ஸெரெங்க்கெட்டி – நாள் ஐந்து

நல்ல தூக்கம் கழிந்து, காலை மீண்டும் உற்சாகமாகக் கிளம்பினோம்.. சிங்கமும், வேட்டையும் பார்த்து விட்ட திருப்தியும் சேர்ந்து கொண்டது.  இவ்விடுதி, ஸெரெங்கெட்டியின் தெற்கெல்லை.  மீண்டும், வந்த அவ்ழியே கொஞ்சம் சென்று, சிங்கங்களையும், யானைகளையும் பார்க்கலாம் என்றார் ஜெர்ரி.
விடுதியின் எல்லையிலேயே பெரும் பபூன் கூட்டமொன்று சாலையில் நடந்து கொண்டிருந்தது. வண்டியை மெல்ல ஓட்டி, நேற்று சிங்கங்கள் அமர்ந்திருந்த மரத்திற்கடியில் சென்று நிறுத்தினார். சற்று தொலைவில், மாடுமுக மான்களும், வரிக்குதிரைகளும், மேயாமல். மரத்தை நோக்கிக் கொண்டிருந்தன. ”காலையிலேயே வேட்டை முடிந்திருக்கிறது. இங்குதான் எங்கேயோ..” என்று சொல்லிக் கொண்டே, சஃபாரி வாகன வண்டித்தடங்களில், புல்லுக்குள் வாகனத்தைச்  செலுத்தினார் ஜெர்ரி. ஒன்றும் தென்படவில்லை. நான் வண்டியின் மேலேறி நோக்கினேன்..  ம்ஹூம்.. இன்று கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
 
serengeti-elephants
 
அங்கிருந்து கிளம்பி, யானைகள் மேயும் குன்றருகில் சென்றோம். யானைகள் சிறு சிறு குழுவாக – 3-5 யானைகள் வரை ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்தன. எத்தனை குழுக்கள் என நோக்கத் துவங்கிய போது – கண்ணுக்கெட்டிய தூரம் வரை யானைகள்தாம். சிறு சிறு கூட்டங்களாக.
19 ஆம் நூற்றாண்டில், தந்த வியாபாரம் மிக உச்சத்தில் இருந்த போது, இந்தியா மிகப் பெரும் தந்தச் சந்தையாக இருந்தது. ஸான்ஸிபாரில் இருந்து, அரபி வணிகர்கள் ஸெரெங்கெட்டி வந்து, காசு கொடுத்து தந்தம் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஸெரெங்கெட்டியில் யானைகளே இல்லாமல் ஆகின. வணிகமும் நின்றது. பின்பு, 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், மீண்டும் யானைகள் பெருகி, இப்போது கிட்டத்தட்ட 2500-3000 யானைகள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது
தான்ஸானியா உலகின் மிக அதிகமான யானைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. தந்த வேட்டைக்காக, உலகில் அதிக யானைகளை இழந்த நாடு என்றும் சொல்லலாம்.   2009 ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 1 லட்சம் யானைகள் இருந்தன. இன்று வெறும் 40000 யானைகளே மிஞ்சியுள்ளன என்கின்றன அரசுப் புள்ளி விவரங்கள். இவை பெரும்பாலும் தான்ஸானியாவின் மற்ற 15 தேசியப் பூங்காக்களிலும், வனங்களிலும் அதிக வசிக்கின்றன.  சராசரியாக, ஒரு நாளைக்கு 30 யானைகள் தான்ஸானியாவில் தந்தத்துக்காகக் கொல்லப்பட்டிருகின்றன.
இந்தத் தந்த வியாபாரம் காரணமாக, யானைகள் பல ஆஃபிரிக்க நாடுகளான கென்யா, போட்ஸ்வானா, உகாண்டா, கானா, காங்கோ முதலான நாடுகளில் மிக அதிகமாக யானைகள் வேட்டையாடப்படுகின்றன. இதன் முக்கியச் சந்தை சீனம். சீனத்தில் மட்டும், கடந்த 10 ஆண்டுகளில் தந்தத்தின் விலைமதிப்பு மும்மடங்கு கூடியிருக்கிறது என்கிறார்கள். சமீபத்தில், இந்த வியாபாரத்தை ஒழிக்க, கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப் பட்ட 105 டன் எடையுள்ள தந்தங்களை, கென்ய அரசு எரியூட்டியது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 700 கோடி ஆகும். இது, நுகர்வோர் இல்லங்களை அடையும் போது, மதிப்பு 2000 கோடிக்கும் மேல் ஆகிறது. இதற்கு எதிரான சூழியல் போராட்டங்கள் காரணமாக, 1990 ஆண்டு முதல் தந்த வணிகம் தடை செய்யப்பட்டுள்ளது.  அப்படி இப்படி என சாக்குப் போக்கு சொல்லி வந்த சீனமும், 2016 ஆண்டுக்குப் பின், தந்த வணிகத்துக்கான தடையை அதிகரித்தது. இன்று உலகெங்கும் நடக்கும் தந்த வணிகம் சட்டத்துக்குப் புறம்பானது.
சற்று நேரம் பார்த்துவிட்டு, பெருமூச்சுடன் கிளம்பினோம். காலை பதினோரு மணி இருக்கும்.. இன்னும் மூன்று மணி நேரப்பயணம் – நாம் பயணம் துவங்கிய வாயிலை அடைய என்றார் ஜெர்ரி.. முடிவிலாப் புல்வெளியின் மீதொரு நெடும்பயணம் துவங்கியது.
வழியில், தன் மந்தையிலிருந்து தவறிய மாடுமுக மானொன்று தென்பட்டது. வாகனத்தின் சத்தம் கேட்டதும், இலக்கின்றி அங்குமிங்கும் ஓடியது. இப்படி வழி தவறும் மான்கள், சரியாக உணவுண்ணாமல், அங்குமிங்கும் ஓடி வாடி இறக்கும். இல்லையெனில், ஓநாய்க்கோ, சிறுத்தைக்கோ, சிங்கத்துக்கோ இரையாகும் என்றார் ஜெர்ரி. இயற்கையின் விதிகள் கருணையற்றவை எனினும், ஒரு யேசு வந்தாலென்ன எனத் தோன்றியது.
தூக்கமும் விழிப்புமாய் மூன்று மணி நேரம் கடந்து ஸெரெங்கெட்டியின் வாயிலை அடைந்தோம்.  பசியெடுக்க, வாயிலில் இருந்த உணவுண்ணும் இடத்தை அடைந்து, நெகிழ் கலனைத் திறந்து உண்ணத் துவங்கினோம். அருகில், விலங்குகளுக்கு உணவிட வேண்டாம் என வலியுறுத்தும் பலகையிம் மீதொரு கழுகு அமர்ந்திருந்தது.

