ரைனர் மரியா ரில்க : போய்க் கொண்டேயிரு, எந்தவுணர்வும் முடிவல்ல!

rilke

 
பொகிமிய –ஆஸ்திரியக் கவிஞரான  ரைனர் மரியா ரில்க [1875-1926] பிராகாவில் ஜெர்மன்மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர் தந்தை ஆஸ்திரிய ராணுவத்தில் பணிபுரிந்தவர்.தாய் சமூகநலப் பணியில் ஈடுபாடு கொண்டவர். ரில்கவை ராணுவ அதிகாரியாக்க விரும்பி அவரை ராணுவப் பள்ளியில் சேர்த்தனர்.அங்கு அவருக்குப் படிக்க விருப்பமில்லை.ரில்கவின் திறமையையும், அறிவுக் கூர்மையையும் உணர்ந்த அவரது நெருங்கிய உறவினர் ரில்கவை ஜெர்மன் மொழிப்பள்ளியில் சேர்த்தார். இதற்கிடையே மணவாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாத பெற்றோர் பிரிந்து விட்டனர். அதனால் ரில்கவின் இளமைக்காலம் மகிழ்ச்சியானதாக இல்லை.தனிப்பயிற்சி முறையில் பள்ளிப்படிப்பில் தேர்ந்தார். இலக்கியத்தின் மீதிருக்கும் ஆர்வத்தால் பிராகா பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படித்தார்.பட்டம் பெறுவதற்கு முன்பே 1894 ல் அவருடைய Life and Songs என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. பின்பு 1895 ல் Sacrifice என்ற இரண்டாவது தொகுப்பும், 1897 ல் Dream-Crowned என்ற மூன்றாவது தொகுப்பும் வெளிவந்தன. யென்ஸ் பீட்டர் யாகொப்ஸன் என்ற டேனிய மொழிக் கவிஞர் (Danish) அவருடைய ஆரம்பகாலக் கவிதைகளுக்கு பெரிய தாக்கமாக இருந்தவர். தொடக்காலப் படைப்ப்புகள் காதலை முன்னிறுத்தியே இருந்தன.
1897 ல் ரில்க மேற்கொண்ட ரஷ்யப் பயணம் அவர் வாழ்க்கையின் மைல் கல்லாக அமைந்து பல படைப்புகளுக்கு மூலமானது.அப்பயணத்தின்போது அவர் லெவ் டால்ஸ்தொய், அவரது நண்பரான உணர்வு பதிவுவாத ஓவியர்[ Impressionist painter] பாஸ்டர்நாக் (L. O. Pasternak), விவசாயிகளின் கவிஞன் ஸ்பிரிடொன் டிமிட்ரியெவிச் ட்ரோஸ்ஜின் (Спиридо́н Дми́триевич Дро́жжин) ஆகியோரைச் சந்தித்தார்.அவர்களுடன் தங்கியிருந்த காலத்தில் நிகழ்ந்த விவாதங்கள் அவர் தன்னை வளர்த்துக் கொள்ள உதவியது. கலையை மதமாக நினைக்க அந்தச்சூழல் உதவியது. பின்னாளில் ஸ்பிரிடானின் படைப்புகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். தவிர இருத்தலியல் தத்துவம் ஆழமாக அவருக்குள் வளரவும் அச்சூழல் துணைசெய்தது.
பாரீஸ் சென்ற போது அவருக்கு அகஸ்ட் ரோடான் என்ற சிற்பியோடு மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.அவருடைய செயலாளராக இருந்து ரோடானின் சிற்பங்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். ரோடானின் மாணவியான கிளாரா வெஸ்ட்ஹாஃபை மணந்தார். ரில்கவின் திறமையை உணர்ந்த ரோடான் கவிதையில் ’புறநிலை நோக்கத்தின் ” அவசியத்தை  அவருக்கு விளக்கியதை அடுத்து ரில்கவின் கவிதைநடையும் போக்கும் பெருமளவில் மாறின. அந்தத் தாக்கம் New Poems என்ற புத்தகத்தை எழுதப் பின்புலமானது. பாரீஸில் இருந்தபோது 1905 ல்The Book of Hours, 1907ல் New Poems என்ற இரண்டு தொகுப்புகளும் வெளிவந்தன.