காவேரியும் இல்லத்தரசியும்

இன்று காலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போடும்போது தான் அந்த மாற்றத்தை உணர்ந்தேன். ஏறக்குறைய அதே நேரத்தில்தான் எங்கள் பக்கத்துவீட்டு மங்களகௌரம்மாவும் வாசல் தெளிக்க வருவார். இப்போதெல்லாம் அவரைக் காணோம். காணோம் என்பதை விட என்னை தவிர்க்கிறார் என்று எண்ணத் தோன்றியது. நான் கோலம் போடுவதற்கு முன்பே அவர் வீட்டு வாசலில் கோலம். அப்படி ஒருவேளை நானும் அதே நேரத்தில் எங்கள் வீட்டுக் கதவைத் திறந்தால் சட்டென்று கதவைச் சாத்தி விடுகிறார் – கோலத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு அல்லது தலையை நிமிராமல் கோலத்தை முடித்துவிட்டு உள்ளே சென்று விடுகிறார். என்னைப் பார்த்து குறைந்த பட்சம் சின்னதாக ஒரு புன்னகை கூட இல்லை. ஒருமாதம் முன் வரை நான் கோலம் போட்டு முடியும் வரை நின்று பார்த்து, பாராட்டிவிட்டுப் போவார்.
இதே மங்களகௌரம்மா என்னை பலசமயங்களில் பாராட்டியிருக்கிறார். எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தின் திறப்பு விழாவின் போது இறைவணக்கம் பாடச் சொன்னபோது ‘தேவ பந்த, நம்ம ஸ்வாமி பந்தானோ’ என்று பாடலைப் பாடியவுடன் ‘எங்களூருக்கு வந்து எங்கள் மொழியைக்கற்று இத்தனை நன்றாகப் பாடவும் செய்கிறீர்களே’ என்று பாராட்டியிருக்கிறார். இப்போது என்னவாயிற்று? நான் அயல்தேசத்தவளாகிப் போனேனா?
ரோமில் இருக்கும்போது ரோமானியனாக இரு என்பதை இந்த ஊருக்கு வந்த நாள் முதல் கடைபிடித்துக் கொண்டு வருபவள் நான். என் குழந்தைகளுடனேயே இந்த மொழியை எழுத படிக்கக் கற்றுக்கொண்டேன். இந்த ஊருக்கு வந்த புதிதில் நானும் என் குழந்தைகளும் பாட்டு வகுப்புகளுக்கு போவோம். அங்கும் அந்த ஆசிரியையுடன் எனக்குத் தெரிந்த அளவிற்கு கன்னட மொழியில் பேசுவேன். எழுதப் படிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தவுடன் அந்த ஆசிரியை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது பாட்டு நோட்டுப் புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டார். ‘உங்களுக்கு என்ன பாட்டு வேண்டுமோ சொல்லுங்கள், கற்றுத் தருகிறேன்’ என்றார் ரொம்பவும் சந்தோஷமாக.
இந்த ஊருக்கு வந்ததிலிருந்து திருமதி ராவ் எனக்கு நெருங்கிய தோழி. முதல் முறை அவரது வீட்டிற்குப் போனபோது வீட்டிற்குள் நுழையாமல் அவரது வீட்டு வாசலில் எழுதியிருந்த பெயரை எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டு உள்ளே போனேன். ‘உங்கள் வீட்டின் பெயர் ‘ரஜதாத்ரி’யா? என்றேன். அவர் வியப்புடன் ‘எப்படித் தெரிந்தது?’ என்றார். ‘வாசலில் எழுதியிருக்கிறதே!’ என்றேன். ‘பொதுவாக வெளியூரிலிருந்து வருகிறவர்கள் பேச மட்டுமே கற்றுக்கொள்வார்கள்; நீங்கள் ஒருபடி மேலே போய் படிக்கவும் கற்றுக் கொண்டு விட்டீர்களே!’ என்று பாராட்டினார். வருடாவருடம் கணேச சதுர்த்தியன்று இவர்கள் வீட்டில் இவர்களது உறவினர்களுடன் நாங்களும் கூடியிருந்து குளிருவோம். இனி இது சாத்தியமா?
