அகதிக் கடத்தல்

 
ship
 
மேற்காசியாவிலும் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள நாடுகளில் இருந்தும் யூரோப்பில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது என்றும் அதன் விளைவுகளைப் பற்றியும் சொல்வனத்தின் முந்தைய இதழ்களில் படித்திருக்கிறோம். யூரோப்பின் தடையற்ற எல்லைகள், தங்களுக்கு புதிய, வளமிக்க வாழ்க்கையை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டம் கூட்டமாக அகதிகளாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்காண்டிநேவிய நாடுகள் போன்ற நாடுகளைத் தேடி, யூரோப்பின் நுழைவாயிலான இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகளின் வழியாக இம்மக்கள் குடியேறுகின்றனர். யூரோப்பின் பல நாடுகளில் உள்ள, வந்தாரை வாழவைக்கும் அகதிகள் ஆதரிப்புக் கொள்கையும், கட்டுப்பாடுகள் இல்லாத வேலைவாய்ப்பு முறைகளும் இதற்கு உதவுகின்றன. இது ஒருபுறமிருக்க, இந்த வகைக் குடியேற்றங்கள் சட்டம் / ஒழுங்கு போன்ற பல பிரச்சனைகளை இந்நாடுகளில் உருவாக்கி உள்ளூர் மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. பிரிட்டன் போன்ற சில நாடுகள் யூரோப்பிய யூனியனிலிருந்து தனியாக செல்லும் நிலைமைக்கும் இந்த அகதிகள் பிரச்சனை பெரும் காரணமாக இருந்ததைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
ஆனாலும், புதிய வாய்ப்புகளைத் தேடி சளைக்காமல் புலம்பெயரும் மக்களின் தொகை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. எல்லாவற்றையும் காசாக்கி ஆதாயம் தேடும் சிலர் இந்த ‘வாய்ப்பையும்’ பயன்படுத்தி இந்த நாடோடிகளுக்கு உதவுகின்றனர். போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் போன்று பெரிய அளவில் வளர்ந்து வரும் இந்த அகதிக் கடத்தல் பற்றி ஜெர்மனியின் இதழ் ஒன்று ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.
ஆப்பிரிக்காவில் வடபகுதி நாடுகளிலிருந்து யூரோப்பிற்குக் குடிபெயரும் மக்கள் மத்திய தரைக்கடலின் நடுப்பகுதி வழியாகவே பயணம் மேற்கொள்கின்றனர். எத்தியோப்பியா, சூடான், லிபியா ஆகிய நாடுகளிலிருந்தே பெரும்பாலும் மக்கள் அதிக அளவில் இடம்பெயருவதால், இவர்களைக் ‘கடத்தும்’ தொழிலில் ஈடுபட்டவர்களும் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த நாடுகளை விட அதிக அளவில் மக்கள் இடம்பெயர்வது எரித்ரியாவிலிருந்து. மனித உரிமை இயக்கங்களால் ‘மிகப்பெரிய சிறை’ என்று வர்ணிக்கப்படும் இந்த நாட்டிலிருந்து சுமார் பத்து லட்சம் பேர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியுள்ளனர். ஜெர்மனியில் அகதிகளாக விண்ணப்பித்தவர்களில் அதிகமானவர்கள் இந்த எரித்ரியர்களே. இவர்களை வைத்தே இந்தக் கடத்தல்காரர்கள் பிழைப்பு நடத்துகின்றனர். சூடானில் உள்ள கார்டூம், லிபியாவின் திரிபோலி, இத்தாலியில் பாலெர்மோ, ரோம், ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட் ஆகிய இடங்களிலெல்லாம் இந்தக் கடத்தல்காரர்களின் கரங்கள் நீளுகின்றன.