வாழ்க்கை முழுவதும் இத்தாலி, ஸ்பெயின், எகிப்து என்று பல நாடுகளில்அவர் பயணம் செய்திருந்தாலும் பாரீஸ்தான் புதிய வடிவத்திலான காட்சிக்கலையின் தாக்கத்தை அவர் கவிதைகளுக்குத் தந்தது. அவர் எழுதிய ஒரே சிறுகதைத் தொகுப்பு Stories of God என்பதாகும் டால்ஸ்தொயின் தாக்கம் அச்சிறுகதைகளில் வெளிப்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.முதல் உலகப்போர் காலகட்டத்தில் அவர் பிரான்சை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்து சென்றார். 1926 ல் அங்கு தான் மரணம் அடைந்தார். ஐரோப்பா முழுவதிலும் மிகப் பிரபலமானவராக, எல்லோராலும் போற்றப்படுபவராக இருந்தாலும் அந்தரங்க வாழ்க்கையில் அவர் தனியானவராக, யாருடனும் நெருக்கமில்லாதவராகவே இருந்தார்.
அவர் எப்போது கடவுளைப் பற்றி குறிப்பிட்டாலும் பாரம்பரிய முறையில் தெய்வத்தைச் சுட்டிக்காட்டாமல் இயற்கை அல்லது வாழ்வாதாரம் அல்லது இயற்கை இறைவாத உணர்வு [pantheistic consciousness] என்ற அடிப்படையில் தான் எழுதினார். The Book of Hours, புத்தகத்தின் மையக்கரு“’உள்மனநிலை’யை யும் கலையை உயர்ந்தநிலையில் வைத்துப் போற்றுவதுமாகும்“என்று மேஸன் விமர்சிக்கிறார்.அது அவருடைய பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும் என்ப தும் அவர் கருத்தாகும். கடவுளுக்கு எழுதும் காதல் கடிதம் போல இப்புத்தகம் அமைகிறது. காதல் கடிதங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துவதுபோல ரில்கவின் கவிதைகள் கடவுளின் மீதான ஏக்கம்,பக்தி,பிரிவு,இணைவு என்று எல்லாமும் பேசுகின்றன. தனிமையில் தவிப்பவன் தன்னைப்போலத் தனிமையானவனிடம் பேசும் பாவனையில் கவிதைகள் அமைகின்றன. மனதுக்கு நெருக்கமான,  அருகில் நின்றிருப்பவரிடம் பேசுவதுபோல அமைந்த பாங்கிற்குச் சான்றாக ஒரு கவிதை இங்கு..
கடவுளே நீ பக்கத்து வீட்டுக்காரன்
பல இரவுகளில் அவசரமாகத் தட்டித்  துன்புறுத்தியிருக்கிறேன்.
அதனால்தான் உன்மூச்சு அபூர்வமாகக் கேட்கிறது
நீ அறையில் தனியாக இருக்கிறாயென்று தெரியும்
தாகமாய் இருக்கும்போது உனக்குத் தண்ணீர் தரக்கூடயாருமில்லை
ஒரு பெருமூச்சுவிடு போதும்
நான் கவனித்துக்கொண்டு காத்திருக்கிறேன்
இடையேயான சுவர் லேசானதுதான்.
நம்மிருவரில் ஒருவரின் குரல் ஏன் அதை
உடைக்கக்கூடாது? நொறுங்கும் சத்தம் கூடப் பெரிதாய்க் கேட்காது”
என்று சாதாரணப் பேச்சாகவே கவிதை அமைகிறது. முழுக்கமுழுக்க முதல் படைப்பு இந்தப் பாணியில் அமைகிறது. New Poems என்ற இரண்டாவது புத்தகம் இரண்டு தொகுதிகளாக அமைந்ததாகும். சூழ்நிலை, அனுபவம் யதார்த்தம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகக் கவிதைகள் அமைகின்றன. மனிதனுக்கிருக்கும் சொல்லமுடியாத அளவிலான அவநம்பிக்கை, தனிமை, பதட்டம் ஆகிய உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார். சில கவிதைகள் சான்றாய்:

மீண்டும் மீண்டும்

அங்கிருக்கும் சிறிய கல்லறை
அதன் வருத்தும் பெயர்கள் மற்றவர்களை வீழ்த்தி,
அச்சுறுத்தும் அமைதியிலான படுகுழி.
காதலின் நிலப்பரப்பு பற்றி நமக்குத் தெரியும்.
மீண்டும் மீண்டும் நாமிருவரும் சேர்ந்து நடக்கிறோம்
அந்தப் பழையமரங்களினடியில், மீண்டும் மீண்டும்
மலர்களோடு படுத்து,முகத்தோடு முகம்வைத்து வானம்பார்த்து !
 

