மகரந்தம்

[stextbox id=”info” caption=”பழைய கதை பேசலாமா?”]

nytlogo152x23

மகரந்தம் பகுதியில் தற்போது நடப்பன மட்டும்தான் பேசப்படவேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லைதானே? தற்போது நடப்பன என்றோ நடந்தவற்றின் எதிரொலி போலவோ, நீட்சி போலவோ தெரிந்தால் முன்பு என்ன நடந்தது என்று கவனிப்பதும் உதவும் என்று தோன்றியது. கீழே உள்ள ஒரு சுட்டி, 1991 ஆம் ஆண்டு நியுயார்க் டைம்ஸில் ஒரு பத்தியாளர் எழுதியது. அதைப் படித்தால் 90களின் துவக்கத்திலேயே அமெரிக்க முதலியத்தின் பெருநகர்வுகள் காணப்பட்டன என்று தெரிகிறது. பெரு நகர்வுகள் என்று சொல்கையில் அதில் நிரந்தர ஊழியர்களைத் துறந்து வெளி நபர்களின் திறன்களைத் தற்காலிக அடிப்படையில் வாடகைக்கு அமர்த்துவது என்ற ஒரு பழக்கத்தைச் சுட்டுகிறோம்.
அதற்கு ஒரு பெயர் இன்று வைக்கப்பட்டிருக்கிறது- அவுட்சோர்ஸிங் என்று இங்கிலிஷில் சொல்கிறார்கள். இதில் திறமை, நிபுணத்துவம், அனுபவம் எல்லாம் நிறுவனத்தின் வலு என்று யோசிக்கும் மரபு அழிந்து, அவற்றைப் பராமரித்துப் போற்றி வளர்க்கும் வேலையை நிறுவனங்கள் செய்யத் தேவை இல்லை, அந்தப் பராமரிப்பை அவரவர்களே செய்து கொள்ளட்டும், ஒப்பந்தக் கூலிகளாக மட்டும் அவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நிறுவனங்கள் தீர்மானிக்கத் துவங்குகின்றன. இதில் வெறும் பொருளாதாரத் தீர்மானங்கள் மட்டுமே அடங்கி இருப்பதாக நாம் கருத முடியாது. இன்னும் வேறென்ன இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரை இலேசாகத்தான் சுட்டுகிறது.
கட்டுரையின் உள்ளடக்கமும் இலேசானது அல்ல. அது புத்தகப் பிரசுரத் துறையில் நடந்த மாறுதல்கள் 90களில் அமெரிக்கப் பிரசுரத் துறையை எப்படி உலுக்கியது என்று பேசுகிறது. பழுத்த அனுபவசாலிகளும், எழுத்துத் துறையில் முக்கிய வளமான தனிநபர் தொடர்புகள், உறவுகள் ஆகியனவற்றிலும் மிக்க பலம் கொண்டவர்களுமான பதிப்பாசிரியர்களைக் கூட பிரசுர நிறுவனங்கள் வேலையை விட்டு நீக்கி விடத் துவங்குவது ஏன் என்றும், அந்த நீக்கத்துக்குப் பிறகு அந்தப் பதிப்பாசிரியர்கள் எப்படித் தனிப்பட்ட ஆலோசகர்களாகப் பல நிறுவனங்களின் பிரசுர முயற்சிகளை முன்னின்று நடத்துகிறார்கள் என்றும் கட்டுரை பேசுகிறது.
இன்று மொத்தப் பிரசுரத் துறையே பெரும் குழப்பத்தில் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அமெரிக்கா வில் ஏராளமான பெரும் பத்திரிகைகள் வாசகர்களின் ஆதரவை இழந்து நொடிப்பில் இருக்கின்றன. பெருநிதிக் கிழார்களோ, அல்லது வேறு தொழில் துறையில் ஏராளமாக லாபம் சம்பாதிப்பவர்களோ இந்தப் பத்திரிகைகளை வாங்கி நஷ்டத்தைப் பொருட்படுத்தாது ஓட்டிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன. எழுத்தாளர்களில் சிலர் பெரும் செல்வம் கிட்டுபவர்களாக இருந்தாலும், பெரும்பான்மையினர் அடி மட்ட நிலை வாழ்வில்தான் உழலுவதாகவும் தகவல்கள் கிட்டுகின்றன. ஏற்கனவே அமெரிக்க எழுத்தாளர்களில் பெருமளவு நபர்கள் இடதுசாரியினராக இருந்து வந்திருக்கின்றனர். சமீபத்திய நகர்வுகள் இந்த எழுத்தாளர்களை மேன்மேலும் இடது சாரியினராக ஆக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி இருக்கும். கீழே உள்ள சுட்டி 1991 ஆம் ஆண்டின் சுட்டி என்பதை மனதில் கொண்டு படியுங்கள்.

