பொருள்தேடி வருவேன் என்று கூறிச்சென்ற தலைவன் குறித்தநாள் சென்றபின்னும் இன்னும் வரவில்லை. அவனுடைய வரவுக்காகக் காத்திருந்து காத்திருந்து தலைவியின் கண்கள் பூத்துவிட்டன. தனது துன்பத்தை யாரிடம் சொல்வாள். இவள் தனிமையில் வருந்தி வாடுவது தோழிக்குத் தெரியும். அவளைச் சமாதானப்படுத்த வேண்டி ஆறுதல் சொற்களைக் கூறுகிறாள் தோழி.
“அடி பெண்ணே! உனது காதலரின் தேரானது விரைவில் வந்துவிடும் பார்! கதிரவன் கடலில் சாயும் செக்கர்நிறம் கொண்ட ஒரு இனிய மாலைப்பொழுதில் கடற்கரை மணலில் ஒலிக்கின்ற மணிகளையுடைய உன்னுடைய காதலரின் தேரானது விரைந்துவரும். எவ்வாறு தெரியுமா? உன்னை வந்து காணவேண்டும் எனும் ஆவலினால் அவர் புரவிகளை விரட்டி அத்தேரை மிக விரைவாகச் செலுத்துவார். அதனால் கடற்கரை மணலில் அலைந்து திரியும் நண்டுகள் பயந்து பரவி ஓடும். தேர் விரைந்து வருவதனால் வெம்மை நிறைந்த வெயில் விரைவில் நீங்கிவிடும். அத்தேர் வரும் விரைவினால் அதனை யாரும் நோக்கவும் இயலாதபடிக்கு அதன் ஒளியில் காண்போரின் கண்களும் கூசும் அல்லவோ?” எனத் தலைவன் வரவு பற்றித் தலைவியிடம் தோழி கூறி அவளை உற்சாகப்படுத்துகிறாள் தோழி.
கறங்கு மணி நெடுந்தேர் கண்வாள் அறுப்ப
பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப
வறம்கூர் கடும் கதிர் வல் விரைந்து நீங்க
நிறம் கூரும் மாலை வரும்.
கண்ணம்பூதனார் என்பவர் பாடிய திணைமொழி ஐம்பதின் நெய்தல் நிலப்பாடல் இதுவாகும்.
இதனை இங்கே கூறப்புகுந்தது எதற்காக? இலக்கியங்களில் கையாளப்படும் திணைமயக்கம் எனும் உத்தியை நாம் அறிந்து, படித்து இன்புறுவதற்காகவே. திணை மயக்கம் என்பது நயமான ஒரு உத்தியாக, பெரும்பாலும் அகவிலக்கியங்களில் காணப்படுகின்றது.
அகத்திணைப் பாடலுக்குரிய பொருள்களாக முதல், கரு, உரி என்ற மூன்றும் அறியப்படும். இதில் முதற்பொருள் நிலம் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை), பொழுது (கார்காலம், கூதிர் காலம், வேனிற்காலம், வைகறை, விடியல், நண்பகல், மாலை, நள்ளிரவு) என இரண்டினைக் கொண்டது. கருப்பொருள்களாவன, தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, தொழில், யாழ் என்பனவாம். உரிப்பொருள்கள் புணர்தல் (குறிஞ்சி), இருத்தல் (முல்லை), ஊடல் (மருதம்), இரங்கல் (நெய்தல்), பிரிதல் (பாலை) இவைகளாகும். இவற்றுள் பொழுதும் கருப்பொருளும் மயங்கி அமைய இயலும் என்பர். அவ்வத்திணைகளுக்குரிய கருப்பொருள்கள் அந்தந்தத் திணைகளுக்கே உரியதாக அமையின் சிறப்பாக இருக்கும்; அவ்வாறு அமையாவிடினும், அவை அமைந்த நிலத்திற்குரியனவாகவே கருதப்பட வேண்டும் என்பது நியதி.
