குறிப்புகளின் தொடர்ச்சி..
25. கென்யாவின் முதல் ஜனாதிபதி ஜோமோ கென்யாட்டாவின் (கென்யாவின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்; தற்போதைய நைரோபி பன்னாட்டு விமான நிலையம் இவர் பெயரில்தான்) ஒரு வாசகம் இங்கு மிகவும் பிரபலம் – “அவர்கள் வந்தபோது எங்களிடம் நிலங்களும், அவர்களிடம் பைபிளும் இருந்தன; கண்களை மூடி எப்படிப் பிரார்த்தனை செய்வது என்று சொல்லிக் கொடுத்தார்கள்; நாங்கள் கண் திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிளும் அவர்களிடம் எங்களின் நிலங்களும் இருந்தன!”
26. எய்ட்ஸை விட கேன்சருக்கு அதிகம் பயப்படுகிறார்கள்
27. உள்ளூரில் எடுக்கும் திரைப்படங்கள் மிக மிகக் குறைவு (அநேகமாக ஒன்றிரண்டு); நைஜீரியத் திரைப்படங்கள் மிகவும் பிரபலம்
28. கடைசி ஈமக் கிரியைகள் (Funeral), இறந்த பின், வாரம் அல்லது பத்து நாள் கழித்து, சர்ச்சில் கேட்டு, தேதி குறித்து, பத்திரிகை அடித்து, சுற்றம், நண்பர்கள் அனைவரையும் அழைத்து நடத்துகிறார்கள்; மிகவும் செலவு பிடிக்கும் காரியம் (எங்கள் நிறுவனத்தில் “Funeral Fund” என்று ஒன்று உண்டு – ஊழியர்களுக்கு); இறந்தபின், கடைக்காரிய நாள் வரை, உடல் பாதுகாக்க, நாள் வாடகை அமைப்புகள் இருக்கின்றன
29. உள்ளூர் மக்களின் உணவு முறை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று; மக்காச்சோள மாவில் களி (ஓசூர் பகுதியின் “ராகி முத்தா” (ராகிக் களி உருண்டை) போல), வேக வைத்த அல்லது சுட்ட மாட்டிறைச்சி (மசாலா சேர்க்காத!), சுகுமா எனப்படும் கீரை (நம்ம ஸ்பினாச் மாதிரி), சிவப்பு பீன்ஸ், பாசிப் பயறு, வேக வைத்த உருளைக் கிழங்கும், மக்காச் சோளமும். மிளகாயும், மசாலாவும் கொஞ்சமும் உள்ளூர்க்காரர்களுக்கு ஒத்துக் கொள்ளாது; ஒரு முறை, ஒரு உள்ளூர் நண்பரை, பகலுணவிற்கு அழைத்து, சாம்பாரைக் கொஞ்சமாய் சுவைத்துப் பார்க்கச் சொன்னோம்; மிளகாய் போடாத (மல்லிகா மிளகாய் உபயோகிப்பதை நிறுத்தி ஆறேழு வருடங்களிருக்கும்) அந்த சாம்பார் சாப்பிட்டதற்கே, மூக்கிலும், கண்களிலும் நீர் அவருக்கு!; “எப்படிச் சாப்பிடுகிறீர்கள்?” என்றார்!; சமையலில் எண்ணெய் உபயோகிப்பதும் குறைவு. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இயற்கை உணவுகள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள்; அவர்கள் வந்தபின் உணவைச் சமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் (மக்காச்சோளம் பயிரிட ஆரம்பித்தது ஆங்கிலேயர்களின் கால்நடைகளுக்காய்!); இப்போது கடந்த நூறு ஆண்டுகளின் இந்தியர்களின் கலப்பால், மசாலாக்கள் புழங்க ஆரம்பித்திருக்கின்றன. (Nakuru-ல் வீட்டிற்கு காய்கறி விற்க வரும் உள்ளூர் பெண்கள் சரளமாய் குஜராத்தி பேசுகிறார்கள்!)
30. நகரங்கள் தவிர, மற்ற உள் பிரதேசங்களிலும், பண்ணைகளிலும், கிராமங்களிலும், மின்கம்பங்களுக்கு பெரும்பாலும் மரத்தூண்கள்தான். மின்சார உற்பத்தி மிகுதியாக தண்ணீரிலிருந்து; கொஞ்சமாய் தெர்மல், ஜியோதெர்மல் மற்றும் காற்றாலை. அணு உலை இதுவரை கிடையாது; 2017-ல் அணு உலை அமைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவாக மின்வெட்டு கிடையாது
31. உட்பகுதி கிராமங்களுக்கு சரியான சாலை மற்றும் மின் வசதி கிடையாது
32. சந்திப்புகளின் போது கைகுலுக்கி வணக்கம் சொல்வது (ஆண், பெண் இருவருக்கும்) வழக்கம்; முன்பின் அறிமுகமில்லாவிட்டாலும், ஒரு இடத்திற்குச் செல்லும்போது, அங்கிருக்கும் அனைவருடனும் கைகுலுக்கி வணக்கங்கள் சொல்வது மரபு. இரண்டு வருட கென்ய வாசத்திற்குப் பிறகு, ஒரு முறை விடுமுறையில் கோவை சென்றிருந்தபோது, இளங்கலை உடன்முடித்த, சில நண்பர்கள் நண்பிகள், குடும்பத்தோடு, இரவு உணவிற்குச் சந்தித்தோம். ஹலோ சொல்லிக் கைகொடுக்க மஹாவும், சரஸ்வதியும் சிரித்துக் கொண்டே கைகுலுக்கினார்கள்; எதற்குச் சிரிக்கிறார்கள் என்று கணநேரம் யோசிக்க, மல்லிகா காதில் கிசுகிசுத்த பிறகுதான் சுதாரித்தேன்.