[/stextbox]


[stextbox id=”info” caption=”பாப் டிலனுக்கு நோபல் பரிசு?!”]

ross-dylan-1185

நீங்கள் இந்தச் செய்தியைப் படிக்கும்போது, பாப் டிலனுக்கு 2016 ஆம் ஆண்டுக்ககான இலக்கிய நோபல் பரிசு கொடுக்கப்பட்டது சரியா தவறா எனும் விவாதச்சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கும். வழமைபோல, இலக்கியவாதிகளும் இசை வல்லுனர்களும் அவர்களுக்குள் இருக்கும் நுண்ணிய பிரிவாளர்களும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு விருதின் தோல்வி அல்லது விருதின் புத்துருவாக்கம் எனும் இரு எல்லைகளில் சண்டையிட்டு எட்டாமுடிவோடு சோர்ந்து படுத்திருப்பர். இசை விமர்சகர்களில் பெரு மதிப்போடு இயங்கும் அலெக்ஸ் ரோஸ் தனது நியூயார்க்கர் கட்டுரையில் விருதின் தேர்வுக்காகத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்திருப்பதாகத் தோன்றுகிறது. இது ஆச்சர்யமானதல்ல என்றாலும், பாப் டிலன் ஒரு காலகட்டத்தின் முக்கியமான குரல் எனும் மதிப்பீட்டிலிருந்து பார்க்கும்போதும் பாப் பாடலாசிரியர்களிலேயே கவித்துவ மிளிர்தலை பரவலாக்கிய லியனார்ட் கோஹன், ஜான் லென்னன் வரிசையில் பாப் டிலனை வைப்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஒரு நாட்டின் பண்பாட்டு குரலாக ஒலிக்கக்கூடிய வடிவமாக இருபதாம் நூற்றாண்டில் பாப் பாடல் வரிகள் இருப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆபரா வடிவத்தைக் கொண்டு ரிச்சர்ட் வாக்னர் செய்த சாதனைக்குக் குறைவில்லாது எனும் வாதத்தை அலெக்ஸ் ராஸ் முன்வைக்கிறார். கவிதை வரிகளிலும் பாடல் வரிகளிலும் நமது கலாச்சார அடையாளங்களைத் தேடும் நாகரிகங்களில் இனி தவிர்க்க இயலா விவாதமாக இது உருவாகும்.

http://www.newyorker.com/culture/cultural-comment/bob-dylan-as-richard-wagner

[/stextbox]


[stextbox id=”info” caption=”யானைகளுக்கு செஸ் விளையாடத் தெரியாது. “]

elephant

அரிஸ்டாட்டலின் காலம்தொட்டு மனிதனின் சிந்தனை இயல்புகளை பதிவு செய்யத் தொடங்கியிருந்தாலும் நாம் விலங்குகளின் இயல்பிலிருந்து எத்தனை தூரம் விலகி இருக்கிறோம் என்பதைக் காட்டும் தொகுப்பாக அது இருந்து வந்திருக்கிறது. சகஜீவனான மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூட சரியான கருவிகள் இல்லாத மனிதனுக்கு  விலங்குகளுக்கு பசி, தூக்கம், வலி போன்ற எந்த உணர்வுகளும் கிடையாது என அறிந்துகொள்ள பலகாலம் ஆனது என்பதில் அவ்வளவாக ஆச்சர்யம் இல்லை. வவ்வாலாக ஒருவன் மாறினால் அவனது சிந்தனையில் எவ்விதமான மாற்றங்கள் நடக்கும்? முதலில், தான் ஒரு வெளவால் என அவனால் புரிந்துகொள்ள முடியுமா? சரியான கண்பார்வை அற்றதும், கூட்டாக வாழத்தெரியாததாக இருக்கும் வெளவால்களின் உணர்வுகளை நமது அக வளர்ச்சியோடு ஒப்பிடமுடியுமா? இன்றைய காலத்தில் நாம் விலங்குகளின் அரிதான பல நடத்தைகளைப் பற்றிப் படிக்கிறோம் – கால் உடைந்த ஒட்டகத்தைப் ரெண்டு நாட்கள் பார்த்துக்கொண்ட யானை, பல வருடங்கள் பிரிந்திருந்த மனிதனை அடையாளம் கண்டுகொள்ளும் சிங்கம், டால்ஃபின்களின் தன்னலமற்ற செயல்கள் போன்றவற்றை எளிய அறிவியல் கொண்டு விளக்க முடியுமா? உளவியல் துறை மனித மனதின் செயல்பாடுகள் கொண்டுமட்டுமே வளர்ந்து நிற்கிறது எனும்போது அபாரமான ஞாபகசக்தியும், கிட்டப்பார்வையும் கொண்ட யானையின் மனம் எப்படி செயல்படும் என்பதை நாம் உணர்வது எப்படி? நம்மால் விலங்குகளின் உளவியலை நமது குறைப்பட்ட மூளையைக் கொண்டு புரிந்துகொண்டுவிடமுடியுமா? ஆன்மா என கீழை ஞானம் குறிப்பிடுவது இந்த மனோதத்துவ நிலையை விளக்கும் கருவியா அல்லது மனதின் செயல்பாடுகளைத் தாண்டிய தொகுப்பா? அனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருப்பது கடவுளின் ஆன்மாவினுடைய சிறு துளி எனும் நம்பிக்கை இன்று விலங்குகளின் உணர்வுகளை நாம் நெருங்கப்பயன்படும் ஒன்றாக அமைந்துவிட்டதா?

