கடைவழி

வள்ளுவநகர் மூணாவது வீதி அப்புசாமி சம்சாரம் தங்காளு காலமாயிட்டாங்க. சாயங்காலம் நாலரை மணிக்கு எடுக்கறதுங்கோவ். எல்லாரும் வந்துருங்கோவ்.”

சம்பானின் சத்தம் தெரு முழுக்க ஒலித்தது.

கட்டிலில் கிடந்த ஜந்தம்மா கிழவி திடுக்கிட்டு விழித்தாள். எதிர்பார்த்ததுதான். அடிவயிற்றைப் பிசைந்தது. கைகளை ஊன்றி தடுமாறி எழுந்தாள். ஏற்கெனவே நடுங்கும் உடல் இப்போது இன்னும் கூடுதலாய் கிடுகிடுத்தது. “தங்காதங்கா…” என்று பிதற்றியபடியே கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்தாள். “போயிட்டியாடி நீ. அய்யோ. தங்கா…” மாரில் அடித்தபடி அழுதாள்.

தெரு முனையில் மீண்டும் சம்பானின் சத்தம் கேட்டது.

தங்கா போயிட்டாளாடா. டேய் பொன்னா. எங்கடா இருக்கே நீ?” அழுதபடியே கத்தினாள். கரகரத்து தடுமாறிய குரல் பலவீனமாய் கரைந்தது. யாரும் எட்டிப் பார்க்கவில்லை. கட்டிலில் கையை ஊன்றி எழ முயன்றாள். கால்கள் நடுங்கின. பாதங்களை ஊன்ற முடியவில்லை.

பொன்னா. டேய். எங்கடா போயிட்டே. அவ போயிட்டாளாடா? கடேசி வரைக்கும் என் கண்ணுல காட்டாம பண்ணிட்டியேடாசண்டாளா. எங்கடா போனே?”

காலுக்குக் கீழே மூத்திரம் வழிந்து சேலையை நனைத்தது. இடுப்பை நிமிர்த்தி நடுங்கும் கைகளால் பழஞ்சீலையை சுருட்டி அடியில் திணித்தாள். நிலைகொள்ளாது கிடுகிடுத்த தலையை நிமிர்த்தி கண்களை இடுக்கியபடி பார்த்தாள். அசைவேதும் தென்படவில்லை. கயிற்றுக் கட்டிலின் ஓரத்தில் கிடந்த குச்சியை தடுமாறும் விரல்களால் பற்றி எடுத்தாள். கீழே கிடந்த ஈயப்போசியைக் குச்சியால் தட்டவேண்டும். சத்தம் கேட்டால் யாராவது எட்டிப் பார்க்கக்கூடும். குச்சியை சரியாகப் பிடிக்கமுடியவில்லை. காற்றில் நழுவி பலவீனமாய் போசியின் மீது அடி விழுந்தது. நசுங்கிக் கிடந்த ஈயப்போசியின் சத்தம் அவளுக்கே கேட்கவில்லை.

டேய் பொன்னா. அங்க கூட்டிட்டு போடா என்னைய. கடேசியா அவ முகத்தை ஒரு தடவ பாத்துக்கறண்டா. புண்ணியமா போகுண்டா உனக்கு. பொன்னா. எட்டிப் பாருடா இங்க.”

paatti

காலையிலிருந்து அழுதபடிதான் இருக்கிறாள் அவள். வெடித்த நிலத்தின் கோடுகள்போல் சுருக்கங்கள் மினுக்கும் அவள் கன்னத்தில் கண்ணீரின் ஈரம் காயவில்லை. வீட்டுக்குப் பின்பக்கமாய் வேப்பமரத்துக்குக் கீழே அவளை கிடத்தியிருக்கிறார்கள். பட்டு ஜந்தமும் நூல் ராட்டையுமாய் கிடந்த பழைய ஓலைக் கொட்டகையில் தளர்ந்து தொங்கும் கயிற்றுக் கட்டிலில்தான் ஒரு வருடமாய் கிடக்கிறாள். மலஜலத்துக்கேனும் எழுந்து நடக்க முடிந்தவளுக்கு சமீப காலமாய் அதற்கும் முடிவதில்லை. கம்பை ஊன்றி நாலு எட்டு நடப்பதற்குள் கால்வழியாய் கழிந்து போகிறது. வாளித் தண்ணீரை எடுத்து காலைத் துடைப்பதற்குள் வேர்த்து நடுங்குகிறது. எப்போதும் ரீங்கரித்தபடி சுற்றித் திரிகின்றன ஈக்கள். வாளியில் தண்ணீர் நிறைத்து வைக்கும்படி சொன்னாலே வசந்தா எரிந்து விழுகிறாள். மூக்கைப் பொத்திக்கொண்டு எட்டி நின்று தண்ணீரை ஊற்றிவிட்டு ஓடிவிடுகிறாள்.