33. மும்பையில் உடன் வேலை செய்த நண்பர், இங்கு கென்யாவில் Thika – வில், குடும்பத்துடன் கடந்த ஐந்து வருடங்களாய் இருக்கிறார். நான்கு வயது பெண், அருகில் ஒரு International பள்ளியில், Nursery வகுப்பு. நண்பருக்கு ஒரு கேள்வி/வருத்தம் – கென்யர்களிடமும், உள்ளூர் ஆங்கிலேயர்களிடமும் சகஜமாய் வணக்கம் சொல்லி, அறிமுகம் செய்துகொண்டு உரையாடுகிறது; இந்தியர்களைப் பார்த்தால், பேச மிகுந்த தயக்கமும், தாமதமும் காட்டுகிறது! (கவனித்து ஆராய வேண்டிய விஷயம்)
34. ஆழ்துளைக் குழாய் அமைக்கும் நிறுவனங்களில் பாதி, தென்னிந்தியர்கள்; ஆந்திரா, தமிழ்நாடு (குறிப்பாய் சேலம், ராசிபுரம்)
35. கென்யாவின் மலர் ஏற்றுமதி குறித்து மிகச்சிறிதாய் a. மலரும், காய்கறி ஏற்றுமதியும், மிக முக்கிய அந்நிய வருவாய். கொய்மலர் (Cutflowers) வளர்ப்புக்கு மிகச் சாதகமான காலநிலை b. மலர் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் – ஹாலந்து, ஆஸ்ட்ரேலியா, ருஷ்யா, அரபு நாடுகள், பிரிட்டன், டர்க்கி மற்றும் அமெரிக்கா. (எங்கள் நிறுவனத்தின் 90 விழுக்காடு ஏற்றுமதி ருஷ்யாவிற்கு – இரண்டு வருடங்கள் முன்புவரை c. ஏற்றுமதி செய்யப்படும் மலர்கள் – ரோஜா (Spray and Standard), கார்னேசன்ஸ் (Spray and Standard), லில்லீஸ், கிரைசாந்திமம்ஸ், ஜிப்ஸோபில்லாஸ், ஜெர்பேராஸ் மற்றும் பலவகை Ornamental fillers d. காய்கறி ஏற்றுமதியில் முக்கியமாய் ஃப்ரென்ச் பீன்ஸ், கோஸ், உருளை, கேரட்.. e. பழ ஏற்றுமதியும் உண்டு f. மலர் – வருட முழுதும் ஏற்றுமதி செய்தாலும், முக்கிய மாதங்கள் (விலை அதிகம் கிடைக்கும்) – February (Valentines’ day), March (Russian Women’s day), December (Christmas), September (Russian Education day)
36. முக்கிய சாலைகள் பரவாயில்லை; காரில் மணிக்கு 120 கிமீ விரைவு பிரச்சனை இல்லை; ஆனால் 80 க்கு மேல் போனால், போலீஸிடம் மாட்டினால் அபராதம்/லஞ்சம் உண்டு.
37. நைரோபி உள்ளில் ட்ராஃபிக் மிக அதிகம்; சமயத்தில், மாட்டினால் 15 நிமிட பொருள் வாங்குவதற்கு, ஒன்றிரண்டு மணிநேரம் சாலையில் கார்கள் நகர காத்திருக்க நேரிடும்.
38. எனக்கு இந்த ஐந்து வருடங்களில், உள்ளூர் உடைகளில் அப்படி ஒன்றும் வண்ண வித்தியாசம் தெரியவில்லை (கென்யா தவிர மற்ற ஆப்ரிக்க நாடுகள் இன்னும் பயணிக்கவில்லை; கென்யாவிலும் இன்னும் வடக்கிலும், மேற்கிலும் செல்லவில்லை). உடை நிறங்கள் பொதுவானவைதான்; உடைகள் நம்மூரைவிட விலை அதிகம்; உள்ளூர் கடைகளிலும், ஃப்ளாட்பாரம்களிலும் இரண்டாம் விற்பனை (Second Sales) அதிகம் ( ஜெர்கின், ஸ்வெட்டர், ஷூக்கள்…). உடைப் பண்பாடு பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றது. (எங்கள் அலுவலக ரிஷப்ஷனிஷ்ட் (லிண்டா), ஞாயிறுகளில் வேலைக்கு வந்தால் அரை டிரவுசர்தான்!). மலர்ப் பண்ணைகளின் பெரும்பாலான பகுதிகள், கடல் மட்டத்திற்கு மேல் 1800 மீ என்பதால், குளிருடை எல்லோரும் அணிகிறார்கள். (Our farm’s altitude is 2250 mtrs; 2600 mtrs altitude-லும் பண்ணைகள் இருக்கின்றன); குளிர் மாதங்கள் ஜூலை, ஆகஸ்ட்; கோடை மாதங்கள் ஜனவரி, பெப்ரவரி.
39. #இந்தியா போல சாலை ஓரங்களில் ..# – தொண்ணூற்றொன்பது விழுக்காடு கிடையாது; மிக உட்பகுதி கிராமங்களில் கூட, குழிகள் வெட்டி, தடுப்பு அமைத்து, உபயோகிக்கிறார்கள். வெளியில் ஒன்று, இரண்டெல்லாம் கிடையாது.
40. #அரசு நிறுவனங்களில் ஊழல் ?# – மிக அதிகம்; இம்மிக்ரேசன் துறையில் அதனால்தான் நிறைய வெளிநாட்டவர்கள் “வேலை அனுமதி” (Work Permit) பெறமுடிகிறது; இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன், பெரிய வணிக வளாகங்களிலும் (குஜராத்திகள், பாகிஸ்தானிகளும் வணிக வளாகங்கள் நடத்துகிறார்கள்), டெக்ஸ்டைல் மில்களிலும், வேலை செய்வதற்கு அதிக ஆட்கள் வெளியிலிருந்து வர ஆரம்பிக்க, அரசு முழுவதுமாய் “வேலை அனுமதி” தருவதை நிறுத்தியது; துறையின் உயரதிகாரி மற்றப்பட்டார். தற்போது முக்கிய உயர் வேலைகளில் மட்டும் அனுமதி தர ஆரம்பித்திருக்கிறார்கள்.
41. கிராமங்களில், பல் துலக்குவதற்கு இன்னும் குச்சிகள்தான்; பெண்கள், செயற்கைப் பின்னல்கள் அணிவதால், மாதத்திற்கு ஒரு முறையோ/15 நாட்களுக்கு ஒரு முறையோதான் தலைக் குளியல்; குடிதண்ணீர் பிரச்சனை சில இடங்களில் உண்டு – நிலத்தடி நீரில் ஃப்ளோரைடு அதிகமுள்ள இடங்களில், அரசு மிசனரிகளோடு இணைந்து, சுத்திகரிப்பு ஃபில்டர்கள் அமைத்து, நல்நீராக்கி குறைந்த விலையில் விநியோகிக்கிறார்கள். குளிர்ப் பிரதேச கிராமங்களில் மக்கள் குளிப்பதில்லை. பொதுவாய், உடல் பராமரிப்பு குறைவு (முடிக்கு அதிகம் – பெண்கள்); ஆனால், பாரம்பரியமான உணவு முறையால், ஆண்களும், பெண்களும் மிக உடல் வலுவானவர்கள். “ஒபிஸிடி” உள்ள கென்ய ஆணையோ, பெண்ணையோ இதுவரை நான் பார்த்ததில்லை.
