனர். இத்தகைய கீழ்த்தரமானவர்களால் தற்போது ஆளப்படும் அரசுகளில் மக்கள் வறியவர்களாகிவிட்டனர், தண்ணீர் வெல்லமாகிவிட்டது. (அரியதாகிவிட்டது). தாங்கள் கஷ்டப்படும்போதும், அதிலிருந்து மீள வகையறியாதவர்களாக அவர்கள் இருக்கின்றனர். ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும் மனிதன் ஒருநாள் மறையக்கூடியவனே. அவன் அடைந்த புகழ்தான் சூரிய சந்திரர் உள்ள வரையில் அவனை வாழவைக்கும்…. . எனவே வருங்காலத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய வம்சாவளி உரிமையை அனுபவிக்கவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது, அதாவது ஆர்க்காட்டு நவாப், விஜய ராமண்ண திருமலை நாயக்கர், தஞ்சாவூர் அரசர் ஆகியோரும் மற்றவரும் அவரவருக்கு உரிய பகுதிகளை மரபுக்குக் குந்தகம் விளையாத வகையில் உடனே பெற்றுக்கொள்ளவேண்டும். ஐரோப்பியர் ஆர்க்காட்டு நவாபின் கீழ் பணிபுரிய வேண்டும். ஐரோப்பியரின் அதிகாரம் ஒழிவதால் கண்ணீரில்லாமல் மகிழ்ச்சியை நாம் அனைவரும் அனுபவிப்போம்”
“எனவே பிராம்மணர்களே, க்ஷத்திரியர்களே, வைசியர்களே, சூத்திரர்களே, முஸல்மான்களே, உங்களில் மீசையுள்ளோர், குடிமக்களாகவோ படைவீரர்களாகவோ வயலிலோ அல்லது வேறெங்கோ வேலைசெய்பவராகவோ, அந்தக் கீழ்த்தரமானவர்களிடம் (ஐரோப்பியர்களிடம்) சுபேதார், ஜமேதார், ஹவில்தார், நாயக், சிப்பாய் என்று பணிபுரிபவர்களாகவோ இருந்து ஆயுதங்களை ஏந்தக் கூடியவர்களாக இருந்தால் உங்கள் வலிமையை பின்வருமாறு நிரூபியுங்கள். கீழ்த்தரமானவர்களைக் கண்டால் அவர்களைக் கொன்றழியுங்கள்”
“இந்த அறிக்கையைச் சுவரிலிருந்து எடுப்பவன் பஞ்சமா பாதகங்களைச் செய்த குற்றத்திற்கு ஆளாகட்டும். எல்லாரும் இதைப் படித்து அறிக்கையின் நகலைத் தயார் செய்யுங்கள்செய்யுங்கள். இப்படிக்கு, பேரரசர்களின் பணியாளனும் கீழ்த்தரமான ஐரோப்பியர்களின் பரம எதிரியுமான மருது பாண்டியன்.”
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட பல அரசர்களைப் போல் தமக்கென ஒரு சுதந்தர நாட்டை ஸ்தபிக்க எண்ணாமல், பல்வேறு அரசர்களுடன் நாட்டை ஆள மருது பாண்டியர் விரும்பியதுதான். அறிக்கையிலும் தம்மை அரசர்களின் பணியாளன் என்றே தாழ்மையுடன் குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள். பிரகடனத்தின் நிறைவாக, மருது பாண்டியர் குறிப்பிட்டிருப்பது.
“ஶ்ரீரங்கத்தில் வாழும் பெரியோர்கள், ஆச்சாரியர்கள் உட்பட அனைவரின் பாதங்களையும் மருது பாண்டியன் பணிகின்றான். கோட்டைகளையும் கொத்தளங்களையும் அரசர்கள் உருவாக்கினர். அந்த அரசர்களும் மக்களும் இந்தக் கீழ்த்தரமானவர்களால் ஏழ்மையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். (அவர்களை எதிர்த்துப் போராட) உங்களது ஆசிகள் எனக்கு வேண்டும் !”
trichy-proclaim
 