ஒரு நடை

என்கண்கள் ஏற்கெனவே மலையைத் தொட்டிருக்கின்றன
நான் போகவேண்டிய சாலையில் பயணிக்கிறேன்
எதை நம்மால் கிரகிக்கமுடியாதோ அதை கிரகிக்கிறோம்;
தொலைவிலிருந்த போதிலும். அதற்கு உள்ளொளி இருக்கிறது
நாம் அதைத் தொடாதபோதும் அதுவசமாகிறது
அபூர்வமாக உணரும் ஏதோ ஒன்றிற்குள்,
நாம் அங்கே ஏற்கெனவே : ஒரு சைகை உணர்வு நம்மேல்,
உணர்வுக்கு பதிலளிப்பதாக..
ஆனால் காற்று முகத்தில்மோதுவதை உணர்கிறோம்.
 

சிறுத்தை

மிகச் சோர்வடைந்து வேறெதுவும் செய்யமுடியாதபடி
அதன் தொடர்ந்தபார்வை இரும்புக்கம்பிகளைத் கடக்கிறது
அதைப் பொறுத்தவரை ஓராயிரம் கம்பிகள்;
சிறைக்கம்பிகளுக்குப் பின்னால், வேறுஉலகமில்லை
மையத்தைச் சுற்றும் நடனச்சடங்கு போல
வலிமையாய் வட்டத்தில் அது சுற்றிச்சுற்றி
மீண்டும் மீண்டும் சுவடுபதித்து
பலம் முடங்குகிறது
சிலநேரங்களில் மௌனமாய் உயரும் அதன்பார்வையில்
ஒரு கற்பனை நுழைந்து
பதற்றமான தசைகளில் வேகமாய் ஊடுருவி
நெஞ்சில் பாய்ந்து முடிகிறது..
 

எதிர்காலம்:

நம்மை அச்சுறுத்துவதற்கான காலத்தின் மன்னிப்பு
மிகப் பரந்த ஒரு செயல்திட்டம்,
இதயத்தின் வாய்க்கு அளவில்லாத பருக்கை
எங்களின் தன்னைமறந்த நிலை
உன்னை ஆழமாக்கப் போதுமானது.
ஒவ்வொருவரும் அங்குதான் போகின்றனர்.
யார்தான் உனக்காகக் காத்திருக்க மாட்டார்கள்?
 

குழந்தைப் பிராயம்

அந்தக் குழந்தைப்பிராய நீண்ட மதியநேரங்கள்
முழுவதுமாக  மறைந்து போனதே ஏன்?
தொலைந்துபோனதைத் கண்டுபிடிக்க
வார்த்தைகளைத் தேடுவதற்கு முன்னால்
அதுபற்றிய சிந்தனை  நல்லது.
இன்னமும் நினைவூட்டல்களில் நாம்: சிலநேரங்களில் ஒரு மழையினால்,
ஆனால் அதன்அர்த்தமென்ன என்றினி நம்மால் சொல்லமுடியாது;
சந்திப்புகள் மறுஇணக்கம் என்று இருந்தாலும்
வாழ்க்கை ஒருபோதும் அப்படி இருக்கப்போவதில்லை
திரும்பிப் பார்த்தால்,
பொருட்களுக்கும் உயிர்களுக்கும் நடப்பதே நமக்குமானது
என்பது தவிர வேறில்லை
அவைகளின் உலகத்தில் நாம் மானிடர்களாக
பெருகி நிறைந்திருக்கிறோம்
தொலைவென்ற பெருஞ்சுமையோடு
வருந்தும் தனியனான ஆட்டிடையன் போல குழப்பமாய்
நீண்டு கிடக்கும் எல்லையற்ற வெளியில்
அழைப்பாணையை ஏற்றுப்போகிறோம்.
 

