குழப்பவாதக் குரங்குகள் கட்டுரை – மறுவினைகள்


[stextbox id=”warning” caption=”க.சுதாகர்”]

அன்பார்ந்த பாலா,
நல்ல கட்டுரை. (சொல்வனம் உச்சைசிரவஸும் குரங்கும் – சொல்வனம்) வீட்டில் யாருமில்லையென்றால், ரெண்டு பீர் பாட்டிலுடன், ஒரு நல்ல திரைப்படத்தை டி.வி.டியில் பார்த்தபின் அதனைக்க்குறித்து சிந்தனை செய்யும்போது குழப்பவாதக் குரங்குகள் மனதுள் குதித்து ஆர்ப்பரிக்கும் பாருங்கள்.. அப்போதும் இது போன்ற உணர்வுகள் சாத்தியம்.. குதர்க்கமாகவோ, கிண்டலாகவோ சொல்லவில்லை. சாத்திய இழைகளை சிந்திக்கிறேன்.

ஏனெனில், நீங்கள் எடுத்திருக்கும் பாயிண்ட்டுகள் ( தமிழில் சட்டென பதம் கிட்டவில்லை) அப்படிப்பட்டவை. மனித மையக் கொள்கையும், மனித மாற்றுருக்கொள்கையையும் கலந்து கட்டி அடிக்கிறீர்கள். வியக்க வைத்திருக்கிறீர்கள். இதுவும் ஒரு மனித மையச் சிந்தனைதான். சிலிக்கான் பள்ளத்தாக்கின் மீது சிலருக்கு ஒரு காட்டம் இருக்கும். எப்படி, மும்பையிலிருந்து அமெரிக்கா செல்ல விசா கிட்டாதவர், ஊராய்யா அது? என்று பேசுவது போல, அமெரிக்க கம்பெனியில் சில சலுகைகள் கிட்டாத நிலையில் ( டெண்ட்டல் கவர் உட்பட), சிலர் பேசும் பேச்சுகளில் சிலிக்கான் வேலியின் சில செல்வந்தர்கள் மீதான காழ்ப்பு தெரிகிறது.
வர்த்தக முறை மாற்றத்தின், செல்வம் சேர்க்கும் முறையின் வரலாறு இதில் சிந்திக்கத்தக்கது. 1400-1900 வரையான காலனியாதிக்கத்தில் கம்பெனி, மனிதக் குழுக்கள், நாடுகள் என வர்த்தகத்தில் , சுரண்டலில் பங்குபெற்று அதில் விதிகளை வரையறுத்தன. விதிகள் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தன – எத்தனை அடக்குமுறை, அடிமைப்படுத்தல், சுரண்டலின் வெளிப்பாடாக அவை இருந்தபோதிலும். அன்று இதில் செல்வந்தரானவர்கள் பலர்.
இன்று சிலிக்கான் வேலியின் செல்வந்தராகும் வழிமுறைகள் நீங்கள் சொன்ன மாதிரி கர்ப்ப ரகஸ்யமாக இருந்து , தனிமனிதத் தீவுகளை உண்டாக்கி விடுகின்றன. இதன் ரகசியம் பலரை திகைக்க வைக்கிறது. புரியாத காரணத்தால், எதை எதிர்த்து போராடுவது? என்பது தெரியாத போராளி மனப்பான்மை, ”குரங்குகளை துணைக்கோடல்”என மாறுகிறது. நல்ல புத்தகமாக இருக்கும்போலத் தோன்றுகிறது. அறிமுகப்படுத்தியதற்கும், இத்தனை தீர்க்கமாக இது குறித்து எழுதியதற்கு நன்றி.
பி.கு கட்டுரையின் கடைசி வரி வேலி பற்றிச் சொல்வதில் “ வேலியாற் கதுவிடாத் திருநகரெலாம் நடுங்க” கோலியாத் எருசலேம் வந்ததாக வாசித்த வரிகள் நினைவுக்கு வந்தன. வேலியால்தான் இப்போது பல தனிமனிதத் திருநகரங்கள் அமெரிக்காவிலும், உலகளவிலும் காக்கப்படுகின்றன. அவற்றை உண்டாக்கி , அழிக்கும் கோலியாத்தாக குழப்பவாதக் குரங்குகளை முன்னிறுத்துகிறீர்கள். ஒரே வித்தியாசம்.. கோலியாத் , எருசலேமை உண்டாக்கவில்லை.
மற்றொரு சிந்தனைக்கு தளம் அமைப்பதற்கு நன்றிகள்.
அன்புடன்
க.சுதாகர்
[/stextbox]


