பேராசைக்காரியின் புலம்பல்கள்
முதலில் காலை நேரக் கோப்பைகளின் சர்க்கரையைச் சுவாரசியமற்றதாக்குகிறது
நாளடைவில் உப்பு சப்பற்ற உணவுமானது
கடிகார முட்களும் நாட்காட்டிகளும் திசைகாட்டிகளும்
நாள்தோறும்
அவனை நிரப்பினாலும்
அவளின் புலம்பல்கள் நின்றபாடில்லை
அதிருப்திகளை விழுங்கி விழுங்கி
சின்னச் சின்ன ஆசைகளான பீங்கான் கோப்பைகளை
நிரப்ப ஆளின்றி உடைத்துக் கொண்டே
ஓடிக் கொண்டிருந்திருக்கிறான்
சபை நாகரீகமற்ற குடும்ப விழா ஒவ்வொன்றிலும்
காகிதங்களின் காதலி மானத்தை
துகிலாக உரித்திருக்கிறாள்
தளராத பொழுதையெல்லாம் உடுத்தி கொள்கிறாள்
எதிரொலிக்கத் தெரியாதவனல்ல
எதிர் சூறாவளி காற்றிலும் நிற்க சூழலால் நிர்பந்திக்கப்பட்டவன்
உறங்காத இரவுகளில் இவன் தேடுவது
தன்னை மட்டும் காணும்
மோனோலிசா ஏந்தி வரும்
கோப்பை தேநீர் ஒன்றை மட்டுமே…
******
தட்டான்களுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும்
வேறுபாடு உணர்ந்தவள்
குருவிக்கும் பருந்துக்கும் வேறுபாடு கேட்கிறாள்
சிறகுள்ளவை அனைத்தும் பறவைகளாடா என்றேன்
போப்பா உனக்கு ஒன்னுமே தெரியலை
தட்டானுக்கு மெல்லிய கண்ணாடி சிறகு
பட்டாம்பூச்சிக்கு வண்ணங்களை உதிர்க்கும்
வெல்வெட் சிறகென்று சொல்லி கொண்டே போனாள்
ஆம் எனக்கு ஒன்று கூடத் தெரியவில்லை
எனக்குத் தெரிந்தது அவளுக்கு வளர்ந்திருக்கும் சிறகு மட்டுமே…