42. ஆம், இங்கு கென்யாவிலும், பாதுகாப்புப் பிரச்சனைகள் உண்டு. பகலில் ஒன்றும் பிரச்சனை இல்லை; நாங்கள் மாலை 6.30/7 மணிக்கு மேல் வெளியில் செல்வதில்லை. பகலில் எங்கு சென்றாலும், மாலை ஏழு மணிக்குள் வீடு திரும்பி விடுவது அல்லது தாமதமானால் நண்பர்கள் வீட்டில் தங்கிவிடுவது வழக்கம் எப்போதும் பயணிக்கும்போதோ அல்லது வீட்டிலோ கொஞ்சம் பணம் வைத்திருப்பது நல்லது; திருடர்களோ, வழிப்பறியோ – நாமாக பணத்தைக் கொடுத்துவிட்டால் நல்லது (உயிருக்கு உத்தரவாதம்!); பணமில்லையென்றால் கோபமாகி விடுவார்கள் (பெரும்பாலும் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைக்கு அடிமையானவர்கள்) ஆள் கடத்தல் இல்லையென்றாலும், இரவில் கார் கடத்தல் உண்டு; நண்பர் ஒருவர் மனைவியோடு மாலை 6.30 மணிக்கு, ஒரு வணிக வளாகம் சென்று (நைரோபி மத்தியில்) பார்க்கிங்கில் கார் நிறுத்தி, உள்சென்று 20 நிமிடங்களில் பொருள் வாங்கி வருவதற்குள், கார் மாயம் (இத்தனைக்கும் காரில், ஸ்மார்ட் லாக் உண்டு) பழைய நிறுவனத்தின் ஒரு காரை டிரைவரோடு கடத்தி, நல்ல வேளையாய், டிரைவரை ஒரு நாள் கழித்து உயிரோடு திருப்பி அனுப்பினார்கள் கொலைக்கு அஞ்சுவதில்லை; காவலும், சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது திருட்டு அதிகம்; வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்கள் முதல், பெரிய நிறுவனங்களில் பெரிய திருட்டு வரை சகஜம்; வீட்டுப் பணிப்பெண்களுக்கு, திருடுவது தவறாகவே தெரியாது; அது ஒரு சாதாரண செயல்; குறிப்பாய், இந்தியர்களிடம் திருடியதை, தனது சக பெண்களிடம் பெருமையாய் சொல்லிக் கொள்வார்கள் (நிறைய வைத்திருக்கிறார்களே, எடுத்தால் என்ன?); பத்து வருடங்கள் தொடர்ந்து வேலை செய்த பெண், திடீரென்று இருபதாயிரம் ஷில்லிங் எடுத்துக்கொண்டு ஓடிப்போனது நடந்திருக்கிறது. காவல் துறையில் கம்ப்ளெய்ண்ட் செய்வது வீண்; பணம் திரும்பி வராது; வேறு தொந்தரவுகள் வரும்.
43. ரயில் போக்குவரத்து சுத்தமாய் கிடையாது; ஆங்கிலேயர் காலத்தில் போட்ட ரயில் பாதைகள், புல் முளைத்துக் கிடக்கின்றன (பகலின் நடுவில், ஆளரவமற்ற பகுதியில், புல் முளைத்துக் கிடக்கும் ரயில் தண்டவாளங்களுக்கு மத்தியில், மேயும் செம்மறி ஆடுகளை, நிசப்தமாக காற்றின் ஒலியோடு மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது, ஒரு எழுச்சிக் கணம்); எப்போதேனும், ஒன்றிரண்டு சரக்கு வண்டிகளின் சத்தம் Nakuru-வில் கேட்கும்.
44. கிறித்தவத்திற்குள்ளேயே, மத (குழு) மாற்ற முயற்சிகள் உண்டு; கிராமங்களில், காரில் ஸ்பீக்கர், மைக்குகளோடு இறங்கி, பொது இடத்தில், ஞாயிறுகள் அல்லது விடுமுறை நாட்களில், பிரார்த்தனைகளும், பிரசங்கங்களும் செய்து, பாடல்கள் பாடி, தங்கள் குழுவிற்கு (தங்கள் சர்ச்சிற்கு) வருமாறு அழைக்கிரார்கள் தொலைக்காட்சிகளில், ஒரு சில சர்ச்சுகள்/நபர்கள், நமக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்க, முன்கூட்டியே பணம் அனுப்பச் சொல்கிறார்கள் – விளம்பரத்தில் வங்கி கணக்கு எண் கொடுத்து.
45. நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கப் பெண்கள், வெளியில் செல்லும்போது, பொது நிகழ்ச்சிகளில், தங்களைக் கூடுதலாய் அழகுபடுத்திக் கொள்கிறார்கள்; சிறு சிறு நகரங்களிலும், குட்டி குட்டி அழகு நிலையங்கள் அதிக எண்ணிக்கையில்.
46. தொண்ணூற்றொன்பது விழுக்காடு நகர் மற்றும் குறு நகர் பெண்கள், “ஹைஹீல்ஸ்” அணிகிறார்கள்
47. கென்ய சலூன்களில், கத்தி (பிளேடு), கத்திரி கிடையாது; முகச் சவரமும், தலை மழிப்பதும் மெஷினில்தான். இந்திய குஜராத்திகள், சலூன் வைத்திருக்கிறார்கள் – கத்திரி/கத்தி உண்டு. (ஷேவிங்கிற்கு 250லிருந்து 400 கென்ய ஷில்லிங்; முடி வெட்டுவதற்கு 500லிருந்து 1000 வரை – கடையைப் பொறுத்து. கென்யா வந்த புதிதில், நைரோபியில் ஒரு குஜராத்தி சலூனுக்குள் நுழைந்து, தலைமுடிக்கு ‘டை’ அடிக்க எவ்வளவு என்று கேட்டு ‘1500’ என்ற பதில் கேட்டு ஓடி வந்துவிட்டேன்.
48. நாட்டின் ஜனாதிபதி படம், எல்லா அலுவலகங்கள் (தனியார் மற்றும் அரசு), வணிக வளாகங்கள்/நிறுவனங்கள், மற்றும் கடைகளிலும் கண்டிப்பாக (compulsary) வைத்திருக்க வேண்டும்.
49. 2012 – ல், ஒரு பொதுப் பேருந்து விபத்தில் 23 பேர் பலியானார்கள்; அவர்களின் உடல் அடக்க இறுதி நிகழ்ச்சிகளில், பிரதமரும், ஜனாதிபதியும், முக்கிய மந்திரிகளும் கலந்து கொண்டனர். நாட்டின் பெரும் சோக நிகழ்வுகளின் போது, இறுதி நிகழ்ச்சிகளில் பிரதமரோ, ஜனாதிபதியோ பெரும்பாலும் கலந்துகொள்கிறார்கள்.
50. கென்யா ஷில்லிங்கை விட உகாண்டா மற்றும் டான்சானியா ஷில்லிங் மதிப்பு மிகவும் குறைவு
51. நாடு முழுதும் அதிக கிளைகள் உள்ள வங்கி ”Equity Bank” – கிராமங்களில் கூட இதற்கு ஏஜெண்டுகள் உண்டு .
