வசந்தம் : மரங்கள் பறவைகளை நோக்கிப் பறப்பது

paulcelan

பால் கெலன் [ 1920 -1970 ] ருமேனியா நாட்டில் ஜெர்னோவிட்டில் என்ற இடத்தில் ஜெர்மானிய மொழி பேசும் யூதர் குடும்பத்தில் பிறந்தவர்.ஹீப்ரு மொழியில் பள்ளிக்கல்வி பயின்றவர். பால் அனகல் என்ற பெயரைப் பின் னாளில் பால் கெலன் என மாற்றிக்கொண்டார். 1938 ல் மருத்துவம் படிக்க பிரான்சு சென்றார்.ஆனால் இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன் னால் ஏற்பட்ட குழப்பங்கள் காலமாக நாடு திரும்பினார்.போர்க் காலத்தில் அவர் பெற்றோர் நாடுகடத்தப்பட்டு ஒரு கடினமான சூழலில் இறந்தனர். அப்போது செலன் சிலகாலம் தொழிலாளர் முகாமில் வேலைசெய்யப் பணிக் கப்பட்டார் .
ஏறக்குறைய பதினெட்டு மாதங்கள்கழித்து புகரெஸ்ட் திரும்பினார் .தன் காலத்தில் வாழ்ந்த பிரபலமான எழுத்தாளர்களோடு அவருக்குப் பரிச்சய மிருந்தது.பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம் ருமானியம்,ரஷ்யம்  உள்ளிட்ட ஆறு மொழிகள் அவருக்கு நன்றாகத் தெரியும். மெய்யியலாளரும், கவிஞரு மான Friedrich Schiller படைப்புகளோடு மிக நெருக்கம் கொண்டவர்.வியன்னா வில்  வாழ்ந்த காலத்தில் அவருக்கு Ingeborg Bachmann பரிச்சயம் கிடைத்தது .1948 ல்அவர் மீண்டும் பிரான்சு சென்றார்.அங்கு கவிஞர்,மொழிபெயர்ப்பாளர், விரிவுரையாளர் என்று பல நிலைகளில் பணிசெய்து தன் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டார்.
பிரெஞ்சு வரைபடக் கலைஞரான Gisèle de Lestrangeயை காதலித்தார். Franz Kafka வின் காதல்கடிதங்களின் ஆளுமையில் Gisèle de வுக்கு கடிதங்கள் எழுதி அவரைத் திருமணம் செய்துகொண்டார்.சமகாலத்தவரான Nelly Sachs கவிதைகளும் உரைநடையும் அவரைக் கவர்ந்தன.மதம்,கவிதை, தத்துவம் என்று எல்லாத்துறைகளிலும் இருவரின் அணுகுமுறையும் பெரும் பாலான தருணங்களில் ஒன்றாகவே இருந்ததாக மொழி ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர்.போர்க்காலப் பேரழிவுகளைப் படைப்புகளில் இருவருமே வெளிப் படுத்தியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.எனினும் செலன் அவரைக் கடுமையாக விமரிசிக்கவும் செய்தார்.
செலனின் முதல் கவிதைத்தொகுப்பு Sand from the Urns என்பதாகும்.இரண்டாவது தொகுப்பான Poppy and Memory அவருக்கு திறனாய் வாளர்களின் பாராட்டைப் பெற்றுத்தந்தது அதையடுத்து Speech Grille என்னும் மிகப் பிரபலமான தொகுப்பும் வெளிவந்தது.From Threshold to Threshold,The No-One’s-Rose , Breathturn Threadsuns  Lightduress Snow Part   Timestead  ஆகியவை அனைத்தும் கவிதை படைப்புகளாக அமைந்தவை.
’Conversation in the Mountains’ என்ற தலைப்பில் உரைநடைநூல் எழுதியுள்ளார்.அது கடவுள்,இயற்கை, கவிதை ஆகியவை பற்றி இருவர் பேசுவதான பின்னணியைக் கொண்டது. The Meridian’ செலனுக்கு Georg Buchner பரிசு கிடைத்த போது நடந்த நிகழ்வில் அவர் கவிதையின் கொள்கை மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து மிக விரிவாகப் பேசியதை விளக்கும் புத்தகமாகும்.உரைநடை, கடிதம், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளை உள்ளடக்கியதாக அவர் எழுத்துக்கள் இருந்தாலும்,ஜெர்மானிய மொழியில்தான் எழுதினார்.வாழ்நாளின் இறுதிவரை அவர் பிரான்சில் இருந் தாலும்,பிடித்தமான நாடாக அதைக் குறிப்பிட்டாலும்,பிரெஞ்சு சர்ரியலிச ஆளு மையின் மீது அவருக்கு விருப்பமிருந்தாலும் தன் தாய்மொழியில் மட்டுமே அவர் எழுதினார்.மொழி மற்றும் கலையின் எல்லையை ஆராயும் தன்மையி லேயே அவரது பெரும்பாலான படைப்புகள் உள்ளன.அவருடைய உரைநடைப்  படைப்புகள் மிகச் சிலவே.அவருடைய படைப்பெல்லையில் கவிதை அமைதி யும், நெருக்கமுமான பாவனையைக் கொண்டிருக்க உரைநடை உரத்த குரலில் பேசுவதாகிறது.