இவர்கள் இருவரும் இன்னும் என் தோழிகளாகவே இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கமுடியுமா? இப்போதிருக்கும் நிலையில் ‘எங்கிருந்தோ வந்து எங்கள் மொழியை பேசி படித்து எங்களைப் போலவே இருக்க நினைத்தாலும் நீங்கள் வேறு நாங்கள் வேறு’ என்று நினைப்பார்களோ?
நான் காவிரிக்கரையில் பிறந்தவள்; காவிரிக்கும் எனக்கும் தொப்புள்கொடி உறவு. வருடாவருடம் கோடைவிடுமுறைக்கு எங்கள் ஊருக்குப் போய் தினமும் கொள்ளிடத்தில் நீராடியவள். எனக்கும் காவிரிக்கும் உள்ள தொடர்பு எங்கள் மூதாதையர்கள் காலத்திலிருந்து தொடருகிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் காவிரிக்கரையில்.
rainஒரே தேசத்தில் இருந்துகொண்டு எங்கள் ஊர், உங்கள் ஊர் என்று சொல்லுவதே அவமானம் அல்லவா? நீர் அடித்து நீர் விலகாது என்பார்கள். ஆனால் நீர் காரணமாக இரு மாநில மக்கள் பகைமை பாராட்டும் நிலை ஏன் வந்தது? இது நம் தேசம் இல்லையா? இந்தியா எனது தேசம்; இந்தியர்கள் எல்லோரும் என் சகோதர சகோதரிகள் என்று சிறுவயதில் உறுதிமொழி எடுத்தோமே. எப்படி அதை மறந்தோம்?
சென்ற வாரம் ஒரு நாள் வெளியே செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். எங்கே போகவேண்டும் என்று சொல்லிவிட்டு ஏறி உட்கார்ந்தேன். இந்த ஆட்டோக்காரர்களிடம் எனக்கு எப்போதுமே ஒரு சின்ன பயம், காரணம் இதுதான்: ஒருமுறை நான் வண்டிக்குள் ஒருகாலை வைத்தவுடன் கிளம்பிவிட்டார் அந்த ஆட்டோ ஓட்டுனர். ‘நிலிசி! நிலிசி!’ (நிறுத்துங்க, நிறுத்துங்க) என்று சத்தம் போட்டேன். ஒரு பத்து இருபது அடி போயிருப்பார் அதற்குள். கிட்டத்தட்ட ஆட்டோவின் கம்பியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே கடந்திருந்தேன் அந்த தூரத்தை. ஒரு கால் வெளியே, ஒரு கால் உள்ளே! இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது! இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆட்டோவில் ஏறுவதற்கு முன் ஓட்டுனருக்கு ஒரு வேண்டுகோள் விடுப்பேன்: ‘நான் கொஞ்சம் நிதானமாகத்தான் ஏறுவேன்’ என்று. நடுவயதுக்காரர்கள், சற்று வயதானவர்கள் என்றால் என் சங்கடம் அவர்களுக்குப் புரியும். பெங்களூரில் இன்னொரு அவஸ்தை நடைபாதைகள். நடைபாதைகளின் மேல் ஏறுவதற்கு ஒரு சின்ன ஏணி வேண்டும். சாலைகள் ஏறி இறங்கிச் செல்வதால் நடைபாதைகளும் ஓரிடத்தில் மிகவும் உயரமாகவும் ஓரிடத்தில் சற்றுத் தாழ்வாகவும் இருக்கும். எங்கு தாழ்வாக இருக்கிறதோ அங்கு போய் நடைபாதையின் மேல் ஏறி நின்று கொண்டுதான் ஆட்டோவையே கூப்பிடுவேன் – ஆட்டோவில் ஏற வசதியாக இருக்கும் என்று.