மேற்குறிப்பிட்ட, சகாரா பாலைவனத்தை அடுத்துள்ள நாடுகளிலிருந்து புலம்பெயரும் மக்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து லிபியாவில் உள்ள சப்ராதா எனும் நகரை அடைகின்றனர். இந்த இடம்தான் இப்போது அகதிக் கடத்தலில் முக்கிய மையமாக உள்ளது. இந்தப் பயணம் பெரும்பாலான அகதிகளுக்கு நரகவேதனையைத் தரக்கூடியது. அவர்களில் பலர் சிறை வைக்கப்பட்டு, அவர்கள் குடும்பத்தினர் அடுத்த கட்ட பயணத்திற்கான பணம் அனுப்பும் வரை துன்புறுத்தப்படுகின்றனர். வன்புணர்வு, மின் அதிர்ச்சி, கசையடி போன்ற கொடுமைகள் இங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன என்று அகதிகளில் ஒருவர் குறிப்பிடுகிறார். அவர்களை இதிலிருந்து விடுவிக்க, சூடான், இஸ்ரேல், துபாய் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளிலோ அல்லது ஹவாலா முறையிலோ அவர்களின் குடும்பத்தினர் பணம் அனுப்புகின்றனர். அதற்கு அத்தாட்சியாக அவர்களுக்கு ஒரு ரகசியக் குறியீடு அனுப்பப்படும். குடும்பத்தினர் அதை கடத்தல்காரர்களுக்கு அனுப்பிய பின்னரே சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு தங்கள் பயணத்தை வடக்கு நோக்கித் தொடர்கின்றனர்.
லிபியாவின் கடற்கரையை அடைந்தவுடன், அவர்கள் மீண்டும் அடைத்து வைக்கப்படுகின்றனர். அங்கே அவர்களுக்கு தனிப்பட்ட பதிவு எண் ஒன்று அளிக்கப்படுகிறது. இது அவர்களின் நடவடிக்கைகளை எளிதில் கண்காணிக்கப் பயன்படுகிறது. அங்கிருந்து அவர்கள் படகுகளில் மூலம் மத்திய தரைக் கடலின் ஊடே இத்தாலிக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்களை வழி மறிக்க, மத்தியதரைக் கடலில் ஜெர்மனியின் கப்பல்களும் யூரோப்பிய யூனியானால் ‘சோபியா’ என்னும் இயக்கத்தால் அமர்த்தப்பட்ட கப்பல்களும் காத்திருக்கின்றன. அகதிகளை ஏற்றிச் செல்லும் படகுகள் இக்கப்பல்களிடம் சிக்கிவிட்டால், ராஜ மரியாதையோடு அவர்களை யூரோப்பிற்கு இந்தக் கப்பல்கள் ஏற்றிச்செல்லுகின்றன.
சரி அக்கரையில்,  இத்தாலியில் என்ன நடக்கிறது. சிசிலியில் வந்திறங்கும் அகதிகள் உடனுக்குடன் வடக்கு நோக்கி அனுப்பப்படுகிறார்கள். இல்லாவிட்டால் அவர்களது கைரேகை எடுக்கப்பட்டு, அவர்களை எளிதில் கண்டுபிடிக்க அது பயன்பட்டுவிடும். எங்கிருந்து யார் வந்தார்கள் என்பதை ஜெர்மனியும் மற்ற யூரோப்பிய நாடுகளும் அறிந்துகொள்ள இயலாது.  இந்தப் பயணத்திற்கு முன்னாலும் அகதிகள் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். உதாரணமாக பலேர்மோவில் ஆடுமாடுகளைப் போல சிறிய அறைகளில் பலர் அடைக்கப்படுகின்றனர். அவர்கள் தூங்குவது கூட நின்றுகொண்டேதான்.