(ஏஜெண்டுகளிடம் பணம் எடுத்துக் கொள்ளலாம்); அடுத்து KCB (Kenya Commercial Bank). அதன்பின் “Kenya Co-operative Bank’; பிற வங்கிகள் – I &M, Barclays, Standard Chartered, Paramount, K-Rep, Family Bank, Faulu, Fina Bank…; Bank of Baroda – பெரு நகரங்களில் மட்டும் கிளைகள் வைத்திருக்கிறது (Bank of India-வும்). Nakuru Bank of Baroda கிளையில், நம்மூர் உடுமலைக்காரர், மேலாளராயிருக்கிறார்.
52. வணிக வளாகத் திரையரங்குகளில், டிக்கெட் ஒன்று 500லிருந்து 600 ஷில்லிங் (நிலையானதல்ல; படத்திற்குத் தகுந்தவாறு மாறும்). ஸ்னாக்ஸ் மற்றும் குளிர்பானங்கள் சேர்த்த டிக்கெட்டுகளும், குடும்பமாய் குழந்தைகளுடன் சென்றால் சலுகை டிக்கெட்டுகளும் உண்டு.
53. முன்னணி செய்தித்தாள்கள் – ஆங்கிலத்தில் Daily Nation, The Standard, The Star…; செய்தித்தாள்கள் நம் முன்னால் “ஜூனியர் போஸ்ட்” அளவில்தானிருக்கும்; ஆனால் 45/50 பக்கமிருக்கும் தினசரி. உள்ளூர் மொழி “ஸ்வாஹிலியில்” ஒரே ஒரு தினசரிதான் பிரபலம் – “Taifa leo” (meaning ‘Nation Today’). குறைந்த பதிப்பில் “Nairobi Times’ ம், வாரம் ஒருமுறை வரும் “Aian Weekly’”-ம் உண்டு.
54. கென்யா Flower Council – ல் பதிவு செய்த “மலர் வளர்ப்பு” நிறுவனங்கள் மட்டும் 73. பதிவு செய்யாதவை 20/25 தேறும்.
55. தனி எழுத்துரு இல்லாததால் (ஆங்கில எழுத்துக்கள்தான்), உள்ளூர் மொழி “கிஸ்வாஹிலி” கற்றுக் கொள்வது எளிது. (நான் கொஞ்சம் பேச மட்டும் கற்றிருக்கிறேன்). நான் மொழி கற்றுக்கொள்ள அந்த மொழியின் தொலைக்காட்சி நாடகங்கள் தொடர்வது வழக்கம் (ஓசூரிலிருந்தபோது, கன்னட தூர்தர்ஷன் நாடகங்கள் பார்த்துத்தான் கன்னடம் புரிந்து கொள்ளவும், கொஞ்சமாய் பேசவும் கற்றுக்கொண்டேன்;மலையாளம் புரிய ஆரம்பித்தது, மலையாளத் திரைப்படங்கள் பார்த்து; ஹிந்தியும், மராத்தியும் மும்பையில் பணிபுரிந்த ஐந்து வருடங்களில்). ஆனால் கென்ய உள்ளூர் தொலைக்காட்சிகளில், ”கிஸ்வாஹிலி” நாடகங்கள் தொடர்வது, கொஞ்சம் கஷ்டமாயிருக்கிறது.
< style=”text-align: center;”>

56. என் சிறுவயதுக் காலங்கள், பூமணியின் (பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை) கிராமத்துப் பள்ளிக் கூடங்களாலும் (தந்தை கிராமத்துப் பள்ளி ஆசிரியர்), கிரா-வின் கரிசலாலும், கூளமாதாரியின் பனங்காடுகளாலும், நெடுங்குருதியின் வெயிலாலும் ஆனவை (சொந்த ஊர் மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் கள்ளிக்குடி சத்திரம் அருகில் ‘ஓடைப்பட்டி’ என்றொரு கிராமம்). மும்பையிலிருந்த போதாவது, அவ்வப்போது பிறந்த கிராமம் சென்று வருவதுண்டு. கென்யா வந்தபிறகு, நினைவுகள் ஏக்கங்களாகி விட்டன. மத்திய, மேற்கு மற்றும் தெற்கு கென்யாவில் சுத்தமாய் கரிசல் கிடையாது. எங்கும் பச்சைதான். வடக்கு கென்யா மிகவும் வறண்டது; உணவுக்கும், தண்ணீருக்கும் பஞ்சம் வருவதுண்டு; சோமாலியாவின் சாயல் படிந்தது.
57. கிருஸ்துமஸ் கொண்டாட்ட மனநிலையும், விடுமுறை எதிர்பார்ப்புகளும் டிசம்பர் முதல் வாரத்திலேயே துவங்கிவிடும். நிறுவனங்களைப் பொறுத்து விடுமுறை 15 நாட்களிலிருந்து ஒரு மாதம் வரை நீளும். அரசு அலுவலகங்களில், டிசம்பரில் ஏதேனும் பணி நிறைவுகள்/முடித்தல் எதிர்பார்ப்பது வீண். நாங்கள் டிசம்பருக்கான பயிர் மருந்துகள், உரங்கள் நவம்பரிலேயே வாங்கிவிடுவது வழக்கம். ஏதேனும் இறக்குமதி செய்யவேண்டியதிருந்தால், டிசம்பரில் ‘Container’ துறைமுகம் (மொம்பாசா) வராமல் பார்த்துக்கொள்வது நல்லது; வந்தால் clear செய்ய மாதமாகலாம். நிறுவனங்கள் கிறிஸ்துமஸூக்கு, பணியாளர்களுக்கு பரிசு கொடுப்பதுண்டு. (இந்த வருடம், எங்கள் நிறுவனம், 1500 ஊழியர்களுக்கு, 3000 ஷில்லிங் மதிப்பில் Gift Hamper (ஒரு Blanket, இரண்டு விரிப்புகள், சமையல் பொருட்கள் அடங்கியது). பெரும்பாலும் ஊதிய உயர்வும், டிசம்பரில்தான் ஆரம்பிக்கும். உள்ளூர் Kenyan சிலபஸ் பள்ளிகள், முழு டிசம்பரும் விடுமுறை. (பள்ளி புது வகுப்புகள் ஜனவரியில் துவங்கும்) கொண்டாட்டமென்றால், புது ஆடைகளும், மது அருந்துவதும், மாமிசம் உண்பதும்தான் (ஆண்கள் தங்கள் நண்பிகளுக்கு விதவிதமான வித்தியாசமான முடிப்பின்னல்கள் பரிசளிப்பதுண்டு).