இத்தனை ஜாக்கிரதை செய்து கொண்டுதான் அன்றும் பயணித்தேன். வழக்கம்போல ‘கொஞ்சம் நிதானமாகவே ஏறுவேன், தயவு செய்து பொறுமையாக இருங்கள்’ என்று கன்னட மொழியில் – கூறிவிட்டுத்தான் ஏறி உட்கார்ந்தேன். அந்த ஓட்டுனரும் ‘மெதுவாக ஏறுங்கள் அவசரமில்லை’ என்றார். ‘ஒவ்வொருத்தர் வயதானவர்களை ஏற்றிக்கொள்ள மாட்டார்கள்; நான் அப்படியல்ல. கவலைப்படாமல் வாருங்கள்’ என்று மிகவும் பரிவாகப் பேசினார். நானும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அடுத்த நிமிடம் அவர் கேட்ட கேள்வி என்னை திடுக்கிட வைத்தது: ‘எந்த ஊரும்மா உங்களுக்கு?’ ‘இந்த ஊருதான்!’ என்று சட்டென்று பதில் சொல்லிவிட்டு வாயை இறுக மூடிக்கொண்டேன். எதற்காக திடீரென்று என் ஊரைப்பற்றிக் கேட்கிறார் இவர்? நான் பேசிய கன்னட மொழி என்னைக் காட்டிக் கொடுத்திருக்குமோ? என்னதான் கன்னட மொழியை பேச, படிக்கக் கற்றுக்கொண்டாலும் என்னுடைய தாய்மொழியின் தாக்கம் நான் பேசும்போது சிலசமயம் இருக்கத்தான் செய்கிறது.
நான் இறங்கவேண்டிய இடம் வந்து இறங்கும் வரை மனதிற்குள் கவலை, பயம் என்று சொல்வதைவிட சின்னதாக ஒரு பீதி பரவியது என்பதுதான் சரி. ஒவ்வொருமுறை காவிரி நீர் பிரச்னை வரும்போதும் நானும் என் கணவரும் பலவித முன்னெச்செரிக்கைகளை மேற்கொள்வோம். தினமும் பலவருடங்களாக நெற்றியில் இட்டுக்கொள்ளும் ஸ்ரீசூர்ணம் அவரது நெற்றியில் இடம்பெறாது. நான் புடவைத் தலைப்பை இழுத்து மூடிக்கொண்டு (வாயை மட்டுமல்ல!) எனது கழுத்தை மறைத்துக்கொண்டு நடப்பேன். என் கழுத்தில் இருக்கும் கருகமணி கோர்க்காத ஒற்றைச் சங்கிலி என்னை தமிழச்சி என்று அடையாளம் காட்டிவிடுமே! நாங்கள் இருவரும் ஒன்றாக வெளியில் போக நேர்ந்தால் தாய்மொழியை மறைத்து இந்த ஊர் மொழியில் பேசிக்கொள்வோம். வெளியே போவதை தவிர்த்து விடுவோம்.
என் கணவர் ஓலா காரில் வெளியில் போனபோது அந்த ஓட்டுனர் ‘நாம எதுக்கு ஸார் நீர் கொடுக்கணும்?’ என்று கேட்டு என் கணவரின் வாயைக் கிளறியிருக்கிறார். ‘ஆமா, ஆமா நீங்கள் சொல்வது சரி’ என்று சொல்லிவிட்டு வாயை மூடிக் கொண்டுவிட்டாராம்.
ஒவ்வொருமுறை காவிரி நீர் பங்கீடு பற்றிய பிரச்னை வரும்போதும் சிறிது சுணக்கம் வரும். ஆனால் இந்தமுறை சற்று எல்லை மீறிவிட்டது. ஏதோ அரசியல்வாதிகளின் சமாச்சாரம் என்று இருப்போம். ஆனால் இந்தமுறை தனிமனிதர்களிடையே வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. பகிரங்கமாக அதை வெளியே காட்டவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தின் போது நாங்கள் இருவரும் சென்னையில் இருந்தோம். ‘நிலைமை சரியாகும் வரை வரவே வராதீர்கள்’ என்று எச்சரிக்கை மேல் எச்சரிக்கை எங்களுக்கு. எப்போது வீடு வந்து சேருவோம் என்று ஆகிவிட்டது எங்களுக்கு. இந்த ஊரை எங்கள் அகமாகக் கொண்டு முப்பது வருடங்கள் ஆகிவிட்டதே.
