ஸ்விட்சர்லாந்து : ஸ்வர்க்கத்தில் சில வருடங்கள்

உல்லாசமனமுடையோர் ஏங்கும் தேவலோகம். இந்த உலகத்தில்தானா இருக்கிறது இது என ஆச்சரியப்படவைக்கும் அழகுப் பிரதேசம். நீல மலைத்தொடர்களும், தெளிவான ஏரிகளும், பச்சைப்பசேல் நிலப்பரப்பும் தாலாட்டும் பூமியின் ஆனந்தக் கனவு. இத்தகைய ஸ்வப்ன வாழ்வில் மகிழ்ந்தே கொஞ்சகாலம் இருந்த பாக்யமும் எனக்கு நிகழ்ந்தது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்.

இந்தியாவின் தலைநகரிலிருந்து `உலகின் தலைநகரம்`(Geneva-Capital of the World!) அல்லதுஅமைதியின் நகரம்’ (City of Peace) என அழைக்கப்பட்ட ஜெனீவாவுக்குப் பணிநிமித்தம் வந்து சேர்ந்தேன். உலகத்தின் பிரகாசமான பொருளாதாரக் கட்டமைப்புகளில் ஒன்றான ஸ்விட்ஸர்லாந்துக்கு நான் வந்து சேர்ந்த அந்த காலகட்டத்தில், என் தாய்நாடான இந்தியா எப்படி இருந்தது? சோஷலிசம் என்கிற பெயரில் எல்லாவற்றிலும் அரசாங்கக் கட்டுப்பாடுகள் கழுத்தை நெறித்த காலம். ஆமைவேகத்தில் நகர்ந்த, கிட்டத்தட்ட  ஒரு கம்யூனிஸ்ட் பொருளாதாரமாக இருந்தது இந்தியா. வாகனங்கள் என்ற பெயரில் புகைகக்கும் அம்பாசடர் கார்களும், இண்டிகேட்டர் இல்லாத பஜாஜ், லேம்ப்ரெட்டா ஸ்கூட்டர்களும்தான் இந்திய சாலைகளில். மிஞ்சிமிஞ்சிப்போனால் அவ்வப்போது தென்படும் என்ஃபீல்ட் புல்லட் அல்லது யேஸ்டி பைக்குகள். எலெக்ட்ரானிக்ஸ் கேட்ஜட்டுகள்? சான்ஸே இல்லை. ஆடியோ கேசட் வாங்கவே அலைந்து திரிந்த காலம். சராசரி இந்தியனுக்கு இந்திய அரசின் தூர்தர்ஷன், ஆல் இண்டியா ரேடியோ ஆகியவற்றின் நிகழ்ச்சிகளையும், இந்திய மசாலா சினிமா படங்களையும் தவிர்த்து எண்டர்டெயிண்மெண்ட் என்பது இல்லை எனலாம். இப்படிப்பட்ட சமூக, பொருளாதாரச் சூழலில் இருந்து வந்த ஒருவன், ஸ்விட்ஸர்லாந்தில் இறங்கிப் பார்த்தால் எப்படி இருக்கும்?

என்னதான் Lonely Planet போன்ற புஸ்தகங்களில் படித்திருந்தாலும் ஒரு நாட்டில் வந்திறங்கி அங்கு வாழ நேர்கையில் நாம் பெறும் நேரடி அனுபவம் இருக்கிறதேஅது தனி அலாதி.  அங்கு வாழ ஆரம்பித்த கொஞ்சநாட்களிலேயே ஐரோப்பிய /ஸ்விஸ் கலாச்சாரம் மனதில் பட ஆரம்பித்தது. ஸ்விட்ஸர்லாந்து ஐரோப்பாவின் சிறு நாடுகளில் ஒன்று என்றாலும் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது நாட்டின் மாநிலங்களைப்போல ஸ்விஸ் அரசுக் கூட்டமைப்பில் (Swiss Confederation) 26 கேண்டன்கள் (Cantons) உள்ளன. அதில் ஜெனீவா (ஜெனீவ் –Geneve in French) ஒரு ஃப்ரெஞ்ச் மொழிபேசும் கேண்டன். ஃப்ரான்சின் எல்லையில் உள்ளது. ஜெனீவா அதன் தலைநகர். ஸ்விட்ஸர்லாந்தில் கிட்டத்தட்ட 75 சதவிகித மக்கள்  ஜெர்மன் மொழிபேசுபவர்கள். 20 சதவிகிதம் ஃப்ரெஞ்ச், 4 சதவிகிதம் இட்டலியன், மீதம் ரொமான்ஷ் (Romansh) என்றழைக்கப்படும் பழம் மொழி பேசும் மக்கள். முக்கிய பெருநகர்களில் ஒன்றான ஜெனீவா ஒரு வித்தியாசமான ஐரோப்பிய நகரம் என்பது கொஞ்ச நாட்களிலிலேயே புரிந்தது. நகரில் குடியிருந்த மக்களில் ஸ்விஸ்க்காரர்கள் 30 ச்தவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தனர். மீதி இருந்தவர்கள் வெளிநாட்டவர். ஐக்கியநாடுகளின் ஐரோப்பாத் தலைமையகம் ஜெனிவாவில் இருந்ததாலும், செஞ்சிலுவைச் சங்கம் ஏனைய ஐநா அலுவலகங்கள் ஆகியவை அங்கிருந்து பணியாற்றியதாலும் பல்வேறு நாடுகளிலிலிருந்து ஏகப்பட்ட வெளிநாட்டினர் அங்கு குடியிருந்தார்கள். பெரும்பாலும் ஐரோப்பியர்கள். இந்தியர்கள் மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணிவிடலாம். ஸூரிக்கில் (Zurich) ஓரளவு இருந்தார்கள்.

geneva

ஜெனிவாவில் நான் வசித்த வீடு `ரூ லா தோல்`(Rue de la Dole) எனும் சாலையில் இருந்தது. அங்கிருந்து `ரூ து வாலே`(Rue du Valais) என்னும் சாலைக்கு (அங்குதான் எங்கள் இந்திய அலுவலகம் இருந்தது) பஸ்ஸில் செல்ல 15 நிமிஷம் ஆகும். அதற்கு இரண்டு பஸ் மாறவேண்டியிருந்தது. நடந்து போனால் 22 நிமிஷம். பஸ் பாஸை வாங்கி வைத்துக்கொண்டு குளிரில்  இரண்டுபக்கமும் கடைகள் நிறைந்திருக்கும் ரூ து ரோன் (Rue du Rhone) என்னும் அகன்ற சாலைவழியாக நடந்து செல்வதும் உண்டு. ஸ்விட்ஸர்லாந்தின் குளிர்மாதங்களில் ஹெவி உல்லன் அல்லது லெதர் ஜாக்கெட் போட்டுக்கொண்டு, சுகமாக சிகரெட் ஊதிக்கொண்டு, சாலையோர விண்டோ ஷாப்பிங் செய்துகொண்டேநடப்பது ஒரு ப்ரமாத அனுபவம்.

