குற்ற நீதியொறுத்தல் முறை

அமெரிக்க நீதி முறை எத்தனை பயங்கரம் என்பது தெரியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் இந்தியர்களும்/ தமிழர்களும். பழுப்புத் தோலுக்குக் கீழே பல நிறங்களில் மேலும் பல இனக் குழுவினர் காவல் துறையின் கடுமையான பார்வைக்கும், இழி நோக்குக்கும் ஆளாக இருக்கக் கிட்டுவதால், இந்தியரும் சீனரும் இது வரை காவல் துறையின் கண்காணிப்பிலிருந்து ஓரளவு தப்பி இருக்கின்றனர். மாறாக அமெரிக்க நீதித் துறையிடம் இந்தியர் அத்தனை தப்புவதில்லை. கடந்த சில வருடங்களில் கவனிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. ஒரு காரணம் இந்தியர்களிலேயே சிலர் நீதித்துறையில் அரசு வழக்கறிஞர்களாக இருப்பதாக இருக்கலாம். எஜமான விசுவாசத்தை நிலை நாட்டத் தம் மக்களைக் கடுமையாகக் கவனிப்பது அவசியம் என்று இவர்களில் சிலர் நினைக்கிறார்களோ என்னவோ.
சமீபகாலம் வரை அமெரிக்கக் காவல் துறை/ நீதித்துறையின் கடும்பார்வை அனேகமாகக் கருப்பர்கள், லத்தினோ இனத்தினரையே தாக்கி வந்திருந்தது. ஓரளவு ஏழை பாழை வெள்ளையரையும் தாக்கி இருந்தது என்றாலும் அந்தத் தாக்கம் மட்டு மீறியதாக இல்லை. கருப்பர்களைத் தாக்கி இருந்தது, இருப்பது மட்டு மீறியது என்று அமெரிக்கக் காவல் துறையினரே ஒத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறது. இப்போது வெள்ளை இன மக்களுமே காவல் துறையின் மட்டு மீறிய, சட்டப் புறம்பான நடத்தைகளுக்குப் பலியாகத் துவங்கி இருக்கிறார்கள் என்பது சமீபத்தில் சுட்டுக் கொல்லப்படுவோரில் கருப்பர்கள் மட்டுமல்ல, வெள்ளை இனத்து மக்களும் எண்ணிக்கையில் கூடி வருகிறார்கள் என்பதை வைத்து நாம் ஊகிக்கலாம்.
இங்கே கொடுக்கப்படும் சுட்டியில் ஒரு வெள்ளை இனப் பெண் 96 நாட்களுக்கு எந்த வெளித் தொடர்பும் இல்லாத நிலையில் சிறையில் வைக்கப்பட்டதையும், அது அவர் மீது சுமத்தப்பட்ட போலியான குற்றச்சாட்டாலும் என்பன விளக்கப்படுகின்றன. அவர் விடுவிக்கப்பட்ட பின் இந்த அத்து மீறலுக்கு எதிராக அவர் தொடுத்த வழக்கை மேல் நீதி மன்றம் ஒன்று தள்ளுபடி செய்தது- என்ன காரணமென்றால், அவர் ஒரு ஜூரியால் சிறைத் தண்டனை வழங்கப் பெற்றவர் என்பது கொடுக்கப்பட்டது.
அந்த ஜூரியோ, நீதிபதியோ குற்றச் சாட்டுக்குக் காரணமான காணொளியைப் பார்க்கவே இல்லை, அந்தக் காணொளியில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதெல்லாம் அந்த நீதிபதிக்கு ஒரு பொருட்டாகவே இல்லை என்பது அமெரிக்கக் குடியுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாகச் செய்தி சொல்கிறது. இதெல்லாம் இன்னும் ட்ரம்பின் வெள்ளை இனவெறி ஆட்சி பதவியைப் பிடிக்காத போதே நடப்பவை. அவர் பதவியேற்றால் இன்னும் என்ன ஆகுமோ? ஹிலரி ஏதோ மேல் என்று நினைப்பவர்களுக்கு, ஹிலரிக்கு ரகசியமாகத் தாக்குதல்கள் நடத்துவதெல்லாம் இனிப்பானவை என்று நினைக்க வைக்கும்படியான காணொளித் தகவல்கள் இப்போது கிட்டத் துவங்கி இருக்கின்றன. எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?