இப்போதும் வசந்தா வீட்டுக்குள்தான் இருக்கிறாள். இத்தனை முறை அழைத்தும் காதில்போட்டுக்கொள்ளவில்லை. ஜந்தம்மா குச்சியை எடுத்து மறுபடியும் ஈயப்போசியைத் தட்டினாள்.

எரிச்சலுடன் எட்டிப் பார்த்தாள் வசந்தா. அவளது நீலச் சேலை கண்ணில்பட்டதும் ஜந்தம்மா புலம்பி அழைத்தாள். “என்ன சித்த அங்க அழைச்சிட்டுப் போ வசந்தா. நீ நல்லா இருப்படிம்மா.” சொல்லி முடிப்பதற்குள் கத்தினாள் வசந்தாநீ இப்பிடி கெடந்து உசுர வாங்கினா நா எப்பிடி நல்லா இருக்கறது? காலைலேர்ந்து எதுக்கு இப்பிடி சத்தம்போட்டு ரவுசு பண்றே?”

கிடுகிடுக்கும் தலையுடன் கைகளை கட்டில் விளிம்பில் ஊன்றியபடியே கெஞ்சினாள்தொல்லை பண்ணல சாமி. தங்கா கிட்ட கூட்டிட்டு போம்மா.” சொல்லும்போதே அழுகை முட்டியது. கேவலுடன் மூச்சிழுக்க அழுதாள்.

ஆமா. போயிட்டா. அதான் பொறந்தூட்டு சீரை எடுத்துட்டு உங்க மவன் போயிருக்காரு. செறப்பா செஞ்சட்டு வருவாரு. நீயும் போகணுமா? புத்து வெச்சு செத்துப் போனவள இத்துப் போன நீ போய் பாக்கறியா? மோளறதுக்கும் பேளறதுக்குமே தள்ளிப் போ முடியலேங்கற. மவளப் பாக்க மண்டிபோட்டுட்டு போறியா? நல்லா வருது வாயில. இனி ஒருக்கா சத்தம் போட்டு கூப்பிட்டியா வந்து நாலு மொத்து மொத்திருவேன் பாத்துக்க.” வசந்தா விரலை ஆட்டி எச்சரித்துவிட்டு நகர்ந்தாள்.

தங்கா மூங்சியப் பாக்கணும். அவளத் தூக்கிட்டுப் போறதுக்குள்ளாற பாக்கணும். என்னை கூட்டிட்டுப் போம்மா.” ஜந்தம்மா மறுபடியும் குச்சியைத் தரையில் ஊன்றி எழ முயன்றாள். கால்கள் ஒத்துழைக்காமல் மடங்கித் தவித்தன. முடியவில்லை. கண்களை மூடியபடி தளர்ந்து பின்னால் சாய்ந்தாள். மூத்திரத்தின் ஈரமும் நெடியும் புரண்டெழுந்த கணத்தில் இடுப்பைத் தூக்கி முன்னகர்ந்தாள். சுருங்கிக் கருத்த உதடுகளைக் கவ்வியபடி தலைகுனிந்தாள். ஓயாமல் கிடுகிடுத்த அவளது தலையின் கத்தரித்த நரைமுடிகள் காற்றில் பரிதாபமாய் அசைந்தன. மூச்சை உள்ளிழுத்தாள். கைகளை கட்டிலின் மரச்சட்டத்தில் ஊன்றினாள். சிறிதும் நகரமுடியவில்லை.

தங்காதங்கா…” ஜந்தம்மாவின் உதடுகள் தடுமாறின. தலையை நிமிர்த்தி மேலே பார்த்தாள். கிழிந்த ஓலைகளின் நடுவே வேப்பமரத்தின் கிளைகள் அசையும் சலனம். “காகா…” காக்கையின் அழைப்பொலி. ஜந்தம்மா தலையை குனிந்த நொடியில் கரகரவென கண்ணீர் உருண்டு சொட்டியது. அடிவயிற்றைப் பிடித்தபடியே மெல்ல சாய்ந்தாள். துணிவிலகிய கட்டிலின் கயிறுகள் முதுகை அழுத்தின. தோளை நிமிர்த்தி துணியை இழுக்க முயன்றாள். வலதுகை ஒத்துழைக்காமல் நெஞ்சில் சரிய அழுகை வெடித்தது.