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் நடந்த போர்ப் பேரழிவை தன் கவிதைகளில் ஆழமாக வெளிப்படுத்திய செலன் Holocaust Poet என்றும் அழைக் கப்படுகிறார்.தான் கண்ட,அனுபவித்த நிலைகள் கவிதைகளின் வெளிப்பாடாக இருந்தசூழலில் அவருக்கு மொழிதான் வலிமையானதாக உடனிருந்திருக் கிறது.போர் முடிந்து வீடு திரும்பியபோது குடும்பம்,உடைமைகள்,உறவுகள் எல்லாவற்றையும் இழந்தவராக இருந்தார்.எனினும்“எல்லா இழப்புகளின் ஊடேயும் எப்போதும் அணுகுவதற்குரிய ஒன்றே ஒன்றாக,சொந்தமாக மொழி மட்டுமே இருந்தது.ஆமாம்.மொழிதான்’என்று கூறுகிறார்.அந்த எண்ணம்தான் இறுதிவரை அவரை மொழியின் வசப்படுத்தி கவிதைகள் எழுதத் தூண்டியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கிரேக்கம்,இத்தாலி,ரஷ்யம்,பிரெஞ்சு என்று பன்மொழிப்புலமை இருந்ததால் பல முக்கிய பிறமொழி நூல்களை ஜெர்மா னிய மொழியில் மொழி பெயர்த்தார். வாழ்நாள் முழுவதும் கவிதையைப் போலவே மொழிபெயர்ப்பும் அவரோடு நெருக்கம் கொண்டிருந்தது.Shakespeare, Emily Dickinson, Osip Mandelstam, David Rokeah and many modern French authors like Charles Baudelaire and Paul Valéry  உள்ளிட்டவர்களின் கவிதைகளை மொழி பெயர்த்துள் ளார்.ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, போர்த்துக்கீசியம், ருமானியம்  , ஹீப்ரு ஆகிய மொழிகளின் கவிதைகளையும்,கட்டுரைகளையும் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். செலன் தத்துவவாதிகளோடும் , கலைஞர்களோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். Martin Heidegger,Martin Buber,Emmanuel Levinas, Picasso, ஆகியோரோடு நேரடியாகவும்,கடிதங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டவர்.அவரது கவிதைப் பாங்கும், அணுகுமுறையும் தத்துவவாதிகளை யும், கலைஞர்களையும் பெரிய அளவில் கவர்ந்தது என்பதற்கு மேலே சொன்னவர்களைக் காட்டலாம்.
Paul Celan, Nelly Sachs: Correspondence, மற்றும் The Correspondence of Paul Celan and Ilana Shmueli – ஆகியவை அவரது கடிதப் படைப்பாக்கத்திற்குச் சான்றுகளாகும் நெல்லிக்கும் செலனுக்கும் இடையே பதினாறு ஆண்டுகள் கடிதப் போக்கு வரத்து நடந்திருக்கிறது. Chorus of Orphans என்ற நெல்லியின் கவிதைச் சிறப்பை செலன் பாராட்டிய போது ஏற்பட்ட கடிதப்பரிமாற்றம் 1970 வரை நீடித்தது  என்று John Felstiner குறிப்பிட்டுள்ளார். The Correspondence of Paul Celan and Ilana Shmueli என்ற புத்தகம் Susan Gillespie யால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதலுள்ள கடிதங்கள் ஆச்சர்யம் தருபவையாக உள்ளன. செலனின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள்,உரையாடல்கள் ஆகியவற்றை மையம் கொண்டிருப்ப தால் அவருடைய எழுத்துக்கான சிக்கல்கள் பின்புலத்தை வெளிப்படுத்துவ தா கின்றன.அவர் அடைந்த வேதனையை, மன அழுத்தத்தைக் கவிதைகள் பிரதிபலிக்கின்றன.”நான் என் கவிதைகளோடு நெருங்கியிருக்க வேண்டும். கடும்நேரங்களில் துணையாக இருந்தது அதுதான்.அப்படியிருப்பதுதான் என் வாழ்க்கை.என்னை நிலைநிறுத்திக் கொள்ள ,ஊக்கப்படுத்த கவிதைகள் தான்  உதவின “என்கிறார். மற்றும் ஒரு கடிதம் இப்படி இலானாவிடம் வேண்டுத லாய்:

”உன் எண்ணங்களையும்,ஆசைகளையும் உன்முன்னால் நிறுத்திவை!
அப்போது அவற்றை என்னால் தொடமுடியும்.என் கைகளுக்கு
இன்னமும் நினைவும், மொழியும்  இருக்கிறது”

என்பது அவருடைய கவிதானுபவத்தின் வெளிப்பாடாகிறது.மொழி மிக அர்த்த முடையதாகவும்,அனுபவிக்கத்தக்கதாகவும் இருக்கவேண்டும் என்று நினைத் தார்.செலன் – சுமுயிலி உறவு எழுதப்பட்ட வார்த்தைளையே முற்றிலும் சார்ந்திருந்தது என்பது உண்மையாகும்.ஒரு கடிதம் இப்படி முடிகிறது.

“கைகள் உன்மீது அலைபாய்வதைப் போல
பேசுவதும் கூட தொடுஉணர்ச்சிதான்”

தான் புரிந்து கொள்ளப்படவேண்டும் என்று அவர் ஏங்கினார்.அந்தப் புரிதல் விமோசனமாகவும் அமையலாம் என்று நினைத்தார்.செலனின் கலைதேவதை, தூண்டுதல் சுமுயிலிதான்.கடிதங்களில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவி தைகள் பகிர் அனுபவங்களாக இருக்கின்றன. சுமுயிலி பயன்படுத்தியுள்ள சொற்றொடர்களையே அவரும் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய முயற்சிகளில் தனக்கும் பங்கிருப்பதாக சுமியிலி கருதினாள். அதனால்தான்.”என்னாலும் எழுதமுடியும்;எழுதியிருக்கிறேன்.”என்ற சுமுயிலி யின் குறிப்பு நினைவுகூரத்தக்கது. செலனின் சில கவிதைகள் இங்கே:
ஆறுகளில்
எதிர்காலத்தின் வடக்கில்
நான் விரித்த வலை
அதில் நீ தயக்கமாய்ச் சுமத்தியகல்லில்
பொறிக்கப்பட்ட நிழல்கள்
சூரியன்களின் இழை
சாம்பல்கறுப்பு வனாந்தரத்தில்
ஒரு மரம்
உயர்ந்த சிந்தனை
ஒளியின் குரலுக்கேற்ற தாளம்.
மனித குலத்தின் இன்னொரு புறத்திற்கு
இசைக்க வேண்டிய பாடல்கள் இன்னுமிருக்கின்றன.
தொடர்
நாளின் மகிழ்ச்சியொளி வானில்
வாழ்வதற்கு ரசனையாய் வண்ணங்கள்
அனுபவிப்பதற்கு காதல்சிரிப்பு
கண்களைத் திறக்கும் இறுதிக்கணத்தில்
அவள் எல்லா இசைவுடனும்.
எங்களுக்கு வெகு அருகில்
எல்லாவற்றையும் கண்டும் சேகரித்தும்
நூலிழை அறுந்து போகும்படி வேகத்தில்
விடுதலையை நோக்கி ஓடி ஓடி
விடுதலையும் செல்வங்களும்
பெரியபறவை எழுப்பும் சத்தமாய்
ஒரு கொடி எப்போதும் அப்பால் பறந்தபடி
நம் வாழ்க்கை
லட்சியங்களை நம்மால் ஒவ்வொன்றாய் அடையமுடியாது
ஆனால் இணையாய்..
இணையாய் நம்மைப் பற்றி நமக்குத்தெரியும்.
நம்மின் எல்லாவிருப்பமும் கண்டு குழந்தைகள் மகிழும்
இருட்டில் தனியாய்ப் புலம்புதல் வரலாறு.
நான் அதை உனக்குச் சொன்னேன்
மேகங்களுக்காக  நான் அதை உனக்குச் சொன்னேன்
கடலின் மரங்களுக்காக நான் அதை உனக்குச் சொன்னேன்
இலைகளிலுள்ள பறவைகளின் ஒவ்வொரு அசைவுக்கும்
கூழாங்கற்களின் ஓசைக்காகவும்
பழக்கப்பட்ட கைகளுக்காக
முகமாக அல்லது நிலமாக மாறும் கண்களுக்காக
நிறத்தின் சொர்க்கமாக  உள்ள தூக்கத்திற்காக
இரவின் குடிக்காக
சாலைகளின் கட்டமைப்புக்காக
திறந்த ஜன்னலுக்காக வெறுமையான நெற்றிக்காக
உன் சிந்தனைகளுக்காக உன் வார்த்தைகளுக்காக
நான் அதை உனக்குச் சொன்னேன்
ஒவ்வொரு வருடலும் ஒவ்வொரு நம்பிக்கையும் பிழைக்கிறது”
என்று கவர்ந்து பற்றுகிற முனைப்போடு கவிதைகள் வெளிவருகின்றன.