என் தேசத்தில் எனது பக்கத்து மாநிலத்தில் நான் தைரியமாக நடமாட முடியவில்லை என்பது எத்தனை துக்ககரமான விஷயம்! என் தாய்மொழியை நான் இங்கு பேசுவதற்கு யோசிக்க வேண்டுமா? எனது பேரன் பேத்திகளுக்கு காவிரி என்பது வெறும் வரைபடத்தில் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டுமா? தென்பண்ணை, பாலாறு போல இந்த ஜீவநதியும் என் மாநிலத்தில் காணாமல் போய்விடுமோ? நீரின்றி அமையாது உலகம். அந்த நீரின் காரணமாகவே இரண்டு மாநிலங்களுக்கு இடையில் சச்சரவுகள் ஏற்படும் என்றால் யாரைக் குற்றம் சொல்வது? யாரிடம் நம் குறைகளைச் சொல்லிக்கொள்வது?
இன்னும் போகப்போக நிலைமை மோசமடையும் என்று சொல்லுகிறார்கள். கேட்கும்போதே மனம் பரிதவிக்கிறது. யார் நமக்கு உதவப்போகிறார்கள்? மனிதர்களை நம்புவதை விட இயற்கையை நம்பலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
‘மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!’

2 Replies to “காவேரியும் இல்லத்தரசியும்”

  1. ~ஒவ்வொரு கர்நாடகாவாழ் தமிழ் மக்களின் மனக்குமுறல் இப்படிதான் இருக்கிறது. தமிழ்நாட்டைப்பற்றியே அறியாத இளம்சமுதாயமும் கர்நாடகாதான் தங்களின் சொந்த மானிலம் என்ற எண்ணங்களுடன் அங்கு நிலை பெற்றுள்ளது. எவரின் மனமும் புண்படாது அனைவரையும் காவிரி அன்னைதான் காப்பாற்றவேண்டும். உணர்ச்சி பொருந்திய கட்டுரை. அன்புடன்

  2. உங்களது காவிரிக்கட்டுரையை இப்போதுதான் படித்தேன். பெங்களூரில் வாழும் உங்களது மன சஞ்சலம் புரிகிறது. ஏனெனில் நானும் ஆறுமாதங்களாக பெங்களூரில் இருக்கிறேன். காவிரி தலைவிரித்தாடியதை இங்கு கண்ணாரக் கண்டேன்! உங்களுக்காவது 30 வருட வாழ்வனுபவம். கன்னடம் எழுதப்படிக்கத்தெரியும். நன்றாகப் பேசவும் செய்கிறீர்கள். என்பாடு இங்கே திண்டாட்டம்.நானும் டாக்ஸி, ஆட்டோ என்று அலைபவன். வாயை மூடிக்கொண்டுவருவது எனக்கு கைவராத கலை. வாயைத் திறந்தால் தமிழ் குதித்துவிடுகிறது. காவிரியின் உச்சத்தில் எனது உறவினர்களால் எச்சரிக்கப்பட்டேன்: `தமிழில் பேசாதே! ஹிந்தியில் பேசு!`அவர்களுக்கென்ன, டெல்லியில் உட்கார்ந்துகொண்டு புத்திமதி சொல்லிவிடுகிறார்கள். நம் வாயில் முதலில் என்னவரவேண்டுமோ அதுதானே வரும்!
    நீங்கள் சொல்வதுபோல் ஒவ்வொரு மாநிலத்தையும் அன்னிய தேசம்போல் பார்க்கமுடியுமா என்ன? அடுத்த தலைமுறை இந்தியா முழுதும் பரந்துகிடக்கிறார்களே, அவர்கள் என்ன ஃப்ரெஞ்சிலா பேசுவார்கள்? அல்லது இந்த மாநிலத்துக்காரன், அந்த ஊர்க்காரன் என கூட வசிப்பவர்களைத் தவிர்க்கத்தான் முடியுமா? காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும். கவலையை விடுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.