குட்டிப் பாதங்களால் அறிந்த மண்ணில்

tamilnadu_bus
ஏப்ரல் இந்திய விடுமுறையில், பயணத் திட்டமிடல்களில் முதலில் இருந்தது ஓடைப்பட்டிக்குப் போய்வருவதுதான். கூடவே தாத்தா ஊரிலிருக்கும் குலதெய்வம் கோவிலுக்கும்.
கோடை பகலின் வெப்பத்திற்குப் பயந்து இரவுப் பயணமாய் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாயிற்று. மல்லிகா, இயலோடு இரவு பதினோரு மணிக்கு பல்லடத்தில் மதுரை பஸ் ஏறினோம். மதுரை போக நாலு மணி நேரமாவது ஆகும். அங்கிருந்து திருமங்கலம் போய் ஓடைப்பட்டிக்கு விடிகாலையில் போய்ச்சேர திட்டமிட்டிருந்தோம்.
ஒரு மணி நேரத்தில் தாராபுரம் தாண்டி டீ குடிக்க வண்டி நின்றது. டீக்கடை ஸ்பீக்கரில் “ஜித்து ஜில்லாடி…”; குரல் தேவா மாதிரி இருந்தது. மல்லிகாவும், இயலும் இறங்கிப்போய் டீ வாங்கி வந்தார்கள். பகலாயிருந்தால் கடலை மாவு போண்டா பெரிய உருண்டையாய் கிடைக்கும். ராஜலிங்கத்தின் வீடு தாராபுரத்தில்தான் இருந்தது. ஒருமுறை காலேஜ் டூர் போனபோது தாராபுரம் கடக்கும்போது ராஜலிங்கம் வீட்டிற்குப் போனது ஞாபகம் வந்தது.
பத்து நிமிடத்தில் பஸ் கிளம்பியது. கொஞ்ச நேரம்தான் கண்ணயர்ந்த மாதிரி இருந்தது. சத்தம் கேட்டு பாதி கண் திறந்து பார்த்த போது, பஸ் ஆரப்பாளயம் ஸ்டேண்டில் நுழைந்துகொண்டிருந்தது. ஆச்சர்யமாய் மணிபார்க்க, இரண்டுதான் ஆகியிருந்தது. இறங்கியவுடன் மல்லிகா அங்கும் ஒரு டீ வாங்கி கொடுத்தது. பஸ் ஸ்டாண்ட் உள்ளிருந்த ஹோட்டலில் அந்த நேரத்திலும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஹோட்டல் முன் வாசலருகில் அடுப்பின் நீளக் கறுப்புக்கல்லில் தோசையும், ஆம்லெட்டும், புரோட்டாவும்…
நைட் சர்விஸ் டவுன் பஸ் ஏறி திருமங்கலம் இறங்கினோம். பஸ் ஸ்டாண்ட் இரவின் அமைதியில் மௌனத்தில் வெறிச்சோடியிருந்தது. பின்புறம் புதுநகர் போகும்பாதை இருட்டில் கிடந்தது. +1 +2 படிக்கும்போது புதுநகரில்தான் அம்மாவுடன் வாடகை வீடெடுத்து தங்கியிருந்தோம்.
பஸ்கள் வெளிவரும் வாசலில் பாண்டியன் ஹோட்டலில் பாதி ஷட்டர் மூடியிருந்தது. மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் நைட் சர்விஸ்கள் மட்டும் வரிசையாய் நின்றிருந்தன. வெளியில் வந்து சிவகாசி வண்டி ஏறி கள்ளிக்குடியில் இறங்கினோம். ஒரே ஒரு ஆட்டோ மட்டும் நின்றிருந்தது. உள்ளே டிரைவர் தூங்கிக்கொண்டிருந்தார். எழுப்பி ஓடைப்பட்டி போகவேண்டுமென்றோம்.
ரயில்வே லைன் அடியில் ரோட்டில் தேங்கியிருந்த மழைத்தண்ணீரில் ஆட்டோ மெதுவாக நகர்ந்தது. திருமங்கலம் பி.கே.என் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்புக்கும், பத்திற்கும் ஹாஸ்டலில் இருந்தேன். தம்பிகள் டே ஸ்காலர். காலையில் முதல் 7 மணி வண்டியில் ஸ்கூல் வருவார்கள். பஸ் கூட்ட நெரிசலில் ஒருபக்கம் சாய்ந்துகொண்டு வரும். அப்போது ரயில்வே லைன் அடியில் இந்த ரோடு கிடையாது. சரியாய் ஏழு மணி வண்டி ரயில் கிராஸ்ஸிங்கிற்காக இங்கு நிற்கும். ஆட்கள் கீழிறங்கி நிற்கும்போதுதான் மூச்சுவிடமுடியும்.