இவ ஒருத்திதான் இருந்தா. அவளும் போயிட்டா. நா பெத்த மவராசிக மூணுபேரும் எனக்கு முன்னாடியே போயிட்டாளுங்களே. எல்லாத்தையும் பாத்துட்டு குத்துக்கல்லுமாதிரி எதுக்கு இப்பிடி கெடக்கறேன் நானு. இன்னும் என்னத்தைப் பாக்கணும்னு அந்த சவுண்டியாத்தா என்னைய இப்பிடி கெடையில போட்டு வெச்சுருக்கா?”

உதடுகள் முணுமுணுக்க கண்ணீர் வழிந்து காதோரத்தை நனைத்தது. ஓடுகளின் வழியே பாய்ந்த ஒளிக் கற்றைகளை வெறித்திருந்தாள். முரட்டுக் கயிறுகள் முதுகுத் தோலில் அழுந்தின. புரண்டு படுக்கவேண்டும். அவளால் திரும்ப முடியவில்லை. அப்படியேக் கிடந்தாள்.

சின்னவள் ராசாத்தியும் இதுபோலத்தான் கிடந்தாள். செத்துப்போனாள் என்று தெரிந்து வீரபாண்டிக்குப் போய் சேரும்போதே வாசலில் அவளைக் கிடத்திக் குளிப்பாட்டத் தொடங்கியிருந்தார்கள். முறுக்கிப்போட்ட புடவைபோல ஒடுங்கிக் கிடந்தது அவள் உடல். அவள் மேல் கிடந்த அந்த மாலை பெரும் கனத்துடன் அழுத்துவது போலிருந்தது. கன்னத்து எலும்புகள் துருத்தி நிற்க தூர்ந்த மூக்குத்தி துவாரத்தின் அருகே ஈ ஒன்று சுற்றித் திரிந்தது. ஈரம் சொட்டிய செம்பட்டைத் தலைமுடி. பூசிய மஞ்சளும் நெற்றியில் அப்பிய குங்குமத்தையும் கண்டதும் ஜந்தம்மா உடைந்து அழுதாள். ஒப்பாரியுடன் தோளணைத்து துக்கமாற்ற வழியின்றி உடனடியாகவே பிணத்தைத் தூக்கிவிட்டார்கள்.

உன்னைய இங்க அனுப்பிருக்கவே கூடாதுடி ராசாத்தி. எனக்கு அப்பவே தெரியும். நீ  பொழக்கமாட்டேன்னு. இந்த சண்டாளன் உன்னை சாவடிக்கறதுக்குன்னே இங்க அழைச்சிட்டு வந்துருக்கான். நான் சொன்னனே கேட்டியாடி நீ?”

இருட்டிய பொழுதொன்றில் வீரபாண்டியிலிருந்து குழந்தைகளுடன் வந்தவள் ஒரு வருடம் இங்கேதானே இருந்தாள். இதுதான் காரணம் என்று அவளும் சொல்லவில்லை. அவனும் வந்து எட்டிப் பார்க்கவில்லை. ஆறு வயதான செல்வி விளையாடித் திரிய மூத்தவன் பக்கத்திலிருந்த பனியன் கம்பனியில் அடுக்கிக்கட்டப் போனான். ராசாத்தி தறிபோட்டுத் தரும்படி கேட்டாள். பொன்னுசாமி வீரபாண்டியில் விசாரித்தபோது அவனது அக்கா மகளோடு தொடுப்பு இருப்பதாகவும் அவளையே மறுதாரமாய் கட்டிக்கொள்ள ஏற்பாடுகள் நடப்பதாகவும் சொன்னார்கள். மணமுடித்து வருடங்கள் பத்து முடிந்து இப்போது என்ன இவளிடம் பிடிக்காமல் போனதென்று யாருக்கும் விளங்கவில்லை. வட்டில் சோற்றை அளைந்தபடியே எங்கோ வெறித்திருக்கும் அவளைத் தேற்றவே முடியவில்லை. நாளுக்கு நாள் தேய்ந்து உருமாறிய அவளைப் பார்க்க பயமாயிருந்தது. உயிர் வற்றி உடல் இளைத்து நடமாடியிருந்தவளை அவன் மீண்டும் வரச்சொல்லி அழைத்தான். சிறுபொழுதும் தாமதிக்காது உடனேயே குழந்தைகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டு நின்றாள். விலகி ஏன் வந்தாள்? இப்போது விரும்பி ஏன் போகிறாள்? எதுவும் புரியவில்லை. அழைத்துப்போன பொன்னுசாமி தெருமுனையோடு திரும்பிவிட்டான். பதினெட்டாவது நாள் அவள் செத்துப்போன சேதி வந்தது

சாகறதுக்குன்னே அங்க போயிருக்கறா பாவி. ஒருவார்த்தையும் சொல்லாம மனசுக்குள்ள வெச்சு புழுங்கியே போய் சேந்துட்டா. அத்தோட போச்சு போ எல்லாமே. அதுக்கப்பறம் அந்த ஊரோட எதுவுமே இல்லாம போச்சு.”