ஜெனீவாவின் மையத்தில் இருக்கும் கொஹ்னவான் பகுதியில் பிரதான ரயில் நிலையமானகார் கொஹ்னவான்’ (Gare de Cornavin –Cornavin Rail Station)இருக்கிறது. இந்த ரயில்நிலையத்தின் முன் TPG (Transport Public Genevois) –யினால் நடத்தப்படும் பஸ்கள், ட்ராம்களும் வந்து நிற்கும். City’s main transport hub. தூரத்திலிருந்து பார்த்தால் கொஹ்னவான் ஸ்டேஷன் நவீன ஐரோப்பியக் கட்டிடக்கலையின் சான்றாகக் கம்பீரமாக நிற்கும் கட்டிடம். சிட்டி செண்டர் பெல்ஏரிலிருந்து (Bel-Air), 10 நிமிஷதூரத்தில் இருக்கிறது இந்த சிட்டி செண்ட்ரல் ஸ்டேஷன். கட்டிட முகப்பில் பெரிய ஸ்விஸ் கடிகாரம். அதன் அருகே ஸ்விஸ் ரயில் லோகோவுடன்-SBB-CFF-FFS என்று பெரிதாக எழுதியிருக்கும். CFF என்பது ஃப்ரெஞ்சில் ஸ்விஸ் நேஷனல் ரயில்வேஸ். அதுவேதான் ஜெர்மனில் SBB, இட்டலியனில் FFS என்றும் எழுதப்பட்டுள்ளது. இதுதவிர, தனியார் ரயில் கம்பெனி ரயில்களும் இந்த ஸ்டேஷன்களுக்கு வரும். ஆனால் தோற்றத்தில் பெரிதாக மாறுதல் தெரியாது. எல்லாமே ஸ்விஸ் தேசிய ரயில் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டவை. மிகச் சரியாக, திறமையாக இயக்கப்படுபவை.  கொஹ்னவானிலிருந்து ஜெனீவா ஏர்ப்போர்ட்டுக்கு ரஷ் ஹவரில்(rush hour) 12 நிமிஷத்துக்கு ஒருமுறை, மற்ற சமயங்களில் 20 நிமிஷம் என ட்ரெயின்கள் பறக்கும். சரியாக 8-ஆவது நிமிடத்தில் ஏர்ப்போர்ட்டில் சொகுசாக இறக்கிவிடும். ஜெனீவா பஸ் நம்பர் 5-ம் அங்கிருந்து ஜெனீவா ஏர்போர்ட் செல்லும். கொஹ்னவான் வெளியே பார்க்க ஒரு ரயில்நிலையம்போலவே தெரியாது. ஏதோ பெரிய ஷாப்பிங் செண்டருக்குள் நுழைந்ததுபோலிருக்கும். காஃபி ஹவுஸ், ஃப்ரெஞ்ச்ஸ்டைல் ரெஸ்ட்டாரண்ட்கள், மினிபார்கள், மிக்ரோஸ் (Migros)என அழைக்கப்படும் டெபார்ட்மெண்டல் ஸ்டோர், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பகுதி என விஸ்தார
ாக
இருக்கும். ஒரு மூலையில் டிக்கட் கௌண்ட்டர்கள் தென்படும். மாலை நேரங்களில் சிலசமயம் அதற்குள் காஃபி ஹவுஸ்களில் ஒன்றில் புகுந்து குளிருக்கு இதமாக ஃபில்ட்டர் காஃபியைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளேதள்ளி, சிகரெட்மேல் சிகரெட்டாகப் புகைத்து, ரயில் நிலையப் பகுதியில் நடந்துசெல்வேன். இந்தப்பகுதிக்கருகில் பெல்ஏரில்தான் `ஏர் இந்தியா` அலுவலகமும், பாம்பே ரெஸ்ட்டாரண்ட்டும் இருக்கின்றன. மாலைநேரம் போர் அடித்தால், லேக் ஜெனீவா, பெல்ஏர், கொஹ்னவான் இருக்கவே இருக்கிறது!

expats-geneva-switzerland

ஜெனீவாவின் முக்கிய லாண்ட்மார்க்கான ஜெனிவா லேக் எனப்படும் அழகான பெரிய ஏரி, வீட்டிலிருந்து 15 நிமிட பஸ் தூரத்தில் இருந்தது. அடிக்கடி வருவோம். ஏரியின் கரையோரம் நெடுகிலும் எதிர்வரிசையில், விதவிதமான ஸ்விஸ் கடிகாரக் கடைகள்/ஷோரூம்கள். Rolex of Geneva எனப்படும் ரோலெக்ஸ் வாட்ச் கம்பெனி லேக் ஜெனீவாவுக்கு எதிரே உள்ள வரிசையில்தான் இருக்கிறது. தங்கத்தில் ரோலெக்ஸின் லோகோவான க்ரௌனுடன் `ROLEX` எனப் பச்சை நிறத்தில் பிரகாசமாக ஒளிரும். அதற்குள்ளே புகுந்து கண்விரிய, ஒரு நோட்டம்விட்டும் வரலாம். டாலருக்கு 37ரூபாய் என்ற நரசிம்மராவ் காலத்திலும், ரோலெக்ஸின் மினிமம் ரேஞ்ச் 300 டாலரிலிருந்து ஆரம்பிக்கும் (ஆனால் அந்த மாடலை pre-book செய்து பணம்கட்டி வாங்கவேண்டியிருந்தது).  வாங்குவதற்கு தைரியம் வராது. ஐரோப்பியர்களே அந்தமாதிரி கடைகளில் நுழையக் கூசுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் உள்ளே நுழைந்து காய்கறி வாங்குவதுபோல் ரோலெக்ஸ், ஒமேகா(Omega), லாஞ்சைன்ஸ்(Longines), டாக் ஹூர்(Tag Heur), போன்ற ஆடம்பர கைக்கடிகாரங்களை வாங்கும் விசித்திர ஆட்களும் அங்கு வருவதுண்டு. அவர்கள் வளைகுடா/ மிடில் ஈஸ்ட்டிலிருந்து வரும் ஷேக்குகள் அவர்களின் அலட்டல் குடும்பத்தினர். அவர்களைப் போன்றவர்களுக்கு மட்டும்தான் ஜெனீவா மலிவு ! ஒருநாள் பாருக்கு வெளியே அமர்ந்து சூரியஒளியில் சுகமாகக் காய்ந்துகொண்டு கையில் க்ரோனன்பர்க் (Kronenburg) அருந்திக்கொண்டிருக்கையில் சில ஐரோப்பிய டூரிஸ்ட்டுகள்ஓரளவு இங்கிலீஷ் தெரிந்தவர்கள்அருகில் வந்து உட்கார்ந்தனர். அவர்களுடன் பேசுகையில் ஒருவர் சொன்னது: ‘நாங்கள் ஜெனீவாவுக்கு அடிக்கடி வருவோம். ஆனால் ஷாப்பிங் செய்யமாட்டோம். Too expensive here.’ அவருடன் கூடவந்திருந்த பெண்நீங்கள் போட்டுக்கொண்
ிருக்கிறீர்களே
ரேபான் (Ray-Ban), இங்கேயா வாங்கினீர்கள்?` என்று கேட்டார்.`ஆமாம்` என்றேன். `எவ்வளவு ஆனது?` ` 72 டாலர்!`என்றேன். `இதனை 56 டாலரில் ரோமிலோ(Rome) அல்லது பாரீஸிலோ வாங்கிவிடலாம்! ‘என்றார் அந்த அனுபவசாலி. `ஜெனீவா வந்தால், ஹோட்டல், ஃபுட், ட்ரான்ஸ்போர்ட் இதற்குமட்டும்தான் நாங்கள் செலவழிப்போம்! ` என்றார் பீரை ஆனந்தமாகப் பருகிக்கொண்டே