ஒரு நிலத்திற்கே உரியதான பூக்கள் மற்ற நிலங்களிலும் பூக்க வாய்ப்புண்டு. நெய்தற்பூ மருத நிலத்திலும் பூக்கலாம்; குறிஞ்சிக்குரிய பறவை வேறுநிலத்திலும் பறக்கலாம். இவ்வாறு வரும்பொழுது அந்தந்தப் பூவையும் பறவையையும் அவை உள்ள வேறுநிலங்களுடன் பொருத்திப் பொருள்உணர்ந்து கொள்ளவேண்டும். காலமும் அவ்வாறே; குறிஞ்சி நிலப்பொழுதான யாமம் என்னும் சிறு பொழுதும் முல்லை நிலத்தின் பெரும் பொழுதான கார்காலமும் மற்ற நிலங்களிலும் வரும் வாய்ப்புகள் உள்ளன! இது தான் திணை மயக்கம் எனப்படும்.
திணை என்பது உரிப்பொருளைக் கொண்டே முடிவு செய்யப்படுவதால் உரிப்பொருள் மயங்குவது இல்லை என்பது ஒரு கூற்று. ஆனால் ‘நம்பியகப் பொருள்’ நூல் ஐந்திணைக்குரிய எல்லாப் பொருள்களும் (முதல், கரு, உரி) மயங்கி வரலாம் எனக் கூறுகிறது.
இவற்றுள் ஒன்றே மேலே நாம் கண்ட பாடல். இப்பாடலில் நெய்தல் நிலத்தில் முல்லைத் திணைக்குரிய மாலைப் பொழுது (முதல் பொருள்) மயங்கி வரும். இப்பாடல் நெய்தல் திணையில் அமைந்தது. நெய்தலுக்கே உரிய கடற்கரை, மணல், நண்டுகள் இவை குறிப்பிடப் படுகின்றன. ஆயினும் பொழுது என வரும்போது, மாலைப் பொழுது குறிக்கப் படுகின்றது. இது இலக்கணப்படி, முல்லைத் திணையின் முதற்பொருளாகும். இருப்பினும், இப்பாடலின் நயத்தில் மாலைப் பொழுது மயங்கி, நெய்தலில் பொருந்தியது பாடலின் சுவையை மிகுதிப் படுத்துகிறது.
வீரமும் காதலும் தமிழிலக்கியத்தில் பெருமிடம் வகிக்கின்றன என்பது அறிஞர் கூற்று. அகப்பாடல்களும் புறப்பாடல்களும் இக்கூற்றினை உள்ளங்கை நெல்லிக்கனியென விளக்கிப் பயில்வோரை இன்புறுத்தியும், பெருமிதத்திலாழ்த்தியும் வருகின்றன.
****
இன்னும் ஓரிரு பாடல்களைக் காணலாமா?
திணைமாலை நூற்றைம்பது எனும் தொகுப்பிலிருந்து ஒரு பாடல்: இதில் பாலைத் திணையில் அமைந்த ஒரு பாட்டில், நெய்தல் நிலத்தின் உரிப் பொருளான இரங்கல், மயங்கி வரும் நயத்தைக் காணலாமா?
தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி, தோழியிடம் கூறுவதாக அமைந்தது: “ஒளி மிகுந்த அணிகலன்களை அணிந்த என் தோழி! நெருங்கிய முருக்க மரங்கள் என்னை வருத்த வந்தன போன்று பொன்னில் பொருந்திய பவளம் போன்ற மலர்களை விரித்தன; இதனால் நான் மிகவும் துன்பமடைந்தேன்; பொருளுக்காகச் சென்ற தலைவர் வேனிற்காலம் வந்தபின்னும் திரும்பவில்லை. இந்தப் பருவத்தில் நீ என்னை ஆற்றியிரு (பொறுத்திரு) எனக் கூறினால், என்னால் பொறுத்திருக்க இயலுமோ?” என்கிறாள்.