கணவதிபாளையத்துக்கு கல்யாணங்கட்டிப்போன இரண்டாமவள் சுந்தரி அந்த ஊரில் பிழைக்கமுடியாது என்று சட்டிபானையோடு அவனையும் அழைத்துக்கொண்டு இங்கே வந்து சேர்ந்தாள். வயிற்றில் கரு தங்காது தள்ளிப் போனபடியே இருந்தது குழந்தைப்பேறு. அவன் மசையன். பானை வயிற்றோடு மல்லாந்து படுத்தால் புரண்டெழுவதற்குள் பொழுது விடிந்துவிடும். ஆனால் வாட்டம்போட தறியில் இறங்கினால் ஒன்றரை நாளில் சேலையை நெய்து முடித்துவிடுவான். விறகுக்கடைக் கிணற்றிலிருந்து தண்ணீர் சுமந்து தொட்டியை நிறைப்பான். பெருமாநல்லூர் சந்தையில் வாரச் சாமான்கள் வாங்கிப்போட்டு வாரந்தவறாது வெள்ளிக்கிழமை இரவுகளில் சந்திரா டாக்கீஸில் எம்ஜியார் படத்துக்கும் அழைத்துப் போனான்தான். என்னவோ அவளுக்குப் பிடிக்காமல்போய்விட்டது. உம்மாணாமூஞ்சியோடு கண்ணீர் வற்றாது வாசலோடு காத்துக் கிடந்தவள் என்ன நினைத்தாளோ பொன்னரளி விதையை அரைத்து மோரில் கலந்து குடித்துவிட்டாள். அன்றைக்கும் வெள்ளிக்கிழமைதான். உரிமைக்குரல் படம்போட்டு அரைமணி நேரம் கடந்திருக்கவில்லை. அடிவயிற்றைப் பிடித்தபடி கத்தியதில் படத்தையே நிறுத்திவிட்டார்கள். செருகிய கண்களோடு தரையில் சரிந்தவளை தோளில் தூக்கிக்கொண்டு ஓடிவந்தான். தறிக்கூடத்தில் கிடத்தும்போதே நாடி தளர்ந்துபோனது. சிதம்பரம் டாக்டர் இனி பயனில்லை என்று கைவிரிக்க மறுநாள் காலையில் அடக்கத்துக்கு ஏற்பாடுகள் நடந்தன. விடியற்காலையிலேயே மசையன் காணாது போனான்.

புள்ளையில்லா துக்கத்துக்கு அரளிவெதைய வயித்துல கட்டிட்டு அந்த மகராசி போய்ச் சேந்தா. இப்ப மூத்தவ. தொண்டையில புத்தெ வெச்சுட்டு அவளும் எத்தன நாளக்கித்தான் செத்துப் பொழப்பா. போட்டும். எல்லாரும் போட்டும். நா மட்டும் இங்க புழுப்புடிச்சு நாறிக் கெடக்கறேன். செவடந்தாளி ஆத்தாகிட்ட நா வாங்கி வந்த வரம் அப்பிடி. அம்மோவ்…” குரலுயர்த்திக் கத்தினாள் ஜந்தம்மா. வேப்பரமரக் கிளையிலிருந்து தாவிப் பறந்தது அண்டங்காக்கை. தலையைத் திருப்பி வாசலைப் பார்த்தாள். பஞ்சடைந்த பார்வையில் தெளிவற்ற சலனங்கள். தரையில் செருப்புரசும் சத்தம். கூர்ந்து பார்த்தாள். யாரோ வருகிறார்கள். குச்சியைப் பற்றி எடுத்தாள். உயிரைச் சேர்த்து காற்றில் உயர்த்தி எறிந்தாள். எதிலோ பட்டுத் தெறித்து விழுந்தது.

ஆத்தாஎன் மண்டைய ஒடச்சிருவியாட்ட இருக்குது.”

தடதடக்கும் பவர்லூம் தறிகளின் ஓசைக்கு நடுவே ஆராயியின் குரல். கண்களைத் திறந்து பார்த்தாள். அவள்தான். அவளைப் பார்த்த நொடியில் ஆங்காரம் அழுகையுடன் வெடித்தது.

எங்கடி போனே நீ? என்னைய அங்க கூட்டிட்டு போடி. உனக்குப் புண்ணியமா போகும். யாருமே எட்டிப் பாக்க மாட்டேங்கறாங்க.” ஆராயி அவளை நிமிர்த்தி சேலையை விலக்கித் துடைத்தாள். நனைந்து கிடந்த போர்வையையும் பழஞ்சீலையையும் சுருட்டி எடுத்து வாளியில் போட்டாள். கிழவியின் முதுகைப் பிடித்தபடியே கொடியில் தொங்கிய இன்னொரு போர்வையை இழுத்து விரித்தாள்.