லேக் ஜெனீவா பகுதியில் ரெஸ்டாரண்ட்பார்களுக்கு வெளியே வண்ண வண்ணக் குடைகளுக்குக்கீழே அழகிய நாற்காலிகள். சிக்கென உடையணிந்த மெல்லிய, தங்கநிற  ஸ்விஸ் யுவதிகள் அங்குமிங்குமாக நடந்துகொண்டு, மர்மமான புன்னகையோடு  டூரிஸ்ட்களைக் கவர்ந்திழுப்பார்கள். அவர்கள் வேலை அப்படி! ஜூலைசெப்டம்பர் மாதங்களில் வளைகுடா நாடுகளிலிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிலிருந்தும் சுற்றுலாக்காரர்கள் ஜெனீவா நோக்கிப் படையெடுப்பர். அப்போது ஜெனீவாவின் மிதமான குளிர் உடம்புக்கு இதமாக இருப்பதுதான் சுற்றுலா சீசனின் கவர்ச்சி. தடியான கம்பளி உடைகளைக் களைந்துவிட்டு, மெலிதான சட்டை, அக்ரிலிக் ஜாக்கெட்டுகள், ஃப்லீஸ்களில்(fleece) உல்லாசமாக ஊர்வலம் வரலாம். சூரிய ஒளி நம் மேல் பட வாய்ப்புள்ளது. ஜெனீவா லேக்கைப் பார்த்துக்கொண்டே பசும்பகுதிகளில் நடந்து பொழுதுபோக்கலாம்.

ஜெனீவா ஏரியின் நடுவில், ஏரி ரோன் நதியை (Rhone River) சந்திக்கும் இடத்தில் இருக்கிறது ஜெட் தூ (Jet d’Eeu) – தண்ணீரை 200 கி.மீ.வேகத்தில், 140 மீட்டர்  உயரத்துக்குப் பீச்சியடிக்கும் பெரிய water jet-மின்ஃபௌண்டெய்ன். வானில் 33000 அடி உயரத்தில் பறக்கையிலும் கீழே தெரியும் இது. ஜெனீவாவின் அதிபிரபலமான சுற்றுலாப்பகுதி. ஏரியின் கரையோரத்தில் பந்துகளை எறிந்து, பந்துகளோடு பந்துகளாக ஓடும் சிறுவர்கள், சிறுமிகள்; கையில் வாக்மேன், காதில் இயர்ஃபோன், முகத்தில் ஃப்ளேம்கலர் காகில்ஸ்(goggles) என உல்லாச நடைபயிலும் நங்கைகள்; விதவிதமான மனிதர்கள். `ஏரிக்கரைமேலே போறவளே பெண்மயிலே..!` என்றெல்லாம் மனம் தமிழ் சினிமா பாட்டை எக்கச்சக்கமாக எடுத்துவிடும்! அங்கே யாருக்கும் ஒருமண்ணும் புரியாததால், தமிழில் மெல்லப்பாடிக்கொண்டே நடக்கலாம்! அழகான சூழல் தரும் அருமையான போதையில் நேரம்போவதே தெரியாது.

flowerclock

ஃப்ளவர் கிளாக்`(Geneva’s Flower Clock) என அழைக்கப்படும் பெரும் கடிகாரம் ஒன்று பூமியின் பரப்பில், கடிகார டயலில் 1,2,3 என எண்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரிய முட்களோடு காட்சியளிக்கும். பொம்மையல்ல. நிஜமாகவே நேரம் காட்டும் பிரும்மாண்ட தரைக்கடிகாரம். ஜெனிவாவின் டூரிஸ்ட் அட்ராக்ஷன்களில் ஒன்று.  ஜெனிவாவின் ஞாபகார்த்தமாக எல்லோரும் அதனருகில் நின்று படம் எடுத்துக்கொள்வார்கள். பின்னணியில் ஜெனிவாவின் நீலநிற ஏரி. ஜெனீவாவில், கத்தோலிக்க, லூத்தரன் கிறிஸ்துவத்திலிருந்து மாறுபட்ட சிந்தனையைப் பரப்பிய Calvinists or Reformists என அழைக்கப்பட்ட 15, 16-நூற்றாண்டு மதகுருமார்களின் ஐந்தடி உயர உருவங்கள் பதிக்கப்பட்ட நெடுஞ்சுவர் ஒன்றிருக்கிறது.  Reformation Wall என்றழைக்கப்படும் இது, ஜெனிவாவின் லேண்ட்மார்க்குகளில் ஒன்று. மற்றும் சில: .நா.வின் ஐரோப்பியத் தலைமையகக் கட்டிடம், International Red Cross Society எனப்படும் செஞ்சிலுவைச்சங்க அலுவலகம் போன்றவை.

எங்கள் அலுவலகம் .நா வின் ஜெனிவா அலுவலகத்துடன் தொடர்புடையதாக இருந்ததால் வேலைப்பளு தாங்கமுடியாத அளவுக்கு இருந்தது. UN Session நடக்கும் நாட்களில் நள்ளிரவைத் தாண்டியும் ஆஃபீஸில் வேலைசெய்யவேண்டியிருந்தது. சனிக்கிழமையிலும் ஆஃபீஸில் இருக்கவேண்டிய நிலையில், ஸ்விட்ஸர்லாந்து சுற்றிப்பார்க்க நேரம் கிடைக்காமலேயே ஒரு வருடம் ஓடிவிட்டது. இப்படியே மூன்று வருடமும் ஓடிவிடப்போகிறதே எனக் கவலைப்பட்ட அலுவலக நண்பர்கள் ஒரு நல்ல காரியம் செய்தார்கள். மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது , (சனி, ஞாயிறுகளிலாவது) ஜெனீவாவுக்கு வெளியே ஒரு சுற்றுலாத்தலத்திற்கு எல்லோரும் செல்வது என்று முடிவுக்கு வந்தார்கள். ஜெனீவா டூரிஸ்ட் ஆஃபீஸில் டூரிஸ்ட் பஸ் இரண்டு நாள் வாடகைக்கு எனப் பேசினார்கள். அவர்கள் அதற்கான ஒரு பெரிய தொகையையும் (ஜெனீவாவில் டூரிஸ்ட் பஸ், வேனுக்கெல்லாம் யானைவிலை, குதிர்ரைவிலை கொடுக்கவேண்டியிருக்கும். இதனை இந்தியாவோடு ஒப்பிட்டுச்சொல்லவில்லை. மற்ற ஐரோப்பிய நகர்களோடு ஒப்பிட்டுத்தான் சொல்கிறேன்). சொன்னதோடு, கூடவே முன்கூட்டியே எங்கள் ஆஃபீஸிலிருந்து ஒருவர் காண்ட்ராக்ட்டில் கையொப்பமிடச்சொன்னார்கள். செய்தோம்.