ஸெரெங்கெட்டி – நாள் ஐந்து..

சொல்ல மறந்துவிட்டேன்.. இன்றைய புல்வெளிப்பயணத்தில், ஓரிடத்தில்  பாறைகளடர்ந்த ஒரு குன்றைக் கடந்து வந்தோம். அப்போதுதான், லயன் கிங் படம் நினைவுக்கு வந்தது.. அந்த ஹாலிவுட் திரைப்படம், ஸெரெங்கெட்டி காட்டின் பாதிப்பில் உருவாக்கப்பட்டது. ஸிம்பா (ஸ்வாஹிலி மொழியில் சிங்கம் என்று பொருள்படும். சிங்கம் என்னும் சொல்லின் வேர்) என்னும் மகன் பிறந்த மகிழ்வைக் கொண்டாடும் வகையில், முஃபாஸா என்னும் சிங்க அரசன், ஸிம்பாவை, ஒரு பாறையின் மீது நின்று தூக்கி தன் குடிகளான மற்ற விலங்குகளுக்கு காண்பிக்கும்.. அப்படி ஒரு குன்றாகத் தென்பட்டது அந்தக் குன்று.
அப்படத்தின் இன்னொரு காட்சியில், மாடுமுக மான்களின் மூர்க்கமான புலம் பெயர்க் கூட்ட நெரிசலில், அடிபட்டு முஃபாஸா இறந்து போகும் காட்சியும் உண்டு.
மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம். ‘இப்போது ஒரு மஸாய் கிராமத்துக்குச் செல்கிறோம்’  என அறிவித்தார் ஜெர்ரி.
வாயிலை விட்டு, ஒரு பத்து நிமிடப் பயணத்துக்குப் பின் வலதுபுறம் தென்பட்டது மஸாய்  கிராமம். சாலையில் இருந்து பிரியும் சிறு வழியின் முன்பாக நின்றிருந்தார் ஒரு மஸாய் மனிதர். எங்கள் வண்டி திரும்பியதும், அவர் முகம் மலர்ந்தது.  வண்டியின் பின்னே வேகமாக ஓடி வந்தார். வண்டி வருவதைப் பார்த்து விட்டு, ஒரு இளைஞர் மாராக் குடியிருப்பில் இருந்து வாகனம் நோக்கி வந்தார்.  “கரிபூ முஸேர்” என்றார் ஜெர்ரியைப் பார்த்து. முஸேர் என்றால், முதலாளி என அர்த்தம். இது ஒரு வகை வணிக உறவு.  மஸாய் கிராமங்களை அறிந்து கொள்ள 70 ஆயிரம் ஷில்லிங் (2000+ ரூபாய்) கட்டணம். வாங்கித் தன் பையில் வைத்துக் கொண்டு, குடில்களை நோக்கி க் குரல் கொடுத்தார். உள்ளிருந்து ஆண்களும் பெண்களும் வந்து கூடினர்.
அவர்கள் அருணையும், மதுராவையும் அழைத்துச் சென்று, ஆண்களும் பெண்களுமாய்த் தனித்தனியே நின்று அவர்களின் பாடலொன்றைப் பாடி ஆடத் துவங்கினார்கள். அருண் இயல்பாக ஆடினான். அவன் சென்னைக் கண்ணம்மா பேட்டை மயான  நடன நிபுணன்.
 