[stextbox id=”alert” caption=”மைத்ரேயன்”]

கஸ்தூரி சுதாகர்,
கட்டுரைக்கு எதிர்வினை/ மறுவினை ஆற்றியதற்கு நன்றி. இப்படி கொஞ்சமாவது உரையாடல் நடந்தால்தான் கருத்துலகு நல்ல ஆரோக்கியத்தோடு வளரும்.

குரங்குகள் எனும்போது எனக்கு வளர்ந்த காலத்துச் சாய்வால் வானரப்படையின் நினைவுதான் வருகிறது. நேற்று கூட அந்தக் கட்டுரையைப் பற்றி நினைத்த போது இந்த உருவகம் முதலில் நினைவில் வந்தது. இன்று வேறு திரைப்படம் பற்றிப் பாலாஜி ஒரு கடிதம் எழுதினார், அதில் அவர் ஒரு ஹாலிவுட் அனிமேஷன் படம் பார்த்ததைச் சொல்லி, (Kubo and the two strings) அதில் ஹனுமான், அணில் நினைவு வந்ததாகச் சொன்னார். ஸ்ட்ரிங்ஸ் என்பது உடனொட்டிகள் என்ற அர்த்தத்தில் போலும். நான் படத்தை இன்னும் பார்க்கவில்லை. (அனிமேஷன் படங்களில் அனேகத்தைப் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு.)
கேயாஸ் மங்கீஸ் என்ற தலைப்பு, குரங்குகள் தம் வாழ்விடம் பற்றி அதிகக் கவலைப்படாதவை என்ற நினைவை எனக்குத் தோற்றுவித்தது. பறவைகள் கூடு கட்டும். கரடிகள் குகைகளைத் தேடும். எறும்பு கூட புற்று வைக்கும். ஆனால் குரங்குகள் இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி வாழ்கின்றன. மிருகங்களில் கேளிக்கையைத் தம் வாழ்வின் பகுதியாகக் கொண்டவற்றில் குரங்குகள் அலாதி என்று நினைக்கிறேன். இது உண்மையான கருத்தா என்பதை விலங்கு உயிரியலாளர் யாரிடமோதான் கேட்க வேண்டும். வெறும் பார்வை அனுபவம் பற்றாது.
அது போல சூழலில் இருக்கும் அரசு, சமூகம், இதர பண்பாட்டு அமைப்புகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி வளர்ந்து விட்டு, அவற்றின் பாதுகாப்பில் தம் வளர்ச்சியைப் பெரும் செல்வக் கொழிப்புக்குப் பயன்படுத்திக் கொண்டு, சூழலுக்கு அனேகமாக எதையும் திருப்பித் தராது செல்வத்தைப் பதுக்குவதோ, அல்லது மேன்மேலும் பெரும் நிதிக்குவையை அடையவோ பயன்படுத்துவது அனேக முதலிய முயற்சிகளின் முத்திரை. கரி, உலோகம், எண்ணெய், தானியங்கள், எந்திரங்கள், மின்சாரம்/ தொலைத் தொடர்பு என்று பற்பல பொருள் உற்பத்தி முறைகளில் நிதி திரட்டியவர்கள், ஏதோ ஒரு வகையில் தம் அமைப்புக்கு உதவும் மனிதருக்கு வளங்களைத் திருப்புகிறார்கள், என்றாலும் நிதிக்குவியல்தான் பிரதான நோக்கமாக ஆகி விடுகிறது.
அரசுகள் மக்களைப் பயன்படுத்தி அமைப்புகளை நிறுவிவிட்டுப் பின் அம்மக்களையே மேன்மேலும் கசக்கிப் பிழிந்து தம் ஆகிருதியை மேன்மேலும் வளர்க்க முயல்வதை ஒத்த முயற்சிகள்தாம் இவை. இந்த இயக்கத்திற்குப் பின் உள்ள தர்க்கமும் கிட்டத் தட்ட அதேதான். தொடர்ந்து தம்மை இருக்க வைக்க மட்டும் முயலாமல், தாம் தாக்கப்படாமலும், தம் ஆகிருதி குறைக்கப்படாமலும், தம் இயக்க வீச்சு எதிர்க்கப்படாமலும் இருக்க எடுக்க வேண்டிய முயற்சிகள் என்று வளத்தை அங்கே திருப்பும் நிலை ஏற்படுகிறது.
இதைக் காமத்துப் பால் என்று வருணிக்கலாமோ என்னவோ. அடங்காக் காமம்.
குழப்பக் குரங்குகளாகச் சிலிகான் நிதிக்கிழார்களை வருணிக்க வேறு சில காரணங்களும் உண்டு. அவை என்னென்ன என்று புத்தகத்தில் எழுதி இருக்கிறாரா என்று அதைப் படித்தால்தான் தெரியும். நாமே சிலவற்றை ஊகிக்கலாம். ஜுக்கர்பர்க்கும், ட்விட்டராட்டிகளும், ஸ்நாப்சாட்டியர்களும் அந்தரங்க உலகையும், அரசியல் உலகையும் ஒரு சேரக் குழப்பி அர்த்த வெளிகளின் வேலிகளை அறுத்துத் தள்ளி இருப்பதை நாம் காண்கிறோம்.
