ஸெரங்க்கெட்டி நான்காம் நாள்

serengeti_treelion
வயசான தாத்தாக்கள் நோய்மையில் அனத்துவது போல ஒரு சத்தத்துடன் மாடுமுக மான்கள் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தன. மெல்ல வண்டியைக் கிளப்பி, கிழக்கு திசையில் நகர்த்தினார் ஜெர்ரி.. ஒரு ஓடை குறுக்கிட்டது. அதன் மேலுள்ள பாலத்தில் கடந்த போது, ஓடையினுள் ஒரு நீர்யானை கண்களை நீர்ப்பரப்பின் மேல்நிறுத்தி, எங்களை நோட்டம் விட்டது.  பாதை ஒடையின் திசையில் திரும்பியது. சற்று தூரத்தில்,  வளைந்து வடக்கு திசையில் திரும்ப, அத்திருப்பத்தில், நிறைய சஃபாரி வண்டிகள் நின்று கொண்டிருந்தன. ஜெர்ரி நிறுத்தினார்.  நிறுத்திய இடத்தில் இருந்து ஓடை  இப்போது ஒரு 20 அடி கீழே இருந்தது. ஓடையின் கரையில் மரத்தூண்களால் ஆன  தடுப்பு இருந்தது. ஒடைச் சரிவில் யாரும் தவறி ஓடையுள் விழுந்து விடாமல் இருக்க. ஏனெனில், ஓடையின் அந்த இடத்தில் ஒரு பெரும் நீர்யானைக் கூட்டம் கூடியிருந்தது. விழுந்தால் சட்னிதான். இவ்வளவு அண்மையில் நெருங்கி வாழும் விலங்கு பிரிதொன்றில்லை எனத் தோன்றுகிறது. மீன் கூட்டங்கள் இருக்கலாம். ஆனால், தரையில் இது ஒரு வித்தியாசம்தான். ஒன்றின் மீது ஒன்று படர்ந்து மெல்ல வெயிலை உள்வாங்கிக் கொண்டிருந்தன.
நிதானமான சூழல். ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு விலங்கு நகரும். அதை சுற்றியிருக்கும் மற்றவை ஆட்சேபித்து, சில டிகிரிகள் தள்ளி மீண்டும் அனைத்தும் மோன நிலைக்குச் செல்லும்.  சில ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால், உலகம் கார்களிலும், ரயில்களிலும், விமானத்திலும் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? இப்படிப் பேசாமல் சிவனேன்னு இருந்தால் என்ன? என்றொரு நினைவு வந்தது. ஹ்ம்ம்..
வெயில் சுட்டது. சஃபாரி வாகனத்தை நோக்கி நகர்ந்தோம்.
நகர்ந்து, வாகனம் வேகம் பிடித்து, ஓடையிலிருந்து கொஞ்சம் தள்ளி வந்ததுமே மீண்டும் வேலா முட்காடு. தொலைவில் ஒரு சபாரி வாகனம் நின்றது. இப்படி வழியில் சஃபாரி வாகனங்கள் நின்றால் விஷேசம்.  அங்கே ஏதோ இருக்கிறது. அருகில் செல்கையில் ஒரு வெள்ளைத் தோழர் வேலா முள் மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நாங்களும் நோக்கினோம். வாவ்.. மரத்தின் மேல் சிங்கம். மன்யாராவில் பார்க்காத மரமேறும் சிங்கம்.
”சிங்கங்கள் ஏன் மரமேறுகின்றன?” எனக் கேட்டேன் ஜெர்ரியிடம்.   “கீழே சில சமயம் பூச்சிகள் தொந்தரவு தரும். கோடையில் தரை விரைவில் சூடாகி விடும். மரக்கிளையில் நல்ல காற்று வரும்.  அப்புறம், தொலைவிலேயே இரையைக் காண முடியும். இப்படிப் பல காரணங்கள்”, என்றார்.  நாங்கள் அவதானித்த வரையில் அந்த மரத்தில் இரண்டு சிங்கங்கள் இருந்தன. ஒன்றின் வால் மட்டும் தெரிந்தது. இன்னொன்று இளந்தூக்கத்தில் சொக்கிக் கொண்டிருந்தது. விழுந்து விடாதா என ஒரு ஐயம் வந்தது.
சிறிது நேரம் அவதானித்து விட்டு வண்டியை ஸெரெங்கெட்டி விமான ஓடுதளத்துக்கு அருகில் இருந்த ஒரு வாகன பழுது பார்க்கும் மையத்துக் கொண்டு சென்றார். மாற்று டயர்கள் வந்துவிட்டிருந்தன.  அருகில் ஃப்ராங்ஃபர்ட் விலங்கியல் கழகத்தின் ஆதரவில் கட்டப்பட்டிருந்த கட்டிடம் இருந்தது. வாகனங்களிலும் ஃப்ராங்ஃபர்ட் விலங்கியல் துறையின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.  20 நிமிடங்களில் டயரை மாற்றி விட்டு, உற்சாக மாகக் கிளம்பினோம். இப்போது, வாகனம், ஓடதளத்தில் அருகே உள்ள ஒரு உணவு உண்ணும் மையத்துக்குச் சென்றது. மதிய உணவு நேரமாகிவிட்டது.