58. மேலதிகாரிகள், ஏன் இயக்குனர்களே வந்தால் கூட, உள்ளூர் கடைநிலைப் பணியாளர்கள் கூட எழுந்து நிற்பதில்லை; உட்கார்ந்துகொண்டேதான் வணக்கம் சொல்கிறார்கள் (வந்த புதிதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது); விளிக்கும்போது “சார்” “மேடம்” கிடையாது; பெயர் சொல்லிதான் கூப்பிடுகிறார்கள்; உயரதிகாரி என்றால் பெயருக்கு முன்னால் மிஸ்டர் போட்டுக்கொள்வது. நான் எங்கள் இயக்குநருடன் பேசும்போது சார் தான் உபயோகிப்பது; என் கீழ் பணிசெய்யும் தொழிலாளர் அறையுள் வந்தால் “Mr.Naren” என்று இயக்குநரை விளிப்பார்; சுவாரஸ்யமாயிருக்கும்.
59. வரிக்குதிரைகளும், மான்களும் வெகு சாதாரணமாய் சாலையோரங்களில் மேய்ந்து திரிவதுண்டு – குறிப்பாய் Nakuru – Naivasha சாலை மற்றும் Naivasha – Ol’kalou சாலை; மிக உள் சார்ந்த சில மலர் வளர்ப்பு நிறுவனங்களுக்கு செல்லும்போது ஒட்டகச்சிவிங்கிகளும் தென்படுவதுண்டு. முன்பு வேலை செய்த கம்பெனிக்கு (New Holland Flowers) முன்னால், ஒரு சின்ன கால்வாய் ஓடும் (இங்கு சின்னச் சின்னதான கால்வாய்களை ஆறு என்பார்கள்); கம்பெனிக்குள் வருவதற்கு மரப்பாலம் போட்டிருந்தோம். ஒருமுறை காட்டிலிருந்து கால்வாய் வழியாக நீர்யானை ஒன்று வந்து பாலத்திற்கடியில் நின்றுகொண்டிருந்தது. வேலைக்கு வந்தவர்கள் பயந்துபோய் பாலத்திற்கு அந்தப்பக்கமே நின்றுகொண்டிருந்தார்கள் (இரண்டாய் இருந்தால் பயமில்லை; தனியாய் இருப்பதால் தாக்கும் என்றார்கள்); வனத்துறைக்கு போன்செய்து, ஆட்கள் வந்து கால்வாயோடு ஓட்டிப்போனார்கள்.
60. உள்ளூரில் இந்தியர்களை “முஹிண்டி” என்றும் வெள்ளையர்களை “முஜூங்கு” என்றும் அழைக்கிறார்கள். உள்ளூர்க்காரர்களுக்கு, இந்தியர்களை விட டச்சுக்காரர்களை மிகவும் பிடிக்கிறது; வெள்ளையர்கள் மரியாதை கொடுக்கத் தெரிந்தவர்கள் என்கிறார்கள். பெரும்பாலான ஆரம்பகால மலர் வளர்ப்பு நிறுவனங்கள், டச்சுக்காரர்களால் துவங்கப்பட்டவை. இஸ்ரேல், ஹாலந்துக்காரர்களும் அதிகமாய் செட்டிலாகியிருக்கின்றனர்; பெரும்பாலான டச்சுக்காரர்கள், கென்யா வந்தபின், தங்கள் நாடுகளுக்குத் திரும்புவதில்லை. கணிசமானோர் உள்ளூர் கென்ய பெண்களை மணந்து, குழந்தைகள், குடும்பமாய் தங்கி விடுகிறார்கள்.
61. முன்னால் கம்பெனியில், “ரோஸ்” என்று ஒரு பெண் (26 வயதிருக்கும்; பெந்தகொஸ்தே வகுப்பு) கேண்டீனில் சமையல் செய்துகொண்டிருந்தது. (இந்திய சமையல் அனைத்தும் அத்துபடி; 10 வயதிலிருந்து, ஒரு இந்திய மேலாளர் வீட்டில் வேலை செய்து, அனைத்து இந்திய உணவுகளும் சமைக்க பழகியிருந்தது; தோசையும், சர்க்கரைப் பொங்கலும் அட்டகாசமாய் செய்யும்!) கொஞ்சம் விவரமாய் பேசும்; உள்ளூர் பழக்க வழக்கங்கள் புரிந்துகொள்ள அடிக்கடி ரோஸூடன் பேசுவதுண்டு. இன்னும் திருமணமாகவில்லை. “ஒரு இந்தியரை திருமணம் செய்துகொள்ள விரும்புவாயா?” என்றபோது அவசரமாய் மாட்டேன் என்று மறுத்தது. திருமணத்தைப் பற்றி பிறகு யோசிக்கலாமென்றும், ஆனால் ஒரு பெந்த்கொஸ்தே கென்ய ஆணை மணப்பதற்கு முன், ஒரு இந்தியக் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமென்றது.(முன்பு எப்போதோ படித்த பாலகுமாரன் நாவல் ஞாபகம் வந்தது). ரோஸூக்கு இந்திய ஆண் நண்பர்கள் அதிகம் “கென்ய ஆணை விட இந்திய ஆண் நல்ல தேர்வு இல்லையா?; உங்கள் கென்யாவில் ஆண்கள் பல பெண்களை மணக்கிறார்களே; மணக்காவிட்டாலும், பல பெண்களோடு…; இந்திய ஆண், மணந்தால் ஒரு பெண்தான்-வாழ்வு முழுமைக்கும். சிரித்தது “இந்தியாவில் ஆண்கள் எப்படி என்று தெரியாது; ஆனால் கென்யா வந்த இந்திய ஆண்களைப் பற்றி எனக்குத் தெரியும்” என்று சொல்லி மறுபடி சிரித்தது.