யூரோப்பிய ஒன்றியத்தில் எல்லைக் கட்டுப்பாடுகள் அதிகம் இல்லாததால் சிசிலியில் இருந்து கார்கள் மூலம் அகதிகள் ஜெர்மனிக்கும் ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறார்கள். பதிவு அறிக்கைகள், திருமண சான்றிதழ்கள் ஆகியவையும் போலியாகத் தயாரிக்கப்பட்டு இவர்களுக்கு விற்கப்படுகின்றன. உதாரணமாக, அகதியாக தப்பி வந்த எரித்ரியர் ஒருவர், ஐந்து வேறுபட்ட இத்தாலியின் அரசு ஆணையகங்களின் கீழ் ஐந்து மனைவிகளுடனான ஐந்து வேறுபட்ட பதிவு அறிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கிறார். அவர்களுடன் ஒன்று சேரவேண்டும் என்றும் விண்ணப்பித்திருக்கிறார். இதன் காரணமாக, எரித்ரியாவிலுள்ள அவர்கள், கடினமான இந்தப் பயணத்தை மேற்கொள்ளாமலேயே தங்கள் ‘கணவர்கள்’ இருக்கும் இடங்களுக்கு பயணம் செய்ய முடிகிறது. இந்த போலித் திருமணத்திற்கு கிட்டத்தட்ட 15,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. இத்தாலிய ஆணையங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்ளாததால் இது சாத்தியமாகிறது.
இது போன்ற ஓட்டைகளைப் பயன்படுத்தி சுமார் ஐந்து லட்சம் பேர் அகதிகளாக யூரோப் சென்றிருக்கிறார்கள். ஆனால் வழியில் ஏற்படும் படகு கவிழ்ப்பு போன்ற ஆபத்துகளால் அவர்களில் 10,000 பேர் மாண்டு போனார்கள். லிபியாவில் மட்டும் சுமார் 235000 அகதிகள் பயணத்திற்காக காத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் சட்டவிரோதமாக இத்தாலிக்கு கடந்த ஆண்டு வந்த எரித்ரியர்கள் மட்டும் சுமார் 38000 பேர். இதில் ஆயிரக்கணக்கான அகதிகள் வளமிக்க ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் குடியேறுகின்றனர். அவர்களில் கடத்தல்காரர்களும் அடக்கம்.
கடத்தல்காரர்களை ஏன் கைது செய்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்ற கேள்வி எழலாம். ஆனால் சப்ராதாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் கூலிப்படைக் குழுக்களுக்கும் இந்தக் கடத்தல்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தத் தொழிலில் அதிக அளவு புழங்கும் பணத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அளிக்கின்றனர். எனவே இவர்களை நெருங்க முடியாத நிலை நிலவுகிறது.
தவிர இந்தக் கடத்தலில் லிபியாவைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் பலரும் ஈடுபட்டுள்ளதாக இந்தப் பத்திரிக்கை தெரிவிக்கிறது. அதற்கான உதாரணமாக, சப்ராதாவிலுள்ள ஆகப்பெரிய கடற்கரை உல்லாச விடுதியின் உரிமையாளர் ஒருவரை இந்தப் பத்திரிக்கை சுட்டுகிறது. 2015ம் ஆண்டில் மட்டும் சுமார் 45,000 அகதிகளை யூரோப்பிற்கு இவர் கடத்தியிருக்கிறார். இது இத்தாலிக்கு சட்டவிரோதமாக வந்த அகதிகளில் மூன்றிலொரு பங்காகும். இத்தாலிய மாஃபியாவிற்கும் இந்தத் தொழிலதிபருக்கும் உள்ள நெருங்கிய உறவைக் கொண்டே, இதை அவரால் சாதிக்கமுடிந்தது என்கின்றனர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றவர்கள்.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக இத்தாலிய போலீஸ் தெரிவிக்கிறது. மேலும் அவர்கள் கூறுவது “நாங்கள் புலன் விசாரணை செய்கின்றோம், வாரண்ட்கள் கொடுக்கப்படுகின்றன, யூரோஜஸ்ட் என்ற யூரோப்பிய அளவிலான போலீஸ் ஒன்றிணைப்புக் கூட்டங்களில் இது பற்றி விவாதிக்கிறோம். ஜெர்மனியில் இந்தக் கடத்தல்காரர்களுக்குத் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன”. கடத்தல்காரர்களிடையே நடைபெற்ற 40,000 ஃபோன் உரையாடல்களின் எழுத்துப் பதிவுகளை மற்ற யூரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற நாடுகளின் உதவியுடன் கடத்தல்காரர்களின் தொடர்பு எல்லைகளை அறியவும் அவர்கள் செயல்படும் முறைகளைக் கண்டறியவும் நாங்கள் முயல்கிறோம் என்கின்றனர் அவர்கள்.