சோழம்பட்டி ரோடும், பெரிய பாலமும், புதிதாய் வந்திருந்த காலனி குடியிருப்புகளும், ஐந்தாம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடமும் இருட்டில் நகர்ந்தன. எட்டாம் வகுப்புவரை கூடப்படித்த தோழி ஹேமலதாவின் வீடு கடந்துபோனது. அடுத்ததாய் தோழி ஜீவாவின் வீடு கடந்தது. ஜீவா திருமணமாகி சிங்கப்பூரில் இருப்பதாய் கேள்விப்பட்டிருந்தேன்.
சென்னம்பட்டி நாடார் ஸ்கூலில் படித்தபோது, கூடவேயிருந்த நட்புகள் ஞாபகம் வந்தது. விஜயராணி, ஹேமலதா, ராஜேந்திரன், கனகு, நாகேஸ்வரி, ராமலட்சுமி…எல்லோரும் இந்த 44 வயதில் எப்படி இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
வீடு மந்தையில்தான் இருந்தது. வீட்டு முன்னால்தான் பஸ் ஸ்டாப். ஒண்ணாம் நம்பர் மருதங்குடி பஸ்ஸூம், 13 காரியாபட்டி வண்டியும் அங்குதான் நின்று செல்லும். வீடு வாசல் படிக்கருகில் புதிதாய் கிராமத்து சாக்கடை கட்டியிருந்தார்கள். பேப்பர், பாலிதீன் குப்பைகளோடு மெல்லிய நாற்றமடித்தது. வாசலில் கால் வைத்ததும், பெரிய எலி ஒன்று பக்கத்து கடையின் சாக்கடை அடியிலிருந்து கிளம்பி ஓடியது.
சத்யனிடமிருந்து வாங்கி வந்திருந்த சாவி வைத்து, வெளிக்கதவு திறந்து மல்லிகா லைட்டை போட்டது. தரை முழுதும் புழுதி கனமாய் படிந்திருந்தது. உள் மரக்கதவு பூட்ட முடியாமல் சும்மாதான் சாத்தியிருப்பதாக சத்யன் சொல்லியிருந்தான். மரக்கதவு திறந்து உள்விளக்கு போட, சுவரில் மாட்டியிருந்த தாத்தா படம் முதலில் கண்ணில் விழுந்தது. மறைவு தேதி எழுதியிருந்தது – மார்ச் 2016. கண்களில் நீர் கோர்த்தது. தாத்தாவின் மரணத்திற்கும், பாட்டியின் மரணத்திற்கும் ஊருக்கு வரமுடியவில்லை. கட்டிலில் இரண்டு வருடங்கள் நடக்கவே முடியாமல் படுத்தே கிடந்த பாட்டியின் இடம் வெறிச்சோடியிருந்தது. வீடு சின்னதாகிப் போனதுபோல் இருந்தது. வீட்டு மூலையில் அம்மிக்கல்லும்,மாவரைக்கும் கல்லும் தூசி அப்பி கிடந்தன.
மல்லிகா துடப்பம் எடுத்து புழுதியை கூட்டித்தள்ளியது. பழைய நினைவுகளாலும், தூசியினாலும், புழுக்கத்தினாலும் மூச்சுத் திணறியது. வெளியே கொஞ்ச நேரம் உட்காரலாம் என்று, வீட்டின் எதிரில், ரோட்டுக்கு அந்தப் பக்கமிருந்த முத்தியாலம்மன் கோவில் வெளிக்கல்லில் உட்கார்ந்து கொண்டோம். காற்றே இல்லை; மந்தையிலிருந்த வேப்பமர இலைகள் அசைவேயில்லாமலிருந்தன. கொசு கடித்தது. இயல் துண்டு வைத்து விசிறிக் கொண்டிருந்தது.
ராஜ் நாயக்கர் ஹோட்டல் கடையை இடித்து புதிதாய் மாடியோடு கட்டி ஆரஞ்சு பெயிண்ட் அடித்திருந்தார்கள். மகா சிவராத்திரி திருவிழாவின் கருப்பசாமி ஊர்வலத்தின்போது பூஜைக்காக இறக்கி வைக்கும் கம்பிவேலிபோட்ட மேடை முன்னால் யாரோ கார் நிறுத்தியிருந்தார்கள். காருக்கு பக்கத்தில் தள்ளுவண்டி ஒன்று நின்றிருந்தது. பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் கட்டிடத்தில் யாரோ படுத்திருந்தார்கள். முத்தியாலம்மன் கோவில் உள்ளே மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் தரைக்கல்லில் வரைந்திருந்த ஆடுபுலி ஆட்டக் கோடுகள் தெரிந்தன.