அரசியல் என்பது இன்று ஒரே நேரம் அனைவருக்கானதாகவும் இருக்கிறது, யாருக்கும் புரியாததாகவும் ஆகி இருக்கிறது. வழக்கம்போல கவசதாரிகளுக்கு மட்டும் ஒரு வெளியில் உலவவும், ஆக்கிரமிக்கவும் வசதி கிட்டுகிறது. அந்தக் கவசதாரிகளில் மரபு வேடதாரிகள்- அரசியலாளர்களோடு, நிதிக்கிழார்களோடு, இன்று பொறியாளர்களும் சேரத் துவங்குகிறார்கள். அவர்களிலும் நிதி வேட்டையை நடத்தத் தெரிந்தவர்கள், அல்லது அந்த வேட்டைக்கு உதவும் நபர்களைத் துணை சேர்க்கத் தெரிந்தவர்கள் மட்டுமே கவச அணியில் சேர முடிகிறது.
இதற்கு அப்பால் வேறு சில பெரும் தாவல்கள் உண்டு. அவற்றில் ஒன்றை என் நண்பர், பேராசிரியர் சிவகுமார் நேற்று தொலைபேசி உரையாடலில் முன் வைத்தார். கணிதம்/ இயற்பியல் ஆகியனவற்றில் திட்டமிட்ட நகர்வுகளை மனிதர் நம்பலாம் என்ற கருத்தும், அப்படிப்பட்ட முன் தீர்மானங்களுக்கு ஆட்படக் கூடிய அமைப்புகளையே மனிதர் பரிணாமத்துக்கு நம்ப முடியும் என்ற புரிதலும் தலை தூக்கி நிற்கின்றன. உயிரியலாளரோ தன்னிச்சை என்பதையே கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். தம் இருப்பை உறுதி செய்ய நுண்ணுயிரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் தொகுப்பு மனித இயக்கத்தையே சாத்தியமாக்குகிறது என்னும்போது அதில் முன் தீர்மானமோ, திட்டமிட்ட நடவடிக்கைகளோதான் பரிணாமத்தைச் சாத்தியமாக்குகின்றன என்பது நம்பத்தக்க கருத்தாக்கமாக இல்லை என்பதாக உயிரியலாளர் பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
இந்த இரண்டு பிரிவுகளின் தத்துவத் தர்க்கங்களைத் தாண்ட செயற்கை அறிவு என்பதை ஒரு பெரும் விடையாக முன்வைப்பவர்கள் (கர்ஸ்வைல் போன்றார்-
Kurzweil Responds: Don’t Underestimate the Singularity: MIT Technology Review ) இந்த இரு துறைகளின் பிரச்சினைகளில் ஒன்றான தர்மோடைனமிக்ஸ் என்பதன் இயல்பே மாறப்போகிறது என்று வாதிடுகிறார்கள். அதாவது இயற்பியல் மூலம் நாம் புரிந்து கொள்கிற தர்மோடைனமிக்ஸ் என்பதன் எல்லைகளை நாம் மாற்று அணுகல்கள் மூலம் கடக்கப் போகிறோம் என்பது உள்ளுறை வாதம் என்று அவர் பேசினார்.
இதன் முழு விளக்கம் எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் ஸிங்குலாரிட்டி என்பதைப் பற்றிப் படிக்கையில் இயற்பியலும், உயிரியலும் சேர்ந்து உருவாகும் உயிரினங்களை, மனிதரின் அமைப்புகள் செயற்கையாக உருவாக்கத் துவங்குகையில் நாம் பல கடப்புகளைச் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளே இருப்பதாகத் தெரிகிறது.
அந்த அளவில் குழப்பும் குரங்குகள், சாதாரணக் குரங்குகளைப் போல அல்லாமல், மாற்று இருப்பிடத்தை அமைக்க முடியலாம் என்றும் தோன்றுகிறது.
இந்த இடத்தில் கிப்ளிங்கின் ஜங்கில் புக்கில் வரும் குரங்கு தர்பார் நினைவு வந்தது. கிப்லிங் அந்தக் குரங்குகளை இந்திய அரசர்கள்/ அவர்களின் பிரஜைகள் ஆகியவற்றுக்கு உவமையாகப் படைத்தாரா என்று யோசித்தேன்.
மைத்ரேயன்
[/stextbox]