இதில் பாலைத் திணையின் காலமான வேனிலும், மரமான முருங்கையும் குறிப்பிடப்படுகின்றன; ஆனாலும், இரங்கல் என்ற நெய்தல் திணையின் உரிப் பொருள் வருவதால் திணை மயங்கியதை அறிகிறோம். பாடலின் சுவையை இது மிகுதிப் படுத்தவில்லையா? (இதில் இன்னொரு நயம்: வெறுக்கை என்பதற்கு, “என்னை வெறுத்துச் சென்றார்,” அல்லது “பொருள் தேடச் சென்றார்,” என இருவிதமாகவும் பொருள் கொள்ளலாம்)
வெறுக்கைக்குச் சென்றார், விளங்கிழாய்! தோன்றார்
பொறுக்க என்றால் பொறுக்கலாமோ? ஒறுப்பபோல்
பொன்னுள் உறு பவளம் போன்ற புணர் முருக்கம்
என்னுள் உறு நோய் பெரிது
முல்லைத் திணையில் மருதத் திணைக்குரிய உரிப்பொருளான ஊடல் வரும் பாடல்: குறுந்தொகையில் உள்ளது.
உதுக்காண் அதுவே இது என மொழிகோ
நோன்சினை இருந்த இருந்தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும் நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின் ‘போதின்
பொம்மல் ஓதியும் புனையல், எம்மும் தொடா அல்’ என்குவெம் அன்னே
என்பது பாடல். (குறுந்தொகை – முல்லைத்திணை)
தலைவி தோழியிடம் பிரிவாற்றாமை பொறுக்காது கூறுகிறாள்: “தலைவர் என்னைப் பிரிந்திருந்த காலத்தில் அவர் பிரிவினால் நான் துயருறுவேன் என்பதைக் கருதாமல் என்னைப் பிரிந்து சென்றார்; அவர் இங்கே மீண்டும் வந்தால், “நீர் எம் கூந்தலை அலங்கரித்தலை விடுக! எம்மைத் தொடுதலையும் விடுக,” என்று நான் கூறுவேன். இதை நீயே பார்த்துக் கொள்,” என்று சினத்துடன் ஊடிக் கூறுகின்றாள். சுவையான இனிய சிறு நாடகம் போன்ற பாடல். திணை மயக்கத்தால் இன்னும் சுவை கூடியது.
மேற்கண்ட பாடல்கள் அனைத்திலும் திணை மயக்கம் என்பது தனியாகச் சுட்டப்படாமல், பாடலின் ஊடே இயற்கையாக அமைந்து காணப்படுகின்றது. இவை இந்தக் கவிதைகளுக்கு அழகு சேர்த்து, அவை புலப்படுத்தும் காட்சிகளுக்கு மேலும் சுவை கூட்டுகின்றன.
*****
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் ‘திணை மயக்கம்’ என்னும் தனித் தலைப்பில் (!) அழகான ஒன்பது பாடல்களைக் கண்டது வியப்பிலாழ்த்தியது.
வியப்பு எதனால்? முதலாவதாக, திருவிளையாடற் புராணம் அக இலக்கிய வகையச் சார்ந்த இலக்கியம் அல்ல; அடுத்து, திணை மயக்கம் என்பது அகத்திணைக்கே உரிய ஒரு உத்தி என்பதால், திருவிளையாடல் புராணப் பாடல்கள் முற்றுமாகக் கருப் பொருளைச் சார்ந்தே படைக்கப் பட்ட திணை மயக்கமாக இருப்பது மிகவும் ஆச்சரியத்தைத் தருகின்றது. திணைகள் இவ்வாறு மயங்கினாலும் இலக்கியச் சுவை மிகுந்து காணப்படுவதனால் இவை சொற்கோலமாகின்றன.
முதல் காண்டமாகிய மதுரைக் காண்டத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதிக்குப் பின்பு நாட்டின் வளம் விவரிக்கப் படுகின்றது. பொருநை நதியின் சிறப்பு, அந்நதியின் வெள்ளம், உழவின் சிறப்பு, பயிர்களை விளைவிக்கும் முறை முதலியனவற்றைப் பரஞ்சோதி முனிவர் அழகாக விளக்குகிறார்.