நீ அங்க போயிருந்தயாடி? அவளப் பாத்தியா நீயி?” ஜந்தம்மா ஆராயியின் முகத்தைப் பார்த்தபடியே கேட்டாள்.

வீட்டை எட்டிப் பார்த்தாள் ஆராயி. மெதுவாகச் சொன்னாள்என்னத்த சொல்றது ஆத்தா. பொறந்தூட்டு சீரெல்லாம் வேணாம்னுட்டாரு தங்கா வூட்டுக்காரரு. யாரும் வரக்கூடாது எதுவும் செய்யக்கூடாதுன்னு ஒரே தவராறு. என்ன பண்றதுன்னு தெரியாம நம்ம செட்டியாரு அங்கதான் வெளிய நிக்கிறாங்க.”

அவனக் கட்டின நாள்தொட்டே அப்பிடித்தாண்டி. இருக்கற வரைக்கும் அவளை நிம்மதியா வெச்சுக்கலை. இப்ப போம்போதும் இப்பிடி கொடுமைப் படுத்தறானே. எம் மவளேதங்கா…” மாரை அடித்தபடி ஜந்தம்மா புலம்பி அழுதாள். ஆராயி கண்களைத் துடைத்தபடி அவளை சுவரில் சாய்த்து உட்காரச் செய்தாள்.

சொம்பிலிருந்து தண்ணீரை தம்ளரில் ஊற்றி குடிக்கச் செய்தாள். தண்ணீர் சிந்தி கழுத்தையும் புடவையையும் நனைத்தது. கிழவியின் தாடையில் அசைந்து மின்னியது வெள்ளிமுடி. ஈரம்பட்ட உதடுகள் கருத்து மின்னின. ஈரத்துணியால் முகத்தைத் துடைத்தாள் ஆராயி.

முகத்தில் மோதிய காற்று ஜந்தம்மாவை சற்றே ஆசுவாசப்படுத்தியிருக்க வேண்டும். கண்களை மூடினாள். தங்காவின் முகம் கலங்கி எழுந்தது. குறுகிய தாடையுடனான நீண்ட முகம். ஒட்டிய வயிறு. எலும்புகள் துருத்தி நிற்கும் ஒல்லியான உடம்பு. சின்னதிலிருந்தே அவளுக்கு சதைபிடிக்கவில்லை. இவளுக்கும் பின்னால்தான் பொன்னுசாமி. பள்ளிக்கூடம் போனதுகூட ஒன்றிரண்டு வருடங்கள்தான். தங்கம்மா என்று கோணலாய் கையெழுத்திடத் தெரியும். கல்யாணத்தின்போதுகூட அவள் புடவை சுற்றிய மரப்பாச்சிபோலத்தான் இருந்தாள். சாமக்காடு காதர் பங்களாவை அடுத்தத் தெருவில் இருந்த மொட்டச்சிதான் பக்கத்துவீட்டில் சம்பந்தம் செய்துவைத்தாள். தங்கம்மா மாப்பிள்ளை பெருமாள் சிவப்பாய் நெடுநெடுவென்று நின்றான். இடதுகாது அவனுக்குக் கேட்காது என்கிற விஷயத்தையே மூன்றாவது பிரசவத்துக்கு வந்தபோதுதான் சொன்னாள் தங்கம்மா. வரிசையாய் மூன்று பிள்ளைகள். இரண்டொரு கருக்கலைப்புகள். வாடி வதங்கி நொடிந்தாள் தங்கம்மா. பாழாய்ப்போன புகையிலைப் பழக்கம் எப்போதிருந்து தொடங்கியது என்று நினைவில்லை. ஆனால் அது ஜந்தம்மாவிடமிருந்துதான் தொற்றியது. இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பையில் எப்போதும் புகையிலைத் துண்டுகள் கிடக்கும். கிள்ளி வாயில் அதக்கிக்கொள்வாள். எச்சில் சுரந்து வாயில் நிறையும். உதட்டோரத்தில் வழிகிற சமயத்தில் வெளியே எட்டி விரல்களை குவித்து புளிச்சென்று துப்புவாள்.

புகையிலையின் ஞாபகம் வந்ததும் ஜந்தம்மா கண்விழித்தாள். ஆராயி புடவையை அலசிக்கொண்டிருந்தாள்.