சின்னப் பையனாய் இருந்தபோது தூரமாய் தெரிந்த இடங்களெல்லாம், பக்கத்தில் இருந்தன. பாண்டியின் பலசரக்குக்கடை இருளிருந்தது. வலதுபக்கம் தெருவிளக்கு வெளிச்சத்தில் காளியம்மன் கோவிலும், கோவில் முன்னால் மண்டையத்தேவர் கடையும் தெரிந்தன. மண்டையத்தேவர் கடை பாட்டியின் சர்க்கரை பாகு சீரணி ஞாபகம் வந்தது.
கொசுக்கடி அதிகமானதால் மறுபடியும் வீட்டிற்குள்ளேயே போனோம். மச்சு வீட்டிற்குள்ளிருந்து பழைய போர்வை எடுத்து வந்து உதறி நீளமாய் விரித்து படுத்துக்கொண்டோம். காற்றுக்காய் கதவு திறந்துதான் வைத்திருந்தோம். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் தாமோதரன் கூப்பிடும் சத்தம் கேட்டுத்தான் முழிப்பு வந்தது. தாமோதரன் பெரியப்பாவின் கடைசி பையன். 108-ல் டிரைவராக வேலை செய்கிறான்.
முகம் கழுவி பேசிக்கொண்டிருந்தோம். தாமோதரன் வெளியில் போய் பத்மநாப கோனார் கடையில் டீ வங்கி வந்தான். குல தெய்வம் கோவிலுக்கு போகவேண்டும் என்று சொல்ல பாண்டியிடம் வண்டி சொல்லிவிட்டு வந்தான். கிடாவெட்டிற்கு முனியாண்டி கோவில் போவதாகவும் மதியம் வந்துவிடுவதாகவும் சொல்லிப்போனான். பெரியம்மாவும், தங்கை மகாலட்சுமியும் வந்தார்கள். பெரியம்மா கையைப் பிடித்துக்கொண்டு அழுதார்கள். எனக்கும் அழுகை வந்தது. வாசு அண்ணா மஞ்சள் காமாலையால் இறந்தது சமீபத்தில்தான். அப்போது மூர்த்தி கென்யாவிற்கு போன் செய்து சொன்னபோது அடைந்த அதிர்ச்சி…
பெரியம்மா வீட்டிற்குப்போய் குளித்து சாப்பிட்டுவிட்டு கோவில் கிளம்பினோம். வாசு அண்ணாவின் இரண்டு பெண்குழந்தைகளும் கிளம்பி ஸ்கூல் சென்றார்கள். மல்லிகா பாண்டி கடையில் பூஜை சாமான்கள் வாங்கிக்கொண்டது. கள்ளிக்குடியில் வண்டி நிறுத்தி பூ வாங்கினோம்.
குலதெய்வம் “தும்மம்மாள் பாப்பம்மாள்” கோவில் இருந்தது வீரப்பெருமாள்புரத்தில். பேச்சு வழக்கில் அது களரிக்குடி. திருமங்கலம் சாலையில் தூம்பக்குளம் விளக்கிலிருந்து பிரிந்து அரசபட்டி கடந்து மூன்று கிலோமீட்டர் செல்லவேண்டும். சிவரக்கோட்டை கடந்தோம். கோவில் திருவிழா நடக்கிறது போலும். குழாய் ஸ்பீக்கரில் எல்.ஆர்.ஈஸ்வரி. மல்லிகாவின் குலதெய்வக் கோவில் அங்கு இருந்தது.
களரிக்குடியில் நுழைந்து முதலில் பெருமாள் கோவிலில் கும்பிட்டுவிட்டு, தும்மம்மாள் பாப்பம்மாள் கோவில் சென்றோம்.