அடுத்து, பாண்டிய நாட்டின் இயற்கை வளங்களை அழகும் சுவையும் மிளிர எடுத்துரைக்கும்போது, திணை மயக்கம் என்ற உத்தியைக் கையாண்டு மதுரையின் இயற்கை வளத்தைப் போற்றுவதாகக் கூறிக் கொண்டே துவங்குகிறார். இதுவே மிக்க வியப்பை விளைவிப்பது.
இன் தடம் புனல் வேலிசூழ் இந்நில வரைப்பில்
குன்றம் முல்லை தண்பணை நெய்தல் குலத்தினை நான்கும்
மன்ற உள்ள மற்றவை நிற்க மயங்கிய மரபின்
ஒன்றோடு ஒன்று போய் மயங்கிய திணை வகை உரைப்பாம்’
எனத் துவங்குகிறார் ஆசிரியரான பரஞ்சோதி முனிவர்.
(பொருள் உணர்த்துவதற்காக இங்கு சொற்கள் பிரிக்கப் பட்டு எழுதப் பட்டுள்ளன). அதாவது, ‘இத்தகைய பாண்டிய நாட்டில். குறிஞ்சி, முல்லை, குளிர்ந்த மருதம், நெய்தல் ஆகிய நான்கு வித நிலங்களும் அதிகமாக இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று நெருங்கி அமைந்துள்ளமையால், ஒரு திணையின் பொருள் மற்றொன்றினுடன் கலந்து விளங்குவதனைக் கூறுவோம்,’ என்கிறார். அவை என்ன என்னவென்று அடுத்தடுத்த செய்யுள்களில் விளக்குகிறார்.
கொல்லைகள் எனப்படும் முல்லை நிலத்தில் பசுக்கூட்டங்களை மேய்த்து வரும் இடையர்கள், பூங்கொத்துகள் படர்ந்த குருந்த மரத்தின் மீதேறி, அங்கு அகில் மரங்களின் மீது படர்ந்துள்ள மிளகுக் கொடியிலிருந்து மிளகுக் கொத்துகளை ஆவினங்கள் தின்ன முறித்து உதிர்க்கின்றனராம். குறிஞ்சி நிலத்து வேட்டுவச் சிறுமியர் நெய்தல் நிலத்தில் எடுத்த முத்துக்களால் சிறுவீடு கட்டுவர்; முல்லை அரும்புகளைச் சோறாக்கி, அத்துடன் குறிஞ்சித் தேனைக் குழம்பாகக் கலந்து தோழியர் கூட்டத்துடன் மகிழ்ந்து விளையாடுவார்களாம். முல்லை, குறிஞ்சி, நெய்தல் ஆகிய மூன்று திணைகளும் மயங்கி வந்து நம்மையும் மயக்குகின்றனவே!
முல்லை சோறெனத் தேன்விராய் முத்திழை சிற்றில்
எல்லை ஆயமோடு ஆடுப எயின் சிறு மகளிர்.
எருமைக் கடாக்கள் கரும்பினைக் குதட்டித் தின்று விட்டு (மருதத் திணை), தம் கன்றுகளும் களிவண்டுகளும் கருப்பஞ்சாறு வழியும் இனிமையான தமது கடைவாயினை மொய்க்கும்படி, பொன்னிறப் பூக்கள் நிறைந்த வேங்கைமர நிழலில் (குறிஞ்சித் திணை) உறங்குமாம். முறம் போலும் காதுகளையுடைய யானைகள் குறிஞ்சி நிலத்தில் விளையும் முதிராத தினைக் கதிர்களைத் தின்றுவிட்டுப் பூக்கள் பொருந்திய மருதமர நிழலில் சென்று உறங்குகின்றனவாம்!
குன்று இளம் தினை மேய்ந்து பூங்கொழு நிழல் மருதம்
சென்று தங்குவ சேவகம் எனே முறச் செவிமா.
இயற்கையாக நித்தமும் நிகழும் இச்செயல்களில் பூக்களும் மரங்களும் விலங்குகளும் இணைந்து திணை மயங்கி வரும் நயத்தை நோக்குங்கள்.