469
 
பின், தனியே மஸாய் ஆண்களின் நடனத்தின் ஒரு பகுதியான எம்பிக் குதிப்பதை காட்டினார்கள்.  என்னைப் போன்ற அதி உன்னதக் கலாரசிகனின் பார்வை எப்படியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.  சிலர் அதில் பெரிய மனிதனாகும் சடங்கின் ஒரு பகுதியாக, வித்தியாசமான வஸ்துக்களைக் கட்டியிருந்தார்கள்.
அது முடிந்ததும், எங்களை அழைத்து வந்தவர், இப்போது உங்களுக்கு ஒரு மஸாய் வீட்டைக் காட்டுகிறேன் என்று அழைத்தார். அருணை அழைத்து, ஒரு புகைப்படம் எடுங்கள் என போஸ் கொடுத்தார்.
அவர்கள் வீடு, மினிமலிஸம் என்னு இஸத்துக்கு மிக அற்புதமான எடுத்துக்காட்டு. இரண்டு வயது வந்தவர்கள் ஒருக்களித்து மட்டுமெ படுக்க முடியும் ஒரு படுக்கை. குழந்தைகள் – கட்டிலுக்குக் கீழ் தான். படுக்கை முடியும் இடத்தில் ஒரு உட்காரும் மனை – அதற்கடுத்து அடுப்பு. அவ்வளவுதான் வீடு.  மும்பை தாராவிப்பகுதியின் சிங்கிள் ரூம் போலப் பெரியது. தாராவிப் பகுதிக் கலாச்சாரம் போலவே, டாய்லட் எங்கே எனக் கேட்கக் கூடாது போலும் என நினைத்துக் கொண்டேன்.
அவர்கள் உணவென்பது பெரும்பாலும் இறைச்சி. கொஞ்சம் மக்காச் சோளம். இப்போது மலேசியாவின் பாமாயில்.. வளர்க்கும் மாடுகள் மற்றும் கோழிகள். வனவிலங்குகளை உண்பதில்லை.
’வாருங்கள் எங்கள் சிறார் பள்ளியைக் காண்பிக்கிறேன்..’ என அழைத்துச் சென்றார் நண்பர். அது மஸாய் குடிலை விட்டு, ஒரு 100 அடி தள்ளியிருந்தது.. உள்ளே சென்றதும், உள்ளூர் வாத்தியார் நம்மை வரவேற்று, சிறார்களைப் பாடம் சொல்லுமாறு பணித்தார். அவர்களும் அசிரத்தையாக, ‘ ஏபிஸிடி ஒங்கொப்பன் தாடி” ரேஞ்சுக்கு ஏதோ பாட்டுப் படித்தார்கள். அவர்களின் அந்தப் பாசாங்குகளற்ற, பயமற்ற முகங்கள் கொள்ளை அழகு.
அதற்கு ஒரு பத்தாயிரம் ஷில்லிங் நன்கொடையளித்து விட்டு, வெளியில் வந்தோம். ‘கலைப்பொருட்கள் வாங்கலாமே’ என்றார். எல்லாம் ஸோத்பிஸ் ரேஞ்ச் விலை.  நமக்குக் கட்டுபடியாகென்றேன்.. உடனே, நம்ம ரேஞ்சுக்கு இறங்கி வந்து, ஒரு முப்பதினாயிரம் ஷில்லிங் வரை ஒரு பில் போட்டார். ஆக மொத்தம் 1.1 ல்ட்சம் ஷில்லிங். 3500 ரூபாய். போலாம் ரைட் எனக் கிளம்பினோம்.

