ரோஸ்லாண்ட்

lonely-girl-bus

எனக்கு இருபத்தியொரு வயதாகிறது. நியூயார்க்கிலிருந்து ஸான்பிரான்சிஸ்கோவிற்கு கிரேஹவுண்ட் பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கிறேன். குறிப்பிட்ட வழியில்தான் செல்லவேண்டும் என்ற திட்டமெல்லாம் கிடையாது. சும்மா இப்படியே மேற்கு நோக்கி என் வேகத்தில் போய்க் கொண்டிருக்கலாம் என்ற எண்ணம். ராத்தூக்கத்தை பஸ்களிலும் எதேச்சையாக எதிர்கொள்ளும் ஹாஸ்டல்களிலும் கழித்துவிடுவேன். வாரக்கணக்காக சாலைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தனிமை இப்போது தொட்டுணரும் அளவிற்கு பழகிவிட்டது. ஆனால் அமெரிக்க சூழ்நிலம் என்னை நிறைவு செய்கிறது. பிரெட்சல்களையும் பேகல்களையும் மட்டுமே உண்டு உயிர்த்துக் கொண்டிருக்கிறேன். பேருந்து நிலையங்கள் கூட கொஞ்சம் வீட்டின் பரிச்சயத்துடன் பரிணமிக்கத் தொடங்கிவிட்டன. கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கின் அழகு என்னை அழச் செய்கிறது. வெட்டுப்பிளவின் அடிவாரத்திலிருந்து உச்சிக்குப் பறக்கும் மின்நீலப் பறவைகள். பித்துப்பிடித்திருக்கும் ஆடுகள். என்றாவது ஒரு நாள், முதுமையில், கதிரவனின் வீழ்ச்சியுடன் ஒளி மாறுகையில், இந்த ஏஞ்சல் தடத்திலேயே என்னால் மகிழ்ச்சியுடன் இறந்துவிட முடியும் என்பதையும் முடிவு செய்துவிட்டேன். இருட்டினூடே பயணிக்கும் தாளத்தில் நான் சிக்குண்டு லயித்திருப்பதை என்னால் உணர முடிகிறது. அதன் அனாமதேயம் என்னைக் கவர்கிறது. எனது தனிமையும், இளமையும் ஆண்களின் கவனத்தை ஈர்ப்பதும் வழக்கமாகி விட்டது.

என்னருகே அமர்ந்திருக்கும், வியட்னாமில் பணியாற்றிய படைத்துறை வீரரொருவர் அவரது கதையை என்னிடம் கூறத் தொடங்கினார். கதை விவரணையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவருக்கு, தலையை கைகளில் பற்றியபடி முகத்தை என் கவட்டையில் இருத்துவதற்கான ஒரு அத்தியாவசியத் தேவை எழுந்தது. சாராய நெடியுடன் அவரது சீரான மூச்சுக்காற்றை என் ஜீன்ஸினுள் வெப்பமாய் உணர முடிந்தது.. அதன்பின் அவர் கதையைத் தொடராமல் அசையாதிருந்தார். என் பொச்செலும்பின் மீது அவர் கனமாக மூச்சிருத்துவதை நான் தடுக்கவில்லை. என் அடிமுதுகை இறுக்கமாக பற்றினார். அது ஒரு மௌனமான மன்றாடலே. “இங்கேயே இருந்து விடவா? மீண்டும் எல்லாம் தொடங்கிய இடத்திலேயே?’. அவரது உச்சந்தலையையே முறைத்திருந்த நான் சன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கினேன். அதன்பின் அவர் தலைமுடியை வருடத் தொடங்கினேன். தாய்மையுணர்வுடன் விசித்திரமாக உயிர்த்திருப்பதை என்னால் உணர முடிந்தது. ஒரு வாரத்திற்குப் பிறகு மற்றொரு படைத்துறை வீரர் தன் வாழ்க்கையை வாக்குமூலமாக என்னிடம் ஒப்பித்தார். அவரும் அதே போல் என் தொடைகளுக்கிடையே சுருண்டு கொண்டு அழுதார். ஆனால் இம்முறை நான் ஆறுதல் ஏதும் அளிக்க முயலவில்லை. ஏமாளிப் பெண்ணொருத்தியைப் பற்றிய செய்தி கள்ளடு வாக்கிதாக்கிகளின் மூலமாக பரவலாக அறியப்பட்டிருக்குமோ என்றவொரு சந்தேகம் எனக்கு இருந்தது.