வேட்டுவச் சிறுமிகள் (குறிஞ்சித்திணை) சிறுவீடு கட்டி விளையாடுகின்றனர்; அவற்றைக் கடல் அலைகள் வீசி எறிந்த சங்குகள் (நெய்தல் திணை) புகுந்து அழித்து விடுகின்றன. அதனால் அச்சிறுமியர் கோபம் கொண்டு தமது அணிமணிகளைக் கழற்றி அவ்வலைகளின் மீது வீசுகின்றனர். அவற்றை இளமை பொருந்திய தனங்களையுடைய பரதவச் சிறுமிகள் எடுத்து முத்துக்களுடன் சேர்த்துக் கோர்ப்பார்கள்!
எற்று தெண்டிரை எறிவளை எயிற்றியர் இழைத்த
சிற்றில் வாய் நுழைந்து அழிப்ப அச்சிறுமியர் வெகுண்டு
பற்றிலார் எனச் சிதறிய மன அணி பரதர்
முற்றிலா முலைச் சிறுமியர் முத்தொடும் கோப்ப.
கடற்கரையில் விளையாடும் சிறுமிகள் தாங்கள் கட்டிய மணல்வீடுகளை அலைகள் அழிப்பதால் வருந்துவதும், சினம் கொள்ளுவதும், அழுவதும் இயற்கையே. இவர்களை வேட்டுவச் சிறுமிகளாக்கிக் காட்டுவதே இந்தத் ‘திணை மயக்க’ப் பகுதியின் நயம் பொருந்திய இலக்கிய உத்தி எனத் தோன்றுகின்றது!
அடுத்து முத்தமிழ் வளர்த்த மதுரைமாநகரின் இசைச் சிறப்பைக் கூறுவன திணை மயங்கி வரும் இரு நயமான பாடல்கள்: முல்லை நிலத்து வண்டுகள் (முல்லைத் திணை), தாமரை மலரில் உள்ள மருத நிலத்து (மருதத் திணை) வண்டுகளிடம் சென்று, தமது முல்லைப் பண்ணை அந்த மருத நிலத்து வண்டுகளுக்குக் கற்பிக்குமாம். பின்பு தாம் அந்த வண்டுகளிடமிருந்து மருதப் பண்ணைக் கற்குமாம். இசையிலும் ‘பண்டமாற்று’ போலப் ‘பண் மாற்று!’ இது தமிழர்கள் வடக்கே சென்று ‘ஹிந்துஸ்தானி’ இசை கற்றுத் தேர்வதும், ஜான் ஹிக்கின்ஸ் பாகவதர் போன்றவர்கள் அமெரிக்காவிலிருந்து வந்து கர்நாடக இசை கற்றதும் போல உள்ளது!
முல்லை வண்டுபோய் முல்லையாழ் முளரிவாய் மருதம்
வல்ல வண்டினைப் பயிற்றிப் பின் பயில்வன மருதம்,
அங்குள்ள வாளைமீன்கள் முல்லை நிலத்தில் உள்ள பசுவின் மடியில் மோதுவதால் அப்பசு தனது கன்று தான் முட்டியது எனக் கருதிப் பாலை விரைந்து சொரிகின்றதாம்; மீன்கள் அந்தப் பால்வெள்ளத்தில் துள்ளி விளையாடுகின்றனவாம்.
அடுத்த பாடலும் இசைச் சிறப்பு பற்றியதே. திறமையான ஒரு பாணனுக்கு அரசன் பரிசில் வழங்கிச் சிறப்பிப்பதைப் போன்ற ஒரு நிகழ்ச்சியை இயற்கையில் கண்டு சொல்லோவியமாக்கி வழங்குகிறார். காளை (ஆண்) வண்டுகள் செவ்வழிப் பண்ணைப் (நெய்தல் நிலப்பண்) பாணர்கள் போலத் திறமையாகப் பாடுகின்றனவாம்! எதனால்? கரும்பு போன்ற கொம்புகளையுடைய புன்னை மலரின் தேனையுண்டு கிறங்கியதால் தான்! அதற்குப் பரிசில் கொடுப்பது போலக் கொன்றை மரங்கள் பொன்னனைய பூக்களைச் சொரிகின்றன.