62. நான் கவனித்த அளவில், பெரும் சதவிகித கென்ய பெண்கள் மிக பலசாலிகள்; உணவு முறையாலும், இயற்கையாலும் உடல் உறுதியானவர்கள்; மனதளவிலும் கூடத்தான் என்று நினைக்கிறேன். தனியாகவே வேலை செய்து குழந்தைகளை வளர்க்கிறார்கள்; குடும்பத்தை நிர்வகிக்கிறார்கள். வேலை செல்லும் பெண்கள் அதிகம் என்பதால், குழந்தைகள் கவனித்துக் கொள்ளும் “Baby Care/Baby Sitting” கலாச்சாரமும் வேரூன்றியிருக்கிறது இங்கு வந்த புதிதில் நான் அடைந்த மற்றொரு ஆச்சர்யம் – அன்றாட வேலை செய்யும் பெண்கள், பிரசவத்திற்கு முதல்நாள் வரை கூட வேலைக்கு செல்கிறார்கள்; பெரும்பாலான “Expecting Mothers”-க்கு வயிறு பெரிதாவதில்லை. மற்றவர்கள் செய்யும் அதே அளவு வேலை செய்கிறார்கள். குழந்தை பேறுக்கு ஊதியத்துடன் மூன்று மாத விடுப்பு, அரசாணை; மற்றும் அடுத்த ஆறு மாதத்திற்கு தினசரி வேலை நேரத்தில் ஒரு மணி நேர விடுப்பு – “Breast Feeding”-ற்காக ஐந்தாறு மாதம் முன்னால் நடந்தது; ”ஜாய்ஸ்” எங்களின் Greenhouse மூன்றில் வேலை செய்யும் பெண்; அந்த Greenhouse Supervisor-க்கு தெரியாது ஜாய்ஸ் குழந்தைப் பேறின் காத்திருப்பில் இருக்கிறார் என்று. பத்து மணிக்கு லேசாய் தலை சுற்றல் இருப்பதாகவும், “Clinical Officer”-ஐ பார்த்து வருவதாகவும் சொல்லி சென்றிருக்கிறார். (clinic, கம்பெனி உள்ளேயே இருக்கிறது; முதல் உதவிக்கென்று மருத்துவம் படித்த ஒரு அலுவலர் வேலையில் இருக்கிறார்). வழியில், நாலைந்து Greenhouse தாண்டியதுமே, “Labour pain” வந்திருக்கிறது. Greenhouses வெளியில் இருக்கும் இரண்டடி அகல புல் தரையில், அணிந்திருந்த நீள “Dust Coat”-ஐ எடுத்து விரித்து பிரசவித்திருக்கிறார் – தனியாய், யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை; பிரசவித்த பின், குழந்தையை துணியில் சுற்றிக்கொண்டு, clinic-ற்கு நடந்து போயிருக்கிறார். அலுவலரின் சிகிச்சைக்குப்பின் காரில் வீடு அனுப்பினோம் நான் வியப்பிலிருந்து நீங்க இரண்டு மூன்று நாட்களானது.
< style=”text-align: center;”>
63.நான் அறிந்த அளவில், அன்றாட வேலைசெய்து மாத ஊதியம் வாங்கும் சமூக தளத்தில், இங்கு கென்யாவில் மூன்று வகையான திருமணங்கள் வழக்கத்தில் இருக்கின்றன முதலாவது “சர்ச் திருமணங்கள்”. இது கொஞ்சம் செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் எடுத்த எடுப்பில் பெரும்பாலும் யாரும் இவ்வகையை தேர்ந்தெடுப்பதில்லை. சுற்றத்தை, நண்பர்களை அழைக்கவேண்டும்; அவர்களை கூட்டி செல்வதற்கு வண்டி ஏற்பாடு செய்ய வேண்டும்; உணவு செலவு; சர்ச்சிற்கு பணம் கட்டவேண்டும்; உடைகளுக்கான செலவு – குறிப்பாய் மணமகளுக்கான வெண்ணீள் உடை; சர்ச் பூக்கள் அலங்காரத்திற்கான செலவு. ஓரளவுக்கு வசதிகொண்ட மேல்மத்யமரும், மத்யமரும் மட்டுமே நேரடியாய் இதற்கு செல்கின்றனர்.
கீழுள்ளவர்கள் வேறுமுறையில் முதலில் திருமணம் செய்துகொண்டு, பணம் சேர்ந்தபின் சர்ச்சில் திருமணம் செய்துகொள்கின்றனர். சிலசமயம் குழந்தைகளுடன் அல்லது பேரக்குழந்தைகள் வரவுக்கு பின்கூட சர்ச் திருமணங்கள் நடைபெறுவதுண்டு. சிலவற்றில் தம்பதிகள் அதற்குள் மாறிவிடுவதுமுண்டு. சர்ச் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். சிலகாலத்திற்கு பின் இருவரும் பிரிந்தால் இருக்கும் சொத்தில் ஆளுக்கு பாதி (சர்ச் தலையிட்டு தீர்த்துவைக்கும்).
இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள், எங்கள் நிறுவன, விமான நிலையத்திற்கு பூ கொண்டுசெல்லும் ட்ரக்கின் ஓட்டுநர் உதவியாளன் ஜான் திருமண அழைப்பிதழ் கொண்டுவந்து கொடுத்தான். “யாருக்கு ஜான்? உனக்கா அதுக்குள்ளயா?” என்று கேட்டபடி கையில் வாங்கி பிரித்தேன். ”இல்லை. என் பெற்றோர்களுக்கு”-ஜான் சொல்ல வியப்புடன் பார்த்தேன். ஜானுக்கு இரண்டு மூத்த சகோதரிகள்; இருவரும் ஜான் அம்மாவிற்கு முதல் கணவர் மூலம் பிறந்தவர்கள். ஜானும், இரண்டு இளைய சகோதரிகளும் இப்போது திருமணம் செய்துகொள்ளும் கணவர் மூலம் பிறந்தவர்கள்
இரண்டாவது “சிவில் திருமணங்கள்”. தற்போது இவைதான் அதிகம். பரஸ்பரம் நண்பர்களாயிருக்கும் ஆணும் பெண்ணும் (நட்புக்காலத்தில் உடல்சார் இணைவுகளுக்கு தடையில்லை) தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து இருவரின் குடும்பங்களும் அந்த பகுதியின் தலைவரிடம் (Area Chief) சென்று, வரதட்சணை முதலான விஷயங்களை இருபக்கமும் ஒத்துக்கொண்டு பதிவுசெய்கின்றனர். இங்கும் சான்றிதழ் கொடுக்கப்படும். வரதட்சணை பெரும்பாலும் செம்மறி ஆடுகள், பசுக்கள் மற்றும் பணம்; ஆண் பெண்ணின் பெற்றோருக்கு தரவேண்டும்; தவணை முறையிலும் கொடுக்கலாம். திருமணத்திற்கு பின்னான குடும்ப தகராறுகள், தலைவரிடம் முறையிட்டு தீர்த்துகொள்ளவேண்டும். காவல் நிலையம் செல்லும் தகராறுகளில் பெரும்பாலும் பெண்ணிற்கு சாதகமாகத்தான் காவல்நிலையம் நடவடிக்கை எடுக்கும்