interlaken

அப்படி ஒரு முறை ஸ்விஸ் சுற்றுலாத்தலங்களில் பிரமாதமான ஒன்றான இண்டர்லாக்கன் (interlaken) என்கிற அழகுகொஞ்சும் ஊருக்குப் பயணமானோம். ஸ்விட்ஸர்லாந்தின் தலைநகரமான பர்ன் (Bern) , பர்ன் என்றே அழைக்கப்படும் ஒரு கேண்ட்டனின் தலைநகரும்கூட. பர்ன் கேண்ட்டனில்தான் இருக்கிறது இந்த இண்டர்லாக்கன். இண்டர்லாக்கன் என்றால்இரண்டு ஏரிகளுக்கு நடுவே` என்று அர்த்தம் ஜெர்மன் மொழியில். ஸ்விஸ் ஆல்ப்ஸின் பேரழகு கொஞ்சும் பகுதி , இண்டர்லாக்கன்,  ப்ரீன்ஸ்(Brienz) ,  மற்றும் துன் (Thun)  என்கிற இரண்டு எமரால்ட் பச்சை ஏரிகளுக்கு மத்தியில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் சிறுநகரம். இந்தப் பிரதேசமே வேறு உலகத்தைச் சார்ந்ததோ என எண்ணும்படியான மதிமயக்கும் அழகு. அங்கே ஒருவழியாக எங்கள் பஸ் வந்து நின்றதும், பானசானிக் வீடியோ கேமராவுடன் வெளியே பாய்ந்தேன். மனைவி சிறுகுழந்தையுடன் இறங்கினாளா, குழந்தைக்கு ஏதும் தேவைப்படுகிறதா என்றெல்லாம் நினைக்க, நான் ஒரு சராசரி மனிதனாக என்று இருந்திருக்கிறேன்? ஐரோப்பிய சூரியனின் தங்க ஒளிக்கிரணங்களில் மலைச்சிகரங்கள் மின்னி மாயாஜாலம் காட்ட, ஏரிகள் பளபளத்தன. கொஞ்சநேரம் பிரமை பிடித்ததுபோல் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகுதான் கேமரா ஒன்று தோளில் தொங்கிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. ஸ்விஸ் ஆல்ப்ஸையும் அந்த ஏரிகளையும் எத்தனை ஷூட் செய்தும் திருப்தியில்லை. கண்கொள்ளா, மனம்கொள்ளா பேரழகு. வார்த்தைகளுக்குள் வர மறுப்பது. வருமா அந்த சுகம் இனிமேலே !

எங்களது வேறொரு பயணத்தில் ஸ்விட்ஸர்லாந்தின் மிகப்பெரிய நகரமான ஸூரிக்கிற்கு (Zurich) சென்றிருந்தோம். ஸூரிக்கின் ரயில்வே ஸ்டேஷனே தனி அழகு. எப்பேர்ப்பட்ட ஐரோப்பிய கட்டிடக்கலையின் உருவமது. அதன் முன் நின்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில் ஒரு இளம் இந்திய ஜோடி தென்பட்டது. நெருங்கி அறிமுகம் செய்துகொண்டபின் பேச ஆரம்பித்தோம். அவர் என் மைத்துனிவழி உறவு எனக்கு என்று தெரியவந்ததும் ஆச்சரியமாயிருந்தது. ஸுக் ( Zug ) என்னும் நகரில் வசிப்பதாகக்கூறி வீட்டுக்கு வருமாறு அழைத்தார். போயிருந்தோம். ஸூரிக்கிலும் அழகான ஏரி,  பூங்காக்கள், கட்டிடங்கள், ஆகஸ்ட் மாத மென்குளிரில் இதமாக இருந்தது. ஸ்விஸ் நேஷனல் மியூசியம் ஸ்விஸ் வரலாற்றுக் கதைகளைச் சொன்னது. ஸூரிக்கில் ஸ்விஸ்ஸின் புகழ்பெற்ற `லிண்ட்`(Lindt) சாக்கலேட் ஃபேக்டரிஅவுட்லெட்டிற்கு சென்றோம். லிண்ட்டின் சாக்லேட் வகைகள் பற்றி, தயாரிப்பு பற்றி விளக்கினார்கள். விதவிதமான சாக்லேட்டுகளை ஆனந்தமாக ருசிபார்த்தோம்.

ஸ்விட்ஸர்லாந்து விதவிதமான ச்சீஸ்(cheese), சாக்கலேட்களோடு, பீருக்கும்  பேர்போன நாடு. என்னதான் ஹாலந்தின் ஹெய்னகென்(Heineken), டென்மார்க்கின் கார்ல்ஸ்பர்க்(Carlsberg), ட்யூபர்க்(Tuborg) எல்லாம் பாப்புலராக இருந்தாலும், ஸ்விஸ், ஃப்ரெஞ்ச் பீர்களை விரும்பிக் குடிப்போரை ஸ்விஸ் பார்களில் பார்த்திருக்கிறேன். ஸ்விட்ஸர்லாந்து மட்டுமல்லமத்திய ஐரோப்பாவே அப்படித்தான். தண்ணீருக்கு பதிலாக பீர் குடித்துக் காலம் கழிக்கும் பிரஹஸ்பதிகள். பார்கள்(Bars) குடிகாரர்களாலும், டூரிஸ்ட்டுகளாலும் நிரம்பி வழியும். ஸ்விட்ஸர்லாந்து industrialized economy  என்பதோடு  tourist economy-யும் கூட.

லுசர்ன் (Lucerne ) ஆல்ப்ஸ் மலைத்தொடரால் சூழப்பட்டுலேக் லுசர்ன்எனும் ஏரியின் ஓரத்தில் அமைந்துள்ள அழகிய ஊர். பாதுகாக்கப்பட்ட medieval architectural building-களுக்குப் புகழ்பெற்றது. அங்கு ஊர்சுற்றிப் ஃபோட்டோக்கள் எடுத்துக் களைத்தபின், ஸ்விஸ் ப்ரூவரி (Swiss Brewery) ஒன்றைப் பார்வையிட்டோம். பாரம்பர்யமான ஸ்விஸ் பீர் தயாரிக்கப்படும் வழிமுறைகள் பற்றி ஒருமணி நேரம் டூரிஸ்ட்டுகளுக்குப் பொறுமையாக விளக்கிச் சொன்னார்கள். ஹாப்ஃபென்பர்ல்(Hopfenperle), ஹேமர் பீர் (Hammer Bier) போன்றவை ஸ்விஸ் பீர்களில் சில. நாடு முழுதும் ஸ்விட்சர்லாந்தில் ப்ரூவரீஸ் இருக்கின்றன. `எங்களது பீர் தான் பெஸ்ட்!` என்று அடித்துக்கொள்வார்கள் ஒவ்வொரு கேண்ட்டனிலும்.  லுஸர்னில் ஸ்விஸ் ட்ரான்ஸ்ப்போர்ட் மியூசியம் ஒன்று உள்ளது. ஸ்விஸ் ரயில், விமானம், கப்பல் என விதவிதமான பயண ஊர்திகளின் மாடல்கள் காணப்படுகின்றன