கருவேலங்காட்டுக்கு நடுவில், தண்ணியில்லாத ஏரிக்கரை ஓரத்தில் சின்னக் கோபுரத்தோடு அத்துவான மோனத்தில் இருந்தது கோவில். பூச்சு வேலை நடப்பதால் திறந்திருந்தது. இல்லையென்றால் ஊருக்குள் போய் சாவி வாங்கி வரவேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தின் அன்றைய வேலைநேரம் முடித்து கருவேல மரத்தடியிலும் கோவில் மண்டபத்திலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஓடைப்பட்டி வீட்டை கட்டிய தாத்தாவின் உறவினரின் தம்பி அடையாளம் கண்டுகொண்டு வந்து கைபிடித்துக்கொண்டார். “சந்திரா பையன்” என்று அருகிலிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு இயல் பார்த்து “பொண்ணா ஒரே குழந்தைதானா” என்றார்.
சாமி கும்பிட்டுவிட்டு உள்ளேயே உட்கார்ந்தோம். சுவரில் உபயதாரர்கள் பெயர்களை எழுதியிருந்தார்கள். அம்மா, அப்பாவின் பெயரும் சொந்தக்காரர்கள் பெயரும் இருந்தன. இயல் உண்டியலில் காசு போடும்போது, தேனீக்கள் நாலைந்து பறந்து வெளியே வந்தன.
மனம் இறந்தகாலத்தையே சுற்றிச்சுற்றி அசை போட்டுக்கொண்டிருந்தது.
திருமணத்திற்கு முன்னால் குலதெய்வம் கோவில் கும்பாபிஷேகத்திற்கு மல்லிகாவுடன் வந்திருக்கிறேன். அன்று ஒயிலாட்டமும் முளைப்பாரியும் கும்மியும் பார்த்துவிட்டு மல்லிகா, லதா, சத்யன், மூர்த்தி தாத்தாவோடு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கினோம். பள்ளி விடுமுறையில் தாத்தா ஊருக்கு வரும்போதெல்லாம், இரவு வெகுநேரம் வரை நடக்கும் கும்மி பயிற்சிகள் பார்ப்பது மிகவும் பரவசம் தருவது.
மனம் அயர்ச்சியாயிருந்தது.
களரிக்குடியிலிருந்து கிளம்பி மறுபடி கள்ளிக்குடி வந்து பனை நுங்கு வாங்கினோம். ரயில்வே ரோடு கடக்கும்போது, சுந்தரராஜ் மாமா ஞாபகங்கள்… ஓசூரிலிந்து ஓடைப்பட்டி வரும்போதெல்லாம் கள்ளிக்குடி ஸ்டேஷனில்தான் இறங்கி ஏறுவோம். சுந்தரராஜ் மாமா ஒவ்வொருமுறையும் ஸ்டேஷன் வருவார்.
வீடு திரும்பும் வழியில், படித்த ஆரம்பபள்ளியின் அருகே வண்டி நிறுத்தி கேட் முன்னால் போட்டோ எடுக்கும்பொழுது, உள்ளிருந்து ஒரு டீச்சர் வந்தார். தங்கை மகாலட்சுமிக்கு அவரைத் தெரியும் போலும். நான் படித்தபோது வாத்தியாராயிருந்த சந்திரசேகர் சாரின் பெண். உள்ளே அழைத்தார். மல்லிகாவும் இயலும் போய் எல்லா வகுப்பறைகளிலும், குழந்தைகளோடு போட்டோ எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
வீடு வந்து, பெரியம்மாவும், மஹாலட்சுமியும் மதிய உணவு சமைத்தார்கள். சாப்பிட்டுவிட்டு தூங்கினோம். எழுந்திருக்கும்போது எனக்கு தொண்டை கட்டியிருந்தது. பேசும்போது வெறும் காத்துதான் வந்தது.
மாலையில் கிளம்பி ஊர் எல்லையில் இருந்த நொண்டிக் கருப்பண்ணசாமி கோவில் போனோம். மல்லிகாவும், இயலும் வாசு அண்ணா மனைவியோடு நடந்துபோனார்கள். கிடாவெட்டிலிருந்து திரும்பியிருந்த தாமோதரனோடு நான் டூவீலரில் போனேன். கோவில் நிறையவே மாறியிருந்தது. மண் தரையெல்லாம் சிமெண்ட் தரையாகியிருந்தது. சுற்றுச்சுவர் எழுப்பி எல்லா சாமிகளுக்கும் ரூம் கட்டியிருந்தார்கள். கோவில் முன்னாலிருந்த நாடகம் நடக்கும் மேடையில் உட்கார்ந்தபோது வெட்டவெளிக்காற்று சுகமாயிருந்தது.