கரும் பொன் கோட்டிளம் புன்னைவாய்க் கள்ளுண்டு காளைச்
சுரும்பு செவ்வழிப் பாண்செயக் கொன்றை பொன்சொரிவ…
அலைகளையுடைய பெரிய கடலானது (நெய்தல் திணை) தன்னிடத்தில் உள்ள சங்குகளை எடுத்து முல்லை நிலத்தில் (முல்லைத் திணை) உள்ள காயாம்பூவின் மீது எறியுமாம்; இது எவ்வாறு உள்ளதாம்? காயாம்பூ வண்ணனான திருமால் தனது கையில் சங்கான பாஞ்சசன்னியத்தைத் தரித்தது போலக் காணப்படுகிறதாம்.
அரும் தடங்கடல் வளையெடுத்து ஆழியான் கையில்
இருந்த சங்கென இறைகொளப் பூவைமேல் எறிவ.
உப்பு வாழ்க்கைக்கும் உணவுக்கும் மிக்க இன்றியமையாதது. இருப்பினும் உப்புப் பண்டங்களை மட்டுமே எப்போதும் உண்ண முடியாது. அறுசுவைகளும் மனிதனுக்கு வேண்டும். இனிப்பு கட்டாயம் வேண்டும் (சில டயபெடிஸ் மனிதர்களைத் தவிர்த்து!) இனிப்புப் பலகாரங்களில் ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதும், அது போன்றே, உப்புப் பலகாரங்களிலும் சிறிது வெல்லம் சேர்ப்பதும் உண்டு. இது சுவையைக் கூடுதலாக்கிக் காட்டும். இந்த நியதியை, அடுத்த பாடல் திறமையாக விளக்குகின்றது.
நெய்தல் நிலத்தில் அடுக்கடுக்கான உவர்க்கேணிகள் எனப்படும் உப்புக்கேணிகள். தென்னை மரத்தின் முற்றிய நெற்றுக் காய்கள் விழுவதனால் பலாவின் முள் நிறைந்த கனிகள் கிழிபட்டு (குறிஞ்சித் திணை) அவற்றிலிருந்து தேன் சிந்துகிறதாம்; இது உவர்க் கேணிகளில் கலந்து அதன் உப்புத் தன்மையைப் போக்குகிறதாம்.
கழிந்த தெங்கின் ஒண்பழம் பரீஇ முள் பலாக்கனி கீண்டு
/ழிந்த தேன் உவர்க்கேணி பாய்ந்து அகற்றுவ உவரை,’ என்பன பாடல் வரிகள்
நெய்தல் நிலத்தில் தேன் வழிகின்ற மடல்களையுடைய தாழம்பூவின் நிழலைக் கண்டு அது கொக்கெனக் கருதி அஞ்சி, மருத நிலத்துக் கெண்டைமீன்கள் தாமரைப்பூவில் மறைந்து கொள்ளுமாம்.
ஒரு சிறுமியர் குழாம்; உப்பங்கழிப் பக்கம் ஓடி விளையாடியபடி இருக்கின்றனர்; விளையாடுமிடத்தில் ஒரு பகுதியிலிருந்து, தாங்கமுடியாத புலால் நாற்றம் வீசுகின்றது. சில சிறுமிகள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர்; ஒருத்தி பொறுக்க முடியாமல், உடல் குழைந்து நடுங்கி, வாயில் நீர் ஊறி, காலையில் உண்ட உணவை வாந்தி பண்ணி விடுகின்றாள்; “இதைப் பாருங்களடி!” எனக் கண்களால் மற்ற சிறுமிகளுக்கு ஒருத்தி சாடை காட்டுகிறாள். எல்லாச் சிறுமிகளும் கூடி முதல் சிறுமியைப் பார்த்து, அவள் செய்ததைச் சொல்லிச் சொல்லி நகைக்கின்றனர்!