ஸெரெங்கெட்டி – நாள் ஐந்து மாலை.

மஸாய் கிராம விஸிட் முடிந்து கிளம்பினோம்.. இனி நேரே ங்கோரொங்கோரொ எரிமலை வாய் விளிம்பில் இருக்கும் ஸெரினா விடுதிக்குச் செல்ல வேண்டியதுதான்.. வந்த வழியே திரும்புகிறோம்.. தான்ஸானியா நாட்டில் பழங்குடிக் கலாச்சாரம் குறைந்து, பெரு மதங்களான கிறித்துவமும், இஸ்லாமும் ஆதிக்கம் செலுத்துகின்றன.  மஸாய் வீரர்கள் ஒரு விதிவிலக்கு. இவர்கள் தான்ஸானியாவின் பழங்குடியினர் அல்ல. வட கென்யாவில் இருந்து தான்ஸானியா வரை 19 ஆம் நூற்றாண்டில் வந்து பரவிய ஆயர்கள். இவர்கள் செல்வம் பசுக்களால் அளக்கப்படுகிறது. அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கும் இங்கே மதிப்பு அதிகம். தந்தை வழிச் சமூகம்.  முன்காலத்தில், சிங்கத்தைக் கொல்வது வீரத்தின் மதிப்பு எனக் கருதப்பட்டது. இப்போது, சிங்க வேட்டை தடை செய்யப்பட்டுவிட்டது. ஒரு வேளை சிங்கம், மஸாய்களின் மாடுகளைக் கொன்று விட்டாலும், சிங்கத்தைத் தாக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மிக எளிமையான வாழ்க்கை; வனவிலங்குகளோடு இயைந்து வாழும் திறன் போன்றவை இவர்களின் சிறப்பியல்புகள்.  ஸெரெங்கெட்டியின் வாயிலில் இருந்து, ங்கொரோங்கோரோ பள்ளத்தாக்கு விளிம்பு வரை, சிறு சிறு கிராமங்களில் அதிகம் வசிக்கிறார்கள்.
மூன்று மணி நேரம் தடதடத்து விட்டு, சஃபாரி வாகனம் மெல்ல மலையேரத் துவங்கியது. மாலை நேரத்தில், மலைமேனி முழுதும் பரவியிருக்கும் மஞ்சள் பூ மீண்டும் கண்ணில் பட்டது. பார்ப்பதற்கு நெருஞ்சி முள் செடி போலிருந்தது. வாகனத்தை நிறுத்திப் பார்த்தோம். நெருஞ்சி அல்ல.  இது வேறு.  ஸெரெங்கெட்டிக்கான சாலை அமைக்க, சரளை மண் மன்யாராப் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட போது, இதுவும் நுழைந்துவிட்டது என்றார் ஜெர்ரி. இதை, மாடுகளும் மான்களும் மேய்வதில்லை. இவை அதிகரிக்கும் போது, புல் வளர்வது தடைபடுகிறது. எனவே, இது ஒரு பெரும் பிரச்சினை என்றார் அவர்.
மாலை மங்கு முன்பு ஸெரினா விடுதியை அடைந்து விட்டோம். கற்களால் கட்டப்பட்ட விடுதி. பெங்களூரின் பல கட்டிடங்கள் – கல்லூரிகள் கருங்கற்களால் கட்டப்பட்டவை. அது கட்டிடங்களுக்கு பெரும் கம்பீரத்தைக் கொடுக்கிறது.
இரண்டாவது மாடியில் உள்ள அறையின் முற்றத்தில் நின்றதும், ங்கொரொங்கோரோ எரிமலைவாய் தெரிந்தது. 20 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட எரிமலை வாய் அது. இன்று அது தூர்ந்து, நீர் நிலைகளும், புல்வெளியும் நிறைந்த பரப்பாக உள்ளது. நாளைக் காலை, நாங்கள், இறங்கி, அதன் கீழ் தளத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும். முற்றத்தின் சில் காற்று உடலை நடுக்கியது.. குளிர் தாக்கத் துவங்கியது.
கீழே இறங்கி, விடுதிக்கு வெளியில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த மஸாய் குழந்தைகள் அருகில் செல்லலாம் என யோசித்து, ஒரு வழியே போக முயன்றோம்.. கண்ணெதிரே நண்பர் ஒருவர் மிகத் தீவிரமாக மேய்ந்து கொண்டிருந்தார். எங்களை நேர் எதிரில் கண்டதும் கலங்காமல் நின்றார். நாங்கள் தான் ஒரு விநாடி கலங்கினோம்.