இந்தத் தகவல்களைக் கொண்டு, பிரிட்டன், ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகள் விசாரணையைத் துவங்கியுள்ளன. “ஆனால் ஜெர்மனி இதைக் கிடைப்பில் போட்டுவிட்டது. அவர்களுக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும் ‘இத்தாலியர்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்’ என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் கூறுகின்றனர்” என்று குறை கூறுகிறார் இத்தாலியப் போலீசின் உயர் அதிகாரி ஒருவர். ஜெர்மனியின் அதிகாரிகளோ, இத்தாலியப் போலீசார் தங்களுக்கு தாமதமாகத் தகவல் அளித்ததாகக் கூறுகின்றனர். இரு நாடுகளில் போலீஸ் துறை செயல்படும் முறைகளில் உள்ள வேறுபாடுகள் விரைவான விசாரணைக்குக் குறுக்கே நிற்கின்றன.
தவிர, ஜெர்மானிய அதிகாரிகளின் ஒத்துழைப்பு பற்றி பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இத்தாலிய போலீசின் கடத்தல்-எதிர்ப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறுகிறார். “மத்திய தரைக் கடல் பகுதியில் தத்தளிக்கும் அகதிகளை மீட்டு வரும் சோபியாக் கப்பல்கள் சிசிலியை அடைந்தவுடன் நாங்கள் அந்தக் கப்பல்களை விரைவாக அடைந்து எங்கள் விசாரணையைத் துவக்குவோம், கடத்தல்காரர்களைப் பற்றியும் லிபியாவில் உள்ள அவர்களின் தொடர்புகளைப் பற்றியும் தகவல் சேகரிப்போம். அந்தக் கப்பல்களின் அதிகாரிகளாக ஐரிஷ், ஸ்பானியர்கள், நார்வீஜியர்கள் ஆகியோர் இருந்தால், எங்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். ஆனால், கப்பல் அதிகாரிகள் ஜெர்மன்களாக இருக்கும் பட்சத்தில் எங்களைக் கப்பலில் கால் வைக்கவே அனுமதிக்க மாட்டார்கள். எங்களுக்கு எந்த ஆதரவும் அவர்களிடமிருந்து கிட்டாது. எனவே கடத்தலுக்கான சான்றுகளையும் நாங்கள் சேகரிக்க இயலாது’ என்கிறார் அவர். “அவர்களின் தொடர்பு அதிகாரியாக இத்தாலியில் ஒருவர் கூட இல்லை” என்பதையும் அவர் சுட்டுகிறார்.
ஜெர்மனியைப் பொறுத்தவரை ஃபிராங்க்பர்ட் எரித்ரிய கடத்தல்காரர்களின் மையமாகச் செயல்படுகிறது என்பது அங்குள்ள விசாரணையாளர்களின் கருத்து. கிட்டத்தட்ட 10 முதல் 15 வழக்குகள் இதன் தொடர்பில் அங்கு நிலுவையிலுள்ளன. ஆனால் இதுவரை அங்கு பிடிபட்டது ‘சிறு மீன்கள்’ என்றும் ‘திமிங்கிலங்கள்’ வலையில் சிக்காமல் நழுவுகின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர். பெர்லினில் உள்ள ஜெர்மனிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் இது பற்றிக் கூறும்போது ‘அகதிகள் பிரச்சனை எங்களுக்கும் பெரும் தலைவலியாகவே உள்ளது. ஜெர்மனியில் கணக்கிடப்படாத அகதிகள் பலர் உள்ளனர். ஆப்பிரிக்காவில் அகதிகளைக் கடத்துபவர்கள், கூலிப்படையினர், அரசியல் தீவிரவாதிகள் ஆகியோருக்கு இடையிலான தொடர்பைக் குறித்து நாங்கள் கவலையடைந்திருக்கிறோம்’ என்கிறார்.