paulcelanmonument

பிரமிப்பூட்டும் உருவகங்கள்,வார்த்தைப் பிரயோகங்கள்  செலனால் பயன் படுத்தப்பட்டுள்ளன. சான்றாக In rivers என்ற கவிதையில் ’  north of the future” என்ற வார்த்தை மிக வித்தியாசமான உருவகமாக உள்ளது.ஆறும் ,வடக்கும் இடம் சார்ந்த பெயர்ச்சொற்கள்.எதிர்காலம் தற்காலிகமானது. எதிர்காலமென் பது இறந்த நிகழ்காலங்களின் பார்வை என்பதால் இலக்கிய ரீதியில்,கவிதைப் பாணியில் புதிய உருவகங்கள், வடிவங்களைப் பயன்படுத்துவது மிகச்சிறந்த கவிஞனுக்கு கைவருகிறது. கவிதையைப் பொறுத்தவரை புதிய வார்த்தைக ளுக்கான களனாகிறது. காலத்தையும், இடத்தையும் ஒருங்கிணைப்பதான கவிதையாக  In rivers இருக்கிறது.வாழும் காலத்தில் போரில் கண்ட, அனுப வித்த துயரம் ஆகியவற்றின் பாதிப்பு உலகளாவியது என்பதால் என்னவகை யான எதிர்காலத்தை மனிதவுலகம் பெற முடியும் என்ற பார்வை கவிஞனு டையதாகிறது. அந்த வேகத்திலும் தூண்டலிலும்தான் புதிய சொல்பிரயோ கங்கள் வெளிப்படுகின்றன. Death Fugue என்ற கவிதைக்காக அவர் முதலில் அறியப்பட்டவராக இருந்தாலும் அதே பாணியில் அவர் பின்னாளைய கவி தைகள் அமையவில்லை. Black milk  என்று வெண்மைக்கும்,தூய்மைக்கும், உயிர்வாழ்க்கைக்கு அவசியமானதுமான பாலை “கருப்புப் பால்” என உருவ கித்து ’கருப்பு இழப்பின் குறியீட” என்பதான தொனியில் அடையாளமாகச் சொல்லிப் போரின் கொடூரத்தையும்,நாசத்தையும் பேரழிவின் தன்மையையும் சொல்வதான கவிதை அது.
இதுதான் பொருளாக இருக்கமுடியும் என்ற உறுதிப்பட்ட சிந்தனையை செலன் கவிதைகளில் காணமுடிவதில்லை.அந்த மரபுசார்ந்த ’இதுதான்’ என் பது விலகுகிறபோது கிடைக்கும் கவிதானுபவம் முக்கியம். உண்மை, மொழி, எண்ணம் என்ற மூன்று சேர்க்கைகளின் நிகழ்வாக அமைவதுதான் அவர் கவிதைகள் என்கின்றனர் விமரிசகர்கள்.ஒருநாளும் நாம் சொல்லவிரும்புவ திலிருந்து மொழி விடுபடமுடியாது என்பதை அவர் தன் கவிதைகளின் வசமாக்கிக் கொண்டதால் மொழி அவர் விருப்பத்திற்கு வளைவதாகிறது.
தன்னை  Hermitic என்ற வகைக்குள் அடக்குவதை அவர் ஏற்கவில்லை. கருத்து என்ற ஒன்றை மட்டும் சொல்வதாக அவர் கவிதைகள் அமைய வில்லை.அந்தரங்கம் மற்றும் வரலாற்று நிகழ்வுகளாகக் கவிதைகள் இருப் பதால் ஆழமான தத்துவமும் கொண்டவையாகின்றன.கவிதையை முதலில் படிக்கும் போது ஆழம் காணமுடியாத தன்மை இருப்பதாகத் தோன்றும். தெளிவான எந்தக் குறிப்பையும் முதலில் தராதபோதும் படிக்கத் தூண்டும் தன்மை செலனின் கவிதைகளை ரசிப்பதற்கான முதல்படி. கவிதை நடை, பின்பு உள்வாங்கிய பிறகான சிந்தனை கவிதைக் கருத்தைப் புரியவைக்கிறது இந்த நூற்றாண்டில் செலனின் கவிதை மொழி பெயர்ப்புகள் எண்ணிக்கை யில் பெருகிக்கொண்டிருக்கின்றன.ஒவ்வொருவரின் மொழிபெயர்ப்பும் “தான் உள்வாங்கிய” தன்மையைச் சொல்வதாகிறது “என்கிறார் லியான்.
Bremen  இலக்கிய விருது பெற்ற போது ”உணர்ச்சிகளை எதிர்கொள்ளும் தன்மைதான் கவிதை பிறக்கக் காரணமாகிறது.கவிஞன் தன் கவிதையை உலகத்திற்கு அறிமுகம் செய்யும்போது அது புட்டியில்  அடைக்கப்பட்டு கடலில் எறியப்படுவதாகிறது.உயிரான கவிதை ஒரு வாசகனை,சபையை ஒரு காதலனை என்று பலரையும் எதிர்கொள்கிறது;மனதோடு இணைகிறது.” என்று கவிதைக்கான நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்.”புட்டியில் அடைக்கப் பட்டு” மிகச் சிறந்த பிரயோகமாகிறது.
“உங்களில் பலருக்கு நான் எந்தஇடத்திலிருந்து வந்தவன் என்பது தெரியாமலி ருக்கலாம்.அந்த வாழிடம் மனிதர்களும்,புத்தகங்களும் நிறைந்தது.”என்று மூல நிலையைச் சொல்கிறார்.உணர்ச்சிப்பூர்வமாக அவர் அந்த இடத்தை விட்டு எந்தக் காலத்திலும் விலகியிருக்கவில்லை.மரங்கள்,அருவிகள், மலர்கள் என்று எல்லாமும் அவர் கவிதைகளில் திரும்பத் திரும்ப இடம் பெறுகின்றன.
1960 ல் அவருக்கு GeorgBüchner பரிசு கிடைத்தது.அந்த நிகழ்வில் அவர் பேசிய உரை The Meridian” என்ற புத்தகமாக Rosemarie Waldrop ஆல் எழுதப்பட்டுள்ளது.
செலனின் சில மேற்கோள்கள்:

  • யதார்த்தம் என்பது எளிமையானதல்ல:முயற்சி செய்து வெல்லுவதற்குரி யதாகும்
  • வசந்தம் :மரங்கள் பறவைகளை நோக்கிப் பறப்பது
  • படிக்க வேண்டும் ! எப்போதும் படிக்க வேண்டும்,புரிதல் தானாகவே நிகழும்.
  • நிழலைப் பற்றிப்பேசுபவன் உண்மையைப் பேசுபவன்.
  • உண்மையான கைகளால் தான் உண்மையான கவிதை எழுத முடியும்; என்னைப் பொறுத்தவரை கைகுலுக்குவதற்கும் ,கவிதைக்கும் இடையே எந்த  வேறுபாடுமில்லை.
  • எல்லா இழப்புகளின் ஊடேயும்  எப்போதும் அணுகுவதற்குரிய ஒன்றே ஒன்றாக மொழி மட்டுமே இருந்தது :ஆமாம். மொழிதான்.

1945க்குப் பிறகான மிகப் பெரிய ஐரோப்பியக் கவிஞர் செலன் என George Steiner குறிப்பிட்டுள்ளார். செலனின் உருவகங்கள் சில யதார்த்தங்களின் வெளிப்பாடு. அதை விளக்கிச் சொல்ல வார்த்தைகளில்லை என்று Gerhard Neumann கூறியுள் ளார்.
அவருடைய கவிதைகள் மரபுசார் நிலைகளிலிருந்து பெரிய அளவில் மாறு பட்டவை.உருவகத் தன்மையிலான யதார்த்தத்தைவிட சொற்களின் யதார்த்தத் தேடல்தான் அவருக்கு முக்கியமாகப் பட்டிருக்கிறது என்று James K. Lyon. குறிப்பிடுகிறார்.
பலரால் செலனின் கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும் Michael Hamburger, Pierre Joris  and John Felstiner ஆகியோரின் மொழிபெயர்ப்புகள் பெரிய அளவில் பேசப்படுகின்றன. தவிர செலன் கவிதைகள்  இன்று மிக அதிக அளவில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன.அது அவரை உலகக் கவிஞனாகவும் அடையாளப்படுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.