உப்பங்கழித் (நெய்தல் திணை) தாழை மலர்களும், ஆம்பல், குவளை மலர்களும் (மருதத் திணை) மலர் சொரியும் முல்லைக் கொடிகளும் (முல்லைத் திணை) நெருங்கியுள்ள இடத்தில், இப்படிப்பட்ட ஒரு காட்சியைத் தான் கண்டதாகக் கூறுகிறார் பரஞ்சோதியார். எல்லா நிலத்துப் பூக்களும் உள்ள இடத்தில் இயற்கையாக நிகழும் ஒரு செயலை, விளையாடும் இளம் சிறுமிகளின் கும்மாளம் போல வருணிக்கிறார்.
ஆறு சூழ்கழிப் புலால் பொறாது அசைந்து கூன் கைதை
சோறு கால்வன ஆம்பல்வாய் திறப்பன துணிந்து
கூறுவாரெனக் குவளைகண் காட்டிடக் கூடித்
தூறு வாரெனச் சிரித்து அலர் தூற்றுவ முல்லை.
என்பது பாடல்.
ஆறாக ஓடுகின்ற உப்பங்கழியின் புலால் நாற்றத்தைப் பொறுக்க மாட்டாமல் சோர்ந்து, உடல் நடுங்கி வளைந்த நெய்தல் நிலத்துத் தாழை மலர்கள் மகரந்தமாகிய சோற்றைக் கக்கும்;அதைக் கண்டு துணிந்து வாந்தி செய்கின்றதெனக் கூறுவார் போல ஆம்பல் மலர்கள் வாயைத் திறக்கும். இந்தச் செய்தியைக் கண்களால் அறிவிப்பது போலக் கருங்குவளை மலர்கள் நிற்கின்றனவாம். அவற்றுடன் சேர்ந்து கொண்டு கூடிப் பழிப்பவர்கள் போல நகைத்த வண்ணம் முல்லை மலர்கள் பழைய மலர்களை உதிர்க்கின்றனவாம்!
ஆச்சரியமான கற்பனை. மதுரையின் இயற்கை வளங்களை வண்ண வண்ணமான திரை ஓவியங்களாக அழகுபட அகக் கண்ணில் விரிக்கும் சொல்லோவியங்கள்!
துள்ளும் கெண்டைமீன் (மருதத் திணை) போன்ற கண்கள் கொண்ட நெய்தல் நிலப் பெண்கள், எல்லா நிலங்களிலும் விளைந்த உணவுப் பொருள்களை அவற்றின் எடைக்கு எடை முத்துக்களைக் கொடுத்து வாங்குகின்றனராம். நெய்தல் நிலத்துச் சுறாமீனுடன் உண்ணக் குறிஞ்சி நிலத்துக் கள், தினை, கிழங்கு இவற்றையும், மருத நிலத்துப் புளியங்காய், அவரை, கொள், எள், இனிய கரும்பு ஆகியவற்றையும் வாங்குகின்றனர்.
துள்ளு சேல்விழி நுளைச்சியர் சுறவொடும் அருந்தக்
கள்ளு மாறவும் கூனலங்காய் தினை அவரை
கொள்ளு மாறவும் கிழங்கு தேன் கொழும் சுவைக் கன்னல்
எள்ளு மாறவும் அளப்பன இடைக்கிடை முத்தம்.’
கொள்முதல் என்னவோ அக்காலத்துப் பண்டமாற்று முறை தான். ஆனால் ‘திணை மயக்கத்’தால் தற்காலத்து ‘ஸுப்பர் மார்க்கட்டுகள்’ எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு விற்பது போலல்லவா உள்ளது! படிக்கும் தோறும் தெவிட்டாத கற்பனை. இவ்வளவு அழகியதா நமது தென்மதுரை என நெகிழ்ந்து போகிறோம்.
இவ்வாறு திணை மயக்கம் பல நயமான இலக்கியங்களில் இருக்கலாம். இன்னதெனக் கூறாத இடங்களிலும் அதை தேடிக் கண்டு வியந்து ரசிக்கும் திறமை வேண்டும்.
கல்லாதது உலகளவு!
‘தமிழுக்கு அமுதென்று பேர்,’ அல்லவோ!