ஆராயி…” கரகரத்த குரல்கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

கையசைத்து அழைத்தாள். வெயில் ஏறியிருந்தது. நெற்றியில் ஊர்ந்த எறும்பைத் தட்டிவிட்டாள். அருகில் வந்து நின்றவளைப் பார்த்ததும்போத்தாளை…” என்றாள். ஆராயி திரும்பி வீட்டைப் பார்த்தபடியே இடுப்பிலிருந்து சுருக்குப்பையை அவிழ்த்தாள். சிறு இணுக்கைக் கிள்ளி ஜந்தம்மாவின் வாயில் போட்டாள். புகையிலையின் காரம் நாக்கில் இறங்கி நொடியில் கிழவி அழத் தொடங்கினாள். ஆராயியின் கைகளைப் பற்றி எழுந்து உட்கார்ந்தாள். “அங்க கூட்டிட்டு போடி. அவள தூக்கிருவாங்க. நேரமாயிருச்சி. எடுக்கறதுக்கு முன்னாடி அவளுக்கு ஒரு இணுக்கு போத்தாளையை போட்ரலாண்டி. என்னை தூக்குடீ…” என்று தோளைப் பற்றிக்கொள்ள கையைத் தூக்கினாள்.

ஆராயிக்கு பயம். வசந்தா எந்த நேரத்திலும் எட்டிப் பார்க்கலாம். இவள் வாயில் புகையிலை இருப்பதைப் பார்த்தாலே எகிறிக் குதிப்பாள்.

இல்லாத்தா. சித்த பொறு. யாராச்சையும் கூட்டிட்டு வாறேன். போயர்லாம்.” அவளை கட்டிலில் இருத்திவிட்டு வாசலுக்கு ஓடினாள். கிழவியை இனியும் பிடித்துவைக்க முடியாது. கிழக்குப் பக்கமாய் பார்த்தாள். தொலைவில் தங்காவின் வீட்டு வாசலில் கூட்டம் தென்பட்டது. எடுப்பதற்கு ஆயத்தமாகிறார்கள். சங்கு ஊதும் சத்தம் கேட்கிறது. நடந்தால் இரண்டு நிமிடங்கள்தான். ஆனால் கிழவியை எப்படி அழைத்துப் போவது? விறுவிறுவென்று நடந்தாள்.

இழவு வீட்டிற்கு சற்று தள்ளி புங்கமரத்தடியில் துவைகல்லின் மீது புகைத்தபடி உட்கார்ந்திருந்தான் பொன்னுசாமி. சடங்குகள் தொடர்கின்றன. சம்பானின் குரல் ஒவ்வொரு முறையும் ஓங்கி ஒலிக்கிறது.

பொறந்தூட்டு பட்டு எடுத்தாங்க.”

கூட்டத்தில் எழும் சலசலப்பை உணர்ந்தவனாய் எழுந்து நிற்கிறான். எல்லோரும் அவனைப் பார்க்கிறார்கள்.

நேரமாச்சு வாங்க. எடுத்தாங்க.” மீண்டும் சம்பான்.

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்னு அப்பவே சொல்லிட்டேன். மறுக்கா எதுக்குடா நீ கூப்படறே?” பெருமாள் முறைத்தபடியே கத்தினான். “பொறந்தூடே கெடயாது பாத்துக்க. யாராச்சும் பட்டு போடறேன்னு பக்கத்துல வந்தா மரியாதை கெட்டுரும்.”

உருமாலையுடன் நின்ற பெத்தர் ராமசாமி கையுயர்த்தி அடக்கினார். “உங்களுக்குள்ள பிரச்சினை இருக்கலாம் பெருமாளு. அதுக்காக ஊர் பழக்கத்தை மாத்த முடியாதில்ல. என்னவோ சிரமப்பட்டு அவளும் போய் சேந்துட்டா. போற வழிக்கு நல்லபடியா அனுப்புவமே.”

பெருமாள் தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறினான். ஒருகணம் நிமிர்ந்து பார்த்தான். “அப்பிடி ஊர் வழக்கத்தோடதான் பண்ணணும்னா நீங்களே முடிச்சுக்குங்க. எனக்கு வேணாம்.” அருகில் நின்றவரை விலக்கியபடி வெளியே நகர்ந்தான்.

கூட்டம் சலசலத்தது. பொன்னான் தயங்கி நின்றான். வேட்டிமடியிலிருந்து பீடிக்கற்றையை எடுத்தான். உள்ளங்கையில் வைத்து உருட்டினான். விரல்கள் தன்னிச்சையாக பீடி ஒன்றை உருவின. தீப்பெட்டியை உரசிப் பற்றவைத்தவன் ஒருகணம் நிதானித்தான். வேட்டியை மடித்துக் கட்டியவன் அப்போதுதான் கனன்ற பீடியை காற்றில் சுண்டி எறிந்தான். கூட்டத்தின் அருகில் நடந்தவன் குரலை உயர்த்திக் கத்தினான்அவளே போயிட்டா. இனி என்னத்தடா இருக்குது. சும்மா கத்திட்டிருக்கே. நான் இங்க நிக்கறதுனாலதானே இத்தனை சத்தம் போடறே. நா போறம்ப்பா. இன்னிக்கோட எல்லாம் தீந்துச்சு. அவ்ளோதான்.”