மூன்றாவது “பாரம்பரிய திருமணங்கள்”. தற்போது இவை குறைந்துவருகின்றன. அப்பகுதி தலைவரிடமோ, சர்ச்சுக்கோ செல்ல தேவையில்லை. பதிவு கிடையாது. ஆணும் பெண்ணும் அவர்களின் குடும்ப பெரியவர்களுக்கு தெரிவித்துவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழலாம். குடும்ப பிரச்சனைகள் இரண்டு குடும்பங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். தலைவரோ, சர்ச்சோ உதவிக்கு வராது இம்மூன்றை தவிர நான்காவதும் உண்டு. பெற்றோர்களுக்கும் தெரிவிக்க தேவையில்லை. வேலை செய்யுமிடத்திலோ, வசிக்குமிடத்தின் அருகிலோ பிடித்துபோன ஆண்/பெண் இருந்தால், பேசி முடிவுசெய்து, ஒரே வீட்டில்/அறையில் தங்கி குடும்பம் நடத்துவதுண்டு. ஒத்துப்போகும்வரை சேர்ந்து வாழ்வது; பிடிக்கவில்லையென்றால் விலகிக்கொள்வது. குழந்தைகள் பெற்றபின்னும் விலகுதல்கள் நேர்வதுண்டு
ஒருமாதம் முன்பு, எங்கள் பண்ணையின் முதன்மை நுழைவாயிலிலிருந்து, உள்ளிருக்கும் அலுவலகத்திற்கு, கம்பியில்லா இணைப்பில் பாதுகாப்பு அதிகாரி அழைத்து உள்ளூர் காவல் நிலைய வண்டி வந்திருப்பதாகவும், காவலர்கள் மனிதவள அலுவலரை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். நிறுவனத்தின் அரசுசார் வெளிவிவகாரங்களை மனிதவள அலுவலர்தான் பார்த்துகொள்கிறார். உள்ளேவர அனுமதிக்க சொல்லிவிட்டு நான் மனிதவள அலுவலர் அறைக்கு சென்றேன். மூன்று காவலர்கள் வந்தனர். பண்ணையில் வேலைசெய்யும் ஜாக்குலின் எனும் பெண்ணை அழைத்துப்போக அனுமதி கேட்டனர். என்ன விஷயம் என்று கேட்க, பண்ணையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கராட்டி எனும் கிராமத்தின் சிறு வணிகவளாகத்தில் வேலைசெய்த கெவின், கொஞ்சம் பணத்தையும், பொருட்களையும் திருடிக்கொண்டு ஓடிவிட்டதாகவும், ஜாக்குலின் கெவினுடன் இருப்பதாக கேள்விப்பட்டு, ஜாக்குலினை அழைத்துப்போய் வீட்டை சோதனையிட வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஜாக்குலினை முதல் பசுங்குடிலிலிருந்து அழைத்துவர, காவலர்கள் விஷயம் சொல்லி “கெவின் எப்படிப்பட்டவன்?; சமீபத்தில் பணம் ஏதேனும் அதிகம் புழங்கியதா அவன் கையில்?; வீட்டிற்கு ஏதேனும் புதிய பொருட்கள் கொண்டுவந்தானா?” என்று விசாரித்தனர். ஜாக்குலினின் பதில்.. “அவன் எப்படிப்பட்டவன் என்று அதிகம் எனக்குத்தெரியாது. ஒருமாதம்தான் அவனுடன் சேர்ந்து வாழ்ந்தேன். கடந்த பதினைந்து நாட்களாக வீட்டுக்கு வருவதில்லை. சரி, வேறெங்கேனும் நகரத்திற்கு சென்று வேறுவேலை தேடி, வேறு பெண்ணை பிடித்திருப்பான் என்று விட்டுவிட்டேன்.
64. திருட்டு இங்கு எப்போதோ நடக்கும் விஷயமல்ல. திருட்டு சம்பவங்கள் வழக்கமான பேசுபொருட்கள். சாதாரண, வீட்டுவேலை செய்யும் பணிப்பெண்கள் திருட்டிலிருந்து, மில்லியன் கென்ய ஷில்லிங் மதிப்பு திருட்டு வரை வழக்கமான நிகழ்வுகள்தான். திருடுபவர்கள் குற்ற உணர்ச்சியெல்லாம் அடைவதில்லை. காயப்படுத்துவதற்கும், மிஞ்சிப்போனால் உயிர் எடுத்தலுக்கும் தயங்குவதில்லை
2011-ல் கென்யா வந்த புதிதில் கிடைத்த முதல் அறிவுரை, வெளியில் எங்கு போனாலும் மாலை 6.30-க்குள் வீடு திரும்பிவிடவேண்டும் என்பதுதான். மீறி தாமதமானால் போன இடத்திலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை திரும்புவது நல்லது. பயணப்படும்போது அதிக பணம் வைத்திருப்பதும் ஆபத்து; ஒன்றுமே இல்லாமலிருப்பதும் ஆபத்து. வழிப்பறியில் நாம் சிக்கும்போது, அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லையென்றால் கோபத்தில் எதுவேண்டுமென்றாலும் செய்வார்கள்; உயிரிழக்கும் அபாயம் உண்டாகலாம். கொஞ்சமாவது கையில் வைத்திருந்து கொடுத்துவிடுவது நல்லது. உயிர்விடும் பயம் இல்லையென்றால் மட்டுமே ஹீரோயிச வேலைகள் காட்டலாம்.
தலைநகர் நைரோபியில் கூட மாலை ஏழு மணிக்குமேல் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிடும். பின்னிரவு பார்ட்டிகளுக்கு செல்பவர்கள் இரண்டு மூன்று கார்கள் சேர்ந்து சங்கிலியாய் தொடர்ந்து செல்வது நல்லது சென்றவாரம் நைரோபி மத்திய நகரத்தில் நண்பகலில் ட்ராஃபிக்கில் சிக்னலுக்காய் காத்திருந்தபோது நண்பர் ஃபோனில் பேசிக்கொண்டிருக்க, பேப்பர் விற்கும் பையன் அருகில் வந்து கத்தியை காட்டி ஃபோனை தருமாறு மிரட்ட, கீசி விடுவானோ என்று பயந்து ஐபோனை பேசாமல் தந்துவிட்டார். கார் ஹைஜாக்கிலிருந்து, பல மாடிக்குடியிருப்புகளிலும் பகலில் பூட்டிய வீட்டில் திருடுவது வரை சாதாரணமாக நடப்பதுதான்.