அனாதையின் பாடல்

நான் யாருமில்லை யாருமாகவுமிருக்க முடியாது,
பாத்தியதை கோருவதற்கும் கூட மிகச் சிறியவன்;
பின்னாளிலும் கூட.
என்மீது அனுதாபம்  காட்டுங்கள்.
என்னை உயர்த்த அது போதுமானதாக இருக்கமுடியாது
அறுவடைக்கு ஆளாகி விடுவேன்
நான் மிகச் சிறியவன்
இப்போது யாருக்கும் உபயோகமில்லாதவன்
நாளை மிகத் தாமதமாகிவிடும்
என்னிடம் ஓர் ஆடை மட்டுமே
கிழிந்தும் மங்கியும்
ஆனால் அது நித்தியமாயிருக்கும்
அநேகமாய்க் கடவுளின் முன்னாலும் கூட
மிக நலிந்த தலைமுடிதான் எனக்கு
[அது எப்போதும் அப்படியேயிருக்கும்]
என்றோ  ஒருவரின் அன்புக்கு உரியதாக இருந்தது
இன்று அவனுக்குப் பிடித்தமானதாக அவனிடம்  எதுவுமில்லை.
 

இலையுதிர் காலம்

இலைகள் கீழே விழுகின்றன
பழத்தோட்டம்  இறந்தது போல..
மிக உயரத்திலிருந்து இலைகள் விழுகின்றன.
வேண்டாம் என்று சொல்வது போல ஒவ்வொரு இலையும் விழுகிறது.
நட்சத்திரங்களைத் தொலைவில் விட்டுவிட்டு
இன்றிரவு பூமி விழுகிறது
நாம் எல்லோரும் விழுகிறோம்.இந்தக் கை விழுகிறது
சுட்டிக்காட்டும் மற்றொரு கையையும் பாருங்கள்.
இருப்பினும் யாரோ ஒருவரின் கை
எல்லையற்ற அமைதியில் இந்த விழுதல்களைத் தாங்கியபடி..
ரில்கவின் Letters to a Young Poet  என்னும் புத்தகம் கடித வடிவத்திலானது அதன் செய்திகள் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் சிறப்புடையவை. பிராங்க் காப்பஸ் என்னும் 19வயது இளைஞன் ஜெர்மன் நாட்டு ராணுவத்தில் சேர விரும்புகிறான். ரில்கவின் ஆலோசனைகளைக் கேட்டும், தான் எழுதிய சில கவிதைகளை விமரிசிக்கும்படியும் வேண்டுகிறான். அவர் பத்துக்கடிதங்கள் மூலம் அவனுக்கு பதில்தருகிறார். முதல்கடிதம் எழுதும்போது அவருக்கு வயது  27 என்றாலும் அதில் அவருடைய ஆழ்ந்த பக்குவமும்,வாழ்க்கையை எதிர் கொள்வதில் இருக்கவேண்டிய தீர்மானநிலையும் வெளிப்படுகின்றன. இந்தக் கடிதத் தொடர்பு ஐந்தாண்டுகள் நீடிக்கிறது.ரில்கவை  ஆழ்ந்த கொள்கையுடையவராகவும், கலைஞனாகவும் அடையாளம் காட்டும் மிகச் சிறந்தபடைப்பு என்று விமரிசகர்கள் குறிப்பிடுகின்றனர். சில கடிதங்களின் வரிகள் சான்றாய்:

நண்பரே! உலகின் மீது நாம் அவநம்பிக்கை கொள்வதற்கு எந்தக் காரணமுமில்லை. தீவிரவாதம் உள்ளதெனில் அது நம்முடையதுதான். பாதாள மெனில் அது நமக்குரியதுதான். அபாயங்கள் உள்ளதெனில் அதை நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். தனிமையை நேசிக்கவேண்டும்: அது வேதனை தருவதாக இருந்தாலும் தனிமையை ஏற்கப்பழகுவது வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரியவைக்கும். நம் போராட்டத்தின் அழகைக் கண்டறிய வேண்டும். அது உண்மையையும் ,நேர்மையையும் உணரச்செய்யும்.
நண்பரே! தீர்மானிக்கப்படாத விஷயங்களுக்கான கேள்விகள் மனதிலிருக்கும். ஆனால் அவைகளுக்கு இப்போது பதில்கிடைக்காது. பதில்களோடு வாழமுடியாத நிலை நமக்கிருப்பதால் எதற்கும் பதில் தேடாதீர்கள். எல்லாவற்றோடும் வாழவேண்டும். கேள்விகளோடு இப்போது வாழுங்கள். நீங்களே அறியாதபடி எதிர்காலத்தில் அந்த பதிலாகவே வாழ நேரலாம்
வாழ்க்கை முரண்பாடுகளால் ஆனது. பகுத்தறிவான பதிலை எல்லாவற்றிலும் எதிர்பார்த்தால் நம்மை நாமே சித்திரவதைபடுத்திக்கொள்வோம்
முழுமையற்ற அறிவுதான் ஒவ்வொரு மனிதனின் விதி என்னும் போது சுயத்தை அறியவேண்டிய வைகறையாக கேள்விகளை விரும்ப வேண்டும். நாம் யாராக இருக்கவேண்டும்,இப்படி ஏன் வாழ்க்கை என்று எல்லாவற்றி லும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு நம்மை வருத்திக் கொள்ளாமல் அந்தத் தருணத்தைத் தழுவிக் கொள்ள வேண்டும். வாழ்வது, அனுபவம் பெறுவது என்ற இரண்டும் நமக்கானவை.எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. காலப்போக்கில் பதில்கள் மேல் விழுவோம்.
நிகழ்காலத்தைவிட கனவுகள் மேலானவை என்று சொல்ல முடியாது. நிகழ் காலமும்,எதிர்காலமும் ஒன்றுதான்.நாம் எதிர்காலத்தைப் பற்றி நம்புவது நிகழ்காலத்தை மாறச்செய்கிறது.நம் கனவுகள் நிகழ்தருணத்தை மாற்றுகின் றன.நம்முடைய மனப்பாங்கு நாம் எதிர்கொள்ளும் விஷயங்களை நல்லதாக்க, தீயதாக்க முடியும்.நம்முடைய முடிவுதான் அதை நிறப்படுத்துகிறது உலகம் நமக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டுமென்று விரும்பினால் நம்மை மாற்றிக் கொள் ளத் தயாராகவேண்டும். அழகும் கொடுமையும் என்று உனக்கு எல்லாம் நடக்கட்டும்.போய்க் கொண்டேயிரு.எந்த உணர்வும் முடிவல்ல.