நாட்டின் வடகிழக்குப்பகுதியில் இருக்கும் இன்னொரு புகழ்பெற்ற நகரம் பாஸல் (Basel). ஸ்விஸ், ஃப்ரெஞ்ச், ஜெர்மன் எல்லைகளின் முனையில் ரைன் (Rhine) நதிப் பகுதியில் உள்ள இந்த நகருக்கு ஒருமுறை போயிருந்தோம். Romanesque-Gothic Cathedral சர்ச் ஒன்று பாஸலின் நடுவில்  கம்பீரமாக நிற்கிறது. ஸ்விட்ஸர்லாந்திலுள்ள மியூசியங்களில் 40-க்கும் மேற்பட்ட மியூசியங்கள் உள்ள நகரம் இது. `பாஸல் ஆர்ட் மியூசியம்` சென்றது மகிழ்ச்சி தருவதாய் இருந்தது. ஐரோப்பாவின் புராதன கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்களோடு, 19-ஆவது, 20-ஆவது நூற்றாண்டு ஐரோப்பிய ஓவியர்களின் படங்களையும் பார்த்தோம். அவற்றில், வான் கோ(Van Gogh), பிக்காஸோ(Picasso), செஸான்(Cezanne), டாலி(Dali) போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் ஓவியங்களும் அடங்கும். ரைன் நதியில் ஃப்ரெஞ்ச் ஸ்டீம்போட்டில் ஏறித் தொலைதூரத்திலிருந்தும் பாஸல் நகரைப்பார்த்து ரசித்தோம். பாஸலின் புறநகர்ப்பகுதியில் ஏராளமான செர்ரி மரங்கள் வசந்தகாலத்தில் பூத்துக் குலுங்கும் காட்சி ரம்யமானது.

க்ரிண்டெல்வால்ட் (Grindelwald). ஸ்விஸ்ஸின் எழில்கொஞ்சும் பெர்னீஸ் ஆல்ப்ஸ் (Bernese Alps) பிரதேசத்தில் உள்ள ஊர்.  `ஐரோப்பாவின் உச்சி` என அழைக்கப்படும் ஸ்விட்ஸர்லாந்தின் பகுதியான ஜுங்ஃப்ரா(Jungfrau) பகுதியில் அமைந்துள்ளது. அங்கு சென்றதும் மறக்கமுடியாத அனுபவம். ஆல்ப்ஸ் உச்சியில் ஒரு கனவுலகம். அங்கே சென்று சேர்ந்தபின், கருநீல மலைத்தொடர் படர்ந்திருக்க, குளிர்காற்று நடுக்க ஒருமணிநேரம் இயற்கை எழிலில் என்னை இழந்திருந்தேன். தியானத்தில் இருப்பதுபோல் மனம் ஒன்றியிருந்தேன். சுற்றிலும் டூரிஸ்ட்டுகள் வழக்கம்போல் சிரித்து, சத்தமிட்டிருந்தது ஒரு பொருட்டாயில்லை. புறப்படும் நேரம்வருகையில் எங்களோடு வந்த அலுவலக நண்பர் ஒருவர் கத்தினார்: `அரே பாய்! ஜானா நஹி?` ஒருவர் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு ரகசிய விசிட் பற்றிச் சொல்ல மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் கேமராவை ஆஃப்  செய்துவிட்டு அவர்களிடம் சேர்ந்துகொண்டு கேட்டேன். ! இங்கேயும் நம்பநாட்டுக் கதைதான் தொடர்கிறதா! அவர் சொன்னது இது: `இந்தியாவிலிருந்து ஒரு ஹிந்தி பட ஷூட்டிங்கிற்காக நடிகர் சன்னி தியோல் & கோ. வந்திருக்கிறார்கள். பக்கத்தில் ஒரு இடத்தில் முகாம் இட்டு தங்கியிருக்கிறார்கள். நாம் சந்தித்துவிட்டு போகலாம்!` என்றார். கூடவந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வாயெல்லாம் பல்!  போனோம். ஒரு மலைச்சரிவில் சின்ன டெண்ட் அடித்த முகாம் ஒன்றில் இந்தியர்கள்!  தூரத்திலிருந்தே தென்பட்டனர். ஏற்கனவே எங்கள் வருகை தெரியப்படுத்தப்பட்டதால் படக்குழுவில் ஒருவர் (அசிஸ்டண்ட் டைரக்டரா?) முன் வந்து வரவேற்று முகாமின் முன் உட்காரவைத்தார். பெயர் தெரியாத சில டெக்னீஷியன்கள் போன்றோர் முன்னால் எங்களோடு அமர்ந்திருந்தனர். எங்கள் குழுவில் ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தவர் சிலருக்கு ஒரே எக்ஸைட்மெண்ட்சன்னி தியோலைப் பார்க்கப்போகிறோம் என்று. அப்படியெல்லாம் ஒரு பெரிய பாலிவுட் ஹீரோ அல்ல அவர். இருந்தாலும் ஒரு நடிகர் என்பதே போதுமல்லவா நமது அரைகுறைகளுக்கு. அழகான ஆல்ப்ஸ் எதிரே நின்றாலும் ஆட்டம்போடும் நடிகன்போல் வருமா! சன்னி தியோல் முகாமிலிருந்து வெளிவந்ததும் ஹரியானாக்கள் முன்னே பாய்ந்து கைகுலுக்கின. நாங்கள் நின்றிருக்க ஒரு குரூப் ஃபோட்டொ எடுக்கப்பட்டது. சிலர் ஆவலுடன் ஆட்டோகிராஃப் வேறு வாங்கிக்கொண்டிருந்தார்கள். நான் என் குழந்தையை தூக்கிக்கொண்டு பக்கத்தில் மலைப்பகுதியை, சுற்றி நிற்கும் டூரிஸ்ட் பஸ்களைக் காண்பித்துக்கொண்டிருந்தேன். அந்த படக்குழுவில் வேறு யாரும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று ஆராய்ந்ததில் தென்பட்டார் நடிகை டிம்ப்பிள் கபாடியா. இவரும் நடிக்கிறாரோ இதில் என நினைத்துக்கொண்டேன்.(இல்லை எனப் பிறகு தெரிந்தது). அப்போது கூடாரத்தின் வாயிலில் வந்து நின்று மின்னல் அடித்தது ஒரு பெண் உருவம். யாருடா இது? அந்த ஹிந்திப்படத்தின்( ஹிம்மத்) ஹீரோயின் தபு (Tabu). அந்த நீல மலைத்தொடரின் பின்னணியில், ஒல்லியாய், உயரமாய், வேறு ஒரு உலகத்தின் பெண்ணாய்த் தோன்றினார் தபு. இளமையும் அழகும் துணைநின்ற காலம்!