உணவுப் பொட்டலங்லளைத் திறந்தோம். சுற்றிலும் கீரிப்பிள்ளைகள். கசகசவென உணவு மேசையைச் சுற்றி ஓடி வந்து முன்கால்களைத் தூக்கி, எங்களை நோக்கின. “தயவு செய்த உணவைக் கொடுக்க வேண்டாம்” என ஜெர்ரி சொன்னார்..  அத்தனை கீரிகளின் நடுவே அமர்ந்து உணவை உண்பது கொஞ்சம் அசௌகர்யமாக இருந்தது. உண்ட மிச்சம் குப்பைத் தொட்டிக்குப் போனது. இக்குப்பைகளை என்ன செய்வார்கள் எனக்கேட்டேன் – இவை ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்டு, ஸெரெங்கெட்டியின் ஒரு பாதுகாக்கப்பட்ட இடத்தில் எரிக்கப்பட்டு விடும் என்றார்.
மதிய உணவு முடிந்ததும், மீண்டும் கிளம்பினோம். கொஞ்ச நேர அரைத் தூக்கத்தில், மீண்டும் யானைகளையும், ஒட்டகச் சிவிங்கிகளையும் கண்டோம். பரபரப்பாக ஒன்றுமில்லை. பின்னால் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து, ஒரு பாட்டில் நீரை எடுத்துக் குடித்து விட்டு, அந்தக் குளிர் பாட்டிலை கண்களில் ஒத்திக்  கொண்டேன். தூக்கம் போனது.  சற்று நேரத்தில், வண்டியில் இருந்த வயர்லெஸ் உயிர் பெற்று ஜெர்ரியை அழைத்தது. எடுத்துப் பேசிய ஜெர்ரியின் முகத்தில் சிறு புன்னகை.
“என்ன ஜெர்ரி..”  என்றேன். “நல்ல செய்தி. ஒரு சிங்கம் மாடுமுக மானை வீழ்த்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். போகலாம்.” என உற்சாகமாகக் கிளப்பினார். தூரத்தில் ஒரு சஃபாரி வாகனம் நின்று கொண்டிருந்தது. அத்தோடு ஜோடியாக நிறுத்தி, சன்னலைத் திறந்து, சஃபாரி வாகனத்தின் ஓட்டுனரோடு ஸ்வாஹிலியில் பேசினார்.
ஒரு  500 மீட்டருக்கு அப்புறம் ஒரு மானை பெண் சிங்கம் வீழ்த்தி விட்டு, இங்கே வந்திருக்கிறது. அநேகமாக அதன் குட்டிகள் இங்கே இருக்கலாம். பெண் சிங்கம் திரும்பி வர காத்திருக்கிறோம். சிறிது நேரம் காத்திருந்தோம்.
புல்லுக்குள் சலசலப்பு. பெண் சிங்கம் தென்பட்டது. குட்டிகளோடு வருகிறது என்றார். ஆனால், புல் உயரமாக இருந்ததால், குட்டிகள் தென்படவில்லை.
உடனே வண்டியைக் கிளப்பினார் ஜெர்ரி. வலது புறத்தில் தொலைவில், பல சஃபாரி வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அங்குதான், கொல்லப்பட்ட மாடுமுக மான் கிடக்கும் என்றார். அங்கே சென்று ஒரு வாகான இடத்தில் வண்டியை நிறுத்தினார். தொலைவில், கொல்லப்பட்ட மான் உடல் கிடந்தது.

serengeti_lionwindebeest

மெல்ல மெல்ல பெண் சிங்கம் மான் உடலை நோக்கி வந்தது. சற்று புல்லின் உயரம் குறைவான இடத்தில் குட்டிகளும் தெரிந்தன.  உடலை நெருங்கியதும், குட்டிகள் உடல் மேல் ஏறின. பெண் சிங்கம் ஒரு அதட்டல் போட்டது. உடனே உடலை விட்டு இறங்கி விட்டன. பெண் சிங்கமும், குட்டிகளும், மானுடல் அருகே படுத்துக் கொண்டன. “ஏன்?” என வியப்பாகக் கேட்டேன்.. “அருகில் ஆண் சிங்கம் இருக்கும்.. அது வருவதற்காக இவை காத்திருக்கும்” என்றார் ஜெர்ரி. எனக்கு பம்மல் கே சம்பந்தம் பட வசனம் நினைவுக்கு வந்தது. கஷ்டப்பட்டு பெண் சிங்கம் வேட்டையாட வேண்டியது. கடைசியில் தமிழ் சினிமா போலிஸ் மாதிரி என்ட்ரி கொடுத்துட்டு, துன்னுட்டுப் போக வேண்டியது. அதும் மூஞ்சில பீச்சாங்கைய வைக்க என மனதுள் திட்டிக் கொண்டு காத்திருந்தோம். இப்போது கிட்டத்தட்ட 10-15 சஃபாரி வண்டிகள் வந்து சம்பவ இடத்தைச் சூழ்ந்து கொண்டன. இப்படி இவ்வளவு வண்டிகள் நிற்பது சிங்கங்களுக்குத் தொந்தரவாக இருக்காதா என நினைத்தேன். சிங்கங்கள் அதைக் கண்டு கொண்டா மாதிரியே இல்லை. இடது புறத்தில் ஒரு நூறு மீட்டர் தொலைவில், பெரும் மாடுமுக மான்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது. அவ்வப்போது மேய்வதை நிறுத்தி தலையுயர்த்தி, வீழ்ந்து கிடந்த மானின்  பக்கம் பார்த்தன. அவற்றின் ஓரத்தில் சில வரிக்குதிரைகள்.