ஆனால், இவர்கள் என்னதான் முயன்றாலும் ஆப்பிரிக்காவிலிருந்து செயல்படும் முக்கியக் கடத்தல்காரர்களைப் பிடிப்பது குதிரைக் கொம்புதான். சூடானிலும் லிபியாவிலும் செயல்படும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு நெருங்கியவர்களாக இவர்கள் இருப்பதால், அந்தந்த நாடுகளின் அரசின் கரங்களே இவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. எனவே கடத்தல்காரர்களைக் கைது செய்து அதன்மூலம் இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பது கடினமான செயல்.
யூரோப்பிய யூனியனோ, பணத்தால் அகதிகள் பிரச்சனையைத் தீர்த்துவிடலாம் என்று கருதுகிறது. ஆப்பிரிக்காவின் வட கிழக்கு மூலையில் உள்ள நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனை கட்டுக்குள் வந்துவிடும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் சர்வாதிகாரியான சூடானின் உமர் அல்-பஷீர் போன்றோருக்கு டாலர்களை வாரி வழங்குகிறது. ஆனால் எரித்ரியா போன்ற நாடுகளிலிருந்து இடம் பெயரும் மக்களை பணம் கொடுப்பதன் மூலம் தடுத்து நிறுத்த இயலாது. ஜெர்மனியின் பல பகுதிகளில், குறிப்பாக ஃப்ராங்க்பர்டில் எரித்ரியர்களுக்கான தனிப்பட்ட பார்கள், அவர்கள் கூடுமிடங்கள் போன்றவை தோன்ற ஆரம்பித்துவிட்டன. கடத்தல்காரர்களும் புதுப்புது பாதைகளைக் கண்டுபிடித்து மக்களை ஆப்பிரிக்காவிலிருந்து யூரோப்பாவிற்குக் கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
எனவே, எவ்வளவுதான் யூரோப்பிய யூனியன் முயன்றாலும், அகதிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. அவர்களை கடத்துபவர்களும் வளமான பகுதிகளைத் தேடிச்செல்லும் மக்களின் ஆசையைப் பயன்படுத்தி தாங்கள் செல்வத்தில் கொழிக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய யூரோப்பிய நாடுகளின் காவல்துறைகளோ, ஒன்றுக்கொன்று முரண்பட்டு கடத்தல்காரர்களின் ஆட்களைக் கோட்டை விட்டுக்கொண்டிருக்கிறது. கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கியப் புள்ளிகள், ஆப்பிரிக்க சர்வாதிகாரிகளின் அரவணைப்பில் நிம்மதியாகத் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். இக்கடத்தலை தடுப்பதற்கு அந்தச் சர்வாதிகார அரசுகளுக்கே யூரோப்பிய யூனியன் நிதி உதவி செய்வது ஒரு நகைமுரண்.

One Reply to “அகதிக் கடத்தல்”

  1. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, நான் கிழக்கு ஆப்ரிக்காவின் அடிஸ் அபாபாவில் வாழ்ந்த போது இந்த இடைத்தரகர்களின் கொடுமையை நேரடியாக பார்த்திருக்கிறேன்.
    ஈழத் தமிழர்களை ஆசைக்காட்டி பெரும்பணத்தை பறித்து, கொண்டு வந்து எங்கையாவது விட்டுவிட்டு, திரும்பி போகும் பயணச்சீட்டை வாங்கி கொண்டு போய்விடுவது. இடைத்தரகர்களும் தமிழர்கள்தான்; சிங்கபூர் அல்லது மலேசியாவிலிருந்து இந்த மாபியா வேலை செய்வது.
    பத்து குடும்பங்கள் பட்ட அல்லல் வாழ்நாளில் மறக்க முடியாது.
    முடிந்த உதவிகள் செய்தோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.