பஸ் டெக்சஸை நோக்கி சென்று கொண்டிருந்தது. மணி 2.00 a.m. நெடுஞ்சாலையையும் அதன் விளக்குகளையும் பார்த்திருந்தேன். முரட்டு துங்கிரித் துணியணிந்த கொழுக்கு மொழுக்கு பையனருகே அமர்ந்திருந்தேன். கருமையான சுருண்ட கேசம். அனேகமாக கன்னி கழியாத இருபத்தியொரு வயது வாலிபன். அவன் தோளில் சாய்ந்து நான் தூங்கத் தொடங்கினேன். அரைத்தூக்கத்தில் அவனது கரத்தின் கதகதப்பை என்னால் உணர முடிந்தது. என் மேற்சட்டையை போர்வையைப் போல் என் மீது போர்த்தியிருந்தேன். அவ்வாறு செய்ததால் மறைவான அந்தரங்க இடமொன்றை ஏற்படுத்திவிட்டிருந்தேன். விரைவில் என் தூக்கத்தின் ஆழத்தை பரிசோதிப்பதற்காக அவன் கை என் முட்டி மீது உரசுவதை என்னால் உணர முடிந்தது. கனவிலிருப்பதைப் போல் பாவனை செய்துவிட்டு மெல்லிய பெருமூச்சொன்றை எழுப்பினேன். தன் கையை உத்தேசமாக என் காலின் மீது இருத்தினான். அதன்பின் கை என் தொடைப்பக்கமாக நகர்ந்தது. இன்னமும் அதே போலி உடந்தையுடன் அவனிடம் இன்னும் நெருக்கமாக என்னை இருக்கிக் கொண்டேன். பத்து நிமிடங்களிற்கு ஒரு இஞ்ச் என்ற விகிதத்தில் அவன் கை மேலே நகர்ந்து சென்றது. இவ்விளையாட்டு இறுதியில் அவன் பிஞ்சு விரல்கள் என்னை துளைந்தாறாய்வதில் சென்று முடிந்தது. உள்ளே அனுமதிக்கப்பட்டதில் அவன் அடைந்த நீரழுத்தப் பேருவகையை உணர்ந்தேன். இதனால் மகிழ்ச்சியேதும் எனக்கு ஏற்படவில்லை. வலியும் கூட. என் தனிமை தணிவுற்று அவன் தேவையால் மாற்றீடு செய்யப்பட்டது. அதுவே அவன் மேலும் தொடர்வதற்கு போதுமாக இருந்தது. இது ஒரு விளையாட்டு.  நான் நன்றாக ஆற்றவிரும்பும் ஒரு விளையாட்டு. இறுதியில் சலிப்படைந்து அவனிடமிருந்து விலகினேன், என் கனவுப்படுக்கை மீண்டும் இடம்பெயர்த்து விட்டதுபோல். என் முதுகு அவன் பக்கம் திரும்பியிருக்க, என்னை மைல்கணக்காக மென்மையாக பற்றியிருந்தான். ஒரு மாநிலத்தினூடாக மற்றொரு மாநிலத்திற்குள்.

விழித்துக் கொள்வது போல் பாவனை செய்தேன். துங்கிரியணிந்த பையன் என்னையே முறைத்துக் கொண்டிருந்தான். கைகளை கால்சட்டைப் பைகளுக்குள் பொருத்திக் கொண்டான். வானம் தூள்நீலத்தில் மிளிர்ந்தது. பஸ்ஸில் பெட்ரோலும் நச்சுக்கொல்லியும் கலந்த ஒரு வாடை அடித்தது. ‘மார்னிங்என்று அவன் கூறினான். நான் எதிர்பார்த்ததை விடவும் நேரடியாகவே அவன் பேசினான். நான் முறுவலித்தேன். ‘அடுத்த ஸ்டாப் ரோஸ்லண்ட்கூச்சம் சிறிதுகூட இல்லாமல் துணிவாகக் கூறினான். “ நான் ரோஸ்லண்டில் தான் வாழ்கிறேன். நீயும் அங்கேயே இறங்கிவிடுகிறாயா?” நான் அவனைவிட ஒரு வருடம் பெரியவளாக இருக்கலாம், ஆனால் அவனுடைய விடலைத்தனத்துடன் ஒப்பிடுகையில் நான் ஏதோகாலத்திற்கே அன்னைபோல் இருந்தது. “”இறங்கறயா?” மீண்டும் கேட்டான். நான் ஒன்றுமே கூறாமல் வெள்ளை வேலிகள் நிரம்பிய வாழ்க்கைக்கு நிரந்தரமாக பிரியா விடையளிப்பது போல் தலையை மட்டும் ஆட்டினேன். ஆப்பிள்களுக்கும் கூட. துங்கிரி அணிந்திருக்கும் ரோஸ்கன்னங்களுடைய குழந்தைகளுக்கும் கூட. அல்லது ஒருகால் காஸ் ஸ்டேஷனில் வாய்க்கும் ஒரு குடிகார வாழ்க்கைக்காகவும் இருக்கலாம்.

—————————-

Roseland by Rebecca Lenkiewicz, Granta Issue 110