வாசு அண்ணா வீட்டிற்குப் போனோம். பனங்கருப்பட்டியில் தேங்காய்பால் கலந்து மல்லிகா கொடுத்தது. குரல் “நான் கடவுள்” மொட்டை ராஜேந்திரன் மாதிரி மாறியிருந்தது. திரும்பி மந்தை வழியே பெரியம்மா வீடு வந்தோம். வருட சிவராத்திரி திருவிழாவின்போது இளைஞர் நற்பணிமன்ற விளையாட்டுப்போட்டிகள் மந்தையில்தான் நடக்கும். பஞ்சாயாத்து போர்டு மேடையில் பாட்டுக்கச்சேரியும், நாடகமும். அவ்வப்போது திரைகட்டி படம் போடுவார்கள்.
இரவு திருமங்கலம் போகும் கடைசி 10 மணி வண்டியில் போனால் லட்சுமி மில்ஸ் விடிகாலையில் போய்விடலாம் என்று முடிவுசெய்தோம்.
இரவு உணவு முடித்து வாசல் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். புனேவில் இருந்து ரிடையராகி கிராமம் திரும்பியிருந்த ராஜேஷ் அப்பாவும் (எனக்கு மாமா), அனுசூயா அத்தையும் வீட்டிற்கு முன்னால் (சுந்தரராஜ் மாமா – அம்மாவின் முதல் தம்பி – இங்குதான் வாடகைக்கு இருந்தார்) போர் கிணறு போட வண்டி கூப்பிட்டிருந்தார்கள். போர் லாரி ரிவர்ஸில் தெரு நுழைந்து நின்று பைப்கள் இறக்கினார்கள். மனோகரன் சித்தப்பாவும், ஷீலா சித்தியும் இன்னும் நாலைந்து பேர்களும் போர் போடுவதை பார்க்க எதிரிலிருந்த சீனி அண்ணாவின் வீட்டு வெளித்திண்ணையில் உட்கார்ந்திருந்தனர்.
பஸ் வரும் நேரத்திற்கு 20 நிமிடத்திற்கு முன் பெரியம்மா வீட்டிலிருந்து கிளம்பி மறுபடியும் மந்தைக்கு வந்து முத்தியாலம்மன் கோவில் கல் திண்ணையில் உட்கார்ந்து பஸ்ஸிற்காக காத்திருந்தோம். தாமோதரன் பக்கத்தில் உட்கார்ந்து கிருஷ்ணமூர்த்தி அண்ணாவுடன் பேசிக்கொண்டிருந்தான். சற்றுத்தள்ளி மல்லிகாவும் இயலும் பெரியம்மாவுடனும் மஹாலட்சுமியுடனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
எதிரில் வீடு இருளிலிருந்தது. இங்குதான் இங்குதான் எல்லாம்…அம்மா இந்த வீட்டின் சமையலறையில் விறகடுப்பில் சமைக்கும் காட்சி மனதில் ஆழமாய் பதிந்திருந்தது. அப்பா வாசல் படியில் உட்கார்ந்து பேப்பர் படிக்கும் காட்சியும். அம்மா, அப்பா, வண்டி தாத்தா, தும்மம்மாள் பாட்டி, கண்ணாடி பாட்டி, சுந்தரராஜ் மாமா…மறைந்துபோன எல்லாரின் நினைவுகளும் ஞாபகத்தில் சுழன்று சுழன்று வந்து மனதை கனமாக்கிக் கொண்டிருந்தன. மனம் தாளாது உள்ளுக்குள் அரற்றியது. கண்கள் நிறைந்தது. வலதுபக்கம் குளம் பார்த்து தலைதிருப்பிக்கொண்டேன். தூரத்து குளத்தின் கிழக்கு மூலை ரோடு திருப்பத்தில் பஸ் வருவது ஹெட்லைட் வெளிச்சத்தில் தெரிந்தது.

3 Replies to “குட்டிப் பாதங்களால் அறிந்த மண்ணில்”

  1. என்னதான் சென்னையில இருந்துட்டு அடிக்கடி ஊருக்குப் போனாலும், இந்த மாதிரி அனுபவங்களைப் படிக்கும்போது இப்பவும் ஊர்ல இருக்கற மாதிரிதான் இருக்கு, இத மாதிரி அனுபத்துக்காகவே நம்ம ஊரப் பத்தி கூகிள்ல தேடிப் படிக்கிறதும் நல்லாதான் இருக்கு. நன்றி..!
    (பதிப்புக் குழுவின் குறிப்பு: வாசகர் இங்கிலிஷில் எழுதிய தமிழ் வாக்கியத்தைத் தமிழில் மாற்றி அளித்திருக்கிறோம்.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.