என்று ஆலோசனை சொல்வதாகவும் வழிநடத்துவதாகவும் அமையும் கடிதங்கள் என்றைக்கும், எச்சூழலுக்கும் பொருந்துபவை.வேதனை எப்போதும் சில அழகான முடிவுகளைத் தரும் என்பது அவர் பெரும்பான்மைக் கடிதங்களின் செய்தியாகிறது.
The Notebooks of Malte Laurids Brigge என்பது அவரால் எழுதப்பட்ட ஒரே நாவலாகும் .அது சுயவரலாற்று நூல் என்ற வகையிலும் அடங்குவதாகும். Duino Elegi என்ற புத்தகம் மறைபொருள் பின்னணியைக் கொண்டது. இரங்கற்பா வடிவத்தில் அமைந்தது.அதை “இந்த நவீன நூற்றாண்டின் மிகச் சிறந்த செய்யுள்படைப்பு “என்று காலின் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்நாளின் இறுதிக் காலங்களில் ஃபிரெஞ்சு கவிஞர்களான பால் வலேரி, ழ்ஜான் காக்டூ ஆகியோரின் தாக்கத்தில் நானூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை ஃபிரெஞ்சு மொழியிலும் எழுதியுள்ளார். பொஹிமியன் நாட்டுப்பாடல் எழுதும் பயணத்திலிருந்து Orpheus எழுதிய வரை அவர் சாதனை குறிப்பிடத்தக்கது. ரில்கவிற்கு கலையுணர்வுதான் அமைதி தந்தது என்று  ஹெர்மன் ஹெஸ்ஸெ கூறியுள்ளார்
’புதிய வகையான வசனம்,கற்பனை  ஆகியவற்றைக் கவிதை எல்லையில் விந்தையான முறையில் அவர் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.ரில்க தன் கருத்துக்களை உடல் சார்ந்த குறியீடுகளின் மூலமாக வெளிப்படுத்துகிறாரே தவிர, அறிவுசார்ந்த குறியீடுகளின் வழியல்ல. அழகும் துன்பமும்,வாழ்க்கையும்  இறப்பும் என்று எல்லாவற்றையும் ஒரு தத்துவத்தின் மூலம் சமரசம் செய்து கொள்ளும் நிலையை அவர் கவிதைகளில் பார்க்கமுடிகிறது.தனது ஒருங்கிணைந்த கொள்கைத்தேடல் கவிதையாக மாறமுடியுமென்று  நினைக்கிறார். அவரைப் பொறுத்தவரை கலை என்பது பெரும்பான்மை வாழ்க்கைக்கு பருப்பொருளாவதுதான்”என்று சி.எம்.பௌரா அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
“ரில்க தன் சிந்தனைகளைச் சொற்களால் மட்டும் வெளிப்படுத்துகிறவராக நின்றுவிடாமல் அதைக் கடந்து  மனம், உணர்ச்சி ரீதியாக இறுதிவரை வாழ்ந்தார்”என்று க்ரொக்கட் குறிப்பிட்டுள்ளார்.
செய்யுள்நடையிலும், கவிதைகலந்த உரை நடையிலும் எழுதும் ஆற்றல் பெற்ற படைப்புகள் அவருடைய வாழ்நாளின் இறுதியில் பல ஐரோப்பிய கலைஞர்களால் தீவிரமாகப் பாராட்டப்பட்டதெனினும் சாதாரண மக்களுக்கு அத்தனை அறிமுகம் இல்லாதிருந்தன. அவருடைய மறைவிற்குப் பிறகு படிப்படியாக அவர் படைப்புகள் மக்களைக் கவர அவர் உலகளவில் கவிதை வல்லுநராகப் போற்றப்படுகிறார். அவருடைய இருத்தலியல் கொள்கை அவரை பாரம்பரிய எழுத்தாளர்களுக்கும்,நவீன எழுத்தாளர்களுக்கும் மத்தியில் இடைநிலைச் சார்பாளராகக் காட்டி ஒரு புதிய வகையை அன்றைய சூழலில் அறிமுகப்படுத்தியதும் அவரது சிறப்பு என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.
அவர் கவிதைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஸ்டீஃபன் மிச்செல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த The Selected Poetry of Rainer Maria Rilke என்ற புத்தகம் அவர் கவிதைகளை அறிய உதவுகிறது.
மெரினா ஸ்வேய்யேவொ [Marina Tsvetayeva]என்ற ரஷ்யப்பெண் கவிஞரிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது.”நான் மிகவும் போற்றும் கவிஞர் என்று உங்களைச் சொல்லமாட்டேன்.’மிகவும் போற்றும்’ என்பது ஒப்பீட்டுக்கான சொல்லாகும்.அதனால் என்னைப் பொறுத்தவரை நீங்களே கவிதைதான்”என்பது கடிதத்தின் சாரமாகும். இது உயர்வுநவிற்சியில்லை.ரில்கவின் கவிதைக் குரல் நம்மிடமிருந்து நம்மைத்தேட,நம்மை நமக்குள்ளே ஆழப்படுத்தும் தன்மையைத் தருகிறது.இதுதான் கவிதை.தன்னை இழக்கும் நிலையைக் வெளிக் கொண்டுவரமுடிவதுதான் கவிஞனின் வெற்றி. அது அவருக்குச் சாத் தியமாகி இருக்கிறது.அவருடைய இருத்தலியல்கொள்கை அவரை பாரம் பரிய எழுத்தாளர்களுக்கும்,நவீன எழுத்தாளர்களுக்கும் மத்தியில் இடை நிலைச்சார்பாளராகக் காட்டி ஒரு புதிய வகையை அன்றைய சூழலில் அறி முகப்படுத்தியதும் அவரது சிறப்பு என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.