மோன்ப்ளான் மாஸிஃப்(Mont Blanc Massif) என்று ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு பாகம் அழைக்கப்படுகிறது. Perennially snow-capped mountains. வெகுநாள் திட்டமிட்டு இதனையும் போய்ப் பார்த்துவிட்டோம். இந்த மலைத்தொடரின் பெரும்பகுதி ஃப்ரான்ஸ், இத்தாலியில் இருந்தாலும் தன் வடகிழக்கில்  இந்தத் தொடர் ஸ்விட்ஸர்லாந்தைத் தொட்டு `நீயும் வா!` எனக் கொஞ்சிச் செல்கிறது. மோன்ப்ளான் என்கிற பெயரே சொல்கிறது கதையை. ப்ரெஞ்ச்சில் `மோன்` (Mont) என்றால் மலை. ப்ளான் (Blanc) என்றால் வெள்ளை நிறம். அல்லது வெள்ளிநிறம்! பனிபடர்ந்து வெள்ளியாகவே எப்போதும் பளபளப்பதால் வெள்ளிமலை! உடனே `வெள்ளிமலை மன்னவா! வேதம் நீ அல்லவா..!` என்று சிவபக்தர்கள் ஆரம்பித்துவிடவேண்டாம். மேலே படியுங்கள். 13000 அடிக்கும் அதிக உயரத்தில் 11-க்கும் மேல் மலைச்சிகரங்கள் இங்கு காணப்படுகின்றன. 15776.7 அடி உயரத்தில் ஜொலிக்கும் மாண்ட்ப்ளான் மேற்கு ஐரோப்பாவின் உச்சிப்புள்ளியாகும். ஃப்ரான்ஸ், இத்தாலி, ஸ்விட்ஸர்லாந்து நாட்டின் மலைப்பகுதிகள் சந்திக்கும் உச்சி. அருகருகே ரோன்(Rhone) மற்றும் போ (Po) நதிகள் சலசலத்து ஓடி மலைக்காடுகளுக்கு வனப்பூட்டுகின்றன. இந்த உச்சிப்புள்ளிக்கு கேபிள் கார் மூலம் சென்றடைந்தோம். என்ன ஒரு அபூர்வக் காட்சி ஆஹா! கடவுளே, நீ எங்களுக்காக என்னவெல்லாம் செய்துவைத்திருக்கிறாய் இந்த உலகில்! உச்சியில் போய் நாங்கள் இறங்கியதும் பார்த்தால் அங்கே ஒரு ஸ்டேஷனே இருக்கிறது! கூடவே குட்டி, குட்டியாக ஃப்ரென்ச்,இட்டலியன், ஸ்விஸ்ஸ்டைல் ரெஸ்ட்டாரண்டுகள்/பார்கள்! அவசரத்துக்கு அழகான வாஷ்ரூம்கள். வாழ்வை முழுதுமாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள் இந்த ஐரோப்பியர்கள்< /span>, சந்தேகமில்லை. ஃபோட்டோ, வீடியோ ஷூட் காஃபி, பீர் கதைகள் முடிந்தபிறகு புறப்படுமுன், டூரிஸ்ட்டுகளை எச்சரிக்கிறார்கள்: அவர்வர்கள் வந்தவழியே, சரியான கேபிள் கார்களைப் பிடித்துப் பயணிக்கவும்! ஏன் இந்த எச்சரிக்கை? மேலிருந்து மூன்றுவித கேபிள் கார் சர்வீஸ்கள் இருக்கின்றன. ஒன்று ஃப்ரான்சுக்குள்ளும், இன்னொன்று இத்தாலிக்குள்ளும் மற்றது ஸ்விட்ஸ்ர்லாந்துக்குள்ளும் உங்களை ஏற்றிச் செல்லும். இதுதான் சாக்கென்று ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்து, ஃப்ரான்ஸுக்கோ, இத்தாலிக்கோ ஓடிவிடக்கூடாது. வீஸா, இம்மிக்ரேஷன், போலீஸ் எனத் தலைவலிகள் விதவிதமாகக் கூடவே ஓடிவரும். ஜாக்ரதை! (ஸ்விஸ் வீஸா இருந்தும், ஷெஞ்சென் வீஸா தனியாக இல்லாவிட்டால் அந்த நாடுகளுக்குள் பிரவேசிக்கமுடியாது). நாங்கள் தள்ளாடித் தவறிவிடாமல் ஸ்விஸ்ஸுக்குள்ளேயே சரியாக வந்து இறங்கியபின்தான் மூச்சு சீராக வந்தது. மலைஅடிவாரத்தின் ரெஸ்டாரண்ட்டில் லஞ்ச் எடுத்துக்கொண்டு, மேலும் சுற்றிப்பார்த்து, படங்களை ஷூட் செய்து கேமராவுக்குள் அடைத்துக்கொண்டோம். ஒருவழியாக மோன்ப்ளானிடம் பிரியாவிடை பெற்று மாலையில் ஜெனீவா திரும்பினோம்.

நாங்கள் இந்தியா திரும்புமுன் கடைசியாகப் பயணித்தது ஸ்விட்ஸர்லாந்தின் தென்பகுதியில் இருக்கும் லுகானோ (Lugano) என்னும் நகருக்கு. இத்தாலியமொழி பேசும் திஸின் பகுதியில்(Ticin region) இந்த நகரம் உள்ளது. எல்லா ஊரிலும் தென்படுவதுபோல்,  இங்கும் ஒரு ஏரி பெரிதாகப் பரந்திருக்கிறது. சுற்றிலும் பூங்காக்கள், ஷாப்பிங் செண்டர்கள் போன்றவை. நாட்டின் தென்பகுதியில் இத்தாலிய எல்லையில் இருப்பதால் வெகு மிதமான தட்பவெப்ப நிலை. நிறைய டூரிஸ்ட்டுகள் வருகிறார்கள். ஜுன்ஜூலை மாதங்களில் இங்கு லாங்லேக் திருவிழாக்கள் (Long Lake Festivals) நடப்பதுண்டு என்று கேள்விப்பட்டோம். க்ளாஸிகல் மியூஸிக், பாப்(pop), ரெக்கே(reggae), இண்டீ(indie), பன்க்(punk) என வகைவகையான சங்கீதம் இத்தாலியிலிருந்தும் மற்ற பகுதிகளிலிருந்தும் வரும் எண்ணற்ற ரசிகர்களை மகிழ்விக்கும். நாங்கள் செப்டம்பரிலோ அல்லது அக்டோபரிலோ லுகானோ போனதாக ஞாபகம். ஆதலால் இதெல்லாம் கேட்கக் கொடுத்துவைக்கவில்லை.

ஸ்விஸ்சமூக, கலாச்சார வாழ்க்கை

ஸ்விஸ் நாட்டவர் பொதுவாக ஒதுங்கி இருப்பவர்கள். ரிசர்வ்ட் டைப். சம்பாதிக்கும் பணத்தை சிறப்பாகக் கையாள்பவர்கள். அனாவசியச் செலவு, அடுத்தவர்பார்க்க அலட்டல் என்பதுபோன்ற கோமாளித்தனங்கள் அவர்களிடம் காணப்படுவதில்லை

மக்கள் சுத்தமும் சுகாதாரமும் ஆனவர்கள். எதனையும் பளிச்சென்று வைத்திருப்பவர்கள். வீடுகளில், சுற்றுப்புறங்களில் ஸ்விஸ் மக்களின் இந்த குணம் வெளிப்படையாகத் தெரியும். அதற்காக அதனைப்பற்றிச் சொல்லிப் பீற்றிக்கொள்ளும் துர்குணமில்லை.