பொன்னுசாமி மடித்துக் கட்டிய வேட்டியுடன் மேற்கில் நகரவும் பெத்தர் சம்பானுக்குக் கையைக் காட்டினார்.

பாருங்க. இன்னொன்னையும் சொல்லிர்றேன். அந்த வீட்டு வழியா பொணத்தைக் கொண்டுப் போக்குடாது. காலனி வழியா போனா போதும்.”

உன்னோட இஷ்டம்ப்பா. சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.”

பதறியடித்தபடி வீட்டுக்கு ஆராயி ஓடிவந்தபோது ஜந்தம்மா கட்டிலிலிருந்து இறங்கி வாசலுக்கு வந்திருந்தாள். முழங்காலுக்கு மேலாக புடவையைச் சுருட்டிக்கொண்டு தரையில் நகர்ந்தவளைக் கண்டதும் ஆராயி கத்தினாள். “என்னாத்தா பண்றே நீ?”

ஜந்தம்மா இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி இடுப்பை நகர்த்தினாள். குதிகால்கள் தரையில் தேய்ந்து மெல்ல நகர மூச்சு வாங்கியபடி நிமிர்ந்தாள். கணுக்கால் அருகே தோல் கிழிந்து ரத்தம் வடிந்தது. வேர்த்திருந்த உடல் கிடுகிடுத்தது. கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தவள் கைகளை கூப்பினாள். “தூக்கிட்டுப் போடி என்னை. அவ போறதுக்குள்ள ஒருதடவை பாக்கறேண்டி.”

ஆராயி ஆத்திரத்துடன் கத்தினாள். “என்னத்தைப் போயி பாக்கறே? ஒண்ணும் பாக்க முடியாது. அந்த செட்டியாரு அவள காலனி வழியாதான் கொண்டு போகணும்னு சொல்லிட்டாரு. பொறந்தூட்டு பட்டும் வேண்டான்னுட்டாரு. என்னத்த நீ போயி பாக்கறே?” குமுறி அழுதவளை பார்த்துக்கொண்டிருந்த கிழவி ஆவேசத்துடன் உடலை காற்றில் தூக்கிவீசியது போல முன்னகர்ந்தாள். பெரும் வெறியுடன் இடுப்பைத் தரையில் தேய்த்தபடியே நகர்ந்தாள். மூன்றே எட்டில் தெருவை அடைந்தபோது கால்களில் ரத்தம் சொட்டியது. மார்புச் சேலை மடியில் கிடக்க பாவுணத்தும் கட்டாந்தரையில் உடலைத் தேய்த்துத் தாவினாள். நைந்துபோன சேலை கந்தலாகிக் கிழிந்தது. தொடைகளின் தோல் உரிந்து மண் அப்பியது. எதையும் அவள் பொருட்படுத்தவில்லை. ஒரே மூச்சாக கிழக்கை நோக்கி அவள் உயிர் தவ்வியது. ஓடிவந்த ஆராயி அவள் தோளைப் பிடித்துத் தூக்க முற்பட்டாள். ஜந்தம்மாவின் வேகமும் ஆவேசமும் தடுமாறச் செய்தன. தோளைப் பிடித்தபடியே அவளோடு நகர்ந்தாள்.

சவுண்டிச் சத்தம் கேட்ட நொடியில் தலை நிமிர்த்திப் பார்த்தாள். மூச்சிறைத்தது. தெளிவாக எதுவும் புலப்படவில்லை. கண்களை இடுக்கியபடி கூர்ந்து பார்த்தாள். தொலைவிலா அருகிலா அவளுக்குத் தெரியவில்லை. கால்கள் விரைந்து நெருங்குகின்றன. தலையை இன்னும் சற்று உயர்த்தினாள். வெயில் கண்களை கூசின. கிழிந்து ரத்தம் சொட்டும் வலதுகையை நெற்றியில் தாங்கிப் பார்த்தாள். ஆமாம். அவளைத்தான் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். “அய்யோ, தங்கா. இருடீ. கண்ணு. வந்துட்டேண்டி.” கத்தி அழுதபடியே மண்ணில் உடல்தேய புரண்டு நகர்ந்தாள்.