http://www.thenewatlantis.com/publications/do-elephants-have-souls

[/stextbox]


[stextbox id=”info” caption=”நம்பிக்கையற்ற முஸல்மான்?”]

atheist_muslim

அலி ரிஸ்வி எழுதிய நம்பிக்கையற்ற முஸல்மான் புத்தகம் அவரது சொந்த வாழ்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. பாகிஸ்தானில் பிறந்து இரான், மத்திய கிழக்கு போன்ற இடங்களில் வாழ்ந்து இன்று டொரண்டோவில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். பன்னிரெண்டு வயதில் குரான் படித்தவர் அதில் சொல்லப்பட்ட மனித விரோத செயல்களைப் படித்து குழம்பியிருக்கிறார். பெரியவர்களிடம் கேட்டபோது அவை விரும்பத்தகாத முல்லாக்களால் பூர்த்தி செய்யப்பட்ட பகுதிகள் என சந்தேக நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறார். சக மனிதன் மீது வன்முறையைத் தூண்டி நம்பிக்கையற்றவர்களைத் தாக்குமாறு லைசன்ஸ் வழங்கப்பட்ட வழிமுறையாக இருக்கும் தன் மத நூலை கைவிடத்துணிந்தவர் குடும்பமும், நண்பர்களும், சமூகமும் அவரை விட்டு விலகுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. பிற மதங்களில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குச் சமூகம் அளிக்கும் இடங்களைக் கவனித்தவர் தமக்கு அதே இடம் இல்லாததோடு மட்டுமல்லாது மிகுந்த வெறுப்புக்கும் உள்ளாவதை இந்நூலில் பதிவுசெய்துள்ளார். அவரது மீட்சி எது?

https://www.commentarymagazine.com/articles/rizvis-reformation/

[/stextbox]

[stextbox id=”info” caption=”டிஜிட்டல் இணைய எழுத்தை காத்தல், அழித்தல் உரிமை யாருக்கு?”]

black-clock-magazine

இந்திய சிற்றிலக்கிய பத்திரிக்கைகளைப் பற்றி நமக்கு அதிகம் அறியக்கிடைப்பதில்லை என்றாலும் தமிழில் நமக்குத் தெரிந்து தொடர்ந்து பல வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இணைய சிறுபத்திரிக்கைகள் குறைவே. அப்படியே வெளிவந்தாலும் நமக்குத் தெரிந்த சிறுபத்திரிக்கைகளில் வரும் எழுத்துகள் பெரும்பாலும் பத்திரிகையாசிரியருக்குச் சொந்தமாக இருக்காது. எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் சன்மானமும் அதிகம் அல்ல என்பதால்  எழுத்தை மட்டுமேனும் சொந்தமாக வைத்துக்கொள்ளட்டுமே எனும் நல்லெண்ணமாக இருக்கலாம். ஆனால் இன்றைய டிஜிடல் தொழில்நுட்ப உலகில் வெளியாகும் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்? பத்திரிக்கையாசியர்களும் நிறுவனர்களும் பங்குபெறாமல் பத்திரிக்கை இயங்காது ஆனால் அதை மூடுவதற்கு அவர்களைத் தவிர வெளியாட்கள் பலருக்குச் சாத்தியம். இணையத்தில் எல்லாமே உடனடியாகக் கிடைக்கின்றன என்றாலும் இணையத் தொழில்நுட்பத் தொடர்பு சிக்கல் இருக்கும்போது உலகமே இருளுக்குள் போவது போல சட்டென எல்லா டிஜிட்டல் எழுத்துகளும் மாயமாக மறைந்துவிடும். இந்தளவிற்கு கானல்நீர்த்தன்மை கொண்ட இணைய எழுத்துக்கு உண்மையான சொந்தக்காரர்கள் யார்? மிகப்பிரபலமான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய ப்ளாக் க்ளாக் எனும் இணைய பத்திரிக்கை திடீரென மூடப்பட்டதைத் தொடர்ந்து நம் எல்லாரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளைப் பற்றிய கட்டுரை இதோ:

http://lithub.com/who-should-own-what-in-the-digital-age/

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.