நேரத்தைக் கடைப்பிடித்தல் -`Swiss punctuality` என்பது வெறும் வார்த்தைவீசல், வெற்றுப்பேச்சு அல்ல. நேரந்தவறாமை ரத்தத்தில் ஊறிப்போன விஷயம் அவர்களுக்கு. ரயில்களிலிருந்து, பஸ்கள், ட்ராம்கள், டேக்ஸிகள் என எல்லாம் சரியான நேரத்தில் `டாண்` என்று முன்வந்து நிற்கும். அவர்களும் ஒருவருக்கு வாக்குக்கொடுத்தால், சொன்ன நேரத்திற்குத் துல்லியமாக சொன்ன இடத்தில் இருப்பார்கள். குழந்தைகளிடமிருந்து பெரியவர்கள் வரை இதனைக் காணலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம். தங்களது தேவைகளைத் தாங்களே பூர்த்திசெய்துகொள்வார்கள் ஸ்விஸ் மக்கள். அடுத்தவர்களிடமிருந்தோ, அரசாங்கத்திடமிருந்தோ எந்த உதவியும் கிடைப்பதை விரும்புவதில்லை. அப்படிக் கிடைத்தாலும் மறுத்துவிடும் நேர்மை உண்டு.

அரசாங்க, அலுவலக விதிமுறைகள் என்று என்னென்னவெல்லாம் உண்டோ அதன்படியே நடப்பவர்கள். விதிகளை மீறுதல், சமாளிக்கப் பார்த்தல், அசடுவழிதல் போன்ற அபத்தங்களை அவர்களிடம் பார்க்கமுடியாது.  ஜெர்மன் மொழியில் “Regeln sind regeln” என்பார்கள். அதாவது Rules are rules. ‘சட்டம்னா சட்டம்தான். அத மீறப்படாதுஎன வாழ்பவர்கள்.

ஸ்விட்ஸர்லாந்தில் வாழ்ந்த மூன்றுவருடங்களில் ஜெனீவாவிலும், மற்ற இடங்களிலும் அவ்வப்போது ஸ்விஸ்க்காரர்களுடன் பேசமுடிந்தது. கொஞ்சம் பழகமுடிந்தது. கொஞ்சம் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் மற்ற ஐரோப்பிய இனத்தவரோடு ஒப்பிடுகையில், ஸ்விஸ்க்காரர்கள் முறையான அறிமுகத்துக்குப் பின்னும்கூட, மனம்விட்டுப் பேசத் தயங்குபவர்கள். பேச்சின்பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை இழுத்துவரவேண்டும். பழக ஆரம்பித்தபின்னர்தான் சுபாவம், கலாச்சாரம், ரசனைகள் என ஸ்விஸ் சமூகத்தின் ஏனைய பரிமாணங்கள் தலைகாட்டின. ஸ்விஸ் சமூகம்,  (ஜெர்மன், பிரிட்டிஷ் மக்களிடமிருந்து மாறுபட்டு), மிகவும் மென்மையான, எளிதான மனப்போக்கு உடையது. இங்கிலீஷ்காரர்களிடம் காணப்படும் ஒரு இறுக்கம், செயற்கையான, அலட்டலான air, ஜெர்மானியர்களின் அதீத கர்வம், racism போன்றவை, ஸ்விஸ் சமூகத்தில் நிச்சயம் இல்லை. இருப்பினும் தங்களின் ஃப்ரெஞ்ச், ஜெர்மன் கலாச்சார வலிமை, மேன்மை ஸ்விஸ் மக்களைப் பெருமை கொள்ளச்செய்கிறது. இவற்றைப்பற்றி அவர்கள் அதிகம் சொல்லிக்கொள்வதில்லை என்றாலும், ஏதோ ஒருவகையில் அதனை அவர்கள் பூடகமாக வெளிப்படுத்துகிறார்கள்.

பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில்(ஸ்காண்டினேவிய தேசங்கள் நீங்கலாக), மக்களிடையே ஃப்ரென்ச், ஜெர்மன் மற்றும் இத்தாலிய சிந்தனை மற்றும் கலாச்சாரத் தாக்கம் அதிகமாக உள்ளது. உணவு, உடை, பழக்கவழக்கங்கள், கலாரசனைகள் எனப் பல்வேறு அளவுகோல்களில் இவை தென்படும். இங்கிலீஷ் வாழ்வியல் முறைகள், மேல்தட்டுமக்களின் தராதரங்கள்(English lifestyles and aristocracy), சமூக மதிப்பீடுகளை (social values) ஸ்விஸ் நாட்டவர்கள் பொருட்படுத்தாது, அலட்சியம் செய்வதைக் கண்டுள்ளேன். சமயம் வரும்போது லேசாகக் கிண்டல் செய்யவும் பார்க்கிறார்கள். ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களான வால்ட்டேர், பல்ஸாக்(Balzac), ஆல்பர் காமு(Albert Camus) ழான்பால் சார்த் (Jean-Paul Sartre), ஸ்விஸ் தத்துவஞானியான ரூஸோ(ஜெனீவாக்காரர்!), ஜெர்மானிய எழுத்தாளர்களான கத்தே (Goethe), கந்தர் க்ராஸ்(Gunter Grass), இத்தாலியக் கலைஞர்களான மைக்கேல் ஆஞ்சலோ, பிக்காஸோ போன்றவர்களைப் படித்ததின், அவர்களின் கலைவடிவங்களை ரசித்ததின் விளைவாக அவர்கள் குறித்த கலாச்சாரப்பெருமிதம் ஸ்விஸ்க்காரர்களுக்கு உண்டு. இத்தகைய மேன்மை உணர்வுகளின் காரணமாகவே, இங்கிலீஷ்காரர்களின் சமூக, கலாச்சார அடையாளங்களை, வெளிப்படுத்தல்களை (English cultural identities and expressions) அவர்கள் அலட்சியம் செய்கிறார்கள் என அறிந்ததும் ஆச்சரியம் அடைந்தேன். (They tend to treat anything English, with a casual indifference, disdain).