[stextbox id=”warning” caption=”க.சுதாகர்”]

அருமையான , விரிவான பதிவுக்கு மிக்க நன்றி. தெர்மோடைனமிக்ஸ் எண்ட்ரோப்பியை கோடிட்டு காட்டியது உலகத்தின் அழிவை நிச்சயமென்ற அதம வாதிகளை தெம்புறச் செய்தது! இதுபோல் உயிரியல் நன்னம்பிக்கை வாதிகளை தெம்புறச் செய்கிறது. ஆயினும் இரண்டிலுமொரு கருத்தை ஒத்ததாகப் பார்க்க முடியும்.

பலூனில் அடைபட்ட காற்றின் மூலக்கூறுகள் தாறுமாறாக அலைவதில், அம்மூலக்கூறுகளின் அடுத்த இடத்தையோ, ஆற்றலையோ அனுமானிக்க முடியாது. ஆனால் பலூன், பரளவான (macroscopic) வெளியில் அடுத்ததாக எங்கு செல்லமுடியுமென்பதை நம்மால் அனுமானிக்க முடியும். பரளவெளியின், கற்பிதக்கொள்கைகளும், விதிகளும் அனுமானிக்க உகந்தவை. இந்த வேறுபட்ட தளங்களின் இயக்கத்தை நீங்கள் காட்டிய சுட்டியிலும் சொல்லியிருக்கிறார்.
இதேபோல், ஒரு பெருவுடல் உயிரியினுள்ளே இருக்கும் நுண்ணியல் இயக்கங்களையும், அவற்றின் இடத்தையும் அறுதியிட்டுக்கூறமுடியாது. ஏன், அவற்றின் கூட்டுப் புழக்கத்தையும் அறுதியிட முடியாது.. மனிதனென்ற இனத்தில் அனைவருக்கும், இந்த நுண்ணுயிர்கள் மட்டுமே இந்த குடலில், இந்த இடத்தில் இருக்க முடியுமென்று சொல்லமுடியாது. இந்த Biomeகளைக் குறித்த அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது என்றாலும், நுண்ணுயிரி இயலும், அவை வாழும் ஒரு பெருவுயிரியின் இயலும் வேறுபட்டவை.
இந்த இடத்தில் இர்ண்டையும் ஒன்றாக பார்க்கலாம். அறுதியிட முடியாது என்ற இயலாமையில் இணைந்த அறிவியல் கூறுகள், நாளை நமது எல்லைகளை விரிவாக்க அனுகூலமாகலாம்.
காமம் என்றீர்கள். ஒரு சங்கப் பாடல் நினைவுக்கு வருகிறது.