இத்தகைய ஒரு எழுச்சியுடன் பிரிட்டிஷ் படையுடன் பொருதிய மருது பாண்டியர், துரோகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு மாண்டது வரலாறு. பிரித்தாளும் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ளாமல் இரு மருது சகோதரர்களும் ஒற்றுமையாக பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப் போரிட்டனர். வலுவான காளையார் கோவில் அரணை விட்டு, கோவிலுக்குச் சேதம் ஏற்படுத்துவோம் என்ற பிரிட்டிஷாரின் மிரட்டலால் இடம் பெயர்ந்தனர். பின்னால் தங்களிடம் பிடிபட்ட பெரிய மருதுவைத் தூக்கிலிட்டுக் கொன்றனர் பிரிட்டிஷார். மெய்க்காவல் வீரன் ஒருவனால் தொடையில் படுகாயமுற்று உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த சின்ன மருதுவை அந்த நிலையிலும் கிளிக்கூண்டில் தொங்கவிட்டு சித்ரவதை செய்தது, தமக்கு எதிராகக் கூட்டணி ஒன்றை அமைத்து தம் மேல் போர்தொடுத்த மருதுபாண்டியர் மேல் பிரிட்டிஷ் படைத்தலைவர்களுக்கு இருந்த ஆத்திரத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

பழிக்கு அஞ்சா மேதர் அக்கினீசு
பாங்காக வெகு இறுமாப்பாய்
கிளிக்கூடு செய்து, சின்ன மருதை
கெட்டியாய் அதில் போட்டு அடைத்து,
ஊஞ்சலெனத் தவசில் சின்ன மருது,
உறங்கியே ஊஞ்சலாடினாரே

என்று சிவகங்கை சரித்திரக்கும்மி இதைப்பற்றிக் குறிப்பிடுகிறது. சின்ன மருதுவின் கனவு அப்போது பலிக்காமல் போயிருக்கலாம். அவருடைய உடலை பிரிட்டிஷார் தண்டித்திருக்கலாம். ஆனால், பிரகடனத்தில் அவரே குறிப்பிட்டது போல, சூரிய சந்திரர் வரை அவர் புகழ் நிலைத்திருக்கும்.
(அக்டோபர் 24ம் தேதி மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்)

ஆதாரங்கள்

  1. South Indian Rebellion, The First war of Independence 1800-1801, K Rajayyan, Rao and Raghavan 

  2. Military Reminiscences by Colonel James Welsh, Smith, Elder and Co., Cornhill 

  3. சிவகங்கை சரித்திரக் கும்மி

 

2 Replies to “மருது பாண்டியரின் கனவு”

  1. ஆசிரியர் ஒரு வரலாற்று ஆய்வாளரா அல்லது அறிஞரா அல்லது ஆசிரியரா? ஏன் கேட்கிறேனென்றால், நம்மவர்கள் இப்படி அழைக்கிறார்கள்; அவர்கள் அப்படி அழைக்கிறார்கள் என்று எழுதினால் இவர் ஆயவாளர் ஆக மாட்டார். கட்டுரையின் தொடக்கத்தில் 1857 சிப்பாய்க் கலகம் பற்றி அப்படித்தான் குறிப்பிடுகிறார. 1857 பற்றி ஒன்றன்று இரண்டல்ல நூற்றுக்கணக்கான ஆய்வு நூல்கள் இந்தியராலும் அந்நியர்களாலும் எழுதப்பட்டுக்கிடக்கின்றன். அதில் சில்வற்றையாவது படித்தவர் இப்படியெல்லாம் சொல்ல மாட்டார்.
    மருதுபாண்டியர்களின் புகழை நிலைநாட்ட பல சான்றுகளை அடுக்கிவைத்தாலும், ஏதோ முன்முடிபை எடுத்துக்கொண்டு அதை நிரூபிக்க சான்றுகளைத் தேடி அலைவது போலிருக்கிறது. இன்றைய தமிழ்ச்ச்சூழலின் தாகததை இதுபோன்று கட்டுரையால் தீர்க்க உதவுகிறார் போலும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.