வெளியே செல்லும் எண்ணத்தை உடனே கைவிட்டு, அருகிருந்த உணவு விடுதிக்குள் சென்றோம். விடுதியின் ஜன்னலில் இருந்து பார்க்கும் போது, எரிமலை வாய் தெரிவதும், மலைவிளிம்பில் உள்ள மரங்களும், பூக்களும் என மிக அழகாக இருந்தது. விஜி ஏதேனும் உண்ணலாம் என யோசித்தார். குளிர் நடுக்கம் நிற்க, நான் மதுவை யோசித்தேன். உணவறையின் நடுவில் ஒரு தணல் அடுப்பு வைத்திருந்தார்கள்.  
தணலும், மதுவும் மாமிசமும் என அந்த மாலை அழகாய்ப் போனது. இரவுணவை முடித்துக் கொண்டு, நடுங்கிக் கொண்டே போய் படுக்கையின் ரஜாயை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினோம். காலை 5:30 க்கு அலாரம் அடித்த பின் எழுந்தால், குளிக்க வேண்டுமா என்னும் எண்ணத்தை குளிர் மிரட்டியது. நடுங்கிக் கொண்டே குளித்துக் கிளம்பினோம்.
காலை மலைமுகட்டிலிருந்து எரிமலை வாயின் தளம் நோக்கி இறங்கும் போது, மூடுபனி. பாலுமகேந்திரா நினைவுக்கு வந்தார்.. கீழே இறங்கியதும், முக்கால் வாசி எரிமலை வாயை மேகம் முடியிருக்க, திறந்திருக்கும் இடம் வழியாகச் வெளிச்சம் கொட்டிக் கொண்டிருந்தது. என்னிடம் இருந்த ஸெல் போன் கேமிராவில் எடுத்தேன். அதன் முழு அழகும் இல்லை எனினும் –நான் சொல்வதைக் கொஞ்சம் உணர முடியும்.
எங்கும் நிறைப் பரப்ரம்மம் போல, மாடுமுக மான்கள் முதலில் தென்பட்டன.  வாகனம் தளத்தைத் தொட்டவுடன், கடிகார எதிர்வரிசையில் வாகனத்தைச் செலுத்தினார் ஜெர்ரி..  ஸெரெங்கெட்டிக்கும், ங்கொரொங்கோரோ வுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவெனில், ஸெரெங்கெட்டி, ஒரு பரந்த வெளி. இது, 350 கிலோமீட்டர் பரப்புள்ள ஒரு வட்டச் சிறை. எல்லா மிருகங்களும் இங்கே அருகருகே பார்க்கக் கிடைக்கும். பொதுவாக இங்குள்ள மிருகங்கள், எரிமலை மேடேறி வெளியே செல்வதில்லை. எனவே இங்கிருக்கும் மாடுமுக மான்கள் புலம் பெயர்வதில்லை.
நாங்கள் பார்க்க வேண்டிய முதல் காட்சியை உடனே கண்டோம். மிஸ்டர் சிங்கம், காலையில் புல்வெளியில் ஜாலியாகப் படுத்துக் கொண்டு வெயில் காய்ந்து கொண்டிருந்தார்.. அவரில் இருந்து 50 அடி தூரத்தில அம்மை படுத்திருந்தார். இருவருக்குமிடையில், ஒரு முக்கோணம் போல புதர் இருந்தது..அதில் சிங்கக் குருளைகள் விளையாடிக் கொண்டிருந்தன. இவற்றிலிருந்து  சற்று தூரத்தில் தாம்ஸன்’ஸ் கஜல் என்னும் குறு மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன.  காலை உணவுக்கு வேண்டுமெனில், எழுந்து பாய்ந்தால் ரெடியாக மான்கள் என நினைத்தேன். ஆனால், அது தவறு என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.
ஏதாவது செய்வார்களா எனக் கொஞ்ச  நேரம் அவதானித்தோம். அவர்கள் வெயில் காயும் மும்முரத்தில் இருந்தார்கள்.. “ஆக்‌ஷன்” என்றதும் கிளம்பிப் போய் ஒரு தாம்ஸன் கஜலைப் போட்டு தள்ளக் கூடாதா?? என்ன சிங்கம்.  ம்ஹூம்.. அவை மசிவதாயில்லை. ‘கெளம்பலாம் ஜெர்ரி’ என்று கிளம்பினோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.