‘காமம் காமம்’ என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்தாங்கு,
விருந்தே காமம்-பெரும்தோளோயே

காமம் என்பது, பற்கள் போன கிழட்டுப் பசு ஒன்று, சுவர் ஒன்றின் அடியில் முளைத்த இளம் புல் ஒன்றை நாக்கினால் நக்கி, சுவைக்க முனையும் பேராசை.
இயலாத ஒன்றையும் பேரார்வத்துடன் அனுபவிக்கத் தூண்டிவிடும் ஒரும் சக்தியன்றோ அது? அந்த வகையில் இந்த செல்வத்தின் நாட்டமும், எல்லை இது என்று காட்டிய இயற்பியல், உயிரியல் என்ர அறிவியற்புலங்களின் தடைகளை மீறி செயற்கையாக அறிவு உண்டாக்க நினைக்கும் பேரார்வமும் காமம்தானோ?
அன்புடன்
க.சுதாகர்
[/stextbox]

animal_minds_monkey_chimp_beasts


[stextbox id=”info” caption=”பாரதியார் கட்டுரை”]

பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் மர்மத்தினுடைய பலனாக அடுத்த ஜன்மத்தில் உயர்ந்த பிறப்பேனும் தாழ்ந்த பிறப்பேனும் கிடைக்கும் என்பது நமது தேசத்துப் பொது நம்பிக்கை. பாவம் செய்யும் ஒருவனை ‘நீ அடுத்த ஜன்மம் மிருகமாகப் பிறப்பாய்’ என்றால் அவனுடைய மனம்பதைக்கிறது. ஆனால், இந்த ஜன்மத்திலேயே தாம் மிருகங்களைப் போலிருப்பதைக் கவனிப்பது கிடையாது. ஒவ்வொரு நிமிஷத்திலேயும் ஒருவன் நினைக்கும் நினைப்புகளும் செய்யும் செய்கைகளும் அவன் பலவிதப் பிறவிகளை அடைவதற்குக் காரணமாகின்றன. இந்த உலகத்திலேயே, இப்பொழுதே, ஒரே சரீரத்திலுள்ள ஒருவன்ஆயிரம் பிறவிகள் பிறந்து மடிகிறான். ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து பிறந்து மடிகிறான்; ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து மாய்கிறான் என்று கூறத் தகும். மிருகங்களைப் போன்றமனிதர்களை நாம் பார்த்ததில்லையா? நம்மை “நாம்கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களா யிருந்திருக்கிறோம் என்பது தெரியும்.

வஞ்சனையாலும் சூத்திரத்தாலும் சமயத்திற் கேற்பப் பலவித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரிதானே? ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனஞ்சோர்ந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு. தாமதத்திலும், புகழிலும் விருப்பமில்லாமல், அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி. சுயாதீனத்திலே இச்சையில்லாமல் பிறர்களுக்குப் பிரியமாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுத்ததை வாங்கிவயிறு வளர்ப்பவன் நாய், கண்ட விஷயங்களிலெல்லாம் திடீர் திடீர் என்று கோபமடைகிறவன் வேட்டைநாய். காங்கிரஸ் சபையிலேயும் சேர்ந்து கொண்டு, ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் ஹிதமாக நடக்க வேண்டுமென்ற விருப்பமுடைய ”மேத்தா” கட்சியைச் சேர்ந்தவன் வௌவால். அறிவுத் துணிவால் பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளாமல் முன்னோர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்ப வாயினால் சொல்லிக் கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை. பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்தியபோதிலும்,அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல் தமது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை. வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகின்றவன் வான்கோழி.
கல்வி யறிவில்லாதவனை மிருகக் கூட்டத்திலேயும் சேர்க்கலாகாது. அவன் தூண். தான் சிரமப்படாமல் பிறர்சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு. ஓர் நவீன உண்மை வரும்போது, அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக் கொண்டுஅஞ்சும்) ஆந்தை. ஒவ்வொரு நிமிஷமும் “சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்துப் பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனேமனிதனென்றும் தேவனென்றும் சொல்வதற்குரியவனாவான். மிருக ஜன்மங்கனை நாம் ஒவ்வொருவரும் க்ஷணந்தோறும் நீக்க முயலவேண்டும்.
பாரதியார் கட்டுரை “ஓம்சக்தி – புனர்ஜன்மம்”
[/stextbox]

planet_of_the_apps_chimps_apes_monkeys_applications_iphone_play_store


[stextbox id=”info” caption=”பாஸ்டன் பாலா”]

சமீபத்தில் மூன்று விஷயங்கள் வாசித்தேன்:

1. Horses can communicate with us – scientists – BBC News | Horses recognise human emotions – BBC News – மற்ற மிருகங்கள் என்ன சொல்கிறது என்பது எனக்குத்தான் புரிவதில்லை. அவை உரையாடிக் கொண்டுதான் இருக்கின்றன. குதிரையின் பரிபாஷையை இப்பொழுதுதான் கொஞ்சம் போல் புரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறோம்.
2. I’ll Bee There for You: Do Insects Feel Emotions? – Scientific American: தன்னுடைய ”The Expression of Emotions in Man and Animals” நூலில் சார்லஸ் டார்வின் சொல்லியிருந்தார்: ”கோபத்தையும் பயத்தையும் பொறாமையையும் அன்பையும் பூச்சிகள் வெளிப்படுத்துகின்றன” என்று 1872ல் எழுதியிருக்கிறார். தேனீக்கள் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றன என்பதை இப்போது மனிதராலும் அறிவியல்பூர்வமாக அறிய முடியும். 150 ஆண்டுகள் கழித்து டார்வினின் எண்ணங்கள் தேனீக்களின் நடத்தை மற்றும் புலன் உணர்வு சார்ந்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
3. Animal Minds – The Chronicle of Higher Education

New research describes qualities among nonhuman animals that were once considered exclusive to us: empathy, mental time-travel, language, self-awareness, and altruism. Journals overflow with studies of animal minds, frequently described in language also used to describe human minds, and feats of animal intelligence seem to go viral weekly: an octopus escaping its tank, crows gathering to mourn their dead, fish solving problems, monkeys grieving, and snakes socializing.
Researchers reported conscious planning by chimpanzees selecting tools they’d later need, or western scrub jays caching food for the following day.

இந்த Chaos Monkeys புத்தகம் ஏன் புகழ் பெறுகிறது? புத்தகத்தை எழுதிய கார்சியா (Garcia)வைப் பொருத்தவரை 24-மணி நேரமும் கணினியைக் கட்டிக் கொண்டு கோடிகளைத் துரத்தும் தொழில்நுட்பவாதிகளின் அபிலாஷகளையும் கலாச்சாரத்தையும் சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாது.
இப்பொழுது இந்த ‘The Lobster’ படத்தை ஏன் இந்த நூலோடு கோர்த்துவிடுகிறேன்? அந்தப் படத்தின் கதைக்கரு என்னவென்றால், காதலிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் மிருகங்களாக மாற்றப்படுகிறார்கள்.
சிலிகான் வேலி போல் புதுயுக நிறுவனங்களில் வேலை பார்ப்போருக்கு எது மற்றவரை ஈர்க்கும் என்பதும், எப்படி எல்லோரையும் கவருமாறு அப்ளிகேஷன்கள் எழுதுவது என்பதும் நன்றாகத் தெரியும். ஆனால், எப்படி சக மனிதரை மனிதத்தன்மையோடு பார்ப்பது என்பதில் சிக்கல் இருக்கிறது. ’தி லாப்ஸ்டர்’ படவாசிகளுக்கு மிருகம் போல் காதல் கற்றுத்தரப்படுகிறது. அந்த செயற்கை மோகத்திற்குள்ளாகாவிட்டால், தனிமையாக வாழ அனுமதிக்கப்படாமல், மிருகங்களாக மாற்றப்படுகிறார்கள்.
திடீரென்று அத்வைதம் கூட நினைவிற்கு வந்தது. குட்டிப் புழுக்களை வாத்துகள் சாப்பிடும். வாத்துகள் இறந்தவுடன் அதனிடமிருந்து குட்டிப் புழுக்கள் உருவாகும். கார்சியாவின் நூலில் பெரிய பெரிய நிறுவனங்கள், சின்ன நிறுவனங்களை விழுங்கும். அதன் பிறகு, அந்தப் பெரிய நிறுவனங்கள் சின்னாபின்னமாகி, சிறிய நிறுவனங்கள் ஆகும்.
எனக்குள்ளே இருக்கும் விலங்கை நான் உணர்ந்து கொண்டு நினைவில் வைத்திருந்தாலே போதும். அது என்னை இரண்டு கால் கொண்டு இயங்க வைக்கும். மற்ற மிருகங்களுக்கு ஆறறிவு இல்லை என்று நம்புவதில்தான் என்னுடைய மேன்மையை ஸ்தாபிக்கும் வேட்கை நிரூபணமாகிறது.
பாஸ்டன் பாலா
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.