புகழ்பெற்ற நாடகங்களை எழுதியவர், ஆங்கில இலக்கியத்தின் பிதாமகர் என்று கொண்டாடப்படுபவர் (அதாவது ஆங்கில இலக்கியம் படிப்பவர்களால்) வில்லியம் ஷேக்ஸ்பியர். இவரைப்பற்றி என்னதான் நினைக்கிறார்கள் ஸ்விஸ் மக்கள்? அதனை அறியும் வாய்ப்பும் ஒருநாள் வந்தது எனக்கு. ஜெனீவாவின் சுற்றுலா சீசனான ஜூலை மாதத்தில் ஒருநாள், பெல்ஏர் (Bel-Air) பகுதியில் ஒரு ரெஸ்டாரண்ட் குடையின் கீழ் உட்கார்ந்து பீர் அருந்திக்கொண்டிருந்தேன். கலகலப்பான வெளியில், இதமான வெயில். அனுபவித்தவாறு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆண்களும், பெண்களுமாய் நிறைய கூட்டம். பீர் உறிஞ்சிக்கொண்டு சற்றுத்தள்ளி உட்கார்ந்திருந்தவனின் டீஷர்ட்டில் என்ன படம்? என்னமோ எழுதிவேறு இருக்கே? லைன்ட்ராயிங்காக வரையப்பட்ட ஒரு மனித உருவம். பாப் மார்லேயா(Bob Marley)? மைக்கேல் ஜாக்சனா? யாராவது நடிகனாயாரது? சற்று நேரத்தில் அவன் சரியாக உட்கார்ந்தபின் தெரிந்தது படம். ஷேக்ஸ்பியர் ! என்ன! ஜெனீவாவில் ஷேக்ஸ்பியரா? அதுவும் டீஷர்ட்டில்? ஒருவேளை இவன் ஆங்கில இலக்கிய வெறியனா? சட்டையில் என்ன எழுதியிருக்கு, சரியாத் தெரியலையே! தலைவெடிக்குமுன், ஒரு காரியம் செய்தேன். இன்னொரு பீர் வாங்கும் சாக்கில் கவுண்ட்டருக்கு அவனுடைய நாற்காலி வழி சென்றுவந்தேன். படித்ததும் அசந்துபோனேன்.  டீஷர்ட்டில் ஷேக்ஸ்பியரின் படத்துக்கருகில் William shakes the Beer என்று எழுதியிருந்தது! ஸ்விஸ்க்காரர்களே! என்னதான் நீங்கள் வாயைத் திறக்கத் தயங்கினாலும் உங்களுக்குள் ஒரு நமுட்டு விஷமம் இருக்கத்தான் செய்கிறது !

**

3 Replies to “ஸ்விட்சர்லாந்து : ஸ்வர்க்கத்தில் சில வருடங்கள்”

 1. வெறும் பணி சம்பந்தமான அனுபவம் பற்றி மட்டுமோ அல்லது சுற்றுலாவில் பார்த்த விஷயங்களைப்பற்றி மட்டுமோ எழுதாமல், பலமுனைகளில் இருந்து ஸிவிட்ஜெர்லாந்தை பார்த்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் என் பயணங்களின்போது அங்கே நான் கவனித்ததில் இருந்து இம்மி பிசகாமல் இருந்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது.
  ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா தனது பல படங்களை இன்டர்லாக்கன் ஊரைச்சுற்றி எடுத்து அந்தப் பகுதியை பிரபலப்படுத்தி இருப்பதால், இப்போதெல்லாம் அங்கே இந்திய சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
  ஆனால் ஜெனீவாவில் உள்ள செர்னில் Large Hadron Collider பற்றி மிக அழகாக அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம், பெர்ன் நகரில் இருக்கும் ஐன்ஸ்டைனின் வீடு (இப்போது அதுவும் ஒரு அருங்காட்சியகம்) முதலிய இடங்களுக்கு சென்றபோது மருந்துக்கு கூட இந்திய முகங்களை காண முடியவில்லை. சொல்வனம் கட்டுரையாசிரியர்கள் ரவி நடராஜன், பாஸ்கர் லக்ஷ்மணன் முதலியவர்கள் என்ன நினைப்பார்களோ, எனக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. இயக்குனர் ஷங்கரை பார்த்தால் LHC, சார்பியல் தத்துவம் பற்றி ஒன்றிரண்டு திரைபடங்களை கதாநாயகியும்/நாயகனும் செர்ன், பெர்ன் நகரங்களில் பாட்டுப்பாடி டான்ஸ் ஆடும்படி காட்சிகள் வைத்து எடுக்கச்சொல்ல வேண்டும்!! யாஷ் சோப்ராவுக்கு கொடுத்தது போல் ஷங்கருக்கும் “சுவிட்ஸர்லாந்தின் கௌரவ தூதுவர்” பட்டத்தை அவர்கள் கொடுக்கிறார்களோ இல்லையோ, சுற்றுலாவும் அறிவியலும் நிச்சயம் சேர்ந்து வளரும். 🙂

 2. வருகைக்கு நன்றி. உண்மைதான் – நமது சினிமாக்காரர்கள் இண்டர்லாக்கன் பகுதியில் அடிக்கடி கொட்டகைபோட்டு, இந்திய டூரிஸ்ட்டுகளிடையே அதனைப் பாப்புலர் ஆக்கிவிட்டார்கள்! யஷ் ச்சோப்ராவுக்குக் கிடைத்ததுபோல் ஷங்கருக்கும் `ஹானரரி கான்ஸல் ஜெனரல்`பட்டத்தை ஸ்விஸ்க்காரர்கள் கொடுக்கக்கூடும் என நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஸ்வாரஸ்யம்.
  பெர்ன் பற்றி, செர்ன் பற்றி கொஞ்சம் எழுதியிருக்கலாம். கட்டுரை வெகுவாக நீண்டுவிட்டதால், படிப்பவர்கள் மலைத்துவிடக்கூடாதே எனக் கருதி நீளத்தை இரண்டு, மூன்று பக்க அளவில் குறைக்க நேர்ந்தது. சில விஷயங்களை விட்டுவிடும்படி ஆயிற்று. என்ன செய்வது?

 3. /ஒரு நாட்டில்வந்திறங்கி அங்கு வாழ நேர்கையில் நாம் பெறும் நேரடி அனுபவம் இருக்கிறதே – அது தனி அலாதி. //
  அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷம் ஸார் .
  Fußgängerzone இல் கவலையில்லாம விண்டோ வாட்சிங் செஞ்சிட்டு நடப்பது அலாதி இன்பம் .அதுவும் எனக்கு குளிர் காலத்தில் மாலைவேளைகளில் நடப்பது ரொம்பவே பிடிக்கும் .basel ஜெர்மனி பார்டரில் வரும் அதனால் அடிக்கடி விசிட் போவோம் ..நம்மூர் காய்கறிகளை வாங்க ..ஸ்விஸ் மக்கள் மிகவும் அமைதி ஜெர்மனியரும் அமைதிதான் ஆனால் சற்று பெருமை உண்டு 🙂 லேசில் பணத்தை விரயம் செய்ய மாட்டாங்க ..இந்த இங்கிலீஸ்காரங்க ரொம்ப கேர் ப்ரீ டைப் ..அதனால்தானோ ஜெர்மன்காரர்களுக்கு பிரிட்டிஷ்க்காரரை அவ்வளவு விருப்பமில்லை 🙂 அழகான படங்கள் .தபு ஒரு காலத்தில் அவ்ளோ ஆசை எனக்கு .இந்த எல்லா வெளிநாட்டது ஷூட்டிங் படங்களும் மலையோரம் சுவிஸ்ஸில் ஒரு ஹோட்டல் முன்னே எடுக்கப்பட்டிருக்கும்.
  சன்னிதியோல் ஷூட்டிங்கில் டிம்பிள் கபாடியா !!! ஹாஹாஹா 🙂 சார் ஸ்விஸ்காரங்ககிட்ட மட்டுமில்லை நீங்களும் குறும்பாகத்தான் எழுதியிருக்கீங்க .
  ஸ்விஸ் ஜெர்மனையறி பிளாக் coffee எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙂
  மிக அருமையாக ரசித்து எழுதியிருக்கீங்க சார் .லிங்க் தந்ததற்கு நன்றி

Comments are closed.