கொய்மலர் பண்ணைகளில் நடக்கும் திருட்டுக்கள் டெக்னிக்கல் வகை; பருவத்திற்கு தகுந்தாற்போல் குறிப்பிட்ட கெமிக்கல்கள் திருடுபோகும். உதாரணத்திற்கு மழைக்காலங்களில் பூஞ்சை நோய் தாக்குதல் மலர்களிலும், காய்கறிகளிலும் அதிகரிக்கும். அப்பருவத்தில் அந்நோய்களுக்கு அடிக்கும் மருந்துகள் மட்டும் திருடுபோகும். செக்யூரிட்டிகளை பார்ட்னர்களாக்கி இரவில் டெம்போ எடுத்துவந்து பசுங்குடில் மேல்போர்த்தும் 200 கிலோ எடைகொண்ட பாலிதீன் ரோல்கள் கூட எடுத்துப்போனதுண்டு இரண்டு வாரங்கள் முன்பு எங்கள் நிறுவனத்தில் நடந்தது
எங்களின் கொய்மலர் பண்ணை 35 ஹெக்டர் பரப்பு கொண்டது; மூன்று தலைமுறை குஜராத்திகளுடையது. மூன்று இந்தியர்கள் நிர்வகிக்கிறோம். ஒருவர் குஜராத்திக்காரர் – துசார் – பர்சேஸ், ஸ்டோர்ஸ், மெய்ண்டனன்ஸ், பசுங்குடில் அமைப்பதை பார்த்துக்கொள்கிறார். அவருக்கு உதவியாய் ஒரு கேரளத்துக்காரர் (பாலக்காடு) – தாஸ் – வண்டிகள், மோட்டார் பம்ப்புகள் பராமரிப்பது, மெக்கானிக் வேலைகள், சிவில் அவருடையது. நான் மலர் வளர்ப்பையும், தரக்கட்டுப்பாட்டையும், ஆர்டர்களையும், பேக்கிங்கையும் கவனிக்கிறேன் அன்று மாலை 4.30-க்கு பணி முடிந்ததற்கான சைரன் ஒலித்ததும் பணியாட்கள் ஸ்டோர் சென்று (ஸ்டோர் அலுவலகத்திலிருந்து இருநூறு மீட்டர் தூரம் பின்னால்) காலை எடுத்த பணி உபகரணங்களை திரும்ப ஒப்படைத்துவிட்டு வெளிச்செல்ல கைரேகை பதியும் கருவிக்கு சென்றார்கள். நான் பசுங்குடிலிலிருந்து அலுவலகம் வந்தேன். துசாரும், தாஸும் அலுவலகத்தில் இருந்தார்கள்.
மறுநாள் முடிக்கவேண்டிய வேலைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஸ்டோரில் வேலைசெய்யும் ”எநோக்” வயர்லெஸ்ஸில் தாஸை அழைத்து ஸ்டோர் வேலை முடிந்துவிட்டதாகவும் மூட இருப்பதாகவும் தெரிவித்தான். தினசரி ஸ்டோர் மூடும் நேரம் ஐந்தரை ஆகும். தாஸ் சென்று பூட்டுக்கள், ஜன்னல்கள் சரியாக மூடப்பட்டிருக்கிறதா என்று சரிபார்த்து வருவார் தாஸ் கிளம்பிப்போன இருபது நிமிடம் கழித்து, எநோக் திடுதிடுவென்று மூச்சுவாங்க அலுவலகத்திற்குள் ஓடிவந்தான்; மிக பதட்டத்துடன் முகமூடி அணிந்த ஐந்து திருடர்கள் துப்பாக்கியோடு வந்து மிரட்டி ஸ்டோருக்குள் புகுந்துவிட்டதாகவும், தாஸை உள்ளே வைத்துக்கொண்டதாகவும், சரட்டென்று நழுவி விஷயம் சொல்வதற்காக ஓடிவந்ததாகவும் சொன்னான்.
என்னை அலுவலகத்திற்குள்ளேயே பூட்டிக்கொண்டு உள்ளிருக்க சொல்லிவிட்டு துசாரும், பேக்கிங் ஜானும், உற்பத்தி பிரிவின் இம்ரானும் அவசரமாய் ஸ்டோர் நோக்கி ஓடினார்கள் ஸ்டோருக்கு இரண்டு கதவுகள்; வெளிப்பக்கம் இரும்புக்கதவு; உள்ளே க்ரில் வைத்த கதவு. வாசலில் ஒருவனை கத்தியோடு நிற்கவைத்து, இரும்பு கதவை திறந்தபடி விட்டு க்ரில் கதவை மூடிக்கொண்டு, தாஸை தரையில் குப்புறப் படுக்கச்சொல்லிவிட்டு, உள்ளிருந்த கெமிக்கல் ரூம் பூட்டை எலெக்ட்ரிக் பிளேடால் அறுத்து, கொண்டுவந்த கோணிகளில் கெமிக்கல் பாட்டில்களை நிரப்பிக்கொண்டிருந்திருக்கிறா
எனக்கு தாஸிற்கு ஏதேனும் ஆகாதிருக்கவேண்டுமே என்பதே பிரார்த்தனையாயிருந்தது ஆட்கள் அதிகம் வருவதை பார்த்த வெளியில் நின்றிருந்தவன், உள்ளே பார்த்து “சீக்கிரம்… சீக்கிரம்…” என்று சத்தம்போட பாதி நிரப்பிய கோணிகளோடு கதவு திறந்து வெளியில் வந்து கிழக்கு வேலி நோக்கி ஓடியிருக்கிறார்கள். வெளியில் வரும்போது குப்புற படுத்திருந்த தாஸை முதுகில் ஓங்கி மிதித்திருக்கிறான் ஒருவன். ஓடியவர்களை துரத்திக்கொண்டு செக்யூரிட்டிகளும், இம்ரானும் ஓடி (பயத்தோடுதான்), இம்ரான் வழியில் கிடந்த பசுங்குடில் இரும்பு குழாயை எடுத்து வீச, அதிர்ஷ்டவசமாய் அது ஒருவனை காலில் அடித்து விழச்செய்திருக்கிறது. மீதி நான்கு பேரும் வேலி தாண்டி ஓடிவிட, விழுந்தவனை எல்லோரும் அமுக்கி முகமூடியை எடுத்தால்…அது ”லெவி” – எங்கள் பண்ணையின் கட்டிட செக்சனில் முன்பு வேலைசெய்தவன் முன்பக்க சட்டை முழுதும் புழுதியுடன் அலுவலக அறைக்கு வந்த தாஸை கட்டிக்கொண்டேன். “உங்களுக்கு ஒண்ணும் ஆகலயே சார்?” – என்று விசாரிக்க, புன்னகையுடன் “வாழ்க்கையில, முதன்முதலா இன்னைக்குத்தான் சாமிய உண்மையா நினைச்சேன்” என்றார் லோக்கல் போலீஸுக்கு போன் செய்து வரவழைத்து லெவியை ஒப்படைத்தோம். மற்ற நான்கு பேரின் பெயர்களையும் லெவி போலீஸிடம் சொன்னான்; எல்லோரும் முன்னாள் பணியாட்கள்தான். திருடர்கள் கொண்டுவந்த நாட்டுத்துப்பாக்கியில் குண்டு கிடையாது. களேபரங்கள் முடிய எட்டு மணியானது.
Dear Mr.Venkatesh,
You’re write ups are very impressive. If you are in Nairobi, I would like to meet you. Please ping my e-mail varatharajanmani2@gmail.com