காலனி வீதியில் அவர்கள் திரும்பியதைக் கண்டதும் ஆராயி மாரில் அடித்தபடியே ஓடினாள். ஜந்தம்மா தளராது தரையில் உரைந்தபடியே நகர்ந்தாள். ரத்தமோ வலியோ எரிச்சலோ எதுவும் அவளுக்கு உறைக்கவில்லை. சவுண்டிச் சத்தம் திசைமாறியதை உணர்ந்த கணத்தில் ஓய்ந்து நிதானித்தாள். காற்றில் கலந்திருந்த பூக்களின் வாசனையை நுகர்ந்தாள்.

ச்சோ. கெழவிக்கு ஒருக்கா மூஞ்சியக் காட்டிட்டு தூக்கினாத்தான் என்ன இவங்களுக்கு?”

நீ வேற. இந்த வூட்டு வழியாவே தூக்கிட்டுப் போக்குடாதுங்கறான் அவன். பாவம். இப்பிடியே குண்டிய தேச்சுட்டு வந்துருச்சு இத்தன தூரம். ஏ ஆராயி. நீ என்னடி பண்ணிட்டு இருக்கே?”

நா என்ன பண்றதுங்க. ஆத்தாவை புடிக்கவே முடியலை.”

ஆத்தா. நீ எங்க போறே? பொணத்தை அந்தப் பக்கமா திருப்பிட்டுப் போயிட்டாங்க. ஒனக்குங் குடுத்து வெக்கல. ஒம்புள்ளைக்கும் குடுத்து வெக்கலே.”

தளர்ந்த உடல் விலுக்கென விசையுடன் மீண்டது. உதட்டைக் கடித்தபடி கைகளை ஊன்றி எகிறினாள். உடல் மொத்தமும் உயர்ந்து முன்னால் நகர்ந்தது. மிச்ச உயிர் முழுவதும் விசையாகி அவளை நகர்த்த தலையைக் குனிந்தபடி தாவி வந்தாள். காலனி வீதியும் வீட்டுத் தெருவும் சந்திக்கும் இடத்தை அடைந்ததும் திரும்பிப் பார்த்தாள். சவுண்டி சத்தத்துடன் பிணம் அவளை விட்டு விலகிப் போனபடியே இருந்தது. “போயிட்டயாடி. இந்த பாவி மொகத்தப் பாக்கக்கூடாதுன்னு போயிட்டியா. தங்கோ…” தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

சோர்ந்த உடல் தடுமாறிச் சரிய கைகளை ஊன்றினாள். தரையில் கிடந்த பூக்கள் அவள் கையில் பட்டது. நடுங்கும் கைகளால் தடவி எடுத்தாள். அவசர அவசரமாக இரண்டு கைகளையும் தரையில் துழாவி பூக்களைச் சேர்த்தாள்.

ஏ ஆராயி…” கூவி அழைத்தாள். ஆராயி அருகில் வந்து குனிந்தாள். கந்தல் சேலை தோல் கிழிந்து ரத்தம் சொட்டும் அவளது உடலை கைவிட்டிருந்தது

ஏய்போத்தாளை குடுறீ.” சன்னதம் வந்தவள்போல கட்டளையிட்டாள். ஆராயி சுருக்குப் பையிலிருந்து ஒருதுண்டு போத்தாளையை எடுத்தாள். பூக்களுடன் நீட்டிய கையில் புகையிலைத் துண்டை வைத்தாள்.

கைகளை உயர்த்தி பூக்களோடு சேர்த்து புகையிலைத் துண்டையும் காற்றில் எறிந்தாள்.

போயிட்டு வாடீம்மா…”

0

5 Replies to “கடைவழி”

  1. மனித இனத்தில் மட்டும் தாய்மையின் பாசத்தை சாகும் வரை இருக்கும்படி சபித்துவிட்டிருக்கிறான் இறைவன். சொல்லப்படாமல் மண்ணில் புதைந்து போகும் சோகத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

  2. கோபால் சார்,
    அட்டகாசம்.
    கதையோடு இயல்பாய் ஒன்றிப்போனேன். உணர்வுகளிலிருந்து மீண்டுவர வெகு நேரமானது.
    நன்றியும், அன்பும்
    வெங்கி (கென்யா)

  3. படிப்பதில் சோம்பேறியான நான், உங்களது `கடைவழி`யைக் கொஞ்சம் படித்துப்பார்ப்போம் என ஆரம்பித்து நிறுத்த இயலாது முடித்தேன். ஏழையின் சோகத்திற்கு எல்லையில்லை.

  4. அவலச்சுவை ததும்பி பிரவாகமெடுக்கும் கதை. நுண் விவரணை, நுண் அவதானிப்பு, நுண்ணுணர்வு என அனைத்தும் அதனதன் உச்சத்தை இக்கதையில் பெற்றிருக்கின்றன.

    வாசிக்கும் எக்குணத்தவரையும் மனிதனாக்கிவிடும் வல்லமை இக்கதைக்கு உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.