சஃபாரி வண்டிகளுள் சலசலப்பு. வந்துட்டார்பா ஆம்புள சிங்கம். வாலை உயர்த்தி, மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே வந்தது. மான் உடல் இருக்கும் இடம் வந்ததும் புல்லுக்குள் சட்டெனப் படுத்துக் கொண்டது.
“இன்னாடா இது.. கோச்சிகினாரா?” என பேஜாராயிட்டோம்.
பெண் சிங்கம் எழுந்து, ஆண் சிங்கத்தை நோக்கியது.  ஆண் சிங்கம் வாலை மட்டும் ஆட்டுவது புல்லுக்கு மேலே தெரிந்தது.
“இப்ப இன்னான்றே? துண்றதுக்கு வர்ரியா இல்லையா? – வசனம் உதவி பாலா
ஆண் சிங்கம் அசையவில்லை. மீண்டும் வாலாட்டம்.
பெண் சிங்கம் திரும்பியது. “ம்ம்” என ஒரு சிறு உறுமல் போட்டது. குட்டிகள் பாய்ந்தன மான் உடல் மீது.  பெண் சிங்கமும் மான் உடலை உண்ணத் துவங்கியது.
“இந்தா பாரு, ஊட்டுக்காரன்கிறதுக்காக, ஒரு தபா மரியாதைக்குக் கூப்புடுவேன். ரொம்ப ராங் காட்டினா. நான் போயிக்கினே இருப்பேன். வசனம் உதவி – பாலா
சில நிமிடங்களில், குட்டிகள் முகம் முழுதும் ரத்தம் பூசிக் கொண்டு மேலும் கீழும் ஏறி இறங்கி விளையாடின. ஆண் சிங்கம் அசைந்து கொடுக்காமல் படுத்திருந்தது.  ஒரு வேளை சேரன் படங்கள் போல, குடும்பத்துக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் பாசக்கார அப்பாவோ என நினைத்துக் கொண்டேன். துக்கமாக இருந்தது.
அரைமணி நேரத்துக்குப் பின்பு போரடிக்கத் துவங்கியது. “போலாமா? நாம் விடுதியை அடைய இன்னும் 2 மணி நேரம் ஆகும். போகும் வழியில் இன்னும் காட்சிகள் இருக்கும்..” என்றார் ஜெர்ரி. கிளம்பினோம்.
போகும் வழியில், ஓரிடத்தில், பாதையில் இருந்து, புல்வெளிக்குள் டயர்த் தடம் சென்றது. ஜெர்ரி உற்சாகமாக, அதில் செலுத்தினார். இங்கே இன்னொரு வேட்டை நடந்ததாகச் சொன்னார்கள் என. புல்வெளியினுள் சில நூறு மீட்டர்கள் சென்றும் ஒன்றும் தென்படவில்லை. மீண்டும் பாதைக்கு வந்து தென் திசை நோக்கி வாகனம் செல்லத் துவங்கியது.  நீண்ட புல்வெளி. ஒன்றிரண்டு வேலா மரம். தட தட.. ஒரு மணி நேரம் இவ்வாறு வாகனம் சென்ற பிறகு, ஒரு மலைத்தடம் தென்பட்டது. ஓடை கடந்தது. ஓடையினூடே, வழி இரண்டாகப் பிரிந்தது. இங்கே பெரும் மரங்கள். ஆல மரங்கள் போல இருந்தன. தொலைவில், ஒரு மரத்தின் அருகில் சஃபாரி வாகனம் ஒன்று நின்றிருந்தது. அருகில் சென்றோம். ஆகா… மீண்டும் மரத்தின் மேல் சிங்கங்கள். அவை எங்களைக் கண்டு கொள்ளாமல், “போங்கடா வேலையத்த பசங்களா” எனப் படுத்திருந்தன. அவரவர் பாடு அவரவர்களுக்கு.
இருட்டத் துவங்கியது. வண்டியை விடுதியை நோக்கித் திருப்பினோம். இன்றையப் பொழுதுக்கு, கொடுத்த பணம் ஜீரணித்து விட்டது என்ற நிம்மதியோடு.
(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.